சனி, 29 ஆகஸ்ட், 2015

தொழிலினால் ஜாதி கற்பிப்பது பொருந்துமா?



(இது சென்னை லவுகீக சங்கத்தில் ஒருவராகிய ம.மாசிலாமணியவர்களால் இயற்றப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் (1905) அச்சிடப்பட்டு வெளிப்படுத்தப் பட்டிருக்கும் “வருண பேதவிளக்கம்” என்னும் பழைய புத்தகத்தில் உள்ள 4ஆவது அதிகாரம்)
வேதம் ஓதுபவர்களை வேதியர் எனவும், சாத்திரம் சாதிப்பவர்களை சத்திரியர் எனவும், வேளாண்மை வாணிபம் முதலியவற்றைப் புரிவோரை வைசியர் எனவும், மற்றைய தொழில்களை இயற்றுவோரைச் சூத்திரர் எனவும் இவ்வாறு தொழிலினாலே வருண பேதம் ஏற்பட்டதெனின், இந்நாற்கிரியைகளையும் இயற்றுவோர் மற்றெல்லாத் தேசங்களிலும் இருக்க அவ்விடங்களில் ஏன் வருணபேதம் ஏற்படுத்தப்படவில்லை?
மேலும் வேதங்களை ஒழுங்குபடுத்தின வலைச்சியின் புத்திரராகிய வியாசரும், இந்திரலோகத்துப் பொதுமகளாகிய ஊர்வசியின் கெர்ப்பத்தினின்று உதித்த அருந்ததி யென்னும் மாதை மணம்புரிந்த வசிட்ட முனியும், சத்திரியகுல மரபின ருக்கு சண்டாளச்சி கெர்ப்பத்தினின்று உதித்துத் தமது தபோ பலத்தினால் திருசங்கு மகாராஜனை ஸ்தூல தேகத்துடனே சொர்க்கத்திற்கனுப்ப அங்ஙனமே அவன் தூல தேகத்துடனே செல்ல,
அச்சொர்க்க வாசிகள் மண்ணுலகினின்று இவ்விடம் வருகின்றவன் யாரெனச் சினந்து அவனைத் தலைகீழாகத் தள்ள, தள்ளுண்ட அவர் அபயம்! அபயம் என ஓலமிட்டுக் கொண்டு அந்தரத்தில் வருவதை நோக்கிக் கோபித்து அனுஷம், கேட்டை, மூலம், பூராடம்,
உத்திராடம் ஆகிய தேவர்கள் என்னும் இந்நட்சத்திரங்களைப் பிடுங்கித் தென்றிசையில் நாட்டித் திருசங்கு சொர்க்கமென்னும் ஓர் நவீன சொர்க்கத்தையமைத்த விசுவாமித்திரனும், தொழிலி னால் பிராமணர் ஆனது போல் சூத்திரருக்கு சமையல் செய்யும் பிராமண சுயம்பாகிகளும், கள் விற்கும் பிராமணர்களும் சூத்திரர்களாக வேண்டுமே?
மேலும் பிராமணர் மது மாமிசங்கள் அருந்தாதிருப்ப தனால் உயர்த்தப்பட்டார்கள் எனின், பூர்வகாலத்தில் அனேக பசுக்களைக்கொன்று விற்று ஜீவனம் செய்துவந்த பிராமணகுலத்தில் தோன்றிய அலீகர்த்தன் என்னும் முனியும்,
நாயின் மாமிசத்தைப் புசித்த பிராமணராகிய வர்ம தேவரும், விருதுவென்னும் தச்சனிடத்தில் அனேக பசுக்களை விலைக்கு வாங்கியுண்ட பிராமணராகிய பரத்துவாச மகாமுனியும், சண்டாளன் வீட்டில் செத்துக் கிடந்த நாயின் மாமிசத்தைக் கேட்டு வாங்கிப்புசித்த விசுவாமித்திரரும் சூத்திரர்களாக வேண்டுமே?
பூர்வ காலத்தில் உண்டு வந்தார்களேயன்றி இக்காலத்தில் உண்பதில்லை எனின், இக்காலத்தில் இங்கிலாந்தினின்று செய்து வரும் மீன் எண்ணெயையும், மாட்டின் மாமிசத்தால் செய்து வரும் பானங்களையும் உண்ணுகிறார்களே!
அன்றியும் மாமிசத்தின் சாரமாகிய பால், தயிர், வெண்ணெய், நெய் முதலியவற்றை உண்பதும் அன்றி யாகம் செய்து செய்து அஸ்வம் (குதிரை) முதலியவற்றின் உடலையும் உண்டு வருகிறார்களே!
பிராமணர், பால் கறந்து கொள்வது ஜீவ வதை அல்லவென்றும், மாமிச போஜனம் செய்வது ஜீவ வதையென்றும், பால், ஊன் இனத்தைச்சேர்ந்ததல்லவென்றும் சொல்லின், கன்றுக்காக சுரக்கும் பாலை கன்றை வஞ்சித்துக் கறந்து கொள்வதும்,
தங்கள் சுகத்தையேயன்றி மற்ற பிராணி களின் சுகத்தைக் கருதாது வனங்களில் சுயேச்சையாக தன்னிஷ்ட ஆகாரத்தை யுண்டு ஓடி உலாவித்திரிந்து வரும் விலங்குகளைப்பிடித்து தங்களிஷ்டப்படி ஒழுக வண்டியிற் பூட்டி தங்களைச் சுமந்து செல்லும்படி ஒடுக்கி நடத்துவதும் ஜீவஹிம்சை யல்லவா?
பால் கறந்து கொள்ளு வதற்கும், சுமைகளைச் சுமப் பித்துக் கொள்ளுவதற்கும் பிரதி யாக அவற்றிற்கு வேண்டிய ஆகாரத்தை வருத்திச் சம்பாதித்தது அளிப்பது கறந்து கொண்ட பாலுக்கும் பெற்றுக்கொண்ட வருத்தத்திற்கும், அவ்வாகாரம் பிரதிபலனாவதால் அது குற்றம் அல்ல எனின், அவ்விலங்குகள் தங்கள் பாலையும், வருத்தத்தையும் பெற்றுக் கொண்டு தங்களுக்கு ஆகாரம் அளிக்கும்படி வேண்டிக் கொள்ள வில்லையே?
மேலும் பால், ஊன் இனத்தைச் சேர்ந்ததும் அல்ல, தாவர இனத்தைச் சேர்நததும் அல்லவெனின், அதுபிறிது என்ன இனத்திற் சேர்ந்தது? அதனில் ஜீவன் இல்லை எனின், கோழி முதலியவற்றின் அண்டங்களிலும் (முட்டை) ஜீவன் இல்லையே! ஆகவே அவற்றினை ஏன் உண்பதில்லை?
ஆகையால் அமிர்தம் அவற்றின் ஆகாரத்தின் அளவே அதிகரித்தும், குறைந்தும் இருப்பதால் அது மாமிசத்தின் ஓர் கூறு என்றும், பிராமணரும் மாமிச போஜனர்களேயென்றும் தெளிவாக விளங்குவதும் அன்றி பூர்வகாலந்தொடங்கி பிராமணர் சோமபானமும் செய்து வருவதாக அவர்கள் வேதாகமங்களினாலே தெளிவாவதால் அவ்வகுப்பினரை மட்டும் போஜனத்தினால் உயர்ந்த ஜாதியார் என விசேஷித்துப் பேச வேண்டியது என்ன?
புளிப்பும், நாரும் உள்ள சிறு மாங்கொட்டையை நாட்டி, அது மூன்று, நான்கு அடி உயரம் வளர்ந்த பின் அதனை மற்றொரு மரத்துடன் ஒட்டுவதனால் அக்கனியின் நிறம், மணம் பருமன் முழுதும் மாறிவேறுபடுவது போல,
பிராமணர் உதித்த ஐந்தாம் வயது வரையில் சூத்திரராக இருந்து ஆறாம் வயதில் செய்விக்கப்படும் உபநயனத்திற்குப் பின் பிராமணர்கள் ஆகிறார்கள் எனின், ஒட்டுமாங்கனியின் குணங்கள் யாவும் வேறுபட்டிருப்பது போல உபநயனம் பெற்ற பிராமணருக்கும் புலன் பொறிகளிலும் அகக்கருவி, புறக்கருவிகளிலும் ஏ«னும் பேதம் இருக்க வேண்டுமே?
அதன்றி ஐந்து வயது வரையில் சூத்திரராக இருக்கும் பிராமணப்பிள்ளைகள் உபநயனத்திற்குப் பின்பிராமணர் ஆகிறார்கள் எனின், ஆறுவயதிற்குட்பட்ட சூத்திரப்பிள்ளை களையும் உபநயனம் செய்து ஏன் பிராமணர் ஆக்குவ தில்லை?
பிராமணச் சிறுவர்களே உபநயனம் செய்து பிராமணர் ஆக்கப்படுவர் எனின், அது ஜாதி அபிமானம் அன்றோ?
சூத்திர குலத்தினராக உதித்த ஆண் பாலருக்கு உபநயனம் செய்து பிர்மகுலத்தினர் ஆக்குவது போல, பிராமண ஸ்திரீகளுக்கு உபநயனஞ்செய்து பிரம்ம குலத்தினர் ஆக்குவதில்லையே! ஆகையால் அவர்கள் சூத்திர குலத்தினராக வேண்டுமே?
பிராமண ஸ்திரீகள் உபநயனத்தினரால் அல்ல, பிரம்ம குலத்தினராகவே உதித்து மாத சூதகம் ஆகும் காலத்தில் மட்டும் நாலைந்து நாள் காலத்தில் மட்டும் நாலைந்து நாள் சூத்திரகுலத்தினராக மாறி, மாதசூதமான அய்ந்தாம்நாள் செய்யும் ஸ்நானத்தினால், சூத்திரத்துவம் மாறி மீளவும் பிராமணர் ஆகிறார்கள் எனின், ருதுவதியான நாள்முதல், முப்பது வருடகாலம் அல்லது ஸ்திரீக்கு 44, 50 வரைக்கும் வியக்கத்தக்க கிரமமாய் ஒவ்வொரு மாதமும் மாத சூதகம் கண்டுகொண் டேயிருக்கும், இம்முப்பது வருட காலமும் நகமும் சதையும் போல சூத்திரத்துவம் பிராமண ஸ்திரீகளை விட்டுப்பிரியாது இருக்கின்றதே!
மேலும் பிர்மகுலத்தினராகவே யுதித்த பிராமண ஸ்திரீ களுக்கு பாப சம்பந்தமாகிய சூத்திரத்துவம் பற்றினது எவ்வாறு? மாத சூதகமாகிய இழிவு பிராமண ஸ்திரீகளிடத்தில் அபின்ன    மாகவே இருக்கிறதெனின், அசுத்தமும் ஈனமும் பொருந்திய மாத சூதகத்தையுடைய பிராமண ஸ்திரீகளை பரிசுத்த தேகத்தையுடைய பிராமணர் அங்கீகரித்துக் கொள்வது எப்படி?
ஆகையால் பிராமணர் அவர்களைத் தீண்டாமலும், அவர்கள் யாகம் செய்யும் போஜனத்தை உண்ணாமலும் அல்லவோ  இருத்தல் வேண்டும், அவ்வாறு அன்றி பிராமணர், மாதரைத் தங்களுக்குச் சமப்படுத்தி இருப்பதால் (யாதொரு பொருளின் கூறுகள் நம் முதற் பொருளின் லட்சணமுடையன வாயிருப்பது பிரத்தியட்சமாயிருப்பது போல) உபநயனத்திற்கு முன் பிராமணரும், மாதந்தோறும் பிராமண ஸ்திரீகளும் சூத்திரராகவே இருப்பதால் அவர்களையும் சூத்திரர்கள் என்றே அங்கீகரிக்க வேண்டும். அல்லவெனின் சூத்திரராக இருக்கும் பிராமண ஸ்திரீகளுடன், பிர்ம குலத்தைச் சேர்ந்த பிராமணர் சேந்திருப்பது எங்கனம்? நீரோடுநீர் சேர்வதன்றி நெய் சேராதே.
பருத்தி நூலை முப்பிரிவாகக் கத்தரித்துப் பூண்டிருக்கும் பூநூலினால் உயர்த்தப்பட்டார்கள் எனின், வள்ளுவர் கோமுட்டிகள், வணிகர், கம்மாளர் முதலியவர்களும் பூண்டிருக்கிறார்களே! ஆகவே பிராமணர்களுக்கு மட்டும் பூநூலினால் உயர்வு எப்படி உண்டாகும்?
பிராமணர் வேதம் ஓதுதலினால் உயர்த்தப்பட்டார்கள் எனின், இக்காலத்தில் பறையர் முதலிய சர்வ ஜாதியாரிலும் அனேகர் சுற்றியிருப்பதும் அன்றி மாக்ஸ்முல்லர், சர், உவில்யம் ஜோன்ஸ் முதலியவரும் சதுர்வேதங்கள் முழுவதையும் சுற்றிருக்கிறார்களே! பிரம்மக்கியானந்து பிராமண என்னும் வாக்கியத்தின்படி பிரமத்தியானம் உள்ளவர்களாக இருக்கும் மற்றய மூவினத்தவரையும் ஏன் பிராமணர் எனவும் பிரமத்தியான மற்றவர்களாயிருக்கும் பிராமணரைச் சூத்திரர் எனவும் மொழிவதில்லை?
ஆகையால் பூலோகத்தில் உள்ள சமஸ்த மாந்தரும், ஏக ஜாதியாராக இருக்க இத்தேசத்தவர்கள் மட்டும் தொழிலினால் ஏற்றத்தாழ்வான நால்வகைச் சாதியாராக கடவுளால் உருவாக்கப்பட்டார்களெனச் சாதிப்பது தாஷ்டாந்த திருஷ்டாந்த வழுவாய் சமரசப்படாது ஆதலின் அச்சாதனை யைக் கொண்டு வருண பேதம் உண்டு என்று சாதித்தல் கூடாது. ஆகையால் அது சாதனை வழுவேயாம்.
(குடி அரசு - 1935)
-விடுதலை,28.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக