வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

பெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்



தந்தை பெரியார்


திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் யார் நாட்டை ஆண்டாலும் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆச்சாரியாரே ஆளட்டும்; அல்லது காங்கிரசுக்காரர்களே ஆளட்டும். மனிதப்பிறவிக்கு  அப்பாற்பட்டது ஆளுவதாயிருந்தாலும் சரி; இராமாயணத்திலே சொல்லப்பட்டிருப்பது போல் ஒரு ஜோடி செருப்பு இந்த நாட்டை ஆளுவதாய் இருந்தாலும் எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. எங்களுக்கு இருக்கிற கவலை எல்லாம் ஆளுகிறவர்கள் நாணயமாக, நேர்மையாக, உள்ளபடியே மக்களின்  நலத்தையும், வாழ்வையும், முன்வைத்து ஆட்சி நடத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் இலட்சியம். அதை விட்டு திராவிடர் கழகம் தான்  பதவிக்கு வரவேண்டும்; தான் மந்திரியாக வேண்டும்; நாட்டை ஆளவேண்டும் என்று கருதுவது அல்ல.

பின் இது என்ன கிளர்ச்சி என்றால், இன்றைய தினம் நடைபெறுவது இனப்போராட்டமாகும். மற்றவர்கள் இந்தக் கிளர்ச்சிகளின் நடுவில் புகுந்துகொண்டு ஏதேதோ சொல்லிக் கொள்ளலாம்; ஆனால் திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் இது இனப் போராட்டம்தான்; ஆரிய-திராவிடப் போராட்டம் தான். பார்ப்பன - சூத்திரப் போராட்டம் தான்

எப்படி இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், புராண காலத்தில் தேவர்கள் என்பவர்களுக்கும், அவர்களுக்கு எதிராக இருந்ததாகச் சொல்லப்படும் அசுரர்கள், ராட்சதர்கள் என்னும் கூட்டதாருக்கும் நடைபெற்றதாகச் சொல்லப்படும் போராட்டங்களின் தன்மையிலே தான் இன்றைய போராட்டம் நடைபெறுகிறது.

அந்தக் காலத்திலே தேவர்கள் என்று சொல்லப்பட்ட மக்கள் தான் இந்தக்காலத்துப் பூ தேவர்களான ஆரியர்கள்; அதாவது பார்ப்பனர்கள். அது போலவே அந்தக் காலத்தில் அந்தத் தேவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய அசுரர்கள், ராட்சதர்கள் என்பவர்கள்தான் இன்றைய தினம் திராவிட மக்கள் என்று சொல்லப்படும் சூத்திர மக்கள் ஆவார்கள். எனவே, இன்றைய போராட்டம் என்பது புராண காலத்திலே நடைபெற்றதாகச் சொல்லப்படும் தேவாசுர யுத்தத்தின் மறுபதிப்பே யாகும். அதாவது இன்றைய தினம் பார்ப்பனர்கள் என்று கருதப்படும் ஆரிய தேவர்களுக்கும் சூத்திரர்கள் என்று  கருதப்படும் ராட்சத, அசுரர்களுக்கும் நடைபெறும் போராட்டமாகும். புராணகால போராட்டங்களின் மறுபதிப்பே இன்றைய போராட்டங்கள் ஆகும். சூரபதுமன், இராவணன், இரணியன் முதலியவர்கள் கதைப்படி எந்த லட்சியத்துக்குக் கொள்கைக்கு ஆக, அடிப்படைக் காரணத்துக்கு ஆகப்  போராடினார்களோ அதே அடிப்படைக் காரணத்துக்கு ஆகத்தான் இன்று பார்ப்பனருக்கும், நமக்கும் போராட்டம் நடக்கிறது.

முந்தின போர்களில் எல்லாம் பார்ப்பனர்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. என்ன அந்த வாய்ப்பு என்றால், இந்த அசுரர்கள் என்ற கூட்டத்திலேயே ஒரு கூட்டத்தைத்  தங்கள் வசப்படுத்திக்கொண்டு, அவர்களின் மூலமாகவே இந்த அசுரர்கள், ராட்சதர்கள் என்று சொல்லப்படுபவர்களை வெற்றி பெற்றார்கள்.

அதே முறையில்தான் இன்றும் செய்து, நம்மினத்திலேயே அனுமார்களை, விபீஷணர்களை உற்பத்தி செய்து நம்மை அடிக்கச் சொல்கிறார்கள். இதை நாம் சமாளித்தாக வேண்டும்; நம்முடைய போராட்டத்தில் எதிர்ப்பாகத் தேவர்கள் என்று புராணத்தில் சொல்லப்படுகின்ற பார்ப்பனர்கள் வரமாட்டார்கள். அனுமார்கள், விபீஷணர்கள் என்று சொல்லப்படுகிற துரோகிகளை, காலிகளைத்தான்  தூண்டிவிட்டு நமக்கு  எதிர்ப்பாக வரும்படி செய்வார்கள். அந்த முறையில் தான் நேற்று  இங்கு நடை பெற்ற கலவரமும், இன்னும் மற்ற இடங்களில் நடைபெற்றதும் ஆகும்.

இதில் நமக்கு என்ன கஷ்டம் என்றால், எதிர்த்து வருபவர்கள் நம்மவர்களாக  இருப்பதால், நாமும் எதிர்த்து அடித்துத் தாக்குவதாக இருந்தால் நம்மவர்களைத்தானே தாக்க வேண்டியிருக்கிறது? நமக்குள்ளே நாமே சண்டைபோட்டுக் கொள்வதா? அதனால்தான் நான் நம்முடைய ஆட்களைக் கட்டுப்படுத்தி வருகிறேன். இன்றையதினம் நம்மோடு சண்டைக்கு வருகிறவர்கள் ஒரு காலத்தில் திருந்துவார்கள். எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பான் இவர்களுக்குத் தீனி போட்டு, கூலி கொடுத்து நம்மை எதிர்க்க வைக்க முடியும்? திராவிடர் கழகம் யாருக்கு ஆகப் பாடுபடுகிறது? எங்களுடைய சுயநலத்துக்கும் தன்னலத்துக்கும் ஆகவா பாடுபடுகிறோம்? நம்மைத் தாக்குகிற, நம்மீது கல்வீசுகிற கூட்டத்தாருக்கும்,  எதிரிகள் நம்மை அநியாயமாய், துராக்கிருதமாய் அடிக்க அடிக்கப் பார்த்துக்கொண்டு இருக்கும் - இனத்தைக் காட்டிக் கொடுக்கும் போலீசாருக்கும் சேர்த்துதான் - இவர்கள்  அத்தனை பேருக்கும் இருக்கிற கீழ் ஜாதித்தன்மை, வாழ்க்கையில் கீழ்த்தன்மை இவைகளை  ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற லட்சியத்தில் தான் பாடுபடுகிறோம். இல்லை, தனியாக எங்கள் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டும் அல்லது, நாங்கள் ஏதாவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஆகவா பாடுபடுகிறோம்? பொதுவில் இந்தத் திராவிட சமுதாயத்தின் - இனத்தின் நலத்திற்காகத்தானே பாடுபடுகிறோம்? இதை உணர்ந்துகொள்ள வேண்டாமா?

இதை அவர்கள் உணர்ந்திருந்தாலும் நம் எதிரிகள் கொடுக்கும் கூலிக்கு ஆகவும், எதிரிகளை நத்திப்பிழைக்கும் சுயநலத்தினாலும் தான் நம்மை எதிர்க்கிறார்கள்.

(3.8.1953 ல் திருப்பத்தூரில் தமிழிசைச் சங்க மைதானத்தில் நடைபெற்ற நகர திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

- - விடுதலை, 4.8.1953

- உண்மை இதழ், 1-15.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக