ஞாயிறு, 7 அக்டோபர், 2018

மத உரிமையின் ஆபத்து

தந்தை பெரியார்
இந்தியாவுக்கு அரசியல் சீர்திருத்தம் கொடுப்பதற்கு வேண்டிய திட்டங்களை ஆலோசித்து முடிவு செய்ய பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும், மூன்று கமிட்டிகளில் ஒன்றாகிய ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் சில நாட்களாகப் புது டில்லியில் நடைபெற்று வருகின்றது. அக்கமிட்டியில் அரசியல் சீர்திருத்தத்தில் சேர்க்க வேண்டிய அடிப்படையான உரிமைகளைப்பற்றி ஆலோசனை செய்து வருகின்றனர். அவர்கள் முடிவு செய்து ஒப்புக் கொண்டிருக்கும் உரிமை களாலும், அத்தகைய உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சீர்திருத்தத்தாலும் நமது நாட்டின் ஏழைமக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அதிகமான நன்மையுண்டாகப் போவதில்லையென்றுதான் நாம் துணிந்து கூறுகிறோம். இவ்வாறு நாம் கூறுவதற்குரிய காரணங்களை ஆராய்வோம்.
"எந்த சமஸ்தானமாயினும், மாகாண ஆட்சிக்கு உட்பட்ட தானாலும், அய்க்கிய ஆட்சிக்குள் அடங்கியதானாலும், அவ்விடங்களில் சர்க்கார் மதமென்பது ஒன்று இல்லை என்று அறிக்கையிட வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது அடுத்தபடியாக மத சுதந்திரம், பொது ஜனங்களின் பழக்க வழக்கங்கள் முதலிய உரிமைகளுக்குச் சம்மதம் அளிக்கிறது" என்பதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்விரு தீர்மானங்களால் இதுவரையிலும் நமது நாட்டு மக்கள் எந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்களோ அந்த நிலையில்தான் அரசியல் சீர்திருத்தம் பெற்றபின்னும் இருந்து தீர வேண்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
உண்மையிலேயே ஒரு நாட்டு மக்கள், ஜாதி பேதங்கள் இல்லாமல், ஏழை பணக்கார வித்தியாசங்கள் இல்லாமல், தொழிலாளி முதலாளிக்  கொடுமைகள் இல்லாமல் குடியானவர் நிலச்சுவான்தார்கள் வித்தியாசமில்லாமல், உயர்ந்தவர் தாழ்ந்தவன் வித்தியாசம் இல்லாமல் சமத்துவமும், சகோதரத்துவமும், சுதந்திரமும் பெற்று வாழ வேண்டுமானால், முதலில் மதங்களும், தனித்தனிப் பழக்க வழக்கங்களும் ஒழிந்தாக வேண்டும். இவ்வாறு மக்களைப் பிரித்துவைத்துக் கொடுமைப்படுத் துவதற்குக் காரணமான மதங்களையும் அவைகளிலிருந்து முளைத்த பழக்கவழக்க வேறுபாடுகளையும் அரசாங்கமே தைரியமாக முன் வந்து ஒழிக்க வேண்டும். இப்படியில்லாமல், "அரசாங்கத்திற்கு எந்த மதமும் இல்லை," என்று சொல்லு கின்ற அரசாங்கமாயிருந்தாலுஞ்சரி, "நாங்கள் மதத்தில் தலையிட மாட்டோம்" என்று சொல்லுகின்ற அரசாங்கமா யிருந்தாலும் சரி, "ஒவ்வொரு மதங்களுக்கும், கலை களுக்கும், நாகரிகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண் டும்" என்று சொல்லுகின்ற அரசாங்கமாயிருந்தாலுஞ் சரி, சமதர்மக் கொள்கையுள்ள சீர்திருத்தங்கள் எவையும் செய்ய முடியாது. இந்த மாதிரியான கொள்கையுள்ள அரசாங்கங்கள் ஏக நாயக அரசாங்கமானாலும், அல்லது குடியேற்ற நாட்டு அந்தஸ்துள்ள அரசாங்கமானாலும் அய்க்கிய அரசாங்கமானாலும், அல்லது பூரண சுயேட்சை அரசாங்கமானாலும், இவைகளால் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், சுதந்திர மற்ற மக்களுக்கும் கடுகளவாவது நன்மையுண்டாகப் போவதில்லை.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, அதாவது ஏக நாயக அரசாங்கமானாலும் அல்லது ஜனநாயக அரசாங்கமானாலும் அது தேச மக்கள் எல்லோரையும் மக்களாகவே கூறி, அவர்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம் சுதந்திரம் ஆகியவைகள் நிலைத்திருக்கச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தச் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவைகள் வளர்வதற்குத் தடை யாக இருப்பவை மதமானாலும், பொருளா னாலும், ஜாதியானாலும், வேதமானாலும் நாகரிகங்களானாலும், பழக்க வழக்கங்களா னாலும், கடவுள் ஆனாலும் மற்றும் எவை யானாலும் அவைகளைச் சட்டங்களின் மூலம் அடியோடு - ஒழிக்கப் பின்வாங்காத அரசாங் கமாக இருக்க வேண்டும். இத்தகைய அரசாங்கத்தினால்தான் தேசமக்கள் எல்லோருடைய சுயமரியாதையையும் காப்பாற்ற முடியுமென்பதில் அய்யமில்லை.
இப்படியில்லாமல், "அரசாங்கத்திற்கு மதமில்லை" என்று மாத்திரம் ஒப்புக்கொண்டு "மதசுதந்திரம், பொது ஜனங்களின் பழக்க வழக்கங்கள் முதலிய உரிமைகளுக்குச் சம்மதமளிக்கிறது" என்ற கொள்கையை உடைய அய்க்கிய ஆட்சி அரசாங்கத்தால் என்ன நன்மை ஏற்பட்டு விடமுடியும் என்று கேட்கிறோம். இந்தக் கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ள அரசாங்கம், கல்யாணம், சிரார்த்தம் கருமாதி முதலிய பலப் பெயர்களால் பார்ப்பன ரல்லாதார்களிடமிருந்து செல்வத்தைச் சுரண்டுவது எங்கள் மதம், அய்ந்து வயதுப் பெண் குழந்தையை அறுபது வயதுக் கிழவனுக்கு மணஞ்செய்து கொடுத்து அன்றைக்காவது, அல்லாது, மறுநாளிலாவது, மறு மாதத்திலாவது மறு வருஷத்திலாவது தாலி அறுக்கவைப்பதும், இவ்வாறு தாலியறுத்து பெண்களை மொட்டையடித்து கைம் பெண்களாக ஆயுள் முழுதும் இருந்து துன்புறும்படி வைப்பதுதான் எங்கள் மதம், கோயில்கள் என்பவைகளில் உள்ள குழவிக்கல்லுகளுக்கும், பொம்மைகளுக்கும், ஏராளமாக செல்வங்களைப் பாழ்பண்ணி விட்டு மக் களுடைய உழைப்பையும், செல்வத்தையும் காலத்தையும் பயனற்ற வழியில் செலவிடுவதுதான் எங்கள் மதம், இவ்வாறுள்ள கோயில்களின் செல்வங்களைப் பார்ப் பனர்கள்தான் தின்று கொழுக்கலாம். இக்கோயில்களுக்குள் உயர்ந்த ஜாதி இந்துக்கள்தான் போகலாம், தாழ்த்தப் பட்டவர்கள் போகக்கூடாது. என்று ஏற்பட்டிருப்பதுதான் எங்கள் மதம்; ஆண்களுக்குத்தான் சொத்துரிமை உண்டு, பெண்களுக்கு எந்த வகையிலும் சொத்துரிமை இல்லை என்பதுதான் எங்கள் மதம்; ஆண்கள் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், பெண்கள் இவ்வாறு செய்து கொள்ளக்கூடாது, கணவன் இறந்து விட்டாலும் விதவையாகத் தனித்திருந்தே உயிர் வாழ வேண்டும் என்ற ஏற்பாடு தான் எங்கள் மதம், என்று சொல்லுகின்ற மதம் சுதந்திரங்களுக்கு எல்லாம் உரிமை கொடுத்து ஆக வேண்டுமல்லவா?
உயர்ந்த ஜாதி இந்துக்களின் பிள்ளைகளும், தாழ்ந்த வகுப்பினரின் பிள்ளைகளும் ஒரு பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படிப்பது மதச் சுதந்திரத்திற்கும், பழக்க வழக்க சுதந்திரங்களுக்கும் விரோதம்; உயர்ந்த வகுப்பினர் தண்ணீர் எடுக்கும் கிணறு, குளங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தண்ணீர் எடுப்பது, பழக்க வழக்க சுதந்திரத்திற்கு விரோதம்.
உயர்ந்த வகுப்பினர்கள் வசிக்கும் தெருக்களில் தாழ்ந்த வகுப்பினர் நடப்பது பழக்கவழக்க சுதந்திரங்களுக்கு விரோதம்; உயர்ந்த வகுப்பினர் பார்க்கும்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் படிப்பதும் நல்ல வேஷ்டிக் கட்டுவதும், சட்டை போடுவதும், கிராப்பு வைப்பதும், காலில் செருப்பணிவதும், குடை பிடிப்பதும், பெண்கள் மார்பில் துணி போடுவதும் பழக்க வழக்க சுதந்திரங்களுக்கு விரோதம்; என்று கூறி வைதிகர்களும், ஜாதி இறுமாப்புக் கொண்டவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப் படுத்த மேற்கூறிய உரிமை இடங்கொடுக்கின்றதல்லவா? ஆகையால், மதநடு நிலமையும், மத, பழக்க வழக்கம் ஆகிய சுதந்திரங்களுக்கு உரிமையும் வழங்கும் ஆட்சியில் ஏழை மக்களுக்கு ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை யென்று நிச்சயமாகக் கூறலாம்.
இன்னும் ஆலோசனைக் கமிட்டியில் தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் வேண்டுகோளுக்கு இணங்கி மற்றொருத் தீர்மானமும் செய்யப்பட்டிருக்கிறது. அது "குடிமக்கள் தங்கள் நகர உரிமைகளை அனுபவிப்பதற்குத் தடையாக எத்தகைய பழக்க வழக்க வித்தியாசங்கள் ஏற்படுவதாயினும் அவைகள் சட்ட விரோதமானவை எனத் தீர்மானிக்க வேண்டும்" என்பதாகும்.
முதலில் மதம், பழக்க வழக்கம் ஆகிய சுதந்திரங்களுக்கு உரிமை கொடுத்து விட்டு மேற்கூறியவாறு தீர்மானிப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது. முதலில் கூறிய தீர்மானத்தை அரசாங்கம் நடத்தி வைப்பதா? அல்லது இரண்டாவது செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை அரசாங்கம் நடத்தி வைப்பதா? என்று யோசித்துப் பாருங்கள்! வரப்போகின்ற அரசாங்கத்தில் பெரும்பாலும் ஆதிக்கமும், அதிகாரமும் செலுத்தப் போகின்ற பணக்காரர்களும், வைதிகப் பித்தர்களும், ஜாதி இறுமாப்புக் கொண்டவர்களும் "மதம் பழக்க வழக்க சுதந்திரங்களுக்கு உரிமை கொடுக்கும்" தீர்மானத்தை நடைமுறையில் வைத்திருப்பார்களா? அல்லது "குடிமக்கள் தங்கள் நகர உரிமைகளை அனுப விக்கத் தடையாக இருக்கும் பழக்க வழக்க வித்தியாசங்களைத் தடுக்கும்" தீர்மானத்தை நடைமுறையில் வைத்திருப்பார்களா? என்று யோசனை செய்து பாருங்கள்! ஆகவே இரண்டாவது செய்யப்பட்டிருக்கும் தீர்மானம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெறும் வாய்ச்சமாதானம் கூறுவதற்குப் பதிலாகவே செய்யப்பட்டி ருக்கிறதென்று தான் சொல்லலாம்.
இன்னும் "தர்மஸ்தாபனங்கள், மதஸ்தாபனங்கள், சமுக ஸ்தாபனங்கள், கல்வி ஸ்தாபனங்கள் முதலியவற்றைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் தங்கள் சொந்த செலவில் அமைத்து அந்த ஸ்தாபனங்களில் தங்கள் சொந்த மதங் களையும், தங்கள் சொந்த பாஷைகளையும் அநுஷ்டிக்க அவர்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுக்கிறது" என்று ஒருத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்குச் செய்யப் பட்டிருப்பது போலக் காணப்படுவதாயினும் இத்தகைய உரிமை மற்ற உயர்ந்த வகுப்பினர்களுக்கும் இல்லாம லில்லை. எந்த வகுப்பினர்களுக்கும் இத்தகைய உரிமை உண்டு. ஆகவே இதுவும், "மதங்கள், பழக்க வழக்க சுதந் திரங்கள்" ஆகியவைகளுக்கு உரிமை கொடுக்கும் தீர் மானத்தைப் போன்றதேயாகும். இத்தீர்மானம், இன்னும் மக்களின் ஒற்றுமைக்குத் தடையாக இருக்கின்ற மதங் களையும், நாகரிகங்களையும் நிலைத் திருக்கும்படி செய்வதற்குத் துணை புரியக் கூடியதேயாகும்.
இவ்வாறு ஒவ்வொரு தனிப்பட்ட வகுப்பினரும் தங்கள் தங்கள் மதம், கலை, பழக்க வழக்கங்கள் இவைகளைக் காப்பாற்றிக் கொள்ள உரிமையளித்து விட்டு, "அரசாங்க ஆதரவு பெற்ற பள்ளிக் கூடங் களில் எல்லோரையும் சேர அனுமதிக்க வேண்டும், ஜாதி, மதம், சமுகம், பிறப்பிடம் முதலியவற்றைக் கொண்டு தடைப்படுத்தக் கூடாது" என்று தீர்மானத்திருப்பதில் என்ன பயனுண்டு? தனித்தனி ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமையிருக் கின்றதால், உயர்ந்த ஜாதிக்காரர்கள், அர சாங்க ஆதரவு பெற்ற ஸ்தாபனங்களில் தாழ்த்தப்பட்டவர்களையெல்லாம் சேர்க்கப் படும் பொழுது தாங்கள் அதை பகிஷ்கரித்து விடுவார்கள். ஏனென்றால் ஒவ்வொரு சமுகத்திலும் உள்ள மதப் பித்தர்கள், தங்கள் மதம், பழக்க வழக்கங்களைக் காப்பாற்ற எப்படியேனும் தனிஸ்தாபனங்களை  ஏற் படுத்தாமல் இருக்கமாட்டார்கள். இவ்வாறு தனிப்பட்ட ஸ்தாபனங்கள் அதிகமாக ஏற்படுகின்றபோது அரசாங்க ஆதரவு பெற்ற கல்வி ஸ்தாபனங்களின் எண் ணிக்கைக் குறையும் என்பதில் அய்யமில்லை. ஆகவே இவைகளைக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்கள் பெரிய பயனைப் பெறமுடியாது என்று சொல்கிறோம். ஆனாலும் சிறிதளவாவது நன்மை தரக்கூடிய இத்தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம்.
இது நிற்க, இனி எந்த மாதிரியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட அவைகளெல்லாம் பெரிய நன்மை அளித்துவிடாது என்று சொல்லுகிறோம். ஏனென் றால், மதம், பழக்க வழக்க சுதந்திரம் முதலியவைகளுக்கு உரிமையளிக்கின்ற வரையிலும் அரசாங்கத்திற்கு மதம் இல்லையென்று சொல்லிக் கொண்டு மதத்தில் தலையிடமறுக்கின்ற வரையிலும், நமது நாட்டில் சமதர்மம் பரவமுடியாது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
ஆயினும், "ஒவ்வொரு மதங்களுக்கும், கலைகளுக்கும் நாகரிகங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதையும், எந்தத்தனி வகுப்பினர்களுக்கும் தனிச் செல்வாக்கு இல்லாமலும்" உள்ள சுயராஜ்ஜியம் வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டிருக்கிற காங்கிரசைக் காட்டிலும், வட்டமேஜை ஆலோசனைக் கமிட்டியாரால் முடிவுகள் சிறிதளவு நன்மையானவைகளாயிருக்கின்ற தென்றே நாம் கருதுகின்றோம். "தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பொதுஸ்தாபனங்களில் அவர்களுடைய பங்குக்கு ஏற்றவாறு உரிமையளிக்க வேண்டும்" என்பன போன்ற சில தீர்மானங்கள் அவர்களுக்கு நன்மையளிப்பனவாகும். இந்தச் சிறிய சாதகத்தைக் கொண்டு அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் தங்கள் கையைப் பலப்படுத்திக் கொண்டு, சிறிதளவாவது முன்னேற்றமடைய வழியிருக்கிறது என்ப தனால் கொஞ்சம் திருப்தி அடைய வேண்டியிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு சிறிதும் பாதுகாப்பு அளிக்க விரும்பாத காங்கிரஸ்காரர்களைக் காட்டிலும், ஆலோ சனைக் கமிட்டியார் ஓரளவு சாதகமான காரியங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி அடைகிறோம்.
இவைகளை எல்லாம் ஆலோசிக்கும் போது சீர்திருத் தக்காரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயமென்ன? அவர்கள் பிரசாரத்தின் மூலம் மக்களுடைய மனத்தில், மாறுதல் உண்டாகுவதனால் தான் ஜாதி, மத பழக்க வழக்கங்களை ஒழிக்க முயலவேண்டியிருக்கிறதேயொழிய தற்கால அரசாங்க அமைப்பைச் சாதகமாகக் கொண்டு ஒன்றும் செய்ய முடிவதற்கில்லை என்பதே. இத்தனை காலமாக பிரிட்டிஷ் அரசாங்கமும் "நாங்கள் மதத்தில் தலையிடுவதில்லை" என்ற பல்லவியைப் பாடிக்கொண்டே சீர்திருத்தங்களைச் செய்வதற்கு  முன் வராமலிருந்தது, காங்கிரஸ் கேட்ட சுயராஜ்ஜியமும் இதைவிட மோச மாகத்தான் இருந்தது. இப்பொழுது நடைபெறும் வட்ட மேஜை ஆலோசனைக் கமிட்டியின் தீர்மானங்களை ஆராயும் போதும், வரப்போகும் அய்க்கிய ஆட்சியும் இப்படித்தானிருக்குமென்று தெரிகின்றது.
ஆதலால் எந்த சுயராஜ்ஜியம் வந்தாலும் படித்த வர்களும், பணக்காரர்களும், உத்தியோகம் பட்டம், பதவி, முதலியவைகளைப் பெற்று ஏழை மக்களின் பொருளைச் சுரண்டுவதற்குத் தான் துணைசெய்யுமே
யொழிய மற்றபடி ஜாதி மத உயர்வு தாழ்வுக் கொடுமைகள் ஒழிந்து, நாட்டு மக்களனைவரும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பெற்று வாழமுடியாது என்பதைத் தான் கூறுகிறோம். உண்மையில் நமது நாட்டு மக்கள் சுயமரியாதை பெறவேண்டுமானால் ஜாதி, மதம், பழக்க வழக்கம் முதலியவைகளை ஒழித்து எல்லோரையும் ஒன்றுபடுத்தக் கூடிய ஆட்சிதான் தேவை என்பதை எடுத்துக் காட்டி முடிக்கின்றோம். அது குடிஅரசானாலும், முடி அரசானாலும் அல்லது வேறு எந்த அரசானாலும் சரி.
- 'குடிஅரசு' - தலையங்கம் - 06. 03. 1932
- விடுதலை நாளேடு, 7.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக