வெள்ளி, 5 அக்டோபர், 2018

“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!”

“அண்ணா முடிவெய்துவிட்டார். அண்ணா வாழ்க’’ அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! “நோய் வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது.’’ ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணாஅவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்ச நிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார். யானறிந்தவரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4இல், 8இல் ஒரு பங்கு அளவு கூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி கிடையவே கிடையாது.

இந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியில் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் “மனித வாழ்வில் வேறுயாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்து விட்டார்.’’ எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக் காட்டமுடியாது.

இன்று மக்களுக்கு உள்ள கவலை எல்லாம் நானறிந்த வரை அண்ணா முடிவடைந்து விட்டாரே, இனி ஆட்சி எப்படி இருக்குமோ என்பது தான். நான் சொல்லுவேன் “அண்ணா இறந்து விட்டார்.’’ “அண்ணா வாழ்க’’ என்பதற்கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எவ்வித மாறுதலும் (திருப்பமும்) இல்லாமல் அவரது கொள்கை வளர்ந்தே வரும். ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காகத் தமிழர்களாக, ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகிறோம். இயற்கையும் அவர்களை அந்தப்படி நடக்கச் செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறேன். அண்ணா நோய்ப் பட்டிருந்த காலத்தில் மேன்மை தங்கிய கவர்னர் பெருமானும், மாண்புமிகு மந்திரிமார்களும் பட்ட கவலையும் காட்டிய ஆறுதல் ஆதரவுகளும் சிகிச்சை செய்வதில் டாக்டர் சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி முதல் வேலூர் டாக்டர்களும் எடுத்துக் கொண்ட மனிதத் தன்மைக்கு மேற்பட்ட முயற்சியும், 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஒழுங்காக நடத்தியதில் போலீஸ் அதிகாரிகளும், சிப்பந்திகளும் நடந்து கொண்ட பாதுகாப்புத் தன்மைகளும், ரேடியோ நிலையத்தாரும், பத்திரிகைக்காரர்களும், விஷயங்களை அவ்வப்போது மக்களுக்குக் கூடியவரை தெரிவித்து வந்த நேர்மையும், மிகமிகப் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்துவதற்கு உரியதுமாகும். தமிழ் மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே இன்றைய நமதுமந்திரிகள் எல்லோரிடமும் காட்டி பரிவாய் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொண்டு இதை முடித்துக் கொள்ளுகிறேன்.’’

 04.02.1969 அன்று சென்னை வானொலி மூலம், பேரறிஞர் அண்ணா  மறைவுற்றமைக்கு தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய ஆழ்ந்த இரங்கல் உரை: நூல் - வானொலியில் பெரியார்.


                                                                  ***


“நாமெல்லோரும் அறிஞர் அண்ணா அவர்கள் முடிவெய்தியதை முன்னிட்டு நமது அனுதாபத்தைக் காட்டிக் கொள்வதற்காக இங்கே கூடியிருக்கிறோம். அண்ணா அவர்களைப் பத்தி இரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருத்தமாகும். பெரும்பாலும் அவரைப் புகழ்வதற்காகவே நாம் இங்கே கூடவில்லை. “அவருடைய தொண்டுக்கு நன்றி காட்டவும், அவரைப் பின்பற்றி அவர் கூறியுள்ள கொள்கைகளைப் பரப்பவும் கூடியிருக்கிறோம்.’’ “அண்ணா அவர்கள் மாபெரும் பகுத்தறிவுவாதி. இரண்டாவது அவர் காரியத்திலேயும் அதைக் காட்டிக் கொண்டார். மூன்றாவது அவர் பகுத்தறிவை வைத்துக் கொண்டு மூட நம்பிக்கைகள் தனக்கு இல்லை என்று அதைக் காட்டுவதற்கு எங்குமில்லாத திருமண விஷயத்திலே, கடவுள், மதம், ஜாதி, சம்பிரதாயக் காரியங்கள் இருக்கக்கூடாது என்று, அதில் கூடாது என்று, கருத்து கொண்ட ‘சுயமரியாதைத் திருமணம்’, ‘சீர்திருத்த திருமணம்’ என்பதைச் சட்டமாக்கினார். சட்டமாக்கினா ரென்றால், திருமணத்தைச் சட்டமாக்கியதே, முக்கிய கருத்துமல்ல.’’ “அதிலே கொண்டு வந்து கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தைப் புகுத்தக் கூடாது என்ற கருத்திலே.’’ இப்படிப் பல விஷயத்திலேயும் அவர், தான் பகுத்தறிவுவாதி என்பதையும் உண்மையாக அவர் மக்களுக்கு எடுத்துக் காட்டி மக்களை எல்லாம் அந்தப் பக்கத்துக்குக் கொண்டு வரவேண்டுமென்று ரொம்பப் பாடுபட்டார். அவ்வளவு செய்த மகானுக்கு இன்று இங்கு இவ்வளவு பெரிய மாபெரும் கூட்டம் அவர் காலமான அன்றைக்கும், “அவரின் இறுதி ஊர்வலத்திலும் 30 லட்சம் மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள் என்றால் அவர் தன்னுடைய கருத்தை மட்டிலும் காட்டினார் என்பதல்லாமல் இந்த நாட்டு மக்களையே ஓரளவுக்கு அவர் பண்படுத்தி விட்டார் என்பது தான் அதனுடைய கருத்தாகும். முடித்துக் கொள்ளுகிறேன்.’’

(6.2.1969 அன்று நடைபெற்ற அண்ணா இரங்கல் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை - நூல்: பெரியார் சிந்தனை திரட்டு.)

சேர, சோழன், பாண்டியன் வெங்காயம் எல்லாம் என்ன செய்தார்கள். அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள்தான் ஆண்டார்களே அவர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்ததா என்றால் இல்லையே! அண்ணா நேற்று செய்ததற்கு மாறாகத்தானே அவர்கள் செய்தார்கள். மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அந்தக் காரியங்களைப் பாதுகாப்பதுதான் அரசியல் ஆட்சியின் லட்சியம் என்று அல்லவா அவர்கள் காலத்தில் கருதப்பட்டது! மூவேந்தர்கள் செய்தது என்ன? கோவில்களைக் கட்டினார்கள். கடவுள்களை உற்பத்தி செய்தார்கள் பார்ப்பானுக்கு அரசர்கள் தன் மனைவிகளை விட்டுக் கொடுத்தாகிலும் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்று நடந்து கொண்டார்கள். பார்ப்பன நலத்தைத்தான் கொள்கையாக கொண்டு இருந்தனர்.

துணிந்து கைவைத்தது அண்ணா ஆட்சி

பறையன் பறையனாகவும், சக்கிலி சக்கிலியாகவும், சூத்திரன் சூத்திரனாகவும் இருக்கத்தான் ஆட்சி பயன்பட்டது. தவிர மனுஷன் மனுஷனாக வாழ்கிறான் என்று பார்க்கப் பயன்படவே இல்லையே! முடியவில்லையே! தப்பித் தவறி ஒரு ஆட்சி அப்படித் திரும்ப முயற்சித்தாலும் ஒழித்திருப்பார்களே! முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள் என்றாலும், அவர்களும், பழைய இராஜாக்கள் காலத்து ஆட்சியைப் போல் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம், சம்பிரதாயம் _ இவற்றில் கை வைக்காமல் ஆட்சி புரியும்படி பார்ப்பான் ஆக்கி வைத்துக் கொண்டானே! வெள்ளைக்காரன் சில மாற்றங்களை செய்ய ஆரம்பத்தில் முன்வந்தான் என்றாலும் மாற்றவிடாமல் மிரட்டி சரிப்படுத்திக் கொண்டார்கள் அவனும் நமக்கெதற்கு வம்பு, நமக்கு சிக்கியது வரை சரிதான் என்றல்லவா ஆண்டான்? அண்ணா அவர்கள் அமைத்த அரசாங்கம் தானே இவற்றில் துணிந்து கைவைக்கக்கூடிய அளவுக்கு பகுத்தறிவாளர் ஆட்சியாக உள்ளது.

- 1970 பம்பாய் சுற்று பயணத்தின்போது தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து...
(‘விடுதலை’ 12.4.1970)

- உண்மை இதழ், 1-15.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக