திங்கள், 1 ஜூலை, 2019

பகுத்தறிவும் சுயமரியாதையும்! (2)


01.05.1948  - குடிஅரசிலிருந்து..

சென்ற வாரத் தொடர்ச்சி...

நாம் இதைத்தான் சுயமரியாதை என் கிறோம். சுய அறிவு கொண்டு சிந்தித்துப் பார்ப்பதற்குத்தான் சுயமரியாதை என்று பெயர். ஒவ்வொருவரும் தம் சுய அறிவு கொண்டு சிந்திக்க உரிமை பெற்றிருப் பதற்குத்தான் பூர்ணசுயேச்சை என்று பெயர் எதையும் பூர்ண மரியாதை கொடுத்துக் கேட்டு பூர்ண சுயேச்சையோடு ஆராய்ந்து முடிவுக்கு வாருங்கள்.

மனிதனை மனிதனாக்குவது சிந்தனை

இச்சிந்தனா சக்திதான் மனிதனை மிருகங்களிடமிருந்தும், பட்சிகளிட மிருந்தும் பிரித்துக் காட்டுவதாகும். மிருகங்கள் மனிதனை விட எவ்வளவோ பலம் பெற்றிருந்தும் அவை அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். கழுகு 1 மைல் உயரப் பறந்து கொண்டிருக்கும் போதே தரையிலுள்ள ஒரு சிறு பாம்பைக்கூட கண்டு பிடித்துவிடும். பார்வையில் அது நம்மைவிட அதிகச் சக்தி பெற்றிருக்கிறது என்பதற்காக நாம் அதை மேம்பட்டதாக ஒப்புக் கொள்ளுகிறோமா? ஆகவே மனிதனிடமுள்ள வேறு எந்தச் சக்தியைக் காட்டிலும், பகுத்தறியும் சக்திதான் அவனை மற்ற எல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் மேம்பட்டவனாக்கி வைக்கிறது. ஆகவே, அதை உபயோகிக்கும் அளவுக்குத்தான், அவன் மனிதத் தன்மை பெற்றியங்குவதாக நாம் கூற முடியும். பகுத்தறிவை உபயோகியாதவன் மிருக மாகவே கருதப்படுவான்.

சில்லறை விஷயங்களுக்குச் சிந் தனையைச் செலவிடுகிறோம். ஆனால்...

ஆனால், எந்த மனிதனும் ஒரு அளவுக்காவது பகுத்தறிவை உபயோ கித்துத்தான் வாழ்கிறான். நகை வாங்கும் போது அதை உரைத்துப் பார்க்காமலோ, அக்கம்பக்கம் விசாரிக்காமலோ யாரும் வாங்கிவிடுவதில்லை. அப்படிப் பார்ப் பதும் பகுத்தறிவுதான். ஒரு சேலை வாங்கினாலும் கூட சாயம் நிற்குமா, அதன் விலை சரியா, இதற்குமுன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா, இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக் கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விஷயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறி விடுகிறோம். அதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த் துவதுதான், பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.

ஒரு ரேடியோவாக என்னைக் கருதுங்களேன்

என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. சுதந்திரம் உண்டு என்ற நம்பிக்கையின் பேரில் நான் என் பகுத்தறிவுக்குட்பட்டதை என்னால் கூடுமான அளவுக்கு விளக்கிச் சொல்லு கிறேன். நீங்களும் ஏதோ ஒரு ரேடியோ பேசுவதாகக் கொண்டு சற்று அமைதி யாகவும், கவனத்தோடும் கேளுங்கள். உங்களுக்கு விருப்பமற்ற செய்திகளை ரேடியோ அறிவிக்கிறது என்பதற்காக அதை உடைத்தெறிந்து விடுவீர்களா? அல்லது அதன்மீது உங்களால் கோபித்துக் கொள்ளத்தான் முடியுமா? ஆகவே, நான் கூறுவது உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் கொஞ்சம் கவனமாகக் கேட்டுப் பின்பு ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன். நான் பொறுப் பற்றும் பேசுவதில்லை. திராவிடர் கழகத் தலைவன் என்கிற முறையில்தான், எனக் குள்ள சகல பொறுப்புகளையும் உணர்ந்து தான் பேசுகிறேன். நான் கூறுவதில் சந்தேகம் ஏற்படுமானாலும் அதை விளக்கிக் கூறவும் நான் தயாராகவே இருக்கிறேன்.

- விடுதலை நாளேடு 22. 6. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக