செவ்வாய், 19 டிசம்பர், 2017

சமுக சீர்திருத்தமும் - சமயக் கொள்கையும்

-தந்தை பெரியார்



தலைவர் அவர்களே!  இளைஞர்களே!! சகோதரர்களே!!!  2 மணி நேரத்திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார்.  இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப் பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி. ஆதலால் திடீரென்று என்ன பேசுவதெனவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன்.  ஆனாலும் இதைப் பற்றிய என்னுடைய பழைய சங்கதிகளையே இந்தத் தலைப் பின் கீழ் சொல்லப்போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாணவர்களும், இளைஞர் களுமாய் இருப்பதால் நான் சொல்லு வதை திடீரென்று நம்பி விடாதீர்கள்.  நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு  வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

நண்பர்களே சமுக சீர்திருத்தம் என்றால் எந்த சமுகம் என்பதும், சமயக் கொள்கை என்றால் எந்த சமயம் என் பதையும் முதலில் முடிவு கட்டிக் கொள்வது இங்கு  அவசியமாகும். நான் இப் போது பொதுவாக மனித சமுகம் என் பதையும் பொதுவாக மனித சமுகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங்களையும் எடுத்துக் கொள்ளுகிறேன்.  பிறகு அவசியமிருந்தால் தனிச் சமுகம், தனிச் சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன்.  பொதுவாக சம யங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமுகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டவை யாகும். மனித வாழ்க் கைக்கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படுவதுமாகும்.

ஒரு வாசக சாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண் டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடை யூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கை களாகும்.  இதுவும் அந்தந்த காலதேச வர்த்தமானத்திற்கும், மக்கள் அறிவு நிலைமைக்கும், வளர்ச்சிக்கும் தக்கபடி செய்யப்படுவதேயாகும்.  ஆனால், அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்துகொள்ள முடியாத அறிவு  இல்லாத காலத்தில் மக்களைப் பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப்பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக் கருதி ஏற்படுத்திய கொள்கைக்கும் சேர்ந்ததேயாகும்.

அதாவது, எப்படி ஒரு குழந்தையானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சக்தியில்லாத தென்றும் அதைப் பற்றிய விபரங்களை எடுத்துச் சொன் னால் அதை அறிந்து கொள்ளமுடியா தென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக்குழந்தை வெளியில் போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப்படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒரு வித பயம் உண்டாகும் படியான பூச்சாண்டி பிடித்துக் கொள்வான் என்றும்,  பேய், பூதம்  பிடித்துக் கொள்ளும்  என்றும், துண்டித்தக்காரன் பிடித்துக் கொண்டு போய் அடைத்து விடுவான் என்றும், இன்னும் பலவகையாய்  சொல்லுவ தோடு கையையும், முகத்தையும் ஒருவித மாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாதபடி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற் கென்று ஏற்படுத்தப் பட்ட கொள்கை களை உணர்ந்து அதன்படி ஒழுக முடியாத நிலையில் மனிதர்கள் இருக் கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப்போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக் களை பயப்படும்படியாக ஏதோ அம்மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும், மதக் கட்டுப் பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய் திருக்கிறார்கள்.

அந்த நிபந்தனை மிரட் டல்களும், கட்டுப்பாடுகளும் தான் இன் றைய மோட்சம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவை களாகும்.  மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவைகளில் சொல்லப்பட்டவை களுமாகும்.  அது மாத்திரமல் லாமல் மேற்கண்ட முறையில் சொல்லுபவைகளெல்லாம் சொல்லிவிட்டும் எழுதி விட்டும் ஆனபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்பமாட்டார்கள் என்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும், அறி வுக்குப் பொருந்தாததுமாய் இருப்பதால்) அவை களையெல்லாம் கடவுள் சொன்னார்.  பகவான் சொன்னார், முனிவர் சொன் னார், ரிஷி சொன்னார் என்று அதாவது மனிதத்தன்மைக்கு மீறினவர்களால் சொல்லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோட்சம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்கவேண்டும் என்று சொல்லி நம்பச் செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக் கொள்கைகளை மக்களுக்குள் புகுத்தி இருக் கிறார்கள்.  இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள் கைகள் கொண்ட சமயங்களை முரட்டுப் பிடிவாதம், குரங்குப் பிடியாய் பிடித்து சிறிது கூட காலத்திற்கும், அறிவின் நிலைமைக்கும் ஏற்றமாதிரி திருந்துவதற்கு விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்ததாலேயே அறி வுக்குத் தகுந்த படியும் காலத்திற்கு ஏற்றபடியும் பலபல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று. அன்றியும் திருந்த இடம் கொடுத்துக் கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும், பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருகவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று.  ஆகவே, இன்றைய தினமும் மக்கள் எந்தச் சமயமானலும் இந்த தத்துவத்தின் மேல் ஏற்பட்ட தென்பதையும் ஒத்துக்கொண்டு கால தேசவர்த்தமானத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சௌகரியமு முடையது என்று சொல்லப்படுவதாயின் அது எந்த மதமா யினும் சமயமாயினும் (கொள்கையாயினும்) அறிவுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.

அப்படிக்கில்லாமல், அதாவது மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்குக் கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும், அந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டி யதே மனிதனின் கடமையென்றும், அது எப்படிப்பட்ட தானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாய் இருந்தாலும் அதை அழித்துத் தீர வேண்டியது மனித சமுக சீர்திருத்தத்தைக் கோருகிற ஒவ்வொருவருடையவும் முக்கியமான கடமையாகும்.

ஆகவே, அக்கடமைக்கு கட்டுப்பட்டவைகள்தான் சமயக் கொள்கைகளாகும். இனி இந்திய சமுகத்தையும், இந்து சமயத்தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக் கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமுகம் பெரிதும் சமயத்தைக் காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டி ருக்கின்றன. அப்படிக் கருதிக் கொண்டிருப் பதிலும் மற்றொரு சிரிப்புக்கு இடமான விஷயம் என்ன வென்றால், மனித சமுக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள் கைகளையெல்லாம் விட்டுவிட்டு அக் கொள்கை களை நிறைவேற்றவென்று பொய்யாகவும், கற்பனையாக வும், பயத்திற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கை களைக் கெட்டி யாய் பிடித்துக்கொண்டு கட்டி அழுவதாய் இருக்கின்றது.

காரணம் என்னவென்றால், மனிதனை அறிவு பெறு வதற்கு விடாமலும் விஷயங்களைப் பகுத்தறிந்து நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இந்திய மனித சமுகம் இன்றும் சுய அறிவற்று சமயத்தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது?  என்ப வைகளைக் கவனிக்காமல் கீழ் நிலை யிலேயே இருந்து கொண்டு சீர்திருத்த மடையவோ, முன்னேற்றமடையவோ முடியாமல் தவிக்கின்றன.  உதாரணம் வேண்டுமானால் பாருங்கள் எல்லா சமயக் காரர்களின் மனோபாவமும், குணமும் மற்றவனிடம் நடந்து கொள்ளும் பான்மையும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காண்கின்றோம்.  ஆனால், ஆண்களைப் பார்த்தால் இன்ன இன்ன சமயம் தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக் கிறார்கள்.  இவன் இஸ்லாமானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பௌத்தன், இவன்  இந்து, இவன் சைவன், இவன் வைண வன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டுபிடித்து விடலாம்.  ஆனால், இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங்களைப் பார்த்தால் மாற்றமில்லாதபடி ஒரே மாதிரி யாகத்தான் இருக்கும்.

ஆகவே, மதம் என்ப தும் சமயம் என்பதும் யாருக்கும் அநேக மாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதேயொழிய, கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும், மக்கள் வேஷத்தைக்  கெட்டி யாகப் பிடித்துக் கொண்டு கொள்கை களை அடி யோடு நழுவவிட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். இதற்குக் காரணம் என்னவென்றால், இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக் கொடுத்து அதைக் கிரமமாய் அந்தந்த சமயத் தார்கள்  பின்பற்றுகிறார்களா? இல்லையா என்று பார்ப்பதல் லாமல் கொள்கையை  வற்புறுத்தாததேயாகும்.  எந்த சமயத்திற்கும் இந்த மாதிரி வேஷந்தான்  பிரதானமான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான், எந்த சமய மக்களிடம் சமய உண்மைக் கொள்கைகளைப் பார்க்க முடியாமால்  போனதோடு, சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள் கையைச் சொன்னாலும்  லட்சியம் செய்யாமல் போய் விட வேண்டியதாகிவிட்டது அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத் திலேயே அதாவது வேஷமாத்திரத் திலேயே சமயப் பிரதானம் கிடைத்து விடுகின்றதாலும் உண்மையான அதாவது மனிதனிடம்  நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவிதமாக பயங் களுக்காக கற்பிக்கப்பட்ட மோட்சம், கடவுள் அருள் அடுத்த ஜென்மத்தில் மேன்மையான பதவி  ஆகியவைகள் என்பவைகள்  எல்லாம் மேல்கண்ட வேஷ மாத்திரத்தாலே  கிடைத்து விடுவதாய் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப் பட்டு விட்டதாலும் வெறும்  வேஷத்தை போடுகின்ற தாலேயே மோட்சமடையக் கருதி அதிலேயே ஈடுபட்டு பிரதான  சமயக் கொள்கையை அலட்சிப்படுத்தி விடு கிறார்கள். ஆகையால், இன்றைய தினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டுமானால், அதன் மிரட்டல் நிபந்தனை களான போலிக் கற்பனை களையெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோட்சம், நரகம். தலை விதி, கடவுளின்  பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்ப்  பிறக்கலாம்  என்பவைகளையும்,  சமய வேஷங்களையும் அடியோடு அழித்தாக வேண்டும்.  அப்படிக்கில்லாத பட்சம் எப்படிப் பட்ட நல்ல கொள்கை யுள்ள சமயம் என்றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக்காது. மேலும் கொள்கையையும், அறிவையும்,  பிரத்தியட்ச அனுபவத் தையும்   பொருத்திவிட வேண்டும் அதைக் கொண்டு அவரவர்களையே நடந்து  கொள்ளும் படி விட்டு விடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெறும்  பாட்டிக்கதைச் சமயங்கள்  இன்றைய சமுக முன்னேற்றத் திற்குப் பயன்படவே படாது  என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும்.

உதாரணமாக, முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக்கல்வி  அறிவு சௌகரிய மில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர்  பிரயாணம் போய் வரட்டு மென்று கருதி அந்த ஊருக்குப போனால் புண்ணியம்,  இந்த சாமியை தரிசித்தால்  மோட்சம், இந்தத் தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்  பிறப்பான் என்றெல்லாம்   சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக்  கதைகள் எழுதி  வைத்ததுடன் ஜீவ காருண்யம் என்பதையும்  உத்தேசித்து மனிதன், மாடு, குதிரை, மனிதன் ஆகிய வைகள் மீது சவாரி செய்து அவற்றிற்கு தொந்தரவு கொடுக் காமல் இருக்கட்டும் என்று  கருதி காலால் நடந்து போனால் அதிக மோட்சம் அவசியம்  கிடைக்கு மென்று  எழுதி வைத்து இருந்தால் இன்று வர்த்தமான பத்திரிகை ரயில், மோட்டார்,  ஆகாயக்  கப்பல் ஆகி யவைகள் ஏற்படுத்தப்பட்டு  மலிந்த பிறகுகூட நடந்து யாத்திரை போக  வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

இதுபோலவேதான் அநேக  விஷ யங்களை சமயத்தின்  பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி, மூடர்களாகவும், தரித்திரர்களாகவுமாகி  அடிமைகளாய்  கஷ்டப்படு கின்றனர். இக் கஷ்டத் தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டு மானால் சமயத்தின் உண்மை தத்து வத்தைத் தைரியமாய் எடுத்து ஓத வேண்டும்.  அதன் போலித் தத்துவங் களை தைரியமாக அழிக்க வேண்டும், அதோடு போலிக்கற்பனை  நிபந்தனைகளுக்கு  ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம் , புண் ணியம், மோட்சம், அடுத்த ஜன்மம் என்கின்ற உபத்திர வங்கள் எல்லாவற்றையும் அடியோடு ஒழித்தாகவேண்டும். இல்லா விட்டால் மக்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ, திருப்தியோ, மோட்சமோ இல்லவே இல்லை என்றுதான் சொல் லுவேன்.  இந்த உபத்திரவங்களும்  மடத் தனங்களும் இங்கு உலகில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக்கின்ற தென்று ஒரு சமயம் சொல்லலாம் ஆனாலும், இந்து  சமயம் என்பதிலும் இந்திய மக்கள் என்பவர்களிடமுமே அதிகமாக மிக்க கெடும்படியாக சிறிது கூட முன்னேற்றம் அடைய முடியாதபடியாக சீர்திருத்தம் செய்ய சற்றும்  ஒன்று படாததாக இருந்து வருகின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்றமடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடைகளை அழித்து முன்னேற்றமும் விடுதலையும் அடைந்து வரு கிறார்கள். ஆதலால், வாலிபர்களே! நீங்கள் சற்று நிதானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது  ஒரு முடிவுக்கு வந்து உங்களால் சமுகம் முன்னேறும்படியும் சமயக் கொள்கைகள் அதற்குப் பயன்படும்படியான மார்க்கத்தை தேடுங்கள்.

(சென்னை - பச்சையப்பன் கலாசாலையில்

சமுக சீர்திருத்தமும், சமயக் கொள்கையும் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு)

குடி அரசு - சொற்பொழிவு - 25.01.1931

- விடுதலை நாளேடு, 17.12.17

வெள்ளி, 15 டிசம்பர், 2017

விரதப் புரட்டு - சித்திரபுத்திரன் -

06.04.1930- குடிஅரசிலிருந்து 
உமாமகேசுவர பூஜை விரதம்

 



நைமி சாரண்யவாசிகளுக்கு சூத புராணிகர் சொன்னது

ஆனந்ததேசத்தில் வேதவிரதன் என்னும் பிராம ணனுக்கு சாரதை என்று ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரில் மனைவியை இழந்த பத்மநாபன் என்னும் கிழப்பார்ப்பான் அந்த பெண்ணின் தகப்பனுக்கு நிறைய பணம் கொடுத்து தனக்கு அந்தப் பெண்ணை இரண்டாவது பெண்ஜாதியாக விவாகம் செய்துகொண்டான். அந்தக் கிழப்பார்ப்பான் மணக்கோலம் முடியும் முன்பே விஷம் தீண்டி இறந்துபோனான். பிறகு அந்தப் பெண் தகப்பன் வீட்டிலேயே இருந்தாள். சிலநாள் பொறுத்து ஒரு முனிவர் சாரதையின் வீட்டிற்கு வந்தார். சாரதை அவருக்கு மரியாதை செய்தாள்.

உடனே, அந்த முனிவர் சாரதையை நீ புருஷனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்ல பிள்ளைகளை பெறக்கடவாய் என்று ஆசீர்வாதம் செய்தார். அதற்கு சாரதை பூர்வஜன்ம கருமத்தின் பலனாய் நான் விதவை யாகி விட்டதால், தங்களின் ஆசீர்வாதம் பலியாமல் வீணாய்ப் போய் விட்டதே என்றாள்.

அதற்கு அந்த ரிஷி நான் கண் தெரியாத குருடனா னதால் அறியாமல் அந்தப் படி ஆசீர்வாதம் செய்ய நேரிட்டு விட்டது. ஆனாலும் அது பலிக்கும்படி செய்கிறேன் பார் என்று சொன்னார். என் புருஷன் இறந்து வெகுநாளாய் விட்டதே. இனி அது எப்படிப் பலிக்கும் என்று சாரதை கேட்க அதற்கு அவர் நீ உமாமகேவர விரதம் அனுஷ்டித்து வந்தால் கண்டிப்பாய் நீ உத்தேசித்த காரியம் கைகூடுமென்று கூறினார்.

அவ்விரதம் அனுஷ்டிப்பதெப்படி? என்று சாரதை கேட்டாள். அதற்கு  முனி சொல்வதாவது:

சித்திரை அல்லது மார்கழி மாதத்தில் ஒரு பிராமணனை அவன் மனைவியுடன் நல்ல பீடத்தில் உட்காரவைத்து அவர்களைப் பார்வதி பரமசிவனாகப் பாவித்து மலர் களால் அர்ச்சித்து தினமும் அன்ன ஆகாரமிட்டு வருஷக் கணக்காய் பூசைசெய்து பார்வதி பரமசிவ உருவத்தை மனதில் நினைத்து அதற்கு விரத அபிஷேகம் செய்து ஆராதித்து பஞ்சாஷரத்தை தியானித்துக் கொண்டிருந்தால் நினைத்த காரியமெல்லாம் கைகூடும் என்றார்.

அதுகேட்ட சாரதையானவள் அந்தப்படியே அது முதல் தனக்கு முனிவரின் ஆசீர்வாதம் பலிக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு முனிவர் சொன்னபடி உமாமகேசுவர விரதத்தை கிரமமாய் அனுஷ்டித்து வந்தாள். உடனே பார்வதிதேவி சாரதைக்கு பிரத்தியட்ச மாகி உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாள்.

சாரதை, எனக்கு புருஷன் வேண்டும் என்றாள். பார்வதி அப்படியே உன்னை ஒரு புருஷன் தினமும் வந்து சொப்பனத்தில் புணருவான். அதனால் நல்ல ஒரு குழந்தை பிறக்கும் என்று வரம் கொடுத்தாள். அதுமுதல் சாரதையின் சொப்பனத்தில் தினமும் ஒரு புருஷன் வந்து புணர்ந்து கொண்டே இருந்தான். அதனால் சாரதைக்கு கர்ப்பமும் உண்டாயிற்று. அதைக்கண்ட அவ்வூரார் எல்லோரும் சாரதை சோரம்போய் கர்ப்பம் ஆகிவிட்டாள் என்று பழித்தார்கள். இதைக் கண்டு சாரதை துக்கப்பட்டாள். பிறகு பழித்தவர்கள் வாய் அழுகி அதில் புழுவுதிரும்படி பார்வதி செய்துவிட்டாள். 10 மாதம் பொறுத்து சாரதை ஒரு புத்திரனைப் பெற்றாள். அதற்கு சாரதேயன் என்று பெயர் சூட்டி மகாமகிமை பொருந்திய சிவராத்திரியன்று தாயும் பிள்ளையும் கோகர்ணத்திற்கு யாத்திரை சென் றார்கள். செல்லும் வழியில் சொப்பனத்தில் வந்த புருஷன் நேரில் வந்து சாரதையுடன் கலந்துகொண்டான்.

பிறகு கொஞ்சகாலம் சாரதையும் புருஷனும் சந்தோஷமாய் வாழ்ந்து இன்பமனுபவித்து புருஷன் இறந்துபோனான். புருஷன் இறந்ததும் உடனே சாரதை உடன்கட்டையேறி இருவரும் சிவபதமடைந்தார்கள் என்று நைமி சாரண்ய வாசிகளுக்கு சூதக முனிவர் வியாசரிடம் கேட்டுத் தெரிந்ததை சொல்லுகிறேன், என்று சொன்னார்.

இந்த சரிதை பிரமோத்திர புராணத்தில் உமாமகேசுவர விரத மகிமையும் விரதத்தின் பலனும் என்கின்ற தலைப் பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதைக் கவனிப்போம்.

இந்தக் கதையின் ஆபாசம் எவ்வளவு மோசமாயிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். ஒரு சிறு பெண்ணை ஒரு கிழவன் அந்தக் காலத்திலும் கட்டிக் கொள்ளுகின்ற வழக்கமும், தகப்பன் பணம் வாங்கிக் கொண்டு சாகப் போகும் கிழவனுக்கு தனது சிறு பெண்ணை கட்டிக் கொடுக்கும் வழக்கமும், பார்ப்பனர் களுக்குள் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் புருஷன் இறந்தவுடன் உடன்கட்டையேறாமல் பெண்ஜாதியான (சாரதை) சிறு பெண் இருந்திருக்க முடியுமா? என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு சமயம் உடன் கட்டை ஏறாமல் இருந்திருந்தாலும், ஒரு ரிஷிக்கு இந்தப்பெண் விதவை என்ற சங்கதி தெரியாமல் போகுமா? ரிஷிக்கு ஒரு சமயம் அந்தப்படி தெரியாமல் போயிருந்தாலும் ஒரு குருட்டு ரிஷி தெரியாமல் சொல்லிவிட்ட காரியம்  ஒரு விரதம் அனுஷ்டிப்பதால் கைகூடிவிடுமா? அந்தப் படி கூடுமா னால் பார்ப்பனனையும் அவன் பெண்ஜாதியையும் பார்வதி பரமசிவன்போல் எண்ணி பூசை செய்தால் பார்வதி வந்து விடுவாளா? அப்படி வருவதாயிருந்தாலும் பார்வதி நேரில் புருஷனை கொடுக்காமல் தூக்கத்தின் போது கனவில் வந்து புணர்ந்து விட்டு போகும்படி கட்டளையிடு வாளா? அப்படி கட்டளையிடுவதானாலும் கனவில் புணர்ந்ததற்கு கனவில் கர்ப்பமுண்டு பண்ணாமல் விழித்த பிறகுங்கூட அக்கர்ப்பம் இருக்கும் படி செய்வாளா? அந்தப்படித்தான் செய்தாலும் அதன் காரணத்தை பொதுஜனங்களுக்கு தெரியப்படுத்தாமல் இரகசியமாய் இருக்கச் செய்து இந்த இரகசியம் தெரியாத பொதுஜனங்கள் சாரதையின் கர்ப்பத்தைப் பற்றி சந்தேகப் பட்டால் அதற்கு பார்வதி திருப்தி அடையும் படி சமாதானம் சொல்லாமல் சந்தேகப் பட்டவர்கள் வாய் அழுகி புழுக்கள் தள்ளும்படி செய்வது யோக்கியமாகுமா? அன்றியும் கோகர்ணத்திற்கு போகும் வழியில் அந்த சொப்பனப் புருஷனை வரும்படி செய்த பார்வதியும் பரமசிவனும் பொதுஜனங்கள் சந்தேகப் படும் போது வரும்படி செய்திருக்கப்படாதா? அன்றியும் அந்தப் புருஷனும் சாவானேன்? அப்படியே காலம் வந்து செத்து இருந்தாலும் முன்னைய கிழப்புருஷனுக்கு உடன் கட்டை ஏறாத குமரி சாரதி இந்தப் புருஷனுக்கு ஏன் கிழவி ஆனபின் உடன்கட்டை ஏறினாள்?

வாசகர்களே! வேதப்புரட்டு, இதிகாசப் புரட்டு, புராணப் புரட்டு என்பதுபோல் இந்த விரதப் புரட்டும் எவ்வளவு முட்டாள்தனமானதும் அயோக்கியத்தன மானதும் சுயநல சூழ்ச்சி கொண்டதுமாய் இருக்கின்றது என்பதை நன்றாய் கவனித்துப் பாருங்கள். விரதம் என்றால் ஒரு பார்ப்பன னையும், பார்ப்பனத்தியையும் பார்வதி பரமசிவன்போல் பாவித்து, அபிஷேகம், பூஜை ஆராதனை செய்தால் விதவைகளுக்கு புருஷன் சொப்பனத்தில் வருவான் என்பது எவ்வளவு அயோக்கியத்தனமான கதை?

இப்படித்தானே இப்போதுள்ள விதவைகள் புருஷ ஆசைக்கு விரதமிருந்து சொப்பனத்தில் புருஷருடன் புணர்ந்து கொண்டிருப்பார்கள். சாரதையைப்போல் அனேக விதவைகள் இப்போதும் கர்ப்பமானாலும் பழி சொல்லுகின்றவர்கள் வாயில் பார்வதி புழுக்கள் தள்ளச் செய்யாததால்தான் அந்த விரதமிருக்கும் விதவைகளெல் லாம் கர்ப்பங்களை தாங்களாகவே அழித்து விடுகின் றார்கள் போலும். பார்ப்பன சூழ்ச்சி எவ்வளவு மோசமானது என்பதை இதிலிருந்து விரதமிருக்கும் வைதிகர்களும் விரதமிருக்கும் பெண்களும் புருஷர்களும் அறிந்து கொள்ளுங்கள். மற்ற விரதங்களைப் பற்றி பின்னால் சமயம் நேர்ந்தபோது எழுதுகிறேன்.

உதிர்ந்த மலர்கள் 
13.04.1930- குடிஅரசிலிருந்து... 

4 மனிதன் ஒரு நாளைக்கு இரண்டு தடவை மலத்தைத் தொடுகின்றான் - அதற்காக உடனே குளிப்பதில்லை - சதா ரோட்டில் மலம் எச்சில் மூத்திரம் ஆகியவைகளை மிதித்துக் கொண்டு நடக்கிறான். அதற்காகவும் உடனே குளிப்பதில்லை. நதிக்கும் குளத்திற்கும் குளிக்கப் போய் குளித்து விட்டு தண்ணீர் கொண்டுவரும் சிறீகள் ரோட்டில் மலம் எச்சில் மூத்திரம் முதலியவைகளை மிதித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்காகவும் குளிப்பதில்லை. ஆனால் ஒரு பறையரையோ ஒரு சூத்திரனையோ தொட்டு விட்டால் - அவன் வேஷ்டி மேலே பட்டு விட்டால் - அவன் தண்ணீர் குழாய்க்கு பக்கத்தில் நின்று தண்ணீர் பிடித்த ஈரத்தை மிதித்து விட்டால், உடனே குளிக்க வேண்டுமென்கிறான். இவனுக்கு சுயராஜியம் வேண்டுமாம்.

4வீதியில் மல, மூத்திரம், எச்சில் மிதித்துக்கொண்டு நடந்து, நமது வீட்டுக்கு பிச்சைக்கு வந்த பார்ப்பான், நமது பட்டுப்பாயைக் கண்டால் தாண்டிக் குதிக்கிறான் - அதைத் தொட்டால் தீட்டு என்கின்றான்.

4 பூணூல் போட்டதின் கருத்து இன்ன இன்னார்தான் படிக்கத் தகுந்தவர்கள் என்பதை காட்டுவதற்காகவும் சூத்திரன் இன்னான் என்று கண்டுபிடிப்பதற்கு ஆகவும்தான். அதனால்தான் மேலே வேஷ்டி போடுவதுகூட மரியாதைக் குறைவென்று செய்யப்பட்டி ருக்கிறது.

4புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மையென்று கருதுகின்ற வர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

4 வயிறுவளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மதஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே, பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதிகளாவார்கள்.

மூட நம்பிக்கை
15.06.1930- குடிஅரசிலிருந்து...

எப்படி பஞ்சாட்சரம் ஜெபித்தால், விபூதி பூசினால் மோட்சம் வருமென்று மூடநம்பிக்கையால் கருதிக் கொண்டு துன்பப் படுகிறோமா அதுபோலவேதான் தக்ளி சுற்றினால், உப்புக் காய்ச்சினால் விடுதலை வருமென்று மூட நம்பிக்கையால் கஷ்டப்படுகின்றோம்.

பஞ்சாட்சரத்திலும், விபூதியிலும் நமக்குள்ள மூட நம்பிக்கைதான் தக்ளியிலும், உப்புக் காய்ச்சுவதிலும் திருப்பி விட்டுவிட்டதே தவிர வேறில்லை. அதில் நமது கடுகளவு ஆராய்ச்சியாவது செய்திருப் போமானால், இதிலும் அணுவளவாவது ஆராய்ச்சி செய்யப் புத்தி புகுந்திருக்கும். பரம்பரையாய் நமக்குள்ளிருந்த மூட நம்பிக்கையே நம்மை ஆட்சி செய்து கொண்டு சிறிதும் முன்னேறவொட்டாமல் தடுக்கின்றது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
-- விடுதலை நாளேடு, 24.11.17