செவ்வாய், 2 ஜூலை, 2019

கண்ணை மூடிப் பின்பற்றினால்தான் கழகம் உருவான வேலை செய்ய முடியும்

* தந்தை பெரியார்




பெரியோர்களே! தோழர்களே! தாய்மார்களே!

தூத்துக்குடியில் மாநாடு நடத்த இவ்வூர்த் தோழர்கள் அனுமதி கோரியபோது இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பஞ்ச காலத்தில் இவ்வளவு தொலைவில் நடத்தப்படும் மாநாட்டிற்கு வெகு சொற்ப நபர்களே வரக்கூடும் என்றும், மாநாடு ஏதோ ஒரு சடங்குமுறை மாநாடாகவே இருக்கக் கூடும் என்றும் பலர் நினைத்திருந்தனர். ஆனால், இதுவரையில் நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கடற் கரைக் கூட்டங்கள் தவிர்த்த வேறெந்தக் கூட்டத்திற்கோ, மாநாட்டிற்கோ இவ்வளவு பேர் எப்போதுமே கூடிய தில்லை! இந்தியாவிலேயே கூட ஒருவேளை அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டுக் கூட்டங்கள்தான் இவ் வளவு பெரியதாக இருக்கக் கூடுமோ என்னவோ அறியேன். அதுவும் இவ்வளவு  உற்சாகத்தோடும், துடிதுடிக்கும் ஆர்வத்தோடும், பத்தாயிரக்கணக்கில் தாய் மார்களும், இளைஞர்களும், தோழர்களும் கூடியிருக்கும் இப்பெரிய ஜன சமுத்திரத்தைப் பார்க்கும்போது நான் உள்ளபடியே மிகமிக மகிழ்ச்சியடைகிறேன். ரயில் தொந்தரவால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வர இயலாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுங்கூட இவ்வளவு பேர் கூடியிருப்பது, அதுவும் எவ்வித அசவுகரிய குறிப்போ ஏமாற்று குறிப்போ இல்லாமல் மகிழ்வுடன் கூடியிருப்பது எனக்குக் கண்கொள்ளாக் காட்சியாகவே இருக்கிறது. பிரம்மாண்ட உற்சவங்கள் தவிர்த்த மற்ற இடங்களுக்கு இதுவே ரிக்கார்ட் என்று கூடக் கூறலாம்.

குரல் உள்ளவரை பேசவேண்டும்!


நாதசுரக் குழாயாய் இருந்தால் ஊதியாகவேண்டும், தவுலாயிருந்தால் அடிபட்டுத்தான் ஆகவேண்டும் என்பதுபோல், எனக்குத் தொண்டை, குரல், உள்ள வரையில் பேசியாகவேண்டும், பிரசங்கம் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காண்பதால் ஏற்பட்டுள்ள உள பூரிப்பும், ஒரு தனியான அகம்பாவமும் என் உள்ளம் பூராவையும் கவர்ந்து நிற்கிறது. இருந்தாலும் முயற்சித்து ஏதோ சொல்லுகிறேன்.

சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில புரட்சி கரமான தீர்மானங்களால் சர்க்கார் சம்பந்தம் நீங்கப் பெற்று, கழகத்தின் பேரும் மாற்றம் அடைந்து, திராவிட நாடு பிரிவினையும், லட்சியமாக்கப்பட்டதிலிருந்து நமது செல்வாக்கு அனுதினமும் பெருகிக் கொண்டே வருகிறது. இதைக் காணும் சில பொறாமைக்காரர்களும், மேதாவிகள் என்று தம்மை நினைத்துக் கொண்டிருக்கும் சில புத்திசாலிகளும் நம்மீது ஏதேதோ குற்றங்குறை கூறிவருகிறார்கள். நம் கழகத்தைப் பின்பற்றி நடந்து வருபவர்களை இவர்கள் பயித்தியக்காரர்கள் என்றுகூடக் கருதி வருகிறார்கள்.

புத்திசாலிகள் அல்ல! பொறுப்பான லட்சியப் போர் வீரர்களே வேண்டும்!


என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா, முட்டாள்களா, பயித்தியக்காரர்களா, கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை.

இந்த சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில் எக்ஸிக்யூடிவ் என்ஜினீயராய் இருந்தபோது, அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார். மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக் கூடிய புது மாதிரியான கவலை ஒன்று செய்ய தனக்கு இரண்டு கொல்லர்களை தருவித்துக் கொடுக்கும்படி சொன்னார். நான் யோசித்து, இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களின் - அதாவது துப்பாக்கி செய்யக் கூடியவர்கள், பெயரைக் குறிப்பிட்டு அவர்களை அழைத்து வரும்படி என் காரியஸ்தர்களுக்குக் கூறினேன்.

அப்போது அவர் சொன்னார், "கொல்லன் - கெட்டிக் காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால் அவர்கள் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனப் போட்டி வேலையைக் கெடுத்துவிடும், அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள், என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, நான் சொல்வதைப் புரிந்துகொண்டு அதன்படி வேலை செய்யக்கூடிய, ஒரு படிமானமுள்ள, சொன்னபடி நடக்கக்கூடிய, இரண்டு சம்மட்டியும், சுத்தியும் பிடித்துப் பழகிய ஒரு சாதாரண ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் முட்டாள்களாய் இருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.

சேரு முன்பு சிந்திப்பீர்!


சேர்ந்த பிறகோ அதை மறப்பீர்!


புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப் போதுமே இயற்கைதான். ஆகவேதான், நான் நீடா மங்கலம் மாநாட்டின்போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்தப் பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்கவேண்டியவர்கள்தான். தோழர்களே நான் இப்போது கூறுகிறேன். நீடா மங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன்.

நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்தப் பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்து விட வேண்டியதுதான். கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறு கிறது என்று நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானா லும் ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!

ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும், பகுத் தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர் களாகச் சேர்ந்து விட்டீர்களோ உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியதுதான் முறை.

ஒரு எஜமான் வேலைக்காரனைப் பார்த்து, 'அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடப்பா' என்று கூறினால், 'என் மனச்சாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவில்லையே?' என்று கூறினால், அது முறையாகுமா? ஒரு டிஸ்ட்ரிக்ட் சூப்ரன்டெண்ட் 'சுடு!' என்று போலிஸ்காரனுக்கு உத்தரவு போட, அவன் 'என் மனச்சாட்சி அதற்கு இடங் கொடுக்க வில்லையே' என்று கூறினால், அந்தச் சூப்ரன்டெண்ட் கதி என்னாவது? கசாப்புக் கடையில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டவன் 'அந்த ஆட்டை வெட்டுடா!' என்று எஜமான் உத்திரவிடும்போது, 'அய்யோ என் மனச்சாட்சி மாட்டேன் என்கிறதே; நான் என்ன செய்யட்டும்?' என்று கூறினால், 'ஏண்டா மடப்பயலே! முன்னாடியே உனக்கு இது தெரியாமற் போனதென்னடா?' அப்போது உன் மனச்சாட்சி எங்கேடா போயிருந்தது? என்று கேட்பானா? இல்லையா அவனை?

குதர்க்கம் பேசுதல் விஷமமல்லவா?


ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக்கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷமத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதிகாரம்தான் என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால், தோழர்களே! நீங்கள் சிந்திக்கவேண்டும்; இந்த சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறதென்று? என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக லட்சியத்தின் வெற்றிக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே ஒழிய, எந்தச் சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக் காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக் காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண் டுகிறேன்.

என் சொந்த விளம்பரத்திற்காக, என் சொந்தப் பெரு மைக்காக இதுபோன்ற மாநாடுகள் கூட்டப்படுகின்றன என்று சிலர் கருதுவதற்கொப்ப, இம்மேடையின் கண் பேச நேரும் தோழர்களும் என்னைப்பற்றிப் புகழ்ந்து பேசு வதிலேயே தமது சொற்பொழிவுக்குக் கொடுக்கப்படும் நேரத்தின் பெரும் பகுதியைச் செலவு செய்கின்றார்கள். இதை நான் அறவே வெறுக்கிறேன். சிறிதும் விரும்ப வில்லை. ஆகவே, சொற்பொழிவாளர்கள் என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசாமல் இருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

இருந்த காந்தியார் வேறு!  இறந்த காந்தியார் வேறு!


சென்ற மாநாட்டிற்குப்பின் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் முதன்மையாகப் பேசப்பட வேண்டியது காந்தியாரின் மறைவைக் குறித்தாகும். காந்தியார் உயிரோடிருந்தவரை அவருடைய போக்கைப் பெரும் அளவுக்குக் கண்டித்து வந்த எனக்கு, காந்தியார் மறைவுக்குத் துக்கப்படவோ, அவரது மறைவிற்குப் பின் அவரைப்பற்றிப் புகழ்ந்து பேசவோ என்ன உரிமை யுண்டென்று சிலர் கேட்கலாம். சில காங்கிரஸ்காரர்களின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொள்ளவே நான் இவ்விதம் சூழ்ச்சி செய்வதாகவும் கருதியிருக்கலாம். ஆனால், தோழர்களே! இவை உண்மையல்ல. காந்தியார் மறைவுக்கு ஆக எந்த காங்கிரஸ்காரர் துக்கப்பட்டார்? அழுதார்? வேதனைப்பட்டார்கள்? காங்கிரஸ்காரர்கள் பண்டிகை கொண்டாடினார்கள். காங்கிரஸ் முக்கிய ஸ்தர்களாக இருந்த பார்ப்பனர்கள் இனிப்பு வழங்கி னார்கள். எனக்கு உண்மையிலேயே இப்பொழுதும் துக்கம் மேலிடுகிறது.

காந்தியாரின் மறைவுக்கு அனுதாபப்பட, மற்றவர் களைக் காட்டிலும் அதிகத் துக்கப்பட வேறுபல காரணங்கள் உண்டு. முதலாவதாகக் காங்கிரஸ்காரர்கள் பலரும் பார்ப்பனர்களும் கருதி இருந்த காந்தியார் வேறு, இறந்த காந்தியார் வேறு என்று நான் கருதுகிறேன்.

இருந்த காந்தியார் ஆரிய காந்தியார்! ஆரியரால் உண்டாக்கப்பட்ட காந்தியார். நம் எதிரிகளின் காந்தியார். ஆனால், இறந்த காந்தியார் நம் காந்தியார். ஆரியம் அழிந்துவிடுமே எனப் பயந்து ஆரியரால் கொல்லப்பட்ட கொலையுண்ட காந்தியார். அதனால்தான் நாம் மற்றவர் களுக்கும் மேலாகத் துக்கப்படுகிறோம். அதனால்தான், மற்றவர்களைவிட நமக்குத்தான், அவர் மறைவுக்காக துக்கப்படவும் உரிமையுண்டு என்று கூறிக் கொள்கிறோம். ஒருவர் தம் மறைவு காலத்தில் எந்த நிலையில் இருக்கிறாரோ, அதைப் பொறுத்துத்தான் அவருடைய மறைவுக்குத் துக்கப்படுபவர்களும், சந்தோஷப்படுப வர்களும் அமைவார்கள். உதாரணமாக, நான் காங்கிரஸ் ராமசாமியாக ஒரு காலத்திலும், சுயமரியாதை ராம சாமியாக ஒரு காலத்திலும், திராவிடர் கழக ராமசாமியாகத் தற்காலத்திலும் இருந்து வருகிறேன். காங்கிரஸ் ராம சாமியாக இருந்த காலத்தில் நான் இறந்திருந்தால், 'சுதேசமித்திரன்' ஆசிரியர் உள்பட, 'ஹிந்து' ஆசிரியர் உள்பட பல காங்கிரஸ்காரர்களும் அய்யர், அய்யங் கார்களும் துக்கங் கொண்டாடியிருப்பார்கள். சுய மரி யாதை ராமசாமியாக இறந்திருந்தால் சுயமரியாதைக் காரர்களும் மற்றும் சில அறிவாளிகளும் மட்டும் துக்கம் கொண்டாடியிருப்பார்கள். ஒரு சில சுயமரியாதைக்கார பார்ப்பனர் தவிர்த்த மற்றப் பார்ப்பனர்கள், வைதீகர்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.

இருந்தவர் ஆரியக் காந்தியார், இறந்தவர் திராவிடக் காந்தியார்!


ஆனால், இன்று மறைய நேர்ந்தாலோ திராவிடர்கள் அனைவரும் துக்கங் கொண்டாடலாம் என்று கருதுகிறேன். இதேபோல், காந்தியாரும் தம் மறைவின் போது திராவிடர் கழகக் கொள்கைகளை ஒப்புக்கொண்ட காந்தியாராகத்தான் மறைந்தாரே ஒழிய, ஆரிய தர்மத்தை ஒப்புக்கொண்ட காந்தியாராக மறையவில்லை. இந்து மத தர்ம அநீதியைக் கண்டிக்கப் புகுந்ததால், அதற்கான பலனையடைந்தார். சூத்திரன் தலை எடுத்தால் பார்ப் பானுக்கு ஆபத்து என்ற மனுதர்ம விதிப்படி, அவர் பார்ப்பனனால் கொல்லப்பட்டார். இராமாயண கதையில் சம்பூகன் அடைந்த கதியை அவர் அடைந்தார். சம்பூகன் கொல்லப்பட்டதற்கு ஆரியப் பார்ப்பனர்கள் அகமகிழ்ந் ததாக, இறந்த பார்ப்பனர்களெல்லாம் உயிர்த்தெழுந்ததாக, கதையில் காணப்படுகிறது. காந்தியார் கொல்லப் பட்டதற்குப் பார்ப்பனர்கள் மிட்டாய் வழங்கியதை நாம் நேராகப் பார்த்தோம். காந்தியார் மறைவுக்குப் பார்ப் பனர்களே காரணம் என்று வடநாட்டில் பார்ப்பனர்கள் வீடுகள் சாம்பலாக்கப்பட்டதையும், பார்ப்பனர்களின் வீடுகள் சூறையாடப்பட்டதையும், பார்ப்பன தாய்மார்கள் அவமானப்படுத்தப்பட்டதையும், பார்ப்பனர்கள் தங்க இடமின்றி ஓடி தவித்ததையும் நாம் பத்திரிகையில் பார்த்தோம். அதற்கு நஷ்ட ஈடாகப் பம்பாய் மாகாண சர்க்கார் ஒவ்வொரு பார்ப்பனனுக்கும் ரூ.2000 இனாமாகவும், ரூ.25,000 வரை ரொக்கக் கடனும் கொடுத்து உதவியதாகவும் நாம் பத்திரிகையில் பார்க்கிறோம். இங்கு பார்ப்பனர்களுக்கு அத்தகைய கேடு நேரவில்லை. இதற்கு நம் கழகம்தான் காரணமே ஒழிய, காந்தியார் மறைவுக்குத் துக்கப்படுபவர் இந்நாட்டில் இல்லாமல் போனதால் அல்ல.

எங்களால் வந்த வாழ்வு!


இன்றோ நமக்குச் சவால்!


இதை அறியாத பார்ப்பனர்கள் ஆணவத்தோடு அந் தணர் மாநாட்டைக் கூட்டி நமக்குச் சவால் விடுகிறார்கள். இந்தப் பார்ப்பனர்களை, இன்று மட்டுமல்ல, என்றுமே காப்பாற்றி வருபவர்கள் நாம்தான். இந்நாட்டி லிருந்து பார்ப்பனர்களை அறவே ஒழித்துக்கட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த (ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியில்) ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் தெருவில் வரக்கூட யோக்கியதையற்றுக் கிடந்தார்கள். அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியை இருந்த இடம் தெரியாமல் ஒழிக்க, நான் தேசியத்திற்கு முதல் அடிமையானேன். தோழர் வரதராஜுலு நாயுடு அடுத்த அடிமையானார். தோழர் கல்யாண சுந்தர முதலியார் மூன்றாவது அடிமை யானார். ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனுவாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி அய்யர் போன்ற வர்களுக்கு மேடையில் இடம் வாங்கிக் கொடுத்தவர்களும், அவர்களுக்குத் தமிழ்ப் பேசக் கற்றுக் கொடுத்தவர் களும்கூட நாங்கள்தான்.

அக்காலத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு, வீடு பிரித்துப் போட்டுக் கிடக்கிறது என்று கூறத் தெரியாது. வீடு அவுத்துப் போட்டுக் கிடக்கிறது என்றுதான் கூறுவார். சத்தியமூர்த்தி அய்யருக்கு நேக்கு, நோக்கு, அம்மாஞ்சி, அம்மாமி, அவா, இவா இவை தவிர வேறு தமிழ் வார்த்தைகள் பேசத் தெரியாது. ரங்கசாமி அய்யங்கார், டாக்டர் ராஜன், சுதேசமித்திரன் ஆசிரியர் இவர்கள் ஒரு சிலர் தவிர்த்து, அந்தக் காலத்தில் பார்ப்பனர்களில் தமிழ்ப் பேச ஆள் கிடையாது. கூட்டத்தில் பார்ப்பனர்களுக்குப் பேச உரிமை வாங்கிக் கொடுத்தவர்களும், அவர்களுக்குத் தியாகம் செய்ய (ஜெயிலுக்குப் போக) கற்றுக் கொடுத் தவர்களும் நாங்கள்தான். ராஜகோபாலாச்சாரியாரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். இது உண்மையா அல்லவா என்று. நாளைக்கு கவர்னர் ஜெனரலாகப் போகிறார். என்னையும் காண்பார். கண்டால் வெட்கப்படப் போகிறார். கட்டியழப் போகிறார். 'நான் இப்படியானேன்; நீ அப்படியே இருக்கிறாயே' என்று கேட்பார். நாங்கள் இல்லாதிருந்தால் இந்த நாட்டில் ராஜகோபாலாச்சாரி ஏது? கவர்னர் ஜெனரல் பதவிதான் ஏது? சர்வம் பார்ப்பனிய சுயராஜ்யம் ஏது? பெற்ற பதவியில் நான் பங்கு கேட்கவில்லை.

சுயராஜ்யம் வந்ததென்றால், குறைகளைச் சொல்லக் கூடவா உரிமை இல்லை


உங்களுக்குச் சுயராஜ்யம் வந்துவிட்டது, பதவி வகிக்கிறீர்கள் என்றால், எங்கள் குறைபாடுகளை எடுத்துச் சொல்லக்கூடவா எங்களுக்கு உரிமை இருக்கக் கூடாது? சுயராஜ்யம் வந்துவிட்டதென்றால், சுயராஜ்யத்தில் பதவி வகிக்க நேர்ந்த சுயராஜ்யப் புலிகள் மற்றவர்களை ஆடுகளைப் போல் கொன்று அழித்துத்தான் தீர வேண் டுமா? கொள்ளைக்காரர்களும், வஞ்சகர்களும், காலி களும் எப்போதும்போல் சாதுக்களை, யோக் கியர்களை, ஏழைகளை வஞ்சித்துத்தான், கொள்ளையடித்துத்தான் வாழ்ந்து வரவேண்டுமா? சுயராஜ்ய சர்க்கார் இதைத் தடை செய்தல் வேண்டாமா? சுயராஜ்ய சர்க்காரில் ஏழை கள்தான் அதிக வரி செலுத்தவேண்டுமா? சுயராஜ்யம் வந்து ஏழைகள் பட்டினி கிடக்கவேண்டுமா? சுயராஜ்யம் வந்துவிட்டதென்றால் ஒரு ஊரில் அரிசி ரூபாய்க்கு முக் கால்படியும், ஒரு ஊரில் அரிசி ரூபாய்க்கு இரண்டே கால்படியுமா விற்பது?

உண்மையாக கூறுகிறேன்; தோழர்களே! உங்களுக்கும் கேட்க அதிசயமாயிருக்கும். நமது மாநாட்டிற்குத் தேவையான அரிசியை விலை சரசமாயுள்ள (அதாவது ரூபாய்க்கு இரண்டேகால்படி விலையுள்ள) தஞ்சை ஜில்லாவில் வாங்கிக் கொள்ள அனுமதி தரவேண்டுமென்று மந்திரியாருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு மந்திரியார் பதில் எழுதியிருக்கிறார். 'இந்த மாகாணத்தில் அந்த ஒரு ஜில்லாவில்தான் நெல் அதிகமாக (ஏனோ) விளைந்துவிட்டது. ஆகவே, அந்த அரிசியை வாங்கிக் கொள்ள உங்களுக்கு அனுமதி கொடுக்கமாட்டோம். வேறு எந்த ஜில்லாவில் வேண்டுமானாலும் 50 மூட்டைகள் வரைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று எழுதியி ருக்கிறார். அதிகமாக விளைந்துள்ள ஊரில் நெல்லும், அரிசியும் மக்கிப் புழுப் புழுக்கவேண்டுமாம்! பற்றாக்குறை ஜில்லாவில் மேலும் அரிசி வாங்கி மேலும் அந்த ஊரில் பஞ்சத்தை அதிகமாக்க வேண்டுமாம்!

'குடிஅரசு' 29.05.1948

தூத்துக்குடி கழக மாநாட்டில்

தந்தை பெரியார் அவர்களின் உரை

- விடுதலை நாளேடு, 30. 6 .19

திங்கள், 1 ஜூலை, 2019

எனது ஆசை



10.01.1948   - குடிஅரசிலிருந்து... -

மாநாட்டுக்கு தலைமை வகித்த தோழர் அவர்கள், தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னைத் தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேன் என்றும் சொன்னார். இந்த இயக்கம் இன்று ஏதாவது மதிக்கத் தகுந்த அளவுக்கு பயன்பட்டு வருகின்றது என்று சொல்லப்படுமானால் அதற்குக் காரணம் இந்த மாதிரி சின்னப் பையன்களே காரணமாகும். இப்படிப்பட்ட சின்னப் பையன்கள் இந்த இயக்கத்தில் இருப்பதினாலேயேதான் எனக்கும் ஒருபுறம் வயது வளர்ந்தாலும், வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது.

எனது சகவாசம் முழுவதும் சின்னப் பையன்களிடமே இருப்பதினால்தான் சின்னப் பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்தும், வளர்ந்தும் வளர்கிறது. என் ஆசை யெல்லாம் நான் எப்பொழுதும் சின்னப் பையன்கள் மாதிரியே இருக்க வேண்டு மென்பதோடு, பெரிய ஆள்கள் மாதிரி ஆகக்கூடாது என்பது மாகும்.

வித்தியாசங்களின் வேர்


10.01.1948 - குடிஅரசிலிருந்து....

சிலர் சொல்லுவது போல் கீழேயிருந்து இவ்வித்தியாசங் களைப் போக்கிக் கொண்டு போகவேண்டும் என்பது ஒரு காலத்திலும் முடியும்படியான காரியமல்ல. அதற்கு ஆதாரமானதாகிய வேரிலிருந்து பறித்து வெட்டியிருந்தால்தான் மறுபடி முளைக்காமலிருக்கும். அப்படிக்கில் லாமல் அதிலிருந்து முளைத்த கிளைகளை மாத்திரம் வெட்டினால், மறுபடியும் அது நன்றாய்த் துளிர்த்து தழைத்துக் கொண்டுதான் இருக்கும். எனவே உற்பத்தி தானமாகிய பார்ப்பனர்களிடமிருந்து அதை ஒழிக்கவேண்டும். அவர்களால்தான் இவ்வித்தியாசங்கள் பரவுகின்றன. உதாரணமாக எங்கள் வீட்டிற்கு முன் ஒரு குழாய் இருக்கிறது. அதில் தண்ணீர் பிடிக்க ஒரு பார்ப்பனச் சகோதரி வரும்போது ஒரு சுண்டைக்காய் பிரமாணம் புளியும், பஞ்சபாத்திரத்தில் தண்ணீரும் கொண்டு வந்து குழாயைப் புளியால் விளக்கிக் கழுவி, பின்பு தண்ணீர் பிடித்துக்கொண்டு போக ஆரம்பித்தாள். இதைப் பார்த்த நம் சகோதரிகள் நெல்லிக்காய் அளவு புளியும், ஒரு தோண்டி தண்ணீரும் கொண்டு வந்து புளியால் விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகினார்கள். இதைக் கண்ணுற்ற நம் முகமதிய சகோதரிகளும் கொளுமிச்சங்காய் அளவு புளியும், முக்கால் குடம் தண்ணீரும் கொண்டு வந்து புளியால் குழாயை விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகினார்கள். அந்த முகமதிய சகோதரியை தடுத்து உங்கள் மதத்திற்கு வித்தியாசமில்லையே; நீங்கள் கூட ஏன் இப்படிக் கழுவித் தண்ணீர் பிடிக்கிறீர்கள்? என்றால், எனக்கு என்ன தெரியும்? இப்படித்தான் தண்ணீர் பிடிப்பது வழக்கமோ என்னமோ என்று கருதி நான் செய்து வருகிறேன் என்கிறாள். இவ்வளவுக் கும் காரணமாயிருந்தவர்கள் யார் என்று பாருங்கள். பார்ப்பனர்கள் இப்படிச் செய்யாதிருந்தால் இவ்வித வழக்கங்கள் பரவ வழியில்லை.

- விடுதலை நாளேடு 22. 6. 19

பகுத்தறிவும் சுயமரியாதையும்! (2)


01.05.1948  - குடிஅரசிலிருந்து..

சென்ற வாரத் தொடர்ச்சி...

நாம் இதைத்தான் சுயமரியாதை என் கிறோம். சுய அறிவு கொண்டு சிந்தித்துப் பார்ப்பதற்குத்தான் சுயமரியாதை என்று பெயர். ஒவ்வொருவரும் தம் சுய அறிவு கொண்டு சிந்திக்க உரிமை பெற்றிருப் பதற்குத்தான் பூர்ணசுயேச்சை என்று பெயர் எதையும் பூர்ண மரியாதை கொடுத்துக் கேட்டு பூர்ண சுயேச்சையோடு ஆராய்ந்து முடிவுக்கு வாருங்கள்.

மனிதனை மனிதனாக்குவது சிந்தனை

இச்சிந்தனா சக்திதான் மனிதனை மிருகங்களிடமிருந்தும், பட்சிகளிட மிருந்தும் பிரித்துக் காட்டுவதாகும். மிருகங்கள் மனிதனை விட எவ்வளவோ பலம் பெற்றிருந்தும் அவை அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். கழுகு 1 மைல் உயரப் பறந்து கொண்டிருக்கும் போதே தரையிலுள்ள ஒரு சிறு பாம்பைக்கூட கண்டு பிடித்துவிடும். பார்வையில் அது நம்மைவிட அதிகச் சக்தி பெற்றிருக்கிறது என்பதற்காக நாம் அதை மேம்பட்டதாக ஒப்புக் கொள்ளுகிறோமா? ஆகவே மனிதனிடமுள்ள வேறு எந்தச் சக்தியைக் காட்டிலும், பகுத்தறியும் சக்திதான் அவனை மற்ற எல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் மேம்பட்டவனாக்கி வைக்கிறது. ஆகவே, அதை உபயோகிக்கும் அளவுக்குத்தான், அவன் மனிதத் தன்மை பெற்றியங்குவதாக நாம் கூற முடியும். பகுத்தறிவை உபயோகியாதவன் மிருக மாகவே கருதப்படுவான்.

சில்லறை விஷயங்களுக்குச் சிந் தனையைச் செலவிடுகிறோம். ஆனால்...

ஆனால், எந்த மனிதனும் ஒரு அளவுக்காவது பகுத்தறிவை உபயோ கித்துத்தான் வாழ்கிறான். நகை வாங்கும் போது அதை உரைத்துப் பார்க்காமலோ, அக்கம்பக்கம் விசாரிக்காமலோ யாரும் வாங்கிவிடுவதில்லை. அப்படிப் பார்ப் பதும் பகுத்தறிவுதான். ஒரு சேலை வாங்கினாலும் கூட சாயம் நிற்குமா, அதன் விலை சரியா, இதற்குமுன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா, இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக் கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விஷயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறி விடுகிறோம். அதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த் துவதுதான், பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.

ஒரு ரேடியோவாக என்னைக் கருதுங்களேன்

என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. சுதந்திரம் உண்டு என்ற நம்பிக்கையின் பேரில் நான் என் பகுத்தறிவுக்குட்பட்டதை என்னால் கூடுமான அளவுக்கு விளக்கிச் சொல்லு கிறேன். நீங்களும் ஏதோ ஒரு ரேடியோ பேசுவதாகக் கொண்டு சற்று அமைதி யாகவும், கவனத்தோடும் கேளுங்கள். உங்களுக்கு விருப்பமற்ற செய்திகளை ரேடியோ அறிவிக்கிறது என்பதற்காக அதை உடைத்தெறிந்து விடுவீர்களா? அல்லது அதன்மீது உங்களால் கோபித்துக் கொள்ளத்தான் முடியுமா? ஆகவே, நான் கூறுவது உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் கொஞ்சம் கவனமாகக் கேட்டுப் பின்பு ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன். நான் பொறுப் பற்றும் பேசுவதில்லை. திராவிடர் கழகத் தலைவன் என்கிற முறையில்தான், எனக் குள்ள சகல பொறுப்புகளையும் உணர்ந்து தான் பேசுகிறேன். நான் கூறுவதில் சந்தேகம் ஏற்படுமானாலும் அதை விளக்கிக் கூறவும் நான் தயாராகவே இருக்கிறேன்.

- விடுதலை நாளேடு 22. 6. 19

ஏன் அரசியல் நிர்ணய சபையைக் கலைக்க வேண்டும்?



12.06.1948  - குடிஅரசிலிருந்து...

1. அரசியல் பிரதிநிதித்துவ சபை இந்திய யூனியன் மக்கள் பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல.

2. இப்போதிருக்கும் சட்டசபை மெம்பர்கள் தேர்தல் நடக்கும்போது, இந்த நாட்டில் இருந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியாகும்.

3. பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சி மீது இருந்த அதிருப்தி காரணமாகவும், சரியான பிரதிநிதித்துவம் இல்லாத காரணமாகவும் சில கட்சிகளும், சில பொதுநலச் சீர்திருத்தக்காரர்களும், சில தனிப்பட்ட நபர்களும் தேர்தலுக்கு நிற்க வில்லை. இதைத் தேர்தலுக்கு முன்பே தெரிவித்து இருக்கிறார்கள்.

4. பிரிட்டிஷ் ஆட்சியார் தங்களுக்கு வசதியான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்கு ஆக இந்த நாட்டில் பார்ப்பனர் களுக்கும், படித்தவர்களுக்கும் மாத்திரம் ஓட்டு உரிமை இருக்கும்படி வசதி செய்து கொண்டு, 100க்கு 12 பேர்களுக்கே ஓட்டு உரிமை கொடுத்து விட்டு மற்ற மக்களுக்கு ஓட்டுரிமை பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்திருந்த முறையில் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்தான் இப்போதைய சட்டசபை மெம்பர்களாவார்கள்.

5. தவிர இந்த மெம்பர்கள் தெரிந்தெடுக்கப் படும் போது குடியேற்ற நாட்டந்ததுப் பேச்சும், இந்தியா ஒரே யூனியனாக இருக்க வேண்டும் என்கின்ற பேச்சும் இருந்ததில்லை.

6. பெரிதும் கிரிப்சு திட்டம்தான் அதுவும் பேச்சு வார்த்தையில்தான் இருந்தது.

7. இன்றைய இந்திய யூனியனில் நடந்து வரும் சுதேச சமாதானக் கொள்கை, உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டதற்குக் காரணமாக இந்திய யூனியன் அரசாங்கத்தார் நடந்துவரும் கொள்கை முதலியவை தேர்தல் காலத்தில் பிரச்சினையாக இல்லை.

8. தேர்தல் காலத்தில் இருந்து வந்த, காங்கிரஸ் அங்கத்தினர்களைச் சேர்க்கும் இரசீதுகளிலும், அக்காலக் காங்கிரஸ் கொள் கைகள் திட்டங்களிலும் இருந்து வந்த வாக்குறுதி  அளித்த காரியங்கள், கருத்துக்களுக்கு விரோதமாகவே அரசியல் நிர்ணய சபை காரியங்கள் நடக்கின்றன.

9. வகுப்பு மதம் விஷயங்களில் காங்கிர வாக்குறுதிகளை அரசியல் நிர்ணயசபை சிறிதும் லட்சியம் செய்யவில்லை.

10. காங்கிரஸ் பாதுகாப்பு அளிப்பதாகவும், மாற்றி அமைப்பதாகவும் சொன்ன வாக் குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
- விடுதலை நாளேடு, 22. 6 .19