“நான் இவ்வூருக்கு இதற்குமுன் இரண்டு தடவை வந்திருக்கிறேன், இது மூன்றாம் தடவை, தலைவர் சொல்லியபடி நான் இச்சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து பல விடங்களில் பேசி வருகிறேன். நாம் உண்மையில் விடுதலை பெற்று வாழ விரும்புவோமானால், சுயமரியாதை உணர்ச்சி நமக்கு வேண்டும். மற்ற நாடுகளில் விடுதலை பெற்று வாழும் மக்களிடம் சுய மரியாதை உணர்ச்சியே மிகுந்திருக்கிறதென்பதைச் சரித்திர வாயிலாகக் காணலாம். மற்ற நாடுகள் 300 அல்லது 400 வருஷங்களுக்கு மேல் அடிமைப்பட்டு சுயமரியாதை கெட்டு வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நாம் பல ஆயிரவருஷங்களாக விடுதலையின்றி அடிமைகளாகத்தான் இருந்து வந்திருக்கிறோம் என்பது நன்கு விளங்கும்.
முன்னர், சுமார் 500 வருஷங்களுக்கு முன் வெள்ளையர்கள் இருந்த நிலைமையையும், இப்போது அவர்களிருக்கும் நிலைமையையும் கவனிக்கையில் அவர்கள் எங்ஙனம் மாறுதலடைந்து வந்திருக்கிறார்கள் என்பது விளங்கும். இவர்கள் அக்காலத்தில் நம்மைவிட பக்தி, மூடக்கொள்கை முதலிய படுகுழிகளில் ஆழ்ந்து கிடந்தார்கள். நாம் நம் நாட்டில் நாகரிகம் படைத்திருந்த காலத்தில் அவர்கள் காட்டு மிராண்டிகளாக மீன், நண்டு, புழு, பூச்சி முதலியவைகளைப் புசித்துக்கொண்டு அநாகரிகர்களாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். அத்தகைய ஜாதியார்கள் தான் நம்மை அநாகரிகமுள்ளவர்கள், மிலேச்சர்கள் என்று பலவகை மொழிகளை நம்மீது சாற்றி, இழிவுபடுத்தி, அடிமைகளாக்கி ஆண்டு வருகிறார்கள். பல நூற்றாண்டுகளாக நாம் அடிமைக் குழியிலேயே இருந்தும், நாம் விழித்தெழுந்து நமது குறைகளைத் தீர்த்துக்கொள்ள முன்வரவில்லை. சுயராஜ்யம், விடுதலை என்றுதான் கத்திக் கொண்டிருக்கிறோம்; இப்படியெல்லாம் நாளுக்கு நாள் பலமாகக் கிளர்ச்சி செய்து கொண்டும், கூக்குரல் செய்து கொண்டு வந்தும் நாளுக்குநாள் நாம் பின்னோக்கியே செல்கின்றோம். இத்தகைய கூக்குரல்களைக் கேட்டுக் கேட்டு எதிரிகள் விழித்துக்கொண்டு விட்டார்கள்.
இதற்கெல்லாம் காரணம் நமது மதந்தான். மதசம்பந்தமான மூடக் கொள்கைகள், அசட்டுத்தன்மை, குருட்டுத்தனம் முதலியவைகளால் நாம் இவ்வளவு கேவலஸ்திதிக்கு வந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மதஸ்தர்களையும் எடுத்துக் கொண்டால், அந்தந்த மதஸ்தர்களுக்குத் தங்களுக்கென ஆள தேசமிருப்பதல்லாமல், சில மதஸ்தர்-கள் பிறநாட்டையும் ஆண்டுவருகிறார்கள்; நாம் நம்முடைய நாட்டையாவது ஆள சக்தியில்லாவிட்டாலும், அடிமை-களாகவாவது இல்லாமல் இருக்கின்றோமா என்று பாருங்கள்!
நேற்று தோன்றிய மதங்களெல்லாம் தங்களுடைய மதஸ்தர்களை ஆண்டு வரும் பொழுது,நம்முடைய மதஸ்தர்கள்தான் நம்மை ஆண்டுகொள்ள முடியாமல் அடிமைகளாயிருக்கின்றனர். நமது மதம் எத்தனையோ கோடி வருஷங்களுக்கு முன் கடவுளால் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நம்முடைய மதத்தி
லுள்ள கொள்கைகளும், குருட்டுத்தனங்களும், நாம் அக்கொள்கைகளைப் படிக்கக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகளுந்தான் நம்மை இக்கதிக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டன என்று சொல்வேன்.
நம் இந்துமதம் என்று சொல்லும் மதத்தைச் சற்று ஆராய்வோம். முதலில் இந்து என்கிற வார்த்தை நம் மொழியில் இல்லை. அவ்வார்த்தை நம்முடைய புராணம், ஆகமம் முதலியவைகளில் எங்கேனும் சொல்லப்பட்டிருக்கின்றதா என்று பார்த்தால் இல்லவே இல்லை. எங்கிருந்தோ வந்த இந்து என்ற வார்த்தை நம்முடைய மதத்துக்குப் பெயராகப் புகுந்து விட்டது. நம் நாட்டு மதத்துக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பெயர் நம்முடைய பாஷையில் அன்றோ இருக்கவேண்டும் அப்படிப் பார்த்தால் ‘இந்து’ என்னும் வார்த்தையே நம்முடைய பாஷையில் கிடையாது.
‘இந்து’ என்னும் பதத்துக்கு என்னபொருள் என்று கேட்டால் ஒருவருக்குமே தெரியாது. இப்படிப்பட்ட மதத்தைக் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட மதம், பெருமைகளையும் அற்புதங்களையும் உடையது என்று நம்மவர்கள் பெருமை பேசிக் கொள்கின்றனர்.
நேற்றைக்குப்போய் மற்றொரு மதத்தில் சேர்ந்த ஒருவனைக் கேட்டால் தன்னுடைய மதம், கொள்கை, தத்துவம் முதலியவைகள் இன்னின்னவென்பதை உடனே கூறிவிடுவான். அவன் தீண்டாத-வனாயிருந்தாலும் அம்மதத்தில் மற்றவர்களுக்குரிய சமத்துவம், சகோதரத்துவம் முதலிய சகல உரிமைகளும் தாராளமாய் வழங்கப்படுகின்றன. அவர்களுடைய வேதப் புஸ்தகங்கள் பல பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு இலவசமாய் மக்களுக்கு மூலை முடுக்குகளிலும் கொண்டுவந்து கொடுக்கப்படுகின்றன. ஆனால் நம்முடைய மதத்துக்கு ஏதாவது ஆதாரமும் இருக்கிறதா வென்று ஒருவரைக் கேட்டால் அவர், ஓர் ஆதாரமும் கிடையாது என்றுதான் சொல்வார். ஏனென்றால், இந்து மதத்துக்கு ஆதாரம் என்று சொல்லப்படும் ஆகமம், புராணம், வேதம் முதலியவைகளை ஒரு சாரார் தவிர, மற்றவர்கள் படிக்கக்கூடாது, கேட்கக்கூடாது, மீறிச் செய்தால்நாக்கை அறுத்துவிட வேண்டும், காதில் ஈயத்தைக் காய்ச்சிவிட வேண்டு-மென்று பல நிபந்தனைகளை நம் மதத்தில் ஏற்படுத்தியிருக்கின்றனர். இம்மாதிரியான மதத்தை ஒப்புக் கொள்கிறவன், அனுஷ்டிக்கிறவனை அறிவாளியென்றாவது, யோக்கியன் என்றாவது சொல்லக்கூடுமா?
இனி வேதங்களை ஒப்புக் கொள்கிறவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால்,
எத்தனையோ கொள்கைகளையும், பெருமைகளையுமுடைய ஒரு மதம், மக்களுக்கு எவ்வளவு தூரம் கல்வி அறிவு முதலிய துறைகளில் நன்மை செய்திருக்கிறதென்பதைப் பாருங்கள்! இவ்வளவு காலமாக இருந்து வந்த ஒரு மதத்திலுள்ள மக்களில் 100-க்கு 5 பேருக்குக்கூட கையெழுத்துப் போடத் தெரியாது. இன்னும் மற்ற மதஸ்தர்கள் தங்களுடைய மதத்தைப்பற்றி எவ்வளவு தூரம் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள். நாம் எவ்வளவு தூரம் பிரச்சாரம் செய்து வருகிறார்களென்று பார்த்தால், நாம் செலவு செய்வதில் 20-இல் ஒரு பங்குகூட அவர்கள் செய்வதில்லை.
நம்முடைய இந்துக் கோவில்களுக்கு வருஷத்தில் எவ்வளவு வருமானம் வருகிறதென்று பார்த்தால் அக்கோவில்-களின் கணக்குகளிலிருந்தே விளங்கும். லட்சம் லட்சமாக வந்து குவிகின்றன. நமது சென்னை மாகாணத்தில் மட்டும், கோவில்களின் வருமானம் இரண்டுகோடி ரூபாய் என்று சர்க்கார் கணக்கு வைத்திருக்கிறார்கள். இன்னும் ஸ்தல யாத்திரைக்காரர்களின் செலவுதான் என்ன!
கோவில் கணக்குகளைப் பார்த்தால் அரிசி, உப்பு, புளி, பாதாம்பருப்பு, திராட்சை முதலியவைகள் தான் இவ்வளவு இவ்வளவு என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் சமையல் பண்ணி சாப்பிடுகிறவர்கள் யார் என்று பாருங்கள். இவ்விதம் ஒருவழியில் வீண் செலவு நடந்து கொண்டிருக்கையில், நம் நாட்டில் விவசாயம், கைத்தொழில் முதலியவைகளை விருத்தி செய்வதற்குப் பணமில்லை யென்று அழுதுகொண்டிருக்கிறோம். இவ்விதம் கோவில்களில் செலவாகும் செலவுகளை யாராவது கவனித்தார்களா? இதைக் கவனிக்கத்தான் இந்துமத பரிபாலன போர்டார் சட்டம் செய்தார்கள். மற்ற மதஸ்தர்கள் இங்ஙனம் கோவில்களில் வீண் செலவு செய்யாமல், மக்களின் கஷ்ட நிவர்த்திக்கும் அறிவை விருத்தி செய்யப் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தி மக்களை மேன்மேலும் அபிவிருத்தி யடையச் செய்கின்றார்கள்.
இனி நம் மதத்தின் பெயரால் நம்மை அடிமைப்படுத்துவதும், விடுதலை-யடையத் தடையாயிருப்பதுமான நமது மதச்சடங்குகளைக் கவனிப்போம். கருத்தரித்த நாள் முதல்கொண்டு, கட்டையில் வைத்தற்குப் பின்னும் கற்பகோடி வருஷங்கள் வரை சடங்குகள் தோன்றிவிடுகின்றன. அர்த்தமற்ற, நிபந்தனையற்ற சடங்குகளின் பேரால் புரோகிதப் பார்ப்பானும் அரிசி, பருப்பு, இலை முதலியவைகள் மூட்டை மூட்டைகளாக பறித்துக் கொண்டு செல்கின்றார்கள். ஒருவனுடைய மரணத்துக்குப் பின்னும், அவனை மோட்ச லோகத்துக்குத் தான் அனுப்பிவிடுவதாக அவன் குடும்பத்தார்களிடம் பொய் வார்த்தைகள் கூறி வருஷா வருஷம் பணம் பறித்துக் கொண்டு செல்கின்றனர். இதெல்லாம் நமது மூடக்கொள்கையும், மூடத்தன்மையுமன்றோ? ஆகையால், இப்புரோகித மதத்தை ஒழித்தாலன்றி நாம் ஒருநாளும் முன்னேற முடியாது. மற்ற நாடுகளில் பிறமதஸ்தர்களும், தங்களுடைய புரோகித மதத்தை ஒழித்த பின்புதான் அந்நாட்டு மக்கள் விடுதலையடைந்திருக்கின்றனர்.
இனி மதாச்சாரியர்கள், குருமார்கள் முதலியவர்களைக் கவனிப்போம். இவர்கள் குதிரை, பல்லக்கு முதலியவைகளைப் போட்டுக் கொண்டு, கொள்ளைக்காரர்கள் போல ஊர் ஊராய் வந்திறங்கி, அங்குள்ள உத்தியோகஸ்தர்கள், மிராசுதார்களின் செல்வாக்கை அனுகூலமாகக் கொண்டு மூட்டை, மூட்டையாக பணத்தைப் பலரிடமிருந்து பறித்துக் கொண்டு செல்கின்றனர். இவர்கள் சொல்லி வாங்கும் வகைகளுக்காவது அப்பணத்தைச் செலவு செய்கின்றார்களா பாருங்கள். இல்லையே!
அத்தகைய மடாதிபதிகள் குருமார்கள் பணத்தைக் கொண்டுபோய் என்ன செய்கிறார்கள்? அவர்கள் யோக்கியதை என்ன? அவர்கள் நமக்கு என்ன உபதேசம் செய்கின்றார்கள் என்பதையே நாம் கவனிப்பதில்லை. இவர்களெல்லாம் குலகுருக்களென ஆடம்பரத்துடன், எவ்வித யோக்கியதையும், இலட்சணங்களுமின்றி ஊர் ஊராய் கம்பீரமாய் வருகின்றனர். இவர்களிடம் அயோக்கியத்தனமே நிறைந்திருக்கிறது.
இனி நாம் வணங்கும் தெய்வங்களைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். சில்லரைத் தேவதைகளெனப் பெயர் பெற்ற மாடன், கருப்பன் முதலிய சாமிகளுக்குக் கள், சாராயம் முதலியவைகளை வைத்து ஆராதனை செய்து வருகிறோம். இனி பெரிய தெய்வங்களையுடைய கோவில்களுக்குப் போய்ப் பார்த்தால் அங்கு தாசிகளை நடனமாடச் செய்திருப்பது முதலிய ஆபாசமான பழக்கங்களை உண்டுபண்ணி ஆடம்பரமான வகைகளில் வீணாக விரயம் செய்யப்படுகிறது.
இனி நம் இந்து மதஸ்தர்கள் அணிந்து கொள்ளும் சின்னங்களின் அர்த்தமென்ன வென்று கேட்டால் ஒருவருக்கும் ஒன்றுமே தெரியாது. இதை எல்லாம் பொதுஜனங்களுக்கு உணர்த்த எவரேனுமிருக்கின்றனரா? இம்மாதிரியான அர்த்தமற்ற சடங்குகள், மூடக் கொள்கைகள் முதலிய ஊழல்களால் எத்தனை ஆயிரம் ஜனங்களை நாம் பிற மதங்களுக்குப் பலி கொடுத்திருக்கின்றோம் என்று கவனியுங்கள். ஓர் இந்து அரசால் ஆளப்படும் திருவாங்கூர் ராஜ்யத்தில் சுமார் 35 வருஷங்களுக்குமுன் இருந்த மூன்று லட்சம் கிறிஸ்துவர்கள், இப்போது 15 லட்சமாகப் பெருகிவிட்டனர். இப்படி நாம் நமது மதத்தின் பேரால் பலரை அந்நிய மதங்களுக்கு அனுப்புவதல்லாமல், ஆயிரக்கணக்கான நமது சகோதரர்களை உயிருடனேயே சனீஸ்வரர்களாகிய பிராமண எமன்களுக்கு ஆளாகும்படி செய்து வருகிறோம்.
இனி, மதத்தின் பெயரால் சிறு பெண்களைக் கோவில்களில் பொட்டுக் கட்டி விபசாரத்துக்கு விட்டு வைப்பதைத் தடுக்கும் பொருட்டு சென்னை சட்ட சபையிலும், வெளியிலும் பலத்த கிளர்ச்சி செய்யப்பட்டது. இதைப் பெரும் பாலோரான பிராமணரல்லாதார் ஆதரித்தும், சத்தியமூர்த்தி போன்ற பிராமண அரசியல் தலைவர்கள் தேவதாசிகளைக் கோவில்களில் பொட்டுக்கட்டி வைப்பது மத சம்பந்தம் என்று அதை எதிர்த்துப் பிரசங்கங்கள் செய்தனர்.
இவர்களெல்லாம் போலிகளென்றும், வயிற்றுப்பிழைப்பின் பொருட்டு பணம் பறித்து தின்று திரிபவர்கள் என்றும் தான் சொல்லுவேன். இதனால் தான் ஸ்ரீ மேயோ போன்ற பிற நாட்டார்கள் நம்மை இழிவுபடுத்தி புஸ்தகம் எழுத இடமேற்படுகிறது. அதனால் நாம் இப்போது அனுஷ்டித்து வரும் மதம், மூடக்கொள்கை ஆகியவைகள் ஒழிந்தால் தான் நாம் க்ஷேமடைவோம்.
இத்தகைய சடங்குகளும், கிரியைகளும் செய்து பணத்தைச் செலவிட்டும், நம் மதஸ்தர்களுக்குள் ஒருவருக்கொருவர் கட்டுப்பாடு சிறிதேனும் உண்டா? இல்லையே. கட்டுப்பாடு இல்லாமற் போய் விட்டதுடன், ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வும் நமது மதம் கற்பிக்கிறது.
– ‘குடிஅரசு’, – 20.11.1927
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக