ஞாயிறு, 9 ஜூன், 2024

பெரியாரைப் பற்றிப் பாவலரேறு இயற்றிய இரங்கற் பா

#பெரியாரைப் பற்றிப் #பாவலரேறு
இயற்றிய இரங்கற் பா இது.

பெரும்பணியைச் சுமந்த உடல்
பெரும்புகழைச் சுமந்த உயிர்

“பெரியார்” என்னும்
அரும்பெயரைச் சுமந்த நரை!
அழற்கதிரைச் சுமந்த மதி!

அறியாமை மேல்
இரும்புலக்கை மொத்துதல் போல்
எடுக்காமல் அடித்தஅடி!

எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா, இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்றதம்மா!

மணிச்சுரங்கம் போல்அவரின்
மதிச்சுரங்கத் தொளிர்ந்தெழுந்த
மழலைக் கொச்சை!

அணிச்சரம் போல் மளமளவென
அவிழ்கின்ற பச்சை நடை!

ஆரியத்தைத்
துணிச்சலுடன் நின்றெதிர்த்துத்
துவைத்தெடுத்த வெங்களிறு!

தோல்வியில்லாப்
பணிச்செங்கோ! அடடா, இப்
பகுத்தறிவைத் தமிழ் நாடும்
சுமந்த தம்மா!

உரையழ கிங்கெவர்க்குவரும்?
உடலழகிங் கெவர்பெற்றார்?

ஒளிர்முகத்தின்
நரையழகிங் கெவர்க்குண்டு?

நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்
நடை நடந்து
திரையுடலை, நோயுடலைச்
சுமந்துபல ஊர்திரிந்து
தொண்டு செய்த
இரைகடலை அடடா இவ் 
வெரியேற்றைத் தமிழ்நாடும்
இழந்ததம்மா!

எப்பொழுதும் எவ்விடத்தும்
எந்நேரமும் தொண்டோ 
டினைந்த பேச்சு! முப்பொழுதும் 
நடந்தநடை!
முழுஇரவும் விழித்தவிழி!
முழங்குகின்ற
அப்பழுக்கி லாதவுரை!

அரிமாவை அடக்குகின்ற 
அடங்காச் சீற்றம்! எப்பொழுதோ, 
அடடா, இவ்
வேந்தனையித்
தமிழ்நாடும் ஏந்தும் அம்மா?

பெற்றிழந்தோம், பெரியாரை!
பெற்றிழந்தோம்! அவரின்
பெருந்த லைமை
உற்றிழந்தோம்; 
உணர்விழந்தோம் 
உயிரிழந்தோம்; 
உருவிழந்தோம்!
உலையாத் துன்பால்
குற்றுயிராய்க் 
குலையுயிராய்க் கிடக்கின்ற 
தமிழினத்தைக்
கொண்டு செல்லும்
தெற்றுமணித் தலைவரினை,
அடடா, இத் தமிழ்நாடும்
நெகிழ்ந்ததம்மா!

பெரியாரைப் பேசுகின்றோம்;
பெரியாரை வாழ்த்துகின்றோம்;
பீடு, தங்கப் பெரியாரைப் 
பாடுகின்றோம்; பெரியார்நூல் 
கற்கின்றோம்;
பீற்றிக் கொள்வோம்!

உரியாரைப் போற்றுவதின் 
அவருரைத்த பலவற்றுள் 
ஒன்றை யேனும்
சரியாகக் கடைப்பிடித்தால்
அடடா, இத் தமிழ்நாடும்
சரியாதம்மா!

🔥பாவலரேறு பெருஞ்சித்திரனார்🔥

    பா உதவி  :-        ⚖️ #துலாக்கோல் சோம நடராசன்/ 09.06.2024⚖️

சனி, 8 ஜூன், 2024

கார்த்திகை தீபம்


பெரியார் பேசுகிறார்! 

சித்திரபுத்திரன்

தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது.
இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்விகம் என்று சொல்லப்படுவதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகின்றது. இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த்திகைத் தீபம் என்பதுதான்.
இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்விகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்-பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீர சைவர், ஸ்மார்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.
சாதாரணமாக, கார்த்திகை நட்சத்திரத் தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூசைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்திகைகளை விட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திரும்பும்போது, அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீசுவரன்கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் ஆகும்போது, பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?
இதில் எவ்வளவு பொருள் வீணாக்கப்-படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.
தீபாவளிக்காக வரவழைத்து விற்பனை-யாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு! கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலியவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!
கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!
இவ்வாறு பலவகையில் செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளாவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்! இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக் கதைகள் இரண்டு. அவைகளில்
ஒன்று:
ஒரு சமயம் அக்னிதேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம். அதையறிந்த அவன் மனைவி சுவாகாதேவி என்பவள், அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களால் தன் கணவன் சபிக்கப்-படுவான் என்று எண்ணினாளாம்.
அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்ற பெயராம். இவைகள்தான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவதாகும்.
இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி, குழந்தையாக இருக்கும் போது, அதையெடுத்து வளர்த்தார்களாம், என்பது ஒரு கதை. இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்.

பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு விபசாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவை மட்டும் அல்லாமல், இயற்கைக் பொருள்களின் மேல் எல்லாம் தெய்விகம் என்னும் மூடநம்பிக்கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று.
ஆகவே, இவற்றை ஆராயும்போது, இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்.
இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:
ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்ற கடவுளும் தாம் தாமே ஆதிமூலக் கடவுளர் என்று கூறிக் கொண்டதால், இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகிப் பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடிச் சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம்.

ஆகையால், அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு வானத்திற்குப் பூமிக்குமாக நின்றாராம். சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக்கடவுள், ஏ, பிரம்ம விஷ்ணுக்களே! இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம்.
உடனே, விஷ்ணு பன்றி உருவங்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டாராம். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது, வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்ததாம்.

அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்க, அது, நான் பரமசிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.
உடனே பிரம்மன், நான் சிவனுடைய முடியைப் பார்த்துவிட்டதாக அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல்லுகிறாயா? என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூ அதை ஆமோதித்ததாம்.
அதுகண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபம் கொடுத்தாராம்.

பிறகு பிரம்மாவும், விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்றும் எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம்.
பரமசிவனும் அதற்குச் சம்மதித்து, ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகையன்று, நான் இந்த உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம். இதுதான் திருவண்ணாமலை புராணமாகிய அருணாச்சலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.

இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியோர்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக் காட்டி, சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்களும், தேவாரங்களும், திருவாசகங்களும், தோத்திரங்களும் இல்லை.
இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் பல. இவ்வாறு, மதச் சண்டையை உண்டாக்குவதற்கு இக்கதை முதற் காரணமாக இருப்பதை அறியலாம்.

இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்கிடையே சண்டை வந்தது ஒரு விந்தை! இது போலவே, ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும், வேடிக்கைக்கும் இடமாக இக் கதையில் அநேக செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறு, இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகையினால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?
இது நிற்க, மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்குப் பெருமை கற்பிக்கிறதென்று நம்பிக் கார்த்திகைப் பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. வைணவர்களின் கடவுளைப் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன், சிவனுடைய பாதத்தைக் கூடக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவு படுத்தி இருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாட சம்மதிப்பார்களா?

இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்லாததுதானே கடவுள் என்றும் கொள்கை-யுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றை-யெல்லாம் யோசிக்கும்போது, இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.
அல்லது, அறிந்தோ, அறியாமலோ நமது மக்கள் மனத்தில், பண்டிகைகள் புண்ணிய நாள்கள், அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு; கொண்டாடாவிட்டால் பாவம் என்றும் குருட்டு எண்ணம் குடிகொண்டிருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.
ஆகவே, இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்கு-கின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர்களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சியெடுத்துக் கொண்டார்களா?
இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங்களை, சுயராச்சியம், சுதந்திரம், காங்கிரசு, பாரதமாதா, மகாத்மாகாந்தி, காந்தி ஜெயந்தி, என்னும் பெயர்களால் பிரச்சாரம் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங்களையும் விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள்! இவ்வாறு தேசியப் பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒரு புறமும், புராண பிழைப்புக்காரர்களும், குருக்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?
– (தந்தை பெரியார் – “குடிஅரசு” 22-11-1931)


வெள்ளி, 7 ஜூன், 2024

பெரியார் பேசுகிறார் : ஜாதி ஒழித்து சமத்துவம் காண்போம்!



2022 செப்டம்பர் 1-15-2022 பெரியார் பேசுகிறார் உண்மை இதழ்

தந்தை பெரியார்

சமுதாயத்தில் மாற்றம் செய்ய விரும்பும்போது உலகத்தில் எதிர்ப்பு வருவது இயற்கையே. ஆனால், எந்த நாட்டுச் சரித்திரத்தைப் புரட்டினாலும் மாறுதல் இருந்தே தீரும். மாறுதல் செய்ய விரும்புபவன் கீழே விழுந்து பல கஷ்டங்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான். பின், இரயிலின் அவசியத்தை உணர்ந்து இரயிலில் ஏறிப் பிரயாணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது, மண்ணெண்ணெய் கூடாது என்று கூறியவர்கள் கூட இன்று மின்சார விளக்குகளைப் பொருத்தி இருக்கிறார்கள். பறவைகளுக்கும் எருமை, புலி, எலி போன்றவைகளுக்கும் பகுத்தறிவு கிடையாது. ஆனால், மனிதன் அய்ந்து அறிவைத் தாண்டி, ஆறாவது அறிவைப் (பகுத்தறிவைப்) பெற்றிருக்கிறான். அனுபவத்தைப் பெறுவதும், மற்றவர்கள் செய்வதை, சொல்வதை யோசிக்க சக்தி பெற்றிருப்பதும் மனித இனம். எனவே, மனித இனம் வாழ்வில் வளர்ச்சியடைந்து வருகிறது.

அறிஞர்களின் ஏற்பாட்டால் 1910இல் வெளிவந்த வாகனத்துக்கும் 1951இல் வெளி வந்திருக்கிற வாகனத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. உலகம் நாளுக்கு நாள், மணிக்கு மணி முன்னேறிக் கொண்டு போகும்போது, நமது தமிழர் சமூகம் மட்டிலும் சூத்திரப் பட்டத்துடன் பின்னேறிக் கொண்டு போகிறது. நாம் செய்யும் மாறுதல் சுகபோகி-களுக்குப் பாதகமாக இருந்தால் _ அவர்களின் இன்ப வாழ்வு பாதிக்கப்படும் என்று நினைத்தால், அவர்கள் மாறுதலை மறுப்பார்கள்; எதிர்ப்பார்கள்.
1928 என்று நினைக்கிறேன்; எங்கள் சுயமரியாதை இயக்கத்தில் பல செட்டியார்கள் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் கப்பல் ஏறி வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது. அப்படிப் போனால் ஜாதிக்குப் பாதகம் விளையும் என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், இன்று ஜாதி ஆசாரத்தையும் மறந்து, வெளிநாடுகளுக்காகக் கடல் கடந்து பிழைப்புக்-காகவும், பதவிகள் வகிக்கவும் செல்லுகிறார்கள்.

இதுவும் மாறுதல்தானே! முப்பது ஆண்டு-களுக்கு முன்பு ரோமத்தைக் கத்தரித்து ‘கிராப்பு’ வைத்திருந்தால் பள்ளிக்கூடத்தில் படிக்க இடம் தரமாட்டார்கள். ஆனால், இப்பொழுது அவர்களே கிராப்பு வைத்துக் கொள்ளு-கிறார்கள். நெற்றியில் எதுவுமில்லை என்றால் பள்ளியில் மாணவர்களை நுழைய விடமாட்டார்கள்; ஆனால், இன்று 100க்கு 90 விகிதம் தமிழர்கள் நெற்றியில் எதுவும் வைத்துக் கொள்ளுவதில்லை. 150 ஆண்டுகட்கு முன்பு பெண்கள் ரவிக்கை போட்டுக் கொண்டதில்லை; மலையாளத்தில் மார்பில் துணிகூடப் போடக்கூடாது; இன்று பாட்டியம்மாள்கூட ரவிக்கை போட ஆசைப்படுகிறார்கள். நான் ஈரோடு சேர்மனாக இருந்த பொழுது குழாய்த் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். மக்களெல்லாம் போற்றினார்கள். ஆனால், என் தாயார் மட்டிலும், குழாய்த் தண்ணீர் கூடாது என்றார்கள். காரணம் என்ன? குழாய்த் தண்ணீரை யார் யார் பிடித்துவிடுகிறார்களோ _ அதில் தீட்டு ஒட்டியிருக்குமே என்பதற்காக! பிறகு திருந்தினார்கள். மாறுதல் வேண்டும் போது பிடிவாதம் இருக்கத்தான் செய்யும்.

அக்கம் பக்கத்தைப் பார்த்து மாறுதல் ஏற்பட்டுவிடும். உலகம் போகிற போக்கைப் பார்த்தால் மனித சமுதாய வளர்ச்சி எந்த அளவில் கொண்டு போய் விடுமோ! என்ன ஆகுமோ! யார் கண்டது?
நம் நாட்டு ராஜாக்களெல்லாம் கடவுளாக மதிக்கப்பட்டார்கள்; கடவுள் அவதாரமென எண்ணப்பட்டார்கள். கடவுளுக்குச் செய்வ-தெல்லாம் ராஜாவுக்கும் செய்தார்கள். ஆனால், அந்த ராஜாக்களெல்லாம் இன்று என்ன ஆனார்கள்? அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் ராஜாவாக ஆக்கப்பட்டார்கள். ஜமீன்தார்களும் இப்படியே ஒழிக்கப் பட்டார்கள். ‘கடவுள் ஒருவனை உயர்ந்த-வனாகவும், ஒருவனைத் தாழ்ந்தவனாகவும் படைத்தார்’ என்ற வருணாசிரம வேதாந்தம் எங்கே போயிற்று? இப்படியே சுதந்திர ஜனநாயக எண்ணத்துடன் ஆராய்ந்தால் மாறுதல் கண்டிப்பாய்க் கிடைக்கும்.

2000 ஆண்டுகளாக சூத்திரர்கள் இருக்கிறார்கள்; ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஒரு பாவமும் அறியாத குழந்தை பிறந்ததும், நடமாட ஆரம்பித்ததும் ஏன் சூத்திரனாக இருக்க வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டிலும், ஏன் புராணத்திலும், சாஸ்திர சம்பிரதாயத்திலும் சூத்திரப் பட்டம் இருக்கவேண்டும் என்று கேட்பது தப்பா? உள்ளதைச் சொல்லி மாறுதல் விரும்பும் எங்களைக் குறை-கூறுபவர்கள், தொந்தரவு கொடுப்பவர்கள் ஒரு காலத்தில் அதே மாறுதலுக்காக உழைப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
அடிமை முத்திரை குத்தப்பட்டவர்களாக, விலை கொடுத்து வாங்கும் அடிமைகளாக நீக்ரோக்கள் நடத்தப்பட்டார்கள். லிங்கன் தோன்றினார்; மாறுதலைச் செய்தார். இன்று அந்தச் சமூகம், பிற இனத்தவர்களுடன் சரிசமமாக வாழும் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது.

சீனாவில் சன்யாட்சன் தோன்றினார்; மாறுதலை உண்டு பண்ணினார். ‘அய்ரோப்பா-வின் நோயாளி’ என்று கூறப்பட்ட துருக்கி நாட்டிலே கமால் பாட்சா தோன்றி மாறுதலை உண்டு பண்ணினார். ஆனால், தமிழ் நாட்டில் சித்தர்களும் வள்ளுவரும் புத்தரும் தோன்றி _ ஜாதி ஒழிய வேண்டும், மாறுதல் வேண்டும் என்று கூறியும் மாறுதல் காண முடிய-வில்லையே! உழைப்பதெல்லாம் நம்மவர்களாக இருந்தும், கீழ் ஜாதியாகத்தானே வாழ்கிறோம்! மலையாள நாட்டில் ஈழவர்கள் வீதியில் நடக்கக்கூடாது என்ற சம்பிரதாயமெல்லாம் மாறி, மாறுதல் ஏற்பட்டு, இன்று வீதியில் நடக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் தீண்டப்படாதவன் இருக்கத் தானே செய்கிறான்! அது போகட்டும். நம் தாய்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்; ஆனால் தமிழுக்கு இடமில்லை. கோயிலில் வடமொழியில் மந்திரம் ஓதப்படுகிறது; இந்தி படித்தால்தான் பதவி கிடைக்கும்; தமிழில் சங்கீதம் வராது; தெலுங்கில்தான் சங்கீதம் வரும்.

சாஸ்திரம், புராணம் எல்லாம் வடமொழியில்!

காந்தியார் நம் நாட்டில் என்ன ஆனார்! மகாத்மாவாகி, மகானான அவரே மூன்று குண்டுகளுக்கு இரையானாரே! ‘சூத்திரன் படிக்கக் கூடாது’ என்கிறது மனுதர்மம்; ‘எல்லோரும் படிக்க வேண்டும்’ என்றார் காந்தியார். உடனே பாய்ந்தன மூன்று குண்டுகள்! ’முஸ்லிம் மதமா, இந்து மதமா! எல்லாம் ஒன்றுதான்’ என்றார் காந்தியார். பாய்ந்தன மூன்று குண்டுகள்! எனவே, மாறுதலுக்கு எதிர்ப்பு இருந்துதான் தீரும்; அதைப்பற்றிக் கவலையில்லை.
நீங்கள் ஒவ்வொருவரும் சமத்துவம் காண, மாறுதல் கொள்ளப் பாடுபடுங்கள்! உயர்ந்தவன் _ தாழ்ந்தவன் என்ற பேதமொழிய உழையுங்கள்! இந்நாட்டில் தமிழர்களாகிய நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். அதற்காகப் பாடுபடுபவர்–களுக்கு உதவியாக இருங்கள். என் தொண்டின் அடிப்படை நோக்கமெல்லாம் ஜாதி ஒழிப்பேயாகும்.
(மலாயாவில், கோலப்பிறை செயின்ட் மார்க் ஸ்கூல் திடலில் 16.12.1954இல் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு – ஆதாரம் : பினாங்கு, ‘சேவிகா’ 18.12.1954 – ‘விடுதலை’, 23.12.1954)


வெள்ளி, 31 மே, 2024

பிள்ளையார் உடைப்புப் போராட்டம் [27.5.1953]


இந்நாள் – அந்நாள் 


Published May 27, 2024, விடுதலை நாளேடு

எல்லா கடவுள்களும்  ஒழிந்தே தீரும்!

நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டுவிடாமல் உடைப்ப தற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27ஆம் தேதி புத்தர் நாள் என் பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்காக சர்க்கார் விடுமுறையும் விட் டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப்போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகிய கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27ஆம் தேதியன்று உடைத்தோம்.

இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை 500- க்கு மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கிலே, ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பும் ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்த்து உடைக்கப்பட்டது! தமிழ் நாட்டின் எல்லாப் பாகங்களிலும், மூலை முடுக்கு களிலும்கூட விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டு உடைக்கப்பட்டன.

ஆனால், இந்தப்படி நாம் உடைத்த தால் விநாயகரே ஒழிந்து விட்டதா? இல்லை. இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று.
சும்மா கிடந்த பிள்ளையாருக்கெல்லாம் பூஜை, புனஸ்காரம் நடத்தினார்கள்.

அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2 லட்சத்தோடு இப்போது ஒரு 3,000 சேர்ந் திருக்கலாம். அதனால் என்ன பலன்? இந்த 2 லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000 பிள்ளையாரும் ஒழிந்துதானே போகும்? அல்லது இப் போது புதிதாக இந்த 3000 பிள்ளை யார்கள்போல் உற்பத்தியானதால் இந்த    2 லட்சம் பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை!
சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளை யாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது?
ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.
இந்தச் சாமிகள் என்று கொண்டாடப் படுபவைகள் ஆபாசமானவை, அசிங்க மானவை! அக்கிரமமானவை, நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டு விட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கின்றன. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத் திருப்பது இந்தக் கடவுள்கள்தான்!

எனவே, நம்முடைய கீழ்நிலைமை – காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண் டும் என்றால், இக்கடவுள்கள் என்ப வைகள் ஒழிய வேண்டும் – என்று இப்படிப் பல காரணங்களை, தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி நாம் இந்தக்கடவுள் என்பவைகளை உடைக் கிறோம்!

ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஒப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான். அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெற்றுக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வது என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும்தான் அவர்களால் செய்ய முடிந்தது. சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண் டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன் தானே புதிய சாமிகளையும் உண்டாக்கு வான்! இது வரையிலே சாமி கும்பிடாத வன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி – சொல்லிக் கொண்டி ருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள் தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உடைக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட் டுமே! இதில்

புதுசென்ன? பழசென்ன?

இன்னும், நாம் பிள்ளையாரை உடைக்கிறோம் என்றவுடன், திராவிடர் கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர்ப் பிரச்சாரமாக நமது புண்ணிய புராணங் களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புரா ணப்பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவை களில் உள்ள ஆபாசங்களை, அநியா யங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக்காட் டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லு கிறோம்.

விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப் பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித் தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அது போலவே, இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயணத்தை பக்கம் பக்கமாக கொளுத்த வேண்டும் என்றால் இராமாயணத்தை பக்கம், பக்கமாக, காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம். நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் – கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப் போனால் புராணங் களை அவர்கள் பிரச்சாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவை களின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள் வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால், இப்படிப் பட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பற்றியும், புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது!
நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம்.

முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக, ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் – உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!

– தந்தை பெரியார்
– ‘விடுதலை’ 11-07-1953.

திங்கள், 27 மே, 2024

வைதிகப் பொய் மூட்டைகள் சுயமரியாதைப் பிரச்சாரத்தால் சிதறட்டும் – தந்தை பெரியார்



விடுதலை நாளேடு
Published May 19, 2024

உலகமெங்கும், ‘சுதந்திரம்’, ‘சமத்துவம்’, ‘சகோதரத் துவம்’, விடுதலை என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக்கின்றது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத் திற்குத் தடையாக நின்ற கோட்டைகளைத் தகர்த்து ஒழித்து தரைமட்டமாக்கிக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் படை எழுச்சியினால், மதக் கோட்டை களும், சாஸ்திரக் கோட்டைகளும், வருணா சிரமத் தருமக் கோட்டைகளும், சுய நலக் கோட்டைகளும், பகுத்தறிவு குண்டுகளால் அடியோடு பெயர்த்தெறியப் படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவில் உள்ள உலக நிலையறியாத, பரந்த நோக்கமில்லாத வைதிகப் பிடுங்கல்கள் தர்ப்பைப் புல்லுகளையும், பழைய பஞ்சாங்க கட்டுகளையும், சாஸ்திரக் குப்பைகளையும் காட்டி மேற்படி கோட்டைகளைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இவர்களின் முயற்சி வீணென்று பள்ளிப் பிள்ளைகளும் அறிந்து பரிகசிக் கின்றார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த வைதிகப் பிடுங்கல்களின் போக்கையும், மனப் பாங்கையும், முட்டாள் தனத்தையும் சென்ற 20-06-1932ல் தஞ்சை ஜில்லா திருவிடை மருதூரில் கூடிய பிராமணர் மகாநாட்டின் தீர்மானங்களைக் கொண்டு உணரலாம். இனி அம்மகாநாட்டில் நிறை வேற்றப்பட்டிருக்கும் தீர்மானங்களையும் அவைகளின் மூலம் அந்த மிரட்சியடைந்த மூளையையுடைய வைதிக மக்களின் போக்கையும் கவனிப்போம்.

பெண்ணடிமைத்தனம்

பெண்கள் விஷயமாக அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தில், பெண்கள் மகாநாடுகளை யெல்லாம் கண்டித்தும், பெண்கள் மகாநாடுகளெல்லாம் மேல்நாட்டு கல்விகற்ற பெண்களால் கூட்டப்படுகின்ற தென்றும் அவர்கள் விரும்பும் சுதந்திரங்கள் மதத்திற்கும் சமுக பழக்க வழக்கங்களுக்கும் விரோதமானவை என்றும், ஆகவே, அவர்களுடைய அபிப்பிராயங்கள் இந்திய பெண்களின் அபிப்பிராயம் அல்லவென்றும், ஜன சமுகத்திற்கும் அரசாங்கத்திற்கும் எச்சரிக்கை செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். வைதிகர்களின் புத்தியற்ற தன்மைக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இன்று பெண்கள் விரும்பும் சுதந்திரமும், சொத்துரிமையும் கல்வியறிவும், சுகாதார வாழ்க்கையும் ஆண்களைப் போல் வயது வந்தபின் தங்கள் விருப்பப்படி மணஞ்செய்து கொள்ளும் உரிமையும் விதவைகளாகிவிட்டால் மறுமணம் புரிந்து கொள்ளும் உரிமையும், கணவனுடைய கொடு மையோ நடத்தையையோ சகிக்கமுடியாதபோது மண விடுதலை செய்து கொள்ளும் சுதந்திரமும், தங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள சட்ட சபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங் களிலும் இடம் பெறும் உரிமையும் கேட்கின்றார்கள். இவ்வுரிமைக ளெல்லாம் இன்று ஆண்களுக்கு எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறு பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? இளம் வயதில் மாடு, கன்றுகளை விற்பனை புரிவது போல பெண்களை மணம் செய் வித்து தாலியறுத்த பின் வீட்டின் மூலையில் உட்கார வைத்து, அவர்கள் தங்கள் இயற்கை உணர்ச் சியை அடக்கிக் கொள்ள முடியாமல் திருட்டுத்தனமாக அந்நிய புருஷ ருடன் இன்பம் அனுபவித்து கர்ப்ப மாகி குழந்தை பிறந்த பின் அதை கழுத்தை முறித்து கள்ளிக் காட் டிலோ, சாக்கடையிலோ, கிணற் றிலோ, ஆற்றிலோ, குளத்திலோ எறியும்படி செய்வது மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம் மதமா? கணவனால் வெறுக்கப்பட்ட சொத்துரிமையும், கல்வியறிவும், ஆதரவும் அற்ற பரிதாபகரமான நிலைக்குரிய பெண்கள் விபசார வாழ்க்கையில் ஈடுபட்டு மானத்தை விற்று ஜீவனஞ் செய்யும் காரியந் தான் மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம்மதமா? மதம், பழக்கவழக்கம் என்று கண்மூடிக்கதறிக் கொண்டிருக் கும் அறிவிலிகளால் தான் பெண் மக்கள் மேற்கூறிய கொடிய வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருக்கிற தென்பதைப் பகுத்தறிவாளர் மறுக்க முடியுமா? இவற்றையுணராத வைதிகர்கள் பெண்கள் விரும்பும் சுதந்திரத்தால் மதமும், பழக்க வழக்கங்களும் போய் விடும் என்று ஏன் பாழும் குரலெடுத்துக் கத்துகிறார்கள்?

ஆலயப் பிரவேசம்

அடுத்தப்படியாக ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இத்தீர் மானத்தில் குருவாயூர் முதலிய இடங்களில் நடை பெறும் ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகங்களைக் கண்டித்தும், தீண்டாதார் ஆலயங்களில் நுழைந்தால் ஸநாதன தர்மமும் இந்துமத சம்பிரதாயமும் அழிந்து விடுவதுடன் இந்து சமுகத்தில் கலகமும் வேற்று மைகளும் உண்டாகுமென்றும் ஆகையால் காங்கிரஸ் இவ்வியக்கத்தை ஆதரிக்கக் கூடாதெனவும் எச் சரிக்கை செய்வதாகவும் குறிப்பிடுகின்றார்கள். கோயில் பிரவேசத்திற்காகச் சத்தியாக்கிரகம் பண்ண வேண்டும் என்கின்றவர்கள் இதைக் கவனிக்க வேண்டுகின்றோம். கோயிலுக்குள் நுழையும் உரிமை பெறச் சத்தியாக்கிரகம் பண்ணுகின்ற கஷ்டத்தையும் கோயில் பிரவேச உரிமை கிடைத்தபின், அந்தக் கல்லுச் சாமிகளுக்காகத் தாங்கள் பாடுபட்டுத் தேடும் செல்வங்களைப் பாழாக்கும் முட்டாள்தனத்தை போக்க பாடுபடவேண்டிய கஷ்டத்தையும் ஆலோ சித்துப் பார்த்தால், இப்பொழுதே இக்கஷ்டங்களுக்கு இடம் இல்லாமல் தடுத்து விடலாமல்லவா? கோயில் பிர வேசத்திற்காகப் பாடுபடுவதைவிட, கோயில்களின் பயனற்ற தன்மைகளையும் அவைகளால் உண்டாகும் கஷ்டநஷ்டங்களையும் எடுத்துக்கூறி எவரையும் கோயிலுக்குப் போகாமலும், அதற்காக செலவு செய்யாமலும் தடுக்க முயற்சிப்பது எவ்வளவோ பயன்தரக் கூடிய தென்பதே நமது அபிப்பிராயமாகும். ஜனங்கள் கோயில் களுக்குப் போவதையும் அங்கே கொண்டு போய் பணத்தைப் பார்ப்பனர்கள் வயிற்றில் போடுவதையும் நிறுத்தி விடுவார்களானால் கோயில் களும் அழிந்து போகும்; அவைகளைக் கட்டிக் கொண்டு அழும் வைதிகர்களும், பார்ப்பனர்களும் கொட்டம் அடங்கி மூலையில் உட்கார்ந்து விடுவார்கள். இதைவிட்டு, கோயில் பிரவேசத்திற்கு என்று நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் கோயில் களுக்கு மதிப்பும், பாமர மக்களின் செல்வங்களுக் குக் கேடும், சோம்பேறி வைதிகர்களுக்கும், பார்ப்பனர் களுக்கும் பிழைப்பும் இருந்து கொண்டுதானிருக்கும் ஆகையால் கோயில்களை ஒழிப்பதற்கு வழி தேடுவதே சாலச் சிறந்ததென்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம். இந்த வகையில் பார்ப்பனர்களே கோயில்களைக் கட்டிக் கொண்டு அழுவதில் நமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், கோயில்களாகட்டும், குளங்களாகட்டும்; மற்ற எந்த பொது ஸ்தலங்களா கட்டும்; அவைகளில் எல்லோரும் பிரவேசிக்கக் கூடிய உரிமையை நிலை நாட்டும் பொருட்டுச் செய்யப்படும் எந்த முயற்சியையும் நாம் முழு மனத்துடன் ஆதரிக் கின்றோம் பார்ப்பனர்கள் எதையும் தங்களுடைய ஏகபோக உரிமையாக அனுபவிக்கச் சுதந்திரம் பெற் றிருந்த காலம் மலையேறி விட்டதென்று எச்சரிக் கின்றோம்.

சோம்பேறிகளின் ஆதிக்கம்

அடுத்தப்படியாக, ‘மத உரிமை’ பற்றி நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் மத உரிமைகளுக்கு விரோதமாகச் சட்டங்கள் ஏற்படுத்த கூடாதென சர்க்காருக்கும் சட்டசபைகளுக்கும் தடையேற்படுத்த வேண்டும் என்றும் மதச் சம்பந்தமான பழக்க வழக்கங்களில் அரசாங்கமும் சட்டசபைகளும் தலையிடக் கூடாதென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த வைதிகர்களின் மனப்போக்கின்படி பார்த்தால், அரசாங்கம் என்று ஒன்று இருக்க வேண்டிய தேவையே இல்லை என்று கூறலாம். தேசமக்களின் கொடிய பழக்க வழக்கங்களைப் போக்கி அவர்களை நலமுடன் வாழச் செய்ய வேண்டியதே அரசாங்கத்தின் முக்கிய கடமை யாகும். இக்கடமையைச் செய்யாத அரசாங்கம் இருந்தும் பயனில்லை; இறந்தும் பயனில்லை. தன் மதத்தினர் தவிர அந்நிய மதத்தினரை யெல்லாம் அழிக்க வேண்டும் என்று கூறும் ஒரு மத உரிமைக்கு அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? புருஷன் இறந்த பின் அவன் மனைவி யையும் கஷ்டத்தில் ஏற்றிக் கொலை செய்யும் மத உரிமையை அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? பெண்களை பொட்டுக்கட்டி விட்டு விப சாரத் தொழில் நடத்தச் செய்யும் மதவுரிமையை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரமும் நெற்றி வேர்வை நிலத்தில் வரும்படி உழைப்போர் உணவின்றி வருந்திச் சாகவும் நகத்தில் அழுக்குப்படாமல் வெல்வெட்டு மெத்தையிட்ட சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கும் சோம்பேறிகள் ஆதிக்கம் செலுத்தும் மதவுரிமைக்கு, அக்கிரமத்திற்கு அரசாங்கம் எப்பொழுதும் இடங்கொடுத்துக் கொண்டிருக்க முடி யுமா? ஆகையால் தேசம் நன்மையடைய வேண்டு மானால், மதவுரிமை, ஜாதிஉரிமை, பழக்க வழக்கம் என்பவற்றையெல் லாம் மூட்டைக்கட்டி அட்லாண்டிக் பெருங்கடலில் போட்டு விட்டுச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்ற வேண்டியதே முறையாகும். இத்தகைய அரசியல் சீர்திருத்தம் வருவ தாயிருந்தால்தான் சுயமரியாதைக்காரர்கள், அரசியல் சீர்திருத்தத்தை ஆதரிப்பார்கள். இவ்வாறில்லாமல் இந்த வைதிகர்கள் விரும்புகின்றபடியும் காங்கிரஸ் காரர்கள் கேட்கின்ற படியும், மதபாதுகாப்புள்ள சீர் திருத்தம் எது வந்தாலும் அதைச் சுயமரியாதைக்காரர்கள் ஆதரிக்கப் போவதில்லை. ஒரு சமயம் ஆதரிக்கும் படியான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், மதப்பாதுகாப்பை ஒழித்துச் சமுக சீர்திருத்தச் சட் டங்களை ஏற்படுத்தவே முன்வருவார்கள் என்பதில் அய்யமில்லை. ஆதலால், வைதிகர்கள் வேண்டும் மதப் பாதுகாப்புப் பூச்சாண்டி இனிப் பலிக்காதென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

பால்ய விவாகம்

அடுத்தப்படியாக சாரதா சட்டத்தைக் கண்டித்தும், இச்சட்டத்தை இந்து சமுகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங்களும் ஆதரிப்பதைக் கண்டித்தும் பால்ய விவாகத்தைத் தடை செய்வது மதத்திற்கு விரோத மென்றும் ஆதலால், சாரதா சட்டத்தைத் திருத்தவோ, ரத்து செய் யவோ, ஆதரவளிக்க வேண்டும் என்றும் தீர்மானித் திருக்கின்றார்கள். இவர்கள் தீர்மானத் திலேயே சாரதா சட்டத்தை இந்து சமுகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங்களும் ஆதரிப்பதாக குறிப்பிட்டிருக்கும் போது சிலராகிய வைதிகர்கள் ஏன் கூச்சலிட வேண்டும்? இச் சட்டம் உண்மையிலேயே ஜனசமுகத்திற்கு நன்மையளிக்கக் கூடியதென்பதை அறிந்துதானே பலரும் ஆதரிக்கின் றார்கள், அப்படி இருக்க ஏன் இவ்வைதிகர்கள் இதை எதிர்க்க வேண்டும்? மதம் என்ற குருட்டுத்தனம் தானே இவர் களுடைய அறிவை நன்மைதீமைகளை ஆராய்ந்து பார்க்க முடியாமல் தடை செய்கின்றது? ஆகையால் இந்த வகையிலும் இவர்களுடையத்தீர்மானம் ஒரு செல்லாக் காசு என்றுதான் நாம் கூறுவோம்.

புரோகிதப் புரட்டு

கடைசியாக மற்றொருத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அதாவது வேதம் ஆகமம் முதலிய வைகளை பிரசாரம் பண்ணுவதற்கும், புரோகிதர் கோயில் அர்ச்சகர்கள் முதலியவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வைதிகக் காரியங்களுக்கு அழிவுவராமல் காப்பாற்றுவ தற்கும் வருணாசிரம தருமசபைகள் ஏற்படுத்துவதற்கும் இந்துமத தத்துவங்களைப் பிரசாரம் பண்ணுவதற்கும் மாணாக்கர்களிடம் வைதிக ஒழுக்கங்கள் உண்டாவதற்காக சிறு விடுதிகளை ஏற்படுத்தவும் தர்ம ஊழியர் சங்கம் என்னும் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சமுகத்தினரும் வேதாகமப் புரட்டுகளையும், புரோகிதப் புரட்டுக் களையும், அர்ச்சகர்களின் அயோக்கியத் தனங்களை யும், வருணாசிரம தர்ம அக்கிரமங்களையும், பழைய குருட்டுப் பழக்கங்களையும் ஒழிக்க முயற்சி செய்யும் இக்காலத்தில் நமது பார்ப்பனர்கள் இவற்றை வளர்க்க முயற்சி செய்வது எவ்வளவு புத்திசாலித்தனமென்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். உண்மையில் இவர்களுக்குத் தேசத்தின் மீது கவனமோ, ஏழைகளின் மேல் அனுதாபமோ மற்ற தேசங்களைப்போல் நமது தேசமும் சிறந்து விளங்க வேண்டுமென்ற ஆசையோ இருந்தால் இவ்வாறு மகாநாடுகள் கூட்டி பிற்போக் கானத் தீர்மானங்களைச் செய்வார்களா? என்றுதான் கேட்கிறோம்.

பணபலமும், பத்திரிகை பலமும், செல்வாக்குப் பலமும் படைத்த வைதிகப் பார்ப்பனர்கள் இப்போழுது தீர்மானிக் கிறபடி, பலதுறைகளிலும் நுழைந்து பிரசாரம் பண்ணவும் பார்ப்பனர்களை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் பாமர மக்களில் பலர் இவர்கள் பிரசாரத்தினால் ஏமாறவும் கூடும்.

சுயமரியாதைப் பிரச்சாரம்

ஆனால் இது எப்பொழுதும் நிலைத்து நிற்க முடியாது என்பது மாத்திரம் நிச்சயம். காலச்சக்கரம் வெகுவேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந் நிலையில் பார்ப்பனர்களின் வைதிகப் பிரசாரம் ஒரே முறையில் செய்யப்படும் சுயமரியாதைப் பிரசார சண்டமாருதத்தால் சிதறிப் போய்விடும் என்பது நிச்சயம். ஆகையால் எங்கும் பகுத்தறிவும், விடு தலையும், சுதந்திரமும் உதயமாகிவரும் இக்காலத்தில் பார்ப்பனர்கள் மாத்திரம் இவ்வாறு இன்னும் ஏமாற்றி கொண்டிருக்க நினைப்பதும் அதற்காக மகாநாடு கூட்டுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் வீண்! வீண்! வீண்! என்று எச்சரிக்கை செய்கின்றோம். இத் தகைய அழுக்குமூட்டை வைதிகர்களைக் கண்டித் ததைத் தேசியப் புலிகள் நம்மைத் ‘தேசியத்துரோகிகள்’ என்றும் ‘சுயராஜ்ய விரோதிகள்’ என்றும் கூறுவது வடிகட்டின அயோக்கியத்தன மல்லவா? இனியேனும் யார் உண்மையான சுதந்திரத்திற்குப் பாடுபடுவர் களென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

– ‘குடிஅரசு’ – துணைத்தலையங்ம் – 26. 06. 1932

ஞாயிறு, 26 மே, 2024

லட்சியத்தை நிறைவேற்ற புத்திசாலிகளல்ல – போராளிகளே தேவை



Published July 2, 2023, விடுதலை நாளேடு

தந்தை பெரியார்

பெரியோர்களே! தோழர்களே! தாய்மார்களே! தூத்துக்குடியில் மாநாடு நடத்த இவ்வூர்த் தோழர்கள் அனுமதி கோரியபோது இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பஞ்ச காலத்தில் இவ்வளவு தொலைவில் நடத்தப்படும் மாநாட் டிற்கு வெகு சொற்ப நபர்களே வரக்கூடும் என்றும், மாநாடு ஏதோ ஒரு சடங்குமுறை மாநாடாகவே இருக்கக் கூடும் என்றும் பலர் நினைத்திருந்தனர். ஆனால், இதுவரையில் நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கடற் கரைக் கூட் டங்கள் தவிர்த்த வேறெந்தக் கூட்டத்திற்கோ, மாநாட் டிற்கோ இவ்வளவு பேர் எப்போதுமே கூடிய தில்லை! இந்தியாவிலேயே கூட ஒருவேளை அகில இந்தியக் காங் கிரஸ் மாநாட்டுக் கூட்டங்கள்தான் இவ் வளவு பெரியதாக இருக்கக் கூடுமோ என்னவோ அறியேன். அதுவும் இவ் வளவு  உற்சாகத்தோடும், துடிதுடிக்கும் ஆர்வத்தோடும், பத்தாயிரக்கணக்கில் தாய் மார்களும், இளைஞர்களும், தோழர்களும் கூடியிருக்கும் இப்பெரிய ஜன சமுத்தி ரத்தைப் பார்க்கும்போது நான் உள்ளபடியே மிகமிக மகிழ்ச்சியடைகிறேன். ரயில் தொந்தரவால் பல ஆயிரக் கணக்கான மக்கள் வர இயலாமல் ஆங்காங்கே நிறுத்தப் பட்டுங்கூட இவ்வளவு பேர் கூடியிருப்பது, அதுவும் எவ்வித அசவுகரிய குறிப்போ ஏமாற்று குறிப்போ இல் லாமல் மகிழ்வுடன் கூடியிருப்பது எனக்குக் கண்கொள்ளாக் காட்சியாகவே இருக்கிறது. பிரம்மாண்ட உற்சவங்கள் தவிர்த்த மற்ற இடங்களுக்கு  இதுவே ரிக்கார்ட் என்று கூடக் கூறலாம்.

குரல் உள்ளவரை பேசவேண்டும்!

நாதசுரக் குழாயாய் இருந்தால் ஊதியாகவேண்டும், தவுலாயிருந்தால் அடிபட்டுத்தான் ஆகவேண்டும் என்பதுபோல், எனக்குத் தொண்டை, குரல், உள்ள வரை யில் பேசியாகவேண்டும், பிரசங்கம் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காண்பதால் ஏற்பட்டுள்ள உள பூரிப்பும், ஒரு தனியான அகம்பாவமும் என் உள்ளம் பூராவையும் கவர்ந்து நிற்கிறது. இருந்தாலும் முயற்சித்து ஏதோ சொல் லுகிறேன்.

சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில புரட்சி கரமான தீர்மானங்களால் சர்க்கார் சம்பந்தம் நீங்கப் பெற்று, கழகத்தின் பேரும் மாற்றம் அடைந்து, திராவிட நாடு பிரிவினையும், லட்சியமாக்கப்பட்டதிலிருந்து நமது செல்வாக்கு அனுதினமும் பெருகிக் கொண்டே வருகிறது. இதைக் காணும் சில பொறாமைக்காரர்களும், மேதாவிகள் என்று தம்மை நினைத்துக் கொண்டிருக்கும் சில புத்திசாலி களும் நம்மீது ஏதேதோ குற்றங்குறை கூறி வருகிறார்கள். நம் கழகத்தைப் பின்பற்றி நடந்து வருபவர்களை இவர்கள் பயித்தியக்காரர்கள் என்றுகூடக் கருதி வருகிறார்கள்.

புத்திசாலிகள் அல்ல! 

பொறுப்பான லட்சியப் போர் வீரர்களே வேண்டும்!

என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டு மென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறை வேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா, முட்டாள்களா, பயித்தியக்காரர்களா, கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை.

இந்த சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில் எக்ஸிக்யூடிவ் என்ஜினீயராய் இருந்தபோது, அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார். மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக் கூடிய புது மாதிரியான கவலை ஒன்று செய்ய தனக்கு இரண்டு கொல்லர்களை தருவித்துக் கொடுக்கும்படி சொன்னார். நான் யோசித்து, இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களின் – அதாவது துப்பாக்கி செய்யக் கூடியவர்கள், பெயரைக் குறிப்பிட்டு அவர்களை அழைத்து வரும்படி என் காரியஸ்தர்களுக்குக் கூறினேன்.

அப்போது அவர் சொன்னார், “கொல்லன் – கெட்டிக் காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால் அவர்கள் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனப் போட்டி வேலையைக் கெடுத்துவிடும், அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள், என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, நான் சொல்வதைப் புரிந்துகொண்டு அதன்படி வேலை செய்யக்கூடிய, ஒரு படிமானமுள்ள, சொன்னபடி நடக்கக்கூடிய, இரண்டு சம்மட்டியும், சுத்தியும் பிடித்துப் பழகிய ஒரு சாதாரண ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் முட்டாள்களாய் இருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

சேரு முன்பு சிந்திப்பீர்! 

சேர்ந்த பிறகோ அதை மறப்பீர்!

புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப் போதுமே இயற்கைதான். ஆகவேதான், நான் நீடா மங்கலம் மாநாட்டின்போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்தப் பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான். தோழர்களே நான் இப்போது கூறுகிறேன். நீடா மங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன்.

நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்தப் பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக் கூட நீங்கள் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்து விட வேண்டியதுதான். கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறு கிறது என்று நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானா லும் ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!

ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும், பகுத் தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர் களாகச் சேர்ந்து விட்டீர்களோ உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியதுதான் முறை.

ஒரு எஜமான் வேலைக்காரனைப் பார்த்து, ‘அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடப்பா’ என்று கூறினால், ‘என் மனச்சாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவில்லையே?’ என்று கூறினால், அது முறையாகுமா? ஒரு டிஸ்ட்ரிக்ட் சூப்ரன்டெண்ட் ‘சுடு!’ என்று போலிஸ்காரனுக்கு உத்தரவு போட, அவன் ‘என் மனச்சாட்சி அதற்கு இடங் கொடுக்க வில்லையே’ என்று கூறினால், அந்தச் சூப்ரன்டெண்ட் கதி என்னாவது? கசாப்புக் கடையில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டவன் ‘அந்த ஆட்டை வெட்டுடா!’ என்று எஜமான் உத்திரவிடும்போது, ‘அய்யோ என் மனச்சாட்சி மாட்டேன் என்கிறதே; நான் என்ன செய்யட்டும்?’ என்று கூறினால், ‘ஏண்டா மடப்பயலே! முன்னாடியே உனக்கு இது தெரி யாமற் போனதென்னடா?’ அப்போது உன் மனச்சாட்சி எங்கேடா போயிருந்தது? என்று கேட்பானா? இல்லையா அவனை?

குதர்க்கம் பேசுதல் விஷமமல்லவா?

ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக்கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷமத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படு கிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதிகாரம் தான் என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால், தோழர்களே! நீங்கள் சிந்திக்கவேண்டும்; இந்த சர்வாதி காரம் எதற்குப் பயன்படுகிறதென்று? என்னுடைய சர்வாதி காரத்தைக் கழக லட்சியத்தின் வெற்றிக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே ஒழிய, எந்தச் சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக் காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

என் சொந்த விளம்பரத்திற்காக, என் சொந்தப் பெரு மைக்காக இதுபோன்ற மாநாடுகள் கூட்டப்படுகின்றன என்று சிலர் கருதுவதற்கொப்ப, இம்மேடையின் கண் பேச நேரும் தோழர்களும் என்னைப்பற்றிப் புகழ்ந்து பேசு வதிலேயே தமது சொற்பொழிவுக்குக் கொடுக்கப்படும் நேரத்தின் பெரும் பகுதியைச் செலவு செய்கின்றார்கள். இதை நான் அறவே வெறுக்கிறேன். சிறிதும் விரும்ப வில்லை. ஆகவே, சொற்பொழிவாளர்கள் என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசாமல் இருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

இருந்த காந்தியார் வேறு!  இறந்த காந்தியார் வேறு!

சென்ற மாநாட்டிற்குப்பின் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் முதன்மையாகப் பேசப்பட வேண்டியது காந்தியாரின் மறைவைக் குறித்தாகும். காந்தியார் உயி ரோடிருந்தவரை அவருடைய போக்கைப் பெரும் அளவுக்குக் கண்டித்து வந்த எனக்கு, காந்தியார் மறைவுக் குத் துக்கப்படவோ, அவரது மறைவிற்குப் பின் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசவோ என்ன உரிமை யுண்டென்று சிலர் கேட்கலாம். சில காங்கிரஸ்காரர்களின் நல்லெண் ணத்தைச் சம்பாதித்துக் கொள்ளவே நான் இவ்விதம் சூழ்ச்சி செய்வதாகவும் கருதியிருக்கலாம். ஆனால், தோழர்களே! இவை உண்மையல்ல. காந்தியார் மறைவுக்கு ஆக எந்த காங்கிரஸ்காரர் துக்கப்பட்டார்? அழுதார்? வேதனைப்பட்டார்கள்? காங்கிரஸ்காரர்கள் பண்டிகை கொண்டாடினார்கள். காங்கிரஸ் முக்கிய ஸ்தர்களாக இருந்த பார்ப்பனர்கள் இனிப்பு வழங்கி னார்கள். எனக்கு உண்மையிலேயே இப்பொழுதும் துக்கம் மேலிடுகிறது.

காந்தியாரின் மறைவுக்கு அனுதாபப் பட, மற்றவர்களைக் காட்டிலும் அதிகத் துக்கப்பட வேறுபல காரணங்கள் உண்டு. முதலாவதாகக் காங்கிரஸ் காரர்கள் பலரும் பார்ப்பனர்களும் கருதி இருந்த காந்தியார் வேறு, இறந்த காந்தியார் வேறு என்று நான் கருதுகிறேன்.

இருந்த காந்தியார் ஆரிய காந்தியார்! ஆரியரால் உண்டாக்கப்பட்ட காந்தி யார். நம் எதிரிகளின் காந்தியார். ஆனால், இறந்த காந்தியார் நம் காந்தியார். ஆரியம் அழிந்துவிடுமே எனப் பயந்து ஆரியரால் கொல்லப்பட்ட கொலையுண்ட காந்தியார். அதனால் தான் நாம் மற்றவர் களுக்கும் மேலாகத் துக்கப்படுகிறோம். அதனால்தான், மற்ற வர்களைவிட நமக்குத்தான், அவர் மறைவுக்காக துக்கப்படவும் உரிமை யுண்டு என்று கூறிக் கொள்கிறோம். ஒருவர் தம் மறைவு காலத்தில் எந்த நிலையில் இருக்கிறாரோ, அதைப் பொறுத்துத்தான் அவருடைய மறைவுக் குத் துக்கப்படுபவர்களும், சந்தோஷப் படுபவர்களும் அமைவார்கள். உதா ரணமாக, நான் காங்கிரஸ் ராமசாமியாக ஒரு காலத்திலும், சுயமரியாதை ராம சாமியாக ஒரு காலத்திலும், திராவிடர் கழக ராமசாமியாகத் தற்காலத்திலும் இருந்து வருகிறேன். காங்கிரஸ் ராம சாமியாக இருந்த காலத்தில் நான் இறந் திருந்தால், ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் உள்பட, ‘ஹிந்து’ ஆசிரியர் உள்பட பல காங்கிரஸ்காரர்களும் அய்யர், அய்யங் கார்களும் துக்கங் கொண்டாடியிருப்பார்கள். சுய மரி யாதை ராமசாமியாக இறந்திருந்தால் சுயமரியாதைக் காரர்களும் மற்றும் சில அறிவாளிகளும் மட்டும் துக்கம் கொண்டாடியிருப்பார்கள். ஒரு சில சுயமரியாதைக்கார பார்ப்பனர் தவிர்த்த மற்றப் பார்ப்பனர்கள், வைதீகர்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.

இருந்தவர் ஆரியக் காந்தியார், 

இறந்தவர் திராவிடக் காந்தியார்!

ஆனால், இன்று மறைய நேர்ந்தாலோ திராவிடர்கள் அனைவரும் துக்கங் கொண்டாடலாம் என்று கருதுகிறேன். இதேபோல், காந்தியாரும் தம் மறைவின் போது திராவிடர் கழகக் கொள்கைகளை ஒப்புக்கொண்ட காந்தியாராகத் தான் மறைந்தாரே ஒழிய, ஆரிய தர்மத்தை ஒப்புக்கொண்ட காந்தியாராக மறையவில்லை. இந்து மத தர்ம அநீதியைக் கண்டிக்கப் புகுந்ததால், அதற்கான பலனையடைந்தார். சூத்திரன் தலை எடுத்தால் பார்ப் பானுக்கு ஆபத்து என்ற மனுதர்ம விதிப்படி, அவர் பார்ப்பனனால் கொல்லப் பட்டார். இராமாயண கதையில் சம்பூகன் அடைந்த கதியை அவர் அடைந்தார். சம்பூகன் கொல்லப்பட்டதற்கு ஆரியப் பார்ப்பனர்கள் அகமகிழ்ந் ததாக, இறந்த பார்ப் பனர்களெல்லாம் உயிர்த்தெழுந்ததாக, கதையில் காணப் படுகிறது. காந்தியார் கொல்லப் பட்டதற்குப் பார்ப்பனர்கள் மிட்டாய் வழங்கியதை நாம் நேராகப் பார்த்தோம். காந்தியார் மறைவுக்குப் பார்ப் பனர்களே காரணம் என்று வடநாட்டில் பார்ப்பனர்கள் வீடுகள் சாம்பலாக்கப்பட் டதையும், பார்ப்பனர்களின் வீடுகள் சூறையாடப்பட்ட தையும், பார்ப்பன தாய்மார்கள் அவமானப்படுத்தப் பட்டதையும், பார்ப்பனர்கள் தங்க இடமின்றி ஓடி தவித்ததையும் நாம் பத்திரிகையில் பார்த்தோம். அதற்கு நஷ்ட ஈடாகப் பம்பாய் மாகாண சர்க்கார் ஒவ்வொரு பார்ப்பனனுக்கும் ரூ.2000 இனாமாகவும், ரூ.25,000 வரை ரொக்கக் கடனும் கொடுத்து உதவியதாகவும் நாம் பத்திரிகையில் பார்க்கிறோம். இங்கு பார்ப்பனர் களுக்கு அத்தகைய கேடு நேரவில்லை. இதற்கு நம் கழகம் தான் காரணமே ஒழிய, காந்தியார் மறைவுக்குத் துக்கப்படுபவர் இந்நாட்டில் இல்லாமல் போனதால் அல்ல.

எங்களால் வந்த வாழ்வு! 

இன்றோ நமக்குச் சவால்!

இதை அறியாத பார்ப்பனர்கள் ஆணவத்தோடு அந் தணர் மாநாட்டைக் கூட்டி நமக்குச் சவால் விடுகிறார்கள். இந்தப் பார்ப்பனர்களை, இன்று மட்டுமல்ல, என்றுமே காப்பாற்றி வரு பவர்கள் நாம்தான். இந்நாட்டிலிருந்து பார்ப்பனர்களை அறவே ஒழித்துக் கட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த (ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியில்) ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் தெருவில் வரக்கூட யோக்கியதையற்றுக் கிடந்தார்கள். அந்தக் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியை இருந்த இடம் தெரியாமல் ஒழிக்க, நான் தேசியத்திற்கு முதல் அடிமையானேன். தோழர் வரதராஜுலு நாயுடு அடுத்த அடிமையானார். தோழர் கல்யாண சுந்தர முதலியார் மூன்றாவது அடிமை யானார். ராஜகோபாலாச்சாரியார், எஸ். சீனு வாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி அய்யர் போன்ற வர்களுக்கு மேடையில் இடம் வாங்கிக் கொடுத்தவர்களும், அவர்களுக்குத் தமிழ்ப் பேசக் கற்றுக் கொடுத்தவர் களும்கூட நாங்கள்தான்.

அக்காலத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு, வீடு பிரித்துப் போட்டுக் கிடக்கிறது என்று கூறத் தெரியாது. வீடு அவுத்துப் போட்டுக் கிடக்கிறது என்றுதான் கூறுவார். சத்தியமூர்த்தி அய்யருக்கு நேக்கு, நோக்கு, அம்மாஞ்சி, அம்மாமி, அவா, இவா இவை தவிர வேறு தமிழ் வார்த்தைகள் பேசத் தெரியாது. ரங்கசாமி அய்யங்கார், டாக்டர் ராஜன், சுதேசமித்திரன் ஆசிரியர் இவர்கள் ஒரு சிலர் தவிர்த்து, அந்தக் காலத்தில் பார்ப்பனர்களில் தமிழ்ப் பேச ஆள் கிடையாது. கூட்டத்தில் பார்ப்பனர்களுக்குப் பேச உரிமை வாங்கிக் கொடுத்தவர்களும், அவர்களுக்குத் தியாகம் செய்ய (ஜெயிலுக்குப் போக) கற்றுக் கொடுத் தவர்களும் நாங்கள்தான். ராஜகோபாலாச்சாரியாரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். இது உண்மையா அல்லவா என்று. நாளைக்கு கவர்னர் ஜெனரலாகப் போகிறார். என்னையும் காண்பார். கண்டால் வெட்கப்படப் போகிறார். கட்டியழப் போகிறார். ‘நான் இப்படியானேன்; நீ அப்படியே இருக்கிறாயே’ என்று கேட்பார். நாங்கள் இல்லாதிருந்தால் இந்த நாட்டில் ராஜகோபாலாச்சாரி ஏது? கவர்னர் ஜெனரல் பதவிதான் ஏது? சர்வம் பார்ப்பனிய சுயராஜ்யம் ஏது? பெற்ற பதவியில் நான் பங்கு கேட்கவில்லை.

சுயராஜ்யம் வந்ததென்றால், குறைகளைச் சொல்லக் கூடவா உரிமை இல்லை

உங்களுக்குச் சுயராஜ்யம் வந்துவிட்டது, பதவி வகிக்கிறீர்கள் என்றால், எங்கள் குறைபாடுகளை எடுத்துச் சொல்லக்கூடவா எங்களுக்கு உரிமை இருக்கக் கூடாது? சுயராஜ்யம் வந்துவிட்டதென்றால், சுயராஜ்யத்தில் பதவி வகிக்க நேர்ந்த சுயராஜ்யப் புலிகள் மற்றவர்களை ஆடுகளைப் போல் கொன்று அழித்துத்தான் தீர வேண் டுமா? கொள்ளைக்காரர்களும், வஞ்சகர்களும், காலி களும் எப்போதும்போல் சாதுக்களை, யோக் கியர்களை, ஏழைகளை வஞ்சித்துத்தான், கொள்ளையடித்துத்தான் வாழ்ந்து வரவேண்டுமா? சுயராஜ்ய சர்க்கார் இதைத் தடை செய்தல் வேண்டாமா? சுயராஜ்ய சர்க்காரில் ஏழை கள்தான் அதிக வரி செலுத்தவேண்டுமா? சுயராஜ்யம் வந்து ஏழைகள் பட்டினி கிடக்கவேண்டுமா? சுயராஜ்யம் வந்துவிட்டதென்றால் ஒரு ஊரில் அரிசி ரூபாய்க்கு முக் கால்படியும், ஒரு ஊரில் அரிசி ரூபாய்க்கு இரண்டே கால்படியுமா விற்பது?

உண்மையாக கூறுகிறேன்; தோழர்களே! உங்களுக்கும் கேட்க அதிசயமாயிருக்கும். நமது மாநாட்டிற்குத் தேவை யான அரிசியை விலை சரசமாயுள்ள (அதாவது ரூபாய்க்கு இரண்டே கால்படி விலையுள்ள) தஞ்சை ஜில்லாவில் வாங்கிக் கொள்ள அனுமதி தரவேண்டுமென்று மந்திரி யாருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு மந்திரியார் பதில் எழுதியிருக்கிறார்.’ இந்த மாகாணத்தில் அந்த ஒரு ஜில்லாவில் தான் நெல் அதிகமாக (ஏனோ) விளைந்து விட்டது.  ஆகவே, அந்த அரிசியை வாங் கிக் கொள்ள உங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம். வேறு எந்த ஜில்லாவில் வேண்டு மானாலும் 50 மூட்டைகள் வரைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று எழுதியி ருக்கிறார். அதிக மாக விளைந்துள்ள ஊரில் நெல்லும், அரிசியும் மக்கிப் புழுப் புழுக்கவேண்டுமாம்! பற்றாக்குறை ஜில்லாவில் மேலும் அரிசி வாங்கி மேலும் அந்த ஊரில் பஞ்சத்தை அதிகமாக்க வேண்டுமாம்!

‘குடிஅரசு’ 29.05.1948

தூத்துக்குடி கழக மாநாட்டில் 

தந்தை பெரியார் அவர்களின் உரை

சனி, 18 மே, 2024

பகுத்தறிவுக்குத் தடைகள்!

விடுதலை ஞாயிறு மலர்
Published April 6, 2024

– தந்தை பெரியார்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி, உயிர்நாடி ஆகும்.
ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக் கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.
பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாட்களாகவே தடைப் படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவை அடைய முடியாமல் தடை செய்துகொண்டு வந்தார்கள்.
மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி, அவைகளை மக்கள் நம்பும்படி செய்து விட்டார்கள். கடவுள் என்றால் ஒத்துக் கொள்ள வேண்டும். எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.

இதைப் போலவே மதத்திற்கும் என்ன? எப்படி? என்று சிந்திக்கக் கூடாது என்று கூறி விட்டார்கள். இதைப் போலத்தான் சாஸ்திரமும்.
இதில் நாம் பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் காண்கிறோம். பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக் கொள்வது என்பது பொருள்.
நமது இழிநிலை, நமது முட்டாள்தனம் மாற வேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டிய தில்லை. பகுத்தறிவு கொண்டு தாராளமாக சிந்தித்தால் போதும்.

நமது கொள்கை பகுத்தறிவு
பகுத்தறிவு என்றால் நாஸ்திகம் என்பது பொருள். அறிவு கொண்டு சிந்திப்பதுதான் நாஸ்திகம் ஆகும். கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதது என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது.
எல்லா விதமான சர்வ சக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்து மற்ற உலகத்துக்கு ஒன்றுதான்.
ஆனால், நமக்குத்தான் ஆயிரக் கணக்கில் கடவுள்கள்!
நம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு கடவுளுக்கு உருவம் இல்லை;
நமது கடவுளுக்கோ பல்லாயிரக் கணக்கான உருவங்கள்.
மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை.
மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை.
நமது நாட்டுக் கடவுளுக்கோ மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும்.
மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் – யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கியிருக்கிறார்கள்.
நமது நாட்டுக் கடவுளுக்கோ இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது.
மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ, அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள்.

இப்படி ஏராளமான பேதங்களையும், நடப்புக்கு ஒவ்வாத காரியங்களையும், காரியத்திற்கு கேடான குணங்களையும் கடவுளுக்குக் கற்பித்திருக்கிறார்கள்.
இவைகளை எல்லாம் நம்புவதுதான் மூடநம்பிக்கை. நல்ல வண்ணம் சிந்தித்து, ஆராய்ந்து ஏற்க வேண்டியதை ஏற்றுக் கொண்டு மற்றதைத் தள்ளி விடுவதுதான் பகுத்தறிவு!
நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்தால் இல்லவே இல்லை.
உண்மையில் ஒரு கடவுள் இருக்கு மானால், நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
அந்தக் கடவுள், தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது?

– தலையங்கம், ‘விடுதலை’, 20.6.1973
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி