வெள்ளி, 4 மே, 2018

பெரியார் பாதையில் செல்லுங்கள்

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்




1957ஆம் ஆண்டு, 'பிராமணாள்' உணவு விடுதிகளுக்கு எதிராக, தந்தை பெரியார் அவர்கள் நடத்திய சாதி ஒழிப்புப் போராட்டத் தீ தமிழகத்தின் மூலை முடுக்கெல் லாம், பட்டி -- தொட்டியெல்லாம் கொழுந்துவிட்டு எரிந்த நேரம். இந்தப் பின்னணி யில் 23--.6.-1957 அன்று குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில் புரட்சிக்கவிஞர் ஆற்றிய வீர உரையின் பகுதிகள் இவை.

 

இப்போது "பார்ப்பனர் உணவு விடுதி களில் உண்ணக் கூடாது'' என்று - பெரியார் அவர்கள் சொல்கிறார்கள் என்றால் இதில் மாணவர்கள் முற்றிலும்  கலந்து கொள் ளலாம், இதில் பங்கேற்கலாம். அரசியலாரை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் மக்கள் மட்டுமே கலக்க  வேண்டும்; எந்தப் பகுதியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பெரியார் அவர்கள் கூறுகிறார்களோ அதில் கலந்துகொள்ளக் கூடாது. நம்முடைய சீர்திருத்தப் போராட் டத்திற்கு வேண்டிய கிளர்ச்சிகள் உங் களிடமே உள்ளன.  எத்தனை முயற்சிகள் எந்தெந்த முயற்சிகள் உண்டோ - அத்தனை முயற்சிகளையும் கையாள வேண்டும்.

இரண்டு தண்ணீர்ப் பானைகள் வைக் கப்பட்டு ஒன்று நமக்கு என்றும், மற்றொன்று பார்ப்பானுக்கு என்றும் கூறப்பட்டால் சும்மாவிடலாமா? இது போன்ற சின்ன தகராறுக்கெல்லாம்கூட பெரியாரிடம் சொல் லலாமா? நாமே இதற்கு முடிவுகட்ட வேண்டும்.

பெரியார் பாதையில்செல்லுங்கள்

ஆகையினால் தோழர்களே! எது அரசியல் பகுதி, எது சமூகப் பகுதி என்பதை நீங்கள் நன்கு அலசிப் பார்த்து போராட வேண்டும். இப்படிப்பட்ட சமுதாயத் துறையில் பெரியாருக்கு முப்பது ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு, நீங்கள் அவர் வழி நிற்க வேண்டும். அவர் பாதையில் செல்ல வேண்டும்.

தியாகத்தால் வளர்ந்த இயக்கம்

சிதம்பரம் பக்கம் பரதூர் என்ற ஊரிலே ராஜன் என்ற வாலிபர் இருந்தார். இந்த இயக்கத்திலே ஆழ்ந்த பற்றுள்ளவர். அந்த ஊரிலேயே நம் இயக்கத்தின் கூட்டம் ஒன்றைப் போட்டார். அதற்கு அந்த ஊரில் உள்ளவர்கள் என்ன பரிசு கொடுத்தார்கள் தெரியுமா? நீங்கள், சற்று கவனமாகக் கேளுங்கள்; அவருடைய மனைவியைத் தூக்கிச் சென்றனர். அவரையும் அடித்து ஊரை விட்டு விரட்டினர். அவருடைய வீட்டைப் பிடுங்கிக் கொண்டு, அவரு டையது அல்ல  என்று சொல்லி விட்டனர். தாய், பாட்டி முதலியோரை ஊருக்கு அனுப்பி விட்டனர். கடைசியிலே மானத் திற்கு இழுக்கு வந்ததை எண்ணி எண்ணி ஏங்கிய அந்த தமிழன் தஞ்சைக்கருகில் உள்ள கரந்தை கல்லூரிக்குப் பக்கத்தில் தூக்கிட்டுக் கொண்டு மாண்டார். அதைப் போல பல பல உத்தமர்கள் தியாகம் செய்து வளர்த்த இயக்கம்.

எதிரியின் பெரும் சதி சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளி யில் ஒரு சமயம் ஆண்டுவிழா.சகஜானந்தா வுக்கும், சிதம்பரம் தீட்சதர்களுக்கும் பகை நிறைய உண்டு. சிதம்பரம் தண்டபாணிப் பிள்ளை பெரியார் வந்து ஆண்டு விழா விஸ்கலந்து கொள்ள பெரிதும் விரும்பினார். பெரியார் அவர்களும் வர ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் சனாதனிகளும், தீட்சதர்களும் எதிர்ப்பைப் பலமாகக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

அன்றைய தினம் கலகம் செய்ய ஆயி ரக்கணக்கில் திரண்டுவிட்டனர். ஒவ்வொரு வனிடமும் கல், தடி, கத்தி போன்ற ஆயுதங்கள் உள்ளன. அன்று பெரியாரை ஒழித்து விடுவது என்றே திட்டமிட்டு விட்டனர். நிலைமை மிக மிக பயங்கரமாக இருந்தது.

நாங்கள் பத்து பேர்கள்  போயிருந்தோம். இந்த நிலையைப் பார்த்து விட்டு பயந்தே போனோம். உடனே நாங்கள் ரயிலடிக்குப் போய் பெரியார் வந்ததும் திரும்பப் போகச் சொல்லி விடுவது என்று முடிவு கட்டிக் கொண்டு ரயிலடிக்குப் போனோம்; பெரியார் வராமலேயே இருந்தால் நல்லது என்று எண்ணினோம். பெரியாரின் ஆண்மையும் வீரமும்

ஆனால் வருகிறேன் என்று கூறியிருந்த   வண்டியில் வந்திறங்கினார்.  உள்ள நிலை மையைக் கூறினோம். கேட்டுக்கொண்டே 'விடு விடு', என்று ஊருக்குள் போனார். போகவேண்டாம் 'ஆபத்து ஆபத்து' என்று கூறக் கூற கேட்டுக் கொண்டே  போனார். எந்த வழியில் போகக் கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியில் போனார். போய்  'டக்'  என்று நின்றார். அதுவும்  எந்த  இடம்? எந்த இடத்தில் நிற்கக் கூடாது என்று நினைத்துப் பயந்தோமோ அதே இடம்; போலிகளின் கூட்டம் எதிர்ப்பை ஆரம் பித்து விட்டது. போலிகளின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்துவிட்டன. 'இன்று என்ன செய்யப் போகிறோம்?' என்று எங்கள்  கூட்டில் உயிர் இல்லை.

எதிரிகளின் மனதையும் ஈர்த்த பேச்சு இந்த நிலையில் பேசவும்  ஆரம்பித்து விட்டார். எப்படிப்பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும்  முறையில், அழகாக உள்ளம் கவரும் விதத்தில் பேசினார். "உங்கள் பையன் ஒருவன் படித்திருக் கிறான்; பார்ப்பனரின் பையன் ஒருவன் படித்திருக்கிறான், நீங்கள் என்ன விரும்பு வீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றுதானே? ஆனால் இன்றைய பார்ப்பன ஆதிக்கத்தில் யாருக் குக் கிடைக்கும்? இதைத்தானே கூறுகிறேன்" என்றார்.  உயர்த்திய கரங்கள் தாழ்ந்தன. அனைவரின் மனமும் சிந்திக்க ஆரம் பித்தன; "கடைசியில் மூட நம்பிக்கையின் பிறப்பிடமான இந்த ஊர் ஆலயத்திலே உள்ள நடராசன் சிலையைக் கொண்டு வந்து திருப்பிப்போட்டு வேட்டி துவைப்பேன்" என்றார் எதிர்த்த கரங்கள் திரும்பி தட்டு தலின் மூலம் ஓசையைக் கிளப்பின. அன்று சாகடிக்கப்படவிருந்த பெரியார், 'நடராஜன் கோவில் துவம்சமாக்கப்பட வேண்டும்' என்றும்,  அன்றே ஆக வேண்டு மென்றும் பெரியார் கட்டளையிட்டிருப் பாரேயானால் ஒரு நொடியிலே ஆகி யிருக்கும். அப்படிப் பெரியார் அவர்கள் பாடுபட்டு முன்னுக்குக் கொண்டு வந்த இயக்கம். எந்த இயக்கம் நிலையானது - எந்த இயக்கம்  மக்களுக்கு உண்மையாகப் பாடுபடுவது - எந்த இயக்கம் நம் சமுதாயம் முன்னேற உண்மையாக உழைக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் சேர வேண்டும்.  தமிழ் மாணவர்கள் எல்லோரும் ஒற்று மையாக இருக்க வேண்டும். பார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது. எஞ்ஞான்றும் விழிப் போடு இருக்கவேண்டும். பெரியார் அவர்கள் சொல்கின்ற அறிவுரைகளை அன்றாடம் கடைப் பிடிக்கவேண்டும்.

- விடுதலை நாளேடு, 29.4.18

செவ்வாய், 1 மே, 2018

சமய நெறி உணர்த்துவது சன்மார்க்கமா? துன்மார்க்கமா?




22.04.1928- குடிஅரசிலிருந்து...

அம்பலூர் சமரச சன்மார்க்க சங்கத்தாரின்

வரவேற்புக்கு நன்றியுரை

அக்கிராசனாதிபதியே! சமரச சன்மார்க்க சங்கத்தினர்களே! மற்றும் இங்கு கூடியிருக்கும் அன்பர்களே!

இன்று சமரச சன்மார்க்க சங்க சார்பாக வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத் தில் கண்ட புகழுரை களுக்கு நான் உண்மையிலேயே ஒரு சிறிதும் பொருத்த மில்லாதவனாயிருந்த போதிலும் அதன் போக்கானது எனது தொண்டின் தாத்பர்யத் தையும் போக்கையும் தாங்கள் மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு என்னை புகழ்வதாயிருப்பதால் மிக்க நன்றியறிதலோடும் மகிழ்ச்சியோடும் இவ்வுபசாரப் பத்திரத்தை ஏற்றுக்கொள்ளுகின்றேன்.

எனது தொண்டைப் பற்றி பலர் ஆதரவளித்தாலும் ஒரு சிலர் அபிப்பிராய பேதப்படுவதையும் ஏதோ முழுகிப் போனது போல் கவலைப்படுவதையும் பார்க்கும் போது எனக்கே சிற்சில சமயங்களில் நாம் ஏதாவது தப்பான வழியில் போகின்றோமோ என்று தோன்றி கலக்கமுறுவதுமுண்டு. இந்த நிலையில் தங்கள் உபசாரப் பத்திரமானது இனி உனக்கு அப்பேர்ப்பட்ட கலக்கங்கள் கண்டிப்பாய் வேண்டி யதில்லை. உனது கருத்துப்படியே உனதுதொண்டைத் தீவிரமாக செய்து கொண்டுபோ, நாங்கள் உனக்கு பின் உதவியாய் இருக்கின்றோம் என்று எனக்கு ஊக்கத்தை மூட்டி எனது தொண்டை முன்னிலும் அதிக முயற்சியுடன் செய்ய பிடரியைப் பிடித்துத் தள்ளுவது போல் இருக்கின்றபடியால் நான் அதை மகிழ்ச்சியுடனும் நன்றியறிதலுடனும் ஏற்றுக் கொள்ளுகிறேன்.

நிற்க, அன்பர்களே இந்த சமயத்தில் சமரச சன்மார்க்க சங்கம் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகின்றேன். அது ஒரு சமயம் உங்கள் மனத்திற்குக் கசப்பாயிருந்தாலும் இருக் கலாம். அன்றியும் என்னடா இவன் நம்மிடத்தில் உபசாரப் பத்திரம் பெற்றுக் கொண்டு நம்மையே உடைச்சல் விடுகிறான் ஏன் இவனுக்கு உபசாரப் பத்திரம் கொடுத்தோம் என்பதாகத் தோன்றினாலும் தோன்றலாம். ஆன போதிலும் சிலர் சமரச சன்மார்க்க சங்கம் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டே சமரசத்திற்குப் பதிலாக ஏற்றத் தாழ்வும் சன்மார்க்கத் திற்குப் பதிலாக துன்மார்க்கமுமே விளையத்தக்க முறையில் நடந்து வருகின்றார்கள். சுருங்கக் கூறின் சமரச சன்மார்க்க மென்பது அனுபவத்தில் பிறரை ஏமாற்றி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வதற்கும் தங்கள் சமயத்தை உயர்த்திக் கொள்வதற்கும் பயன் படுத்தப்படுகின்ற ஆயுதமே ஒழிய வேறில்லை என்றே சொல்லலாம். பொதுவாக ஒவ்வொரு மதக் காரரும் உட்சமயக்காரரும் தங்கள் தங்கள் மதம், சமயம் ஆகியவைகளை சமரச சன்மார்க்கக் கொள்கை கொண்டதென்றுதான் சொல்லுகின்றார்கள். ஆனால் அவரவர்கள் நடை, உடை பாவனை உணர்ச்சி முதலியவைகள் வேறாகவே இருந்து வருகின்றன. ஒவ்வொரு மார்க்கக்காரரும் தமது கொள்கையை ஒப்புக்கொள்ளாத ஒருவனை துன்மார்க்கியாகவே கருதுகிறார். மகமதிய மதம் சமரச சன்மார்க்கத் தன்மை பொருந்தியதானாலும் மற்ற சமயக் கடவுள்களும் கொள்கைகளும் அவர் களுக்கு சிறிதும் சகிக்க முடியாததாகவே இருக்கின்றது. கிறிஸ்தவ மதம் சமரச சன்மார்க்கக் கொள்கையு டையதுதான் என்று சொல்லப்பட்டாலும் அது வேறெந்த மதத்திலும் மோட்சமடைய வழி கிடையாது என்றும் மற்ற மதஸ்தர்கள் எல்லாம் அஞ்ஞானிகள் என்றும் சொல்லக் கூடியதாக இருக்கின்றது. இந்து மதமும் அதன் ஒவ்வொரு உட்பிரிவும் சமரச சன் மார்க்கம் கொண்டதென்றே பறையடிக்கப் படுகின்றது.

இதைப் போல ஏற்றத்தாழ்வுகளும் துன்மார்க்கங் களும் கொண்ட மதம் இது சமயம் உலகில் வேறு ஒன்றும் இருப்பதாகச் சொல்ல முடியாது. வைண வத்திற்கும் சைவத்திற்கும் அதனதன் கடவுள் களுக்கும் உள்ள பேதங்களும் விரோதங்களும் சொல்லி முடியாது. ஒவ்வொரு நாளும் இதில் உள்ள உயிர்கொலைகள் கணக்கிலடங்காது. குடியும், விபசாரமும் ஏட்டிலடங்கா. நிற்க, சகலருக்கும் பொதுவாகவே சன்மார்க்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையை உடையது அல்லவென்றே சொல்லுவேன். ஒருவருக்கு சன்மார்க்கமாயிருப்பது மற்றொருவருக்கு துன்மார்க்கமாகவே காணப்படு கின்றது.

சிலருக்கு, குழந்தைகளுக்குக் கலியாணம் செய்வது சன்மார்க்கம். சிலருக்கு பக்குவமான ஆண் பெண்கள் இருவருக்கும் அவரவர்கள் சம்மதப்படி கலியாணம் செய்விப்பது சன்மார்க்கம். சிலருக்கு மனிதனை மனிதன் தொடுவது துன்மார்க்கம். சிலருக்கு மனிதனுக்கு மனிதன் தொடுவதினால் குற்றமில்லை என்று சொல்வது சன்மார்க்கம். சிற்றப்பன் மகனை மணந்து கொள்வது சிலருக்குச் சன்மார்க்கம், சிலருக்குச் துன்மார்க்கம். அத்தை மகளை மணந்து கொள்வது சிலருக்குச் சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம். மாடு தின்பது சிலருக்குச் சன்மார்க்கம் சிலருக்குத் துன்மார்க்கம் கடவுளுக்குக் கண்ணு, மூக்கு, கை, கால், பெயர், பெண்டு, பிள்ளை முதலியவைகள் வைத்து வணங்குவது சிலருக்குச் சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம். காலும் கையும் கெட்டியாயிருந்து நன்றாய் உழைத்து சாப்பிடக்கூடிய  தடியர்களுக்குச் சாப்பாடு போடுவது சிலருக்கு சன்மார்க்கம்; சிலருக்குத் துன்மார்க்கம் ஏழை எளிய வர்கள், சரீர ஊனமுள்ள வர்கள், உழைத்துச் சாப்பிட சக்தியற்றவர்கள் ஆகியோருக்குச் சாப்பாடு போடுவது சிலருக்குச் சன்மார்க்கம், சிலருக்குத் துன்மார்க்கம்.

எனவே இம்மாதிரி ஒருவருக்குச் சன்மார்க்கமாயிருப்பது மற்றவருக்குத் துன்மார்க்கமாயிருப்பதை நித்திய வாழ்வில் தினம் தினம் எத்தனையோ காண்கின்றோம். ஒரு மார்க்கத்தின் முட்டாள்தனத் தையும், புரட்டுகளையும் வெளியிலெடுத்துச் சொன்னால் எப்பேர்ப்பட்ட சமரச சன்மார்க்கம் என்கிறவனும் பதில் சொல்ல முடியாவிட்டாலும் காய்ந்து விழுந்து மக்களை ஏய்க்கப் பார்க்கின் றானேயொழிய தனது மார்க்கம். உண்மையில் யோக்கியமானதா என்பதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. எனவே உலகத்தில் உள்ள எத்தனையோ புரட்டு மதங்களில் சமரச சன்மார்க்கம் என்பதும் ஒன்றேயொழிய உண்மையில் எல்லோருக்கும் ஏற்ற சமரசத்தையும் சன்மார்க்கத்தையும் கொண்டது எதுவும் இல்லை என்றே சொல்வேன். உங்கள் சமரச சன்மார்க்க சங்கம் இம்மாதிரியான குற்றங்களில் சிக்காமலும் மூட நம்பிக்கை குருட்டு பழக்க வழக்கங் களாகியவைகளுக்கு அடிமையாகா மலும் புராண குப்பைகளுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் ஆளாகாமலும் மக்களிடத்தில் காட்டும், அன்பும் கருணையுமே பிரதானமாகக் கொண்டு மனிதத் தன்மையுடன் நடைபெறுமென்று நினைப்பதுடன் அம்மாதிரியே நீடூழி காலம் நடைபெற்று வர வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன்.

- விடுதலை நாளேடு, 27.4.18

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

இந்துமத தத்துவம் 19.08.1928 - குடிஅரசிலிருந்து...

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம்.

மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு பார்ப் பனர்களே காரணம் என்று தமது இந்தியத்தாய் என்ற புத்தகத்தில் எழுதிய தற்குத் தேசிய தலைவர்களான திரு. சத்தியமூர்த்தி பனகல் ராஜாவைச் சமுகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத் துரோகி என்ற பொருள்பட கூறினார். மற்றொரு தேசியத் தலைவர் மிஸ். மேயோவைக் குப்பைக்காரி என்று கூறினார்.

இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று கேட்கின்றோம்.

சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை அறிவு பாஷை என்று சொல்லி அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ இதுவரை எந்தத் தேசியத் தலைவர்கள் முன் வந்தார்கள் என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்குப் பயந்து கொண்டு அவர்கள் காலுக்கு முத்தமிட்டு வரும் தேசிய வீரமுழக்கம் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று கேட்கின்றோம்.

செத்த பாம்பை ஆட்டுவது போல், செத்துச் சுட்டு சாம்பலாக்கி ஆற்றில் கரைத்து விட்டுக் காடாற்றிக் கரு மாதிரியும் நடந்து விட்ட சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி சூழ்ச்சியும் தந்திரமும் பார்ப்பன ஆதிக்கமும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் பிழைப்பும் மார்க்கமும் நிறைந்த தேசிய திட்டத்தைப் பற்றியும் கூக்குரலிட்டு கூலி வாங்குகின்றார்களேயொழிய இந்த விஷயத்தில் யாராவது கவலை செலுத்தி வருகிறார்களா என்று கேட்கின்றோம்.

வேதம்தான் சூத்திரர்கள் என்கின்ற வேசி மகனும், பார்ப்பனர் தாசி மகனுமாகிய பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்றால் வியாகரணம் என்கின்றதான பொதுவான இலக்கணமும் கூட பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்று சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.

எந்தப்படிப்பைப் பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாதோ அந்தப் படிப்புக்குப் பார்ப்பனரல்லாதோர் பணத்தை உபயோகப் படுத்தலாமா என்று கேட்பதுடன் சற்றாவது மானமோ, வெட்கமோ, சுயமரி யாதையோ, சுத்த ரத்த ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம் செய்யமுடியுமா என்று கேட்கின்றோம்.

இனியாவது சர்க்காரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ அல்லது பொது ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசித்து இந்த மாதிரி பொது நன்மைக்கல்லாத தனிப்பட்டவர்களின் நன்மைக்கு ஏற்றதுமான காரியங் களுக்குப் பொதுமக்களின் பணத்தை உபயோகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளக் கூடுமா என்று கேட்கின்றதுடன் சுயமரியாதை என்றால் என்ன என்று விழிப் பதுடன் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற விதண்டா வாதிகளுக்கு இதிலிருந்தாவது சுயமரியாதை என்பது இன்னதென்று புரியுமா என்று கேட்கின்றோம்.

சாமியும், சமயமும், சமயாச்சாரிகளும்
01.07.1928- குடிஅரசிலிருந்து... 

தேவர்கள் என்றும், தெய்வங்கள் என்றும், அவதார மென்றும் ரூபமென்றும், அதற்காக மதமென் றும், சமயமென்றும், அதற்காக மதாச்சாரியார்கள் என்றும் அதற்குச் சமயாச்சாரியர்கள் என்றும்  கட்டியழுப வர்கள் ஒன்று வயிற்றுப் பிழைப்புப் புரட்டர்களாயிருக்க வேண்டும் அல்லது பகுத்தறிவில்லாதவர் களாகவாவது இருக்கவேணடும் என்பதே நமது அபிப்பிராயம் என்பதாகப் பல தடவைகளில் வெளிப் படுத்தி இருக்கின்றோம்.

அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ பிரம்மா என்றோ, சொல்லப்படுவதையும் ஒரு சாமி என்றோ அல்லது ஒரு ஆசாமி என்றோ அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் ஞானமற்றவர்களின் கொள்கை யென்றே சொல்லுவோம்.

உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்வு, அழிவு என்பவைகளான மூவகைத் தன்மை களையும், மேற்படி சாமிகளோ ஆசாமிகளோ ஒவ் வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்து கின்றான் என்றோ அல்லது ஒவ்வொரு தன்மைக்கும் ஒவ்வொரு ஆசாமி பொறுப் பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் விசார ஞான மற்றவர்கள் என்றே சொல்லுவோம்.
மற்றபடி மேல் கண்ட ஒவ்வொரு தன்மைக்கு மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அது ஒரு உருவ மல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மை யையும் அத் தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத் தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றிற்று. தானாக வாழ்ந்தது; தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும், அவ்வியற்கைக்குத்தான், கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின்றோம் என்பதாகவும் மற்றும் இவ்வியற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்க வேண்டுமே என்றும், அந்த காரணத்திற்கோ சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என்கின்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதாக வும் சொல்லிக் கொண்டு மாத்திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது அவ்வளவாக தகராறு இல்லை என்று சொல்லிக் கொள்ளுகின்றோம்.

ஆனால், அந்தக் கடவுளுக்குக் கண், மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண்-பெண் தன்மை, பெண் ஜாதி புருஷன், குழந்தை குட்டி, தாய் தகப்பன் முதலியவைகளைக் கற்பித்து, அதனிடத்தில் பக்தி செய்ய வேண்டும் எனறும், அதற்குக் கோவில்கட்டி கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பூசை செய்ய வேண்டும் என்றும், அச்சாமிகளுக்குக் கல் யாணம் முதலியவைகள் செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார். இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளையாடல்கள் முதலியவைகள் செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்ய வேண்டும்  என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல் களைப்பற்றியும் பாட வேண்டும் என்றும், அப்பாடல்களை வேதமாக திருமுறையாக பிரபந்தமாக கடவுள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும், அப்பாடல் களைப் பாடினவர்களைச் சமயாச்சாரியார்களாக, ஆழ்வார்களாக, சமயக்குரவர்களாக, நாயன்மார் களாக பல அற்புதங்கள் செய்தவர்களாகக் கொள்ள வேண்டும் என்றும், இது போன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறை வேற்று வார்கள் என்றும், மற்றும் நாம் செய்த, செய்கின்ற, செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத்தனங்களையும் கொடுமை களையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவைகளான மூட நம்பிக்கையும் வயிற்றுப் பிழைப்புச் சுயநலப்பிரச் சாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் நமது கவலை; ஏனெனில் இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும் மற்ற நாட்டார்கள்போல நம்நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்பட்டு மற்ற நாட்டார்களைப் போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்ற மடையாமல் இருப்பதற்கும், அன்னிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பமுடியாமல் வைத்தப் பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் இம்மூடநம்பிக்கையும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரச்சாரமும், இவைகளினால் ஏற்பட்டக் கண்மூடி வழக்கங்களும் செலவுகளுமேதான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கிறோம்.

நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும் ஒருவரை ஒருவர் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொடுமைப் படுத்தி ஒற்றுமை இல்லாமல் செய்திருப் பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படாமல் பாழாவ தற்கும், மக்களின் அறிவு வளர்ச்சிக் கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும் சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் மேல் கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும் அதன் சமயமும் சமயாச் சாரியார்கள் என்பவர்களும் அவர்களது பாடல்களும் நெறிகளுமே முக்கியக் கார ணம் என்பதைத் தூக்கு மேடையிலிருந்தும் சொல்லத் தயாராய் இருக்கின்றோம்.

நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம்நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திதற்கும், அவற்றின் கல் யாணம் முதலிய உற்சவத்திற்கும் பஜனை முதலிய காலட்சேபத்திற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங் களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக்கும், இக்கடவுள்களின் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள்களைப் பற்றிப் பாடின பாட்டுகளையும், அச்சடித்து விற்கும் புத்தகங் களை வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக்காகச் செலவாகும் பொருள்களிலும், நேரங்களிலும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக் கொண்டு வருகின்றது என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல் மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ, செலவாக்கப்பட்டு வருமானால் நம் நாட்டில் மாத்திரம் வாரம் லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு அன்னிய நாட்டுக்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பது ஏற்படுமா? தீண்டக்கூடாத - நெருங்கக்கூடாத - பார்க்கக்கூடாத மக்கள் என்போர்கள் கோடிக்கணக்காய் பூச்சி, புழு, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடியுமா? 100-க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களை சண்டாளர், மிலேச்சர் சூத்திரர் வேசி மக்கள், தாசிமக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக் கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவது போல் உறிஞ்சிக் கொண்டும் நம்மையும், நம் நாட்டையும் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்துகொண்டும் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். நமக்குக் கல்வி இல்லாததற்குக் சர்க்கார் மீது குற்றம் சொல்லுவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும் சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றியாராவது கவலை கொண்டிருக்கின்றோமோ என்று கேட்கின்றோம்.

சீர்திருத்தமும், சுயமரியாதையும் சட்டம் கொண்டு வந்து, ஓட்டு வாங்கி நிறைவேற்றிப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். 
-தந்தை பெரியார்
- விடுதலை நாளேடு, 20.4.18