வியாழன், 14 பிப்ரவரி, 2019

தமிழ் இசைக் கிளர்ச்சி



தந்தை பெரியார்


தமிழ் இசை முயற்சி அல்லது கிளர்ச்சி என்றால் என்ன? தமிழ் நாட்டில் தமிழர்கள் இடையில் இசைத் தொழிலில் வாழ்க்கை நடத்தவோ அல்லது பொருள் திரட்ட அதை ஒரு வியாபார முறையாகவோ கொண்டுள்ள இசைத் தொழிலாளி அல்லது இசை வியாபாரியை இந்த நாட்டானும், பொருள் கொடுப்பவனும், இசை (சரக்கை)யை அனுபவிப்பவனுமானவன் “இசை என் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் இருக்க வேண்டும்’’ என்று சொல்லி விரும்புவதே ஆகும். இதில் எவ்வித விவாதமோ வெறுப்போ ஏற்பட சிறிதும் இடமில்லை. இந்த முயற்சியும் கிளர்ச்சியும் இத்தனை நாள் பொறுத்து ஏற்பட்டதேன் என்பதுதான் அதிசயிக்கத்தக்கதாகும். அன்றியும் “எங்களுக்கு இப்படிப்பட்ட இசைச் சரக்குத்தான் இருக்க வேண்டும்’’ என்று கொள்வோரும் நுகர்வோரும் கேட்டால் அதை தர்க்கித்து “நீ இதைத்தான் கொள்ள வேண்டும்’’ என்று சொல்லுவது இசைப் பிழைப்பாரின் ஆதிக்கத்தையும், இசை வியாபாரியின் ஆதிக்கத்தையும், கொள்வோரின் இழிதன்மையையும் வலிவற்ற, மானமற்ற, தன்மையையும் காட்டும் அறிகுறியாகும்.

சுருக்கமாகச் சொன்னால் தமிழன் தான் நுகரும் இசையை தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதை, தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு என்கிறான். இதை யார்தான் ஆகட்டும் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும் என்று கேட்கிறேன்! அதிலும் தமிழன் இப்படிக் கேட்டதை தமிழனால்  தமிழன் அல்லாதவன் என்ற கருதப்பட்டவன் ஏன் மறுக்க வேண்டும்? இது மிகமிக அதிசயமானதும் தமிழனால் மிகமிக வருந்தத்தக்கதுமாகும். தமிழன் தமிழ் மக்கள் தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். பணம் கொடுப்பவன் தனக்கு தமிழ்ப்பாட்டு பாடப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறான். பாட்டுக் கேட்பவன் தமிழில் பாட்டுப் பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாத தோழர்கள் கே. சீனிவாசனும், சி.ஆர். சீனிவாசனும், சர். சி. பி. இராமசாமியும், சர்.இராதாகிருஷ்ணனும், டி.டி. கிருஷ்ணமாச்சாரியும் அவர்கள் இனத்தாரும், வெங்கிடு சுப்பராவும் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமை உடையவர்கள் என்று கேட்கின்றேன்.

தமிழன் காதுக்கும் மனதிற்கும் வேண்டிய உணவுக்கு இந்த தமிழர் அல்லாதவர் என்று கருதப்பட்டவர்கள் பக்குவமும், நோட்டமும், சுவையும் சொல்ல வருவது அவர்களது அதிகப் பிரவேசத்தனத்தையும், அகம்பாவத்தையும் தமிழர்களை இழிவாய்க் கருதி இருக்கும் சிறு குணத்தையும் காட்டுவதல்லாமல் அதற்கு வேறு பெயர் என்ன சொல்லக் கூடும். (இந்தப் பெயர்களை பெரியார் யுனிவர்சிட்டி சொற்பொழிவின்போது குறிப்பிடவில்லை. தமிழர் அல்லாதவர்கள் என்பதற்கு இவர்களை நினைத்துக் கொண்டுதான் சொன்னார் _- நிருபர்).

 

“தமிழன் அந்நிய மொழியைக் கற்க வேண்டும்’’ என்று சொல்லுவது தேசாபிமானமும்,

நாட்டு முற்போக்கு இயல் கலை அபிவிருத்தியும் ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத - புரியாத மொழியில் தமிழன் பாட்டு கேட்க வேண்டும். இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம்.

 

“தமிழர் என்றும், தமிழர் அல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது’’ என்பதாக தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே “தமிழில் பாட வேண்டும் என்பது பொதுநலத்துக்குக் கேடு; கலைக்குக் கேடு; கலைநலத்துக்குக் கேடு’’ என்று சொல்ல வந்தால் இவர்கள் உண்மையில் தமிழர் - தமிழர் அல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்வார்களா? நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா? என்று கேட்கிறேன்.

அன்றியும் இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடுமா? தமிழில் பாடினால் இசை கெட்டுப் போகும் என்றால் மேற்கூறிய தமிழர் அல்லாத தோழர்களைவிட இராஜா சர். அண்ணாமலை செட்டியார், சர். சண்முகம் செட்டியார் போன்றவர்கள் குறைந்த அளவு கலை அறிவோ, பொது அறிவோ உடையவர்கள் என்பது இவர்கள் எண்ணமா என்று கேட்கிறேன்.

காது, கண், மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும் எல்லோருக்கும் ஒன்று போல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

தமிழில் பாடு என்றால் சிலர், அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே தமிழ் இசை இயக்கம் வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக்கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆக வேண்டியதாய் விட்டது. இத்தனைப் பெரியவர்கள் எதிர்ப்பும், தமிழர் அல்லாதவர்களின் பத்திரிகைகளின் எதிர்ப்பும் ஏற்பட்ட பிறகேதான் இது ஓர் இயக்கமாக விளங்க வேண்டியதாயும், சில இடங்களில் பாட்டுப் பிழைப்புக்காரர்களை நிர்ப்பந்தப்படுத்தி, பயமுறுத்தி தமிழில் பாடச் செய்ய வேண்டியதாயும், பாட்டுப் பிழைப்புக்காரர்கள் சில இடங்களுக்குப் போகும் போது பந்தோபஸ்துக்கு ஆட்களைக் கூட்டிக் கொண்டு போக வேண்டியதாகவும் ஏற்பட்டு விட்டது. பாட்டுப் பிழைப்புக்காரரான சிலர் மீது தமிழர்கட்கு வெறுப்புக்கூட ஏற்படும் படியாக நேர்ந்துவிட்டது. கூடிய சீக்கிரத்தில் இசைக்கலை வியாபாரம் தமிழர்கள் அல்லாதவர்களை விட்டு விலகினாலும் விலகிவிடலாம். அல்லது அவர்களே அதை விட்டு விலகினாலும் விலகி விட நேரிடலாம் என்றுகூடக் கருத வேண்டியதும் ஆகிவிட்டது.

பொதுவாகச் சொன்னால் இந்த நிலையானது நாட்டின் நலத்திற்கும், ஒற்றுமைக்கும் ஏற்றதல்ல என்றே சொல்லுவேன். இன்று தமிழனின் நிலைமை “தமிழன் அந்நிய மொழியைக் கற்க வேண்டும்’’ என்று சொல்லுவது தேசாபிமானமும், நாட்டு முற்போக்கு இயல் கலை அபிவிருத்தியும் ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத - புரியாத மொழியில் தமிழன் பாட்டு கேட்க வேண்டும். இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம். மற்றும் தமிழனுக்குத் தமிழ் வேண்டும், தமிழ் இசை வேண்டும் என்பது தேசத் துரோகமாகவும் கலைத் துரோகம், வகுப்பு துவேஷம் என்பதாகவும் ஆகிவிடுகிறது. காரணம், பெண்களுக்கு ஆண்கள் ஒழுக்க நூலும் கற்பு நூலும் எழுதுவதுபோல் தமிழனுக்குத் தமிழன் அல்லாதவன் தமிழர்களை அடிமை கொண்டு அடக்கியாண்டு சுரண்டிக் கொண்டிருப்பவன் தேசாபிமானம், மொழி அபிமானம், கலை அபிமானம் முதலியவை கற்பிப்பவனாய்ப் போய்விட்டதே ஆகும்.)

தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வளர்ச்சி அடைய வேண்டுமானால் தமிழன் காரியத்தில் தமிழன் அல்லாதவன் அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதைவேறு எதை ஒழித்தாவது ஒழிக்க வேண்டும். அறிஞர்களே நமக்கு பாட்டுக் கேட்கக்கூடத் தெரியாது என்றும், நம் மொழியானது பாட்டு இசைக்கக்கூட பயன்படாது என்று சொன்னால் இந்த இழிமொழி நம் உயிரைப் போயல்லவா கவ்வுகிறதாய் இருக்கிறது என்று மிக்க வேதனையோடு கூறுகிறேன். தமிழ் துரோகத்தால் வாழ வேண்டியவனும், வள்ளுவர் சொன்னதுபோல் “குலத்திலேயே அய்யப்பட’’ வேண்டியவனுமான தமிழ் மகன்களுக்கு இது எப்படி இருந்தாலும், அவன்களது வாழ்வும் நம் எதிரிகளின் புகழுமே அவன்களுக்கு அணியாகவும், அலங்காரமாகவும், முக்கிய லட்சியமாகவும் இருக்கும். ஏன், நம் எதிரிகளுக்கு இருக்கும் செல்வாக்கால் நம்மில் துரோகிகள் பெருகிவிட்டார்கள். இன்னும் பெருகுவார்கள் என்பதும் உண்மைதான். ஏனெனில் இம்மானங் கெட்ட தமிழ் மக்கள் பலர் இப்படிப்பட்ட இனத் துரோகிகளை அறியாமையாலும், சுயநலத்துக்கு ஆகவும் ஆதரிக்கிறார்கள் என்பதை நாம் பிரத்தியட்சத்தில் காண்கிறோம். ஆனால் நாம் இப்படிப்பட்டவர் களையும்தான் முதலில் நன்றாய் வெறுக்க வேண்டும். அவர்களைத் தமிழர் சமுதாயத்திலிருந்து ஒதுக்கித்தள்ள வேண்டும்.

எப்படியோ ஓர் அளவில் நம் எதிரிகளின் எதிர்ப்பையும், நம் இனத் துரோகிகளின் சதிச் செயலையும் தாண்டித் தமிழிசை வெற்றி வழியில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு நம் வள்ளல் ராஜா சர். அண்ணாமலையாரும், நம் அறிஞர் சர்.சண்முகனாரும் ஓர் அளவுக்குப் பெரும் காரணஸ்தராவார்கள். அவர்களுக்குத் தமிழ் மக்கள் நன்றி என்றும் உரித்தாகுக. ஆனால் இனி தமிழிசைக் கிளர்ச்சி அடுத்தாற்போல் செய்ய வேண்டியது என்ன? என்பது யோசிக்கத் தக்கது.

தந்தை பெரியார் அவர்களின் இந்த கருத்து திராவிடர் கழக மேடைகளில் தொடர்ந்து எதிரொளித்து ஆங்காங்கே இசை விழாக்களில் ரசிகர்களிடையே புதிய கிளர்ச்சிகள் தோன்றின.

பின்னர், தமிழிசை இயக்கம் வந்தாலும் அதன் போக்கு எவ்வாறு அமையவேண்டும் என்று தந்தை பெரியார் விளக்கினார்.

இனி என்ன செய்ய வேண்டும்?

தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம். எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டும் என்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ‘கந்தத்தைக்’ கந்தபுராணம் என்றும், கிருஷ்ணனை கிருட்டினன் என்றும், ‘ஹோம் நமக’ என்பதை, ‘ஓம் நமோ’ என்றும், ‘நரசிம் ஹ மூர்த்தி’ என்பதை ‘சிங்கமுகக் கடவுள்’ என்றும் ‘தசகண்ட இராவணன்’ என்பதை ‘பத்துத் தலை இருட்டுத் தன்மையன்’ என்றும் மொழி பெயர்த்துக்கொண்டு

வணங்கி, நம்பி திருப்தி அடையவா? என்று கேட்கிறேன்.

- ‘குடிஅரசு’, சொற்பொழிவு - 26.02.1944

 -  உண்மை இதழ், 1- 15.1.19

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

வினா - விடை

வினா:- ஆண் விபசாரர்கள் வீபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் தங்கள் விபசாரத்திற்கு என் செய்வார்கள்.

விடை:- அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட வேண்டிய தில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்ய வேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென் றால் காமதேனு, கற்பக விருட்சம் கேட்ட தெல்லாம் கொடுத்துவிடும்.

- விடுதலை நாளேடு, 9.2.19

சும்மா சொன்னேன்./ கடவுள் இருந்தால்

16.11.1930 - குடிஅரசிலிருந்து..


வினா:- கடவுள் ஏன் காண முடியாதவராயிருக்கிறார் தெரியுமோ?

விடை:- அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார் கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக் குமென்றுதான். என்ன அக்கிரமம் என்றா கேட்கின்றீர்கள். மூட்டை, கொசு இரண்டையும் அவர் உற் பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போராதா?

 


கடவுள் இருந்தால்


09.11.1930- குடிஅரசிலிருந்து...


சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார் அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவை இல்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப் புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதை பார்க்கின்றோம். ஆனால் கடவுள் அனுகிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதை பார்க்கின்றோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏறுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்கு மாறாய நடந்து போட்டி போடுகிறாரா அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

-  விடுதலை நாளேடு, 8.2.19

கடவுள் கருணை - சித்திரபுத்திரன் -



16.11.1930 - குடிஅரசிலிருந்து..


இந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூகம்பத்தால் கடவுள் தன்னடி சோதிக்குச் சேர்த்துக் கொண்ட மக்கள் கணக்கு.

பெய்சிங் (சீனா) 100000


கெய்ரோ 40000


காஷான் 40000


லிபன்   50000


மொராக்கோ   12000


தென் அமெரிக்கா   50000


அலப்போ 20000


தென் இத்தாலி  14000


மென்சோடா  12000


பெரு எக்வாடா 25000


கராகாடோ 37000


ஜப்பான்   30000


இந்தியா   20000


பிரான்ஸ்கோ, சிசிலி     77000


மத்திய இத்தாலி    30000


கான்சு சினா 300000


ஜப்பான்    220000


சில்லரையாக பல இடங்களில்    100000


ஆக மொத்தம் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களாகும். இது தவிர இடியாலும், மின்னலாலும், எரிமலை நெருப்பாலும், வெள்ளத்தாலும், புயல் காற்றாலும் தன்னடி சேர்த்துக் கொண்ட மக்களின் அளவு இதைப்போல் பல மடங்குகள் இருக்கும். இவ்வளவு ஜீவகாருண்யமுள்ள கடவுளின் கருணையை எப்படிப் புகழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதலால் இதைப் பண்டிதர் களுக்கே விட்டு விடுவோம். ஏனெனில் அவர்கள் அதற்கே பிறந்தவர்கள். நிற்க.

-  விடுதலை நாளேடு, 8.2.19

உண்மையான கடவுள் நம்பிக்கை?- வினா-விடை

16.11.1930- குடிஅரசிலிருந்து...


வினா:- நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூட  கிடைப்ப தில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடா விட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?

விடை:- நமது மதமும் ஜாதியும்

வினா : - நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90பேருக்கு மேலாகத் தற்குறியாயிருக்கிறோம்

ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள்.  இதன் காரணம் என்ன?

விடை : - மதமும் ஜாதியும்.

வினா:- நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பாராய்க் கொண்டே வருவதற்குக் காரணமென்ன?

விடை: வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமுகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப் பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜுகளாகவும் வந்து மேல்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பாராக்குகிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்?

வினா : - எந்த விதமான விபசாரம் குற்றம் சொல்லத்தகுந்ததாகும்?

விடை :- வெளியார்க்கு தெரியும்படியாகச் செய்த விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்.

வினா:- கிருத்தவனாகப் போவதில் என்ன கெடுதி?

விடை: - ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.

வினா:- மகம்மதியனாவதில் என்ன கெடுதி?

விடை : - ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.

வினா:- உண்மையான கற்பு எது?

விடை:- தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.

வினா: - போலி கற்பு என்றால் எது?

விடை:- ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத் திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனத்திற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக் கற்பு.

வினா : - மதம் என்றால் என்ன?

விடை:- இயற்கையுடன் போராடுவதும் அதைக் கட்டுப்படுத்துவதும் தான் மதம்.

வினா:- நாட்டுக் கோட்டையார் சமுகத்தில் உள்ள சுயமரியாதை என்ன?

விடை:- பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டுவது இல்லை என்பதாகும்.

வினா: - தொழிலாளர்களுக்குப் பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு (லீவு) கொடுக்கப் படுகின்றது.

விடை:- பாடுபட்டு சம்பாதித்து மீதி வைத்ததை பாழாக்குவதற்காக.

வினா:- பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?

விடை:-  அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.

வினா:- மனிதனுக்குக் கவலையும் பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும்.

வினா:- பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- தலைமயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்.

வினா:- பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வு கிடைத்து விடும் (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்திழுத்துப் போடுவதே வேலையாகும்)

வினா:- எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்.

விடை:- ஒருவனும் தன் தேவைக்குமேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியளவு கிடைத்துவிடும்.

வினா:- பெரிய மூடன் யார்?

விடை:- தனது புத்திக்கும் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.

வினா:- ஒழுக்கம் என்பது என்ன?

விடை:- ஒழுக்கம் என்பது தனக்கும், அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

வினா:- சமயக்கட்டுப்பாடு, ஜாதிக்கட்டுப் பாடு என்றால் என்ன?

விடை:- மனிதனைத் தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவது தான் ஜாதி சமயக்கட்டுப் பாடாய் இருக்கின்றது.

வினா:- உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

விடை:- கடவுள் எங்கு மறைந்து போவாரோ, என்று பயந்து அவரைக் காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

வினா:- இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?

விடை:- இந்தியர்கள் 100க்கு 90பேர் கல்வி அறிவில்லாத, எழுத்து வாசனை கூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான்.

வினா:- ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

விடை:- தடி எடுத்தவன் தண்டக்கார னென்பதுதான் ஜனநாயக ஆட்சி.

வினா:- இந்தியாவுக்கு ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி விதவைகளுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜன சங்கை பெருகும். வினா: - இந்தியா சீர்பட என்ன வேண்டும்?

விடை:-  இந்தியா சீர்பட்டு இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால் நாதிகமும் நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.

வினா: - இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?

விடை:- இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபடமுடியாத அடிமையாய் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும், கடவுள் களுமேயாகும்.

வினா:- கிறித்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும்.அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்.

விடை:-  கிறித்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கை களும் இருந்த போதிலும் அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர் களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள் தனமுமாகும்.

வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ் வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?

விடை:-  மத விஷயத்தில் அவர்களுக்குக் கிடைத்துள்ள உயர்ந்த நிலையால் அவர்கள் (பார்ப்பனர்கள்) எல்லோரையும் விட முன்னேறி யிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர் களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும், இழி வான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டி யவர்களாவார்கள்.

வினா:- ஆண் விபசாரர்கள் வீபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் தங்கள் விபசாரத்திற்கு என் செய்வார்கள்.

விடை:-  அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்ய வேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால் காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்துவிடும்.

வினா: பார்ப்பனர்களில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக்கின்றது?

விடை:- அவர்கள் அனுமந்ததேவரை பூஜிக்கிறார்கள். படுக்கைவீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

வினா: - பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்சத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன?

விடை:- கடவுள் இருக்கிறார். போறாக் குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

-  விடுதலை நாளேடு, 8.2.19

திங்கள், 11 பிப்ரவரி, 2019

திராவிடர் என்று ஏன் பெயர் வைக்க வேண்டியதாயிற்று?

தந்தை பெரியார்




தலைவர் அவர்களே! மாணவர்களே!

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண் கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்த மானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது. ஆனால், படிக்கும் சிறு குழந்தை களுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப் படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.

உங்கள் படிப்பின் தன்மை


முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர் களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருதுவதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப் படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தி யாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல் லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதா வது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படு கின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர் களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர் களுமாகி விடுகிறார்கள். மாண வர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர் களா கவே இருக்க வேண்டிய வர்களா கிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வானசாஸ்திரம், உடற் கூறு, உலோக விஷயம் முதலியவைகளில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூட நம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, இராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக் கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர் களுக்கு சரியாகத் தெரிவதில்லை. நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாதது மான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவ தில்லை. சேர, சோழ,பாண்டியர், நாயக்கர் ஆகியவர் களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லை களும், முறைகளும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100-க்கு 90 மாணவர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசர தனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கர வர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100-க்கு 90 மாணவர் களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞான சாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம், இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக் குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும் சாபம், இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற காரணமும், அதை அனு சரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர் களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப் படிப்பாகப் போய்விட்டது.

படிப்பால் ஏற்படும் பயன்


இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள் ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவை களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவ தால் கேடு எதுவும் ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள். உங்களுக்கு உபாத்தி யாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக் கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும் புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்ப தால் ஏற்படும் கடமையாவது காலப் போலக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியான படி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரியான தும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப் பான்மை உண்டாகும்படி யாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.

திராவிடர் கழகம் ஏன்?


இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப் படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என் பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்து வருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப் படலாம். அவற் றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரிய வேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவி னையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடிய தென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது, திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக் கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்து அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப் பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மை களும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் நிலை ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினு டையவும் தன் மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினை வுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது.

இதுகூட ஏன்?


இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங் களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போ கவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப் பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண் டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம், 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறி களாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலிலும், ஏழை களாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட வர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக் கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத் தான்) இருக்கிறதே தவிர திராவிட ரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒரு கூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென் பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசிய மில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யா மலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி ஏற்பட்டு விட்டது. அக்கட்டுப் பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப் பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர் களாவது இருப் பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப் படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங் களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித் தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக் கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிரா மணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றி பெறாததற்குக் காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும். இது திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப் படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள். அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப் பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள்.

என்ன மொழியாய் இருந்தால் என்ன?


இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்க முடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவி லிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார (பான)த் திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிரா மணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத் திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்ப வர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போக போக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படி யாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவ மாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவ தால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும்.

நசித்துப் போய் விடாதா?


திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்த முமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டு விடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்து கொண்டிருந்த அவனைப் பறையனாக்குவதற்குக் காரணமா யிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப் பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரண மாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரிய னுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவி டனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப்பட்ட தாகவோ அருத்தமா? இங்கு தான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையது களுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்து தான் போகும்; கைவிடப்பட்டுத் தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாச வேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்ப காலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்று விக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின்பற்றப் படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்திய வர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏங்கெல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில் தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டு வருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என் பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள் தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல் வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

(9.7.1945ல் ஈரோடு மகாஜன அய்ஸ்ஸ்கூல் சரஸ்வதி ஹாலில்

திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்

தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - 14.07.1945

-  விடுதலை நாளேடு, 10.2.19