சனி, 22 ஜூன், 2024

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் – தந்தை பெரியார்

பெரியார் பேசுகிறார் – 

2023 ஆகஸ்ட் 16-31,2023 

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்,பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறி வருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின்மேல் நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கிறார்கள், அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து ஏவி விடுகிறார்கள்.

பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாக பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்; எதிர்பார்க்கிறேன். காரணம், போராட்டம் துவக்கினால் எனது மேற்கண்ட பிரச்சார வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவதுதான்.
கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காக கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால், எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ள வேண்டும்? “உண்டாக்கியவன் முட்டாள்ÕÕ என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே! நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய், ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம் ஆதாரம் என்ன?

முண்டமே! நீ நினைக்கிற கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கின்றாயா? அல்லது அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது கடவுள் யாராலும் உண்டாக்கப்படாமல், யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்லுவதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால் எதற்காக வரும்? நான் சொல்லுவதை கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால் தானே உண்டாக்கினவனை நான் முட்டாள் என்கின்றேன் என்று நீ கோபிக்க வேண்டும்.மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வரவேண்டும். நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கின்றாய் என்றுதானே அர்த்தம்?

அது மாத்திரமல்லாமல், நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்றுதானே கருத்தாகிறது?
இப்போது நீ நினைத்துப் பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா? (கிரியேஷனா) (Creation)அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா) (Invention) அல்லது கடவுள் இயற்கையாய் தோன்றினதா? (நேச்சரா) (Nature) இதை முதலில் முடிவு செய்துகொள்.

நான் சொல்லுவதன் கருத்து கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதுமல்ல; தானாகத் தோன்றியிருப்பதுமல்ல; முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக்கொண்டாலோதானே, கடவுளை
உண்டாக்கினவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக்கொள்ள வேண்டும்?

நீ இருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கும் ‘கடவுள்’ ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல; “தானாக- சுயம்புவாகத் தோன்றியிருக்கிறது”
என்பதுதான் இன்று கடவுள் நம்பிக்கைக்காரர்களின் கருத்தாக இருக்கிறது.ஆகையால், நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு, அதற்காகக் கோபிப்பவனை, ஆத்திரப்படுபவனை இரட்டை முட்டாள்என்று சொல்லவேண்டியவனாக இருக்கிறேன்.

இப்படி நான் சொல்லுவதால், கடவுளால் எவன் பெரிய ஜாதியாய் இருக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறானோ அவனுக்கும், கடவுள் பெயரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியத்தனங்களை மறைத்துக் கொள்ள வேண்டியவனுக்கும்தான் கோபம் வரவேண்டும். அதை நான் சமாளித்துக் கொள்கின்றேன்.


புதன், 19 ஜூன், 2024

விடுதலைக்குத் தடையான மதமும், சடங்குகளும்! – தந்தை பெரியார்



ஜூலை 1-15, 2023

“நான் இவ்வூருக்கு இதற்குமுன் இரண்டு தடவை வந்திருக்கிறேன், இது மூன்றாம் தடவை, தலைவர் சொல்லியபடி நான் இச்சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து பல விடங்களில் பேசி வருகிறேன். நாம் உண்மையில் விடுதலை பெற்று வாழ விரும்புவோமானால், சுயமரியாதை உணர்ச்சி நமக்கு வேண்டும். மற்ற நாடுகளில் விடுதலை பெற்று வாழும் மக்களிடம் சுய மரியாதை உணர்ச்சியே மிகுந்திருக்கிறதென்பதைச் சரித்திர வாயிலாகக் காணலாம். மற்ற நாடுகள் 300 அல்லது 400 வருஷங்களுக்கு மேல் அடிமைப்பட்டு சுயமரியாதை கெட்டு வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நாம் பல ஆயிரவருஷங்களாக விடுதலையின்றி அடிமைகளாகத்தான் இருந்து வந்திருக்கிறோம் என்பது நன்கு விளங்கும்.

முன்னர், சுமார் 500 வருஷங்களுக்கு முன் வெள்ளையர்கள் இருந்த நிலைமையையும், இப்போது அவர்களிருக்கும் நிலைமையையும் கவனிக்கையில் அவர்கள் எங்ஙனம் மாறுதலடைந்து வந்திருக்கிறார்கள் என்பது விளங்கும். இவர்கள் அக்காலத்தில் நம்மைவிட பக்தி, மூடக்கொள்கை முதலிய படுகுழிகளில் ஆழ்ந்து கிடந்தார்கள். நாம் நம் நாட்டில் நாகரிகம் படைத்திருந்த காலத்தில் அவர்கள் காட்டு மிராண்டிகளாக மீன், நண்டு, புழு, பூச்சி முதலியவைகளைப் புசித்துக்கொண்டு அநாகரிகர்களாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். அத்தகைய ஜாதியார்கள் தான் நம்மை அநாகரிகமுள்ளவர்கள், மிலேச்சர்கள் என்று பலவகை மொழிகளை நம்மீது சாற்றி, இழிவுபடுத்தி, அடிமைகளாக்கி ஆண்டு வருகிறார்கள். பல நூற்றாண்டுகளாக நாம் அடிமைக் குழியிலேயே இருந்தும், நாம் விழித்தெழுந்து நமது குறைகளைத் தீர்த்துக்கொள்ள முன்வரவில்லை. சுயராஜ்யம், விடுதலை என்றுதான் கத்திக் கொண்டிருக்கிறோம்; இப்படியெல்லாம் நாளுக்கு நாள் பலமாகக் கிளர்ச்சி செய்து கொண்டும், கூக்குரல் செய்து கொண்டு வந்தும் நாளுக்குநாள் நாம் பின்னோக்கியே செல்கின்றோம். இத்தகைய கூக்குரல்களைக் கேட்டுக் கேட்டு எதிரிகள் விழித்துக்கொண்டு விட்டார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நமது மதந்தான். மதசம்பந்தமான மூடக் கொள்கைகள், அசட்டுத்தன்மை, குருட்டுத்தனம் முதலியவைகளால் நாம் இவ்வளவு கேவலஸ்திதிக்கு வந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மதஸ்தர்களையும் எடுத்துக் கொண்டால், அந்தந்த மதஸ்தர்களுக்குத் தங்களுக்கென ஆள தேசமிருப்பதல்லாமல், சில மதஸ்தர்-கள் பிறநாட்டையும் ஆண்டுவருகிறார்கள்; நாம் நம்முடைய நாட்டையாவது ஆள சக்தியில்லாவிட்டாலும், அடிமை-களாகவாவது இல்லாமல் இருக்கின்றோமா என்று பாருங்கள்!

நேற்று தோன்றிய மதங்களெல்லாம் தங்களுடைய மதஸ்தர்களை ஆண்டு வரும் பொழுது,நம்முடைய மதஸ்தர்கள்தான் நம்மை ஆண்டுகொள்ள முடியாமல் அடிமைகளாயிருக்கின்றனர். நமது மதம் எத்தனையோ கோடி வருஷங்களுக்கு முன் கடவுளால் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நம்முடைய மதத்தி
லுள்ள கொள்கைகளும், குருட்டுத்தனங்களும், நாம் அக்கொள்கைகளைப் படிக்கக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகளுந்தான் நம்மை இக்கதிக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டன என்று சொல்வேன்.

நம் இந்துமதம் என்று சொல்லும் மதத்தைச் சற்று ஆராய்வோம். முதலில் இந்து என்கிற வார்த்தை நம் மொழியில் இல்லை. அவ்வார்த்தை நம்முடைய புராணம், ஆகமம் முதலியவைகளில் எங்கேனும் சொல்லப்பட்டிருக்கின்றதா என்று பார்த்தால் இல்லவே இல்லை. எங்கிருந்தோ வந்த இந்து என்ற வார்த்தை நம்முடைய மதத்துக்குப் பெயராகப் புகுந்து விட்டது. நம் நாட்டு மதத்துக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பெயர் நம்முடைய பாஷையில் அன்றோ இருக்கவேண்டும் அப்படிப் பார்த்தால் ‘இந்து’ என்னும் வார்த்தையே நம்முடைய பாஷையில் கிடையாது.

‘இந்து’ என்னும் பதத்துக்கு என்னபொருள் என்று கேட்டால் ஒருவருக்குமே தெரியாது. இப்படிப்பட்ட மதத்தைக் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட மதம், பெருமைகளையும் அற்புதங்களையும் உடையது என்று நம்மவர்கள் பெருமை பேசிக் கொள்கின்றனர்.

நேற்றைக்குப்போய் மற்றொரு மதத்தில் சேர்ந்த ஒருவனைக் கேட்டால் தன்னுடைய மதம், கொள்கை, தத்துவம் முதலியவைகள் இன்னின்னவென்பதை உடனே கூறிவிடுவான். அவன் தீண்டாத-வனாயிருந்தாலும் அம்மதத்தில் மற்றவர்களுக்குரிய சமத்துவம், சகோதரத்துவம் முதலிய சகல உரிமைகளும் தாராளமாய் வழங்கப்படுகின்றன. அவர்களுடைய வேதப் புஸ்தகங்கள் பல பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு இலவசமாய் மக்களுக்கு மூலை முடுக்குகளிலும் கொண்டுவந்து கொடுக்கப்படுகின்றன. ஆனால் நம்முடைய மதத்துக்கு ஏதாவது ஆதாரமும் இருக்கிறதா வென்று ஒருவரைக் கேட்டால் அவர், ஓர் ஆதாரமும் கிடையாது என்றுதான் சொல்வார். ஏனென்றால், இந்து மதத்துக்கு ஆதாரம் என்று சொல்லப்படும் ஆகமம், புராணம், வேதம் முதலியவைகளை ஒரு சாரார் தவிர, மற்றவர்கள் படிக்கக்கூடாது, கேட்கக்கூடாது, மீறிச் செய்தால்நாக்கை அறுத்துவிட வேண்டும், காதில் ஈயத்தைக் காய்ச்சிவிட வேண்டு-மென்று பல நிபந்தனைகளை நம் மதத்தில் ஏற்படுத்தியிருக்கின்றனர். இம்மாதிரியான மதத்தை ஒப்புக் கொள்கிறவன், அனுஷ்டிக்கிறவனை அறிவாளியென்றாவது, யோக்கியன் என்றாவது சொல்லக்கூடுமா?

இனி வேதங்களை ஒப்புக் கொள்கிறவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால்,
எத்தனையோ கொள்கைகளையும், பெருமைகளையுமுடைய ஒரு மதம், மக்களுக்கு எவ்வளவு தூரம் கல்வி அறிவு முதலிய துறைகளில் நன்மை செய்திருக்கிறதென்பதைப் பாருங்கள்! இவ்வளவு காலமாக இருந்து வந்த ஒரு மதத்திலுள்ள மக்களில் 100-க்கு 5 பேருக்குக்கூட கையெழுத்துப் போடத் தெரியாது. இன்னும் மற்ற மதஸ்தர்கள் தங்களுடைய மதத்தைப்பற்றி எவ்வளவு தூரம் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள். நாம் எவ்வளவு தூரம் பிரச்சாரம் செய்து வருகிறார்களென்று பார்த்தால், நாம் செலவு செய்வதில் 20-இல் ஒரு பங்குகூட அவர்கள் செய்வதில்லை.

நம்முடைய இந்துக் கோவில்களுக்கு வருஷத்தில் எவ்வளவு வருமானம் வருகிறதென்று பார்த்தால் அக்கோவில்-களின் கணக்குகளிலிருந்தே விளங்கும். லட்சம் லட்சமாக வந்து குவிகின்றன. நமது சென்னை மாகாணத்தில் மட்டும், கோவில்களின் வருமானம் இரண்டுகோடி ரூபாய் என்று சர்க்கார் கணக்கு வைத்திருக்கிறார்கள். இன்னும் ஸ்தல யாத்திரைக்காரர்களின் செலவுதான் என்ன!

கோவில் கணக்குகளைப் பார்த்தால் அரிசி, உப்பு, புளி, பாதாம்பருப்பு, திராட்சை முதலியவைகள் தான் இவ்வளவு இவ்வளவு என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் சமையல் பண்ணி சாப்பிடுகிறவர்கள் யார் என்று பாருங்கள். இவ்விதம் ஒருவழியில் வீண் செலவு நடந்து கொண்டிருக்கையில், நம் நாட்டில் விவசாயம், கைத்தொழில் முதலியவைகளை விருத்தி செய்வதற்குப் பணமில்லை யென்று அழுதுகொண்டிருக்கிறோம். இவ்விதம் கோவில்களில் செலவாகும் செலவுகளை யாராவது கவனித்தார்களா? இதைக் கவனிக்கத்தான் இந்துமத பரிபாலன போர்டார் சட்டம் செய்தார்கள். மற்ற மதஸ்தர்கள் இங்ஙனம் கோவில்களில் வீண் செலவு செய்யாமல், மக்களின் கஷ்ட நிவர்த்திக்கும் அறிவை விருத்தி செய்யப் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தி மக்களை மேன்மேலும் அபிவிருத்தி யடையச் செய்கின்றார்கள்.

இனி நம் மதத்தின் பெயரால் நம்மை அடிமைப்படுத்துவதும், விடுதலை-யடையத் தடையாயிருப்பதுமான நமது மதச்சடங்குகளைக் கவனிப்போம். கருத்தரித்த நாள் முதல்கொண்டு, கட்டையில் வைத்தற்குப் பின்னும் கற்பகோடி வருஷங்கள் வரை சடங்குகள் தோன்றிவிடுகின்றன. அர்த்தமற்ற, நிபந்தனையற்ற சடங்குகளின் பேரால் புரோகிதப் பார்ப்பானும் அரிசி, பருப்பு, இலை முதலியவைகள் மூட்டை மூட்டைகளாக பறித்துக் கொண்டு செல்கின்றார்கள். ஒருவனுடைய மரணத்துக்குப் பின்னும், அவனை மோட்ச லோகத்துக்குத் தான் அனுப்பிவிடுவதாக அவன் குடும்பத்தார்களிடம் பொய் வார்த்தைகள் கூறி வருஷா வருஷம் பணம் பறித்துக் கொண்டு செல்கின்றனர். இதெல்லாம் நமது மூடக்கொள்கையும், மூடத்தன்மையுமன்றோ? ஆகையால், இப்புரோகித மதத்தை ஒழித்தாலன்றி நாம் ஒருநாளும் முன்னேற முடியாது. மற்ற நாடுகளில் பிறமதஸ்தர்களும், தங்களுடைய புரோகித மதத்தை ஒழித்த பின்புதான் அந்நாட்டு மக்கள் விடுதலையடைந்திருக்கின்றனர்.

இனி மதாச்சாரியர்கள், குருமார்கள் முதலியவர்களைக் கவனிப்போம். இவர்கள் குதிரை, பல்லக்கு முதலியவைகளைப் போட்டுக் கொண்டு, கொள்ளைக்காரர்கள் போல ஊர் ஊராய் வந்திறங்கி, அங்குள்ள உத்தியோகஸ்தர்கள், மிராசுதார்களின் செல்வாக்கை அனுகூலமாகக் கொண்டு மூட்டை, மூட்டையாக பணத்தைப் பலரிடமிருந்து பறித்துக் கொண்டு செல்கின்றனர். இவர்கள் சொல்லி வாங்கும் வகைகளுக்காவது அப்பணத்தைச் செலவு செய்கின்றார்களா பாருங்கள். இல்லையே!

அத்தகைய மடாதிபதிகள் குருமார்கள் பணத்தைக் கொண்டுபோய் என்ன செய்கிறார்கள்? அவர்கள் யோக்கியதை என்ன? அவர்கள் நமக்கு என்ன உபதேசம் செய்கின்றார்கள் என்பதையே நாம் கவனிப்பதில்லை. இவர்களெல்லாம் குலகுருக்களென ஆடம்பரத்துடன், எவ்வித யோக்கியதையும், இலட்சணங்களுமின்றி ஊர் ஊராய் கம்பீரமாய் வருகின்றனர். இவர்களிடம் அயோக்கியத்தனமே நிறைந்திருக்கிறது.

இனி நாம் வணங்கும் தெய்வங்களைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். சில்லரைத் தேவதைகளெனப் பெயர் பெற்ற மாடன், கருப்பன் முதலிய சாமிகளுக்குக் கள், சாராயம் முதலியவைகளை வைத்து ஆராதனை செய்து வருகிறோம். இனி பெரிய தெய்வங்களையுடைய கோவில்களுக்குப் போய்ப் பார்த்தால் அங்கு தாசிகளை நடனமாடச் செய்திருப்பது முதலிய ஆபாசமான பழக்கங்களை உண்டுபண்ணி ஆடம்பரமான வகைகளில் வீணாக விரயம் செய்யப்படுகிறது.

இனி நம் இந்து மதஸ்தர்கள் அணிந்து கொள்ளும் சின்னங்களின் அர்த்தமென்ன வென்று கேட்டால் ஒருவருக்கும் ஒன்றுமே தெரியாது. இதை எல்லாம் பொதுஜனங்களுக்கு உணர்த்த எவரேனுமிருக்கின்றனரா? இம்மாதிரியான அர்த்தமற்ற சடங்குகள், மூடக் கொள்கைகள் முதலிய ஊழல்களால் எத்தனை ஆயிரம் ஜனங்களை நாம் பிற மதங்களுக்குப் பலி கொடுத்திருக்கின்றோம் என்று கவனியுங்கள். ஓர் இந்து அரசால் ஆளப்படும் திருவாங்கூர் ராஜ்யத்தில் சுமார் 35 வருஷங்களுக்குமுன் இருந்த மூன்று லட்சம் கிறிஸ்துவர்கள், இப்போது 15 லட்சமாகப் பெருகிவிட்டனர். இப்படி நாம் நமது மதத்தின் பேரால் பலரை அந்நிய மதங்களுக்கு அனுப்புவதல்லாமல், ஆயிரக்கணக்கான நமது சகோதரர்களை உயிருடனேயே சனீஸ்வரர்களாகிய பிராமண எமன்களுக்கு ஆளாகும்படி செய்து வருகிறோம்.

இனி, மதத்தின் பெயரால் சிறு பெண்களைக் கோவில்களில் பொட்டுக் கட்டி விபசாரத்துக்கு விட்டு வைப்பதைத் தடுக்கும் பொருட்டு சென்னை சட்ட சபையிலும், வெளியிலும் பலத்த கிளர்ச்சி செய்யப்பட்டது. இதைப் பெரும் பாலோரான பிராமணரல்லாதார் ஆதரித்தும், சத்தியமூர்த்தி போன்ற பிராமண அரசியல் தலைவர்கள் தேவதாசிகளைக் கோவில்களில் பொட்டுக்கட்டி வைப்பது மத சம்பந்தம் என்று அதை எதிர்த்துப் பிரசங்கங்கள் செய்தனர்.

இவர்களெல்லாம் போலிகளென்றும், வயிற்றுப்பிழைப்பின் பொருட்டு பணம் பறித்து தின்று திரிபவர்கள் என்றும் தான் சொல்லுவேன். இதனால் தான் ஸ்ரீ மேயோ போன்ற பிற நாட்டார்கள் நம்மை இழிவுபடுத்தி புஸ்தகம் எழுத இடமேற்படுகிறது. அதனால் நாம் இப்போது அனுஷ்டித்து வரும் மதம், மூடக்கொள்கை ஆகியவைகள் ஒழிந்தால் தான் நாம் க்ஷேமடைவோம்.

இத்தகைய சடங்குகளும், கிரியைகளும் செய்து பணத்தைச் செலவிட்டும், நம் மதஸ்தர்களுக்குள் ஒருவருக்கொருவர் கட்டுப்பாடு சிறிதேனும் உண்டா? இல்லையே. கட்டுப்பாடு இல்லாமற் போய் விட்டதுடன், ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வும் நமது மதம் கற்பிக்கிறது.

– ‘குடிஅரசு’, – 20.11.1927


ஜாதி வித்தியாசமும் தீண்டாமையும் – தந்தை பெரியார்



 ஜூன் 16-30,2023

பெரியார் பேசுகிறார்

மக்களில் ஜாதி வித்தியாசம் என்பதுகற்பிக்கப்பட்டதே ஒழிய தானாகஏற்பட்டதல்ல. வலுத்தவன் இளைத்தவனை அடக்கி வைக்கும் தர்மமே ஜாதி வித்தியாசமாகும். இது இன்னும் நிலைத்திருப்பது என்றால் இந்த நாடு மிருகப் பிராயத்தில் இருந்து மனிதப் பிராயத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது.

எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும் மற்றொரு மனிதன் தாழ்ந்த ஜாதியாகவும் கருதப்படுகின்றான் என்பதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? மனிதர்களை எடுத்துக்கொண்டால் ஜாதியின் காரணமாக பிறவியிலாவது வாழ்க்கையிலாவது ஒழுக்கங்களிலாவது அறிவிலாவது வித்தியாசங்கள் காணப்படுகின்றனவா? ஒன்றுமே இல்லையே. அப்படி ஏதாவது ஒரு வழியில் இயற்கையில் பிரிந்திருந்தாலும் இதற்கு சமாதானமாவது சொல்ல முயற்சிக்கலாம். ஒரு காரணமும் இல்லாமல் இது வெறும் பிறவி மாத்திரத்தில் எதேச்சாதிகாரமாய்ச் செய்யப்பட்ட கொடுமையாகத்தானே விளங்குகின்றது. இந்த முறை மக்களின் ஒழுக்கத்திற்கே நேர் விரோதமாக இருக்கவில்லையா?

சகோதரர்களே! இதைக் கொடுமையென்று ஒப்புக் கொள்ளாதவர் யார்? இதை ஒழிக்க வேண்டுமென்று சொல்லாதவர்கள் யார்? இந்த ஜாதிக் கொடுமையை ஒழிப்பதற்காக எத்தனை காலமாக முயற்சி செய்யப்பட்டு வருகின்றது? “ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கூடாது, அதற்கு ஆதாரம் இல்லை’’ என்று சொல்லாத பெரியார் யார்? ஆயினும் இதுவரை ஏதாவது பலன் ஏற்பட்டிருக்கின்றதா? ஒரு சிறிதும் காணப்படவில்லையே. இதற்கு ஏதாவது ஒரு வழி செய்துதானே ஆகவேண்டும்? எனவே இதற்கு சரியான வழி அறிவினாலோ, ஞானத்தினாலோ, போதனையினாலோ ஏற்பட்டுவிடும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இது பெரிதும் இது சமயம் அரசாங்க சட்டத்தினாலும், அரசியல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தினாலும் தான் இதை (அதாவது இந்த உயர்வு தாழ்வு வித்தியாசத்தை) ஒழிக்க முடியும்.

ஆனாலும், இது அரசியல் கூட்டமல்ல; இங்கு நான் அரசியலைப்பற்றிப் பேசப்போவதில்லை. அரசாங்கத்தில் நமது முன்னேற்றத்திற்குப் பலவித சட்டம் வேண்டும் என்று கேட்பதுபோல் எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கின்றோம். இதையும் ஏன் வேண்டும் என்கின்றோம் என்றால் வலுத்தவன் இளைத்தவனை நசுக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவேதான். இப்படிக் கேட்பது சமுதாய சீர்திருத்தத்தின் பாற்பட்டதாக இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். இன்னும் ஒரு அவசியமும் சொல்லுகின்றேன்.

அரசியல்காரர்கள் நாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்கும்போது “எதற்காக வகுப்பு வித்தியாசத்தைக் கற்பிக்க வேண்டும்? எல்லோருக்கும் சமத்துவமாக இருக்கலாமே’’ என்கின்றார்கள். இதை நம்பி இந்தப்படியே சமுதாய இயல்காரர்கள் “அது மதத்திற்கு விரோதம்’’ என்கிறார்கள்; “மத ஆச்சாரியார்கள்’’ “மதத்தில் சர்க்காரோ சட்ட சபையோ பிரவேசிக்கக்கூடாது’’ என்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் ஒவ்வொரு வகுப்பும் தனித்தனியாய்ப் பாடுபட்டுப் பிரதிநிதித்துவமும் அதிகாரமும் பெற்றுதான் ஆகவேண்டும் என்பதும், அதற்கு ஒவ்வொரு வகுப்புக்கும் பிரதிநிதித்துவ உரிமை அளிக்க வேண்டியது அவசியம் என்று சொல்லுவதும் சரி என்று தோன்றவில்லையா? அடுத்தப்படியாக உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவது என்னவென்றால் ஜாதி வித்தியாசம் என்பதற்கு தீண்டாமை என்பதாகும்.

தீண்டாமை

தோழர்களே!
தீண்டாமை என்பதைப்பற்றி நான் ஏதாவது சொல்லவேண்டும் என்பதாக நீங்கள் யாவரும் எதிர்பார்க்கமாட்டீர்கள் என்றே கருதுகின்றேன். மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கின்றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரத்தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகுங்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்லவந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இம்மாதிரி கொடுமைப்படுத்தி தாழ்த்தப்பட்ட ஒரு பெரிய மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என்பதும், இம்மாதிரியான மக்கள் இன்னமும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர்வாழ்வதை விட, அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா என்பது எனக்கு விளங்கவில்லை.

இம்மாதிரி ஒரு பெரிய மனித சமூகத்தைக் கொடுமைப்படுத்தி அடக்கிவைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு, சுயராஜ்யம் என்றோ, அரசியல் சுதந்திரம் என்றோ, பூரண விடுதலை என்றோ வாயினால் உச்சரிக்கவாவது யோக்கியதை உடையதாகுமா என்று கேட்கின்றேன். சிலர் “சுயராஜ்யம் வந்துவிட்டால், பூரண சுயேச்சை வந்து விட்டால் இவைகள் ஒழிந்து போகும்’’ என்று சமாதானம் சொல்லக்கூடும். அவர்களை நான் ஒன்று கேட்கின்றேன். சுயராஜ்யம் மட்டுமல்ல. “தர்மராஜ்யமும்’’ அவதார ராஜ்யமும் ஆகிய “ராமராஜ்யமும்’’ “சத்திய சந்தன்’’ ராஜ்யமாகிய அரிச்சந்திர ராஜ்யமும், மற்றும் கடவுளே அரசாண்டதாகச் சொல்லும் அரசாட்சிகளும் உள்ள காலத்தில்தானே தீண்டாமை முதலியவைகள் உண்டாக்கப்பட்டதாகவும், அவற்றைச் சரிவர பரிபாலித்து வந்ததாகவும், அக்காலத்தில் மகாக்கிரமமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. எனவே மறுபடியும் அந்த ராஜ்யங்கள் வருமானால் இந்தக் கொடுமைகள் குறையுமா? அதிகரிக்குமா? என்று கேட்கின்றேன். ஆதலால் இக்குற்றங்கள் நமது நாட்டைவிட்டு ஒழிக்க முயற்சிக்க வேண்டியது சமுதாய சீர்திருத்தக்காரர்களின் கடமை மாத்திரமல்லாமல் அரசியல் சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களுடையவும் முக்கியமான கடமையேயாகும்.

கல்வி

இனி கல்வி என்பதைப்பற்றியும் சீர்திருத்தக்-காரர்கள் கவனம் செலுத்த வேண்டியது அதிகமுண்டு.
‘கல்’ என்பதற்கு அறி என்பது பொருள். கல்வி என்றால் அறிவி தெரிவி என்பதுதான் பொருளாயிருக்க வேண்டும்;. எனவே எதை அறிவிப்பது என்று கவனித்தால் உலக சுபாவத்தையும் மனிதத்தன்மையையும் அறிவிப்பதே கல்வியாகும். மற்றவைகள் வித்தையாகும். இதற்கு

உதாரணமாக,
“ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்’’

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலாதார்’’

என்ற வள்ளுவர் வாக்கே போதுமானது. ஆதலால் உலக நிலையையும் அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளத்தக்க மனிதத்தன்மையுமே முக்கியமாய்க் கொண்டு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும். இப்போதைய கல்வி என்பது மனிதத்தன்மைக்கும் அறிவுக்கும் சிறிதும் பொருத்தமானதல்ல. குடிகளிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு பொறுப்பற்ற அரசன் தனது பிரஜைகளை மூடர்களும் தேசத்துரோகிகளுமாக ஆக்கி தனது காலடியிலேயே அழுத்தி வைத்துக்கொண்டு நிரந்தரமாய்த் தன்னிச்சைப்படி ஆட்சி புரியவேண்டும் என்று கருதுகின்ற ஒரு அரசாங்கத்திற்கு அனுகூலமான கல்வியாகவே இருந்து வருகின்றது. அதுமாத்திரமல்லாமல், ஊரார் உழைப்பில் நோகாமல் வயிறு வளர்க்கக் கருதும் அயோக்கியர்களின் ஆதிக்கத்திற்கு அனுகூலமான கல்வியே அளிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, இவை அடியோடு மாற்றப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் பக்தி, மதபக்தி, இராஜபக்தி ஆகிய அறிவுத்தடையும் அடிமைப் புத்தியும் கற்பிக்கக் கூடிய விஷயங்கள் கல்விச் சாலைகளுக்குள் தலைகாட்டவே விடக்கூடாது; ஏனெனில், கடவுளிடத்திலும், மதத்தினிடத்திலும், அரசனிடத்திலும் பக்தியாய் இருக்கும்படி அவரவர்களே செய்துகொள்ள வேண்டுமே ஒழிய, இதற்காக ஒரு பள்ளிக்கூடம் வைத்து மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது அயோக்கியத்தனத்தின் முதல் பாகமாகும்.
கல்வி கற்பிக்கும் வேலை இது சமயம்முக்கியமாய் பெண்களுக்கும், தீண்டாதார் ஆக்கப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்குமே செய்ய வேண்டுமே ஒழிய, ஏற்கெனவே கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் என்கின்ற சமூகத்திற்கும், பாரம்பரியமாகவே கல்வி அறிவோடு இருப்பதாகச் சொல்லப்படுபவர்களுக்கும், பிறவியிலேயே தங்களை அறிவாளிகள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் இப்போது சிறிதும் கல்வி கற்பிக்க வேண்டியதே இல்லை.

எனவே, குறைந்தது ஒரு பதினைந்து வருஷத்திற்காவது உயர்தரக் கலா சாலைகளையும் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களையும் காலிசெய்து முன் சொன்ன கல்வியும் அறிவும் இல்லாதவர்கள் என்கின்ற கூட்டத்திற்கே பள்ளிக்கூடம் வைத்துக் கற்பிக்க வேண்டும். யோக்கியமான அரசாங்கம் இதைத்தான் முதலில் செய்யும், உண்மையான சீர்திருத்தக்காரர்களும், கல்வித்துறையில் இதைத்தான் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.

– தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய தலைமை உரை
குடிஅரசு – 2.12.1928


ஞாயிறு, 16 ஜூன், 2024

பெண்களுக்குத் தற்காப்பு


2023 பெரியார் பேசுகிறார் ஜூன் 1-15, 2023

– தந்தை பெரியார்

பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்படுமா, என்று மத்திய சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் “மாகாண சர்க்கார் அவசியமானதைச் செய்யும்’’ என்று உள்நாட்டு மந்திரியான தோழர் பட்டேல் கூறியிருக்கிறார்.

மாகாண சர்க்கார்கள் இத்துறையில் எதுவும் செய்யும் என்ற நம்பிக்கை நமக்கில்லை. ஏனெனில், பெண்களை அடிமைப் பிறவிகளாக நினைக்கும் வைதீக மனப்பான்மை படைத்தவர்களே பெரிதும் மாகாண மந்திரிகளாயிருக்கின்றனர். ஆங்காங்கு இரண்டொரு பெண்களும் மந்திரிகளாயிருக்கின்றனர் என்றாலும், இவர்கள் “எங்களுக்கு எந்த விடுதலையும் வேண்டாம்! அடிமைத்தனமே ஆனந்தம்’’ என்று சொல்லக்கூடிய பத்தாம் பசலிகளாகவே இருக்கின்றனர்.

இந்தியப் பெண்கள் கல்வி, சொத்து, திருமணம் வாழ்க்கைகள் ஆகிய எந்தத் துறையிலும் சுயேச்சையில் வந்தவர்களாயிருக்கின்றனர். நவீன நாகரிகம் என்றால், பிரிட்டிஷ் பெண்களைப் போலவும், அமெரிக்க சிங்காரிகளைப் போலவும் உடை உடுத்துவதும், அலங்கரித்துக் கொள்வதும்தான் எனக் கருதியிருக்கிறார்களே தவிர, ரஷ்யப் பெண்களைப் போலவும், துருக்கிப் பெண்களைப் போலவும், போலீஸ், இராணுவம், விமானம் ஓட்டுதல் போன்ற காரியங்களையும் ஆண்களைப் போலவே செய்ய வேண்டும் என்ற நினைப்பே நமது படித்த பெண்களுக்குக்கூட இருப்பதில்லை.

தற்காலப் படிப்பு ஆண்களை எப்படித் தொடை நடுங்கிகளாகவும், வெறும் புத்தகப் பூச்சிகளாகவும் ஆக்கிவிட்டதோ, அதைப்போலவே, நம் பெண்மக்களையும் வெறும் அலங்காரப் பொம்மைகளாகவும், புல் தடுக்கிகளாகவும் ஆக்கிவிட்டது.
உயர்படிப்புப் படித்துப் பட்டமும் பெற்ற பெண்கள் “ஆண்டாள் அன்பு’’ பற்றியும், “காரைக்காலம்மையாரின் சிவபக்தி’’ பற்றியும் பேசிப் பொழுது போக்குகிறார்களென்றால், நம் பெண்களுக்கு நவீன மேல் நாட்டுக்கல்விகூட ஒருவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லையென்பது கண்கூடு.

நம்முடைய ஆட்சி முறையில் அடிப்படையான, புரட்சிகரமான, மாறுதல் ஏற்பட்டலொழிய, இந்தியப் பெண்களை சுயேச்சையுள்ள ஜீவன்களாக ஆக்குவது முடியாத காரியமேயாகும்.

பெண்களுக்கு உத்தியோகம் கொடுப்பதைப் பற்றிப் பேசியுள்ள ஒரிஸா முதன் மந்திரியார், போலீஸ் இலாகாவைத் தவிர, மற்ற சர்க்கார் இலாகாக்களில் பெண்களுக்கு உத்தியோகம் அளிப்பதென்று ஒரிஸா சர்க்கார் தீர்மானித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

இம்மாகாண சர்க்காரைக் காட்டிலும் முற்போக்கான முடிவைச் செய்துள்ள ஒரிஸா சர்க்காரை நாம் பாராட்ட வேண்டியதுதான். ஏனெனில் பெண்கள் ஆசிரியர் வேலைக்கும், டாக்டர் வேலைக்கும், நர்சு வேலைக்கும், குமாஸ்தா வேலைக்கும் தவிர, வேறு பதவிகளுக்குத் தகுதியற்றவர்கள் என்றே சென்னை சர்க்கார் கருதியிருப்பதாகத் தெரிகிறது. இதைப்பற்றி பெண் மந்திரியான தோழியர் ருக்மணி லட்சுமிபதி அம்மாளுக்குச் சிறிதும் கவலையிருப்பதாகவே தெரியவில்லை. அவர்களிடம் முற்போக்கான திட்டங்களையோ, பெண் இனத்தின் சுதந்திரத்திற்கான முயற்சிகளையோ எதிர்பார்ப்பது, 20 வயதுள்ள இளங்காளை, 75 வயதுக் கிழவியை ஓட்டப்பந்தயத்திற்குக் கூப்பிடுவது போலவேயாகும்.

ஆனால் ஒரிஷா சர்க்கார், போலீஸ் இலாகாவை மட்டும் நீக்கி வைத்திருப்பதன் காரணம் நமக்கு விளங்கவில்லை. போலீஸாருக்குப் பொதுமக்கள் அஞ்சுகிறார்களென்றால், அவர்களுக்கிருக்கும் தனிப்பட்ட வலுவினால் அல்ல; அவர்கள் கையில் உள்ள குண்டாந்தடி அல்லது துப்பாக்கிக்கும், அவர்களுக்குள்ள அதிகாரத்துக்குமே பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, பெண்கள் கையிலும் போலீஸ் துப்பாக்கியைக் கொடுத்தால், தபாலா பீசைக் கொளுத்திய மாஜி “ஆகஸ்ட்வீரன்’’ கூட அவரைக் கண்டு ஓட்டம் பிடிப்பான் என்பது நிச்சயம்.

ரஷ்யாவில் பெண் போலீஸ் மிகத் திறமையாக வேலை செய்கிறது. ரஷ்யப் பெண்கள் விமான மோட்டுவதிலும், விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதிப்பதிலும் வல்லுநர் எனப் பெயர் பெற்றிருக்கின்றனர்.இந்நாட்டிலும் போலீஸ் வேலை செய்யும் துணிவும். திறமையும், ஆசையும் உள்ள பெண்கள் ஆயிரக்-கணக்கிலிருக்கின்றனர். பெண்கள் படிப்பதே பெரிய அதிசயமாகவும், சைக்கிள் விடுவதே வேடிக்கையாகவும் கருதப்பட்டதுபோலவே, போலீஸ் உத்தியோகமும் சில ஆண்டுகள் வரையில் அதிசயமாகத் தோன்றலாம். பிறகு நாளடைவில் அதுவும் இயற்கைக் காட்சியாகவே போய்விடும்.

எனவே, பெண்கள் முன்னேற்றத் துறையில் ரஷ்யா, துருக்கி போன்ற பெண் இனப்புரட்சி நாடுகளை இந்தியா பின்பற்றினாலொழிய, நம் பெண்கள் என்ன கல்வி கற்றாலும், எவ்வளவு சொத்துரிமை பெற்றாலும், வெறும், ‘நகை பீரோவாகவும்’, ‘உடை ஸ்டாண்டாகவும்’ தான் இருப்பார்கள். பெண் உலகில் தலைகீழான புரட்சி ஏற்படக் கூடிய முறைகள் நமக்குத் தேவை. அதுவரையில் திரவுபதையைப் பற்றியும், சீதையைப் பற்றியும் பேசியும் எழுதியும் வருகின்ற ஆமைத் தன்மைதான் இருக்கும். “பெரோவிஸ்காயா’’ போன்ற ரஷ்ய வீரப்பெண்கள் நம் நாட்டில் தோன்றவே முடியாது, நளாயினிகள் போன்ற தன்மானமற்ற அடிமைகள் தான் தோன்ற முடியும்.

(18.11.1946 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)


அறிவு வளர்ந்தால் மடமை மறையும்

பெரியார் பேசுகிறார் – 

2023 பெரியார் மே-16-31,2023

– தந்தை பெரியார்

நம் மக்களின் பொருளாதார நிலை கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்
தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர் வேண்டுமானால் மில் தொழிலாலும், சினிமா தொழிலாலும், ஓட்டல் தொழிலாலும் கொள்ளை லாபம் அடைந்து கொழுத்த பணக்காரர்களாகி இருக்கலாமே ஒழிய, சாதாரண மக்களாகிய 100-க்கு 90 பேருடைய வாழ்க்கைத் தரம் அப்படியேதான் இருந்து வருகிறது. முன்பு மூன்று அணா சாப்பாடு சாப்பிட்டவன் இன்று ஒரு ரூபாய் சாப்பாடு சாப்பிடலாம். ஆனாலும், மூன்று அணாவுக்கு அன்று கிடைத்த அளவு உணவு இன்று ஒரு ரூபாய்க்குக் கிடைப்பதில்லையே! முன்பு ஆறு அணா கூலி சம்பாதித்தவர்கள், இன்று ஒரு ரூபாய் சம்பாதிக்கலாம். அவ்வளவுதான். ஆனால், மூன்று ரூபாய் சம்பாதித்தாலும் பழைய ஆறு அணா வசதி இல்லை. சில அணா அளவில் தான் கூலி உயர்ந்ததே யொழிய, ஏழை மக்களுக்கு, பாட்டாளிகளுக்கு வாழ்க்கைத் தரமொன்றும் உயர்ந்து விடவில்லை. ஆனால், முதலாளிகள் கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். இராஜபோகம் அனுபவிக்கிறார்கள்.

மற்ற தேசங்களில் எத்தனையோ புதுப் புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நம்நாட்டில் ஒன்றுகூட கண்டு பிடிக்க வசதி ஏற்படவில்லை. மற்ற நாட்டினரின் கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்தியாவது அதிகமான பலன் பெற்றிருக்கிறோமா என்றால் அதுவும் பொதுமக்களுக்கு இல்லை. அவற்றைச் சரிவர உபயோகிக்கக் கூட நம் நாட்டில் வசதி செய்து தரப்படுவதில்லை. நம் அறிவு முன்னேற்றத்துக்கும், நம் ஆட்சிக்கும் அவ்வளவு தூரம் பாமர மக்களின் நன்மையைப் பற்றி, அவர்களது வாழ்க்கையும் சிறிதாவது உயர்வடைய வேண்டும் என்பது பற்றி யாரும் கவலை எடுத்துக் கொள்வதில்லை. கோவையிலுள்ள ஒரு சாதாரண தொழிலாளிகூட தனக்குப் போதிய வருவாய் இருந்தால் தன் மகனை கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைக்க முடியும். கோவை ஜில்லாவைச் சேர்ந்த ஆனைமனையிலுள்ள பெரிய மிராசுதாரர்கூட பண வசதியிருந்தும் தன் மகனை கல்லூரிப் படிப்புக்கு அனுப்ப முடியாது. காரணம், மகனை நகரத்திற்கு அனுப்பினால் தக்க கண்காணிப்பு இல்லாததால் அவன் சிகரெட்டுக் குடிக்கிறான், சினிமா பார்க்கிறான், கண்ட பெண்களைக் காதலிக்கிறான், கடைசியில் காலியாக வீடு திரும்புகிறான். எனவே, கிராமத்திய மக்களுக்குப் படிக்க வசதியில்லாமல் போய் விடுகிறது.

சுதந்திரம் எப்படி சில பேருக்கே சுகம் அனுபவிக்கும் வாய்ப்பாக ஆக்கப்பட்டு விட்டதோ, அப்படியே மற்ற வசதிகளும் சில பேருக்கே உரியதாக ஆக்கப்பட்டு விட்டன. சுதந்திரம் வந்தும் இன்னும் ஒருவன் பட்டதாரியாக, 22 வயது ஆக வேண்டியிருக்கிறது.
அந்தப்படிப்பும் அவன் செய்யப்போகும் உத்தியோகத்திற்கு எவ்வகையிலும் உபயோகப்படாத படிப்பாக இருக்கிறது. 22 வயது
வரை படிக்க வைத்தும் அது வீண்செலவாகவே ஆகி விடுகிறது. கல்லூரிப் படிப்புக்குப் பணம் செலவழிக்க முடியாதவனாகவே பல குடியானவர்கள் தங்கள் மக்களைக் கல்லூரிகளுக்கு அனுப்புவதில்லை. எப்படியேனும் படிப்புச் செலவு குறைக்கப்பட்டாக வேண்டும். குறைந்த செலவில், குறைந்த காலத்தில் அவனவனது வாழ்க்கைக்குப் பயன்தரத் தக்கதான படிப்பு கற்பிக்கப்பட வசதி செய்து தரப்பட வேண்டும். சாதாரணமாக ஆபீஸில் குமாஸ்தா வேலை பார்க்க வேண்டிய ஒருவனுக்குச் சரித்திரமோ, பூகோளமோ, அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரியோ தேவையில்லை அல்லவா? சப்- இன்ஸ்பெக்டர் வேலைக்கு ஒருவன் கேல்குலஸ் ஏன் படிக்க வேண்டும்? தாசில்தார் உத்தியோகத்திற்கு இடினா ஏன்? இருந்தாலும் எந்த உத்தியோகத்துக்கென்றாலும் குறைந்தது பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டுமாம். ஏனப்பா இது அவசியமா என்று கேட்க யாரும் துணிவதில்லை.

ஒரு வருடத்திற்கு 365 நாள் என்றால், அதில் கல்லூரி வேலை செய்வதெல்லாம் 150 நாள்தான். மற்ற 200 நாளும் வீண்தான். ஆசிரியர்களுக்குத் தரும் சம்பளமும் வீண்தான். ஏனப்பா இப்படிப் பிள்ளைகளின் நல்ல காலத்தை வீணாக்க வேண்டும் என்று கேட்டால், கேட்ப வனுக்கு ஆதரவு கிடையாது. ஓட்டும் கிடைக்காது. பி.ஏ. படித்துத்தான் என்ன லாபம்? விஞ்ஞானம் படித்த பட்டதாரியே நெற்றியில் விபூதியும், நாமமும், பொட்டும், குங்குமமும் அப்பிக் கொண்டு திரிகிறானே! அது மட்டுமா? காவடி தூக்கிக் கொண்டு குதித்தாடும் பட்டதாரிகளும் கூட இருக்கிறார்களே இன்னும். பாமர மக்கள், பாட்டாளி மக்கள் இவர்களைப் பார்த்தே இன்னும் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகிவிடுவார்கள்போல் இருக்கிறதே. எனவே தோழர்களே, தொழிலில் முன்னேற்றமில்லை, விவசாயத்தில் முன்னேற்றமில்லை, பொருளாதாரத்தில் முன்னேற்றமில்லை, கல்வியிலும் முன்னேற்றமில்லை. ஏன் மக்கள் முன்னேற்றத்திற்குத் தயாரிக்கப்படவில்லை? மக்கள் தயாராகாதவரை ஆட்சியும் பயன்பெறும் காரியம் செய்தல் கூடாது.

எனவேதான் நாம் அன்று முதலே கூறி வருகிறோம்; நாங்கள் அரசாங்கத்திற்கு விரோதிகள் அல்ல. காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்கவும் நாங்கள்
ஒன்றும் ஆசைப்படுபவர்களல்ல. ஆட்சியிலுள்ளவர்களைக் கொண்டேதான் மக்களுக்கு நலமானதைச் செய்ய விரும்புகிறோம் என்று அரசாங்கம் நடத்துவோரும் அரசாங்கத்தின் குறை காண்போரும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பாக தேர்தலில் நிற்போரும் முதலில் மக்களின் அறிவைப் பயன்படுத்துவதில் தம் கவனத்தைச் செலுத்த வேண்டும். மக்களைத் திருத்துவதில், அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துவதில் முழுக் கவலையும் செலுத்த வேண்டும். படிப்பினால் மட்டுமே மக்களைத் தெளிவுள்ளவர்களாக ஆக்கிவிட முடியாது. பரீட்சையில் நல்ல மார்க் வாங்கி விட்டதாலேயே ஒருவனைப் பகுத்தறிவாளியென்று நம்மால் ஒப்புக் கொள்ள முடியாது. மக்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும். அப் பிரச்சாரம் மூலம்தான் ஏதேனும் இன்றைய கஷ்டங்களுக்குப் பரிகாரம் காண முடியும். இன்று பெரும்பாலான மக்கள் பெரும் மனக்கஷ்டத்திற்குப் பலியாகி இருக்கின்றனர். வாழ்க்கையில் எவ்வித உற்சாகமும் அவர்களால் காண முடியவில்லை. சிலர் சுகம் அனுபவிப் பதைப் பார்த்து பலர் கஷ்டப்படுகின்றனர். தங்களுக்குப் போதுமானது கிடைக்க-வில்லையே என்பது மட்டுமே கஷ்டத்திற்குக் காரணம் இல்லை. பிறர் தம்மைவிடஅதிகம் அடைகிறார்களே என்ற கஷ்டமும் அதிகமாக இருந்து வருகிறது. வாழ்க்கையிலுள்ள மடுவுக்
கும் மலைக்கும் போன்ற அளவு வித்தியாசம்தான் பெரிதும் கஷ்டத்திற்குக் காரணமாய் அமைந்திருக்கிறது.

இது மாற்றப்பட வேண்டுமானால் பகுத்தறிவுப் பிரச்சாரம் தான் செய்யவேண்டும். சகல துறைகளிலும் மக்களுக்கு அறிவு புகட்டப்-படல் வேண்டும் இது நம் தென்னாட்டுக்கு மட்டுமே அல்ல. அகில இந்தியாவுக்குமே தேவையானதாகும். என்றாலும், நம் தென்னாடு தான் பகுத்தறிவுப் பிரச்சாரம் நன்கு செழித்து வளர்வதற்கான பண்பாடு பெற்றிருக்கிறது.

எனவே, முதலில் நம் தென்னாட்டைப் பற்றி கவலை எடுத்து கொள்ள வேண்டும் என்கிறோம். வடநாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதெல்லாம் எதிர்நீச்சல் வேலையாகும். உயர்மேடு ஏறும் வேலையாகும். நான் உலகத்தைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். இந்தியாவையும் இரண்டு மூன்று முறைக்கு மேலாகவே சுற்றிப் பார்த்திருக்கிறேன். அதுவும் சுமார் 40 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தியாவைச் சுற்றிப் பார்த்து வந்திருக்கிறேன். சாதாரண மனிதனாகவே சுற்றி மக்களோ டெல்லாம் பழகியும் பார்த்திருக்கிறேன். அய்ரோப்பாவிலும், ரஷ்யா முதற்கொண்டு பல நாடுகளுக்கும் சென்று அந்தந்த நாட்டுமக்களைப் பார்த்தும் அவர்களுடன் பழகியும் இருக்கிறேன். 1903, 1904-இல் இந்தியா பூராவும் பிச்சை எடுத்துத் திரிந்தும் பார்த்திருக்கிறேன். அய்ரோப்பாவோடும், வடநாட்டோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் தென்னிந்தியாதான் அறிவில் சிறந்த நாடாக எனக்குப் படுகிறது. அதிலும் மற்றவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஆந்திரர்களையும், மலையாளிகளையும், கன்னடியர்களையும் காட்டிலும் தமிழர்கள்தான் அறிவில் சிறந்தவர்களாக எனக்குத் தோற்றுகிறார்கள். சூத்திரர் என்றால் தமிழர்கள் ரோஷப்படும் அளவுக்கு எந்த வடநாட்டானும் எந்த ஆந்திரனும் மலையாளியும்கூட ரோஷப்படுவதில்லை. சூத்திரன் என்று சொல்லிக் கொண்டுதான் போகட்டுமே. அதனால் என்ன குடி முழுகிப் போய்விடும் என்றுதான் பம்பாய்க்காரன் சொல்வான். மைசூர் ராஜ்யமும் அப்படித்தான். நம் நாட்டிலோ 100-க்கு 60 பேராவது சூத்திரர்என்றால் ஆத்திரப்படுவார்கள்; கோபப்படுவார்கள். மேலும் மூட நம்பிக்கை ஒழிய வேண்டும் என்பதிலும் அதன் அவசியத்திலும் நமக்குத்தான் சற்று விளக்கம் ஏற்பட்டிருக்கிறது.

பெருமை, புகழ், தொழில் வளம் முதலியவற்றைப் பற்றி எடுத்துக் கொண்டாலும் நம் மாகாண மக்கள்தான் மற்ற மாகாணக்காரர்களை விட சற்று அதிகமான கவலை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். மற்ற மாகாணக்காரர்களெல்லாம் நம் மாகாணத்தைக் கொண்டு நாம் பிழைக்கலாம் என்று ஆசைப்படுகிறார்களேயொழிய, நம்மைப் போல் நம் மாகாணத்திலிருந்தே சகலத்தையும் உண்டாக்கி தம் மக்களை வாழ்விக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. அவ்விதம் நினைக்கும் அறிவும், தெளிவும், வசதியும் அவர்களுக்கு இல்லை. நமக்குத்தான் உண்டு. நம் தென்னிந்தியா இயல்பாகவே, தான் பெற்றுள்ள இயற்கை வசதிகளால் பிறர் கண்களை உறுத்தி வருகிறது. அதனால்தான் வடநாட்டவர் நம்மைப் பிரிய விடாமல் கண்காணிப்பாக இருந்து வருகிறார்கள். தேசிய ஒற்றுமை பறி போய்விடும் என்று கூப்பாடு போட்டு நம்மை முன்னேற்றமடைய வொட்டாமல் தடுத்து வருகிறார்கள்.

(3.8.1949 அன்று கோவையில் கோபால் பாக் ஹாலில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை.

(‘விடுதலை’ 20.8.1949)


திராவிட மக்களை இழிவுபடுத்தும் புராணங்கள் ஒழிக்கப்பட வேண்டும்

பெரியார் பேசுகிறார் – 

2023 ஏப்ரல் 16-30,2023 பெரியார் பேசுகிறார்

-தந்தை பெரியார்

தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம். தமிழ் என்பதும், தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்திற்குத்தான் பயன்படுமே யொழிய, இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது.

ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித்தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைக் கெடுத்துத்தான் நம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும், நம் கலாச்சாரத்தை மறந்து ஆரியக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக, அவர்களுடைய இழி மக்களாக, சூத்திரர்கள், பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம்.

எனவே, அக்கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. கலாச்சாரத்தின் பேரால், இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலைப் பெற்றவராவோம். மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய, முழுப் போராட்டமாகவோ, முடிவான போராட்டமாகவோ ஆகிவிடாது.

சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு, நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்தும் நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியில் மேம்பாடு, வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடாது. மேலும் இவ்விழிவால் அவதிப்படுபவர்கள் தமிழ் மொழி பேசுகிறவர்கள் – தமிழர்கள் என்பவர்கள் மாத்திரமல்லாமல், சென்னை மாகாணத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவின் மற்ற மாகாணங்களிலும், அதாவது வேறு பல மொழிகள் பேசும் மக்கள் உள்ள வங்காளம், பீகார், பம்பாய், மகாராஷ்டிரா முதலிய மாகாணங்களிலும் இருக்கிறார்கள்.

அங்குள்ள தாழ்த்தப்பட்ட தோழர்களும், தம்மைத் திராவிடர்கள் என்றுதான் கூறிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்களும் திராவிடர்கள்தான்!
இவர்கள் எல்லோருமே இன்றில்லையானாலும் நாளை நிச்சயம் ஆரியத்தை எதிர்க்க, அதற்காக புரட்சி செய்ய ஒன்றுபடப்-போவது நிச்சயம். எனவேதான் நாம் பல எதிர்ப்புகளுக்கிடையேயும் திராவிடர் கழகம் என்கிற பேராலேயே தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

இந்த ஆரியர் – திராவிடர் போராட்டம் புராண காலந்தொட்டே நடைபெற்று வரும் போராட்டமாகும். புராண காலத்தைப் பற்றி நமக்கு விளக்கமாகத் தெரியவில்லை என்றாலும், ஆரியர் கலாச்சாரத்தை ஒழிக்க பவுத்தர்கள் வெகு பாடுபட்டிருக்கிறார்கள். இந்துக் கலாச்சாரத்திற்கு அதாவது, ஆரியக் கலாச்சாரத்திற்கு நேர் எதிர்ப்பான இஸ்லாம் கலாச்சாரத்தைக் கொண்டவர்களான முகலாயர்களும், ஆரியத்தை அழிக்க எவ்வளவோ பாடுபட்டார்கள். ஆனால், அவர்கள் வெற்றி பெற்றவர்களில்லை.எனவேதான் அவர்களே வெற்றி காண முடியாதபோது, இந்த திராவிட கழகத்தார் எங்கே வெற்றி காணப்போகிறார்கள் என்று பார்ப்பனர்கள் நம்மைப் பரிகாசம் செய்து வருகிறார்கள்.
அவர்கள் பரிகசிக்கட்டும்; நமக்குக் கவலையில்லை. என்னைப் பொறுத்தவரையில் நம் முயற்சி வெற்றி பெறும் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு, திடமான உறுதியுண்டு.

வெள்ளையனுடைய சுமார் 200 வருட கால ஆட்சியும், நமது அய்ந்து வருட கால பகுத்தறிவுப் பிரச்சாரமும், ஆரியக் கலாச்சாரத்தின் ஆதிக்கத்தை, குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைத்திருக்கின்றன. சமுதாய உயர்வு, தாழ்வுகள் இன்று அவ்வளவாக மக்கள் மனதைப் பீடித்து நிற்கவில்லை. முன்பெல்லாம் ஓர் உயர் ஜாதிக்காரனுக்கு ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் வீட்டில் தண்ணீர் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டால் அவனுக்கு வயிறெல்லாம் வேதனைப்படும்.

இன்று அப்படிக்கில்லை. யார் கடையிலும் டீ சாப்பிடுவதும், யார் கையாலும் தண்ணீர் குடிப்பதும் சகஜமாகி விட்டது. இன்னார் வீட்டில் நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வதே தனக்குப் பெருமை என்று இருந்ததுபோய், இப்போது தனக்கு அது மரியாதைக் குறைவு என்று நினைக்கும்படிக்கும், அருகிலுள்ளவரும் இன்னும் இந்தக் காட்டுமிராண்டி காலப் பழக்கத்தைக் கைவிடாமல் இருக்கிறாய் என்று கேட்கவும் ஆன நிலை ஏற்பட்டிருக்கிறது.

குருகுலப் போராட்டத்தின்போது பார்ப்பனர்களுக்குக் தனி இடமும்,தனி உணவும் இருக்கவேண்டும் என்று கிளர்ச்சி செய்தது போய், அவர்களே பெரும்பாலோர் இன்று சமபந்தி போஜனம் பற்றியும், சம உரிமை பற்றியும் பேச முன் வந்திருக்கிறார்கள். இன்று கிட்டத்தட்ட எல்லா மாணவ உணவு விடுதிகளிலுமே ஒரே சமையல், ஒரே இடத்தில் எல்லோரும் சமமாய் உட்கார்ந்து சாப்பிடல் என்ற பழக்கம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. பெண் கொள்வது, கொடுப்பது என்பது தவிர்த்து மற்ற எல்லாவற்றிலுமே ஓர் அளவுக்காவது சமத்துவம் வந்திருக்கிறது. அதிலும் பார்ப்பனருக்கு சகிப்புத்தன்மை வந்து இருக்கிறது. மனு தர்மத்தைப் பற்றிப் பேசினால் எங்கு தம் நிலை இன்னும் அதிக ஆபத்துக்குள்ளாகி விடுமோ என்று பார்ப்பனர்களே மனுதர்மத்தைப் பற்றிப் பேச அஞ்சும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடவுள் விஷயத்திலும் முன்போல் யாரும் பக்தி செலுத்துவதில்லை அதுவும் கோயிலில் தாசிகள் ஒழிக்கப்பட்டு விட்ட பிறகு கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கூட்டம் இருபாலிலும் வெகுவாகவே குறைந்துவிட்டது. தேர் திருவிழாக்களிலும் மக்கள் முன்போல் அதிகமாகக் கலந்துகொள்வதில்லை. கடவுள் பக்தி குறையவே, கடவுளுக்குக் கோவில் கட்டுவதும், மானியம் கொடுப்பதும் குறைக்கப்பட்டு, பள்ளிக்கூடம் கட்டவும், ஆராய்ச்சிக் கல்லூரிகள் அமைக்கவும், ஆஸ்பத்திரி கட்டவும் பணம் உதவப்பட்டு வருகிறது.என்றாலும் இவையே போதுமானதாகி விடாது.

இன்னும் புராணங்கள் மதிக்கப்பட்டு வருகின்றன. புராணப் பாத்திரங்களே நமக்குக் கடவுள்களாகவும், புராணக் கருத்துகளே நமக்கு மதக் கருத்துகளாகவும், பண்டிகை விரதங்களாகவும் இன்னும் இருந்து வருகின்றன.

பழங்காலத்தில் – சரித்திரத்துக்கு முந்திய காலத்தில் ஆரியக் கலாச்சாரத்தை யார் யார் எதிர்த்தார்களோ, அவர்களை இழித்தும், பழித்தும் பேசி அவர்கள் ஒழிக்கப்பட்ட விதத்தை எடுத்துக் கூறும் கதைகளே புராணங்களும், இதிகாசங்களும் ஆகும்.
ஆரியத்தை எதிர்ப்பவன் இன்ன கதிக்குள்ளாவான் என்பதை எடுத்துக்காட்டி, மக்களைப் பயமுறுத்தி ஆரியத்தின் உயர்வில் நம்பிக்கைகொள்ளுமாறு செய்வதற்கென்றே எழுதப்பட்டனவாகும் அவைகள். ஆரியத்தை எதிர்த்தவர்கள் அத்தனை பேருமே நம்மவர்கள்; திராவிடர்கள்.அவர்கள் அத்தனை பேருமே ஒழுக்க ஈனர்களாக, அயோக்கியர்களாக ஆரியத்தால் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்திராவிடர்களை ஒழித்த எல்லாருமே நமக்கு கடவுளர்களாக ஆக்கப்பட்டு, அவற்றை நாம் இன்றும் தொழுது வருகிறோம்.

இராவணனை அழித்த இராமன் நமக்குத் தெய்வம். இராவணைக் காட்டிக் கொடுத்த விபீஷணன் நமக்கு ஆழ்வார். இரண்யனை ஒழித்த நரசிம்மாவதாரம் நமக்குக் கடவுள், நரகாசுரன் ஒழிக்கப்பட்ட தினம் நமக்குப் புண்ணியதினம். இப்படிப்பட்ட கதைகளே தினம் நம் புராணங்கள். என்னே அறியாமை!

நம்மவரின் முன்னேற்றத்திற்காக, நம்மவரின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட நம் மன்னர்கள் ஒழிக்கப்பட்ட தினங்களா நமக்குப் புண்ணிய தினங்கள்? நம்மவரை வென்ற கதாபாத்திரங்களா நமக்குத் தெய்வங்கள்?
இவ்வறியாமையிலிருந்து நாம் என்றுதான் மீட்சி பெறுவது? மதம் என்றால் மக்களுக்கு நல்லொழுக்கம் கற்பிக்கத்தக்கதாக இருக்க வேண்டும்.

(24.01.1950இல் சென்னை – ராபின்சன்பார்க் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – ‘விடுதலை’, 26.01.1950)

 

டாக்டர் அம்பேத்கர் உலகறிந்த பேரறிஞர் ஆவார்

பெரியார் பேசுகிறார் – 

2023 ஏப்ரல் 1-15,2023 கட்டுரைகள் பெரியார் பேசுகிறார்

தந்தை பெரியார்

அம்பேத்கர் அவர்கள் மனிதத் தன்மையில் தீவிரமான கருத்தும் தைரியமான பண்பும் கொண்டவர் ஆவார். அவர் சமுதாயத் துறையில் தைரியமாக இறங்கிப் பாடுபட்டவர். மக்களால் பெருமையாகப் பாராட்டப்பட்ட காந்தியாரையே பிய்த்துத் தள்ளியவர்! எப்படி ஜின்னா அவர்கள் நடந்து கொண்டாரோ அது போல மதத்துறையினை சின்னாபின்னப்படுத்தியவர். காந்தியாரால் சமுதாயத் துறைக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை. கேடுகள் தான் வளர்ந்து இருக்கின்றது என்று புத்தகம் எழுதியவர்.
இவர் ராமாயணத்தையும் மனுதர்மத்தையும் கொளுத்தியவர்.
பார்ப்பனர்களால் பெருமையாகக் கொண்டாடப்படும் கீதையை பைத்தியக்காரன் உளறல் என்று துணிந்து கூறியவர்.
எப்படி காந்தி ஒருபார்ப்பானால் கொல்லப்பட்டாரோ அது போலவே இவரும் கடைசியாக பார்ப்பன சூழ்ச்சியால் கொல்லப் பட்டார். அது அதி
சயம் இல்லை. இது போன்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டுள்ளார்கள். சமண, பவுத்தர்கள் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

அம்பேத்கர் அவர்கள் வட்ட மேஜை மாநாட்டில் காந்தியார் அரிஜனங்களின் தலைவர் என்று கூறியபோது, ‘‘நான் உங்களுக்குப் பல தடவைகள் கூறி இருந்தும் நீங்கள் மனம் கூசாது, அரிஜனங்களின் தலைவர் என்று கூறிக் கொள்கிறீர்களே’’ என்று கேட்டார். காந்தியால் எதிர்த்துப் பேசமுடியவில்லை. இங்குள்ளவர்கள் எல்லாம் அம்பேத்கர் அப்படிப் பேசியதற்காக கூப்பாடு போட்டார்கள். அம்பேத்கர் கூறினார். “தாழ்த்தப்பட்டவர்களுக்கு. நீங்கள் உண்மைத் தலைவராக இருந்தால் என்னை ஏன் இங்கு அழைத்து இருக்கின்றார்கள்” என்று காந்தியைக் கேட்டவர்.

சமுதாயக் கேடுகள் ஒழிய, ஜாதி ஒழிய, கடவுள், மதம் சாஸ்திரங்கள் ஆகியவை ஒழிய வேண்டும் என்று துணிந்து கூறியவர் ஆவார். இந்தத் தென்னாட்டில் அல்ல; இதை விட மூடநம்பிக்கைகள் மலிந்த வடநாட்டில் துணிந்து எடுத்துக் கூறிப் பாடுபட்டவர்.
அம்பேத்கர் அவர்களின் நாளை கொண்டாடுகின்றோம் என்றால் அவர் கொள்கையை நாம் தெரிந்து கொள்ளவேயாகும். எப்படி திராவிடர் கழகம் காங்கிரசை வெளுத்து வாங்கி வந்ததோ அதுபோல அம்பேத்கரும் காங்கிரசின் வண்டவாளங்களை எல்லாம் எடுத்து வெளுத்துக் கட்டியவர். சமுதாயத் துறையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமுதாயத் துறையில் முன்னேற்றம் அடைவதைத் தடை செய்ய ஏற்படுத்தப்பட்டது தான் காங்கிரஸ் என்று கூறியவர்.

பானர்ஜி என்ற காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர் காங்கிரஸ் தலைமையுரையில் அரசியல் பற்றிப் பேசும் போது சமுதாயத்தைப் பற்றிப் பேசுவது தப்பு என்று கூறியுள்ளார். காந்திக்கு முன்பு வரை அரசியல் மாநாடு தனியாகவும், சமுதாயச் சீர்திருத்த மாநாடு தனியாகவுமே நடந்து வந்தன. திலகர், “காங்கிரஸ் மாநாட்டுக் கொட்டகையில் சமுதாயச் சீர்திருத்த மாநாடு நடைபெறக்கூடாது. நடைபெற்றால் தீவைத்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளார்.

ஒரு சமுதாயத்தில் நாம் என்றென்றைக்கும் இழிமக்களாகவும் வசதியற்றவர்களாகவும் இருக்க ஓர் இனம் சகல துறையிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுதானே காங்கிரஸ் என்று எடுத்துக் காட்டியவர்.
தனித்தொகுதி முறை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவசியம் தேவை. தாழ்த்தப்பட்ட மக்களே ஓட்டு அளித்து தேர்ந்து எடுக்க வேண்டும் என்று திட்டம் நிறைவேற்றப்பட்டது. காந்தியார் அவர்கள் இப்படி தனித் தொகுதி முறை ஏற்பட்டால் நான் சோறு தின்ன மாட்டேன் என்று பட்டினி கிடந்தார். அப்போது நான் பாரிசில் இருந்தேன். பேப்பரில் பார்த்துவிட்டு உடனே நானும் ராமநாதனும் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தோம் —இப்போதுதான் உங்கள் இனத்துக்கு நல்வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏமாந்து கையெழுத்துப் போட்டுவிடாதீர்கள் என்று. எப்படியோ கையெழுத்துப் போட்டு விட்டார். காந்தியார் பட்டினி கிடந்து இறந்து விடுவாரோ என்பதற்கு மட்டும் அல்ல; அவரையே கொலை செய்யவும் சதிகள் நடைபெற்றன. எனவே, யையெழுத்துப் போட்டு விட்டார்.

அம்பேத்கர் வெகுநாளைக்கு முன்னமேயே இந்த இந்து மதத்தை விட்டுவிட்டு முஸ்லிம் மதத்தில் சேர்ந்துவிட முடிவு கட்டினார். நான் “குடிஅரசு” ஆஃபீசில் இருந்து தந்தி கொடுத்தேன். இஸ்லாத்தில் சேர்ந்தால் இஸ்லாமியர்களுக்கு அடங்கி
இருக்க வேண்டுமே ஒழிய, இந்துக்களையும் திருத்த முடியாது; முஸ்லிமாக இருந்து இந்து மதத்தைத் தாக்க முடியாது என்றேன். பிறகு மாளவியா, காந்தி எல்லாம் அவரிடம் சென்று ரொம்ப வேண்டிக்கொண்டதால் கைவிட்டார். மதம் மாறுவது மட்டும் உறுதி. ஆனால், எந்த மதம் என்று மட்டும் இப்போது சொல்லுவதற்கு இல்லை என்றார்.

பிறகு புத்த மதத்தில் சேருவதாக இருந்த போதிலும் என்னையும் அழைத்தார். நான் கூறினேன், “நாம் புத்தனாக மாறிவிட்டால் இந்து மதத்தின் குறைபாடுகளை எல்லாம் பேச முடியாது. எப்படி இந்துவானவன் முஸ்லிம் மதத்தைப் பற்றி பேசினால் முஸ்லிம் சண்டைக்கு வருகின்றானோ, அதுபோலத்தான் நாம் புத்தனாக மாறி இந்து மதத்தைப் பற்றிப் பேசினால் எதிர்ப்பார்கள். நாம் இந்து மதத்தை இந்துவாக இருந்து எதிர்ப்பதனால் எவனும் நம்மைத் தட்டிக் கேட்க முடியவில்லை என்று கூறினேன்.

பர்மாவில் நடைபெற்ற பவுத்த மாநாட்டுக்கு நானும் போய் இருந்தேன். அம்பேத்கரும் வந்து இருந்தார். அவர் என்னைக் கேட்டார், “கையெழுத்துப்போடு, புத்தராக ஆகிவிடுவோம்” என்றார். நான் கூறினேன்  “நாம் மட்டும் சேர்ந்தால் போதுமா? நம்மைப் பின்பற்ற பல லட்சம் மக்களைத் தயார் செய்து கொண்டு அல்லவா இறங்க வேண்டும். இப்போது நமது நாட்டில் மதத்தின் பெயரால் எவ்வளவு மூடத்தனமான நம்பிக்கையும் சடங்குகளும் நடைபெறுகின்றதோ அதுபோலத்தானே இன்று பர்மாவிலும் புத்த மதத்தின் பேரால் நடைபெறுகின்றதைக் காண்கின்றோம். நமது கருத்துப்படி அமைய நாம் நமக்கு பலத்தைத் திரட்டிக் கொண்டு பிறகுதான் இறங்க வேண்டும்’’ என்றேன். ‘‘என்னமோ நாம் இப்படியே இருந்து விட்டால் போதுமா? ஏதாவது செய்து விட்டுச் சாக வேண்டாமா?’’ என்று கூறினார்.

தாம் புத்த மதத்தில் சேரப் போவதாகவும், தாம் மைசூரில் பெரிய பவுத்த பல்கலைக்கழகம் ஏற்படுத்தப் போவதாகவும், மைசூர் மகாராஜா உதவ இருப்பதாகவும் கூறினார்.

நாங்கள் இப்படி பர்மாவில் பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு புத்த பிட்சு அந்த இடத்துக்கு வந்தான். அவனுக்கு அம்பேத்கர் என்னை ஈ. வெ.ராமசாமி என்று அறிமுகப்படுத்தினார். அந்த பிட்சு உடனே என்னைப் பார்த்துக் கேட்டான், “நீ என்ன புத்தமதத்தைக் காப்பாற்ற வந்தாயா அல்லது ஒழிக்க வந்தாயா?” என்று கேட்டான். அவன் போன பிறகு அவன் யார் என்று விசாரித்தபோது அவன் வங்காளத்தில் இருந்து வந்து இருக்கின்றான். இவன் பார்ப்பானாக இருந்து புத்த பிட்சுவானவன் என்று தெரிவித்தார். இப்படித்தான் பார்ப்பனர் அன்றும் புத்த மதத்தில் சேர்ந்து புத்த மதத்தையே ஒழித்தனர்.

கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் அங்கு அம்பேத்கர் கடைசி காலத்தில் திருமணம் செய்து கொண்ட பார்ப்பன மனைவி வந்தாள். என்னை அம்பேத்கர் அறிமுகப்படுத்திய உடனே அந்த அம்மாள் சொன்னாள், ‘‘நீங்கள் யாரையோ தேடிக்கொண்டிருந்தீர்களே அப்போதே நினைத்தேன், இந்த ஆசாமியைத் தான் தேடிக் கொண்டிருந்திருப்பீர்கள்’’ என்று கூறினாள்.
தோழர்களே! அம்பேத்கர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருப்பாரேயானால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வளவோ நலந்தரும் மாறுதல்கள் இன்னும் செய்திருப்பார். அம்பேத்கர் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 100க்கு 16 வீதம் வாங்கிவிட்டார். நான் அவரைக் கேட்டேன், “உங்கள் ஜாதிக்கு 16 வாங்கிக் கொண்டீர்களே… எங்கள் ஜாதியைப்பற்றி மறந்து விட்டீர்களே” என்று கேட்டேன். “ராமசாமி நீ சொல்லுவது தப்பு. இந்தக் கமிட்டியில் இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பான்கள். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார், முன்ஷி என்ற நாலு விஷப்பாம்புகள் இருந்தார்கள். ஒரு சாயபு. இவர் ஓர் அனாமதேயம். அவர்கள் இனத்தாருக்குக்கூட அவரால் எதையும் செய்ய முடியவில்லை.

‘‘நான்தான் எதையும் எடுத்துச் சொல்லி ஆக வேண்டும். பார்ப்பான்கள் எல்லாம் மெஜாரிட்டியாக இருப்பதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை’’ என்றார்.

மேலும் கூறினார். “நான்தான் அரசியல் சட்டத்தை உண்டாக்கினேன். இம்மாதிரியான ஓட்டைகள் எல்லாம் ஏற்பட்டுவிட்டது. இந்த அரசியல் சட்டத்தை எடுத்து கொளுத்துவதாக இருந்தால் நான் முன்னணியில் இருந்து தீ வைக்கத் தயார்” என்றார்.
பிறகு பார்லிமெண்டிலேயே கூறினார், “நான் தான் இந்த அரசியல் சட்டம் உண்டாக்கியதாகக் கூறுகின்றார்கள். அதை தீ வைக்க வேண்டும் என்று கூறினால் நானே முன்நின்று வைப்பேன்’’ என்று கூறினார்.
இப்படி அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட இயக்கம் நடத்துவதை வகுப்புவாத இயக்கம் என்று பார்ப்பனர் கூறிப் பழித்தனர்.

இப்படிப்பட்ட ஒப்பற்ற தலைவரைபின்பற்றுபவர்களாகிய -தாழ்த்தப்பட்டவர்களாகிய – நீங்கள் கடவுள், மதம், சாஸ்
திரங்களில் நம்பிக்கை வைக்கக்கூடாது என்றும், காமராசர் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் செய்யப்படும் நன்மைகள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.

(அரக்கோணத்தில் 16.4.1961 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் ஆற்றி உரை).– ‘விடுதலை’, 4.5.1961