தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.
புதன், 19 பிப்ரவரி, 2020
'பெரியார்' தெலுங்கு திரைப்படம்
செவ்வாய், 18 பிப்ரவரி, 2020
கடவுள் - மத குழப்பம்
23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை
சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன். பெரிய பட்டணங்களில் சாதாரணமாக கூடும் அளவைவிட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது. நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு-ஜாதி இழந்தவனெனவும், தேசத்துரோகியெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும், அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100 வீடுள்ள கிராமத்தில் 10, 20 மைல் தூரத்திலிருந்து 4000 பேர்கள் இவ்வளவு திரளான மக்கள் கூடியிருக்கும் இக்காட்சியை என் எதிரிகள் வந்து காண வேண்டுமென ஆசைப்படுகிறேன், விஷமப் பத்திரிகை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்கள் நெஞ்சு வெடித்துப் போகும் என்றே எண்ணுகிறேன்.
இந்த பிரமாண்டமான கூட்டத்தைப் பார்க்கும் போது, உண்மையிலேயே என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் என் தொண்டை விரும்புபவர்களும், ஆதரிப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் இருக்கிறார்கள் என்பதும், என் தொண்டிற்கு நாட்டிலே இடமிருக்கிறது என்பதும், அந்தத் தொண்டை தொடர்ந்து செய்யும்படி மக்கள் எனக்குக் கட்டளை இடுகிறார்களென்றுமே எண்ணுகிறேன். உங்கள் வரவேற்புப் பத்திரத்துக்கு நன்றி செலுத்துகிறேன்.
வீண் விவாதத்தைக் கிளப்புகிறார்
இப்போது என்னை பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கும் விஷயம், கடவுள், மதம் என்பதாகும். வேறு எந்த விதமான பிரச்சாரகர் வந்தபோதிலும், எவ்வளவு பித்தலாட்டம் பேசும் பேர்வழிகள் வந்த போதிலும் இந்த விஷயங்களைபற்றி அவர்களை கேட்பதில்லை. ஆனால் நாங்கள் செல்லுமிடங்களில் எங்களை கேட்கிறார்கள். நான் மதப்பிரசாரத்தை ஒரு தொழிலாகவே சீவன மார்க்கராகவோ கொண்டவனுமல்ல அல்லது கடவுளைப் பற்றிய விவாதத்தைப் பற்றியே பேசிக் காலந்தள்ளி வருபவனுமல்ல. எங்களுடைய வேறு முக்கியமான-நாட்டிற்கும் மனித சமூகத்துக்கும் தேவையான தொண்டுகளைச் செய்து வரும் போது, அதனால் பாதகமடையும் எங்கள் எதிரிகள் பாமர மக்களிடையில் இந்த இரு விஷயங்களையும் கிளப்பி விட்டு அவர்களைக் கொண்டு கேள்விகள் கேட்கச் செய்து இவைகளைப் பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எங்களை கொண்டு வந்து விடுகிறார்கள். எப்படி இருந்தபோதிலும் எங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லத் தடையில்லை.
கடவுள் - மத கற்பனை
மனித சமூகத்திலே எங்கு பார்த்தாலும் கடவுள், மத உணர்ச்சி இருந்து வருவதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் சமூக வாழ்விற்கு இந்தக் கடவுள் மதங்கள் அல்லாமல்- தேவை இல்லாமல் இயற்கையே பெரிதும் படிப்பினையாகவும் மனிதனை நடத்துவதாகவும் இருந்து வருகிறது. காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடியும், அவனது அனுபவம் அவசியம் ஆகியவைகட்கு ஏற்றபடியும் சமூக வாழ்வின் சவுகரியங்களை மனிதன் அமைத்துக் கொள்கிறான். இக்காரியங்களுக்குக் கடவுள் மத தத்துவங்களைப்பற்றியோ அவைகளைப் பற்றிய கற்பனைகளைப் பற்றியோ மனிதன் சிந்திப்பதில்லை, சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை. ஆனால், பயமும் சந்தேகமும் பேராசையும் பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்கு கடவுள் மத உணர்ச்சியை உண்டாக்கிவிடுகின்றன. அவை எப்படி இருந்த போதிலும் எங்களுக்கு அவைகளைப் பற்றி கவலை இல்லை, அந்த ஆராய்ச்சியிலும் நாங்கள் சிறிதும் காலத்தையோ புத்தியையோ செலவழிப்பதில்லை. ஆனால், மனித சமூகத்துக்கு தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவரும் தொண்டுகளைச் செய்து வரும் போது மனித சமூக சுதந்திர-சுகவாழ்வுக்கு பிறவியிலேயே எதிரிகளாக உள்ள புரோகிதக் கூட்டத்தார்-மதத்தின் பேரால் கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள் எங்கள் தொண்டிற்கு-கொள்கைகளுக்கு சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்க சக்தியற்ற கோழைகள் கடவுளையும் மதத்தையும் பற்றிக் குழப்பமாய் பேசி அவைகளைக் குறுக்கேகொண்டு வந்து போட்டு விடுகிறார்கள்.
மதம்
உதாரணமாக, மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு, ஜாதி பேதம் ஒழிந்து, ஆண்டான் அடிமை தன்மைமாறி ஆணும்பெண்ணும் சகல துறைகளிலும் சம சுதந்திரத்துடன் வாழவேண்டுமென்று நாங்கள் சொன்னால், தீண்டாமையும் ஜாதிபேதமும் ஒழித்தால் தமது உயர்வும் தமது பிழைப்பும் கெடுமென்றெண்ணி, பாடுபடாது, உழைக்காது வாழ்ந்து வரும் பார்ப்பனர்கள் மதம், வேதம், சாஸ்திரம், புராணமாகியவைகளை கொண்டுவந்து குறுக்கேபோட்டு, எங்களைத் தடைப்படுத்தும் போது அவை எவையாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் சுதந்தர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்கவேண்டுமெனக் கூறுகிறோம். தீண்டாமையை மேல்ஜாதிக்காரர்கள் என்னும் பார்ப்பனர்கள் மதத்துடன் சேர்த்துக் கட்டிப் பிணைத்து இருப்பதாலேயே தான் நாங்கள், தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் அந்த மதம் ஒழிந்துதான் ஆகவேண்டும் என்கிறோம். தீண்டாமையை அசைக்கும் போது அதோடு பிணைத்த மதமும் ஆடுகிறது. அப்போது, மதம், நரகம், மோட்சம் முதலிய பல கற்பனைகளை வெகு நாட்களாக ஊட்டிவந்த பாமர மக்களிடம் உடனே, பார்ப்பனர்கள் சென்று, 'மதம் போச்சுது மதம் போச்சுது' என்று விஷமப் பிரச்சாரம் செய்து, எங்களை மதத் துரோகி என தூற்றிட அவர்களால் சுலபமாக முடிகிறது.
"கடவுளைப்பற்றிய தத்துவங்களையே எடுத்துக் கொண்டு பார்ப்போம். அதுவும் இப்படித்தான். அதாவது கடவுளைப் பற்றி விளக்க இதுவரை, எத்தனையோ ஆத்ம ஞானிகள் சித்தர்கள், முத்தர்கள் என்போரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதாரங்கள், கடவுள்களால் அனுப்பப்பட்டவர்கள் என்பவர்கள் எவ்வளவோ அரும்பாடுபட்டிருக்கின்றனர், ஆனால் முடிந்ததா? முடிவு இதுதான் எனச் சொல்லப்பட்டதா? அல்லது இவர்களைப் பின்பற்றியவர்களுக்கு ஆவது புரிந்ததா? புரியவைக்க முடிந்ததா?
"கடவுள் ஆதி இல்லாதது, அந்தமில்லாதது, உருவமில்லாதது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட அறியப்பட்ட சங்கதி எதுவும் இல்லாதது" என அடுக்கிகொண்டே போய் அப்படிப்பட்ட ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கிறதாக எண்ணிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதாக சொல்லிவிடுகிறார்கள்.
இன்று இந்நாட்டினரால் மனித 'ஆத்மாவுக்கு' மீறிய ஒரு ஆத்மா உடையவர் என்று கருதி 'மகாத்மா' என்று சொல்லப்படுபவராகிய தோழர் காந்தியார் 'சத்தியம் தான் கடவுள்' என்கிறார்!
சைவசமயிகள் (அன்பே சிவம்) 'அன்பு தான் கடவுள்' என்கின்றனர்.
இராமலிங்க சுவாமிகள் என்று சொல்லப்பட்ட வள்ளலார் பெரிய அறிவுதான் கடவுள் (அறிவே தெய்வமே) எனக்கூறினதுடனன்றி, ஜாதி, சமயம், மோட்சம், நரகம், மோட்ச நரகங்களைக் கொடுக்கும் கடவுள் ஆகியவைகள் எல்லாம் வெறும் பித்தலாட்டங்களென பச்சையாகச் சொல்லிவிட்டார். தோழர்களே! உங்களை ஆஸ்திகர்களை நான் கேட்கிறேன் இவர்கள் எல்லாம் நாஸ்திகர்களா?
ஒரு மனிதன் கடவுள் உண்டா இல்லையா என்ற விஷயத்திலே கவலை செலுத்தாது, அதை அறிவதற்கு மெனக்கெட்டு குழப்பமடையாது இருப்பதற்கு ஆகவே மனித வாழ்வுக்கு நன்மையும் அவசியமுமான காரியங்கள் குணங்கள் எவை எவையோ அவைகளைத்தான் கடவுள் எனப் பெரியார்கள் சொன்னார்கள். இதை பார்த்தாவது மனிதனுக்கு அறிவு உண்மையுணர்ந்து பேசாமல் இருக்க வேண்டாமா? என்கிறேன். ஒரு மனிதன் அறிவுடையவனாகி உண்மையுடையவனாகி எவரிடம் அன்பு காட்டி மனம் வாக்கு காயங்களால் அவைகளைக் கொண்டு தொண்டு செய்து அவைகளின் படி நடப்பானேயானால் அவன் கடவுள் துரோகியாக கருதப்படுவானா ? என இங்கு ஆஸ்திகர்கள் யாரிருப்பினும் சொல்லட்டுமே என்று தான் கேட்கின்றேன். அன்பு அறிவு உண்மை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தாலும் கூட அக்கடவுள் தன்னை இல்லை என்று சொன்ன தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனை தண்டிப்பாரா என்று கேட்கிறேன். உண்மையில் யாரும் அறிய முடியாத ஒரு கடவுள் இருந்தால் அவரை அறிந்து அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனைவிட கடவுளைப் பற்றி கவலைப்படாமல் கடவுளுக்குப் பக்தி செய்யாமல் அன்பு அறிவு உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கே தன் கருணை காட்டுவார் என்று உறுதி கூறுவேன். இந்த உணர்ச்சியினாலேயேதான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங்கழிக்காமல் நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்து வருகிறேன். நான் கூறின மேல்கண்ட தத்துவங்கள் மதத்தலைவர்கள், அதிலே நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும்.
மற்றும் சித்தர்களும், வேதாந்திகளும் உலகமும் தோற்றமும் எண்ணங்களும் மனிதனுட்பட எல்லாம் மாயை என்று சொல்லிவிட்டனர். ஆகவே ஒரு மனிதன் தன்னை நிஜ உரு என்று கருதி கடவுள் உண்டு என்று கண்டுபிடித்தாலும் முடிவு கொண்டாலும் அதுவும் மாய்கைதானே ஒழிய உண்மையாய் இருக்கஇடமில்லையே!
மகா அறிவாளியான சங்கராச்சாரியார் "அஹம் பிரம்மாம்சி நானே கடவுள்" என்று கூறினார். அதற்காக சைவர்கள் அவரைத் தானே "கடவுளெனும் பாதகத்தவர்" என்று தண்டிப்பதுமுண்டு.
இதைப்போன்றே சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சைவர்களிடம் விவாதம் வந்த காலையில் சைவர்களுக்காக வக்காலத்து வாங்கிய சென்னை திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்கள் கட்சியில் "இயற்கையே கடவுள்" எனக் கூறி விவாதத்தை முடித்துக் கொண்டார். அது கண்ட சைவர்கள் அவர்களைச் சீறவே பிறகு அவர், அழகே கடவுள் அழகு என்றால் முருகு; தமிழர் தெய்வம் முருகன் ஆதலால் கடவுள் என்றால் அழகுதான் வேறு கிடையாது. என்று சொல்லிவிட்டார். அதற்கேற்றாற் போல் அவர் அடிக்கடி "என் இயற்கை அன்னை என் இயற்கை கடவுள்" என்று பிரசங்கத்திலும் சொல்லுவார்.
இவை இப்படியிருக்க சிலர் உலக நடத்தையைப் பார்த்து அதற்கு விவரம் புரியாமல் "இதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டாமா" என்று கேட்கின்றனர். ஏதோ ஒரு சக்தி இருக்கட்டும். இருக்க வேண்டியவைகளை யெல்லாம் நாம் கண்டு விட்டோமா? இல்லாதவைகளையெல்லாம் உணர்ந்து முடிவு செய்து விட்டோமா? அதைப் பற்றிய விவாதமேன் நமக்கு? என்று தான் நான் கேட்கிறேன். மேலும் மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன், சமத்துவத்துடன் வாழ சாந்தியாய் இருக்க ஏதாவது ஒருவிதமான கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா? என்று கேட்கிறார்கள். வேண்டுமென்றே வைத்துக் கொள்வதானால் அப்படிப்பட்ட உணர்ச்சியானது மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமத்துவம் சாந்தி அளிக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டாமா? ஏனெனில், எந்த உணர்ச்சி காரணமாகவே, மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படுமெனச் சொல்லப்படுகிறதோ, வாழ்க்கையில் நீதி அன்பு நிலவ மேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதோ, அந்த கடவுள் உணர்ச்சிக்கும் அந்த உணர்ச்சி கொண்ட மனிதனுடைய நடத்தைக்கும் ஒருவித சம்பந்தமுமின்றிச் செய்து விட்டனர் மற்றும் நமது கடவுளைக் கண்ட பெரியார்கள் என்பவர்கள் உலகத்திலே கேடு, கூடா ஒழுக்கம், வஞ்சனை, பொய் முதலியன செய்பவர்களை இந்த மாதிரியான ஒரு கடவுள் உணர்ச்சியை தங்களின் மேல் கண்ட காரியத்துக்கு உபயோகப்படுத்திக்கொள்ளும்படி செய்து விட்டார்கள்.
உதாரணமாக, ஆயிரத்தில் பத்தாயிரத்தில் ஒருவரை யாவது கடவுள் உணர்ச்சியின் அவசியத்திற்கேற்றபடி அவர்களது வாழ்க்கையிலே நீதி, நேர்மை ஒற்றுமை அன்பு நிலவும்படி நடப்பதை நாம் பார்க்கிறோமோ? பெரும்பான்மையோருக்கு அவ்வுணர்ச்சி அப்படி பயன்பட்டிருந்தால், உலகிலே துன்பத்துக்கு வஞ்சனைக்கு இடமேது? எவ்வளவு அக்ரமம் செய்தபோதிலும் பிரார்த்தனை, கடவுள் பெயர் உச்சரிப்பு, புண்ணிய ஸ்தலயாத்திரையை புண்ணிய ஸ்தல ஸ்பரிசம் செய்த மாத்திரத்தில் மன்னிப்பும் பாப விமோசனமும் கிடைக்கும் - ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு அதனால் மக்களுக்கு அக்ரமம் செய்யவே தைரியம் தருகிறதேயல்லாமல் யோக்கியனாக, அன்பனாக நடக்க கட்டாயப்படுத்துகிறதா?
இன்று சிறையிலுள்ள 2 லட்சம் கைதிகளில் சம்சய வாதிகளோ, (கடவுள் பற்றி கவலைப் படாதவர்கள்) நாஸ்திகர்களோ, விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள். மற்றையோர் யாவரும் கடவுள் உணர்ச்சியிலே ஒருவித அசந்தேகமும் கொள்ளாத ஆஸ்திகர்களேயாகும். ஆகவே அவர்கள் சொல்லும் கடவுள் உணர்ச்சியை மனிதனுடைய நடத்தையுடன் ஒப்பிட்டுப்பார்த்து வரவு செலவு கணக்கு போட்டு லாபநஷ்டப்படி இறக்கிப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
- 'குடிஅரசு', 30.01.1938
- விடுதலை நாளேடு 9 2 20
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020
ஆஸ்திகர்களின் சிந்தனைக்கு!

புதன், 12 பிப்ரவரி, 2020
பெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி
தந்தை பெரியார்
ஜாதி முறைகள் எல்லாம் ஆரிய மதமாகிய இந்து மதத்தின் சிருஷ்டியேயாகும் _ இந்து மதத்துக்கு ஆதாரம் ஜாதிதான். அது புராணங்களில் தேவர் _ அசுரர்களாகவும், சாஸ்திரங்களில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்களென்று ஆரியர்களைக் குறிப்பிடுவதும், சூத்திரர்கள், சண்டாளர்கள் என்று திராவிடர்களைக் குறிப்பிடுவதாகவும் அமைக்கப்பட்டிருப்பவைகளே யாகும்.
தேவாசுரர்களும் பிராமணாதி சூத்திரர்களும் இல்லாவிட்டால் புராணங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் வேலை இல்லை என்பதோடு, இந்து மதத்திற்கும் இடம் இல்லை.
ஜாதிப் பாகுபாடுகளுக்கு ஒரு காரணமுமே சொல்லாமல் கடவுள் அந்தப்படி தனது 4 அவயங்களிலிருந்து 4 ஜாதிகளை உண்டாக்கினார் என்பதோடு முடிந்து விடுகிறது.
ஜாதிகளை உற்பத்தி செய்த பிறகுதான் ஜாதிகளுக்குக் கர்மங்கள் (கடமைகள்) வேலைகள் பகிர்ந்து கொடுக்கப் பட்டிருக்கின்றன. இதை மனுதர்மம், பாராசர ஸ்மிருதி முதலியவைகளைக் கொண்டு அறியலாம்.
ஜாதிகள் பிரிந்தாலும் _ ஜாதிகளுக்கு வேலை பிரித்துக் கொடுத்திருப்பதிலும் மேல் ஜாதி கீழ் ஜாதி என்கின்ற உயர்வு _ தாழ்வு பேதமும் , மேன்மையான சுகமான வேலை, இழிவான வேலை என்பதாகவும், பாடு படாமல் சுகமடையும் வேலை _ பாடுபட்டு கஷ்டமும், இழிவும் அடையும்படியான வேலை என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
அதிலும் ஜாதிப் பாகுபாடு பற்றிய சாஸ்திர கருத்துகளைப் பார்த்தால் மேல் ஜாதியாருக்கே கல்வியும், செல்வமும் அடையும் உரிமையும், கீழ் ஜாதியாருக்கு, அடியோடு கல்வியும், செல்வமும் இல்லாமையும், கீழ் ஜாதியார் கல்வி கற்றால் தண்டிக்கும்படியும் கீழ் ஜாதியார் செல்வம் வைத்திருந்தால் பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்பதாகவும் திட்டம். வகுத்திருப்பதோடு இந்தத் திட்டங்கள் கட்டாயமாக அனுஷ்டிக்கப்பட வேண்டியவைகள் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த சாஸ்திர விதிகளுக்கு ஏற்பவேதான் இன்றும் கீழ் ஜாதியார் இழி தொழில் புரிவோராயிருப்பதும், கீழ் ஜாதியார் கல்வி அற்றவர்களாயிருப்பதும், மேல் ஜாதியார் மேன்மையான சுக தொழில் புரிவோராயிருப்பதும் யாவருமே கல்வி கற்றிருப்பதுமேயாகும். ஒரு சிலர் நம்மில் இதற்கு மாற்றமாய் இருக்கிறோம். என்றால் அது புராண காலத்திலும் அப்படிச் சிலர் இருப்பதை அனுசரித்து அதாவது விபீஷணன், பிரகலாதன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் போன்ற கற்பனைகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு அவசியமும் முடியாமையும் ஆன காரணத்தால் அனுமதிக்கப்பட்டவையே யாகும்.
இன்று இந்த நாட்டில் நடந்து வரும் பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார் என்னும், பிராமண _ சூத்திரப் போராட்டமும், அந்நியர் _ இந்நாட்டவர் என்னும் ஆரிய திராவிடர் என்னும் ஆரிய திராவிடப் போராட்டமும் இதையே காரணமாகக் கொண்டதே தவிர வேறு காரணம் எதுவுமே கிடையாது.
ஜாதிமுறை காரணமாகவேதான் நம் நாட்டில் தொழில் பேதமும், கல்வி பேதமும், பொருளாதார பேதமும், உத்தியோக பேதமும் இருந்து வருகின்றன.
ஜாதி முறையை அழிப்பதென்றால் அதற்கு இருக்கும் அஸ்திவார பலமும், ஆதரவு தாங்கிகளும் அதாவது சாயாமல் முட்டுக் கொடுத்து வைத்திருக்கும் உதவித் தூண்களும் மிக மிக பலமானவைகள். ஆதலால், அவைகளைப் புரட்சி என்னும் டைனமேட் வெடி வைத்து உடைக்க வேண்டியதாக இருந்து வருகிறது. அந்த வேலையைத்தான் திராவிடர்கழகம் அதுவும் திராவிடர் கழகமே தான் செய்து வருகிறது.
இந்த வேலையில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற எவருக்குமே எதிரிகளிடம் இருந்து நல்ல அழைப்புகளும் நல்ல ஆதரவுகளும் தாராளமாகக் கிடைக்கும். அதன் காரணமாகவே திராவிடர் கழகத்தில் அதாவது ஜஸ்டிஸ் - சுயமரியாதை இயக்கப் பணியில் அனுபவமும் செல்வாக்கும் பெற்ற எவரும் இக்கழகத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது.
முதலாவதாக இந்த ஜாதி முறை ஒழிப்புக் கருத்துக்கு மாறாக அல்லது ஜாதி முறை ஒழிப்புக்கு எதிரிகளாய் இருக்கிறவர்களுக்கு அனுகூலமாக இருக்கிற பண்டிதர், கலைவாணர், புலவர், ஆசிரியர், செல்வர், உத்தியோகஸ்தர்கள் முதலியவர்கள் எவ்வளவு அயோக்கியர்களாக, நாணயக் குறைவு உள்ளவர்களாக, இனத் துரோகிகளாக இருந்தாலும் அவர்களுக்குப் பார்ப்பனர் ஆதரவு, விளம்பரம், உதவி, உத்தியோகம், பெருமை முதலியவைகள் தாராளமாகக் கிடைக்கும்.
உதாரணமாக, இன்று பார்ப்பன உலகில் பாராட்டுதலும் புகழும் பெற்ற திராவிட இனத்துக்காரர்களும், புலவர்களும், வித்துவான்களும், மற்றும் அதிகாரிகளும், செல்வர்களும் ஆகியவர்களைப் பார்த்தால் அந்த பட்டியிலில் உள்ள 100-க்கு 99.3/4 பேர்கள் நம் திராவிட இனத்துக்குத் துரோகிகளாகவே, நம்மைக் காட்டிக் கொடுத்து பிழைப்பவர்களாகவே தான் இருப்பார்கள்.
ஒன்று சொல்லமுடியும். அநேகமாக சூத்திரனுக்கு பஞ்சமனுக்கு இன உணர்ச்சி இருக்க முடியாது. இருக்க வேண்டுமானால் அவனுக்கு இனம் இன்னது என்ற தெளிவு ஏற்படாமல் இருக்கும்படி பல ஜாதியாய்ப் பிரிக்கப்பட்டு, பல கலைகள் புகுத்தப்பட்டு, சுயமரியாதை உணர்ச்சி ஏற்படுவதற்கு இல்லாமலும், சுயநலமே ஜீவனாக, அதாவது ஜீவப் பிராணி போன்ற உணர்ச்சியையே வாழ்க்கை வழியாகச் செய்யப்பட்டிருக்கிறது.
- ‘விடுதலை’ - 7.8.1950
உண்மை இதழ், 16-31.8.19
சனி, 8 பிப்ரவரி, 2020
இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்திருக்கிறது?
* தந்தை பெரியார்
உலகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற காலத்தில் குறிப்பாக எல்லா சமுகத்தை விட மத சம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆட்சி செய்யும் நாடுகளும் கூட அரசுரிமையை இழந்தாவது சீர்திருத்தத்தைப் பரப்ப வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர் களுக்கும் கட்டுப்பட்டு நடந்து வரும் இக்காலத்தில், இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
நிற்க. பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதரபாவம் கொள்ளுவதற்கு உலகத்தில் முதல் தடையாயிருந்தது, இருப்பது மதங்கள் என்று சொல்லப்படுபவைகளேயாகும். இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும். மூன்றாவது பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களும் ஆகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத் தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமுகத்தைப் பெரும் பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட் டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம் பந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது என்னலாம்.
வேண்டுமானால் ஒரு சமயம் தேசத்தின் பேரால் மக்களையும் பிரித்துக்காட்ட வேண்டியதாக ஏதாவது ஏற்பட்டால் ஏற்படலாம். அப்படிக்கு இருந்தாலும் துருக்கி யருக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் உள்ள பிரிவுகள் போன்ற பிரிவுகளும் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பா வுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற பிரிவுகளும் போல இருக்குமே ஒழிய, எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒற்றுமைப்பட முடியாததும் ஒரு தேசத்தையோ ஒரு சமூகத்தையோ அடியோடு கொன்று ஒரு தேசத்தார் வாழத்துணியும் படியான பிரிவுகளாகவும், மற்றவர்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் தங்கள் சமூக நன்மையை மாத்திரம் கவனிக்கக் கூடிய பிரிவுகளாகவும் ஒருவருக்கொருவர் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் முதலியவைகளால் வெறுப்புக் கொள்ளும் பிரிவுகளாகவும் பிரிந்திருக்க முடியவே முடியாது என்பது நமது உறுதியாகும். கிறிஸ்தவர்களுக்குள் இருந்த போதிலும் மதம் என்கின்ற ஒரு காரணத்தால் ஒன்றுபட்டு உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்தியாவின் ஆதிக்கம் முதலிய விஷயங்களில் எதிரி களாகவே இருந்து இந்தியாவை உறிஞ்சி வருகின்றார்கள் என்பதைத் தினமும் உணருகின்றோம். அது போலவே உலகத்தில் உள்ள எல்லா மகமதியர்களும் தங்கள் மதத்தின் பேராலும் சமுகத்தின் பேராலும் தங்களது நன்மையைக் குறிக்கொள்ளும்போது இந்துக்கள் என்பவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரிடையாய் இருக்க நேர்ந்தாலும் சிறிதும் அபிப்பிராய பேதமில்லாமல் ஒன்று சேருகின்றார்கள்.
அதுபோலவே இந்துக்கள் என்பவர்களும் மத விஷயங்கள் என்பவைகளில் மகமதியர்கள் கிறிஸ்த வர்கள் என்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர முடியாத வர்களாயிருந்தாலும்கூட ஒன்று சேர வேண்டும் என்கின்ற உணர்ச்சிகளை எளிதில் அடைவதன் மூலம் எதிரிகளாக கருதத்தக்கவர்களாகி விடுகின்றார்கள்.
இது சரியா? தப்பா? அல்லது இதற்கு ஏதாவது பொருள் உண்டா? என்பவைகள் ஒருபுறமிருந்தாலும் முக்கியமாய் மதத்தின் பலனாய் வேற்றுமை உணர்ச் சிகள் தோன்றியே தீருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. இப்படியெல்லாம் இருந்தாலும் கூட மேல்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதக்காரர்களும் சமீபகாலமாய் தங்கள் பிடிவாத குணங்களை விட்டு முதலில் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டு அம்முயற்சிக்கு எதிரிகளாய் இருப்பவைகளைத் தகர்த்தெறிந்து ஒரே சமுகமாக ஆவதற்கு மிக முனைந்து வருகின்றார்கள். இம்முயற்சிக்கு விரோதமாக மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும் இருக்கும் தடைகளைக் கூட வெகு சுலபத்தில் தகர்த்தெறியத் துணிந்து வருகின்றார்கள்.
உதாரணமாக இம்முயற்சியில் சிறிதளவானாலும் முதலில் வழிகாட்டிய பெருமை மேல்நாட்டுக் கிறிஸ்தவர் களுக்கே உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் முதன் முதலாக நிலைமைக்குத் தக்கபடி தங்களைச் சரிப்படுத்தி கொள்ள முன்வந்தவர்கள். உதாரணமாக அவர்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிளைக் கூட திருத்த முயன்று பழைய ஏற்பாட்டிற்கு விரோதமாய் புதிய ஏற்பாட்டை உண்டாக்கி நடை உடை முதலியவைகளையும் மாற்றிக் கொண்டார்கள். அதுபோலவே, இரண்டாவதாக மகமதியர்களையும் சொல்லலாம். ஏனெனில் அவர்களிலும் இந்துக்கள் என்பவர்களை போல பிறவியில் உயர்வு தாழ்வு என்பது போன்ற சில கடுமையான பிரிவினை வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் மகமதியர்களையும் மதம் என்பது இந்துக்கள் என்பவர்களைப்போலவே அநேக விதங்களில் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றது என்று சொல்லலாம். உதாரணமாக நடை உடை பாவனை முதலாகிய பலவற்றுள் மதங்களின் பேரால் கட்டுப்பட்டுக் கிடந்தாலும் இப்போது தைரியமாய் அக்கட்டுபாடுகளில் சிலவற்றையாவது தளர்த்திவிட ஆரம்பித்து விட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வெகு துரிதமாகவும் தைரியமாகவும் சிலர் மாற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படிக்கு மாற்றிய மகமதிய வீரஅரசர்களான அமீருக்கும், பாஷாவுக்கும் ஆதரவு கொடுக்கவும் முந்துகின்றார்கள்.
மற்றும் வெளிநாடுகளில் அந்தந்த தேசகுடி ஜனங்கள் பெரும்பாலோர் அத்திருத்தங் களுக்குத் தாராளமாய் ஆதரவளித்துப் பின் பற்றி வருவதில் யாதொரு தடையும் காண முடியவில்லை. ஆனால் புரோகிதக் கூட்டத்தின் தொல்லைகள் மாத்திரம் எந்த மதத்திலும் சிறிதளவாவது இல்லாமலிருக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும் அவர்களிலும் சிலர் தம் சுயநலத்திற்கு வலி யுறுத்துவதை தவிர வேறு காரணங்கள் சொல்லவோ ஆதாரங்கள் காட்டவோ முடியாதபடி மக்கள் அறிவு பெற்று விட்டார்கள். இந்தியாவில் உள்ள மகமதிய சமூகமும் இந்தியர்களுடன் பழகுவதால் கமால் பாட்சாவுக்கும், அமீருக்கும் விரோதமாக அதிருப்தியும் ஆத்திரமும் காட்டுவதன் மூலம் ஒரு புறத்தில் தங்கள் மதப்பற்றை காட்டிக் கொண்டாலும் மற்றொரு புறம் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து அவர்களுக்கு ஆதரவளித்தே வருகின்றார்கள். உதாரணமாக அமீரையும் அவரது மனைவியரையும் இந்திய மகமதியர்களில் சிலர் குறைகூறி இருந்தாலும் அமீரினது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்கு இந்தியாவில் உள்ள மவுலானாக்கள் முதல் கொண்டு அனுதாபப்படுவதுடன் ஆதரவளிக்கவும் முந்துகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதன் காரணம் என்னவென்று பார்ப்போமானால் கூடுமானவரை அந்த சமூக நன்மை சம்பந்தமான கவலையும் ஒற்றுமையுமேயாகும். ஆனால் இந்துக்கள் என்பவர்களுக்குள் அம்மாதிரியான சமூக ஒற்றுமை இல்லாமல் எவ்வித திருத்தங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்து வருவதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால் இதிலுள்ள மதப் பிரிவுகளோடு அவைகளிலுள்ள உட்பிரிவுகளும் ஜாதிப்பிரிவுகளும் அவற்றில் உள்ள உயர்வு தாழ்வுகளும் அதனால் சிலருக்கு ஏற்படும் நிரந்தர நலமுமே காரணமாகும். இந்த உள்பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் நிலைத்து குருட்டுப் பிடிவாதமாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால் மற்ற மதங்களை விட இந்துக்கள் இந்துமதம் என்பவற்றில் அதிகமான நிர்ப்பந்தங்கள் இருந்து வருகின்றன என்பதேயாகும். அவையாவன, முதலாவது இந்துக்களுடைய மதக்கொள்கைகளின் படி மக்கள் படிக்கக்கூடாது. ஆனால் ஒரு சிறு வகுப்பினர் - பார்ப்பனர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் படிக்க உரிமையுள்ளவர்கள். மத ஆதாரம் என்பதைப் பற்றி இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே தெரிந்து கொள்ளக்கூடாது. மத சம்பந்தமான எந்த விஷயங்களிலும் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஏற்பாடு செய்து கொண்ட ஒரு சிறு வகுப்பார் அதாவது 100க்கு 2 பேர்களான பார்ப்பனர்கள் - தவிர மற்றவர்களுக்குச் சொந்த அறிவை உபயோகிக்கவோ ஆராய்ச்சி செய்யவோ நன்மை தீமை எவை? அவசியமானவை எவை? அவசியமில்லாதவை எவை? என்று தெரியவோ சற்றும் உரிமை கிடையாது.
படிப்பு, மத சம்பந்தம் ஆகியவைகளில் இம்மாதிரி யான நிர்பந்தம் இருப்பதோடு மாத்திரமல்லாமல், மனித வாழ்க்கையிலும் மக்களைத் தனித்தனி ஜாதி களாகப் பிரித்த தோடல்லாமல், அவற்றில் உயர்வு தாழ்வும் ஒருவரை ஒருவர் தொடாமல் நெருங்காமல் காணமுடியாமல் செய்வித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிறவித் தொழிலையும் ஏற்படுத்தி அவை களையேதான் அவ்வகுப்பைச் சேர்ந்தவன் செய்து தீர வேண்டும் என்றும் அந்தப்படி அரசன் சட்டம், தண்டனை, கண்டனம் ஆகியவைகள் மூலம் செய்விக்க வேண்டும் என்றும் அரசர்களாலும் நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது.
ஒரு சிறு கூட்டத்தார் தங்கள் ஜனத் தொகைக்குதக்கபடி, தங்கள் வாழ்வுக்குத் தேவையானபடி நிரந்தரமாய் பொருள் வருவாய் இருக்கத்தக்கதாக பதினாயிரக்கணக் கான கடவுள்களை சிருஷ்டித்து ஆயிரக்கணக்கான சடங்குகளையும் சிருஷ்டித்து அவற்றிற்கு தினப்படி பூஜை, உற்சவம், கல்யாணம், அவைகளின் திருப்திக்கு என்று அச்சிறு கூட்டத் தாருக்கு வேண்டியவைகளையெல்லாம் அவசிய மாக்கி அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சிறு கூட்டத்தாரின் திருப்தியே கடவுள் திருப்தி என்றும் மற்ற மக்கள் பிறந்ததே, அச்சிறு கூட்டத்திற்கு தொண்டு செய்வதற்கென்றும் பலவாறாகக் கற்பித்து, அக்கட்டுப்பாடுகளிலிருந்து யாராவது விலகவோ அல்லது அக்கட்டுப்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ புறப்பட்டால் அவ்வாராய்ச்சி செய்வது மகாபாதகமானதென்றும் நாத்திகமென்றும் அப்படிப் பட்ட நாத்திகனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் மற்றும் இது போன்ற பல நிர்பந்தங்களையும் உண்டாக்கி வைத்திருக்கின்றார்கள்.
இது மாத்திரமல்லாமல் யாராவது துணிந்து இக் கட்டுப்பாட்டையும் கொடுமையையும் உடைக்கப் புறப்பட்டால் அவர்களை அசுரர்கள், ராட்சதர்கள், துஷ் டர்கள், தேவர்களுக்கு விரோதி, கடவுளுக்கு விரோதி, உலகத்திற்கு ஆபத்தை விளைவிப்பவன் என்பதான விஷமப் பிரச்சாரத்தால் அவனை அடியோடு அழித்து வந்திருக்கின்றார்கள். இன்றைய தினமும் மேல் கண்ட கொள்கைகளே மதக் கொள்கைகளாகவும், அவைகளைக் கொண்ட புத்தகங்களே மத ஆதாரங்களாகவும் அவை களை நிலைநிறுத்தச் செய்வதே சீர்திருத்தங்களாகவும் இருந்து வருகின்றன.
உதாரணமாக, இது சமயம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புது உணர்ச்சியும் கிளர்ச்சியுமானது மக்களை எவ்வளவோ தூரம் நடைஉடை ஆச்சாரம் போகப் போக்கியம் முதலி யவை களில் பழைய கொள்கைகளையும் பழைய அனு பவங்களையும் மாற்றிக் கொள்ள அவசியமும் இடமும் ஏற்படுத்தி கொடுத்து அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கிக் கொண்டிருந்தும், தனது சொந்த சுயநலம் மாத்திரம் எவ்வளவு அறிவீனமும் ஆணவமும் இழிவும் பொருந்தியதாக இருந்த போதிலும் அதிலிருந்து சற்றாவது மாறுபடுவதோ தளர்த்தப்படுவதோ என்பது சிறிதும் முடியாததாகவே இருக்கின்றது.
உதாரணமாக, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி வித்தியாசத்தை நமது இந்திய நாட்டில் உள்ள அறிவாளிகள், பிரமுகர்கள், தலைவர்கள் பெரி யோர்கள் இந்திய நாட்டில் உள்ள பொது இயக்கங்கள் சமய தத்துவங்கள் என்பவைகள் எல்லாம் அநேகமாய் ஒரே முகமாக விலக்க வேண்டும் என்றும் ஒழிக்க வேண்டும் என்றும் அந்தப்படி ஒழிக்காவிட்டால் நாட்டிற்கு சுதந்திரமில்லை, தேசத்திற்கு சுயமரியாதை இல்லை சமயத்திற்கு மதிப்பு இல்லை என்று பலவாறாக அபிப்பிராயம் கொடுத்தும் தர்மத்தின் பேராலும் மதத்தின் பேராலும் கூட்டங்கள் கூடித் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும் தகுந்தபடியே தீர்மானங்கள் செய்து வருகின்றார்கள்.
உதாரணமாக, சமீபத்தில் பல இடங்களில் பார்ப் பனர்கள் ஒன்று கூடி வருணாசிரமத்தை உறுதிப்படுத்தி பார்ப்பனர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள் வைப் பாட்டி மக்கள் பார்ப்பன சேவைக்காக கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள் என்கின்ற கருத்துக்களடங்கிய சூத்திரர்கள் என்பதை நிலை நிறுத்த முயற்சித்திருப்பதும் சைவர்கள் என்பவர்கள் ஒன்று கூடி தீண்டாமை என்பதை நிலை நிறுத்தத்தக்க வண்ணமாக தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுக்க என்று தீர்மானத்திருப்பதும் போதுமான உதாரணமாகும்.
எனவே இந்த மாதிரி வருணாசிரம தர்மங்களும் இந்தமாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனீயம் ஒழிய முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்?
எந்தவிதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும்? என்பதை யோசித்தால் இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்து எந்தெந்த வழியில் நாட்டைப் பாழாக்கி வருகின்றது என்பது புலனாகும்.
எனவே, இந்தியாவில் பார்ப்பனீயமற்ற மதமே இல்லை என்றும் இந்துமதமென்னும் தலைப்பின் கீழ் எந்தமதமானாலும் சமயமானாலும் அகச் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லது மக்கள் கடவுள் நிலை என்பதையோ அன்பு நிலை என்பதையோ ஒருக்காலமும் அடைய முடியாததென்றே சொல்லுவோம்.
'குடிஅரசு' - துணைத் தலையங்கம் - 14-04-1929
புத்த மதமும், சுயமரியாதையும்
29.03.1931 - குடி அரசிலிருந்து....
சகோதரர்களே, சுயமரியாதையும், புத்த மதமும் என்ற விஷயத்தைப்பற்றி பேசும் இந்தக் கூட்டத்தில் நான் பேச வேண்டியிருக்கும் என்று இதற்கு முன் நினைக்கவேயில்லை. இன்று நான் இரயிலுக்குப் போக சற்று நேரமிருப்பதாலும், தங்கள் சங்க செக்ரட்டரி என்னை இங்கு அழைத்ததாலும், இவ்விடம் நடக்கும் உபன்யா சத்தைக் கேட்டு போகவந்தேன். இப்போது திடீரென்று என்னையே பேசும்படி கட்டளை யிட்டு விட்டீர்கள். ஆனபோதிலும் தங்கள் கட்டளையை மறுக்காமல் சிறிது நேரம் சில வார்த்தைகள் சொல்லுகின்றேன். அவை தங்கள் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாக இல்லையே என்று யாரும் மனவருத்தமடையக்கூடாது என்று முதலில் தங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். ஏனெனில், இன்று பேசும் விஷயத்திற்கு, சுயமரி யாதையும், புத்தமதமும் என்று பெயரிட்டு இருப்பதால் அதைப்பற்றி பேசுகையில் என் மனதில் உள்ளதை பேச வேண்டியிருக்கும். பச்சை உண்மையானது. எப்போது மக்களுக்கு கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். உண்மையை மறைத்துப் பேசுவது என்பது எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சுக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும். திருப்தி உண்டாகும்படியும் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படி செய்ய முடியாது என்பது எனக்கு தெரியும். ஆனாலும் நான் என் கடமையைச் செய்கின்றேன் என்கின்ற முறையில் பேசுகின்றேன். பிறகு அது எப்படியோ ஆகட்டும்.
சகோதரர்களே! சுயமரியாதையும், புத்த மதமும் என்பது பற்றிப் பேசுவதில் நான் முக்கியமாய் சொல்லுவது என்னவென்றால், இன்ன மதந்தான் சுயமரியாதை இயக்கம் என்பதாக நான் ஒரு காலமும் சொல்லமாட்டேன். அந்தப்படி என்னால் ஒப்புக் கொள்ளவும் முடியாது. இன்று காணப்படும்படியான எந்த மதமுமே கூடாது. அவை மனிதனுக்கு அவசியமும் இல்லை என்கின்ற கொள்கையை உடைய சுயமரியாதை இயக்கமானது எப்படி தன்னை ஏதாவது ஒரு மதத்துடன் பிணைத்துக் கொள்ள சம்மதிக்கமுடியும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். ஏனெனில், சுயமரியாதை இயக்க மானது ஒரு நாளும் யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக எதையும் ஒப்புக்கொள்ளக் கூடியதன்று. யார் சொன்னதாக இருந்தாலும் அது தன் பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்கின்றதா? தனது அனுபவத்திற்கு ஒத்ததாக இருக்கின்றதா? என்பதைப் பார்த்து திருப்தி அடைந்த பிறகே எதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கின்ற கொள்கையை உடையது. அது எந்த மனிதனையும் அந்தப்படி பரீட்சித்த பிறகே எதையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்கின்றது.
அன்றியும் அது அந்தக் கொள்கையோடு அதன் நிபந்தனைக்குட்பட்டு யார் எதைச் சொன் னாலும் அதை யோசிக்கத் தயாராக இருக்கின்றது. அப்படிக்கில்லாமல் எந்த மத மாவது. எந்த நபராவது தான் அனுசரிக்கும் கொள்கையும் தான் சொல்லுவதன் இன்ன காலத்தில் இன்னார் மூலமாக இன்னார் சொன்னது என்பதாகவும், அதற்கு விரோதமாக யாரும் எதையும் சொல்லக் கூடாது என்பதாகவும், அதை யாரும் பரீட்சிக்க வும் கூடாது, அதைப்பற்றி சந்தேகமும் படக் கூடாது என்பதாகவும் யாராவது சொல்லவந்தால் அது எந்த மதமா னாலும் அது எப்படிப்பட்ட உண்மையானாலும் அதைச் சுயமரியாதை இயக்கம் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள முடியாது. அன்றியும் கடவுள் சொன்னார். அவதாரக்காரர் சொன்னார், தூதர் சொன்னார் என்று சொல்லி ஒன்றைத் தங்கள் பகுத்தறிவைப் பொருத்திப் பார்க்காமல் ஒப்புக்கொண்டிருக்கின்றவர்கள் எவரும் சுயமரி யாதை இயக்கத்தில் ஈடுபட்ட வர்கள் என்று கொள்ள சாத்தியப்படாது. அன் றியும் அவர்கள் தங்களைச் சுயமரியாதை உடைய வர்களாக எண்ணி கொள்ளவுமாட்டார்கள்.
பழைய அபிப்பிராயங்கள் எல்லாம் அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும், பரிசோதிக்கச் சற்றும் பயப்படக் கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும். அந்தப்படி பரிசோதிக்கப் பின் வாங்கு கின்றவன் யாராயிருந்தாலும் கோழையேயாவான்.
நமக்கு முன்னால் இருந்த மனிதர்களை விட நாம் விஷேச அனுபவமும், ஞானமும் உடைய வர்களென்று சொல்லிக் கொள்ளப் பாத்திய முடைவர்கள் என்பதை ஞாபகத்திலிறுத்தாதவன் மனிதத்தன்மை உடையவனாக மாட்டான். ஏனெனில் முன் காலம் என்பதைவிட முன் இருந் தவர்கள் என்பதைவிட இந்தக்காலம் என்பதும் இப்போது இருக்கிறவர்கள் என்பவர்களும் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் அதிக மான சுதந்திரமும், சவுகரியமும் உடையவர்கள் என்பது ஒரு சிறு குழந்தையும் ஒப்புக்கொள்ள கூடியதாகும். அன்றியும் இந்தக் காலம் அனுபவத்தின் மேல் அனுபவம் என்கின்ற முறையில் புதிய புதிய தத்துவங்கள் வளர்ந்து வந்த காலமுமாகும். மேலும் இப்போதுள்ள வர்கள் பல வழிகளில் இயற்கையாகவே முற்போக்கும்; அறிவு விளக்க மும், அனுபோகப் பயிற்சியும் பெற்று வருகிற சந்ததியில் பிறந்தவர் களுமாயிருக் கிறார்கள்.
ஆகவே இயற்கையாகவும், செயற்கையாகவும் முன்னோர்களை விட நாம் எவ்விதத்திலும் அறிவிலோ, ஆராய்ச்சியிலோ, இளைத்தவர்கள் அல்ல என்பதையும் காலவேறுபாட்டிற்கும் காட்சி வேறுபாட்டிற்கும் தகுந்தபடி கருத்து வேறுபாடு அடைய வேண்டிய உரிமையும். அவசியமுடைய வர்கள் என்பதையும் நாம் நன்றாக உணர வேண்டும்.
இந்த நிலையில் இருந்து கொண்டு நாம் பார்த்தோமானால் முன்னோர் சொன்னவைகள் என்பவற்றிற்கு எவ்வளவு மரியாதை கொடுக் கலாம் என்பது தானாகவே விளங்கிவிடும். நிற்க.
நிற்க, மற்றொரு விஷயம் என்னவென்றால். முன்னோர்கள் சொன்னவைகள் என்பவற்றிற்கு நம் கருத்துக்கள் ஒத்து இருக்கின்றனவா என்று பார்த்துப் பிறகுதான் நம் கருத்துக்களை உறுதிப்படுத்த வேண்டுமென்கின்றதான மனப் பான்மையையும் அடியோடு எடுத்தெறிய வேண்டும். ஏன் எனில் முன்னோர் கருத்து என் பதற்காக நாம் அப்படி எதற்கும் அடிமையாய் விடக் கூடாது என்பதற்காகத்தான் அப்படிச் சொல்லுகிறேன். முன்னோர் கருத்துக்கு அடிமை யாக்கிக் கொண்டு வந்தோமேயானால் உண்மை யையும், அறிவு வளர்ச்சியையும் நாம் அடியோடு கொன்று விட்டவர்களாவோம்.
தொடரும்.....
- விடுதலை நாளேடு 24 .1.20
ஜாதியை ஒழிப்பதால் மதம் அழிந்துவிடுமா?- ஓர் சமதர்மி
21.04.1935 , குடிஅரசிலிருந்து...
சென்ற வாரத் தொடர்ச்சி...
சூத்திரன் பிராமணனோடு சமமாக உட்கார எத்தனித்தால் இடுப்புக்குக் கீழ் சூடு போட்டு தேசத்தை விட்டு துரத்திவிட வேண் டும். அல்லது அவனுடைய பின் பாகத்தை வெட்டி விட வேண்டும். இந்தப்படியான விதிகளும், இன்னும் இதுபோன்ற ஆயிரக் கணக்கான விதிகளும் பிராமணனுக்கு உயர்வைக் கொடுத்தும், மற்ற ஜாதிக்கு தாழ்வையும் இழிவையும் கொடுத்து விதிகள் உண்டாக்கி தர்மநூல்கள் எழுதப் பட்டிருக்கின்றன.
புராணங்களில் இதைவிட மோசமாக பறையன், சக்கிலியன், பள்ளன் முதலிய ஜாதிகளை கற்பித்தும் அவர்களைத் தொடக் கூடாது என்றும், பார்க்கக்கூடாது என்றும் நிழல் படக் கூடாது என்றும் வரிசைக் கிரம மாக ஒன்றுக்கொன்று மேல் கீழ் என்கின்ற முறையில் பல ஜாதிகளைக் கற்பித்தும், மற்றும் திருடுவதற்கு ஒரு ஜாதியும் விபசாரித்தனத்துக்கு ஒரு ஜாதியும், கொலைத் தொழில் செய்ய ஒரு ஜாதியும் இப்படியாக பல ஜாதிகளும் இன்னும் அனேக ஜாதிகளையும் கற்பிக்க ஆதாரமாய் இருந்தது புராணங்களேயாகும்.
இன்றைய நிலையில் மக்கள் பெரும் பகுதியோர் புராணங்களை கற்பனை என்றும் அவைகளை நம்பக் கூடாதென்றும் சொல்லி வருவதும், அந்தப் பிடிகளினின்றும் விடுபட்டு வருவதும் வெகு சாதாரணமான காலமாகவும் ஆகிவிட்டது. இதை இனி யாராலும் தடுக்க முடியாதென்பதும் நிரூபிக்கப்பட்டும் வருகின்றது. ஆகவே, இந்தக் கற்பனையான இடைக்காலத்தில் தோன்றிய ஜாதி அழிந்து போவதனால் உண்மையான மதத்திற்கு எந்த ஆபத்தும் வந்துவிடப் போவதில்லை என்று துணிந்து சொல்லலாம்.
ஆனால் பார்ப்பனர்கள் சனாதனிகள், ஜாதி வகுப்புக் கிரமங்களில் கை வைத்தால் மதம் அடியோடு ஒழிந்துவிடும் என்றும் ஜாதியில் கை வைப்பது மதத்தில் கை வைப்பதாகும் என்றும், மகாராணியார் அளித்த வாக்குத் தர்மத்தை மீறியதாகும் என்றும் கூப்பாடு போடுவதெல்லாம் தங்களுடைய சோம்பேறி வாழ்க்கைக்கும் ஊரார் உழைப்பில் உண்டு களிக்கும் மானங்கெட்ட வாழ்க்கைக்கும் ஆபத்து வந்துவிடுமே என்கின்ற பேராசைச் சுயநலம் காரணமே அல்லாமல் மற்றபடி மதத்துக்கும் ஜாதிக்கும் சம்பந்தமில்லை என்பது நமது அபிப்பிராயமாகும்.
ஜாதிப் பாகுபாடுகள் இந்திய நாட்டின் மேன்மைக்கும், சுயமரியாதைக்கும் மாத்திரம் கேடாயிருப்பதல்லாமல் மனித சமுகத்தின் சமாதானத்திற்கும், சாந்திக்குமே விரோதமாய் இருக்கிறது. ஜாதிக் கொடுமையானது இந்த நாட்டிலுள்ள பார்ப்பானைத் தவிர மற்ற ஒவ்வொரு மனிதனையும் கவலைக்கும், இழிவுக்கும் உள்ளாக்கி இம்சித்து வருகிறது. கிறிஸ்தவர்களும், துலுக்கர்களும் இந்துக்கள் அல்லவானாலும் அவர்களும் தீண்டத்தகாதவர் களாகவே அநேக இந்துக்களால் சிறப்பாக சனாதனிகளால் மதிக்கப்படுகிறார்கள்.
ஆதலால் இந்த மாதிரியான கொடுமையும் அறிவீனமும் ஆபாசமுமான ஜாதிப் பாகுபாட்டை அழித்தெறிய வேண்டியது சமதர்மவாதிகளின் முதற் கடமையாகும்.
- விடுதலை நாளேடு 24 .1.20