வெள்ளி, 14 நவம்பர், 2014

திராவிடர் இயக்க சாதனைகள்

சமநிலை!

உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் 
பறையன், முதலாளி - 
தொழிலாளி, குரு - சிஷ்யன், மகாத்மா - 
சாதாரண ஆத்மா, அரசன் - 
குடிமகன், அதிகாரி - பிரஜை என்பவை 
முதலாகிய பாகு பாடுகளை 
இடித்துத் தள்ளி தரைமட்ட மாக்குங்கள். 
அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாத தாகிய மனித 
சமூகம், சம உரிமை - சமநிலை என் கின்ற கட்டடத்தைக் கட்டுங்கள்.
- தந்தை பெரியார் (இலங்கையில் 1-10-1932இல் உரை )

விடுதலை,வெள்ளி, 14 நவம்பர் 2014

வியாழன், 13 நவம்பர், 2014

தேசிய வியாபாரம்

தந்தை பெரியார்
உலகத்தில் மக்கள் தங்கள் தங்கள் வாழ்க்கைக்கு விதாயங்கள் ஏற்படுத்திக் கொள்ளுவதில் பலர் பொது நல சேவை என்பதையும் ஒரு மார்க்கமாக உபயோகப் படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்பது யாவரும் அறிந்த விஷயமாகும்.
அந்த முறையிலேதான், இன்று எல்லா விதமான பொது நல சேவைகள் என்பவைகளும், ஒரு தனித்தனி மனிதனின் சுய நல வாழ்க்கையை முக்கிய நோக்கமாகவும், அடிப்படை யாகவும் கொண்டதாகவே இருந்து வருகின்றன.
இந்த நிலைமையானது.  இந்நாட்டின் மக்களின் உண்மையான பொதுநலம் என்பதை அடியோடு கெடுத்து விட்டது மல்லாமல், இம்மாதிரி தன்மைகளால் பொது நல வாழ்வானது உண்மை, ஒழுக்கம், நாணயம் என்பவைகள் சிறிதும் இல்லாத புரட்டுக்கும், பொய்யுக்கும், வஞ்சகத்திற்கும், நிலையாயுள்ள ஒரு வியாபார சாலை போல் ஏற்பட்டுவிட்டது.
இதன் பயனாகவே மக்கள் மிகவும் ஏமாற்றப்பட்டு, கஷ்டத் திற்கும், கொடுமைக்கும் ஆளாகி முற் போக்கடைய சிறிதும் இடமில்லாமல் போய் விடுகின்றார்கள்.  இந்த மாதிரியான காரியங்கள், சமீபகாலம் வரை மதம், கடவுள், மோட்சம், சன்மார்க்கம் முதலாகியவை களின் பேராலேயே பெரிதும் நடந்து வந்திருந்தாலும் கொஞ்ச காலமாய் தேசம், தேசியம், சுயராஜ்யம் என்பவைகளின் பேரால் வியாபாரமாகவே துவக்கப்பட்டு, மக்களுக்கு பெருத்த இடையூறையும், கஷ்டத்தையும் கொடுத்து வருகின்றது.
ஆகவே, இந்தத் தத்துவத்தையே முக்கிய மாய் எடுத்துக்கொண்டு இதை எழுது கின்றோம். ஏனெனில், சாதாரணமாக மற்றபல நாடுகளில் பொது நலச்சேவை என்பதில் ஈடுபடுகின்றவர்கள் பலர் கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும், கவலைக்கும் உள்ளாகி, அநேக விதத் தொல்லைகளை அனுபவிக் கின்றார்கள்.  ஆனால், இந்த நாட்டிலோ, சிறிதும் கஷ்டமும், நஷ்டமும், தொல்லை யும் கவலையும் இல்லாமல், நேருக்கு நேராகவே, உடனுக்குடனே, பதவி, உத்தி யோகம், பணம், கீர்த்தி, அதிகாரம்  முதலிய வைகள் மாற்றுப் பண்டமாக அடையப் பட்டு வருகின்றன.
இவற்றிற்குக் காரணம், பொதுமக்களை ஒரு  கூட்டத்தார், மேலே குறிப்பிட்டபடி ஏற்கனவே மதம், கடவுள், மோட்சம், விதி முதலாகி யவைகளால் மூட நம்பிக்கைக்கு ஆளாக்கி வைத்திருப்பதால், அந்த மூட நம்பிக்கை யானது.  அந்த மக்களை, தேசிய வியாபாரிகளிடமும் சிக்கி, ஏமாந்து கஷ்டப்படும்படி செய்து வருகின்றது.
உதாரணமாக, இந்திய தேசிய காங்கிரஸ் என்னும் ஒரு தேசிய வியாபார லிமிடெட் கம்பெனியானது, அது ஏற்படுத்தப்பட்ட நாள் முதலாகவே, அந்தத் தேசிய வியாபாரக் கம்பெனியில் நிர்வாக ஸ்தானம் வகித்தவர்களுக்கெல்லாம், பெரும்பான் மையாய், ஹைகோர்ட் ஜட்ஜ் உத்தியோக மும், நிர்வாக சபை அங்கத்தினர் பதவியும், மற்றும் அதில் சேர்ந்த பங்காளிகளுக் கெல்லாம், ஜில்லா ஜட்ஜ் சப்  ஜட்ஜ் முதலிய உத்தியோக பதவிகளும் மற்றும் பட்டம் கௌரவ உத்தியோகங்கள், தொழில் விர்த்தி ஆகியவை களும் தாராளமாய் கிடைத்து வந்தது யாவரும் அறிந்ததே யாகும்.
இந்த நிலைமையானது நாளுக்கு நாள் பெருகி, அநேகர் இவ்வியாபாரத்தில் பங்கெடுக்க நேர்ந்ததின் பின் லிமிடெட் கம்பெனியாய் இருந்ததானதுஅன்லிமிட் டெட் கம்பெனியாகி அதாவது. ஒரு வகுப் பாருக்கு மாத்திரம் ஒரு தரத்தாருக்கு மாத்திரம் என்று வரையறுக்கப்பட்டிருந்ததானது மாறி, எல்லா வகுப்பாருக்கும் எல்லாத் தரத்தாருக்கும் அதில் பங்கு எடுத்துக் கொள்ள சௌகரியம் ஏற்பட்டு, பிறகு, அதற்கு அநேக (பிராஞ்சு) கிளை ஸ்தாப னங்களும் உண்டாகி, இப்போது வரவரப் பெருகி, ஏறக்குறைய சிறிது கல்வியும், தந்திரமும் உள்ள எல்லா மக்களுமே, தேசிய வியாபாரத்தில் கலந்து, அளவுக்கு மீறிய அதாவது தங்கள் யோக்கி யதைக்கும் தகுதிக்கும் எத்தனையோ பங்கு மீறியதான லாபத்தைப் பயனை அடையும் படியாகக் செய்து விட்டது.
ஆகவே, இன்றைய தினம் இந்த நாட் டில். பொது மக்களின் சௌக்கியத்திற்கும். பத்திரத்திற்கும். ஒழுக்கத்திற்கும் விரோத மானது என்று சொல்லத் தகுந்த கள்ளு, சாராயக்கடை சூதாடுமிடம், விபசாரிகள் விடுதி, கொள்ளைக் கூட்டத்தார் முதலாகிய எல்லா வித ஒழுக்கமும், நாணயமும் கெட்ட துறைகள் ஸ்தாபனங்கள் என்பவை களையெல்லாம் விட. மிக்க மோசமான துறையாகவும், ஸ்தாபனமாகவும் உள்ள ஸ்தானத்தையும் மேல்படி தேசிய வியா பாரம் அடைந்துவிட்டது.
இன்னும் விளக்கமாய் பேச வேண்டு மானால். வேறு எந்தக் காரியத்தாலும் பிழைக்க முடியாதவர்களும் ஒழுக்கமும் நாணயமும் அற்றவர்களும். மக்களை ஏமாற்றி வாழும் மோசக்காரர்களும் கடைசி யாய்ப்போய் அடைக்கலம் புகுவதற்கு இன்று தேசிய வியாபாரத்தைவிட வேறு சுலபமான வழி நாட்டில் ஒன்றுமே இல்லை என்று சொல்லும்படியானதாகி விட்டது.  இந்த அபிப்பிராயம் இன்னும் பலமாய் வலியுறுத்ததக்க மாதிரியில், முதல் முதல் ஆங்கிலத்தில் அகராதி எழுதின ஓர் ஆங்கில அறிவாளியான, டாக்டர் சாமிவேல் ஜான்சன் என்பவர், தேசபக்தி ‘Patriotism is the Last refuge of the scoundrals ’ என்று எழுதி இருக்கின்றார்.
இதன் பொருள் என்னவென்றால் தேசியம் தேசபக்தி என்பது வேறு எந்த விதத்திலும் பிழைக்க முடியாத அயோக்கியர்களின், பிழைப்புக்கு கடைசி மார்க்கமாகும் என்பதாகும். ஜார்ஜ் பர்னார்டு ஷா என்னும் மற்றொரு ஆங்கில அறிஞர், இதே விஷயமாய் நிரந்தரமாய் ஒரு வேலையில் இருந்து வாழ முடியாத வர்கள்.  தங்களை அரசியல் வாதியாக ஆக்கிக்கொண்டு, அதிலேயே தங்களது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளு வார்கள் என்று எழுதி இருக்கிறார்.
இந்த அறிஞர்களின் அபிப்பிராயங்கள் பெரிதும் மேல் நாட்டு அனுபவத்தைப் பொருத்தது என்று சொல்லலாம்.  ஆனாலும் கீழ் நாட்டு தேசியம் என்பதும், பெரிதும் மேல் நாட்டு நடப்பைக் கண்டே ஆரம்பிக்கப்பட்டிருப்ப தாலும், ஏதோ சில பெரியார்கள் தவிர. மற்றபடி பெரும்பான்மை யான மக்கள், நமது நாட்டிலும் அப்படிப்பட்டவர்களுக் காகவே ஏற்பட்டு, அது போலவே தங்கள் வாழ்க்கைக்கு, தேசியத்தை ஆதாரமாய் உபயோகப்படுத்தி, மக்களை ஏமாற்றி நாணயம் சிறிது மற்ற தன்மையில், சுயநல மிகளாய் இருந்து பயனடைந்து வருவதாலும்.
தப்பித் தவறி யோக்கியமானவர்கள் ஒருவர், இருவர் இதில் சேர்ந்தாலும், அவர்களும் அந்தத்துறையிலேயே இழுக்கப்படுகின்றபடியாலும், மேல் குறிப்பிட்ட அறிஞர்கள் கண்ட உண் மைகள் இந்தியாவுக்கு அடியோடு பொருத்த மற்றது என்றுச் சொல்லி விடுவதற்கில்லை என்றே சொல்லுகின்றோம்.  இதற்கு உதாரணமாக கொஞ்சகாலமாய் நமது நாட்டில் உள்ள ஜனப் பிரதிநிதி ஸ்தாபனங்கள் என்பவைகளில். ஜனப் பிரதிநிதி களாய் நியமனம்  தேர்தல் முதலி யவை பெற்ற கிராமப் பஞ்சாயத்து, தேவஸ்தானப் பஞ்சாயத்து வகையறாக்கள் முதல் மந்திரிகள், நிர்வாக சபையார்கள், கவர்னர்கள் என்கின்றவர்கள் வரையிலும் மற்றும் இந்த முறையில் அதிகாரம், சர்க்கார் சம்பள உத்தியோகம் முதலியவைகள் பெற்ற சிப்பந்திகள், தலையாரி, உத்தி யோகம் முதல் கலெக்டர், ஹைகோர்ட் ஜட்ஜ் உத்தியோகம் வரையிலும் அவற்றில் உள்ளவர்களின் பெரும்பான்மையோர்கள் என்பது மாத்திரமல்லாமல், முக்காலே மூணுவீசம் முக்கானி அரைக்கானி வரையில் உள்ளவர்களின் யோக்கியதை யும் அவர்களின் தேசியம் பொது நல சேவை ஆகியவற்றின் தன்மைகளை சுத்தமான நடுநிலைமையிலிருந்து பார்த் தால் விளங்காமல் போகாது.  ஆகவே, இந்தப்படி நாம் மேலே விவரித்தெழுதியதின் நோக்கம் எல்லாம் முக்கியமாய் தேசியம் என்பது பதவியும், உத்தியோகமும், பணமும் சம்பாதிக்கும் மார்க்கமான வியாபாரத் துறையாகும் என்பதை, மக்களுக்கு வெளிப்படுத்தவே எழுதியதாகும் .
பொதுவாக, சுயநலமில் லாமலும், மோசம் ஏமாற்றுதல், ஆகியவை இல்லாமலும், தகுதிக்கும் தேவைக்கும் மேல் அடைய ஆசை இல்லாமலும், நாணயமாய் உழைக்கக் கூடிய பெரியார்களும் இதில் உண்டு என்பதை நாம் மனமார ஒப்புக் கொள்ளுகின்றோமாயினும், அவர்கள் வெகு, வெகு சிலரேயாகையால் அதைப் பற்றி கவனித்துக் கொண்டு, இவ்வளவு கெடுதலான விஷயத்தில் சிறிது தாட் சண்ணியம் காட்டுவது தவறு என்று கருதி மொத்தமாக எழுதுகின்றோம்.
இந்திய மக்களின் நிலைமை ஏழ்மை என்பதிலும், தரித்திரத்தால் கஷ்டப்படு கின்றார்கள் என்பதிலும், தினம். ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு 2 அணா வரும்படிக்கும் குறைவாயுள்ள வரும் படிக்காரர்கள் என்பதற்கும், ஆட்சேபணை சொல்லுகின்ற வர்கள் யாருமே காணோம்.  அப்படிப்பட்ட நாட்டில், தேசியத்தின் பேரால். (மாதம்) ஒன்றுக்கு 4333-5-4, 5333-5-4, 6000,-0, 7000-0-0 ரூபாய்கள் சன்மானமாக சம்பாதிப்பதும், பொது நலசேவையின் பேரால் மாதம் ஒன்றுக்கு 1000, 2000, 3000, 4000 ரூபாய்கள் வீதம் சம்பளம் சம்பாதிப்பதும். பொது ஜன நன்மைக்கு உபகாரமான வேலை (வக்கீல் தொழில்) முதலியவைகள்    என்னும் பேரால் மாதம் 1க்கு 10000, 20000, 30000 ரூபாய்கள் வரையில் சம்பாதிப்பதும், மற்றும் பல சாதாரண உத்தியோகங்களிலிலும் இதுபோலவே, ஒன்றுக்கு 100, 500, 1000, 2000 வீதம் சம்பளம் பெறுவதுமான காரியங்கள் எப்படி தேசபக்தியானதும், தேசியமானதும் யோக்கியமானதுமான காரியங்களாகும் என்று கேட்கின்றோம்.
ரூ1-க்கு பட்டணம் பக்காவில் 6 படி அரிசி விற்கின்ற இந்தக் காலத்தில், வெள்ளாமை விளை பொருள் களுக்கு விலை இல்லாத காலத்தில் கைத்தொழில் தொழிலாளர்களுக்கு போதிய தொழிலும், கூலியும் கிடைக்காத காலத்தில், வியாபாரிகளுக்கு வியாபாரமும், பணப்புழக்கமும், வரும்படியும் இல்லாமல் கஷ்டப்படும் இக்காலத்தில் ஒரு பெரிய நாடு கண்கள் பிதுங்க, தத்தளித்துக் கொண்டு கஷ்டப்படுகின்ற நெருக்கடியான நிலைமையில், தேசியத்தின் பேராலும், பொது நல சேவையின் பேராலும், இந்தப் படி ஒரு கூட்டம் மக்களை கொள்ளை அடித்தால். இந்த மாதிரி தேசியமும், பொது நல சேவையும், யோக்கியமானதும் மதிக்கத்தகுந்ததும் ஆகுமா என்றும் கேட் கின்றோம்.  இந்த  மாதிரியான அயோக் கியத் தனங்களையும், பித்தலாட்டங்களை யும், ஏழைகளை, பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தந்திரங்களையும், தந்திரத்திற்கு ஆதாரமானவை களையும், தேசியம், தேச சேவை, பொது நல சேவை என்று ஒப்புக் கொண்டு, அவற்றிற்கு உதவிபுரிய வேண்டு மென்றால், அயோக்கியனாகவோ, முட் டாளாகவோ இருந்தால் ஒழிய, எப்படி முடியும்? என்றும் நாம் மறுபடியும் கேட்கின்றோம்.  தேசியம் என்பது. வியாபாரம் என்பதாக நாம் குறிப்பிட்டதற்கு யார் கோபித்துக் கொள்வதானாலும். தேசியத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையானவர்கள்.
அதை ஒரு வியாபாரம் போல் பாவித்து கை முதல், போட்டு, தேசியத்தையோ, பொதுநல சேவையையோ அல்லது இவை செய்வ தற்கு ஆதரவானது என்று தேர்தல் களையோ நடத்தி, வெற்றிபெற்று மேல் கண்ட முதலுக்கு 100-க்கு 100 வட்டியுடன், சில சமயங்களில் அதற்கு இரட்டிப்பு லாபத்துடன் பயன் அடைந்த. நாணயம், ஒழுக்கம் எல்லாவற்றையும் துறந்து, வாழ்க்கை நடத்துகின்றார்களா? இல் லையா? என்றும் கேட்கின்றோம்.  அன் றியும், இப்படிப்பட்ட காரியம் இனிமேல் நடக்காமல் இருக்கவாவது யாராவது எந்த உண்மை தேசியவாதி யாவது முயற்சிக் கிறார்களா? கருதுகின்றார்களா? என்று கேட்கின்றோம்.
தேசியக் கிளர்ச்சி என்னும் பேரால், இந்திய மக்களுக்கு இன்று கிடைத்துள்ள ஒவ்வொரு சீர்திருத்தமும் இந்தக் காரியத் திற்கே உபயோகப்பட்டிருப்பதல்லாமல், வேறு ஏதாவது ஒரு காரியத்திற்கு உப யோகப்பட முடிந்ததா? என்றும் கேட் கின்றோம்.  அன்றியும், பதவியில் இருக்கும் நபர்கள் மேல்  அவர்களது கூட்டத்தின் மேல் போட்டிபோட்டு குற்றம் சொல்லித் திரியும் ஆட்களோ, அன்றி, மற்றொரு கூட்டத்தாரோ தாங்கள் எப்படியாவது அந்தப் பதவியைப் பெற்று.
அந்த லாபத்தை அடைய முயற்சி செய்வதைத் தவிர, மற்றபடி வேறு ஏதாவது நாணயமோ யோக்கியப் பொறுப்போ உடையவர்களாக இருக்கின்றார்களா? என்றும் கேட்கின் றோம் உதாரணமாக, நாளது வரையில் எந்த மந்திரி சபையை யார் கவிழ்க்க முயற்சித் தாலும். எந்த வித நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்து கலைக்க முயற்சித்தாலும் எந்த நிர்வாக சபை அங்கத்தினரை எப்படி தாக்கினாலும், அந்தந்த நபர்கள் மீதோ கூட்டத்தின் மீதோ நடவடிக்கைகள் மீதோ குற்றம் சொல்லு வதைத் தவிர, அவருக்கு ரூ. 4333-5-4ம்,  5333-5-4ம் எதற்கு என்றாவது ஏன் ரூ. 1000 போதாது ரூ. 500 போதாது என்றாவது யாரும் கேட்பதேயில்லை.
உதாரணமாக இன்றையதினம், சென்னை சட்டசபையில் உள்ள மந்திரிகள் மீது பொறாமை கொண்டு அவர்களைக் கவிழ்க்க ஒரு கூட்ட ஆசாமிகள் ஆகாயத் திற்கும், பூமிக்குமாய் முயற்சி செய்து கொண்டுவருவது யாவரும் அறிந்ததேயாகும்.  அதுபோலவே இப் பொழுது மந்திரியாயிருக்கும் ஆசாமி களைச் சேர்ந்த கூட்டமும் முன், மந்திரியாய் இருந்தவர்களைக் கவிழ்க்க முயற்சி செய்து, பயனடைந்ததும் யாவருக்கும் தெரியும். ஒவ்வொரு கூட்டமும் இந்த முயற்சியில் வரும்படியை உத்தேசித்து, தக்க பணச் செலவு செய்து, பலாபலன் அடைந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும்.  ஆனால் இதிலுள்ள தந்திரமும் புரட்டும், சுயநலமும் என்னவென்றால், இரண்டு கூட்டமும், இன்னும் இரண்டொரு வௌவால் கூட்டமும், தேசியத்திற்காகவும் பொது ஜன நன்மைக்காகவுமே மந்திரியாக வேண்டுமென்று சொல்லிக் கொண்டு பாடுபட்டும். நாளதுவரை ஒருவராவது மந்திரிகள் சம்பளத்தை தேவைக்குள்ள அளவுக்குக் குறைத்துக் கொள்வதாய்ச் சொல்லவே இல்லை என்பதும், அந்தத் துறையில் இது வரையாரும் பாடுபட வில்லை என்பதுமாகும்.
மந்திரிகள் சம்பளத் தால், வெகுபணம் மீதியாகிவிடும்  என் கின்ற எண்ணத்தின் மீதே நாம் இந்தப்படி எழுதவில்லை. ஆனாலும் மந்திரிகள் சம்பளம் குறைவுப்பட்டு, அது ஒரு குடும் பத்தின் கவலையற்ற வாழ்க்கைக்குப் போதுமான அளவுக்கு குறைக்கப்பட்டா லொழிய மந்திரி பதவி என்பது நாணய மாகவும், யோக்கியமாகவும். நடுநிலைமை யாகவும், ஒழுக்கமுள்ளதாகவும் இருக்க முடியாது என்பதோடு மற்ற ஜனங்களுக்கும் தேசியத்தின் பேராலும் பொது நல சேவையின் பேராலும் செய்யப்படும்  ஒழுக்க ஈனமான காரியங்கள் நிறுத்தப்பட முடியாது என்கின்ற எண்ணத்தின் மீதே எழுதப்படுவதாகும்.
சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரை, நமக்கு மூன்று கிளர்ச்சிகளின் அனுபோகமும் நான்கு தேசிய ஸ்தாபனங் களின் அனுபோகமும், அநேக தேச பக்தர்கள் அனுபோகமும், நான்கு மந்திரி சபைகள் அனுபோகமும், பல ஜனப் பிரதிநிதி சபைகள் அனுபோகமும், அநேக மேல்தர, கீழ்த்தர உத்தியோக சேவை காரர்களின் நெருங்கிய பழக்கத்தால் ஏற்பட்ட அனுபோகமும் உண்டு. இவை களின் கொள்கைகளைப் பற்றி, பிரச் சாரத்தைப் பற்றி, நடத்தையைப் பற்றி பல மாறுதல்கள் இருந்தாலும் இவைகளில் கலந்துள்ள தனிப்பட்ட மக்களின் 100-க்கு 99 3/4 பேர்களின் யோக்கியமும், நாணயமும், லட்சியமும் ஒன்றேயாகும்.
எல்லோரும் ஏழைகளை, பாமர மக்களை வஞ்சித்து, கொள்ளையடித்து, பணம் சம்பாதித்து, பெரிய மனிதர்கள் ஆக வேண்டும்.  பட்டம், பதவிகள் பெறவேண்டும்.  தங்கள் பிள்ளை, குட்டி சந்ததிகளுக்கு உத்தியோகங்கள் பெற வேண்டும்.  என்பவைகளையே முக்கியதத்துவமாய், கொள்கையாய்க் கொண்டவர்கள் என்பதை தூக்குமேடை  மீதிருந்தும் சொல்லுவோம்.
இது மாத்திரமல்லாமல். எந்தவிதமான யோக்கியர்களையும், இன்றைய தேசிய மானது அயோக்கியர்களாக்கத் தயாராயி ருப்பதோடு, வெளியில் இருக்க முடியாமல் உள்ளே இழுத்து போட்டுக் கொள்கின்ற தாகவே இருக்கின்றது.  ஆகவே, இன்றைய தினம், எந்த மகா சட்டசபையிலும், அதிகாரத்திலும் பதவியிலும் இருக்கின்ற கட்சிகள் மீதோ, மந்திரிசபை மீதோ, எந்தத் தேசியக் கட்சியாவது. பொது நல சேவைக் கட்சியாவது உண்மையான, யோக்கியமான போட்டி போடுவதாயிருந்தால் அவர்கள் முதலில் செய்ய வேண்டிய முக்கியமான. யோக்கியமான காரியம் மந்திரிகளுக்கு மாதம் 1-க்கு 1000 ரூ சம்பளமும், மந்திரி உத்தியோகம் உள்ளவரை வீட்டு வாட கையும் தவிர, வேறு ஒன்றும் இருக்கப்படாது என்பதும் மற்ற மரியாதை, படி முதலிய வைகளும் ஒரு சட்டசபை அங்கத்தினருக்கு சமானமானதாவே இருக்க வேண்டும் என்கின்ற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி வைக்க முயற்சிக்க வேண்டியதாகும் அப்படிக்கில்லாமல், மந்திரிகளுக்கு விரோதமாய் என்று ஒரு கட்சியை ஏற்படுத்திக் கொண்டு, அவர் களுக்கு எதிராக உட்கார்ந்து கொண்டு, அவர்களைத் தோற்கடித்து, அந்தப் பதவியைப் பெறுவது என்று கருதி, இரவும், பகலும் முயற்சி செய்து கொண்டு இருப் பதுடன் இதை ஒரு தேசிய வேலையென் றும் சொல்லிக்கொண்டு இருந்தால், இதைப் போன்ற சுயமரியாதை அற்றதும் நாணய மற்றதும், யோக்கியப் பொறுப்பும், ஒழுக் கமும், பொது நல சேவையு மற்றதான வேலை, வேறு ஒன்றும் இல்லை என்று வலியுறுத்திச் சொல்லுவதோடு, தேசியம் என்று சொல்லுவது ஒரு மோசடி வியாபாரம் என்பதற்கும் இதையே உதாரணமாய் எடுத்துக்காட்டுவோம்.
நிற்க, இன்றையதினம், நாட்டில் நடை பெறும் தேசிய கிளர்ச்சிகள் பலவற்றில் கலந்துள்ளவர்களைப் பற்றிப் பேசுவதா னாலும், ஏதோ சிலர் தவிர, மற்றபடியான 100-க்கு 90 மக்கள் ஆங்கிலம் படித்த வக்கீல்கள் இயக்கத்தை நடத்துகின்ற உள்நாட்டுத் தலைவர் ஆகியவர்கள் இந்தத் தேச சேவையைக் காட்டி அல்லது இதன் பயனாய் நாளைய தேர்தல்களில், இம்மாதிரி யான பயன்களையே பெறுவதல்லாமல் மற்றபடி வேறு என்ன செய்யக் கூடும், என்ன செய்யப்போகின்றார்கள் என்று கேட்கின்றோம்.  ஆகவே, இந்தக் காரணங் களால்தான் தேசியத்தை வியாபாரம் என்று சொல்லுகின்றோம். குடிஅரசு - தலையங்கம் - 01.03.1931
தேசியக் கிளர்ச்சி என்னும் பேரால், இந்திய மக்களுக்கு இன்று கிடைத்துள்ள ஒவ்வொரு சீர்திருத்தமும் இந்தக் காரியத்திற்கே உபயோகப்பட்டிருப்பதல்லாமல், வேறு ஏதாவது ஒரு காரியத்திற்கு உபயோகப்பட முடிந்ததா?


Read more: http://www.viduthalai.in/page1/90819.html#ixzz3IyDk9udK

புதன், 12 நவம்பர், 2014

பெரியார் சொல்லும் திராவிடர் திருமணம்



பெரியார் சொல்லும் திராவிடர் திருமணம்

தந்தை பெரியார் அவர்கள் "சித்திர புத்திரன்" என்கிற புனைப் பெயரில் 14-03-1950 விடுதலை நாளிதழில் "திருமண விழா: வினா விடை" என்ற தலைப்பில் சுயமரியாதைத் திருமணம் குறித்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்த வினா-விடை உங்கள் பார்வைக்காக:

சுயமரியாதைத் திருமணம் என்பது எது?

நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனை புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுய மரியாதைத் திருமணமாகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?

நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று அறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமான காரியங்களைச் (சடங்குகள்) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவு திருமணம் ஆகும்.

தமிழர் (திராவிடர் திருமணம்) என்றால் என்ன?

புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ள உரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும் உள்ள ஒரு இனத்திற்கு ஒரு நீதியான மனு நீதி இல்லாமல் வாழ்க்கையில், கணவனும் மனைவியும் சரிசம உரிமை உள்ள நட்பு முறை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் (திராவிடர்) திருமணமாகும்.

சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?

ஜோசியம், சகுனம், சாமி கேட்டல், ஜாதகம் பார்த்தல் ஆகிய மூடநம்பிக்கை இல்லாமலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல், அன்னியர் மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்தும், அல்லது தெரிந்து கொள்வதைப் பற்றிக் கவலையில்லாமல் மற்றவர்கள் கூட்டி வைக்கும் தன்மை இல்லாமலும், மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்து காதலித்து நடத்தும் திருமணம் சுதந்திரத் திருமணமாகும்.

புரட்சித் திருமணம் என்றால் என்ன?

தாலி கட்டாமல் செய்யும் திருமணம் புரட்சித் திருமணமாகும்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?

கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தியம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம், ஊர்வலம் முதலிய காரியங்களுக்கு அதிகப் பணம் செலவு செய்வதும், ஒருநாள் ஒரு வேளைக்கு மேலாகத் திருமண நிகழ்ச்சியை நீட்டுவதும் ஆன ஆடம்பர காரியங்கள் சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது சிக்கனத் திருமணமாகும்.

இவைகளையெல்லாம் சேர்த்து நடத்துகிற திருமணத்திற்கு ஒரே பேராக என்ன சொல்லலாம்?

நவீனத் திருமணம் அல்லது தற்காலமுறைத் திராவிடத் திருமணம் என்று சொல்லலாம்.

நன்றி:தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய "சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்" நூல்

தாலி கட்டுவதில் உள்ள இழிவைப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்களா?

 
வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சியானது இதுவரை நடைபெற்று வந்த நிகழ்ச்சிக்கு மாறுதலாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி சமீப காலத்தில் 40, 50 ஆண்டுகளுக்கு முன் மனித சமுதாய முறைகளில் சில மாற்றங்கள் செய்த போது இந்நிகழ்ச்சியும் மாற்றியமைக்கப்பட்டது என்பதோடு பழைய முறையில் பெண்ணடிமையை நிலைநிறுத்தும் படியாகவும் மனிதனின் மூட நம்பிக்கையை வளர்ப்பதாகவும், ஜாதி அமைப்பைக் காப்பாற்றுவதாகவும் இருந்ததால் இவற்றை ஒழித்து புது முறையைக் காண வேண்டியதாயிற்று. தமிழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது கிடையாது. ஆணும் பெண்ணும் கூடி வாழ்கிற இந்த முறையானது ஆரியனுக்குத்தான் உண்டு. தமிழனுக்குக் கிடையாது. பார்ப்பானுக்காக பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இக்கூட்டு வாழ்க்கை முறையாகும்.

பார்ப்பனர்களிடையே ஒழுக்கக்கேடுகள் ஏற்பட்டபின் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவைதான் சடங்குகள், முறைகள் யாவுமாகும். இதைத் தொல்காப்பியன் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளான்.

 சூத்திரர்கள் என்பவர்களுக்கு நாலாம் ஜாதி மக்களுக்கு சதி, பதி முறை இல்லை. சூத்திரர்கள் என்பவர்கள் பார்ப்பானுக்கு தாசி புத்திரர்கள். தாசி புத்திரர்களுக்குத் திருமண உரிமை கிடையாது. இது மனுதர்ம சாஸ்திரம் மட்டுமல்ல, இந்துச் சட்டமுமாகும்.

இதை மாற்ற வேண்டுமென்று, மனித சமுதாயத் தொண்டு செய்த எவருமே முற்படவில்லை. நான் ஒருவன்தான் இதற்காகப் பாடுபட்டு வருகின்றேன். எனது இயக்கம் பாடுபட்டு வருகிறது.

நம் நாட்டில் தோன்றிய எந்த மனிதச் சமுதாயத் தொண்டு செய்தவர்களும், புலவர்களும், நீதி சொன்னவர்களும் பெண்கள் என்றால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று சொன்னார்களே தவிர, பெண்கள் ஆண்களைப் போல் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று எவருமே சொல்லவில்லை. திருத்தப்பட்ட இம்முறையிலும் பெரும்பாலோர் நம் கருத்துப்படி நடந்து கொள்வது கிடையாது. இதன் மூலம் பாப்பானையும், சடங்குகளையும் தவிர்த்திருக்கிறார்களே ஒழிய, மற்ற செலவுகளில் எதையும் குறைத்ததாகத் தெரியவில்லை. தாலி கட்டுவதில் உள்ள இழிவைப் பெண்கள் உணராதிருக்கிறார்கள். தாலி என்பது பெண்கள் அடிமைகள் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய விளம்பரச் சின்னமாகும். இதை உணராது பெண்களே தாலி கட்டிக் கொள்ள முன் வருவதற்குக் காரணம் அவர்களுக்குப் போதிய கல்வி அறிவு இல்லாததாலேயே ஆகும்.

எனது கருத்து கணவன் - மனைவி என்கின்ற இம்முறையையே சட்டவிரோத மாக்க வேண்டும். பகுத்தறிவுள்ள மனிதன், சுதந்திரமாக வாழ வேண்டிய மனிதன், இல்லறம் என்கின்ற பெயரால் தன் சுதந்திரத்தை இழப்பதோடு தொல்லைகளுக்கும் ஆளாகின்றான். குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தனது சுயமரியாதையை மனிதன் இழக்கின்றான். பெண்கள் தங்களின் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்கள் அவர்களுக்கு அணிமணிகள் வாங்கிக் கொடுத்து அணியச் செய்கின்றனர். நம்நாட்டுப் பெண்களைப் போன்று வேறு எந்த நாட்டுப் பெண்களும் நகை அணிவது கிடையாது. சிங்காரித்துக் கொள்வது கிடையாது. ஆண்களைப் போன்று சாதாரண வாழ்வே வாழ்கின்றனர்.

நல்ல அரசாங்கமாக இருந்தால் நான்கு முழத்திற்கு மேல் பெண்கள் சேலை கட்டக் கூடாது, தலை முடியை கிராப் செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் போடும். எதற்காக ஒரு பெண்ணுக்கு 18 முழம் புடவை? இதைப் பெண்களும் சிந்திக்க வேண்டும். நாம் இன்னும் உலகத்திலுள்ள பகுத்தறிவில் கால் பகுதி கூட பெறவில்லை. மற்ற நாட்டு மக்கள் சந்திரனுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கிற காலத்தில் நம் மக்கள் கோயிலையும், குழவிக் கற்களையும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலை மாறி பெண்கள் நல்ல வண்ணம் கல்வி கற்க வேண்டும். நம் சமுதாயத்தைத் திருத்தி அமைக்கும்படியான நல்ல அரசாங்கம் அமைய வேண்டும்.

சமுதாய அமைப்பைப் பற்றி நல்ல திட்டம் போட வேண்டும். எப்படி சொத்திற்கு உச்சவரம்பு போட்டிருக்கிறார்களோ, அதுபோன்று பெண்களின் அலங்காரத்தைக் குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்கள் கிராப் செய்து கொள்ள வேண்டும். முடியை அலங்கரிப்பதில் அதிக நேரத்தை பெண்கள் வீணாக்குகின்றனர். நாலு பேர் போற்றும்படியான பெண்கள் நம் நாட்டில் எவருமில்லையே! பெண்களுக்கு மூட நம்பிக்கை, முட்டாள்தனத்தில் உள்ள சுதந்திரத்தைக் குறைக்க வேண்டும். தமிழர் சமுதாயம் உலகத்தின் தலைசிறந்த சமுதாயமாக வாழ வேண்டுமானால் பெண்கள் கல்வி பெற வேண்டும். பகுத்தறிவு பெற வேண்டும். பொதுவாக பெண்கள் 20 வயது வரை படிக்க வேண்டும். படித்து ஒரு தொழிலில் ஈடுபட்ட பின்பே பெண்கள் திருமணத்திற்கு முன்வர வேண்டும். மணமக்கள் குடும்பம் நடத்துவதோடு சமுதாயத்திற்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்.

-------------------தந்தை பெரியார்--"விடுதலை" 30.11.1970
புதன், ஜூலை 09, 2014  VIDUTHALAI EPAPER

செவ்வாய், 11 நவம்பர், 2014

சூத்திரஜாதி இழிவு


தந்தை பெரியார்

சூத்திரஜாதி இழிவு சுத்தத்தால் நீங்காது

- தந்தை பெரியார்
இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய திராவிடர்களின் இழிவுகளையும் முன்னேற்றத்தையும் அடியோடு ஒழித்து அவர்களை மற்ற நாட்டு மக்களைப் போலும் இங்குள்ள திராவிடரல்லாத மக்களைப் போன்றும் சிறப்பாக நல்வாழ்வாக மனிதத் தன்மையுடன் நம்பும்படிச் செய்வதுதான் திராவிடர் சமூகத்தின் முக்கியமான நோக்கமும் வேலையுமாகும்.

இங்குக் கூடியுள்ள நீங்கள் 100_க்கு 90_பேர்கள் எனக்குப் பேசத் தெரிந்த காலமுதல் ஆதித்திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டு வருகிறோம். நீங்கள், நாங்கள் என்பது சற்று சேர்க்கப்பட வேண்டியதுதான். இந்த நாங்கள், நீங்கள் என்பவை ஒரே இனத்தவர்தான் என்றாலும் இந்தப் பிரிவு-களைத் தழுவி நிற்கும் மதத்தால் கட்டப்-பட்டிருக்கிறோமே யொழிய வேறு காரணமல்ல. உண்மையில் யாவரும் ஒரே இனத்தைச் சேர்ந்த, அதாவது திராவிட இனத்தைச் சேர்ந்த மக்கள்தாம்.

இந்நாட்டு சம்பிரதாயப்படி _ சட்டப்படி _ கருத்துப்படித்தான் நாங்கள் சூத்திரர்கள். அதாவது பார்ப்பனரின் அடிமைகள்; பஞ்சமர் சண்டாளர்கள், தீண்டக்கூடாதவர்கள், கண்ணில் தென்படக்கூடா இனத்தினால் நமக்கு இருந்துவரும் இழிவுகளும் ஒரே மாதிரிதான். இப்பிறவிப்படி இழிவுகளால் இருந்து வரும் முன்னேற்றத் தடைகள் மிக வலுவானவை. இந்து மதத்தை விட்டு வேறு மதத்துக்கு மாறினா-லொழிய நீக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வலுப்பெற்று நிரந்தரமாக இருந்து வரும் இத்தடைகளை ஒழிப்பது கஷ்டமாக இருந்து வருகிறது.
இந்நாட்டில் சைவ கழகமென்றும், வைணவர் கழகம் என்றும், தாழ்த்தப்பட்டோர் கழகம் என்றும், ஆதித்திராவிடர் கழகம் என்றும், சன்மார்க்க கழகம் என்றும், சுயராஜ்ய கழகமென்றும், காங்கிரஸ் கழகமென்றும் பல கழகம் இருந்தும் ஒன்றேனும் இப்படி இழிவு நீக்கத்திற்காகப் பாடுபடுவதில்லை. அதற்கு மாறாக இவ்விழிவுகளை நிறுத்தி வைக்கவே இவை பாடுபட்டு வருகின்றன.
உண்மையில் இப்பிறவி இழிவுகள் நிலை நீங்க, பாடுபட்டு வருபவர்கள் நாங்கள் என்றால் அது எங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ள நான் சொல்லவில்லை. எங்கள் கழகம் ஒன்றுதான் என்று கூறுகிறேன்.
எங்கள் கழகத்திற்குத்தான் ஏன் அந்த நோக்கம்? எங்கள் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெருமை? சில கொள்கைகள் தான் இவ்விழிவு நீக்கத்திற்காகப் பயன்பட்டு வருகின்றன என்று கூறுவோம். இதை எவராலும் மறுத்துக்கூற முடியாது.
ஒரு பொதுவுடைமைக்காரர் கூறலாம், இன்றைய நம் இழிநிலைக்கு நமது ஏழ்மைதான் காரணம்; பணக்காரன் பணத்தை ஏழைக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டால் இவ்விழிவு நீங்கிவிடும் என்று. ஆனால் நீங்கள் கேட்க வேண்டும் அவரைப் பங்கிட்டுக் கொடுப்பது பிறகு பார்த்துக் கொள்வோம். நம் அண்ணாமலைச் செட்டியார் ஏனப்பா சூத்திரராக இருக்கிறார்? என்று சிலர் கூறுவார்கள். நாம் கொஞ்சம் அசுத்தமாக இருப்பதால்தான் தாழ்த்தப்பட்டுத் தீண்டக்-கூடாதவர்களாக இருக்கிறோம்! நாம் நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக் குளித்து சலவை உடுத்திக்கொண்டிருந்தால் இழிவு போய்விடும் என்று அவர்களையும் நீங்கள் கேட்க வேண்டும்,
நாங்கள் குளிப்பதும் முழுகுவதும் பிறகு இருக்கட்டும். அன்றாடம் குளித்து முழுகி வாசனைத் திரவியம் பூசி வெள்ளையுடுத்தி வெண்ணீறு பூசி வெயிலே படாமல் வாழும் நம் ஸ்ரீலஸ்ரீ பண்டார சந்நிதிகள் ஏனப்பா இன்னும் சூத்திரர்களாக இருக்கிறார்கள்? என்று. மற்றும் சிலர் கூறுவார்கள் படித்துப் பட்டம், பதவி பெற்றால் நமது இழிவு நீங்கிவிடும் என்று. நீங்கள் கேட்க வேண்டும் அவர்களை, படித்துப் பட்டம் பதவி பெற்றுள்ள அம்பேத்கர் ஏனப்பா இன்னும் பஞ்சமராய் இருக்கிறார்? என்று.
ஆகவேதான் நாங்கள் கூறுகிறோம். இப்பிறவி இழிவுகள் படித்தாலும் நீங்காது; பதவி பெற்றாலும் நீங்காது; சுத்தத்தால் நீங்காது; சுயராஜ்யத்தில் நீங்காது என்று.
இன்றுள்ள மதமும், கடவுளும், சட்டமும் சன்மார்க்கமும், சாஸ்திரமும் சுதந்திரமும் சுயராஜ்யமும் இன்றுள்ள ஜாதி மதப் பிரிவினைகளை, உயர்வு தாழ்வுகளைக் காப்பாற்றி வைக்கத்தான் இருந்து வருகின்றன. இப்பிரிவுகள் ஒழிய வேண்டும் என்று ஒருவன் கூற வேண்டுமானால் அவனுக்கு இன்றுள்ள நிலையில் அதிகத் துணிவு வேண்டும். அதுவும் காந்தியாரைப்போல் சுட்டுக் கொல்லப்படவும் ஒருவன் துணிந்திருந்தால்தான் இக்கொள்கை-களை எடுத்துக் கூறமுடியும். எடுத்துக்கூற ஆரம்பித்தால் அவனுக்கு அரசியல் பங்கு கிடையாது. சட்டசபைக்குச் செல்ல முடியாது. மந்திரியாக முடியாது. மந்திரியானாலும் விரைவில் விரட்டப்பட்டுவிடுவார். இதுதான் உண்மை.
இன்றுள்ள நிலைமையில் எவ்வளவு மடையனான, திருடனான, கொலைபாதகனான பார்ப்பானும், தான் பிராமணன் என்ற எண்ணத்தால் ஒரு மகா புத்திசாலியான மகா ஒழுக்கசீலனான, ஒரு ஆதித்திராவிடத் தோழனை அவன் பஞ்சமன் என்று கருதி ஏன்டா பறப்பயலே என்று சொல்லலாம். அதைச் சட்டம் அனுமதிக்கும், சம்பிரதாயமும் அனுமதிக்கும். அது மானநஷ்டமானதாகாது. ஆனால் அந்த ஆதித்திராவிடத் தோழர் திருப்பி ஏன்டா பாப்பாரப்-பயலே, என்று கூறி-விட்டால் போதும், அவனை ஆட்சிபீடம் உடனே தண்டிக்கும். ஆட்சிபீடம் ஒரு வேளை சற்று நிதானித்தாலும் மற்ற மக்கள் அவனை அடித்துக் கொன்றுவிடுவர். அவனை இந்துமதத் தெய்வங்களும் தண்டிக்குமாம். அவை நாம் அடித்துவைத்ததுதான் என்றாலும் நம்மைத் தண்டிக்கும் என்பதை, நீங்கள் மறந்துவிடக் கூடாது.
(23.3.1948 கற்கத்தியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு விடுதலை 28.3.1948)