சனி, 3 ஆகஸ்ட், 2019

திராவிடமே! தமிழ்நாடே!

08.03.1947 குடிஅரசிலிருந்து....

நீ எந்தப் பெயரையோ வைத்துத் தொலைத்துக் கொள். இன்று நீ அனாதியாய், அழுவாரற்ற பிணமாய் இருக்கின்றாய். உன்னை ஏன் என்று கேட்க ஆளில்லை. இந்தத் திராவிட நாட்டில் 10இல் ஒரு பங்குகூட இல்லாத முஸ்லிம்களின் நிலை எவ்வளவு உயர்ந்துவிட்டது. அவர்கள் எவரு டைய தயவும் வேண்டாத உயர்நிலை அடைந்து விட்டார்கள். அதுபோலவே திராவிடநாட்டில் 6இல் ஒரு பங்கு கொண்ட தீண்டப்படாத மக்களாயிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை திடீரென்று எவ்வளவு உயர்ந்துவிட்டது தெரி யுமா? இந்தியாவைவிட்டுப் பிரிட்டிஷார் விலகிக் கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தத் தீண்டப்படாத மக்கள் என்பவர்களின் விஷயம் ஒரு நிபந்தனை ஆக்கப்பட்டு அதற்கேற்றாற் போல் வேலையும் நடந்து வருகிறது. அவர்கள் இனிமேல் தீண்டப்படாத மக்களும்  அல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் அல்ல என்கின்ற நிலைமையை அடைந்துவிட்டார்கள். அவர் களுக்கு இனி உத்தியோகங்கள் ஓடி ஓடி வரும்; பதவிகள் தேடித்தேடி வந்து கட்டி அணையும்.

இத்திராவிடநாட்டில் 30இல் ஒரு பங்கு வீதம் எண்ணிக்கைக் கொண்ட பார்ப்பனர்கள் நிலையை நீயே பார். அவர்கள் இல்லாத இடம் எது? இந்திய ராஷ்டிரபதி, இந்திய முதல் மந்திரி, திராவிட முதல்மந்திரி மற்றும் என்ன என்ன எல்லாவற்றிலும் பார்ப்பனர்கள், சர்வம் பார்ப்பன மயம். இவர்கள் தவிர கிறிஸ்தவர் களைப் பார்! அவர்கள் திராவிடத்தில் 40இல் ஒரு பங்கு (இருக்கலாம்) உள்ளவர்கள் அவர் களுக்கு என்ன குறை என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியில் நல்ல செல்வாக்குடனும் உயர்தர வாழ்க் கையோடும் இருக்கிறார்கள். மற்றும் இந்தத் திராவிடநாட்டுக்குப் பிழைக்கவந்த யாதும் ஊரே என்கின்ற வடநாட்டு மக்கள் கூட்டத்தின் தன்மையைப் பார். அவன் உண்டு கழித்தது (மீதி) தான் உனக்கு மிச்சம் என்கின்ற தன் மையில் இருக்கிறது.

இந்த நிலையில் நீ, தமிழனா? தெலுங்கனா? கன்னடியனா? மலையாளியா? யார்? யாராய் இருந்தாலும் சரி. சென்னை மாகாணத்தவனான திராவிடனான அல்லது தமிழனே ஆன நீ என்ன நிலையில் இருக்கிறாய்? தமிழ் இலக்கண இலக்கியத்தைக் கரைகண்டாய், தமிழின் மூலத் தையும் தொன்மை நிலையையும் தோண்டி எடுத்தாய்; தமிழ்த் தெய்வமாகிய முருகனாகவே ஆகித் தமிழில் இணையற்ற வல்லவனாகி ஆராய்ச்சிகள் செய்து தமிழனின் உயர்தன் மையைக் கண்டு பிடித்தாய்; இயற்கையோடு இயைந்தாய்; எண்ணில்லாத புத்தகம் பதிப்பித்தாய்; எங்கும் தமிழ்மயம், எங்கும் தமிழ் முழக்கம் என்கிறாய். ஆனால் இந்த(உன்)நாட்டில் உன் நிலை என்ன? உன் பங்கு என்ன? உன் உரிமை என்ன? என்பதைச் சிந்தித்துப்பார். சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், வாழ்வில், சட்டத்தில், சாஸ்திரத்தில், கடவுள் சன்னி தானத்தில், உன் நிலை என்ன என்பதை யோசித்துப்பார். இவற்றில் நீ மற்றவரிலும் தாழ் நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ன? நீ யார் என்பது உனக்குத் தெரியாது. யார் என்றோ நினைத்துக்கொண்டு விலகித் தனியாய் நிற் கிறாய். ஒற்றுமை, கூட்டு லட்சியம், பொது நலம் ஆகியவற்றுடன் தமிழன் (திராவிடன்) எவன் வாழ்ந்தாலும் அவ்வாழ்வு நான் வாழ்கின்ற மாதிரிதான்; தமிழனுக்காகத் தமிழன் வாழ்கின் றானே ஒழிய, வாழவேண்டுமே ஒழிய தனித்தனித் தமிழனின் சுயநல வாழ்வுக்காக அல்ல என்பதாக எதாவது ஒரு தமிழன் (திராவிடன்) வாழ்கின் றானா? எண்ணு கின்றானா? திராவிடத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ்மகனே! நீயே எண் ணிப்பார். இப்போது தெரிகிறதா, திராவிடன் ஏன் கீழ் நிலையில் இருக்கிறான் என்பதற்கு உள்ள காரணம்? வெள்ளையன் ஆதிக்கம் பொழுது சாய்ந்துவிட்டது. ஆரியன் ஆதிக்கம் பொழுது புலர்ந்துவிட்டது.

தொடரும்

 - விடுதலை நாளேடு, 3.8.19

கண்ணை மூடிப் பின்பற்றுங்கள்! கருப்புச் சட்டையை எங்கும் பரப்புங்கள்! -II (3)

05.06.1948 - குடிஅரசிலிருந்து.... -

சென்ற வாரத் தொடர்ச்சி

நீங்கள் இன்ப வாழ்வு வாழ.....?

தாய்மார்களே! நீங்கள் எதையும் பகுத்தறிந்து பார்க்கவேண்டும். கல்லை கடவுளென்று நம்புவதையும், பார்ப் பானைக் கடவுள் அவதாரம் என்று நம்பி அவனுக்கு அரிசி பருப்பு அழுவதையும் அறவே விட்டொழிக்க வேண்டும். சாணி மூத்திரத்தைக் கலக்கிக் குடிப்பது மதம் அல்ல. மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுப்பது தான் மதம் என்பதை, மனிதனை மனிதனாக மதித்து நடத்துவதுதான் மதம் என்பதை, நீங்கள் உய்த்துணர வேண்டும். புராண சம்பந்தமான நாடகங்களுக்கோ, சினிமாக்களுக்கோ, புண்ணிய ஷேத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள் என்பனவற்றிற்கோ நீங்கள் கட்டாயம் போகக் கூடாது. இவையாவும் பார்ப்பனர்கள் உங்கள் காசைப் பறித்துச் சுகபோகவாழ்வு வாழ்வதற்கு வகுத்துக் கொண்ட வழிகள். நீங்களும் மேல்நாட்டுப் பெண்களைப் போல் சகல உரிமைகளும் பெற்று இன்ப வாழ்வு வாழ வேண்டும். அதற்கு நீங்கள் ஆண்களைப் போல் படிக்க வேண்டும். உங்களுக்குச் சட் டத்தின் மூலம் பல உரிமைகள், சொத் துரிமை, விவாகரத்துஉரிமை ஆகிய உரிமைகள் வரக் காத்திருக்கின்றன.

அவ்வுரிமைகளை அனுபவிக்க உங்களுக்குக் கல்வியறிவு அவசியமாகும். நகைகளிலோ, சேலைகளிலோ உங்களுக் குள்ள பிரியத்தை ஒழித்து விடுங்கள். இவற்றில் பிரியம் வைத்துக் கொண்டி ருப்பீர்களானால் ஜவுளிக்கடையிலும், நகைக்கடையிலும் சேலை விளம் பரங்களுக்காக, அவ்வப்போது வெவ்வேறு சேலையுடுத்தி, வெவ்வேறு நகை மாட்டி வெளியே நிறுத்தி வைக்கும் வெறும் பொம்மைகளாகத்தான் நீங்கள் ஆக நேரிடும். பழிச்சொல்லுக்காளாகிப் படு மோசம் போகாதீர்!

ஆகவே, அவ்விருப்பங்களை விட்டு கல்வி அறிவில் விருப்பம் கொள்ளுங்கள். வீரத்தாய்மார்களாக ஆக ஆசைப் படுங்கள். உங்கள் நன்மைக்காகத்தான் பெரும்பாலும் திராவிடர் கழகம் இருந்து வருகிறது. நீங்கள் மாறினால் உங்கள் கணவன் மார்கள், மற்ற ஆண்கள் மாற்றம் அடை வது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத் தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள்.

ஏனப்பா, மூடநம்பிக்கைக் கிடமான இக்காரியங் களைச் செய்கிறாய்? என்று ஒரு ஆணைப் பார்த்துக் கேட்டால், நான் என்ன செய்யட்டும்? என் வீட்டில் ஒரு பெரிய சனியன் இருக்கிறது. எல்லாம் அதன் தொல்லைதான் என்று கூறி விடுகிறான். அப்பழிச் சொல்லுக்கு ஆளா காதீர்கள். எதிர்காலத்தில் இவள் இன் னாருடைய மனைவி என்று அழைக்கப் படமாட்டாது.

இவர் இன்னாருடைய புருஷர் என்று அழைக்கப்பட வேண்டும். அந்த நிலைக்கு உங்களைக் கொண்டுவர அனுதினமும் பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்து வர வேண்டும். கடைசியாக உங்களை ஒன்று வேண்டிக் கொள்கிறேன்; உங்களை என்றென்றும் மடமையிலும், அடிமைத் தனத்திலும் ஆழ்த்தி வைக்க நினைக்கும் மதங்களையோ.

மதக் கர்த்தர்களையோ, மகான்களை யோ, ரிஷிகளையோ நம்பி நீங்கள் மோசம் போகாதீர்கள். மனித சக்திக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும் அவன் எவ்வளவுதான் உயர்நிலையிலிருந்தாலும் சரி, அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை உறுதியாக மனதில் வைத்துக் கொள் ளுங்கள். இந்நாட்டில் ஏன் இந்த உலகிலே கூட எத்தனையோ மகான்கள், மகரிஷிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றியிருக்கிறார்கள் என்றாலும் இதுவரை யாரும் உங்களுடைய இழிவைப் போக்க பாடுபட்டதாகக் காணப்பட வில்லை. ஏசுகிறிஸ்து தோன்றி அன்பு மதத்தைப் போதித்ததாக பைபிள் கூறு கிறது. அவருடைய சிஷ்யர்கள்தான் இன்று அணுகுண்டு உற்பத்திக்கு முக்கிய காரண தராயிருந்து வருகிறார்கள். முகம்மது நபி சிஷ்யர்களும், இந்துமத பாதுகாப்பாளர் களும் இன்று ஒருவரை ஒருவர் கொன்று கொள்கிறார்கள். காந்தி யாரின் அகிம்சை அவரையே கொன்று விட்டது.

கண்ணை மூடிப் பின்பற்றுங்கள்! கருஞ்சட்டையைப் பரப்புங்கள்!!

ஆகவே, இன்றைய மதங்கள் பயனற்ற தாகப் போய் விட்டன; அன்பையும், சத்தியத்தையும், வருணாசிரம தர்ம ஒழிப்பையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு புது மதத்தைக் காந்தியின் பேரால் துவக்குங்கள் என்று என்னால் கூறப்பட்ட ஆலோசனையும் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகிவிட்டது.

ஆகவே, தோழர்களே! தாய்மார்களே! நீங்களும் உங்கள் மக்களும் மனிதத் தன்மையோடு வாழ வேண்டுமானால் உங்களுக்குள்ள ஒரே வழி திராவிடர் கழகத்தைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி நடந்து வருவதுதான்.

திராவிட நாட்டில் எங்கெங்கும் கருப்புச் சட்டையைப் பரவச் செய்ய வேண்டியதுதான்.

(08.05.1948 அன்று  தூத்துக்குடியில்  நடந்த

திராவிடர் கழக மாகாண மாநாட்டில்

தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

 


- விடுதலை நாளேடு, 3.8.19

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

பெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்



தந்தை பெரியார்


திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் யார் நாட்டை ஆண்டாலும் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆச்சாரியாரே ஆளட்டும்; அல்லது காங்கிரசுக்காரர்களே ஆளட்டும். மனிதப்பிறவிக்கு  அப்பாற்பட்டது ஆளுவதாயிருந்தாலும் சரி; இராமாயணத்திலே சொல்லப்பட்டிருப்பது போல் ஒரு ஜோடி செருப்பு இந்த நாட்டை ஆளுவதாய் இருந்தாலும் எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. எங்களுக்கு இருக்கிற கவலை எல்லாம் ஆளுகிறவர்கள் நாணயமாக, நேர்மையாக, உள்ளபடியே மக்களின்  நலத்தையும், வாழ்வையும், முன்வைத்து ஆட்சி நடத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் இலட்சியம். அதை விட்டு திராவிடர் கழகம் தான்  பதவிக்கு வரவேண்டும்; தான் மந்திரியாக வேண்டும்; நாட்டை ஆளவேண்டும் என்று கருதுவது அல்ல.

பின் இது என்ன கிளர்ச்சி என்றால், இன்றைய தினம் நடைபெறுவது இனப்போராட்டமாகும். மற்றவர்கள் இந்தக் கிளர்ச்சிகளின் நடுவில் புகுந்துகொண்டு ஏதேதோ சொல்லிக் கொள்ளலாம்; ஆனால் திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் இது இனப் போராட்டம்தான்; ஆரிய-திராவிடப் போராட்டம் தான். பார்ப்பன - சூத்திரப் போராட்டம் தான்

எப்படி இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், புராண காலத்தில் தேவர்கள் என்பவர்களுக்கும், அவர்களுக்கு எதிராக இருந்ததாகச் சொல்லப்படும் அசுரர்கள், ராட்சதர்கள் என்னும் கூட்டதாருக்கும் நடைபெற்றதாகச் சொல்லப்படும் போராட்டங்களின் தன்மையிலே தான் இன்றைய போராட்டம் நடைபெறுகிறது.

அந்தக் காலத்திலே தேவர்கள் என்று சொல்லப்பட்ட மக்கள் தான் இந்தக்காலத்துப் பூ தேவர்களான ஆரியர்கள்; அதாவது பார்ப்பனர்கள். அது போலவே அந்தக் காலத்தில் அந்தத் தேவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய அசுரர்கள், ராட்சதர்கள் என்பவர்கள்தான் இன்றைய தினம் திராவிட மக்கள் என்று சொல்லப்படும் சூத்திர மக்கள் ஆவார்கள். எனவே, இன்றைய போராட்டம் என்பது புராண காலத்திலே நடைபெற்றதாகச் சொல்லப்படும் தேவாசுர யுத்தத்தின் மறுபதிப்பே யாகும். அதாவது இன்றைய தினம் பார்ப்பனர்கள் என்று கருதப்படும் ஆரிய தேவர்களுக்கும் சூத்திரர்கள் என்று  கருதப்படும் ராட்சத, அசுரர்களுக்கும் நடைபெறும் போராட்டமாகும். புராணகால போராட்டங்களின் மறுபதிப்பே இன்றைய போராட்டங்கள் ஆகும். சூரபதுமன், இராவணன், இரணியன் முதலியவர்கள் கதைப்படி எந்த லட்சியத்துக்குக் கொள்கைக்கு ஆக, அடிப்படைக் காரணத்துக்கு ஆகப்  போராடினார்களோ அதே அடிப்படைக் காரணத்துக்கு ஆகத்தான் இன்று பார்ப்பனருக்கும், நமக்கும் போராட்டம் நடக்கிறது.

முந்தின போர்களில் எல்லாம் பார்ப்பனர்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. என்ன அந்த வாய்ப்பு என்றால், இந்த அசுரர்கள் என்ற கூட்டத்திலேயே ஒரு கூட்டத்தைத்  தங்கள் வசப்படுத்திக்கொண்டு, அவர்களின் மூலமாகவே இந்த அசுரர்கள், ராட்சதர்கள் என்று சொல்லப்படுபவர்களை வெற்றி பெற்றார்கள்.

அதே முறையில்தான் இன்றும் செய்து, நம்மினத்திலேயே அனுமார்களை, விபீஷணர்களை உற்பத்தி செய்து நம்மை அடிக்கச் சொல்கிறார்கள். இதை நாம் சமாளித்தாக வேண்டும்; நம்முடைய போராட்டத்தில் எதிர்ப்பாகத் தேவர்கள் என்று புராணத்தில் சொல்லப்படுகின்ற பார்ப்பனர்கள் வரமாட்டார்கள். அனுமார்கள், விபீஷணர்கள் என்று சொல்லப்படுகிற துரோகிகளை, காலிகளைத்தான்  தூண்டிவிட்டு நமக்கு  எதிர்ப்பாக வரும்படி செய்வார்கள். அந்த முறையில் தான் நேற்று  இங்கு நடை பெற்ற கலவரமும், இன்னும் மற்ற இடங்களில் நடைபெற்றதும் ஆகும்.

இதில் நமக்கு என்ன கஷ்டம் என்றால், எதிர்த்து வருபவர்கள் நம்மவர்களாக  இருப்பதால், நாமும் எதிர்த்து அடித்துத் தாக்குவதாக இருந்தால் நம்மவர்களைத்தானே தாக்க வேண்டியிருக்கிறது? நமக்குள்ளே நாமே சண்டைபோட்டுக் கொள்வதா? அதனால்தான் நான் நம்முடைய ஆட்களைக் கட்டுப்படுத்தி வருகிறேன். இன்றையதினம் நம்மோடு சண்டைக்கு வருகிறவர்கள் ஒரு காலத்தில் திருந்துவார்கள். எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பான் இவர்களுக்குத் தீனி போட்டு, கூலி கொடுத்து நம்மை எதிர்க்க வைக்க முடியும்? திராவிடர் கழகம் யாருக்கு ஆகப் பாடுபடுகிறது? எங்களுடைய சுயநலத்துக்கும் தன்னலத்துக்கும் ஆகவா பாடுபடுகிறோம்? நம்மைத் தாக்குகிற, நம்மீது கல்வீசுகிற கூட்டத்தாருக்கும்,  எதிரிகள் நம்மை அநியாயமாய், துராக்கிருதமாய் அடிக்க அடிக்கப் பார்த்துக்கொண்டு இருக்கும் - இனத்தைக் காட்டிக் கொடுக்கும் போலீசாருக்கும் சேர்த்துதான் - இவர்கள்  அத்தனை பேருக்கும் இருக்கிற கீழ் ஜாதித்தன்மை, வாழ்க்கையில் கீழ்த்தன்மை இவைகளை  ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற லட்சியத்தில் தான் பாடுபடுகிறோம். இல்லை, தனியாக எங்கள் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டும் அல்லது, நாங்கள் ஏதாவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஆகவா பாடுபடுகிறோம்? பொதுவில் இந்தத் திராவிட சமுதாயத்தின் - இனத்தின் நலத்திற்காகத்தானே பாடுபடுகிறோம்? இதை உணர்ந்துகொள்ள வேண்டாமா?

இதை அவர்கள் உணர்ந்திருந்தாலும் நம் எதிரிகள் கொடுக்கும் கூலிக்கு ஆகவும், எதிரிகளை நத்திப்பிழைக்கும் சுயநலத்தினாலும் தான் நம்மை எதிர்க்கிறார்கள்.

(3.8.1953 ல் திருப்பத்தூரில் தமிழிசைச் சங்க மைதானத்தில் நடைபெற்ற நகர திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

- - விடுதலை, 4.8.1953

- உண்மை இதழ், 1-15.6.19

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

திராவிடரும் - ஆரியரும் (3)

சென்றவாரத் தொடர்ச்சி

08.05.1948 -குடிஅரசிலிருந்து..

உன் இனத்தான் எந்தவிதத்திலும் அறிவிலோ, ஆற்றலிலோ தாழ்ந்தவன் அல்ல என் பதை இன்றே உணர்வாய்!

ஒரு குலத்துக்கொரு நீதியை ஒழித்திட

வரிந்து கட்டு!

இதை எல்லாம் கூறினால் என்னை வகுப்புத் துவேஷி என்கிறாயே! பூசணிக்காய் அளவு எழுத்தில் பிராமணாள் ஹோட்டல் என்று போர்டு போட்டுக் கொள்கிறானே அதை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பேதம் பாராட்டு வதில்லையென்று பெருமை யடித்துக் கொள்ளும் தேசியத் தோழனே! உன் சுதந்திர ராஜ்யத்தில், நடைமுறையில் இருந்துவரும் இந்து லாவில், ஜாதிக்கோர் நீதி ஏன் கூறப்பட்டி ருக்கிறது? இந்துலா சட்ட புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கிறதே; இச்சட்டம் மனு தர்ம சாஸ்திரம் மற்றுமுள்ள இந்துமத சாஸ்திரங்கள் இவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டிருக் கிறது; இச்சட்டத்தில் ஏதாவது சந்தேகம் வருமானால் நீதிபதி தானாக முடிவு கட்டக் கூடாது; இச்சாஸ்திரங்களில் வல்லவர் களான சாஸ்திரிகளைக் கொண்டுதான் முடிவு கட்ட வேண்டும் என்று எழுதியிருக் கிறதே ஜாதி, பேதம் பாராட்டாத சாஸ்திரிகளை எங்காவது நீங்கள் பார்த்த துண்டா? அந்தச் சட்டத்தை இன்னும் புரட்டிப் பார்த்தால் ஒரு சூத்திரனுக்கு ஒரு பார்ப்பனத்தியிடம் பிள்ளை பிறக்கு மானால், அப்பிள்ளைக்குச் சூத்திரனுடைய சொத்தில் பங்குரிமை இருக்குமென்றும், அதேபோல், ஒரு பார்ப்பனனுக்கு ஒரு சூத்திரச்சியினிடம் ஒரு பிள்ளை பிறக்குமா னால், அப்பிள்ளைக்கு பார்ப்பனன் சொத் தில் பங்குரிமை இருக்காதென்றும் கூறப் பட்டிருக் கிறதே. இது உன் கண்களுக்கு ஏன் படாமற் போகிறது? இந்த ஒரு குலத்துக் கொரு நீதியை அனுமதிக்கும் சட்டத்தை மாற்ற உனக்கு ஏன் கவலையில்லை?

முதலில் இவைகளைச் செய்!

பாடுபடும் நான் ஏன் சூத்திரன்? பாடுபடாத சோம்பேறிப் பார்ப்பான் ஏன் பிராமணன்? என்றால் மட்டும் உனக்குப் பொத்துக் கொண்டு வரவேண்டுமோ கோபம்? சிந்திக்கும் அறிவு உனக்குச் சற்றேனும் இருக்குமானால், என்னை வகுப்புத் துவேஷி என்று கூற உனக்கு நாக்கு நீளுமா? ஏன் இந்தப் பித்தலாட்டம்? நாலு ஜாதி என்று பிரித்துக் கூறும் சாஸ்திரங்களை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பிரிவினை பற்றிக் கூறும் பகுதிகளைச் சாஸ்திரங் களிலிருந்து எடுத்து விட்டாயா? அல்லது அவற்றை எரித்து விட்டாயா? எங்களை வகுப்புத் துவேஷி என்று கூறுவதற்கு, ஹோட்டல்காரனை மனிதன் ஹோட்டல் என்று போட்டுக் கொள்ளும்படி சொல்! இந்துலாவில் ஜாதிப் பற்றி இருப் பனவற்றை யெல்லாம் திருத்தியமை! சாஸ்திரங் களை யெல்லாம் கொளுத்தி விடு! ஜாதி பிரிவினைப் பற்றிக் கூறும் சகலத்தையும் அழி! கோயிலில் மணியடிக்கச் சகல ஜாதிக்கும் உரிமையுண்டு என்று சட்டம் செய்! பிறகு நான் வகுப்புப்பற்றிப் பேசினால் வாயேன் சண் டைக்கு? அதுவரை பொறுத்துக் கொண் டிரு தம்பி! இன்றேல் உன் வண்டவாளமெல்லாம் அம்பலமாகி விடப் போகிறது.

சமபந்தியில் பார்ப்பான் என்றால் சந்தோஷப்படலாமா நீ?

பார்ப்பானெல்லாம் இப்போது சமபந்தி போஜனம்கூட செய்கிறார்களாம் ஜாதி பாராட்டாமல். எங்கள் வீட்டுச் சோறு ருசியாய் இருந்தால் எந்தப் பார்ப்பானும் தான் சாப் பிடுவான். உண்மையில் எத்தனை பிராம ணர்கள் தங்கள் வீட்டில் ஒரு பறையனையோ, சக்கிலியையோ தம்முடனி ருந்து சாப்பிட அனுமதிப்பார்கள்? நீ சாப் பிடுவதைக்கூட நாங்கள் பார்க்கக் கூடாது என்கிறாயே! அது தான் போகட்டும் என் றாலும், நான் வெட்டிய குளத்துத் தண்ணீ ரானாலும், அதையும் திரை போட்டு மறைத்துக் கொண்டுதானே குடிக் கிறாய்!

ஆலயப்பிரவேசம் உண்மை என்றால்

அவனையும் மணி அடிக்கச் செய்!

பஞ்சமனைக் கோயிலில்கூட அனு மதித்து விட்டார்களாம்! அவனும் முடிச்ச விழ்க்க வேண்டுமென்று விட்டாயா? அல்லது   மோட் சத்திற்குப் போகட்டுமென்று விட்டாயா? மோட்சத்திற்குப் போவதற் காகவே விட்டிருந் தால், இத்தனை நாள் அடித்து அனுபவித்த அந்த மணியைக் கொஞ்சம் அவனிடம் கொடேன்! அவனும் ஆசை தீர அடிக்கட்டுமே! செய்வையா? செய்தால் சாமி ஓடிப்போகுமே! அல்லது செத்துப் போகுமே!  அப்புறம் உன்னை யார் காப்பாற்றுவார்கள்? இந்த அக்கிரம மெல்லாம் செய்ய உனக்கு உரிமையுண்டு. நான் ஏன் சூத்திரன் என்று கேட்பதற்குக்கூட எனக்கு உரிமையில்லையா? கேட்டால் கலகம் செய் கிறேன் என்பதா? உனக்குப் பழக்கமாகிவிட்டது, உன் புத்தி அடிமைத்தனத்தால் சின்னப் புத்தி யாகி விட்டது.

ஆகவே, பொறுத்துக் கொண் டிருக் கிறோம். மானமுள்ள, அறிவுள்ள, வேறு எவன் இவ்விழிவைப் பொறுத்துக் கொண்டி ருக்க முடியும்? வேறு எந்த நாட்டிலாவது சூத்திரனும், பஞ்சமனும் உண்டா? இந்த உயர்வு தாழ்வு இருக்கும் வரைக்கும் இது ஒரு ஞான பூமியாகவும் ஆக முடியுமா?

- விடுதலை நாளேடு, 26.7.19

சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!

25.01.1947 -குடிஅரசிலிருந்து

இன்று நாங்கள் செய்துவரும் இந்தத் திராவிடர் கழகப் பிரசாரத்துக்குப் பார்ப் பனர்கள் எதிரிகள்; காங்கிரஸ்காரர்கள் எதிரிகள்; கம்யூனிஸ்டுகள் எதிரிகள்; மதவாதிகள் எதிரிகள்; இவர்கள் எல் லோரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். இவற்றிற்கெல்லாம் பார்ப்பனர்களே தலைவர்கள். பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஆதரவளிப்பதற்கே இந்த ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆதலால் நாங்கள் இந்த எதிர்ப்புக்களைச் சமாளித்தால்தான் எங்கள் வேலை நடைபெறமுடியும்.

பார்ப்பானும் கல்லும் சாமிகளா? நான் சாமி இல்லை  என்று சொல்லுவ தாகவே வைத்துக்கொள்ளுங்கள், அதற் காக இந்த ஆள்களுக்கு ஏன் ஆத்திரம் வரவேண்டும்? இன்று நீங்கள் யாரை சாமி என்கிறீர்கள்? பார்ப்பனனைத்தானே சாமி என்கிறீர்கள்? பிறகு கல்லுகளையும், பொம்மைகளையும்தானே சாமி என் கிறீர்கள்; இவை சாமி ஆகுமா? நீங்கள் எதற்காக மனிதனைச்  சாமி என்று கூப்பிடுகிறீர்கள்? எதற்காக மனிதனைச் சாமி என்று  கூப்பிட்டுக் கையெடுத்துக் கும்பிடுகிறீர்கள்? மற்றும், கல் பொம்மை சாமிகளும் பார்ப்பான் மாதிரித்தானே செய்து  வைக்கப்பட்டிருக்கின்றன? பார்ப் பானுக்கு உச்சிக்குடுமி என்றால், சாமிக்கும் உச்சிக்குடுமி! பார்ப்பானுக்குப் பூணூல் என்றால் சாமிக்கும் பூணூல்!  பார்ப்பானுக்குப் பஞ்சகச்சம், வேட்டி என்றால் சாமிக்கும் பஞ்சகச்சம், வேட்டி! பார்ப்பானை நாம் தொடக்கூடாது என்றால், சாமியையும் நாம் தொடக் கூடாது. பார்ப்பானை நாம் தொட்டால் தோஷம் என்றால் சாமியையும் தொட் டால் தோஷம்! இப்படியாகப் பார்ப் பானும், பார்ப்பானைப்போல் உருக்கியும், அடித்தும் வைத்த பொம்மைகளும், எழுதி வைத்த சித்திரங்களும்தான் சாமிகளாக இருக்கின்றனவே தவிர,வேறு எது உங்களுக்குச் சாமியாக இருக்கிறது?  இந்தச் சாமிகளை நாங்கள் சாமிகள் அல்ல என்கிறோம். இதில் தப்பு என்ன? நீங்கள் சொல்லுங்கள், எதற்காக ஒரு மனிதனை சாமி என்று கூப்பிடுவது? அந்த மனிதன் எந்த விதத்தில் உங் களைவிட மேலானவன் ஆவான்? நம் ஜனங்களுக்கு வெட்கமில்லை, மான மில்லை என்பதல்லாமல் வேறு என்ன? இந்த ஊரில் ஒன்றோ இரண்டோ, பார்ப்பன வீடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், அந்தப் பார்ப்பனரின் விஷமச் செய்கைதான் சுவரில் இப்படி எழுதச் செய்தது என்றும் சொன்னார்கள்.

பார்ப்பன ராஜ்யமே சுயராஜ்யம்!

உங்களுக்கு  சாமியைப்பற்றி புத்தி எவ் வளவு இருக்கிறதோ, அவ்வளவு புத்திதான் உங்களுக்கு சுயராஜ்யம், பொதுவுடைமை, நேதாஜி, ஜெய்ஹிந்த், என்பவைகளைப் பற்றியும் இருக்கிறது. சுயராஜ்யம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? சுயராஜ்யம் என்றால் பார்ப்பான் மந்திரி, பார்ப்பான் பெரிய அதிகாரி, பார்ப்பான் கொள்ளை என்பதல்லாமல் வேறு மாறுதல் என்ன என்று கேட்கிறேன். உங் களுக்கு சுயராஜ்யம் வந்தால் பார்ப்பா னுக்குச் சாமிப்பட்டம், பிராமணப்பட்டம், மேல்ஜாதிப்பட்டம், போய்விடுமா? அல்லது உங்களுக்குச் சுயராஜ்யம் வந்தால் உங்களுக்குள்ள சூத்திரப்பட்டம், பஞ்சமப்பட்டம், கீழ்ஜாதிப் பட்டம், போய்விடுமா? சொல்லுங்கள் பார்ப்போம் அல்லது இங்கு யாராவது காங்கிரஸ்காரர் இருந்தால் இங்கு வந்து சொல்லட்டுமே பார்ப்போம். பித்தலாட்டமும், புரட்டும் சுயராஜ்யம் என்று சொல்லப்படுவதல் லாமல், யோக்கியமும், நாணயமும்தான் சுயராஜ்யம் என்று யாராவது சொல் லட்டும்! நான் இப்படிச் சொல்லுவதால் சுயராஜ்யம் வேண்டாம் என்று சொல்லு வதாக யாராவது கருதினால் அது தவறு, தவறு என்றே சொல்வேன்.

இன்று மக்களுடைய மானமற்ற தன் மையும், மடத்தனமும், ஏமாந்த தன்மையும் தான்  சாமியாக, சுயராஜ்யமாக இருந்து வருகின்றனவே தவிர உண்மைக் கடவு ளும், உண்மை சுயராஜ்யமும் உங் களுக்குத் தெரியவே தெரியாது. உங்களுக்கு யாரும்  சொல்லவும் இல்லை! விளக்கவும் இல்லை!

ஓரவஞ்சனை செய்யும் சாமி

உண்மையான கடவுள் ஒன்று இருக் கிறது என்றால் பாடுபடாத சோம்பேறி,  பித்தலாட்டக் கூட்டத்தார் வயிறு வீங்கச் சாப்பிடவும், பாடுபடும் பாட்டாளி மக்கள் பட்டினி கிடந்து, உடுத்த உடையில்லாமல், இருக்க வீடில்லாமல், படிக்க எழுத்து அறிவில்லாமல் இருக்கவும் முடி யுமா என்று கேட்கிறேன்?  சாமியைப் பற்றிக் கவலை கொள்ளுகிற எவனுக் காவது இந்தக் குறைகளைப் பற்றிய கவலை இருக்கிறதா? என்று கேட்கிறேன்.

கோவில்கட்டி கும்பாபிஷேகம் பண்ணின ஜாதியார் கீழ்ஜாதியார் என் றும், சூத்திரன் என்றும், அழைக்கப்படு வதை, நடத்தப்படுவதை எந்தச் சாமி யாவது தடுத்ததா? என்று கேட்கிறேன்.

அதுபோலவே, எந்தச் சுயராஜ்யத்திலாவது அல்லது இப்போது பேசப் படுகிற, கொடிகள் பறக்கின்ற மகாத் மாக்களோ, ரிஷிகளோ, வீரசூரதளபதி களோ, தியாகமூர்த்திகளோ, வீராங்கனை களோ, லட்சுமிகளோ, தேவிகளோ, தலைவர்களோ இருந்து நடத்துகின்ற எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன், மிலேச்சன் இல்லாமல் ஒரே ஜாதி மக்கள் உள்ள சுயராஜ்யமாய் இருக்குமா என்று கேட்கிறேன்? யாராவது பதில் சொல் லட்டுமே பார்ப்போம்!

தொடரும்

 - விடுதலை நாளேடு, 26.7.19