சனி, 5 செப்டம்பர், 2015

மதுவிலக்கு அரசியல் ஆதாயத்துக்கல்ல மக்களை அழிவிலிருந்து மீட்கவே!

சட்டசபைத் தேர்தல் சமீபிக்கும் போதெல்லாம் காங்கிரசு பேய்க்கு திரு.ராஜகோபாலாச்சாரியாரால், திரு.காந்தியின் மூலம் உச்சாடனம் செய்யப் பட்டு, அது கண்கொண்டபடி நமது நாட்டில் தலைவிரித்து ஆடுவது வழக்கம். இதை நாம் கொஞ்சகாலம் கூடவே இருந்து பார்த்தவர்களில் ஒருவராதலால் இந்தப் பேயாட்ட உபத்திரவத்தை ஒழிப்பது நமக்கு அதிகக் கஷ்டமான வேலையல்ல.
இந்தப் பேய் உச்சாடனத்திற்காக 27.03.1929 தேதியில் டில்லியில் காங்கிரசு காரியக்கமிட்டி என்பது கூடி சில தீர்மானங்கள் செய்திருப்பதாகப் பத்திரிகையில் தெரிய வருகிறது.
அதாவது, மறுபடியும் முன்போல் (ஒத்துழையாமைக் காலம்) போல கள்ளுக்கடை மறியலும் மரத்தின் பாளைகளை வெட்டுதல் போன்ற காலித்தனத்திற்கு மக்களைத் தூண்டும் படியான தன்மையுடையதான தென்னை மரத்துக்காரர்களை மரம் கள்ளுக்கு விடாமல் செய்யும் பிரசாரமும், பொதுஜன அமைதிக்குப் பங்கம் உண்டாகும்படியானதாகிய குத்தகைக் காரர்களை ஏலத்தில் கோராமல் இருக்கும்படி செய்யும் பிரசாரமும் செய்வதற்குத் தீர்மானங்கள் நிறைவேற்றி அவற்றை நடத்துவதற்கும் திரு.ராஜ கோபாலாச்சாரியார் தம்மையே நியமித்துக் கொண்டும், அதற்காகச் செலவுக்கும் மாதம் 500 ரூபாய் வீதம் கிடைக்கும்படி செய்து கொண்டிருப்பதாய்த் தெரிகின்றது.
இதை ஒன்பது மாதத்திற்கு (அதாவது தேர்தல் வரை) செய்ய வேண்டுமாம். அதோடு தீண்டாமை விலக்குப் பிரசாரமும் அனுமதித்து அதை நடத்த பண்டித மதன் மோகன் மாளவியா நியமனம் பெற்று
அந்த செலவுக்கும் மாதம் 200 ரூபா அனுமதி பெற்றுக் கொண்டிருக்கிறார்.
எனவே இந்தப் பிரசாரங்களை இப்போது அதுவும் சட்டசபையைக் கலைத்து மறுதேர்தல் ஏற்படுத்துவது உறுதி என்று ஏற்பட்டவுடன் இவ்வளவு அவசரமாய் இதை நடத்தக் காரணம் என்ன? என்பதை யோசித்தால் ஒரு முழு மூடனுக்கும் இதன் புரட்டுகளும் பித்தலாட்டங்களும் யோக்கியப் பொறுப்பற்ற சூழ்ச்சிகளும் விளங்காமற் போகாது. சென்ற தேர்தலின்போது இதே மாதிரிதான் திரு.ராஜகோபாலாச்சாரியார் பார்ப்பனர்களுக்கும் அவர்களுடைய அடிமைகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க வேண்டி 1000கணக்கான தென்னை மரங்களைக் கள்ளுக்கு விட்டு வருஷம் பதினாயிரக்கணக்கான ரூபாய்களைக் கள்ளினால் சம்பாதிக்கும் திரு. வெங்கட்ரமண அய்யங்கார் போன்றவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு, இந்த இரண்டரை வருஷ காலம் உப்புக்கண்டம் பறி கொடுத்த பார்ப்பனியைப் போல் மதுவிலக்கில் மவுனம் சாதித்துவிட்டு, கதரின் பேரால் லட்சக்கணக்கான ரூபாய்களையும் மூடமக்களிடமிருந்து கொள்ளையும் அடித்துவிட்டு இப்போது தேர்தல் வருகின்றது என்று தெரிந்தவுடன் மறுபடியும் பழைய பல்லவியை பாடத்தொடங்கி இருப்பதில் ஏதாவது நாணயமிருக்குமா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
நிற்க. இந்த இரண்டு வருஷகாலம் இந்தக் காங்கிரசு என்ன செய்தது? என்பதைப் பற்றியும், அது ஏன் மதுவிலக்குப் பிரசாரம் செய்யவில்லை என்பதைப் பற்றியும், சென்ற தேர்தலில் காங்கிரசு கட்சியின் பேரால் மதுவிலக்குத் திட்டத்தை ஒப்புக் கொண்டவர் கள் சட்டசபையில் 50 அங்கத்தினர்களுக்கு மேல் தெரிந்தெடுக்கப்பட்டிருந்த காலத்திலும், தங்கள் இஷ்டப்படியே மந்திரிகளை நியமித்து அவர்களைத் தங்கள் இஷ்டப்படி ஆதரித்து ஆட்டிக் கொண்டு வந்த காலத்தில் இந்த மதுவிலக்குப் பிரசாரமும், சட்டசபையில் சட்டத்தின் மூலம் சாதிப்பதும் ஆகிய காரியங்கள் எங்குப் போய்விட்டன?
தவிர, 1927-ம் வருஷத்தில் காங்கிரசினால் ஆதரிக்கப்பட்டு வந்த மதுமந்திரிகள் முதலாவதாக ஜனங்கள் மதுவை வெறுக்கின்றார்களா? இல்லையா? என்பதே தமக்குச் சரியாகத் தெரியவில்லை என்றும், மதுபானம் மக்களுக்கு நன்மையா? கெடுதியா? என்பதைத் தாம் இன்னமும் பூரணமாய் அறிந்து கொள்ளவில்லை என்றும், சொல்லிக் கொண்டிருந்தது உலகமறியும். அப்பேர்ப்பட்ட மந்திரிகளை ஆதரித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மறுபடியும் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப் போகிறோம்; மதுவிலக்கு ஒப்புக் கொண்டவர்களை சட்டசபைக்கு அனுப்பப்போகிறோம் என்பதில் ஏதாவது யோக்கியப் பொறுப்பு இருக்கமுடியுமா? என்று கேட்கின்றோம்.
மது இலாக்கா மந்திரி கனம் திரு.முத்தையா அவர்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய ஆரம்பித்த பிறகும் தமிழ் நாட்டில் மதுவிலக்குக்காக ஒரு கமிட்டி நியமித்து அதன் மூலம் மதுவிலக்குப் பிரசார ஏற்பாடு செய்ய உத்தேசித்த பிறகும், வேண்டுமென்றே சூழ்ச்சிக்காக தேர்தலை உத்தேசித்து அதுவும் பார்ப்பனர்களுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்ய இந்தக் குயுத்தி செய்து காங்கிரசு பெயரைச் சொல்லிக் கொண்டு பொதுப்பணத்தில் மாதம் 500 ரூபாய் திரு. ராஜகோபாலாச்சாரியாருக்கும் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏய்க்க முடிவு செய்துவிட்டார்கள்.
காங்கிரசுகாரர்களின் மதுவிலக்குப் பிரசாரத்தின் யோக்கியதையையும், நல்ல எண்ணத்தையும் பொது ஜனங்கள் உணரவேண்டுமானால் ஒரு உதாரணம் எடுத்துக்காட்டுகின்றோம். சட்டசபையில் மதுவிலக்குப் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்ய மந்திரிகள் திட்டம் கொண்டு வந்த காலத்தில் காங்கிரசு மெம்பரானவரும் கோயமுத்தூர் ஜில்லா பிரதிநிதியானவரும் 9 வருஷம் தொடர்ந்து சட்டசபையில் இருப்பவரும் கோயமுத்தூர் ஜில்லா காங்கிரசு கமிட்டித் தலைவருமான திரு.சி.வி.வெங்கட்ரமணய் யங்கார் பிரசார திட்டத்தை எதிர்த்துப் பேசுகையில் என்ன காரணம் சொன்னாரென்றால்.
மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் ஜனங்களுக்குள் மதுக்குடி அதிகமாய்விடும். ஏனெனில் இவர்கள் ஏன் நம்மை கள்ளுக் குடிக்கக் கூடாது என்று சொல்லுகின்றார்கள் என்று நினைத்து ஒவ்வொருவனும் அதைக் குடித்துத்தான் பார்ப்போமே என்பதாகக் கருதி குடிக்க ஆரம்பித்து விடுவான் ஆதலால் பிரசாரம் செய்யக் கூடாது என்பதாகச் சொன்னாராம்.
இதிலிருந்து காங்கிரசாரின் மதுவிலக்கு யோக்கியதையை உணர்ந்து கொள்ளலாம். காங்கிரசுகாரர்கள் மந்திரிகளின் மதுவிலக்குப் பிரசாரத் திட்டத்தை ஒப்புக் கொள்ளாததற்காக இப்படிச் சொன்னார்கள் என்று யாராவது சமாதானம் சொல்லக் கூடுமானால் அதை நாம் மற்றொரு புரட்டும் நாணயக் குறைவுமான காரியம் என்று சொல்லுவோம். ஏனெனில் காங்கிரசுகாரருக்கு உண்மையிலேயே திட்டத்தில் ஆட்சேபணை இருந்தால் அதைத் தாராளமாய் வெளியிலெடுத்துச் சொல்லி அதற்காக ஏதாவது திருத்தம் கொண்டு வந்து பேசுவதோடு திட்டத்தில் உள்ள குறைகளைக் கண்டிப்பதற்குத் தாராளமாய் முயற்சித்திருக்கலாம். அதைவிட்டு விட்டு குடிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்தால் குடி அதிகரிக்கும் என்று சொல்லுவதின் கருத்து என்ன? என்றுதான் கேட்கின்றோம். இதன் உண்மை தெரிய வேண்டியவர்கள் மேற்படி சட்டசபை நடவடிக்கைகளை வரவழைத்துப் பார்த்தால் விளங்கும்.
இனி மதுவிலக்கு விஷயமாய் காங்கிரசுகாரர்கள் செய்யும் பிரசாரத்தில் ஏதாவது நாணயமிருக்க முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்க விரும்புகிறோம். காங்கிரசு ஏற்கனவே செய்து பார்த்தாய்விட்டது. அதோடு மாத்திரமல்லாமல் அந்த முறை தப்பென்றும் உணர்ந்து நடுவேளையில் திடீரென்று நிறுத்தும்படியும் செய்து அதில் ஈடுபட்ட உண்மைத் தொண்டர்களையும் காட்டிக் கொடுத்துவிட்டது. இப்படியிருக்க இப்போதும் அதே முறையில் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப் போகின்றோம் என்று அதுவும் தேர்தல் சமயத்தில் அதுவும் கள்ளினால் வருஷம் பதினாயிரக்கணக்காக ரூபாய் வரும்படி சம்பாதிக்கும் அங்கத்தினர்களும் மதுவில் முழுகி எழுந்திருக்கும் நபர்களும் சேர்ந்து கொண்டு முன்போலவே மறுபடியும் சுயராஜ்ஜியத்திற்கு ஒரு வருஷம் 6 மாதம் 3 மாதம், ஒரு மாதம் ஆகிய வாய்தாக்களையும் அதோ தெரிகின்றது! இதோ தெரிகின்றது! என்கின்ற செப்பிடுவித்தைகளையும் செய்துகொண்டு புறப்பட்டிருப்பதன் இரகசியத்தை உணர்ந்து காங்கிரசுப் பேயையும், மதுவிலக்குப் பிரசாரப் புரட்டையும் தமிழ்நாட்டுக்குள் அண்டவிடாமல் தலையிலடித்துத் திருப்பி அனுப்பி விடும்படியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உண்மையிலேயே மதுவிலக்குப் பிரசாரத்திற்கு தமிழ்நாடு மதுவிலக்குப் பிரசாரம் செய்வதற்கென்று சமீபத்தில் ஈரோட்டில் ஒரு பெரிய கூட்டம் கூட்டுவித்துத் தமிழ்நாடு மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டி என்பதாக ஒரு பொதுக் கமிட்டி தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கமிட்டியில் உள்ள அந்தந்த ஜில்லாக் கனவான்கள் முயற்சியால் அந்தந்த ஜில்லாவில் ஒரு ஜில்லாக் கமிட்டி ஏற்பாடு செய்யப்படும். அதன் மூலம் ஜில்லா முழுவதும் பிரசாரம் செய்யப்படும். இந்தப் பிரசாரத்தில் பலாத்காரம் செய்வதோ, பலாத்கார மறியல் செய்வதோ, பாளைகளை வெட்டுவதோ, ஏலத்தின் போது காலித்தனம் செய்வதோ முதலாகிய காரியங்கள் ஒரு சிறிதும் இல்லாமல், மதுவிலக்கின் தோஷங்களை எடுத்துச் சொல்லுவதன் மூலமும் பெண்களால் புருஷர்களின் குணங்களைத் திருத்தப்பாடு செய்வதன் மூலமும்  மற்றும் ஓட்டர்களுக்கு மதுவிலக்கு எப்படி சட்டத்தின் மூலம் செய்யப்படும் எப்படிப்பட்டவர்கள் மதுவிலக்குச் சட்டம் செய்யச் சவுகரியம் உடையவர்கள் என்பது போன்றவைகளை எடுத்துச் சொல்லுவதின் மூலமும் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப்படும், எனவே பொதுமக்கள் காங்கிரசு தேர்தலுக்காகச் செய்யும் சூழ்ச்சியில் விழுந்து விடாமலும் தேர்தலில் மோசம் போகாமலும் இருக்க வேண்டுமாய் எச்சரிக்கை செய்கின்றோம்.
குடிஅரசு, செய்தி விளக்கக்குறிப்பு, 07.04.1929
குறிப்பு: அன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு கூறியதை, இன்றைக்கு மதுவிலக்கு அரசியல் நடத்துவோருக்குப் பொருத்திப் பாருங்கள் சரியாக இருக்கும்.
-உண்மை,1-15.8.15

கொழும்புவில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா

அய்யாவின் அடிச்சுவட்டில் ... 136

பகலவன் பாருக்கே சொந்தம்
கொழும்புவில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள என்னை அழைக்கப்பெற்று அதில் நான் கலந்துகொண்டேன், விழாவானது.
கொழும்பு, பம்பலப்பட்டி சரஸ்வதி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த டாக்டர் கோவூர் அரங்கில் 24.9.1978 மாலையில் தந்தை பெரியாருக்கு, நூற்றாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனது முதல் பயணமும் (இன்றுவரை) இலங்கைக்குச் சென்ற இறுதிப் பயணமும் இதுதான்! முன்னதாகவே விமானம் மூலமாக கொழும்பு விமானநிலையம் வந்தடைந்த என்னை பெரியார் நூற்றாண்டு விழா குழுவினராகிய கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றத்தின் பொறுப்பாளர்களான தோழர்கள் நவசோதி எம்.ஏ., சந்திரசேகரன் பி.எஸ்.சி., எஸ்.பி. பாண்டியன், காசிநாதன், கவிஞர் சிவராசன், கம்பளைதாசன் மற்றும் தோழர்கள் வேலணை வீரசிங்கம், அழகுராசா, தியாகராசா உள்ளிட்ட தோழர்களும் மன்ற அமைப்பாளர் ப. சந்திரசேகரன் பி.எஸ்.சி., அவர்களும் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
மாலையில், இலங்கையின் பிரபல தினசரி இதழான வீரகேசரி நிருபர் பேட்டி கண்டார். திராவிடர் கழக பகுத்தறிவு மன்றத்தின் பொறுப்பாளரும் சங்கம் ஏட்டின் ஆசிரியருமான தோழர் மா.செ. அருள் என்னுடன் வந்தார். இலங்கை திராவிடர் கழகத்தலைவர் ஆ.பெ. முனுசாமி அவர்களும், ஆரம்ப கால இயக்க தோழர் இளஞ்செழியனும், அ.தி.மு.க இலங்கை அமைப்பாளர் தோழர் வித்தகன் ஆகியோரும் என்னைச் சந்தித்தனர்.
முதல் நாள் இரவு, திராவிடர் கழகத்தை இலங்கையில் வளர்த்து நிலைநிறுத்திய பெரியார் பெருந்தொண்டர் கு.யா.திராவிடக்கழல் அவர்கள் பல மாதங்களுக்கு முன் மறைந்தார். அவர் இல்லம் தேடிச்சென்று, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி திரும்பினோம். (வசதியற்ற எளிய சூழ்நிலையில் வாழ்ந்த பெருமகன்) பின்பு, கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றத்தின் சார்பில் மிகச் சிறப்பாக தயாரித்து அச்சிட்ட பெரியார் நூற்றாண்டு விழா மலரை நான் வெளியிட்டு முதல் பிரதியை சுயமரியாதை வீராங்கனை ஞான செபஸ்தியான் (தற்போது இந்த 94 வயது இளைஞர், நமது பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர்), சீதக்காதி ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். அடுத்தது, இந்தியப் பேரரசு வெளியிட்ட நூற்றாண்டு விழா அஞ்சல் தலை, மற்றும் குறிப்புகளை நான் வழங்க, மன்றத்தின் அமைப்பாளர் திரு.சந்திரசேகரன், வீரசிங்கம், அழகுராசா உள்ளிட்டத் தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.
பிறகு, விழாவில் உரையாற்றும்போது, தந்தை பெரியார் அவர்கள் தொண்டினை நினைவு கூர்ந்து நன்றிப் பெருக்குடன் அய்யாவுக்கு நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்புடன் நடத்தும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி, பாராட்டுத் தெரிவித்து, 1932ஆம் ஆண்டில் அக்டோபர் 17ஆம் தேதி பெரியார் அவர்கள் இலங்கையில் ஆற்றிய பேருரை குறித்தும், அய்யா அவர்கள் எப்படி ஒரு பகுத்தறிவுப் பகலவன் என்பதை விளக்கியும், பகலவன் பாருக்கே சொந்தம் ஒரு ஊருக்கல்ல, நாட்டுக்கு மட்டுமல்ல என்பதையும் பல ஆதாரங்களுடன் விளக்கி உரையாற்றினேன். அய்யா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறவிருப்பது பற்றி அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறு தொழில் அமைச்சரும் பிரபல தொழிற்சங்கத் தலைவருமான திரு. எஸ். கருணாகரத் தொண்டைமான் அவர்களை நான் சந்தித்து உரையாற்றினேன். அவர்களுக்கு அய்யா அஞ்சல் தலை, அய்யா வாழ்க்கை வரலாறு, இலங்கை பேருரை, வைக்கம் போராட்டம் பற்றிய நூல்களை வழங்கினேன்.
யாழ்ப்பாணம் பகுதிகளில் ஜாதிக்கொடுமைகள் உள்ளது. அங்கு உங்கள் பிரச்சாரம் மிகவும் அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். பிறகு நான் பத்திரிகையாளர்களுடன் கொழும்புவில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஒன்றான ஹாலிடே இன் (Holiday Inn) என்ற ஓட்டலின் முதல் மாடியில் இலங்கை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பிரபல வணிக வியாபாரியான வேலணை வீரசிங்கம் செய்த இந்த ஏற்பாட்டில், இலங்கையின் பிரபல நாளேடுகளான வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், ஈழநாடு, சுதந்திரன், சிந்தாமணி, கலாவல்லி ஆகிய நிருபர்கள், செய்தி ஆசிரியர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் அய்யா விழாவன்று, சுயமரியாதை காப்போம், ஜாதியைத் தகர்ப்போம் என மக்கள் கடல் உறுதி பூண்டனர். இந்நிகழ்ச்சியில் எனக்கு ஈடு இணையற்ற வரவேற்பையும் அனைத்து தரப்பும் உள்ள தமிழ்ப் பெருங்குடியினர் நல்கினர். பெருநகரில் நடந்த அந்த நூற்றாண்டு விழாவில் மக்கள் கடல் ஆர்வப் பெருக்குடன் பங்கேற்றது நினைவில் நீங்கா வடுவாக உள்ளது என்பதனை நினைவுப்படுத்துகிறேன்.
-உண்மை,16-.8.15

சமஸ்கிருத “சனியனை” ஒழிப்போம்!


- தந்தை பெரியார்
நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்குப் பயன்படாத பழைய காரியங்களில் ஆசையுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப்பற்றி அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப்படுவது கிடையாது. ஆகவே, இப்பொழுது ஒரு தேசியத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.

சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனைகளில் சென்னைப் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும் என்பதும் ஒரு யோசனையாகும்.
உண்மையிலேயே, தேசமக்கள் கல்வியினால் அறிவு பெறவேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெறவேண்டும் என்று விரும்புகின்றவர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ, வருத்தமோ அடையமாட்டார்கள்.
ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும், இந்த இந்து மதத்திலிருந்து பிறந்த ஜாதிக்கொடுமை, சடங்குக்கொள்ளை, கடவுள் முட்டாள்தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாதவர்கள் கூட்டத்திலும், தலைவிரித்தாடி அவர்கள் உழைப்பையும், அறிவையும், சுதந்திரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்கும் காரணம் சமஸ்கிருதமேயாகும்.
இன்று வருணா சிரமக்காரர்கள் சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும், சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும், வருணாசிரம தருமமும் காப்பற்றப்படுவதே முக்கியமானதென்று சொல்லுவதற்கும் சமஸ்கிருதப் பாஷைப் படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும். தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது; குளத்தில் குளிக்கக் கூடாது; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக்கூடாது என்று சொல்லுவதற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களே யாகும். சாரதா சட்டம் போன்ற சீர்திருத்தச் சட்டங்களைச் செய்யக்கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டுவதைத் தடுக்கும் சட்டம், பிரஜா உற்பத்தியைக் கட்டுபடுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம், பெண்கள் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோதமானவைகள் என்று கூறித் தடுப்பதற்கும் திரு. சிவராஜ், பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி. அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் கூடிய சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் அங்கத் தினராகச் சேர்த்துக்கொள்ள மறுத்ததற்கும் காரண மாயிருப்பவை சமஸ்கிருத நூல்களேயாகும். சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து குரைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வர்ணாசிரமக் கூட்டத்தார்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத, வேத, புராண, இதிகாச, ஸ்மிருதிகளையே பிராமாணங் களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லுகின்றன வென்று கவனிக்கின்றார்களே ஒழிய தங்கள் அறிவு என்ன சொல்லுகின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங்கூடக் கவனிக் கின்றார்களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல்லாதபடி அவர்கள் மூளையை அந்தச் சமஸ்கிருதப் பழங்குப்பைகளாகிய சாஸ் திரங்கள் என்பன உறிஞ்சி விட்டன. ஆகையால் இனி வருங்கால இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அவர்களிடம் மூட நம்பிக்கைகளும், சுயநலமும் உண்டாகாமல் பகுத்தறிவும், சமதர்ம நோக்கமும் உண்டாக வேண்டுமானால் சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறை யாகும்.
ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப் புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச் செய்த தமிழ்ப்புராணக் கூளங்களாலும், குடிகொண்டிருக்கும் மூட நம்பிக்கைகள் போதாதென தேசிய ஆடைகளைப் புனைந்து இந்தி என்னும் பாஷையையும் கொண்டு வந்து நுழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இந்தியைப் பரப்புவதற்காகப் பார்ப்பனர் பிரயாசைப்படுவதற்குக் காரணம் அதன் மூலம் மீண்டும் வருணாசிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் பழைய கௌரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே என்பது சுயமரியாதைக்காரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த இந்தி பாஷை முதலானவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத்தைக் கைவிட சம்மதிப்பார்களா? ஒருக்காலும் சம்மதிக்கமாட்டார்கள்.
ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி சென்னை அரசாங்கச் சிக்கனக் கமிட்டியர் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக்கும்படி சிபாரிசு செய்ததைக் கண்டிக்கிறார்கள். பொருளாதார நிலையைப் பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமாய் இருப்பவைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது. காப்பிகிளப்பு பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள்கையைக் கைவிடாமலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் வெறுங் கூச்சல்களுக்குப் பயந்து கொண்டு அரசாங்கத்தார் சிக்கனக்கமிட்டியில் சிபாரிசைக் கைவிட்டு விடக்கூடாதென எச்சரிக்கை செய்யவேண்டும். சில பார்ப்பனரல்லாதவர் வாலிபர் சங்கங்களிலும், சுயமரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனையைப் பாராட்டியும் இன்னும் சமஸ்கிருத கல்விக்காகக் கொடுக் கும் உபகாரத் தொகையை நிறுத்தும்படியும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறே நாடெங்கும் பலத் தீர்மானங்கள் செய்து அரசாங்கத் தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் சமஸ்கிருதச் சனியன் ஒழியும்.
- குடிஅரசு - கட்டுரை - 17.01.1932
-உண்மை,16-31.8.15

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கலைவாணர் பற்றி பெரியார்



புராணம், மோட்சம், நரகம், சாஸ்திரம், கடவுள்கள் ஆகியவை பற்றிய அபிப்பிராயங்கள் மக்கள் உயிரோடு கலந்தும், வாழ்வோடு கலந்தும், மதத்தோடு கலந்தும் பலவிதமான ஸ்தாபனங்களோடு செல்வாக்காய் பத்திரமாய் அனேக காவலாளிகளோடு இருப்பதை வெறுக்கும்படியாக சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கும் படியில் - அதுவும் இதைப் பார்க் கவும் கேட்கவும் பணங்கொடுத்து விட்டு வந்து பகலும் இரவும் காத்துக்கிடக்கும்படியாகச் செய்து வருகிறார் என்.எஸ். கிருஷ்ணன்.
சாகும்வரை செய்துகொண் டே இருக்கப் போகிறார் என்றால் இதைவிட ஒரு புரட்சி வீரனை நாம் எங்கு காணமுடியும்? வேறு எத்தனை பேர்தான் இருக் கிறார்கள்?  நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்ப்போம்.
(பேராசிரியர் அன்புக் கொடி நல்லதம்பி எழுதிய சிரிப்பில் மலர்ந்த சிந்தனை மலர்கள் என்ற நூலிலிருந்து....)

சிரிக்க... சிந்திக்க!
ஆஸ்திகன்: (மகனை நோக்கி) ஏய் தம்பி, நரசிம்மா! கொல்லைக் கதவைத் தாளிட்டியா? குறுக்குத் தாழ்ப்பாளைப் பார்த்தியா? தெருக்கதவைத் தாளிட்டியா? ஜன்னலை ஒழுங்காக மூடுனியா? சாவிக் கொத்தை தலைகாணிக்கு அடியில் ஜாக்ர தையா வைச்சிட்டியா? ஏன் னா ஊரெல்லாம் ஒரே திருட்டுப் பயம்!
மகன்: என்னப்பா இப்படி பயப்படுறேள்? நம்ப ஜாக்ரதையிலே என்ன இருக்கு? எல்லாம் எமை ஆளும் ஈசன் செயல்! என்னதான் பாதுகாத்தாலும், எப்படியும் போறது போவத்தான் செய்யும்! நீங்கள் அடிக்கடி சொல்ற மாதிரி...
ஆஸ்திகன்: ஊம் வாயை மூடு! என் பிரசங்கத்தை என்னிடமே காட்டுறியா? அதிகப் பிரசங்கி! அதெல்லாம் முட்டாப் பசங்களுக்குச் சொல்றப் பேச்சு! கதவைத் திறந்து போட்டுண்டு, எல்லாம் கடவுள் செயலுன்னு தூங்குற ஒரு பக்தனைக் காட்டு என்னிடம். பைத்தியக்காரா! கடவுளுக்கே பூட்டும் சாவியும் வேண்டி இருக்குடா - அதுவும் பூசணிக்காய்ப் பெரிசுலே!
------------------------------------------------------
காவலர்: திருடினதுதான் திருடினாய், சாமி நகையைத் திருடலாமா?
திருடன்: பற்றற்றவனாயிற்றே பகவான்! அவனுக்கு எதற்கு இந்த நகை என்று திருடிவிட்டேன்.
காவலர்: பகவான் நகையை உன் மனைவி கழுத்தில் சூட்டலாமோ?
திருடன்: பற்றுள்ளவளாயிற்றே அவள். பற்றற்ற திலிருந்து கிளம்பி பற்றை நோக்கிச்  செல்வதுதானே ஆத்மார்த்தம்!
------------------------------------------------------
புலி: கடவுளே! உன் கருணையே கருணை! என்னையும் படைத்து, இந்த ஆட்டையும் படைத்தாயே! இல்லாட்டிப் போனா என் வயிறு என்னாவறது? ஈசனே, உன்னைப் போற்றுகிறேன்; உன் புத்தியை மெச்சு கிறேன்!
ஆடு: நாசமாய்ப் போன கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? கருத்தில்லையா? என்னைத்தான் படைத்தாய்; இந்தப் பாழாய்ப் போன புலியையும் ஏன் படைத்தாய்? உன்னை போயும் போயும் கருணாமூர்த்தி என்கிறார்களே - இந்தக் கபோதிகள்! வெட்கக்கேடு! அசல் வெட்கக்கேடு!!
-விடுதலை,28.8.15

மதம் ஏன் ஒழிய வேண்டும்?

- தந்தை பெரியார்


மதம் என்பதைப் பற்றி இதற்கு முன் குடிஅரசு, புரட்சி முதலிய பத்திரிகை களில் அநேக வியாசங்கள் பல தலைப் புகளின் கீழ் எழுதப்பட்டிருப்பது யாவருக்கும் தெரியும்.
மதமானது இன்று உலகில் மனித சமுகத்தின் வாழ்வைத் துக்க மயமாக்கி, ஜீவராசிகளில் மனிதனுக்கென்று உள்ள பகுத்தறிவை அடிமைப்படுத்தி ஒற்று மையைக் குலைத்து, மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது என்பதற்கு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றோம்.
தேசிய சிங்கங்களான அலி சகோ தரர்கள் ஒரு காலத்தில் நாங்கள் முதலில் மகம்மதியர்கள், பிறகுதான் இந்தியர்கள் அதாவது முதலாவது மதம், பிறகு தான் தேசம் என்றும், உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா காந்தி நானே இந்து மதத்தில் உருவம்!  நான் மூச்சுவிடுவதும், வாங்குவதும் இந்து மதத்திற்காகவே!!  நான் உண் பதும், உயிர் வாழ்வதும் இந்து மதத் திற்காகவே!!! மதத்தைக் காக்கவே நான் சுயராஜ்ஜியம் கேட்கின்றேன்!!!! அதா வது இந்து மதம் தான் எனக்கு முதலும், கடைசியும், என்றும், பழைய காங்கிரஸ் வாதி, மாசற்ற தேசாபிமானி, ஒப்பற்ற தியாகி என்று சொல்லப்பட்ட, பண்டித மதன் மோகன மாளவியா எனது மதத் தையும், எனது ஜாதியையும் காப்பதே எனது முதல் வேலை என்றும், அதாவது வருணாசிரமத்தைக் காக்கத் தான் நான் தேசியவாதி என்றும், சொல் லும்படி செய்துவிட்டது என்றால் மதத் தின் ஆதிக்கத்திற்கு வேறு என்ன உதா ரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.
பெருத்த தேசாபிமானிகள், தேசத் துக்காகச் சகலத்தையும் தியாகம் செய் தவர்கள் என்று சொல்லும்படியான இவர்களே அவரவர்களின் மதத் தத்துவத்தை உள் எண்ணமாக வைத்து, அவற்றின் கொள்கைகளைக் காப்பதற் காகவே அவர்களது தேசாபிமானமும், உயிர் வாழ்வும் இருந்து வருகின்றது என்றால் மற்ற சாதாரணமான அதாவது மதத்தைத் தவிர மற்றொன்றும் அறி யாத பாமர மக்களின் யோக்கியதை யைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.
வட்ட மேஜை மகாநாடு உடைந்து போனதும் அரசியல் சீர்திருத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றுபடாமல் போன தும் இந்து முலீம்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் அரசியலில் தனித் தொகுதி வேண்டுவதற்கும், காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஒன்றுக்கொன்று வேறுபட்டி ருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் தனித்தொகுதி கேட்பதற்கும் கூட்டுத் தொகுதியில் தனிப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படவேண்டும் என்று கேட் பதற்கும், மக்களை மக்கள் தீண்டப் படாதவராய் கீழ் மேல் ஜாதியாராய் கருதப்பட்டு வருவதற்கும் மதமே காரணமாய் இருந்து வருகின்றது என்பதையும் எவராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
மற்றும் மனித சமுக வாழ்வுக்கு ஏற்ற சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள் என்பவை களில் பெரும்பான்மையான மக்களால் அவசியம் என்றும், அறி வுக்கு ஏற்றது என்றும் கருதப்படும் அனேக விஷயங்களைப் பற்றி சட்டங்கள் செய்யவோ, சட்டங்கள் செய்தாலும் அமலுக்குக் கொண்டு வரவோ தடையாய் இருந்து வருவதற்கு மதங்களே காரணமாகச் சொல்லப்படு கின்றதா, இல்லையா என்று கேட்கின் றோம். ஆகவே மனித வாழ்க்கைக்கு மதங்கள் இதைவிட வேறு என்ன கொடுமைகள் செய்ய வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
இப்படிப்பட்ட இந்த மதம் ஒன்று இரண்டு என்று இல்லாமல் நூற்றுக் கணக்காய் இருந்துகொண்டு பலவித கடவுள்களை சிருஷ்டித்து பலவித மேல் உலகங்களையும் மோட்ச நரகங் களையும் கற்பித்து அவரவர் கடவு ளுக்குத் தனிப்பட்ட குணங்களும், அவரவர் மேல் உலகங்களுக்கு தனிப் பட்ட பூகோளங்களும், அவரவர்கள் மோட்ச நகரங்களுக்குத் தனிப்பட்ட வருணனைகளும் கற்பித்து மக்களை மயக்கி வருவதோடு வாழ்க்கை ஒழுக் கம், நடத்தை என்பவைகளும் அவரவர் மதத்துக்கு ஒவ்வொருவிதமாய் கற்பிக் கப்பட்டு நடந்து வருவதும் அறிஞர்கள் அறியாததா?
இப்படிப்பட்ட மதத்தை மக்களுக் குள் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு சில நபர்கள் பாதிரி என்றும், முல்லா என்றும், தம்பிரான் என்றும், சங்கராச் சாரி என்றும், ஜீயர் என்றும், சாமியார் என்றும், பெயர்கள் வைத்துக் கொண்டு, உலகச் செல்வத்தில் தனிப்பெரும் பாகத்தை வீணாக்கி மக்களுக்குப் போதை ஊட்டிவருவதானது எவ்வளவு அவிவேகமான காரியம் என்பது சுய அறிவோடு பரிசுத்த தன்மையில் இருந்து யோசிப்பவர்களுக்கு விளங்கா மல் போகாது. இவைகளைப் பற்றி இன்னமும் விவரிக்குமுன் மதம் என் றால் என்ன என்று நாம் கருதிக் கொண்டு அதைப்பற்றி இவ்வளவு எழுதுகின்றோம் என்பதை வாசகர் களுக்கு விளக்க ஆசைப்படுகின்றோம்.
1. மதம் என்பது இவ்வுலக மானிட வாழ்வுக்கு ஏற்ற சட்ட திட்டங்கள் என்று சொல்லப்படுமானாலும்,
2. அல்லது மதம் என்பது இவ்வுல கில் மக்கள் கூடி வாழ்வதற்கு ஏற்ற ஒழுங்கு முறைகளைக் கொண்டது என்று சொல்லப்படுமானாலும்,
3. அல்லது (ஒருவர் கூறியபடி) மதம் என்பது மனிதனுக்கும் மற்ற ஜீவராசி களுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படு மானாலும், அவைகளைப் பற்றியெல் லாம் நாம் அதிகக் கவலைக் கொண்டு மதங்களை எதிர்க்க ஆசைப்படுவ தில்லை.
அப்படிக்கெல்லாம் அல்லாமல்.
1. மதமானது மனிதனுடைய ஜட சம்பந்தத்தை விட்டு விட்டு ஜடம் நீங்கின
ஆத்மாவைப் பொறுத்ததென்றும்.
2. மதமானது இவ்வுலக வாழ்வை இன்ப துன்பத்தைத் துச்சமாக மதித்து விட்டு மேலுலக வாழ்வை முக்கிய மாகப் பொறுத்ததென்றும்.
3. மதமானது கடவுளுக்கும் மனித னுக்குமுள்ள சம்பந்தத்தை விளக்கு வதைப் பொறுத்ததென்றும்
4. மதமானது பஞ்சேந்திரியங் களுக்கு விளக்கக்கூடிய வது என்ற தத் துவத்தை விட்டு பஞ்சேந்திரியங்களா லும் உணர முடியாத ஆத்மார்த்தம் ஆவிதத்துவத்தை, அசரீரியை அடிப் படையாகக் கொண்டது என்றும்,
5. மதமானது உலக போக போக் கியம் இன்ப துன்பம் ஆகியவைகளை அலட்சியம் செய்து கடவுளின் பாதார விந்தத்தை அடையவும், மோட்ச சாம்ராஜ்யத்தைப் பெறவும், ஏற்ற மார்க்கம் என்றும் சொல்லப்படும் மதங்களையும், மதத் தத்துவங்களையும் பற்றி நாம் பேசுகின்றோம், என்றாலும் முதலில் கூறப்பட்ட அதாவது,
மதம் மனித வாழ்க்கைக்கு ஏற்ற சட்டதிட்டங்களுக்கோ மக்களின் கூட் டுறவு வாழ்க்கைக்கு ஏற்ற ஒழுங்கு முறைக்கோ ஏற்பட்டது என்கின்ற விஷயங்களிலும் கூட நமது ஆட்சே பணையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது இன்று நாம் மதங்கள் என்று சொல்லிக் கொள்ளப் படுபவைகளில் மேற்கண்ட குணங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், இந்தக் காரியங் களுக்காக மக்கள் செலவில் நடை பெறும் அரசாங்க நிருவாகமும், சிவில் கிரிமினல் சட்டதிட்டங்களும் அவை களை நிறைவேற்ற நியாயதலம், தண் டனை, சன்மானம் ஆகிய முறைகளும் இருந்து வரும்போது இவை அல்லாத ஒரு சாதனம் அதாவது மதம் என்கின்ற விஷயம் எதற்காக இருக்க வேண்டும்?
அரசாங்கம், சட்டதிட்டம், நீதி நிர்வாகம், தண்டனை முதலியன இல்லாமல் மனித சமுகம் எப்படிப்பட்ட மதத்தினாலாவது கூடி ஒழுங்கு முறையுடன் வாழ முடியுமா? என்பதை யோசித்தால் மதம் மேல் கண்ட காரியங்களுக்கு உண்மையாய் பயன்படுகிறதா என்பது விளங்கும். இன்று எந்த தேசத்திலும், எந்த மதத்திலும், எந்த சமூகத்திலும் உள்ள மக்களின் சொத்தும், சரீரம் காப் பாற்றப்படுவது மதத்தினாலா, அர சாங்க சட்ட திட்டங்களினாலா என் பதை யோசித்துப் பார்த்தாலே, மதத் தின் காப்பும் நடப்பும் எப்படிப்பட்டது என்பது சுலபத்தில் விளங்கிவிடும். மதம் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாய் காருண்யத்துடன் இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றது என்று மதக்காரர்கள் சொல்லக்கூடும். ஆனால், மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் பற்றி கவலைப்படாமல் மற்ற ஜீவராசிகளைக் கொல்லவும், தின்னவும், இம்சிக்கவும் தனக்கு இடையூறு என்று கருதினால் அழிக்கவும் செய்கிறான். ஆனால் மனிதனை மாத்திரம் அந்தப்படி செய்வதில்லை. இதற்குக் காரணம் மதமா?  அல்லது அரசாங்க சட்ட திட்டமா? என்று கேட்கின்றோம். மனிதனை அந்தப்படி எங்கோ ஒன்று இரண்டு சமயம் செய்வதாக வைத்துக் கொண்டாலும் அதற்காகத் தண் டனையை அடைகின்றான்.
ஆதலால் மதம் எங்கே பொது வான ஒழுங்கு முறையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றுகின்றது என்று கேட்கின்றோம்.
மதம் மனிதனுக்கும், மற்ற ஜீவராசி களுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படுவதும் மிகுதியும் பொருத்தமற்றது என்றே கருதுகின்றோம்.
மனிதனுக்கும் மற்ற ஜீவவர்க்கத் துக்கும் உள்ள வித்தியாசம் எந்தத் துறை யினாலும், அறிய வேண்டுமானால், பிராணிவர்க்கத் தத்துவம் கொண்ட நூல்களைப் பார்த்தால் தாராளமாக மதசம்பந்தம் இல்லாமலே அவை களைத் தெரிந்து கொள்ளலாம். அப்படி யில்லாமல் மதத்தின் மூலம் அறிந்த ஜீவத் தத்துவங்கள் இன்று சிரிப்புக் கிடமாகத்தான் இருந்து வருகின்றன.
மதம் மனிதனுக்கு மனிதன் வித்தி யாசம் கற்பிக் கின்றது. மிருகங்களை, பட்சிகளை, பூச்சிகளை, புல் பூண்டு களை மனிதனைவிட உயர்வாய் மதிக் கின்றது. ஒரு மிருகத்தை உயர்வாய், ஒரு மிருகத்தை தாழ்வாய் கற்பிக் கின்றது. இந்த விஷயங்களுக்குப் பிராணி சாத்திரமே முக்கியமானதும், சரியானதுமே தவிர, மதத்தின் மூலம் அறியக் கூடியதாய் இருக்கும் தன்மை மிகவும் மோசமானதும், மூர்க்கத்தன மானதும், முட்டாள்தனமானது மென்றே சொல்லுவோம்.
மேற்கண்ட 1, 2, 3 விஷயங்களைப் பற்றிய வரையி லாவது மதத்தை ஒப்புக் கொள்ள செய்யலாமென்று பார்த் தாலும் கூட, அதுவும் அறிவுக்குப் பொருத்த மற்றதும், மூர்க்கத்தனம் கொண்டதுமான கருத்துக் களால் பாதகமடைகின்றது. அதாவது எந்த மதக் காரனும் தன்தன் மதத்தைப் பற்றிய ஆதாரங்களும், கொள்கை களுமே எந்த தேசத்துக்கும் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என் றும், அவைகளில் ஒரு முற்றுப்புள்ளிக் குறிப்புக் கோடு கூட மாறக் கூடாது என்றும், தன்தன் மதத்துக்குத் தலை வன் என்பவன் எவனோ அவனே உலக மதத்தலைவனாக இருக்க வேண்டும் என்றும் செய்யப்படும் பிடிவாதங்களும் முரட்டுத் தனங்களும் எந்த மதத்தையும் மனித சமுக வாழ்வுக்கு வழிகாட்டி என்று ஒப்புக் கொள்ள முடியாமல் செய்கின்றது.
ஆகவே மனித சமூகக் கூட்டு வாழ் வுக்கும், ஒழுக்க முறைக்கும் மதங் களைவிட அரசாங்கத் சட்டதிட்டங் களையே ஆதாரமாகக் கொள்வது தான் அறிவுடைமை என்று கூறுவோம். அதுதான் இன்று உலகமெங்கும் அனு பவத்தில் இருக்கின்றது என்றும் சொல் லுவோம். ஏனெனில் அவைகளில் காலத்துக்கும், தேசத்துக்கும், ஒத்தபடி, அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஏற்றபடி, மாற்றிக் கொள்ளவும், திருத்திக் கொள் ளவும் உரிமை இருக்கின்றது. மதங்களில் அவை காணவே முடியாது அப்படி ஏதாவது முயற்சித்தாலும் கலகம், கொள்ளை, கொலை முதலியவைகளை உண்டாக்கி விடுகின்றது.
எனவே இந்த விஷயங்களே அதாவது இந்த உலக பிரத்தியட்ச மனித வாழ்வு சம்பந்தப்பட்ட இந்த விஷயங்களை மதத்தின் பயனாக இப்படி இருந்தால் இனி மேலுலக மனிதனுடைய கண்ணுக்கும் மனதுக் கும் பஞ்சேந்திரிங்களுக்கும் எட்டாத விஷயங்களைப் பற்றிய மத போத னைகள் என்ன பயனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்? எப்படிப்பட்ட தாக இருக்கும்?  என்பதைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட் கின்றோம்.
மற்றபடி மதம் சட சம்பந்தத்தை விட்டு விட்டு ஆன்மாவைப் பொறுத் தது என்று சொல்லப்படுவதைப் பற்றியதென்றால் இந்தக் காரணத்துக் காகவே மதங்களை எல்லாம் அடி யோடு ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் இருக் கின்றோம்.
ஆத்மா என்பதை இதுவரை ஒரு மனிதனும் அர்த்தத்தோடு உறுதிப் படுத்தவேயில்லை.
4+3=10 என்று சொல்லிவிட்டு அந்த பத்தைப் பற்றியே விவரித்துக் கொண்டி ருக்கின்றது போலவே, அதாவது 10அய் யார் யாருக்கு எப்படி பங்கிடுவது எங்கு எங்கு வைப்பது என்று வேண்டு மானால் பேசு. அதற்கு மேல் 4+3 எப்படி 10 என்று மாத்திரம் கேட்கக்கூடாது என்கின்ற நிலையில்தான் இன்று ஆத்ம தத்துவம் இருந்து வருகின்றது.
அதாவது ஆத்மா என்றால் என்ன?  அது எப்படி சரீரம் பெற்றது?  அதற்கு எப்படி கருமம் ஒட்டிற்று?  அதன் நடத்தைக்குக் காரணம் என்ன?  அது எப்படி மோட்சம் போகின்றது?  அது எப்படி மறுபடியும் சரீரம் பெற்று எழுகின்றது?  மனித ஆத்மா, மிருக ஆத்மா. பட்சி ஆத்மா, புழு பூச்சி ஆத்மா ஆகியவைகளில் உள்ள வித்தியாசம் என்ன?  என்பனவற்றைப் பற்றி எல்லாம் பேசலாம், விவரிக்கலாம். வால்யூம், வால்யூமாக புத்தகம் எழுத லாம். ஆனால் ஆத்மா என்றால் என்ன?  அது எப்படிப்பட்டது?  அப்படி ஒன்று இருக்க விஞ்ஞான சாத்திரம் (சையன்ஸ்) அல்லது ஜீவ தத்துவ சாதிரம் இடம் கொடுக்கின்றதா?  என்பதைப் பற்றி யாரும் எவ்விதக் கேள்வியும் கேட்கக்கூடாது. ஆத்மா இருப்பதாக அவர் சொன்னார், இவர் சொன்னார், மகமது சொன்னார், கிறிஸ்து சொன்னார், கிருஷ்ணன் சொன்னார், புத்தர் சொன்னார்,... என்று சொல்லி விடுவதும் ஆத்மாவை நம்பாதவர் கடவுளை நம்பாத நாத்திகனை விடக் கேடானவன். மடையன், மட்டி என்றும் கடவுளை நம்பாவிட்டால் ஆத்மாவை நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லி விடுகிறார்களே ஒழிய காரண காரியங்களுடன் அறிவு அனுபவங் களுடன் பேசுகின்றவர்களே காணக் கிடைப்பதில்லை.
இது ஒரு புறமிருந்தாலும், ரூபம் இல்லாத வது  தத்துவமில்லாத மனதுக் குப் புரியாத விசயத்துக்காக இவ்வுலக பிரத்தியட்ச வாழ்க்கையையும், அடை யும் இன்ப துன்பங்களையும் பற்றிய கவலை கூடாது என்றோ அல்லது இக்கவலையை விட ஆத்மா கவ லையே பிரதானமென்றோ, பெரிய தென்றோ சொல்லப்படுமானால் அப் படிப்பட்ட மதத்துக்கு உலகில் மனித ஜீவன்கள் இடம் கொடுக்கலாமா என்றுதான் கேட்கின்றோம்.
நிற்க மதமானது மேல் உலக வாழ் வுக்கு ஆதாரமானது என்று சொல்லப் படுமானால் முதலாவதாக மேல் உலகம் என்பது என்ன என்பதைப் பற்றி இதுவரை யாராவது, எங்காவது விளக்கி, இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்.
பூகோள சாதிர நிபுணர்கள், பூமியின் கீழ் மனதிற்கு எட்டக்கூடிய அளவு வரையும், பூமியின் மேல் ஆகாய மார்க்கமாக மனதிற்கு எட்டக் கூடிய அளவு வரையிலும் ஆராய்ந்து பார்த்து லட்சக் கணக்கான மைல் ஏன் கோடிக்கணக்கான மைல் தூரம் வரையில் ஆராய்ச்சி செய்து மேல் கீழ் நிலைமையை விளக்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு நிபுணத் துவர்கள் என்கின்ற நிலையிலும் அனேக வருஷ காலம் அதற்காகப் பாடுபட்டு உழைத்து அனேக கருவி களின் உதவியைக் கொண்டு கண்டு பிடித்தும் சொன்ன பிரத்தியபடி அனுபவ ருஜுப்பிக்கக் கூடிய உண் மைகளே ஒழிய ஞான திருஷ்டி அதா வது ஒரு மனிதனுடைய புத்திக்கு திடீரென்று தோன்றிய விஷயம் என்று சொல்லப்படுவது போல் சொல்லப் பட்டதல்ல. அன்றியும் பள்ளிக் கூடங் களில், அல்லது பூகோள புதகங்களில் முறையே கற்பிக்கப்படாததும், காணப் படாததுமான விஷயங்களுமல்ல.
அப்படியிருக்கும்போது இந்த பிரத்தியட்ச உலக விஷயத்தை விட்டு விட்டு மேலுலக விஷயத்தை பற்றிப் பேசுவது என்றால் அதில் அடங்கியிருக் கும் மவுடீகத் தன்மைக்கு எதை ஒப்பிடு வது என்பது நமக்கு விளங்கவில்லை.
இதுவரையில் மனிதன் மேல் உலகத்தை எப்படிக் கண்டுபிடித்தான்?  அதன் விதீரனத் தன்மை என்ன?  என்பவைகளைப் பற்றிய உண்மை எதுவும் சொல்லப்படாமல் முதலில் மேல் உலகத்தை நம்பு. பிறகு எப்படி வேண்டுமானாலும், அதாவது மோட் சம் எப்படிப்பட்டது? நரகம் `எப்படிப் பட்டது?  தண்டனை எப்படிப்பட்டது?  அது யாருக்குச் சொந்தம்?  பரம பிதாவா, அல்லாவா, வைகுண்ட நாதரா?  கைலாச வாசரா?  யார் அதற்கு எஜமான்?  என்பதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வாதம் செய் என்று கற்பிப்பதாய் இருப்பதைத் தவிர வேறு என்ன உண்மை, அல்லது அறிவு டைமை மேல் உலக விஷயத்தில் இருக்கிறது என்று கேட்கின்றோம்.
அதுபோலவே மதம் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது என்று சொல்லப்படும் வார்த்தையும், அர்த்தமற்றதாகவே இருக்கிறது.
கடவுளைப் பற்றி அதாவது, கடவுள் என்றால் என்ன என்பதைப் பற்றி இதுவரை ஒரு ஆத்தீகனாவது, அல்லது கடவுள் தன்மை பெற்ற பெரியவர் களாவது விளக்கினவர்களே அல்ல. கடவுள் என்றால் கண்ணுக்கும், மன துக்கும் எட்டாதது. ரூபமும் குணமும் இல்லாதது, சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளது என்று சொல்லிவிடுவதும், அதைச் சொல்லு கின்றவர்களே அந்தக் கருத்தை நம் பாமல் இருப்பதும் பிறகு அதற்கு முரணாகப் பேசுவதுமான காரியங் களுக்கே இதுவரை கடவுளைப் பற்றிய வாதங்களின் முடிவுகள் இருந்து வந்திருக்கின்றன.
மனத்துக்குட்படாத கடவுளைப் பற்றி மனிதன் எப்படி எந்த இந்திரி யத்தினால் உணர்ந்தான் என்று கேட் டால் அதற்குப் பதிலே இல்லை. குணமும் ரூபமும் இல்லாத வதுக்குச் செய்கை எது என்று கேட்டால் அதற்கும் பதிலே இல்லை. சர்வசக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் செயலில் நன்மை, தீமை, துன்பம் - இன்பம், மேல் - கீழ், சுகம் - துக்கம், மோட்சம் - நரகம், எப்படி உண்டா யிற்று என்று கேட்டால் இதற்கு பதில் இல்லை. அதைப்பற்றியெல்லாம் யாரும் கேட்கக் கூடாது கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவன் நாத்திகன் நம்பாவிட்டால் நரகம், அரச தண்டனை - ஆஸ்திகர்கள் கண்டனம் கிடைக்கும் என்று மிரட்டுவதும், உருட்டுவதும் தவிர கடவுளைப் பற்றி வேறு விளக் கமே இல்லை.
சர்வ சக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான் ஏன் கடவுளை அறியமுடியவில்லை?  ஏன் கடவுளே இல்லை?  என்று சொல்லுகிறேன், என்று ஒருவன் கேட் டால், அது உன்னுடைய அகம்பாவம், உன்னுடைய மடமை, உன்னுடைய பாவச் செய்கை என்று சொல்லிக் கட வுளைவிட அவனைப் பெரியவனாக மதித்து இகழ்வதாயிருக்கின்றதே தவிர வேறு சமாதானமில்லை.
இப்படிப்பட்ட தத்துவங்கள் கொண்ட மதங்களைப் பற்றி, மக்கள் வேற்றுமை உணர்ச்சி கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்து பலாத்காரச் செய்கைகள் செய்து மக்களைத் துன்புறுத்துவதென்றால் மதத்தை ஒழிக்காமல் இருக்க யாருக்குத்தான் மனம் வரும் என்று கேட்கின்றோம்.
மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங் களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற் படுகின்றதே ஒழிய சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.
கிறித்தவ மதத்தைப் பற்றி எழுதி னோம் என்பதற்குக் குடிஅரசு பத் திரிகை நிறுத்தப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி, எழுதின தற்காக புரட்சிப் பத்திரிகை நிறுத்தப் பட்டு போயிற்று.
இந்து மதத்தைப் பற்றி எழுது கிறோம் என்பதற்காக தினம்தோறும், நிமிஷம் தோறும் அடைந்துவரும் தொல்லையும், நசுங்கு சேட்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது. பார்ப்பனர்களை உத்தி யோகஸ்தர்களைக் கொண்ட போலீஸ் இலாகா, போடல் இலாகா, ரயில்வே இலாகா, நீதி இலாகா, நிர்வாக மற்றும் அனேக துறைகளில் கீழே இருந்து ஹைகோர்ட் நிர்வாகசபைவரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம், சித்திரவதைக் கொப் பாக இருந்து வருகின்றது.
நாம் மாத்திரமல்லாமல் நம்மைப் போல் கஷ்டப்படும் மக்கள் கோடிக் கணக்காக எல்லா மதங்களிலும் இருந்து வருகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.
மதமானது பணக்காரத் தன் மையைப் பிரதிபலித்துக் கொண்டும், அதை ஆதரித்துக் கொண்டும் இருந்து வருகின்ற சாதனமாய் இருப்பதால்; அதற்கு இவ்வளவு ஆதிக்கம் இருந்து வருவதில் அதிசயமில்லை. ஆதலாலே யேதான் மதங்கள் ஒழிக்கப்படுவ தாலேயே மனித சமுகத்துக்கு ஒற்று மையும் சாந்தியும் ஏற்படும் என்று கரு துவதோடு, பணக்காரத் தன்மையின் கொடுமையும் ஒழியுமென்று கருது கின்றோம்.
சென்ற வாரத்தில் சென்னைக் கடற்கரையில் நடந்த மத சம்பந்தமான ஒரு முஸ்லீம் கூட்டத்தில் கலகம் ஏற்பட்டு ஒரு முஸ்லீமை ஒரு இந்து குத்தி விட்டானாம். முஸ்லீமும் அத னால் செத்துவிட்டான். நாளைய தினம் ஒரு கிறிஸ்தவன் அதை விசாரித்து உண்மை கண்டு இந்துவை தண்டிக்கப் போகிறான் என்றாலோ அதில் அதிசய மில்லை. ஒரு கிறிஸ்தவன் முகம்மது நபியைப் பற்றி ஏதோ எழுதிவிட்டால் முகம்மதியர்களுக்கு ஆத்திரம் வரு கின்றதும், ஒரு முகம்மதியன் கிறிஸ்து வைப் பற்றி எழுதிவிட்டால் கிறிஸ்தவ னுக்கு ஆத்திரம் வருவதும், இது போலும் இந்துக்களுக்கும், கிறிஸ்து முகம்மதியர்களுக்கு நேருவதும், அதற்காக கொலை, கொள்ளை, கொடு மைகள் நடப்பதுமான காரியங்கள், அதுவும் இன்று நேற்று அல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக, அதுவும் இந்தியாவில் மாத்திரம் அல்லாமல் அய்ரோப்பா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலிய எல்லா தேசங் களிலும் நடந்து வருகின்றது என்றும் மதம் மக்களுக்கு கூட்டு வாழ்க் கையையும், ஒற்றுமையையும் சகிப்புத் தன்மையையும் வாழ்க்கை ஒழுங்கு களையும், ஒழுக்கங்களையும் போதித்து வருகின்றதா? என்றும் கேட்கின்றோம்.
மதம் ஒழுக்கத்தை, கூட்டு வாழ்க்கை ஒழுங்கு மனிதர்களிடத்தில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை எங்கே எப்படி முறையை கற்பித்து இருக்கின்றது என்று மத பக்தர்களைக் கேட்கின்றோம்.
- பகுத்தறிவு - தலையங்கம் - 09.09.1934
-விடுதலை,30.8.15

திராவிடர் இயக்க சாதனை இதோ


-விடுதலை ஞா.ம.29.8.15

சனி, 29 ஆகஸ்ட், 2015

தொழிலினால் ஜாதி கற்பிப்பது பொருந்துமா?



(இது சென்னை லவுகீக சங்கத்தில் ஒருவராகிய ம.மாசிலாமணியவர்களால் இயற்றப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் (1905) அச்சிடப்பட்டு வெளிப்படுத்தப் பட்டிருக்கும் “வருண பேதவிளக்கம்” என்னும் பழைய புத்தகத்தில் உள்ள 4ஆவது அதிகாரம்)
வேதம் ஓதுபவர்களை வேதியர் எனவும், சாத்திரம் சாதிப்பவர்களை சத்திரியர் எனவும், வேளாண்மை வாணிபம் முதலியவற்றைப் புரிவோரை வைசியர் எனவும், மற்றைய தொழில்களை இயற்றுவோரைச் சூத்திரர் எனவும் இவ்வாறு தொழிலினாலே வருண பேதம் ஏற்பட்டதெனின், இந்நாற்கிரியைகளையும் இயற்றுவோர் மற்றெல்லாத் தேசங்களிலும் இருக்க அவ்விடங்களில் ஏன் வருணபேதம் ஏற்படுத்தப்படவில்லை?
மேலும் வேதங்களை ஒழுங்குபடுத்தின வலைச்சியின் புத்திரராகிய வியாசரும், இந்திரலோகத்துப் பொதுமகளாகிய ஊர்வசியின் கெர்ப்பத்தினின்று உதித்த அருந்ததி யென்னும் மாதை மணம்புரிந்த வசிட்ட முனியும், சத்திரியகுல மரபின ருக்கு சண்டாளச்சி கெர்ப்பத்தினின்று உதித்துத் தமது தபோ பலத்தினால் திருசங்கு மகாராஜனை ஸ்தூல தேகத்துடனே சொர்க்கத்திற்கனுப்ப அங்ஙனமே அவன் தூல தேகத்துடனே செல்ல,
அச்சொர்க்க வாசிகள் மண்ணுலகினின்று இவ்விடம் வருகின்றவன் யாரெனச் சினந்து அவனைத் தலைகீழாகத் தள்ள, தள்ளுண்ட அவர் அபயம்! அபயம் என ஓலமிட்டுக் கொண்டு அந்தரத்தில் வருவதை நோக்கிக் கோபித்து அனுஷம், கேட்டை, மூலம், பூராடம்,
உத்திராடம் ஆகிய தேவர்கள் என்னும் இந்நட்சத்திரங்களைப் பிடுங்கித் தென்றிசையில் நாட்டித் திருசங்கு சொர்க்கமென்னும் ஓர் நவீன சொர்க்கத்தையமைத்த விசுவாமித்திரனும், தொழிலி னால் பிராமணர் ஆனது போல் சூத்திரருக்கு சமையல் செய்யும் பிராமண சுயம்பாகிகளும், கள் விற்கும் பிராமணர்களும் சூத்திரர்களாக வேண்டுமே?
மேலும் பிராமணர் மது மாமிசங்கள் அருந்தாதிருப்ப தனால் உயர்த்தப்பட்டார்கள் எனின், பூர்வகாலத்தில் அனேக பசுக்களைக்கொன்று விற்று ஜீவனம் செய்துவந்த பிராமணகுலத்தில் தோன்றிய அலீகர்த்தன் என்னும் முனியும்,
நாயின் மாமிசத்தைப் புசித்த பிராமணராகிய வர்ம தேவரும், விருதுவென்னும் தச்சனிடத்தில் அனேக பசுக்களை விலைக்கு வாங்கியுண்ட பிராமணராகிய பரத்துவாச மகாமுனியும், சண்டாளன் வீட்டில் செத்துக் கிடந்த நாயின் மாமிசத்தைக் கேட்டு வாங்கிப்புசித்த விசுவாமித்திரரும் சூத்திரர்களாக வேண்டுமே?
பூர்வ காலத்தில் உண்டு வந்தார்களேயன்றி இக்காலத்தில் உண்பதில்லை எனின், இக்காலத்தில் இங்கிலாந்தினின்று செய்து வரும் மீன் எண்ணெயையும், மாட்டின் மாமிசத்தால் செய்து வரும் பானங்களையும் உண்ணுகிறார்களே!
அன்றியும் மாமிசத்தின் சாரமாகிய பால், தயிர், வெண்ணெய், நெய் முதலியவற்றை உண்பதும் அன்றி யாகம் செய்து செய்து அஸ்வம் (குதிரை) முதலியவற்றின் உடலையும் உண்டு வருகிறார்களே!
பிராமணர், பால் கறந்து கொள்வது ஜீவ வதை அல்லவென்றும், மாமிச போஜனம் செய்வது ஜீவ வதையென்றும், பால், ஊன் இனத்தைச்சேர்ந்ததல்லவென்றும் சொல்லின், கன்றுக்காக சுரக்கும் பாலை கன்றை வஞ்சித்துக் கறந்து கொள்வதும்,
தங்கள் சுகத்தையேயன்றி மற்ற பிராணி களின் சுகத்தைக் கருதாது வனங்களில் சுயேச்சையாக தன்னிஷ்ட ஆகாரத்தை யுண்டு ஓடி உலாவித்திரிந்து வரும் விலங்குகளைப்பிடித்து தங்களிஷ்டப்படி ஒழுக வண்டியிற் பூட்டி தங்களைச் சுமந்து செல்லும்படி ஒடுக்கி நடத்துவதும் ஜீவஹிம்சை யல்லவா?
பால் கறந்து கொள்ளு வதற்கும், சுமைகளைச் சுமப் பித்துக் கொள்ளுவதற்கும் பிரதி யாக அவற்றிற்கு வேண்டிய ஆகாரத்தை வருத்திச் சம்பாதித்தது அளிப்பது கறந்து கொண்ட பாலுக்கும் பெற்றுக்கொண்ட வருத்தத்திற்கும், அவ்வாகாரம் பிரதிபலனாவதால் அது குற்றம் அல்ல எனின், அவ்விலங்குகள் தங்கள் பாலையும், வருத்தத்தையும் பெற்றுக் கொண்டு தங்களுக்கு ஆகாரம் அளிக்கும்படி வேண்டிக் கொள்ள வில்லையே?
மேலும் பால், ஊன் இனத்தைச் சேர்ந்ததும் அல்ல, தாவர இனத்தைச் சேர்நததும் அல்லவெனின், அதுபிறிது என்ன இனத்திற் சேர்ந்தது? அதனில் ஜீவன் இல்லை எனின், கோழி முதலியவற்றின் அண்டங்களிலும் (முட்டை) ஜீவன் இல்லையே! ஆகவே அவற்றினை ஏன் உண்பதில்லை?
ஆகையால் அமிர்தம் அவற்றின் ஆகாரத்தின் அளவே அதிகரித்தும், குறைந்தும் இருப்பதால் அது மாமிசத்தின் ஓர் கூறு என்றும், பிராமணரும் மாமிச போஜனர்களேயென்றும் தெளிவாக விளங்குவதும் அன்றி பூர்வகாலந்தொடங்கி பிராமணர் சோமபானமும் செய்து வருவதாக அவர்கள் வேதாகமங்களினாலே தெளிவாவதால் அவ்வகுப்பினரை மட்டும் போஜனத்தினால் உயர்ந்த ஜாதியார் என விசேஷித்துப் பேச வேண்டியது என்ன?
புளிப்பும், நாரும் உள்ள சிறு மாங்கொட்டையை நாட்டி, அது மூன்று, நான்கு அடி உயரம் வளர்ந்த பின் அதனை மற்றொரு மரத்துடன் ஒட்டுவதனால் அக்கனியின் நிறம், மணம் பருமன் முழுதும் மாறிவேறுபடுவது போல,
பிராமணர் உதித்த ஐந்தாம் வயது வரையில் சூத்திரராக இருந்து ஆறாம் வயதில் செய்விக்கப்படும் உபநயனத்திற்குப் பின் பிராமணர்கள் ஆகிறார்கள் எனின், ஒட்டுமாங்கனியின் குணங்கள் யாவும் வேறுபட்டிருப்பது போல உபநயனம் பெற்ற பிராமணருக்கும் புலன் பொறிகளிலும் அகக்கருவி, புறக்கருவிகளிலும் ஏ«னும் பேதம் இருக்க வேண்டுமே?
அதன்றி ஐந்து வயது வரையில் சூத்திரராக இருக்கும் பிராமணப்பிள்ளைகள் உபநயனத்திற்குப் பின்பிராமணர் ஆகிறார்கள் எனின், ஆறுவயதிற்குட்பட்ட சூத்திரப்பிள்ளை களையும் உபநயனம் செய்து ஏன் பிராமணர் ஆக்குவ தில்லை?
பிராமணச் சிறுவர்களே உபநயனம் செய்து பிராமணர் ஆக்கப்படுவர் எனின், அது ஜாதி அபிமானம் அன்றோ?
சூத்திர குலத்தினராக உதித்த ஆண் பாலருக்கு உபநயனம் செய்து பிர்மகுலத்தினர் ஆக்குவது போல, பிராமண ஸ்திரீகளுக்கு உபநயனஞ்செய்து பிரம்ம குலத்தினர் ஆக்குவதில்லையே! ஆகையால் அவர்கள் சூத்திர குலத்தினராக வேண்டுமே?
பிராமண ஸ்திரீகள் உபநயனத்தினரால் அல்ல, பிரம்ம குலத்தினராகவே உதித்து மாத சூதகம் ஆகும் காலத்தில் மட்டும் நாலைந்து நாள் காலத்தில் மட்டும் நாலைந்து நாள் சூத்திரகுலத்தினராக மாறி, மாதசூதமான அய்ந்தாம்நாள் செய்யும் ஸ்நானத்தினால், சூத்திரத்துவம் மாறி மீளவும் பிராமணர் ஆகிறார்கள் எனின், ருதுவதியான நாள்முதல், முப்பது வருடகாலம் அல்லது ஸ்திரீக்கு 44, 50 வரைக்கும் வியக்கத்தக்க கிரமமாய் ஒவ்வொரு மாதமும் மாத சூதகம் கண்டுகொண் டேயிருக்கும், இம்முப்பது வருட காலமும் நகமும் சதையும் போல சூத்திரத்துவம் பிராமண ஸ்திரீகளை விட்டுப்பிரியாது இருக்கின்றதே!
மேலும் பிர்மகுலத்தினராகவே யுதித்த பிராமண ஸ்திரீ களுக்கு பாப சம்பந்தமாகிய சூத்திரத்துவம் பற்றினது எவ்வாறு? மாத சூதகமாகிய இழிவு பிராமண ஸ்திரீகளிடத்தில் அபின்ன    மாகவே இருக்கிறதெனின், அசுத்தமும் ஈனமும் பொருந்திய மாத சூதகத்தையுடைய பிராமண ஸ்திரீகளை பரிசுத்த தேகத்தையுடைய பிராமணர் அங்கீகரித்துக் கொள்வது எப்படி?
ஆகையால் பிராமணர் அவர்களைத் தீண்டாமலும், அவர்கள் யாகம் செய்யும் போஜனத்தை உண்ணாமலும் அல்லவோ  இருத்தல் வேண்டும், அவ்வாறு அன்றி பிராமணர், மாதரைத் தங்களுக்குச் சமப்படுத்தி இருப்பதால் (யாதொரு பொருளின் கூறுகள் நம் முதற் பொருளின் லட்சணமுடையன வாயிருப்பது பிரத்தியட்சமாயிருப்பது போல) உபநயனத்திற்கு முன் பிராமணரும், மாதந்தோறும் பிராமண ஸ்திரீகளும் சூத்திரராகவே இருப்பதால் அவர்களையும் சூத்திரர்கள் என்றே அங்கீகரிக்க வேண்டும். அல்லவெனின் சூத்திரராக இருக்கும் பிராமண ஸ்திரீகளுடன், பிர்ம குலத்தைச் சேர்ந்த பிராமணர் சேந்திருப்பது எங்கனம்? நீரோடுநீர் சேர்வதன்றி நெய் சேராதே.
பருத்தி நூலை முப்பிரிவாகக் கத்தரித்துப் பூண்டிருக்கும் பூநூலினால் உயர்த்தப்பட்டார்கள் எனின், வள்ளுவர் கோமுட்டிகள், வணிகர், கம்மாளர் முதலியவர்களும் பூண்டிருக்கிறார்களே! ஆகவே பிராமணர்களுக்கு மட்டும் பூநூலினால் உயர்வு எப்படி உண்டாகும்?
பிராமணர் வேதம் ஓதுதலினால் உயர்த்தப்பட்டார்கள் எனின், இக்காலத்தில் பறையர் முதலிய சர்வ ஜாதியாரிலும் அனேகர் சுற்றியிருப்பதும் அன்றி மாக்ஸ்முல்லர், சர், உவில்யம் ஜோன்ஸ் முதலியவரும் சதுர்வேதங்கள் முழுவதையும் சுற்றிருக்கிறார்களே! பிரம்மக்கியானந்து பிராமண என்னும் வாக்கியத்தின்படி பிரமத்தியானம் உள்ளவர்களாக இருக்கும் மற்றய மூவினத்தவரையும் ஏன் பிராமணர் எனவும் பிரமத்தியான மற்றவர்களாயிருக்கும் பிராமணரைச் சூத்திரர் எனவும் மொழிவதில்லை?
ஆகையால் பூலோகத்தில் உள்ள சமஸ்த மாந்தரும், ஏக ஜாதியாராக இருக்க இத்தேசத்தவர்கள் மட்டும் தொழிலினால் ஏற்றத்தாழ்வான நால்வகைச் சாதியாராக கடவுளால் உருவாக்கப்பட்டார்களெனச் சாதிப்பது தாஷ்டாந்த திருஷ்டாந்த வழுவாய் சமரசப்படாது ஆதலின் அச்சாதனை யைக் கொண்டு வருண பேதம் உண்டு என்று சாதித்தல் கூடாது. ஆகையால் அது சாதனை வழுவேயாம்.
(குடி அரசு - 1935)
-விடுதலை,28.8.15