ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

மக்களுக்கு விடுதலை வேண்டுமானால் போலித் தத்துவங்களை அழித்தாக வேண்டும்!



 – தந்தை பெரியார்

தலைவர் அவர்களே! இளைஞர்களே!! சகோதரர்களே!!! 2 மணி நேரத்திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார். இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி. ஆதலால் திடீரென்று என்ன பேசுவதெனவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன். ஆனாலும் இதைப் பற்றிய என்னுடைய பழைய சங்கதிகளையே இந்தத் தலைப்பின் கீழ் சொல்லப் போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாணவர்களும், இளைஞர்களுமாய் இருப்பதால் நான் சொல்லுவதை திடீரென்று நம்பி விடாதீர்கள். நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

நண்பர்களே! சமூக சீர்திருத்தம் என்றால் எந்த சமூகம் என்பதும், சமயக் கொள்கை என்றால் எந்த சமயம் என்பதையும் முதலில் முடிவு கட்டிக் கொள்வது இங்கு அவசியமாகும். நான் இப்போது பொதுவாக மனித சமூகம் என்பதையும் பொதுவாக மனித சமூகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங்களையும் எடுத்துக் கொள்ளுகிறேன். பிறகு அவசியமிருந்தால் தனிச் சமூகம்,தனிச் சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன்.

மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கு

பொதுவாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்ப வைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப் பட்டவையாகும். மனித வாழ்க்கைக் கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படுவது மாகும்.

ஒரு வாசக சாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கை களாகும். இதுவும் அந்தந்த காலதேச வர்த்தமானத்திற்கும், மக்கள் அறிவு நிலைமைக்கும், வளர்ச்சிக்கும் தக்கபடி செய்யப்படுவதேயாகும். ஆனால், அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்துகொள்ள முடியாத அறிவு இல்லாத காலத்தில் மக்களைப் பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப் பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக் கருதி ஏற்படுத்திய கொள்கைக்கும் சேர்ந்ததேயாகும்.

அதாவது, எப்படி ஒரு குழந்தையானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியில்லாத தென்றும் அதைப்பற்றிய விபரங்களை எடுத்துச் சொன்னால் அதை அறிந்து கொள்ளமுடியாதென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக்குழந்தை வெளியில் போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப் படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒரு வித பயம் உண்டாகும் படியான ‘பூச்சாண்டி’ பிடித்துக் கொள்வான் என்றும், ‘பேய்’, ‘பூதம்’ பிடித்துக் கொள்ளும் என்றும், ‘துண்டித்தக்காரன்’ பிடித்துக் கொண்டு போய் அடைத்து விடுவான் என்றும், இன்னும் பலவகையாய் சொல்லுவதோடு கையையும், முகத்தையும் ஒருவிதமாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாதபடி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற்கென்று ஏற்படுத்தப் பட்ட கொள்கைகளை உணர்ந்து அதன்படி ஒழுக முடியாத நிலையில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப்போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம்மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும், மதக் கட்டுப்பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய்திருக்கிறார்கள்.

அந்த நிபந்தனை மிரட்டல்களும், கட்டுப்பாடுகளும்தான் இன்றைய மோட்சம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவை களாகும். மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவைகளில் சொல்லப்பட்டவை களுமாகும். அது மாத்திரமல்லாமல் மேற்கண்ட முறையில் சொல்லுபவைகளெல்லாம் சொல்லிவிட்டும் எழுதிவிட்டும் ஆனபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்பமாட்டார்கள் என்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும், அறிவுக்குப் பொருந்தாததுமாய் இருப்பதால்) அவைகளையெல்லாம் கடவுள் சொன்னார். பகவான் சொன்னார், முனிவர் சொன்னார், ரிஷி சொன்னார் என்று அதாவது மனிதத் தன்மைக்கு மீறினவர்களால் சொல்லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோட்சம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்கவேண்டும் என்று சொல்லி நம்பச் செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக்கொள்கைகளை மக்களுக்குள் புகுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங்களை முரட்டுப் பிடிவாதம், குரங்குப்பிடியாய் பிடித்து சிறிது கூட காலத் திற்கும், அறிவின் நிலைமைக்கும் ஏற்றமாதிரி திருந்துவதற்கு விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்ததாலேயே அறிவுக் குத் தகுந்தபடியும் காலத்திற்கு ஏற்றபடியும் பலபல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று.

அன்றியும் திருந்த இடம் கொடுத்துக்கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும், பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருகவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று. ஆகவே, இன்றைய தினமும் மக்கள் எந்தச்சமயமானலும் இந்த தத்துவத்தின் மேல் ஏற்பட்டதென்பதையும் ஒத்துக் கொண்டு கால தேசவர்த்தமானத்திற்கும், அறிவு வளர்ச் சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சவுகரியமுடையது என்று சொல்லப் படுவதாயின் அது எந்த மதமாயினும் சமயமாயினும் (கொள்கையாயினும்) அறி வுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.

அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்கு

அப்படிக்கில்லாமல், அதாவது மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்குக் கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும், அந்த மதத்தைக் காப்பாற்ற வேண் டியதே மனிதனின் கடமையென்றும், அது எப்படிப் பட்டதானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாய் இருந்தாலும் அதை அழித்துத் தீரவேண்டியது மனித சமூக சீர்திருத்தத்தைக் கோருகிற ஒவ்வொருவருடையவும் முக்கியமான கடமையாகும்.

ஆகவே, அக்கடமைக்கு கட்டுப்பட்டவைகள்தான் சமயக் கொள்கைகளாகும். இனி இந்திய சமூகத்தையும், இந்து சமயத்தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக் கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமூகம் பெரிதும் சமயத்தைக் காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டிருக்கின்றன. அப்படிக் கருதிக் கொண்டிருப்பதிலும் மற்றொரு சிரிப்புக்கு இடமான விஷயம் என்னவென்றால், மனித சமூக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை களையெல்லாம் விட்டுவிட்டு அக்கொள்கைகளை நிறை வேற்றவென்று பொய்யாகவும், கற்பனையாகவும், பயத் திற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கைகளைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு கட்டி அழுவதாய் இருக்கின்றது.

சமயக் கொள்கைகள்

காரணம் என்னவென்றால், மனிதனை அறிவு பெறுவதற்கு விடாமலும் விஷயங்களைப் பகுத்தறிந்து நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இந்திய மனித சமூகம் இன்றும் சுய அறிவற்று சமயத்தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது? என்பவைகளைக் கவனிக்காமல் கீழ் நிலையிலேயே இருந்துகொண்டு சீர்திருத்தமடையவோ, முன்னேற்றமடையவோ முடியாமல் தவிக்கின்றன. உதாரணம் வேண்டுமானால் பாருங்கள் எல்லா சமயக் காரர்களின் மனோபாவமும், குணமும் மற்றவனிடம் நடந்துகொள்ளும் பான்மையும் ஒரே மாதிரியாகஇருப்பதைக் காண்கின்றோம். ஆனால், ஆண்களைப் பார்த்தால் இன்ன இன்ன சமயம் தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவன் இஸ்லாமானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பௌத்தன், இவன் இந்து, இவன் சைவன், இவன் வைணவன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங்களைப் பார்த்தால் மாற்றமில்லாத படி ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
ஆகவே, மதம் என்பதும் சமயம் என்பதும் யாருக்கும் அநேகமாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதேயொழிய, கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும், மக்கள் வேஷத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கொள்கை களை அடியோடு நழுவவிட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். இதற்குக் காரணம் என்னவென்றால், இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக் கொடுத்து அதைக் கிரமமாய் அந்தந்த சமயத்தார்கள் பின்பற்றுகிறார்களா? இல்லையா என்று பார்ப்பதல்லாமல் கொள்கையை வற்புறுத்தாததேயாகும்.

எந்த சமயத்திற்கும் இந்த மாதிரி வேஷந்தான் பிரதான மான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான், எந்த சமய மக்களிடம் சமய உண்மைக்கொள்கைகளைப் பார்க்க முடியாமால் போனதோடு, சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள்கையைச் சொன்னா லும் லட்சியம் செய்யாமல் போய் விட வேண்டியதாகிவிட்டது அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத்திலேயே அதாவது வேஷமாத்திரத் திலேயே சமயப் பிரதானம் கிடைத்து விடுகின்றதாலும் உண்மையான அதாவது மனிதனிடம் நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவிதமாக பயங்களுக்காக கற்பிக்கப்பட்ட மோட்சம், கடவுள் அருள் அடுத்த ஜென்மத்தில் மேன்மையான பதவி ஆகியவைகள் என் பவைகள் எல்லாம் மேல்கண்ட வேஷமாத்திரத்தாலே கிடைத்து விடுவதாய் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டுவிட்டதாலும் வெறும் வேஷத்தை போடு கின்றதாலேயே மோட்சமடையக் கருதி அதிலேயே ஈடுபட்டு பிரதான சமயக் கொள்கையை அலட்சிப்படுத்தி விடுகிறார்கள். ஆகையால், இன்றைய தினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டுமானால், அதன் மிரட்டல் நிபந்தனைகளான போலிக் கற்பனைகளையெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோட்சம், நரகம். தலைவிதி, கடவுளின் பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்ப் பிறக்க லாம் என்பவைகளையும், சமய வேஷங்களையும் அடியோடு அழித்தாக வேண்டும். அப்படிக்கில்லாத பட்சம் எப்படிப்பட்ட நல்ல கொள்கை யுள்ள சமயம் என்றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக்காது. மேலும் கொள்கையையும், அறிவையும், பிரத்தியட்ச அனுபவத்தையும் பொருத்திவிட வேண்டும் அதைக் கொண்டு அவரவர் களையே நடந்து கொள்ளும்படி விட்டுவிடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெறும் பாட்டிக்கதைச் சமயங்கள் இன்றைய சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படவே படாது என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும்.

கற்பனைக் கதைகள்

உதாரணமாக, முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக்கல்வி அறிவு சவுகரியமில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர் பிரயாணம் போய் வரட்டுமென்று கருதி அந்த ஊருக்குப் போனால் புண்ணியம், இந்த சாமியை தரிசித்தால் மோட்சம், இந்தத் தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய் பிறப்பான் என்றெல்லாம் சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக் கதைகள் எழுதி வைத்ததுடன் ஜீவகாருண்யம் என்பதையும் உத்தேசித்து மனிதன், மாடு, குதிரை, மனிதன் ஆகிய வைகள் மீது சவாரி செய்து அவற்றிற்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கட்டும் என்று கருதி காலால் நடந்து போனால் அதிக மோட்சம் அவசியம் கிடைக்குமென்று எழுதி வைத்து இருந்தால் இன்று வர்த்தமான பத்திரிகை ரயில், மோட்டார், ஆகாயக் கப்பல் ஆகியவைகள் ஏற் படுத்தப்பட்டு மலிந்த பிறகு கூட நடந்து யாத்திரை போக வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். இது போலவேதான் அநேக விஷயங்களை சமயத்தின் பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி, மூடர்களாகவும், தரித்திரர் களாகவுமாகி அடிமைகளாய் கஷ்டப்படுகின்றனர். இக் கஷ்டத் தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால் சமயத்தின் உண்மை தத்துவத்தைத் தைரியமாய் எடுத்து ஓத வேண்டும். அதன் போலித் தத்துவங்களை தைரியமாக அழிக்க வேண்டும், அதோடு போலிக்கற்பனை நிபந் தனைகளுக்கு ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம், புண்ணியம், மோட்சம், அடுத்த ஜன்மம் என்கின்ற உபத்திரவங்கள் எல்லாவற்றையும் அடியோடு ஒழித்தாகவேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ, திருப்தியோ, மோட்சமோ இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன். இந்த உபத்திரவங்களும் மடத்தனஙகளும் இங்கு உலகில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக் கின்றதென்று ஒரு சமயம் சொல்லலாம் ஆனாலும், இந்து சமயம் என்பதிலும் இந்திய மக்கள் என்பவர்களிடமுமே அதிகமாக மிக்க கெடும் படியாக சிறிது கூட முன்றேற்றம் அடையமுடியாதபடியாக சீர்திருத்தம் செய்ய சற்றும் ஒன்றுபடாததாக இருந்து வரு கின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்ற மடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடைகளை அழித்து முன் னேற்றமும் விடுதலையும் அடைந்து வருகிறார்கள். ஆதலால், வாலிபர்களே! நீங்கள் சற்று நிதானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து உங்களால் சமூகம் முன்னேறும்படியும் சமயக் கொள்கைகள் அதற்குப் பயன்படும்படியான மார்க்கத்தை தேடுங்கள்.

(சென்னை – பச்சையப்பன் கலாசாலையில் சமூக சீர்திருத்தமும், சமயக் கொள்கையும் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு)
‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 25.01.1931

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நம் ஆயுதம் – ‘விடுதலை’

 

2022 ஆகஸ்ட் 01-15 2022 பெரியார் பேசுகிறார்

தந்தை பெரியார்

திராவிட மக்கள் உள்ளத்தில் பெருங்குறையாய் இருந்ததும், திராவிட மக்கள் முற்போக்குக்கே பெருந்தடையாய் இருந்தது-மான குறை நீங்கும்படியாக -_ இன்று, ‘விடுதலை’ வெளியாகிவிட்டது. இனி இதை ஆதரித்து வளர்த்து நலனடைய வேண்டியது திராவிட மக்களின் கடமையாகும்.
திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும் இன்றுள்ள இழி நிலைகளுக்குத் தலையாய காரணங்களுக்குள் முக்கியக் காரணம் என்னவெனில் _ திராவிடர்களுக்கு என்று, திராவிடரிடத்தில் தினசரிப் பத்திரிகை ஒன்றாவது இல்லாததேயாகும்.

திராவிட நாட்டில் உள்ள தினசரிப் பத்திரிகைகள் யாவும் திராவிடர் அல்லாதவர்-களிடமும், திராவிடர்களின் மாற்றார்களான பிறவி எதிரிகளிடமும், அவர்களின் அடிமை-களிடமுமே இருந்து வருகின்றன. குறிப்பாக, ஆரியர்கள் வெகு தந்திரமாக, வெகு முன்னெச்சரிக்கையுடன் பத்திரிகை உலகைத் தங்கள் கைவசத்தில ஏகபோகமாக ஆக்கிக் கொண்டதோடு, வேறு ஒருவரும் அத்துறையில் தலை எடுக்காதபடியும், வேறு ஒருவரும் தினசரிப் பத்திரிகைகள் நடத்திச் சமாளிக்க முடியாதபடியும் செய்து வந்திருக்கிறார்கள்; செய்தும் வருகிறார்கள்………
மற்றும் சொல்லுவோமானால், ஆரியர்கள் திராவிட நாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியா என்னும் உபகண்டத்திலும் மற்ற நாடுகளிலும் உள்ள பத்திரிகைகளையும் தங்கள் ஆதிக்கத்திலேயே வைத்து, இந்தியாவில் எங்கணுமே திராவிட மக்களை இழிமக்களாகக் கருதும்படியாக, மானம் _ மரியாதை அற்ற மக்களாக இருக்கும்படியும் செய்து வருகிறார்-கள். பொதுவாகச் சுருங்கச் சொல்ல வேண்டுமானால், பத்திரிகை உலகம் முழுவதும் ஆரிய ஆதிக்கத்தில் இருப்பதாலேயே இந்த ஆயுதத்தைக் கொண்டு ஆரியர் திராவிடர்களை அவர்களது வாழ்வில் இவ்வளவு கொடுங்-கோன்மையான அடக்குமுறையில் _ இராணுவ ஆட்சிபோல் ஆதிக்கம் செலுத்தி அடக்கி ஆண்டு நசுக்கி வருகிறார்கள். இந்தக் காரியத்தில் ஆரியர்கள் இவ்வளவு வெற்றி பெற்று இருப்பதாலேயே, ஆங்கில அய்ரோப்பிய ஆரியர்களும் கூட, இந்த இந்திய ஆரியர்களுக்கு இணங்கி அவர்களது நலனுக்கு ஏற்றவண்ணம் நடந்து, இந்நாட்டில் ஆட்சி செலுத்த வேண்டியவர்களாகவும், வாழ வேண்டியவர் களாகவும் இருந்து வருகிறார்கள்.

இதற்கு முன் எப்படி இருந்தாலும், இப்போது சிறிது காலமாய்த் திராவிட மக்களுக்குள் நல்ல உணர்ச்சியும் எழுச்சியும் முயற்சியும் இருந்து வந்தும், தொடர்ந்து கிளர்ச்சியும் தொண்டும் நடந்து வந்தும், குறைந்த பட்சம் ஒரு 50 வருட காலத்தில் இல்லாத அளவுக்குத் திராவிடர்களிடமும் சிறப்பாகத் திராவிட இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியவர்கள் உள்ளத்திலும் தீப்பொறி பறக்கத் தகுந்த அளவு தீவிர உணர்ச்சி கொண்ட பிரச்சாரத் தொண்டாற்றி வந்தும், வேறு எக் கூட்டத்-தாரையும்-விடக் குறைந்ததாயில்லாத அளவுக்கு உண்மை அங்கத்தினர்களும் அமைப்புகளும் ஸ்தாபனங்களும் ஏற்பட்டு _ கூட்டங்கள் மாநாடுகள், விழாக்கள் நடந்து வந்தும், அவைகளுக்கும் சிறிதும் பயனில்லாமல் போய்விடுவதும், மதிப்பில்லாமல் போய் விடுவதுமான தன்மைகள் ஏன் ஏற்படுகின்றன வென்றால், பத்திரிகைகள் ஆரியர்களுடைய தாகவும் அதன் நிருபர்கள் ஆரியர்களாகவும், அவற்றைக்கொண்டு அவர்கள் செய்யும் வன்னெஞ்சமான நீதியும் _- ஒழுக்கமுமற்ற அட்டூழியமும்தான்………

இந்தப் பத்திரிகை ஆயுதம் இந்தத் தன்மையில் அவர்களிடம் இருந்துவரும் வரையில் திராவிட மக்களின் அடிமைத் தன்மையும் சூத்திரத்தன்மையும் அதாவது, சமுதாயத்தில் இழிமக்களாகவும், சமயத்தில் நான்காம் அய்ந்தாம் மக்களாகவும், கல்வியில் 100க்கு 90 பேர் தற்குறி (கைநாட்டு)களாகவும், பொருளாதாரத்தில் தினக்கூலித் தொழிலாளி களாகவும், அரசியலில் அடக்குமுறை ஆட்சிக்குட்-பட்டுத் தவிக்கும் மானமற்ற ஒற்றுமையற்ற ஈன இன மக்களாகவும் ஆக்கப்பட்டிருக்கும் தன்மையிலிருந்து மீள முடியவே முடியாது என்பது கல்லுப்போன்ற உறுதியாகும். உண்மையாகவே திராவிடருக்குள் இன்று ஒற்றுமை எங்கே? இன உணர்ச்சி எங்கே? கட்டுப்பாடு எங்கே? ஒன்றுபட்ட இலட்சியம் எங்கே? ஆனால், திராவிடர்களுக்கு அவர்களது வாழ்வில், முற்போக்கில் எதில் குறையில்லாமல்_-தடைகளில்லாமல் இருக்கின்றது? அதே தன்மையில் ஆரியர்களைப் பார்த்தோமானால், அவர்களுக்கு எவ்விதக் குறை இல்லாவிட்டாலும் _- எவ்வளவு கட்டுப்பாடு! எவ்வளவு இன உணர்ச்சி! எவ்வளவு ஒன்றுபட்ட இலட்சியம்! எவ்வளவு ‘கூட்டுத் தொண்டு’ இருந்து வருகின்றன!
இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதற்கு முதற்காரணம், நாம் மேலே காட்டியதுபோல், அவர்கள் கைவசம் பத்திரிகை உலகம் இருந்து வருவதும், நமக்கு அது இல்லாததுமே முக்கிய-மென்பதல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்? குறைந்த அளவு நாம் (திராவிடர்கள்) ஆரியர்களின் பத்திரிகை அட்டூழியங் களையாவது சமாளிக்கத்தக்க ஒரு தன்மையை அடையாவிட்டால், மற்றபடி அவர்களுடைய வலிமை பொருந்திய ஆயுதங்களான _ மதம், கடவுள்கள், ஆத்மார்த்தம், தெய்விகம், கலை, தேசியம், சுதந்தரம், சுயேச்சை என்னும் ‘இருபுறமும் பதமுள்ள வச்சிராயுதங்களால்’ நடத்தும் சித்திரவதைகளில் இருந்து எப்படி மீள முடியும்?………

திராவிட மக்கள் சற்றேறக்குறைய தெளிவான இரு பிரிவுகளாகக் காணப்பட்டு விட்டார்கள். ஒன்று, திராவிடர்களின் இழிநிலையைப் பற்றி _ அவர்களது முன்னேற்றத்திற்கும் மனிதத் தன்மைக்கும் கேடாக இருக்கும் தன்மைகளைப் பற்றிக் கவலையற்று, தங்கள் நலனையே பார்த்துக் கொண்டு வாழ்வை நடத்துவது என்பது; மற்றொன்று, தங்களைப் பற்றிக் கவலை-யில்லாமல் இன்றைய இந்த இழிநிலையைப் போக்கத் தம்மாலானதைச் செய்வது, செய்யும் முயற்சியில் முடிவெய்துவது, அதனால் ஏற்படும் கஷ்ட நட்டங்களை ஏற்பது என்பதாகும். இவற்றுள் முன்னையவர்களில் இரண்டு பிரிவினர்கள் இருந்து வருகின்றனர். இவர்-களுள் ஒரு சாரார், எதிரிகளுடன் சேர்ந்து திராவிடர்கள் இடரையும் தடையையும் செய்யத் துணிந்து, ஆரியர்களுக்கு உடந்தையாயும் அடிமையாயும் இருந்துவரும் வழுக்கி விழுந்த திராவிட சகோதரர்கள்; மற்றொரு சாரார், அவர்களுடனும் சேராமல், நம்மோடும் சேராமல் நடுநிலைமை காட்டிக்கொண்டு, சமயம்போல் நடந்து, மற்ற இரு கூட்டத்தாரின் தொண்டிலும் பங்கு பெற்றுத் தங்கள் சொந்த வாழ்வை மாத்திரம் கவனித்து, அதற்காக எதுவும் செய்யத் துணிவு கொண்ட திராவிடர்கள். இவர்கள் தங்களை மற்ற யாரையும்விட மேதாவிகள் _- மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சுயநல வேட்டை ஆடுகிறவர்கள் ஆவார்கள். இத்தகைய எந்தப் பிரிவும் ஆரியர்களுக்குள் இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும்.

எனவே, திராவிட மக்கள் மேற்குறிப்பிட்ட தன்மைகளில் இருந்து மாறி-_மற்ற இனத்தவர், மற்ற நாட்டவர்போல் ஆகி, ஒரு மனிதத் தன்மை கொண்ட சமுதாயமாக ஆவதற்கு மிக்க எதிர்நீச்சல் போன்ற கஷ்டமானதும் _- தன்னலத்தை வெறுத்ததுமான தொண்டு செய்ய வேண்டியது மிக அவசியமாகுமென்பதல்லாமல், இந்தச் சமயம் மிகவும் அவசரமானது என்போம். அதற்கு முக்கியமான -_ இன்றியமையாத ஆயுதம் பத்திரிகையாகும்.
அதை உத்தேசித்தே இந்தக் காரியத்திற்கும்-கூட நமக்குள் இருக்கும் பலவித வேற்றுமை, உதவியற்ற தன்மை, நிதியற்ற நிலை, வேறு பல தடைகள், கஷ்ட நட்டங்கள் ஆகியவைகளைக் கூட இலட்சியம் செய்யாமல் _- ‘விடுதலை’யைத் துவக்கி விட்டோம். பெரிதும் பாமர, பொது மக்களையும் இளைஞர்களையும் நம்பியே இதில் இறங்கி இருக்கின்றோம். இது நீடித்து நடந்தாலும் சரி, அல்லது முன்பே சில நாள்களில் ஒழிந்தாலும் சரி; நம் கடமையைக் கருதியும் இச்சில செல்வர், அறிஞர்கள் ஆதரவு கிடைக்கலாம் என்கின்ற நம்பிக்கையுடனும் இறங்கிவிட்டோம். இச்சமயம் நம் எதிரிகளின் ஏகபோக ஆதிக்கத்தில் அரசியலும் இருக்கும்-படியான சமயமாகும்.

அதனால், அவர்கள் ‘விடுதலை’ எப்போது வேண்டுமானாலும் -_ என்ன வேண்டுமானாலும் செய்துவிடக் கூடும் என்றாலும், நமக்குள்ள ஆசை – நமது முக்கிய கடமை – நம் மக்களிடம் உள்ள நம்பிக்கை – நம் இளைஞர்கள், நம் மாணவர்கள், நம் தாய்மார்கள் நமக்கு ஊட்டிவரும் ஊக்கம், உள நம்பிக்கை, ஒத்துழைப்பைத் தருவதாய்க் காட்டும் அறிகுறி, அவர்களது வாக்குச் சுத்தம் ஆகியவைகளைக் கொண்டும் தொடங்கி விட்டோம்! இதே தொண்டில் இதற்குமுன் இரண்டு மூன்று முறை முயன்று தோல்வி-யுற்றாலும் அதைப்பற்றிச் சிந்தியாமல், மறுமுறையும் துணிந்து இறங்கி விட்டோம். ஆகவே தோழர்களே! தாய்மார்களே! செல்வர்களே! அறிஞர்களே! இளைஞர்களே! மாணவர்களே! இனி உங்கள் கடமை என்ன?
(‘விடுதலை’ – 6.6.1946)


பெரியார் பேசுகிறார்! பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?


2023 பெரியார் மார்ச் 1-15,2023

தந்தை பெரியார்

நம் பெண்மக்கள்பற்றிப் பெண் மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களது கணவர் என்பவர்களுக்குமாகச் சிறிது பேச அவா கொள்ளுகிறேன். எல்லாத் துறையிலும் எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்ற, நம் சமுதாயத்தைப் போன்ற தாழ்த்தப்பட்ட, அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் விமோசனம் இல்லை; ஆகையால், பெண்கள்பற்றிப் பேசுகிறேன்.

நம் பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல் மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பு உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன். நாமும் அவர்களைச் சிசு, குழந்தைப் பருவ முதல் ஓடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்துப் பலவிதத்திலும் பேத உணர்ச்சியே அற்று ஒன்று போலவே கருதி நடத்துகிறோம்; பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும் பக்குவமும் அடைந்தவுடன். அவர்களைப்பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, மனித சமுதாயத்தில் வேறாக்கி, கடைசியாக ஒரு பொம்மையாக்கிப் பயனற்ற ஜீவனாக மாத்திரமல்லாமல் அதைப் பெற்றோருக்கு ஒரு தொல்லையான பண்டமாக ஆக்கிக் கொண்டு, அவர்களது வாழ்வில் அவர்களை அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாய்ச் செய்துகொண்டு அவர்களைக் காப்பாற்றவும் திருப்திப்படுத்தவும், அலங்காரப்படுத்தி, திருப்தியும் பெருமையும் அடையச் செய்ய வேண்டியதான ஓர் அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.

பெண்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள். எங்கு கெட்டபேர் வந்து விடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு? ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும் ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஓர் உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி, ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஓர் ஆணின் கண் அழகிற்கும், மனப்புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய, அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்_ பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி,பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்’ என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா? என்று பாருங்கள். இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே, ஆண்கள், பெண்களை இவ்வளவு அட்டூழியமாய் நடத்தலாமா? என்று கேட்கிறேன். ஓர் ஆண்-ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே, எதனால்? துணியாலும் நகையாலும்தானே’ பெரிதும் கம்பி இல்லாத தந்தியும், ரேடியோவும், அணுகுண்டும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலும் பெண்கள் அலங்காரப் பொம்மைகளாக இருப்பதா? என்று கேட்கிறேன்.

நான் சொல்லுவது இங்குள்ள பல ஆண்களுக்கும், ஏன் பெண்களுக்குக் கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாதபடியாய்த் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழை அடித்துப் பாடம் மந்திரம் போடுவதாலும், பூச்சுப் பூசி பத்துப் போடுவதாலும் விலகக்கூடிய வியாதி அல்ல. இது கூர்மையான ஆயுதத்தால் ஆழம்பட அறுத்துக் கிளறி காரம் (எரிச்சல்) மருந்து போட்டுப் போக்கடிக்க வேண்டிய வியாதி. அழுத்திப் பிடித்து, கண்டித்து, அதட்டி, அறுத்துத் தீர வேண்டியதாகும். நான் வெறும் அலங்காரப் பேச்சைத் தொண்டாகக் கொண்டவனல்ல. அவசியப்பட்ட வேலை நடக்கவேண்டும். என் ஆயுளும் இனி மிக மிகச் சொற்பம். இதையாவது செய்தாக வேண்டும். ஆதலால், கோபிக்காமல், ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள்.

நம் பெண்கள் உலகம் பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப்போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள் நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்குப் படித்த பெண், படிக்காத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் கணவன்மார்களும் அவர்களது (பெண்களை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள், பெருமை அடைகிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும், துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பதுமையாக்கி விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
பெண்கள் பெருமை, வருணனை ஆகியவற்றில் பெண்கள் அங்கம், அவயவங்கள், சாயல் ஆகியவற்றைப்பற்றி அய்ம்பது வரி இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமைபற்றி ஒரு அய்ந்துவரிகூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறாள் என்று சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.

பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாது ஏன் என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டாளா? பெண்களை அனுபவிக்கிறவன், அவர்களிடம் வேலை வாங்கிப் பயன் அடைகிறவன் காப்பாற்ற மாட்டானா என்பதுதான். அதற்கேற்ற நகை, துணி ஆகியவையே போதும்.

அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன்? என்று எந்தப் பெண்ணாவது, பெற்றோராவது “கட்டின”வராவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக்கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தம்மீது திருப்புவது இழிவு என்றும், அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் அவர்கள் ‘போகப் பொருள்’ என்ற கருத்தேயாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது.

­ ­ ­‘‘பெண்களைப் படிக்கவைப்பது வீண் பணச்செலவு, நாட்டு வரிப்பணத்தின் ‘வீண்’ என்று ஒரு சமயத்தில் ஈரோட்டில் மணியம்மை” சொன்னதுபோல் உண்மையில் பெரிதும் வீணாகவே ஆகிறது. கோபிக்காதீர்கள்; இந்தக் கீழ் உதாரணத்தைக் கொண்டு ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது ஒரு குடும்ப வாழ்க்கைப் பெண்ணுக்கு அவள் தாய், தகப்பன் பாட்டு, பிடில், வீணை, நாட்டியம் ஆகியவை கற்றுக்கொடுத்து. அவற்றில் வெற்றியாய்த் தேற வைத்தான் என்று வைத்துக்கொள்ளுங்கள். (பலர் இதை இன்னும் செய்கிறார்கள்). அவளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்த பின்பு_ அதாவது திருமணம் ஆன பின்பு_ அந்தப் பாட்டு, பிடில், வீணை யாருக்கு என்ன பயன் கொடுக்கிறது? என்று கேட்கிறேன்.

புகுந்த வீட்டில் சங்கீதம் பாடினால், “இது என்ன குடித்தன வீடா? வேறு வீடா?” என்று மாமி கேட்பாள். பிடில், வீணை தூசி அடையும்.
ஆகவே, இந்தப் படிப்பு நல்ல மாப்பிள்ளை சம்பாதிக்க ஒரு அட்வர்டைஸ்மெண்ட்டாகப் (விளம்பரம்) பயன்பட்டது. தவிர, மற்றபடி வீணாகப் போய்விட்டதல்லவா? செலவும் கண்டதுதானே என்கிறேன். அதுபோல் ஒரு பெண்ணை ஒரு தாய் தகப்பன் பி.ஏ. படிக்க வைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை, துணி அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால் பி.ஏ. படிக்கவைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காகச் சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப்பணமும் வீண்தானே? இது தேசியக் குற்றமாகாதா?

இந்தத் துறையில், எந்த அறிஞர் சீர்திருத்தவாதியும் கவலை செலுத்தாமல், எவராலும் இனப்பெருக்கத்திற்கே பெண்கள் ஆளாக்கப்பட்டு விட்டார்கள்.
­ ­ ­
ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும் ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்ய முடியும்; உறுதியாய் முடியும் என்பேன். ஆனால், நகைப் பைத்தியம் துணி அலங்காரப் பைத்தியம் அணிந்துகொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை இழிவு, சுயமரியாதை அற்ற தன்மைப் பைத்தியம் ஒழிய வேண்டும்.
­ ­ ­
எனவே, பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல், ஆண் என்றே அழைக்கவேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப்போலக் கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா, பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் கீர்த்தி, புகழ்பெறும் பெண்மணியாக்க வேண்டும். பெண்ணும் தன்னைப் பெண் இனம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாகவே நடக்கக்கூடாது. ஒவ்வொரு பெண்ணும் நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு – தாழ்வு? என்ற எண்ணம் எழ வேண்டும். ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆகப்படாது; அவர்கள் புது உலகைச் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து, இந்தப்படி பேசுகின்ற தன்மையும் இதற்குத்தான்.

15.09.1946 அன்று திருப்பத்தூரில் (வடஆர்க்காடு மாவட்டம்) நடைபெற்ற சம்பத் -_ சுலோச்சனா மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை – ‘குடி அரசு’ – 21.09.1946
­ ­ ­

இந்தியப் பெண்கள் கல்வி, சொத்து, திருமண வாழ்க்கை ஆகிய எந்தத் துறையிலும் சுயேச்சையில்லாதவர்களாயிருக்கின்றனர். நவீன நாகரிகம் என்றால், பிரிட்டிஷ் பெண்களைப் போலவும், அமெரிக்க சிங்காரிகளைப் போலவும் உடை உடுத்துவதும், அலங்கரித்துக் கொள்வதும்தான் எனக் கருதியிருக்கிறார்களே தவிர, இரஷ்யப் பெண்களைப்போலவும், துருக்கிப் பெண்களைப்போலவும், போலீஸ், இராணுவம், விமானம் ஓட்டுதல் போன்ற காரியங்களையும் ஆண்களைப் போலவே செய்ய வேண்டும் என்ற நினைப்பே நமது படித்த பெண்களுக்குக்கூட இருப்பதில்லை.

தற்காலப் படிப்பு ஆண்களை எப்படித் தொடை நடுங்கிகளாகவும்,வெறும் புத்தகப் பூச்சிகளாகவும் ஆக்கிவிட்டதோ, அதைப்போலவே நம் பெண்மக்களையும் வெறும் அலங்காரப் பொம்மைகளாகவும், புல் தடுக்கிகளாகவும் ஆக்கிவிட்டது.
உயர் படிப்புப் படித்துப் பட்டமும் பெற்ற பெண்கள், “ஆண்டாள் அன்பு” பற்றியும், “காரைக்காலம்மையாரின் சிவ பக்தி” பற்றியும் பேசிப் பொழுது போக்குகிறார்களென்றால், நம் பெண்களுக்கு நவீன மேல் நாட்டுக் கல்விகூட ஒருவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லையென்பது கண்கூடு.

நம்முடைய ஆட்சிமுறையில் அடிப்படையான, புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டாலொழிய, இந்தியப் பெண்களைச் சுயேச்சையுள்ள ஜீவன்களாக ஆக்குவது முடியாத காரியமேயாகும்.இந்நாட்டிலும் போலீஸ் வேலை செய்யும் துணிவும், திறமையும், ஆசையும் உள்ள பெண்கள் ஆயிரக்கணக்கிலிருக்கின்றனர். பெண்கள் படிப்பதே பெரிய அதிசயமாகவும், சைக்கிள் விடுவதை வேடிக்கையாகவும் கருதப்
பட்டதுபோலவே, போலீஸ் உத்தியோகமும் சில ஆண்டுகள்வரையில் அதிசயமாகத் தோன்றலாம். பிறகு, நாளடைவில் அதுவும் இயற்கைக் காட்சியாகவே போய்விடும்.எனவே, பெண்கள் முன்னேற்றத் துறையில் இரஷ்யா, துருக்கி போன்ற பெண் இனப்புரட்சி நாடுகளை இந்தியா பின்பற்றினாலொழிய, நம் பெண்கள் என்ன கல்வி கற்றாலும், எவ்வளவு சொத்துரிமை பெற்றாலும், வெறும், “நகை பீரோவாகவும்” “உடை ஸ்டாண்டாகவும்” தான் இருப்பார்கள். பெண் உலகில் தலைகீழான புரட்சி ஏற்படக்கூடிய முறைகள் நமக்குத் தேவை. அதுவரையில் திரவுபதையைப் பற்றியும், சீதையைப்பற்றியும் பேசியும் எழுதியும் வருகின்ற ஆமைத் தன்மைதான் இருக்கும். “பெரோவிஸ்காயா” போன்ற இரஷ்ய வீரப்பெண்கள் நம் நாட்டில் தோன்றவே முடியாது. நளாயினிகள் போன்ற தன்மானமற்ற அடிமைகள்தான் தோன்ற முடியும்.

 

– ‘விடுதலை’ தலையங்கம், 18.11.1946

நமக்கு வேண்டியது சமூக சீர்திருத்தமும் சுயமரியாதையுமே – தந்தை பெரியார்


ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

புண்ணிய ஸ்தலம் – ஜகநாதம்


வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

மதப் பித்தும் மனிதாபிமானமும் – தந்தை பெரியார்



விடுதலை நாளேடு,
Published January 21, 2024

இந்து மதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங்களையும் சுயநலக் கொள்கைக ளையும் கற்பனை செய்து அவற்றைப் பாமர மக்கள் நம்பும்படி பல மிரட்டுதலான நிபந் தனைகளை ஏற்பாடு செய்து அவைகள் நிலைப்பதற்குத் தகுந்த தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும் அதை அறியாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும் வைணவ மென்றும் அர்த்தமற்ற சில கடவுள்களின் பேரால் சமயங்கள் என்பதாக வகுத்துக் கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர்கள் உடைய பல கடவுள்கள் இருப்ப தாகவும் அவர்கள் பல ரூபங்களாகவும், பல அவதாரங் களாகவும் இருப்பதாகவும், அவற்றை வணங்குவதும், துதிபாடுவதுமே சைவ, வைணவ கொள்கையென்றும் வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச் சிக்கு இடம் கொடுத்து வரப்படுகின்றது என்றும் நாம் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றோம். இதுவரையில் நம் நாட்டில் இதைப்பற்றித் தக்க காரணம் காட்டி மறுத்தோ அல்லது சமாதானமோ யோக்கியமான வழி யில் சொல்லவோ எழுதவோ இல்லை.

ஆனால் குருட்டு நம்பிக்கையிலும் மூட வழக்கங்களிலும் பலமாக கட்டுப் பட்ட சிலரும், மதத்தின் பேராலும் சமயத்தின் பேராலுமே தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொண்ட சிலரும் கொஞ்சமாவது தங்கள் பகுத் தறிவை உபயோ கிக்காமலும் பொது ஜனங்க ளுக்கு என்ன சமாதானம் சொல்லுவது, எப்படி மெய்ப்பிப்பது என்பதைப் பற்றி கவலைப்படா மலும் பார்ப்பனர்கள் தங்கள் கற்பனைப் புரட்டு களை நிலைநிறுத்த ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதான நாஸ்திக மாச்சுது மதம் போச்சுது கலிகாலத்தின் கொடுமை என்கின்ற யோக்கிய மற்றதும், வஞ்சகமும், கொடுமையும் நிறைந்ததுமான ஆயுதங்களை உபயோகித்து ஏமாற்றப் பார்க்கின்றார்களே ஒழிய ஒரு வழியி லாவது சரிப்பட்டு வருகின்றதில்லை. சமீபகால மாக சில சைவர்கள் என்போர்கள் நம்மைப் பற்றி காணாத இடங்களில் சைவத்திற்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது எல்லோரும் உஷார் உஷார் என்பதும் ஏதாவது அர்த்தமற்றதும் பாமரர்களுள் ஏமாறத்தக்கது மான வார்த்தை களை அடுக்கித் துண்டு விளம்பரங்கள் போடு வதும் அதை சில வயிற்றுப் பிழைப்பு பத்திரி கைகளும் தனக்கென யாதொரு கொள்கையு மற்ற சமயம் போல் நடந்து உயிர் வாழ்வையே முக்கியப் பிழைப்பாய்க் கொண்டிருக்கும் பத்திரிகைகளும் ஆசாமிகளும் நாயக்கர் பிரச் சாரம், என்று விஷமத் தலைப்பின்கீழ் எடுத்துப் போடுவதும் மற்றும் தாங்களே தங்கள் பேரால் எழுதுவதற்குத் தைரியமற்று ஏதோ பல அனாம தேயங்களின் பேரால் நாயக்கர் மதத்தை அழிக் கப் பார்க்கின்றார், நாஸ்திகத்தை பிரசாரம் செய்கின்றார் என்கின்ற மாதிரி எழு துவதுமான காரியங்கள் நடந்து வருகின்றது.

நிற்க, சிவனைப் பற்றியும் சிவனைக் கட வுளாகக் கொண்ட சைவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் அதில் உள்ள புரட்டுகளைப் பற்றியும் அதுபோலவே விஷ் ணுவைப் பற்றியும் விஷ்ணுவைக் கடவுளாகக் கொண்ட வைணவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் நாம் குறிப்பிடும் விஷயங்களைப் பற்றி மததூஷணை தெய்வ நிந்தனை என்று பேசிவிட்டு எழுதிவிட்டு தங்கள் தங்கள் சமயத்தைப் பற்றி பேசும்போதும் அதைப் பெருமைப்படுத்தி நினைக்கும் போதும் சைவன் வைஷ்ண வத்தையும் விஷ் ணுவையும், வைணவன் சைவத்தையும் சிவ னையும் எவ்வளவு தூரம் இகழ்ந்தும், இழி வாயும் ஆபாசமாயும் வேதத்தின் பேராலும் உபநிடதத்தின் பேராலும் புராணங்களின் பேராலும் எழுதியும் பேசியும் வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போமானால் இதுவரை நாம் பேசியும் எழுதியும் வந்தது அவற்றில் பதினாயி ரத்தில் ஒருபங்குகூட இருக்காது என்றே சொல்லுவோம். உதாரணமாக, சிவ பராக்கிரமம் என்னும் புத்தகமும், கூரேச விஜயம் என்னும் புத்தகமும், ராமாயணம், பாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், கந்த புராணம், பெரியபுரா ணம், திருவிளையாடல் புராணம், அருணாசல புராணம், விநாயக புராணம் என்னும் சமய புராணங்களும் ஆகிய வைகளை நடுநிலையில் இருந்து படித்துப்பார்ப்பவர்களுக்கு இதன் உண்மைகள் விளங்காமல் போகாது. நாம் சொல்வதும் எழுதுவதும் ஒவ்வொன்றும் மேற் கண்ட சமய ஆதாரங்களாகி பல புத்தகத்தில் சிவன் சொன்னதாகவும், விஷ்ணு சொன்னதா கவும், பிரம்மா சொன்னதாகவும், முனி சொன்ன தாகவும் ரிஷி சொன்னதாகவும் உள்ள விஷ யங்களையே குறிப்பு காட்டி எழுதியும் சொல்லி யும் வருகின்றதோடல்லாமல் நம்மை எதிர்க்கும் சில புரட்டர்கள் சொல்வதுபோல் அதற்கு இதல்ல அருத்தம் இது சையன்சுக்குப் பொருத் தம் இது படியாத முட்டாளின் கருத்து இது குண்டர் களின் வேலை ஆராய்ச்சியில்லாத வர்களின் கூற்று என்பதான அயோக்கியத் தனமும், போக்கிரித்தனமும், பேடித்தனமும், இழிதகைமையும் பொருந்தியதான சமாதானங் களை ஒருபோதும் சொல்ல முன் வருவதே இல்லை.

அன்றியும் நாம் சொல்லும் விஷயங்களைச் சமயத்தைக் காக்க வந்ததாகச் சொல்லிக் கொள் ளும் வைணவ சைவ பக்தர்கள் சொல்லுவதையும் எடுத்து இரண்டொரு உதாரணங்கள் காட்டுவோம்.

தற்சமயம் நமது பிரசாரத்தைப் பற்றி வைணவர் களைவிட சைவர்களுக்குத் தான் அதிக ஆத்திரமாக இருக்கின்றது. அவர்களுக் குத்தான் எங்கு அவர்கள் சைவசமயம் போய் விடுமோ என்கின்ற பயம் அதிகமாய்ப் பிடித்து ஆட்டி மதம் போச்சு மதம் போச்சு என்கின்ற பொய்யழுகை அழுகின்றார்கள். அவர்கள் தான் நாம் மிகுதியும் சமய நிந்தனை செய்வதாக கூப்பாடு போடுகின்றார்கள். வைணவர்களில் பெரும்பான்மையோர் இதைப் பற்றி அதிக கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. ஒரு சமயம் நம்மை எதிர்க்கத்தக்க ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் இப்போது வெளிப் படையாய் ஒன்றையும் காணோம்.. சமீபத்தில் வைணவன் என்கின்ற ஒரு பத் திரிகை நம்மைப் பற்றி குற்றம் சொல்லப் புறப்படுகையில் ராமா யணத்தைப் பற்றி நாம் எழுதியவைகளில் தனக் குச் சற்று மனத்தாங்கல் இருப்பதை மாத்திரம் காட்டிக் கொண்டதே ஒழிய அது சரியா தப்பா அல்லது பொய்யா என்பதைப்பற்றி ஒரு வார்த் தையும் சொல்ல முன்வர (இஷ்டமில்லையோ அல்லது தனக்குச் சக்தி இல்லையோ) வில்லை. ஆனால் கடைசியாக அப்பத்திரிகை சொன்ன சமாதானம் என்னவென்றால் இராமாயணத்தைக் காட் டிலும், பன்மடங்கு ஆபாசமான நூல்கள் பல இருக்கின்றன என்றும், இராம னைக் காட்டிலும் ஆபாசமான நடை உடைய கடவுளர் பல இருக்கிறார்கள். அவ்வாபாசங் களைக் குறித்து இவ்வாராய்ச்சிக்காரர் ஒரு வார்த்தை யேனும் கூற முன்வரவில்லை. இராமாயணம் மட்டும் இவர்கள் கண்களில் உறுத்திக் கொண்டிருக்க காரணம் என்ன என்று கேட்டு இருக்கிறாரே ஒழிய மற்றபடி ஒரு மறுப்பும் சமாதானமும் காணவில்லை. அதற்கு நாம் அவருக்குச் சொல்லும் பதில் மற்ற நூல் களுடையவும், கடவுள்களுடையவும் ஆபா சங்கள் அதனதன் முறையில் தானாக வெளி வரும். இதிகாசங்கள் என்கின்ற தலைப்பு இரா மாயணத்திற்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. வரிசைக் கிரமமாய் எல்லா ஆபாசங்களுக்கும் ஏற் பட்டது என்பதும் இராமா யணத்தை முதலில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் அதை பார்ப்பனர்கள் அதிகமாக நமது மக்களின் தலையில் சுமத்தி தினமும் அதற்காக அனேக நேரமும், பொருளும் செலவாவதும் அதனால் பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதும் அதிகமா யிருப்பதினால் அதை முதலில் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுந்தான்.

சைவர்களின் மதப்பிரசாரத்தைப் பற்றியும் சிலவார்த்தை சொல்லுவோம்.

நாம் நாட்டுக்கோட்டை நகரத்திற்குப் போய்வந்த பிறகு அங்குள்ள சில நேயர்கள் ஒன்றுகூடி அவர்களுடைய சைவசமயத்திற்கு நம்மால் பெரிய ஆபத்து வந்துவிட்டதாகவும் உடனே அதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால் சைவ சமயமே முழுகிப் போகும் என்றும் கருதி பல ஆயிர ரூபாய்கள் ஒதுக்கி வைத்து சிவநேசன் என்பதான ஒரு பத்திரிகை ஆரம்பித் தார்கள். அப்பத்திரி கையை இந்து மதத்தைக் காப்பாற்ற புறப்பட்ட தாகச் சொல்லி மக்களிடையே பரப்பினார்கள். அதன் முதலாவது ஆண்டு பதினாலா வது மலர் அனுபந் தத்தில் கோபிசந்தனம் என்னும் தலைப்பில் ஒரு சைவ சித்தாந்த செல்வர் எழுதுவதாவது:
தேவர்கள் முதலிய யாவரும் விபூதியை தரித்து மோட்சமடைய வேண்டும் என்னும் கருத்தினாலேயே கடவுள் மனிதனின் நெற் றியை குறுக்காகவே படைத்திருப்பதை யாவ ரும் காணலாம்.

இதற்கு ஆதாரம் கூர்ம புராணத்தில் சொல் லியிருப்பதானது ஸ்ருஷ்டா ஸ்ருஷ்டி சலே ராஹர்தி புண்டசஸ்ய ரசஸ்த தாம, ஸஸர் ஜசலலாடம் ஹித்ரியக் கோர்த்துவம், நகர்த் துலம் ததாபி மாவை மூர்க்கா நகுர்வந்தித்ரி புண்டாரகம்.
அதாவது பிரம்மா சிருஷ்டி தொடங்கும் போதே விபூதி மகிமை கூறி அதனை அணிந்து உய்வதற்காகவே சர்வசனங்களின் நெற்றி களையும் குறுக்கே ஆகிர்தியாகப் படைத்தனர். நெடுமையாகவேனும் வட்டமாக வேனும் படைத் திலர், அப்படியிருக்க சிலர் அவ்விபூதி திரிபுண்டா மணியாமல் தீவினை வயப்பட்டு உழலுகிறார்கள் என்று விளங்குதலால் அறிய லாம் என்கிறார்.

இனி கோபி சந்தனத்தைப்பற்றி வாசுதேவ உபநிஷத்தில் வாசுதேவன் மகன் அதாவது கிருஷ்ணன் கூறுவதாவது.

கிருஷ்ணன் கோபிகா ஸ்தீரிகளை தழுவிக் கலந்த போது அப்பெண்களின் ஸ்தனங்களி லிருந்தும் கிருஷ்ணன் மேனியில் ஒட்டியபின் அவர்கள் கழுவுவதால் வழிந்தோடிய சந்தனமே கோபி சந்தனமென்று கூறப்படு கிறது. அப்பெயராலேயே அவ்வுண்மை விளங்கும் என எழுதியிருக்கிறார்.
எனவே சைவர்கள் பூசும் விபூதியாக குண்டத்தில் இருந்து வந்ததென்றும், வைணவர்கள் பூசும் கோபிசந்தனம் என்னும் நாமம் கிருஷ்ணன் கோபிகளைப் புணர்ந்த பிற்பாடு கழுவிய தண்ணீரென்றும் கருத்தை வைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையோ பொய்யோ என்று நாம் விசாரிக்க நாம் நேரம் செலவழிக்கவில்லை. ஏனெனில் அவர் சொல் வது இன்ன இன்ன சாஸ்திரத்தில் இருக்கின்றது என்பதாக அவரே எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆதலால் அதைப்பற்றி அதிகமாய் சந்தேகிக்க வும் வேண்டியதில்லை. ஆனால் ஒன்று நமக் குத் தெரிய வேண்டும். அதாவது:- கிருஷ்ண னும் கோபிகளும் கலந்தபின் கழுவினது தான் வைணவர் நெற்றியில் வைக்கும் கோபி நாமம் என்று இந்து மத ஆதாரங்களில் இருந்து சைவர்கள் எடுத்துக் காட்டுவது, சைவர்களுக்கு இந்துமத தூஷணையும், வைணவ சமய தூஷ ணையும் அல்லவென்று தோன்றும்போதும் ஆண் குறியும், பெண்குறியும் சேர்ந்தபோது அறுந்து விழுந்ததின் தத்துவம் தான் லிங்கமும், ஆவுடையாரும் என்றும், அதைத்தான் சைவர் கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும், வைணவர்கள் சொல்லி இந்து மத ஆதாரங் களில் இருந்தே மேற்கோள்கள் எடுத்துக்காட்டு வது இந்து மத தூஷணையும், சைவசமய தூஷ ணையும் அல்லவென்று வைணவர்களுக்குத் தோன்றும்போது நாம் இவ்விரண் டையும் திரட்டி எடுத்துக் காட்டும்போது மாத்திரம் நம் மையேன் இவர்கள் இந்துமத தூஷணை, சமய தூஷணை நாஸ்திகம் என்று சொல்லுகின் றார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.

தவிர மதப்பித்துக் கொண்ட பெயர்களைப் பற்றியோ வயிற்றுப் பிழைப்புக்கும் கூலிக்கும் பிரச்சாரம் செய்யக் கிளம்பும் மனிதாபிமானி களைப் பற்றியோ நாம் ஒரு சிறிதும் கவலைப் படவில்லை.

ஆனால், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும் பண்டிதர் களென்றும் வித்துவான்கள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு சமய வேஷமும் போட்டுக் கொண்டு சமய வரலாற்றுக்கும் சமய நூல்களுக்கும் தங்களையே நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை மாத்திரம் ஒன்று கேட்கிறோம். நாம் எழுதுவதும் பேசுவ தும் நம்முடைய கற்பனையா? அல்லது இந்து மத ஆதா ரங்கள் என்பவைகளில் உள்ளவைகளா? உள்ளவை களானால் அதற்கு என்ன சமாதானம் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம். தக்க சமாதானம் சொல்ல முன்வராமல் சூழ்ச்சிப் பிரச்சாரமும் பேடிப் பிரசாரமும் செய் யாதீர்கள். நபரைக் குறித்து ஆத்திரப்படாதீர்கள்.
உங்களைப் போல் பல கற்றறிந்த மூடர்கள் சேர்ந்துதான் பார்ப்பனர்களுக்கு உதவி செய்து நாட்டைப் பார்ப்பனர் களுக்கு அடிமையாக்கி, மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி அறி வற்ற மிருகங்களாக்கி விட்டார்கள். இதுவரை செய்ததே போதும். இனியாவது உங்கள் ஆராய்ச்சி என்பதையும், சமய நிபுணத்துவம் என்பதையும், புதிது புதிதாகக் கண்டுபிடித்தல் என்பதையும் மக்களின் மனிதத் தன்மைக்கும், தன்னம்பிக்கைக்கும், சுயரிமரியாதைக்கும். அறிவு வளர்ச்சிக்கும் பயன்படும்படி செய்யுங் கள். முடியா விட்டால் சப்தத்திற்கும், எழுத்துக்கும், வார்த்தைக்கும் இலக்கணம் சொல்லும் வேலையில் உங்கள் வாழ்வை நடத்திக் கொள்ளுங்கள். சமயம் என்கிற வேலையில் புகுந்து மக்களைப் பாழ்படுத்தாதீர்கள். முட்டாள்கள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம்.

– ‘குடிஅரசு’ – கட்டுரை – 15.04.1928

ராமராஜ்ஜியம்” எப்படி இருக்கும்?

விடுதலை நாளேடு,
Published January 28, 2024

– தந்தை பெரியார்

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சென்னை லயோலா காலேஜ் மாணவர்களுக்காக நிகழ்த்திய சொற்பெருக்கொன்றில் “எனக்கு அதிகாரம் வந்தால் – நான் சர்வாதிகாரியானால் சமஸ்கிருத பாஷையை இந்தியர்கள் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்று, சட்டம் செய்வேன்” என்று கூறி இருப்பதோடு சீக்கிரம் ராமராஜ்ஜியத்தையும் ஏற்படுத்திவிடுவேன் என்பது பொருளாகப் பேசியிருந்ததை சுதேச மித்திரனில் உள்ளபடி ஜூலை 30ஆம் தேதி குடிஅரசில் எடுத்து எழுதி அதைப்பற்றிய நமது கருத்தையும் வெளியிட்டிருந்தோம். அதன் அடுத்த வாரத்தில் (6.8.1939) தோழர் சத்தியமூர்த்தியார் ஸ்தாபிக்க முயற்சிக்கும் ராம ராஜ்ஜியம் என்றால் என்ன? அதன் கால ஒழுக்கம் என்ன? நீதி என்ன? என்பவைகளைப் பற்றியும் எழுதிவிட்டு அத்தலை யங்கத்தின் முடிவில் அவைகளுக்கு ஆதாரமாக வால்மீகி ராமாயணத்தில் உள்ள வாசகங்களைப் பின்னால் எடுத்துக்காட்டுவோம் என்றும் எழுதி இருந்தோம்.

அது பல காரணங்களால் சென்ற வாரம் எழுதத் தவறிவிட்டதால் பல தோழர்கள் எதிர்பார்த்து ஏமாற்ற மடைந்ததாக எழுதி இவ்வாரம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனதுபற்றி சிலவற்றை மாத்திரம் இவ்வாரம் குறிப்பிடுகிறோம்.

ராமன் பிறப்புக்குக் காரணங்கள்

ராமாயண ஆரம்பத்திற்குக் காரணம் காட்டும் போதே ராவணேஸ்வரனால் துன்பமடைந்த தேவர்கள் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்ததாகவும், மகாவிஷ்ணு அத்தவத்திற்கு இரங்கி, தான் தசரத ராஜனுக்கு மகனாகப் பிறந்து ராவணனைக் கொன்று பதினோராயிரம் வருஷம் அரசாண்டுவிட்டு, பிறகு தேவலோகத்திற்கு வருவதாக வாக்களித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.

மகாவிஷ்ணு அவதாரமெடுத்தற்குக் காரணம் ராவணனைக் கொல்வதற்கு மாத்திரம்தான் என்று இருக்குமானால் ராவணனை ஏன் கொல்லவேண்டும்? ராவணன் என்ன குற்றம் செய்தான்? என்பவைகளைப் பற்றி முதலில் ஆராயவேண்டியது நியாயமாகத் தோன்றலாம். ஆனால், மகாவிஷ்ணு ராமனாகப் பிறப்பதற்குக் காரணம் மற்றொன்று கூறப்பட்டிருக்கிறது. அதுதான் ராமாயண ஒழுக்கத்திற்குப் பொன்மதில் அரண் என்று சொல்லத்தக்கதாக இருக்கிறது.
அது என்னவெனில், மகாவிஷ்ணுவானவர் ஒருகாலத்தில் பிருகு மகரிஷியின் பத்தினியைக் கொன்று விட்டாராம். அதற்காக அந்த ரிஷி கோபித்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கி, “நீ என் மனைவியைக் கொன்றுவிட்ட கொலை பாதகனானதால் நீ ஒரு மனிதனாகப் பிறந்து உன் மனைவியை இழந்து சீரழிய வேண்டியது” என்று சபித்து விட்டாராம். அதனால் விஷ்ணு ராமனாகப் பிறந்து தனது மனைவியை இழந்து துன்பப்பட்டாராம். இது வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 51ஆம் சருக்கத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு மனிதனாகப் பிறந்தது மனைவியைப் பறிகொடுத்துத் தவித்ததற்கு ராமாயணத்தைவிடப் பழைமையானதும் முக்கியமானதுமென்று கருதப் படுவதாகிய கந்த புராணத்தில் மற்றொரு காரணம் கூறப்பட்டிருக்கிறது. அது என்னவெனில் மகாவிஷ்ணு வானவர் சலந்தராசுரன் மனைவியாகிய பிருந்தை என்பவள் சற்று அழகுடையவளாக இருந்ததால் அவளை எப்படியாவது சேரவேண்டுமென்று கருதிச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாராம். ஆனால், அவ்வசுரன் இடம் கொடுக்காமல் காவல் இருந்ததால் முடியாமல் போய்க் கடைசியாக அவ்வசுரன் சாகும் படியாக ஆன பின்பு அவ்வசுரனுடைய உடலுக்குள் புகுந்துகொண்டு புருஷன் மாதிரியாகவே இருந்து பிருந்தையை அனுபவித்து வந்தாராம். சில நாட்கள் விஷ்ணுவிடம் அனுபவித்த பின்பே அந்த கற்புக்கரசி யாகிய பிருந்தை இவன் தன் புருஷனல்ல, மகாவிஷ்ணு என்று அறிந்து உடனே மகாவிஷ்ணுவை “ஓ விஷ் ணுவே! நீ என்னை எனது இஷ்டமில்லாமல் ஏமாற்றி வஞ்சித்துப் புணர்ந்துவிட்டதால் உன் மனைவியை ஒருவன் வஞ்சனையால் எடுத்துப் போகக்கடவது” என்று சாபமிட்டாளாம். அச்சாபத்தின் காரணமாய் மனிதராகப் பிறந்து மனைவியை இழந்து துன்பப் பட்டார் என்றும் மேல்படி கந்த புராணம் தக்க காண்டம் 23ஆம் அத்தியாயத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு ராமனாகப் பிறந்த பெருமைக்குக் காரணம் மேற்கண்ட இரண்டு மாத்திரமல்லாமல் 3ஆம் காரணமும் ஒன்று இருக்கிறது.
அதாவது, ஒரு பொல்லாத வேளையில் மகா விஷ்ணு மனித உடம்போடு தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும், அதுசமயம் பிருகு ரிஷி முதலியவர்கள் அவரைக் காணச் சென்றதாகவும், வேறு சிலர் தன்னைப் பார்க்க வந்த சமயத்தில்கூட தான் புணர்ச்சியை விட்டு நீங்காமல் இருந்து கொண்டே அவர்களுடன் பேசியதாகவும், அதற்கு அவர்கள் கோபித்து விஷ்ணுவைப் பார்த்து “ஓ மானம், வெட்கம் இல்லாத விஷ்ணுவே! நீ இம்மாதிரி இழிவான காரியம் செய்ததற்காக நீ உன் மனைவியை இழந்து வருந்தக்கடவை” என்று சபித்ததாகவும் சொல்லப் படுகிறது.
இந்த உண்மை சிவரகசியம் மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 43ஆம் சருக்கத்திலும், அது மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 4ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.

ஆகவே, ராமராஜ்ஜியத்தின் மூலபுருஷரும் கடவுள் அவதாரமாக வந்தவருமான ராமனின் பிறப் புக்கே இம்மாதிரியான காரணங்கள் இருக்குமானால் இந்த இப்படிப்பட்ட ராமனுடைய அல்லது கடவுளி னுடைய ஆட்சி ராஜ்ஜிய பாரம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக்கூற வேண்டுமா என்று கேட்கின்றோம்.

ரிஷி ஜாதிகள் யோக்கியதை

ரிஷிகள் மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் அசுரர்களுடைய மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் எடுத்துக் காட்டப்பட்டதில் இருந்தே ரிஷி ஜாதிகளின் யோக்கியதையும், அசுரர் ஜாதியினுடைய யோக்கி யதையும் நன்றாய்த் தெரிவதோடு கடவுள் ஜாதி களுடைய யோக்கியதையும் பளிங்குபோல் விளங்குகின்றது.
என்னவெனில், ரிஷி பத்தினியை அவள் புருஷ னுக்குத் தெரியாமல் மாத்திரம்தான் கலந்ததாகவும், ஆனால் ரிஷிபத்தினிகள் சம்மதித்து விஷ்ணுவுடன் கலந்து இன்பம் அனுபவித்ததாகவும் விளங்கும்படியாக இருக்கிறது. அசுரர்களு டைய மனைவிகளிடத்தில் அந்த ஜபம் செல்லவில்லை. புருஷன் சாகும்படியாக ஆனபின்பே அதுவும் புருஷன் போல் வேஷம் போட்டு அசுர ஸ்திரீயை ஏமாற்றித்தான் சேர முடிந்ததே ஒழிய மற்றபடி ரிஷி பத்தினிகள் மாதிரி சம்மதம் பெற்றுச் சேர முடியவில்லை. அன்றியும் ரிஷி பத்தினிகள் கற்பழிக் கப்பட்டதற்கு ரிஷிகளால் தான் மகாவிஷ்ணுக்கு சாபம் கொடுக்கப்பட்டதே தவிர, ரிஷி பத்தினியால் சாபம் கொடுக்கமுடியவில்லை. ஆனால், அசுர ஸ்திரீகளோ வென்றால் தாங்களே விஷயம் தெரிந்த உடனே சாபம் கொடுத்து தண்டிக்கத் தக்க சக்தி உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அன்றியும் கடவுள்ஜாதி ஸ்திரீயான திருமகள் அந்நிய புருஷர்கள் வந்து பார்க்கும்போதுகூட கலவி யில் இருந்து நீங்காமல் கலவிசெய்துகொண்டே இருக்கச் சம்மதித்து இருந் தாள் என்றால் அவர்களது தைரியத்தை மெச்ச வேண் டியதென்றாலும் அந்த ஜாதி எவ்வளவு இழிவுக்கும் சம் பந்தப்படக்கூடியது என்பது விளங்காமல் போகாது.

இந்த உண்மைகள் இயற்கைக்கு மாறானவை என்றாலும் எப்படியோ இருக்கட்டும் நடந்தததா இல்லையா என்பதைப் பற்றி இப்போது நாம் விவகரிக்க வரவில்லை.
பொதுவாகவே இராமா யணம் மாத்திரமல்லாமல் மற்றும் அதுபோன்ற – கடவுள் சம்பந்தமான சைவ, வைணவ புராணங்கள் பொய்யென்றும், அறிவுக்குப் பொருத்தமில்லாத இழிவான ஒழுக்க ஈனமான விஷ யங்கள் கொண்ட காட்டு மிராண்டிக் காலத்து கட்டுக் கதைகள் என்றும் சொல்லி வருகிறோம். ஆனதால் அவற்றின் உண்மையைப் பற்றியும் வாதாட விரும்ப வில்லை.

ஆனால், தோழர் சத்தியமூர்த்தியார் இப்படிப் பட்ட கதையில் உள்ள இப்படிப்பட்ட சம்பவங்களில் சிக்குண்டவனாகக் காட்டப்பட்டுள்ள ஒரு பாத்திர மாகிய ராமன் என்பவனுடைய பெயரால் இருந்து வரும் கதையில் உள்ள ஒழுக்கங்களையும், நீதி களையும் கொண்ட ஒரு ராஜ்ஜிய பாரத்தை – ராஜ நீதியை இந்தியர்களுக்கு என்பதில் வடநாட்டாருக்குச் சொல்வதைப் பற்றி நமக்கு இப்போது கவலை இல்லை. தென்னாட்டாருக்கு – திராவிடர்களுக்கு – தமிழ் நாட்ட வருக்கு – தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்போவதாகக் கூறுவதும் அதற்காகவே இந்தியையும் – சமஸ் கிருதத்தையும் தமிழ் மக்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்துவதும் இந்தக் காரியத்திற்காகவே தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இந்திய அரசாட்சிக்கு சர்வாதிகாரியாக ஆகவேண்டும் என்றும் ஆசைப் படுவதாகச் சொல்வதுமாயிருந்தால் அதைத் தமிழ் மக்கள் எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும் என்பதற்காகத்தான் இதை எழுதுகிறோம்.
ஆரியர் வேறு தமிழர் வேறு என்பதற்கும்; ஆரியநாடு வேறு தமிழ்நாடு வேறு என்பதற்கும் இந்த புராண இதிகாசக் கலைகளே போதாதா என்று கேட்கின்றோம்.
இந்தியாவென்பது எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு தேசத்தையோ, ஒரு நாட்டையோ குறிப்பிடும் பெயராகாது என்று முன்னம் பல முறை எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். குறிப்பாக இந்த நாட்டுக்குப் பரத கண்டம் என்றோ, பாரததேசம் என்றோ, பாரதத்தாய் என்றோ சொல்லுவது சிறிதும் பொருத்தமற்றது என்பதோடு ஒரு தமிழ் மகன் வாயில் தமிழ் நாட்டைப் பாரதநாடு அல்லது பாரததேசம் என்று சொல்லப் படுமானால், “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் அய்யப்படும்” என்ற திருவள்ளுவரின் திருவாக்குப்படி அப்படிப்பட்டவரது குலத்தைப்பற்றிச் சந்தேகப்பட வேண்டியதைத் தவிர வேறு பரிகாரமில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்மக்கள் திராவிட மக்கள் ஆண்ட நம் தமிழ் – திராவிட நாட்டை என்ன காரணத் திற்கு ஆக ஒருவன் பரதன் (ஆரியன்) ஆண்டதாகச் சொல்லி இதை பரதநாடு என்று சொல்லவேண்டும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி ஒவ்வொரு தமிழ் மகனையும் வேண்டிக்கொள்கிறோம்.

தமிழ் நாட்டை ஏன் ஒரு தமிழ் மன்னன் அல்லது ஒரு தமிழன், திராவிடன், ஆட்சியின்பேரால் அழைக்கக்கூடாது என்று கேட்கின்றோம். இந்த தமிழ் நாட்டிற்கு ஒரு ஆட்சி வேண்டுமானால் ஒரு பழங்காலத்து மூவேந்தர்கள் ஆட்சியை ஸ்தாபிக்கப் பாடுபடுகிறோம் என்றோ அல்லது மூவேந்தர்களாலும் கைவிடும்படி செய்யப்பட்ட பிறகு ஒரு நாயக்கர் ஆட்சி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மைச் சரித்திரமானால் அந்த நாயக்கர் ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ அல்லது முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்லப்படுவதில் நேர் மையாக, நீதியாக அரசாட்சி செய்த ஒரு முஸ்லிம் மன்னன் பெயரைச் சொல்லி அவன் ஆட்சியை ஸ்தாபிக்க ஆசைப்படுகிறோம் என்றோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் சமுகத்தைச் சேர்ந்த நந்தன் முதலிய அரசர் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படும் சரித்திரம் உண்மையாய் இருக்குமானால் அந்த ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ சொல்லாமல், அவர்கள் பேரால் இந்த நாட்டை அழைக்காமல் பரத தேசமென்றும், ராமராஜ்ஜியம் என்றும், இந்தப் பார்ப்பனர் சொல்லுவதின் அர்த்தம் என்ன என்றும் அதைச் சில தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு பின்தாளம் போடும் இழிதன்மைக்குக் காரணம் என்னவென்றும் கேட்பதோடு இன்று நிறுத்திக்கொள்ளுகிறோம்.

குடிஅரசு – தலையங்கம் – 20.08.1939