புதன், 12 ஜூன், 2019

பார்ப்பனர் - வடவரோடு இந்திப் போட்டி பலிக்குமா?



தந்தை பெரியார்

அன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற இருக்கும் இந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும். இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் இந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது விளங்க வைக்க வேண்டுமென்றால், சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திராத குழந்தைகளுக்கும், அன்று விளக்கம் தெரியாது விபரம் தெரியாது இருந்த குழந்தைகளுக்கும் தான் சற்று விளக்கம் கூறவேண்டியிருக்குமே ஒழிய, மற்றையோருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் அவ்வளவு விளக்கமாக அன்று நாம் இந்தி எதிர்ப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பதால்தான். சென்ற 10 ஆண்டுகளுக்கு முந்தி, இதே இந்தி மொழி மூலம் நமது திராவிட மொழிக்கும், திராவிடர் கலாச்சாரத்திற்கும், திராவிட மக்களுக்கும் வரநேர்ந்த ஆபத்தைத் தடுக்க வேண்டு மென்று நாம் ஒரு போராட்டத்தை இதே சென்னையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதால்தான். அக்காலத்தில் ஏற்பட்ட ஆபத்துக்கும், இக்காலத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கும் பல வேற்றுமைகள் உண்டு. ஏதாவது கடினமான காய்ச்சலைப்பற்றிக் கூற வேண்டு மானால், இக்காய்ச்சல் மிக "விருலன்ட் பாரத்தில்" அதாவது மிகக் கொடூரமான, வேகமான, ஆபத்துக் கிடமான தன்மையில் வந்துள்ளது என்று கூறுவார்கள். அதே போல் நமது கலாச்சாரத்திற்கு இன்று வந்துள்ள ஆபத்து முன்னை விடச் சற்று கடினமான, சற்று தொந்தரவான தன்மையில் வந்துள்ளது.

பழைய இந்தி நுழைப்பு!

10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கவர்னர் ஜெனரலாக இருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதன்மந்திரியாய் இருந்த காலத்தில், இதே இந்தி கட்டாயப் பாடமாகக்கூட அல்ல, இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அதுவும் மாகாணம் பூராவுக்கும் 40 அல்லது 50 பள்ளிகளில் மட்டுமே பாடமாக வைக்க ப்பட்டது. அன்று அதைக்கூட நாம் எதிர்த்தோம். நமது எதிர்ப்பின் வலிவைக் கண்டதும், இந்தியை இஷ்டப் பட்டுப் படிப்பவர்கள் கூட, இஷ்டப்பட்டாலொழிய பரீட்சைக்குப் போக வேண்டாம், சென்றாலும் தேற வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டது.

எதிர்ப்பு வளர வளர ஏதோ 100-வார்த்தைகளாவது இந்தியில் ஒரு மாணவன் தெரிந்து கொண்டால் போதுமானது என்று கூறப்பட்டது. கடைசியாக, "இவ்வளவு அதிருப்தி மக்களுக்கு இருக்குமென்று தெரிந்திருந்தால் நான் இந்த மொழியைப் புகுத்தியே இருக்கமாட்டேன்" என்று அவரே கூறும்படியான நிலைகூட ஏற்பட்டது. கடைசியில் இவ்வாறு கூறுமாறு செய்யப்பட்ட அவர், முதல் முதலாக இந்தி எதிர்ப்புப் போர் துவக்கப்பட்டபோது என்ன கூறினார் தெரியுமா?

ஆணவம் குறைச்சலில்லை

"நான் இம்மாகாணத்தின் முதன்மந்திரி. மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டு மந்திரியாக வந்துள்ளவன். நான் உத்தரவிடுகிறேன் என்றால், மக்களின் பிரதிநிதியாகிய நான் உத்தரவிடுகிறேன் என்று பொருள். அப்படியிருக்க மக்களின் பிரதிநிதிகள் அல்லாத, யாரோ வெளியில் உள்ள ஒரு ராமசாமி நாயக்கரும், ஒரு சோமசுந்தர பாரதி யாரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவா உத்திரவை மாற்றுவேன்? அவர்களுக்காகவா விட்டுக் கொடுப்பேன்? அது நடக்காது, முடியாது" என்று ஆணவத்தோடு கூறினார். அதற்காக நாம் அன்று அஞ்சினோம் இல்லை. மக்களிடம் இந்தியால் விளையக் கூடிய கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறினோம். அவர்களும் ஒப்புக் கொண்டு பேராதரவு அளிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ராஜி பேசிய படலம்

அதைக்கண்டு அன்று ஆணவத்தோடு சவால்விட்ட ஆச்சாரியாரும் சமரசத்திற்கு வர, ராஜிபேச முன்னுக்கு வர நேரிட்டது. ராஜிபேச வந்தவர் ஜெயில் சூப்ரன் டெண்ட் முன்னிலையில்தான் என்னுடன் பேசினார். சமரசம் பேச வந்தவரும் கூட இன்றும் உயிருடன்தான் இருக்கிறார். அவர் யார் என்பதையும்தான் தெரிவித்து விடுகிறேனே! வேறு யாருமில்லை. இன்றைய மத்திய அரசாங்க நிதி மந்திரியாயுள்ள தோழர் சண்முகம் செட்டியார்தான் என்னுடன் ராஜிபேச அனுப்பப்பட்டார். அவர் கூறினார். "இப்போது இந்தி புகுத்தப்பட்டுள்ள நாற்பது பள்ளிகளோடு இந்தி நுழைப்பை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளச் சம்மதம் தானா" என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் "இது வெறும் வீம்புதானே, இந்தி தேவையில்லையென்று அவர் உணருவதாயிருந்தால் இந்த 40 பள்ளிகளில் கூட எடுத்துவிடுவது தானே. நான் ஜெயித்தேனா, அவர் ஜெயித்தாரா என்று காட்டிக் கொள்ளத்தானே இப்படிக் கூறுகிறார்? இதற்கு ஒப்புக் கொள்ள முடியாது" என்று கூறினேன். அதற்கு அவர் சொன்னார்.

"இந்த 40 பள்ளிகளில் கூட இந்தி நிரந்தரமாக இராது. அதுவும் குறைக்கப்பட்டு விடும் என்று கூடக் கூறுகிறார். அப்படிச் செய்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்தச் சம்மதம்தானா" என்று கேட்டார். அப்படியானால் முடிவாக 40 பள்ளிகளிலும் இந்தி மொழி எடுக்கப்பட்டு விடும் என்று முடிவான தேதியைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள், எனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அந்தத் தேதிக்குள் எடுக்கப்படா விட்டால் மறுபடியும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்துகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் தன்னால் பொறுப்பேற்க முடியாதென்றும், அந்தத் தேதியைக் கேட்டுத் தெரிவித்து விடுவதாகவும் கூறிச் சென்றார்.

வேகமும் வீம்பும்

இந்தப் பேச்சு நடந்தது சென்னை ஜெயிலில். இப்பேச்சு நடந்த சில நாட்களில் எனக்குக் காய்ச்சல் வரவும் என்னைப் பெல்லாரிச் சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அங்கிருந்து கோவைக்கு மாற்றப்பட்டேன். நான் பெல்லாரியில் இருந்தபோது இங்கு இந்தி எதிர்ப்பை நடத்தியவர்கள் சற்று வேகமாகப் போய்விட்டார்கள். அதன் பயனாய் சர்க்காருக்கும் வீம்பு அதிகமாகிவிட்டது. அதன் பயனாய் சமரசப் பேச்சு கைவிடப்பட்டது. கோவையிலும் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு வயிற்றுப் போக்கும் ஏற்படவே, கோவை ஜெயில் சூப்ரின்டெண்ட் கொஞ்சம் பயந்து விட்டார். அவர் ஒரு டாக்டர். அவர் உடனே ராஜ கோபாலாச்சாரியாரைப் பார்த்து நிலைமையைச் சொன்னார். ராஜகோபாலாச்சாரியாரும் "தாளமுத்துவுக் கும், நடராஜனுக்கும் ஏற்பட்ட கதி இவனுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன நேருமோ" என்று அஞ்சி "உடனே ஓடோடியும் போய் விடுதலை செய்துவிடு. வெளியில் போய் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்" என்று கூறிவிட்டார். ஞாயிறன்று சூப்ரண்டென்டு அவரைப் பார்த்தார். ஞாயிற்றுக்கிழமையன்றே விடுதலை உத்தரவும் செய்யப்பட்டது. பிறகு இந்தி எதிர்ப்புக்காக சிறை சென்றவர்களை, அவர்கள் சிறைவாசம் முடியும் முன்பே கொஞ்சம், கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டே வந்தார். அதையொட்டி இந்தி இன்று எடுபடும், நாளை எடுபடும் என்று பேச்சு உலாவ ஆரம்பித்தது. அப்படிப்பட்ட நிலையில் யுத்தமும் வந்தது. நாம் போட்ட உத்தரவை நாம் எடுப்பானேன்! வெள்ளையனே எடுத்துவிடட்டுமே என்ற நினைப்பில், காங்கிரஸ் மந்திரிகளும் பேசாமலே யிருந்து கடைசியாக ராஜினாமா கொடுத்து விட்டுச் சென்றார்கள். வெள்ளையர் சர்க்கார் ஆலோசகர்களாக வந்ததும் அந்த உத்தரவை ரத்து செய்து விட்டார்கள். இதுதான் பழைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சுருக்கமாகும்.

இன்றைய இந்தி நுழைப்பு முறை

இந்தச் சங்கதியை நன்றாக அறிந்துள்ளவர்கள் இன்று தாம் பதவிக்கு வந்ததும் அதே காரியத்தை மறுபடியும் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். சுதந்திர அரசாங்கத்தில், சொந்த அரசாங்கத்தில் தான் அன்னிய வடநாட்டு மொழி நம் நாட்டில் புகுத்தப்படுகிறது. அதுவும் முன்னையைவிட சற்றுக் கடினமான முறையிலேயே புகுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது போராட்டத்தின் அளவும் முன்னையதைவிடச் சற்று விரிவானதாகவே அமையும். உத்தரவு பிறப்பித்தவர் களும், திடீரென்று இந்தியை இந்நாட்டில் கட்டாய பாடமாக்கிவிடவில்லை. இதுதான் நாம் சிந்திக்க வேண் டிய விஷயம். இந்தியை இன்னும் சில பாஷைகளோடு சேர்த்து அவற்றில் ஏதாவதொன்றை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர்கள் மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரி உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. இரண்டாம் மொழி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கட்டாயம் ஆக்கப்பட்டது, தமிழ் நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அந்த உத்தரவிலேயே அதற்குக் காரணமும் கூறியுள்ளார்கள். தமிழ்ப் பகுதியில் இந்தி புகுத்தப்படுவதைச் சிலர் ஆட்சேபிப்பதால் இரண்டாம் மொழியை இப்பகுதியில் மட்டும் கட்டாய மாக்கவில்லை என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

சண்டைக்குப் போவானேன் என்றே கருதினோம்

இந்தி இந்நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது கூடத் தவறு; மறுபடியும் ஆட்சியாளர்கள் நம்மை வலுவில் சண்டைக்கு இழுக்கத் துணிந்து விட்டார்கள் போல் இருக்கிறது என்று இவ்வுத்தரவைக் கண்டித்து 'விடுதலை'யில் எழுதி இருந்தோம். என்றாலும் அப்போது இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நடத்த வேண்டு மென்று நாங்கள் தீர்மானம் செய்யவில்லை. சண்டைக் குப் போவானேன், இஷ்டப்பட்டவர்கள் வேண்டு மானால் படித்துக் கொள்ளட்டுமே என்று எங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டோம்.

பார்ப்பனர் வயிறெரிந்தால்.........

தமிழ்நாட்டில் மட்டும் இந்தி இஷ்டமாக்கப்பட்டது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு வயிற்றெச்சலை உண்டாக்கியது. கோவைக்கு மந்திரியார் சென்றிருந்த போது 'ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இந்தி இஷ்டப் பாடமாக்கப்பட்டது' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளக்கமாக பதில் கூறியிருக்கிறார். அப்பதில் என்ன தெரியுமா?

"வேண்டுமென்று தான் நாங்கள் இந்நாட்டில் இந்தியைக் கட்டாயமாக்கவில்லை. இந்த நாட்டு மக்கள் இந்தி மொழியை விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் அப்படிச் செய்தோம். அந்த உத்தரவிற்கு ஆட்சேபணை வராததிலிருந்து நாங்கள் நினைத்தது சரியென்றே தெரிகிறது" என்று பதில் கூறியிருக்கிறார். இச்சேதி 24.06.1948ஆம் தேதி சுதேசமித்திரனில் 22.06.1948இல் மந்திரியார் பேசியதாக "இந்தியும் கட்டாய பாடமும்" என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது. படிக்கிறேன் கேளுங்கள். வேண்டுமென்றுதான் இந்தி இந்நாட்டில் (தமிழ்நாட்டில்) கட்டாயமாக்கப்படவில்லை. பொது மக்கள் இவ்வுத்தரவை எப்படி ஏற்கிறார்கள் என்று கவனிக்கவே இப்படி உத்தரவு பிறப்பித்தோம். இரண்டொரு இடத்தைத் தவிர இவ்வுத்தரவிற்கு ஆட்சேபணை வரவில்லையே. அப்படி இருக்க எப்படி பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாக எப்படி இந்தியைக் கட்டாயப்படுத்துவது என்று பதில் கூறியிருக்கிறார். இதை நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஆட்சேபணையே வரவில்லையே என்று இரண்டு ஏகாரம் போட்டுப் பேசியிருக்கிறார். அதே 24.6.1948 தேதியில் இந்தச் சேதியையும் வெளியிட்டு விட்டு, "இந்தி கட்டாயமாகத் தேவை" என்று சுதேச மித்திரன் ஒரு தலையங்கமும் தீட்டிவிட்டது. அதுவும் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுஜன அபிப்பிராயம் என்று கூடக் கூறிவிட்டது. அதற்கு ஆதாரமாக உத்தரவில் சிலர் ஆட்சேபிப்பதால் கட்டாயமாக்கவில்லை என்று கூறியிருப்பதைக் காட்டி கட்டாய இந்தியை ஆட்சேபிப்பவர்கள் ஒரு சிலர்தான் என்பதை மந்திரியார் உணர்ந்திருக்கும் போது அந்த ஒரு சிலருக்காக இஷ்ட பாடமாக்குவதா? என்று கேட்டி ருப்பதோடு சர்க்காரை எப்போதும் எதிர்ப்ப வர்கள் எந்த நல்ல காரியத்தையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காக நல்ல காரியத்தைக் கைவிட்டு விடுவதா? நல்லகாரியத்திற்குக்கூட ஒரு சிலர் ஆட்சேபணை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி மது விலக்குக்கூட சிலர் ஆட்சேபிக்கவில்லையா? என்று உதாரணம் காட்டியிருக்கிறது.

கட்டாய உத்தரவு

ஆட்சேபணையே வரவில்லையே என்று கூறிய மந்திரியார், சுதேசமித்திரனுடைய ஆட் சேபணையைக் கண்டதும், உடனே தம் உத்திரவை மாற்றி விட்டார். மாற்றும் போதும் தெளிவாகவே கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக் கிறார். முந்திய உத்திரவில் தமிழ்நாடு மட்டும் கட்டாயத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது; இப்போது மற்ற பகுதிகளோடு தமிழ்நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறதென்று.

ஏதோ ஒன்றென்றால் ஏனோ வாத்தியாரும் சலுகையும் கட்டாயம்?

இவ்வளவுக்கும் பிறகு இப்போது சர்க்கார் கூறும் முக்கிய வாதம்" நாங்கள் இந்தி கட்டாயம் என்று சொல்ல வில்லையே" என்பது தான். சர்க்கார் உத்திரவிலும், மந்திரிகள் பேச்சுக்களிலும் கட்டாயம் என்கிற வார்த்தை பலமுறை காணப்படுகிற போதிலும், தாங்கள் கட்டாய பாடமாக்கவில்லை என்றுகூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள் - எப்படிக் கட்டாயமில்லை என்று கூறுகிறார்கள் என்றால் இந்தியை எங்கு கட்டாயம் என்றோம். இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது அல்லது மற்ற ஏதாவதொரு இந்திய மொழி ஒன்றைத் தானே கட்டாயமாக்கியிருக்கிறோம். இரண்டாம் மொழி தான் கட்டாயமே ஒழிய இந்தியல்லவே என்கிறார்கள். இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது அரபி அல்லது உருது அல்லது தெலுங்கு என்று ஒரு 5 மொழிகளில், ஏதாவதொன்றை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, இந்தி படிப்பவர்களுக்குத்தான் சர்க்கார் உத்தியோகம் அளிக்கப்படும், சர்க்கார் சலுகை அளிக்கப்படும் என்றால், இந்தி தவிர வேறு எதைக் கற்பார்கள் மாணவர்கள்? ஏதாவதொன்றைப் படிக்கலாம் என்று கூறுப வர்கள் இந்திக்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வாத்தியார்களை நியமிப்பானேன்? இந்தி வாத்தியார் களை உற்பத்தி செய்யமட்டும் பணம் ஒதுக்கி வைப் பானேன்? இந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே, சர்க்காரின் பித்தலாட்டம் வெளிப்படுகிறதா, இல் லையா? இதுதான் போகட்டும்.

சர்க்கார் பத்திரிகை இது!

சாகசப் பித்தலாட்டம் இது!

சர்க்காரின் கருத்தைத் தெரிவிக்கச் சர்க்காரால் நடத்தப்பட்டுவரும் "சென்னைச் செய்தி" என்ற மாத வெளியீட்டில், கனம் கல்வி மந்திரியார் என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இது சர்க்கார் பத்திரிகை. இதில் கனம் கல்வி மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் எழுதியது என்று போடப்பட்டு அவரது போட்டோவுடனும், கையெழுத்துடனும் வெளி வந்துள்ளது. என்ன வென்று கவனியுங்கள் 01.08.1948இல் வெளியாகி 02.08.1948இல் எங்களுக்குக் கிடைத்தி ருக்கும் இப்பத்திரிகையில் (பத்திரிகையும் போட்டோ வையும் காட்டி) இந்தியைப்பற்றி ஏதேதோ எழுதிவிட்டு இந்நாட்டு மாணவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு சிறு அளவுக்கேனும் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை வற்புறுத்த வேண்டியது அனாவசியம். எனவேதான் எல்லா ஹைகூல்களிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட வேண்டுமென்று சர்க்கார் உத்திரவு பிறப்பித்துள்ளார்கள் என்று எழுதியிருக் கிறார். இப்படி எழுதிவிட்டு நான் எங்கே இந்தியை கட்டாயமாக்கி இருக்கிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமா அல்லவா? நேற்று முந்தா நாள் நடைபெற்ற சம்பாஷணையின்போது இதையெல் லாம் எடுத்துக்காட்டினேன் என்றாலும் அவர்கள் சொன்னதையே தான் திரும்பித்திரும்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முடியாததை முடியாதென்பதா வெட்கம்?

இப்போதோ கட்டாயப் பாடம் மட்டும் இல்லை; கட்டாயப் பரீட்சையும் உண்டு. அதில் நல்லமார்க்கு வாங்கினால்தான் தேர்ச்சியும் உண்டு. நமது பிள்ளைகள் எப்படி இந்தியைக் கற்றுத் தேற முடியும்? மிக கஷ்டமாயிருக்குமே என்று கூறினால் "அப்படிச் சொல்லிக் கொள்வது வெட்கமாயில்லையா" என்று மந்திரியார் கேட்கிறார். "நம்மால் செய்ய முடியாத ஒன்றை நம்மால் செய்ய முடியாதே" என்று கூறுவதற்கு நாம் ஏன் வெட்கப்படவேண்டும்? முடியாத ஒன்றை முடியாது என்று கூறுவதில் அவமானம் என்ன இருக்கிறது? நான் கேட்கிறேன் மந்திரியாரை உங்களுக்கு நீக்ரோ பாஷை தெரியுமா? அப்பாஷை உங்கள் நாக்கில் நுழையுமா என்று, நுழையாது என்றுதானே மந்திரி பதில் கூறுவார். நீக்ரோ பாஷை என் நாக்கில் நுழையாது என்கிறாயே, அதைக் கூறிக் கொள்வது அவமானமில்லையா என்று கேட்டால் அதற்கென்ன பதில் கூறுவார் மந்திரியார்? தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை, தமிழ் பேசத் தெரியவில்லை என்றால், அதற்காக வெட்கப்படுவதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவன் தனக்கு இந்தி வராது என்று கூறுவதில் என்ன வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

சிறுவர்களின் மீது திணிப்பதா?

பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படித்தவர்களின் சந்ததி யார்கள். சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் 4 சப்தங்கள் உண்டு. இந்திக்கும் அப்படியேதான். நாலு சப்தங்களுக்கேற்ப எழுத்துருவங்களும் மாறியிருக் கின்றன. ஆனால் தமிழ் மொழியில் அப்படிக்கில்லை. சப்தத்தில் மாறுதல் இருந்தாலும் எழுத்து உருவத்தில் மாறுதல் இல்லை. தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதும் வெகுசுலபம். தமிழ் எழுத்துக்களையே உச்சரித்துப் பண்பட்ட தமிழன் நாக்கால் இந்திச் சப்தத்தைச் சரிவர உச்சரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு மொழியை நமது சிறுவர்களின் மீது திணித்து அவர்களைக் கொடுமைப் படுத்தலாமா? என்பது தான் எங்கள் கேள்வி.

தெலுங்கு ரெட்டியார்தான் ஆனால் தெலுங்கைச் சரியாகப் பேசுவாரா?

நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன். அதற்காக நண்பர் ரெட்டியாரும் என் மீது கோபித்துக் கொள்ளமாட்டார் என்று கருதுகிறேன். ரெட்டியார் ஒரு தெலுங்கரானாலும் அவருக்குச் சரியாகத் தெலுங்குப் பேசத் தெரியாது. நான் ஒரு கன்னடியன் என்றாலும் எனக்குச் சரியாகக் கன்னடம் பேசத் தெரியாது. ஏன்? ரெட்டியாரின் மூதாதையர் தமிழ்நாட்டில் வந்து குடியேறி சுமார் 600 ஆண்டுகள் சுமார் 10 - தலைமுறைகள் ஆகியிருக்கும். அதற்கும் பல ஆண்டுகள் முந்தித்தான் எனது மூதாதையரும் தமிழ்நாட்டை அடைந்திருக்க வேண்டும். 10 தலைமுறைகளாக தமிழ் நாட்டிலேயே எங்கள் குடும்பத்தினர் வாழநேரிட்ட காரணத்தால், எங்கள் சொந்தமொழி எங்களுக்குச் சரியாகத் தெரியாது போய்விட்டது. நான் பேசும் கன்னடமும், ரெட்டியார் பேசும் தெலுங்கும் ஒரு தமிழனுக்குத்தான் புரியுமே யல்லாது ஒரு கன்னடியனுக்கோ, ஒரு தெலுங்கனுக்கோ சரியாகப் புரியாது. காரணம் தமிழ்நாட்டிலேயே பலகாலம் இருந்து தமிழர்களிடையே பழகித் தமிழே பேசிவந்ததுதான். தமிழ் திரிந்த தெலுங்கே, பழக்கத்தால் ரெட்டியாருக்கு, மறந்து போய்விட்டதென்றால், சரிவர கற்க, சரிவரப் பேசமுடியாது போய்விட்டது என்றால், தமிழ் மாணவர்களால் எப்படி இந்தி படிக்கமுடியும் என்று நண்பர் ரெட்டியார் சிந்திக்க வேண்டாமா?

(09.08.1948 அன்று பெத்துநாயக்கன்பேட்டை சிவஞானம் பார்க்கில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 14.08.1948

-  விடுதலை நாளேடு, 9.6.19

வெள்ளி, 7 ஜூன், 2019

சுயராஜ்யம் (முதல் அத்தியாயம்) - சித்திரபுத்திரன்

3.4.1948  - குடிஅரசிலிருந்து
கத்தி இன்றி இரத்தமின்றி இந்திய சுதந் திரம் பெற நடத்திய அகிம்சைப் போ ராட்டத்தில் 945 தபால் ஆபீசுகள், 332 ரயில்வே ஸ்டேஷன்கள் கொளுத்தப்பட்டன, இடிக்கப்பட்டன. 60 இடங்களில் ரயில் கவிழ்க்கப்பட்டன.
இவை தவிர, கொளுத்தப்பட்ட சர்க்கார் கச்சேரிகள் பல. கொளுத்தப்பட்ட கோர்ட்டு ரிகார்டுகள் ஏராளம். கத்தரித்த தந்திக் கம்பிகள் பல மைல் நீளம்.
பெயர்த்த தண்டவாளங்கள் பல மைல்கள் தூரம், கொல்லப்பட்ட அதிகாரிகள் பலர் ஆகிய இவை யாவும் உங்களுக்குத் தெரிந்தது தானே.
சுதந்திரம் கிடைத்த பின்பு
இவைதாம் போகட்டும் என்றால் சுதந் திரம் கிடைத்த பின்பும் அகிம்சா, சுயராஜ்யத்தில் இடிக்கப்பட்ட வீடுகள் பல, கொளுத்தப்பட்ட கட்டடங்கள், கடைகள் பல, கொல்லப்பட்ட மக்களோ பலப்பல. கற்பழிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பலபல என்பதும் உங்களுக்குத் தெரிந்ததுதானே.
இந்து முஸ்லிம் ஒற்றுமை
சுயராஜ்யம் கிடைத்து விட்டால் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டு விடும் என்றார் காந்தியார். ஆனால் சுயராஜ்யம் கிடைத்த பிறகு நூற்றுக்கணக்கான ஊர்களில் முஸ்லிம்களின் வீடுகள் கொள்ளை இடப்பட்டன. முஸ்லிம் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. முஸ்லிம் தொழில் ஸ்தாபனங்கள் கொளுத்தப் பட்டன. இவையும் உங்களுக்குத் தெரிந் ததுதான்.
இவ்வளவு தானா?
இவ்வளவும் தவிர இன்னமும் என்ன நடந்தது என்று பாருங்கள். ஏராளமான எதிர்க்கட்சியார் கூட்டங்கள் குழப்பத்தால், காலித்தனத்தால் கலைக்கப்பட்டன. அவர் களது மகாநாட்டுக் கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. மகாநாட்டு மக்களை அடித்துக் கண், கால் ஊனமாக்கி அவர்களது சாமான்கள், பணங்கள் வழிப்பறி செய்யப்பட்டன.
என்ன நடந்தது?
இவ்வளவு காரியம் சுயராஜ்யம் கிடைத்த பிறகு செய்வதற்கு அகிம்சா ஆட்சிக்கு உரிமை ஏற்பட்டும், இவ்வளவும் போதாமல் இந்தத் தர்மராஜ்யத்தில் அடக்குமுறைச் சட்டங்கள் ஏராளமாக ஒவ்வொரு மாகாணத்திலும் செய்யப்பட்டன.
இவ்வளவோடு நிற்கவில்லை
எங்கு பார்த்தாலும் ஸ்ட்ரைக்கு, ஸ்ட் ரைக்கு! வேலை நிறுத்தம், வேலை நிறுத்தம்! என்பதாகவே கக்கூசு எடுப்பவர்கள் முதல் செக்ரட்டெரியேட் அதிகாரிகள் வரை நடந்தவண்ணமாயிருக்கின்றன.
பஞ்ச தேவதை திருவிளையாடல்
சோத்துப் பஞ்சம், துணிப் பஞ்சம் தாண்ட வமாடின.
வியாபாரிகள் கள்ள மார்க்கெட்டும், சட்டசபை மெம்பர்கள் கொள்ளையும், அதி காரிகள் லஞ்சமும், மந்திரிகளின் பாரபட்ச அநீதியும் ஆனந்தக் கூத்தாடின.
சந்தடி சாக்கில் கந்தப்பொடிக்கு கால் பணம் என்பதுபோல் வருணாசிரமம் வரம்பு கடந்து ஆட்சி புரிந்தது.
ஆண்டவனிடம் பிராது
இவ்வளவு நடந்தால் பிறகு மக்கள் என்ன செய்வார்கள். அழுதார்கள், ஆத்திரப்பட் டார்கள்,  ஆண்டவனிடம் முறையிட்டார்கள். ஆண்டவன்தான் என்ன செய்வான்? ஆண் டவனும் பார்ப்பன ரூபமாக இருந்துதானே உலகை நடத்துகிறார்.
இவை எல்லாம் ஆண்டவன் செயல்தானே?
ஆண்டவன் காரணம் என்றால் என்ன? பார்ப்பனர் காரணமென்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே?
எனவே, ஆண்டவன் பிராதை வாங்கிக் கொண்டு யோசித்தார் யோசித்தார், வெகுதூரம் யோசித்தார். எவ்வளவு தூரம்? யோசனை தூரம் யோசித்தார்.
யோசித்து என்ன முடிவுக்கு வந்தார்? வந்தார் ஒரு முடிவுக்கு. கண்டுபிடித்தார் ஒரு சங்கதியை, அதாவது கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்ததுபோல் கண்டுபிடித்தார்!
தொடரும்
 -விடுதலை நாளேடு, 7.6.19

வெள்ளி, 31 மே, 2019

திராவிடம் இன்றேல், விடுதலை முற்போக்கு இல்லை (2)



10.01.1948  - குடிஅரசிலிருந்து..

சென்றவாரத் தொடர்ச்சி

சண்டாளன் என்கிறான். அந்த ப்படி எழுதி வைத்திருக்கும் புத் தகத்தைக் கடவுள் வாக்கு, சாஸ்திரம், மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதி என்கிறான்.

ஆரியருடன் கூட்டு வாழ்க் கைச் சரித்திரம் தெரிந்த காலம் முதல், ஆரியனுக்குத் திராவிடன் கீழ் ஜா தியானாகவும், சகல துறை களிலும் பாடுபட்டு உழைத்துப் போட வேண்டிய வனுமாகவே  இருந்து வந்திருக் கிறான்.

இப்படிப்பட்ட நிலைமையில் மானமற்ற சில திராவிடர்கள் - தங்கள் பிறப்பில் உறுதி யோ நம்பிக்கையோ அற்ற திராவிடர்கள், ஆரியனை மதகுருவாகவும், அரசியல் குரு வாகவும் கருதி அவன் பின்னால் திரிகிறார்கள் என்றால், இதைவிட ஒரு சமூகத்துக்கு வேறு மானக்கேடு என்ன என்று கேட்கிறேன்.

இந்தியாவில் திராவிடம், ஆரியவர்த்தம் என்ற பிரிவினை வெகு தெளிவாக இன்றும் இருக்கிறது. ஆதாரமும் இருக்கிறது.

அப்படியிருக்க திராவிட நாட்டை பரத நாடு என்று சொல்லவோ, பரதகண்டம் என்று சொல்லவோ, பாரத தேசம் என்று சொல்லவோ என்ன உரிமை இந்த ஆரியர்களுக்கு இருக்கிறது என்று கேட் கிறேன். அதுமாத்திரமல்லாமல், மானம் கெட்ட தமிழர்கள் பலர் அவர்கள் கூடச் சேர்ந்து கூப்பாடு போடுகிறார்களே, இவர்களுக்குத் தேசாபிமானமோ சுயமரியா தையோ தங்கள் பிறவியில் நம்பிக்கையோ இல்லையா என்று கேட்கிறேன்.

பரதன் திராவிட நாட்டை எப்போது ஆண்டான்? பரதன் என்பவனுடைய ஆட்சி திராவிடத்தில் எப்போதும் இருந்ததில்லை. திராவிட நாட்டைத் திராவிடர்களே ஆண்டிருக்கிறார்கள்.

முசுலிம் ஆட்சி கூட மிகச் சிறிது காலம் சில இடத்தில் இருந்தது என்பதல்லாமல், அதுவும் ஆரியர் குடியேறிய நாடுகளைப் பூரணமாக 1000க் கணக்கான வருஷங்களாக ஆண்டது போல் ஆண்டதாகச் சொல்ல முடியாது.

திராவிட மன்னர்கள் ஆட்சி வேண்டுமானால் ஆரிய நாடுகளிலும் இருந் திருக்கிறது.

ஆனால் ஆரியர் சூழ்ச்சியின் பயனாய் இந்த நாட்டை ஆண்ட பழம்பெரும் மன்னர் களின் சமுதாயங்களான திரா விடர்கள் ஆரியர்களுக்கு அடிமை ஜாதி யாகவும், கீழ்த்தர ஜாதியாகவும், தீண்டாத ஜாதியாகவும் ஆக்கப்பட்டுத் திராவிட நாட்டிற்கும் ஆரியர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டு விட்டன.

பாம்பு வாயில் தவளை


இன்று திராவிடம் பாம்பு வாயில் சிக்கிய தவளை விழுங்கப்படுவது போல், திராவிட சமுதாயம் அவர்களது கலை, மானம் ஆகிய வைகள் உட்பட ஆரியப் பாம்பால் விழுங்கப்படுகிறது. இப்போது தவளையாகிய திராவிடத்திற்கு கடைசி மூச்சு நடக்கிறது. அதன் அபயக் குரல் கேட்பது போல் பிரா ணாவதைக் கூப்பாடு போடுகிறது. இந்தச் சமயத்தில் பாம்பைத் துண்டித்து விட்டால் தான் திராவிடம் என்கின்ற தவளை பிழைக் கும். இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நேர (கால)த்திற்குள் தவளை (திராவிடம்) மறைந்தே போகும்.

இப்படிப்பட்ட நிலையில் அய்யோ பாம்பை வெட்டுவதா அடிப்பதா பாவம் என்று மடையனும் மானமற்ற வனும்தான் சொல்லுவான்.

இன்று திராவிடனுக்கு இந்த திராவிட நாட்டில் என்ன யோக்கியதை இருக்கிறது. ஆரியர்களையும் திராவிடர் களையும் ஒத்திட்டுப் பாருங்கள்.

ஆரியன் தெரு கூட்டு கிறானா? மூட்டை தூக்குகிறானா? வண்டி ஓட்டுகிறானா? பியூனாய் இருக்கிறானா? உழுகிறானா? அறுப்பு அறுக்கிறானா? சரீரத்தில் இருந்து ஒரு துளி வேர்வையோ, நகத்தில் கடுகத்தனை அழுக்கோ, படியும்படி ஏதாவது உடலு ழைப்புச் செய்கிறானா? ஆனால் அவன் வாழ்வையும் திராவிடன் வாழ்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

- விடுதலை நாளேடு 31 .5. 2019

வியாழன், 30 மே, 2019

அக்கிரகாரத்தின் சீற்றம்



தஞ்சை ஜில்லா திருவையாறு என்ற ஊரிலே. தஞ்சை மன்னன் மான்யத்தைப் பெற்று சமஸ்கிருத காலேஜ் ஒன்று நடந்து வருகிறது.

தஞ்சை ஜில்லா போர்டின் ஆட்சிக்கு உட்பட்ட காலேஜ், அங்கு சமஸ்கிருத போதனை மட்டுமே முன்னம் இருந்தது. - மறைந்த திராவிடமணி சர். பன்னீர் செல் வம் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது, அதிலே தமிழும் போதிக்க உத்தரவிட்டார்.

அக்கிரகாரம் சீறிற்று. அவர் அஞ்ச வில்லை, டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தோழர் நாடிமுத்துப் பிள்ளை, மேற்படி காலேஜி லுள்ள ஹாஸ்டலில். ஜாதி பேதம் கூடாது என்று கருதி, பிராமணரும் பிராமண ரல்லாதாரும் ஒன்றாகவே சாப்பிட வேண்டும் என்ற தீர்மானத்தை ஜில்லா போர்டு கூட்டத்திலே நிறைவேற்றினார். அந்த தீர்மானம் ஜனவரி 27ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஹாஸ்டலில், 70 பார்ப்பனரல்லாத மாணவர்களும், 45 பார்ப்பன மாணவர்களும் உள்ளனர். சமபந்தித் தீர்மானம் அமலுக்கு வந்ததும், இந்த 45 பார்ப்பன மாணவர்களும், ஜில்லா போர்டு தீர்மானத்தைக் கண்டித்து, ஹாஸ்டலில் சாப்பிட மறுத்துவிட்டனர். - அக்கிரகாரத்திலே சென்று சாப்பிட்டார்கள். பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் சமமாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற உத்தரவைக் கண்டு அக்கிரகாரம் பதறுகிறது. உறுமுகிறது. இதன் கருத்து என்ன? - பார்ப்பனர் இன்றும் தமிழரைவிட மேலான ஜாதியார், தனியான ஜாதியார் என்ற திமிரான கருத்துடன் இருப்பதைத் தானே காட்டுகிறது?

-  தந்தை பெரியார் பேச்சு, விடுதலை 29.01.1941
- விடுதலை ஞாயிறு மலர், 25.5.19

புதன், 29 மே, 2019

பார்ப்பனர்களே! கனவு பலியாது

தந்தை பெரியார்




காந்தியாருடைய முடிவிற்குப்பின் அவருடைய பிரிவை மறப்பதற்காக என்று, இந்து மத சாதிர சம்பிரதாயங்களின்படி பதிமூணாம் நாள் அஸ்தி கரைக்கும் சடங்கு இந்திய யூனியன் முழுவதும், எந்த அளவு இந்து மத வெறிக்கு இடம் கொடுக்க முடியுமோ, அந்த மாதிரியான நடவடிக்கைகளால் நடந்து முடிந்திருக்கிறது. காந்தி யாரைப் படுகொலை செய்தவன் ஒரு பார்ப்பனன் - இந்துமத சாம்ராஜ்ய வருணாசிரம வெறியன் என்கின்ற கொடுமையை எப்படி மறைக்கிறது என்று ஏங்கிக் கொண்டிருந்த இந்த நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப் பனியத்திற்கு ஒத்தாசையாக இருந்தே வயிற்றுப் பிழைப் பையும், கவுரவத்தையும் மற்ற நடவடிக்கைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலைக்கு வந்துவிட்ட பக்தர்கள், தொண்டர்கள், தலைவர்கள், தியாகிகள், மந்திரிகள் என்பது போல பல முத்திரைகள் குத்திக் கொண்டவர்களும், பிரபுக்கள், ஜமீன்தார்கள், கள்ள மார்க்கட் வியாபாரிகள் என்கிற பெயர்களிலிருக்கிற பகற்கொள்ளைக்காரர்களும், ஆச்சாரியர்கள், சுவாமிகள், மகந்துக்கள், என்கின்ற பெயர்களிலிருக்கிற தீவட்டிக் கொள்ளைக்காரர்களும் சேர்ந்து போட்டிப் போட்டுக் கொண்டு படிதாண்டாத பக்தர்களாக ஆகிப் பார்ப்பனிய மதத்திற்கு இப்போதைய நிலைமையில் எவ்வளவு பாதுகாப்புச் செய்ய முடியுமோ, அவ்வளவையும் செய்து விட்டார்கள். இந்த நடவடிக்கைகள் மறைந்த பெரியார் காந்தியாருக்கு மரியாதையைச் செய்வதாகும் என்று சொல்லப்படுவதை நாம் ஒப்புக் கொண்டாலும், இந்தக் காரியத்தின் ஆடம்பரங்களால் பார்ப்பனியம் எப்படி உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவி விட்டது? அதனுடைய சதிச் செயல் நிறைவேறுவதற்கு மேலும் எந்த மாதிரிக் காரியங்கள் செய்து வருகின்றது? என்பதைத்தான் இங்கு எடுத்துக்காட்டுவதற்கு ஆசைப்படுகிறோம்.

பார்ப்பனிய மதக் கொடுமையை - வஞ்சகத்தை - மானத்தை அழிக்கும் செயலை - கொள்ளையும், கொலையும் செய்யும் கொடிய போக்கினை இந்த திராவிட நாட்டில் பிறந்து மறைந்த ஒவ்வொரு அறிவாளியென்று பெயர் எடுத்தவர்களும், அந்தந்தக் காலத்தில் எந்தெந்த அளவு அவர்களால் தெரிவித்திருக்க முடியுமோ, அப்படி அப்படித் தெரிவித்துத்தான் போயிருக்கிறார்கள் என் பதையும், அவைகளெல்லாம் வெறும் பக்திக்குரிய, பூஜைக்குரிய, பாராயணத்திற்குரிய ஏட்டுச் சுரைக்காய் களாக ஆகிவிட்டன என்பதையும் அவற்றை தெரிவித்த வர்கள், சித்தர்கள், அடியார்கள், வள்ளலார்கள், மகான்கள் என்கிற பெயர்களுக்குரியவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையும், இந்த பெரியார்களுடைய கருத்துக்கள் மக்களுக்குப் பிரயோசனப்படாமல் போவதற்குப் பார்ப் பனியம் என்னென்ன குள்ளநரிச் செயல்கள் செய்ய வேணுமோ, அதையெல்லாம் செய்து விட்டது என்பதை யும்  நாம் பல முறையும் விளக்கி வந்திருக்கிறோம்.

இந்தப் பார்ப்பனர்களின் மோசடித் தன்மை தொலைய வேண்டுமானால், இந்த நாட்டு மக்களை மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து தடுத்தாக வேண்டுமானால், மக்கள் எல்லோரும் ஒரே குலம் என்கிற நல்லுணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டுமானால், உலகத்தின் மற்ற நாடுகளைப் போல் நாமும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், முதலில் மக்களுக்கிடையே பரப்பப்பட்டிருக்கும் மதவுணர்ச்சியின் வேர்களுக்கு வெந்நீரை ஊற்ற வேண்டும்; குருட்டுத்தனமான மத வுணர்ச்சியை வளர்க்கும் பண்டிகைகள் வெறுக்கப்பட வேண்டும்; அயோக்கிய செயல்களுக்கெல்லாம் வளர்ப்பு பண்ணைகளாயிருந்து, மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மடாலயங்கள் எல்லாம் மக்களின் சொத்தாக ஆக வேண்டும்; காந்தியார் சொன்னது போல் விபசார விடுதிகளாயிருக்கும் கோவில்கள் எல்லாம் கோயில் பூனைகளுக்குப் பால் பண்ணையாக இல்லாமல், மக்களுக்கு அறிவுப் பண்ணையாக ஆக வேண்டும்; என்கிற கிளர்ச்சியை இந்த நாட்டில் கல்லெறிக்கும், சாணி வீச்சுக்கும் செருப்பு வீச்சுக்கும் இடையிலும், அக்கினித் திராவகம் வீசுதல், நெருப்பு வைத்து பந்தலை எரித்தல், சேலையையுரிந்து மானபங்கப்படுத்துதல் என்கிற காங் கிரசார் ஆட்சியில் நடந்த அக்கிரம அட்டூழிய செயல் களுக்கிடையிலும், நமது தலைவர்களும், தொண்டர் களும், தாய்மார்களும் எந்த விதமான சொந்த பிரயோ ஜனத்தையும் கருதாமல் விடாது செய்துவந்திருக்கிறார்கள் என்பதையும் திராவிட நாடு நன்கறியும்.

பார்ப்பனர்களின் அக்கிரமமான நடத்தையைப் பொறுக்க முடியாமல், மனிதப் பண்பின் மீது வைத்த நம்பிக்கையினால், இந்த மாதிரியான கிளர்ச்சி வலுவாக 25 வருடங்களாகவே நடந்து வந்தாலும், இந்த நாட்டு மக்களை ஏமாற்றி வாழ்வதையே தொழிலாகக் கொண்ட பார்ப்பன வர்க்கத்தின் பிரதிநிதிகளான இந்து, சுதேச மித்திரன் என்கிற விஷ ஊற்றுகளும், அவைகளின் கிளைகளான விகடன், கல்கி போன்ற விஷ சாக்கடைகளும் பாஷ்யங்கள், பட்டாபிராமன்கள் வரதாச்சாரிகள், வைத்தியநாதர்கள் என்கின்ற விஷ கொசுக்களும், பரவி, தீண்டி, கொட்டி வருகிற கொடுமைகளாலும், நம்முடைய இனத் துரோகிகளான கவிதாமணிகள், ரிப்பேர் செய்யும் பண்டிதர்கள் என்பவர்கள் அவர்களோடு கூடிக் கொண்டு அவர்கள் வீசி எறியும் எச்சிலை சுவைத்து ருசித்து, ரசித்துக் கொண்டு, முன்னோடும் பிள்ளைகளாய் இருந்து வருவ தாலும், மக்களுடைய சிந்தித்துணரும் திறனை எல்லாத் துறைகளிலும் பங்கு போட்டுப் பறிமுதல் செய்துவந்த துணிவினாலும் நம்மையே நாஸ்திகர்கள் என்றும், தேசத் துரோகிகள் என்றும், வகுப்புவாதிகள் என்றும் கூசாமல் பார்ப்பனர்கள் பட்டம் சூட்டினார்கள்.

தீவிரவாதிகள், அதி தீவிரவாதிகள் என்று அரசியலில் பெயர் எடுத்தவர்கள் எல்லாம், இந்த மதக் கொடுமையை அறிந்தும் கூட வெளியில் சொல்வதற்கு அஞ்சி வாழ்ந்த காலத்தில், மதவுணர்ச்சியைப் பெருக்குவது, வளர்ப்பது நல்லதல்ல. மத வெறி நாட்டிற்குப் பெரிய தீமையைச் செய்யும் என்று நாம் கூறிய போது நம்மை நாஸ்திகர்கள் என்று சொன்னதற்கு ஆக நாம் பின் வாங்கவில்லை. ஏன்? எப்படியாவது உண்மை வெளிப்படத்தானே வேண்டும்? எவ்வளவு காலத்திற்குத்தான் புரட்டர்களுடைய திருகு தாளங்கள் வெற்றியடையும்? என்று எண்ணிய உறுதியான நம்பிக்கையினாலேயே நம் நம்பிக்கை வீண் போக வில்லை. பெரியார் காந்தியாருடைய படுகொலைக்குப் பிறகு, இந்த நாட்டிலுள்ள எல்லா பத்திரிகைகளும், ஒரே குரலாக மகாத்மாவை மதவெறி அழித்துவிட்டது. மதவெறி ஒழிக! மத வெறியே மாண்டு போ! என்று கூறுவதைக் கேட்க, அப்பாடா! இப்பொழுதாவது இந்த பத்திரிகைகளுக்கு ஞானம் வந்து விட்டதே என்று நம் கோரிக்கை வெற்றி பெற்றதை எண்ணிப் பெருமூச்சு விட்டாலும், இவர்களுக்கு இந்தப் புத்தி வருவதற்காக காந்தியாரா படுகொலையடைய வேண்டும்? என்பதை யும், வந்த புத்தி நிலைத்திருந்து அதற்கான வழிகளில் ஈடுபட வேண்டாமா? என்பதையும்தான் இந்த நேரத்தில் வருத்தத்தோடு எண்ண வேண்டிவர்களாகவும் இருக் கின்றோம்.

இன்றைக்கு மதவெறி, மதவெறி என்று முழக்கமிடுகின்ற பத்திரிகைகள்,  அந்த மதவெறியை, விஷ நீரை ஊட்டுவ தற்காக என்னென்ன முறைகளைக் கையாண்டது? எவ்வளவு துணிந்து அயோக்கியத்தனமாகப் பொய் புளுகுகளை மூட்டை மூட்டையாகப் பரப்பியது? இதற்கு சித்திரங்கள், இசைகள், சினிமாக்கள், செய்தி தாபனங்களை எப்படி துணையாகச் சேர்த்துக் கொண்டது? என்ற இவைகளையெல்லாம் கொஞ்சமும் எண்ணிப் பாராமல் இப்போது மதவெறியே! மாண்டுபோ! என்று போடுகிற கூச்சலால் ஏற்படப்போகும் பிரயோசனமென்ன? முந்தின போக்குத் தவறான பாதை என்பதை உணராவிட்டால், இப்போது மதவெறி மதவெறி என்று சேர்ந்து கோவிந்தா போடுவதனுடைய அர்த்தமென்ன?

உண்மையாகவே மதவெறி கொடுமை யானது என்பதை இந்த நாட்டு பார்ப்பனர்கள் உணர்ந்தார்கள் என்றோ, பார்ப்பனப் பத்திரிகைகள், தேசியப் பத்திரி கைகள் தெரிந்துகொண்டு விட்டன என்றோ எவராவது சொல்ல முடியுமா? பார்ப்பனர்கள் உணரவில்லை, பார்ப்பன பத்திரிகைகள் தெரிந்துகொள்ளவில்லை என்ற நிலைமை இருந்தால் கூட பாதகமில்லை. ஒரு பக்கம் மதவெறி மதவெறி என்று கூப்பாடு போட்டுக் கொண்டே, மற்ற ஒன்பது பக்கங்களிலும் மதவெறியைப் பெருக்கு வதற்கான காரியங்களையே வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செய்கிறதென்றால் இந்த போக்குக்கு ஒரு முடிவில்லையா? ஏ! பார்ப்பனியமே! இந்த நாட்டையும் ரத்தக்கறை படிய செய்ய வேண்டும் என்பதிலே ஏன் உனக்கு இவ்வளவு ஆசை? என்பதை நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

திராவிடர் கழகம் ஒரு வகுப்பு வாத தாபனம். பார்ப்பனர்கள் மீது துவேஷத்தைப் பரப்பி வருகிறது. அதை இந்த நேரத்திலே ஒழித்துக் கட்டவேண்டும் என்கிறது இந்து. பேஷ்! ஒரே கல்லால் இரண்டு பட்சிகளை - ஏன் - மூன்று பட்சிகளை வீழ்த்தும் திட்டம் என்று அது உள்ளம் மகிழலாம். காந்தியாரைச் சாகடித்ததற்கு ஏதோ சில பார்ப்பனர்களையாவது பலி கொடுக்க வேண்டியிருக்கிறதே. இந்த பலியினாலேயே ஏன் திராவிடர் கழகத்தையும் வீழ்த்திவிடக் கூடாது? இதுதான் பார்ப் பனர்களின் விருப்பமும், திட்டமும். இந்த செயலுக்கு ஒத் துழைப்போமா? வேண்டாமா? எந்த அளவு ஒத்துழைக் கலாம்? எப்படி இதை வைத்துக் கொண்டு பயமுறுத்தலாம்? என்கிற ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றது, இன்றைய திராவிடர்களை அதிகமாகக் கொண்டிருக்கும் நம் திராவிட நாட்டு மந்திரி சபை. மந்திரி சபை மனம் வைத்தால் ஒரு நாலெழுத்து எழுதிவிட்டால் போதுமே என்று எதிர்பார்க்கின்றார்கள் நம் அருமைப் பார்ப்பனர்கள். எதிர்பார்க்கட்டும்! திராவிடர் கழகத்தை ஒழித்து விடுவ தற்காக எழுதுகின்ற அந்த நாலு எழுத்துக்களே, மந்திரி சபையையும் கவிழ்த்து விடுவதற்குப் போதுமானது என்று எண்ணுகிறது, அவர்களின் சூழ்ச்சி படிந்த மனம். அதுதான் அவர்கள் கருதுகின்ற மூன்றாவது பட்சியாகவும் இருக்கலாம்.

நாம் பார்ப்பனர்களுக்குப் பல முறை கூறியிருக்கிறோம். இது மனு மாந்தா காலமல்ல! உங்களுடைய பேடித்தனமான, மறைந்து தாக்கும் வேலைகள் எல்லாம் திராவிட நாட்டைப் பொருத்தவரையில் பயன்படாது! உங்களுக்குச் சில விபீஷணர்கள் அகப்பட்டாலும் கடைசிவரைக்கும் விபீஷணர்களாயிருக்க எந்த ஒரு திராவிடனும் அகப் படமாட்டான்! அப்படி அகப்பட்டாலும் அவன் ஒரு திராவிடனாகவும், திராவிடனுக்குப் பிறந்தவனாகவும் இருக்க மாட்டான் என்றே எதிர்கால வரலாற்றிலே இடம் பெறுவான்! அப்படியே சிலர் அகப்பட்டாலும் அவர் களுடைய துணையைக் கொண்டு திராவிடர்களை அழித்து விடலாமென்று மனதினால் எண்ண வேண்டாம்! ஒவ்வொருத்தனும் ஏன் நான் தேவடியாள் பிள்ளை? ஏன் நான் நாலாம் ஜாதி? அய்ந்தாம் ஜாதி? இந்த நாட்டை என் முன்னோர்கள் ஆளவில்லையா? இப்பொழுது நான் பாடுபடவில்லையா? உழைக்கிறவன் நான், அய்க்கியம், தேசியம், மதம், கடவுள், வெங்காயம் என்கிற பெயர்களால் மேனி வாடாமல் உண்ணுகிறவன் நீயா? என்று தாழ்த்தப் பட்ட தோழர்களிலிருந்து உயர்த்தப்பட்டதாக நடித்துக் கொண்டிருக்கிற மந்திரிகள் வரை கருதிக் கொண்டிருக்கிற காலம் இது.

நீங்கள் சொல்லி வந்த தேசத் துரோகிகள் என்கிற பட்டம் இனி நாட்டில் செலவாணியாகாது என்பதைத் தெரிந்துகொண்டு, வகுப்பு வாதிகள், வகுப்பு துவேஷிகள் என்கிற பட்டத்தைத் தீவிரமாகக் கட்ட ஆரம்பித்திருக் கிறீர்கள். இது நெஞ்சறிந்த பொய் என்று உங்களுக்குத் தெரியும்! வகுப்புத் துவேஷிகள் நீங்களா? அல்லது நாங்களா? இருந்தும், இந்த அபாண்டத்தைக் கண்ணை மூடிக் கொண்டு பரப்புகிறீர்கள்!

சொல்லுகிறவன் சொன்னாலும் கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு என்கிற பழமொழியைத் தெரிந்திருக்கும் நீங்கள் தான், அந்தப் பழமொழியை அறிந்திருக்கும் மந்திரிகளிடத்தில் தலையணை மந்திரம் செய்கிறீர்கள்! மெய்யாகவே நாங்கள் வகுப்புத் துவேஷிகள், உங்களை (பார்ப்பனர்களை) ஒழித்து விட விரும்புகிறவர்கள் என்று கருதுகிறீர்களா? அது உண்மையாக இருந்தால், உங்களுடைய அட்டூழியமான அநீதிகளால் எத்தனை அக்கிரகாரங்கள் இதுவரை சாம்பலாகியிருக்க வேண்டும்? எத்தனை பேர்கள் நடுத்தெருக்களிலேயே நாய்களைப் போலச் சாகடிக்கப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்? வட நாட்டிலே நடந்த மிருகச் செயல்களை நாள்தோறும் கேட்ட இந்த நாட்டில், வகுப்பு வெறி திராவிடர்களால் பரப்பப்பட்டு வருகிற நிலையிருந்திருந்தால், உண்மை யாகவே பார்ப்பனன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு புல் பூண்டு இங்கே இருக்க முடியுமா? ஏன் விபரீதமான முயற்சியில் இறங்குகிறீர்கள்! நீங்களே பார்ப்பனன், பிராமணன், துரோகிகள் என்று சொல்லிக் கொள்வதிலே, அழைக்கப்படுவதிலே வெட்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, உங்களைக் கொன்றெறிந்து விட வேண்டுமென்ற எண்ணம், அதற்கான நடவடிக்கை எங்களிடத்தில் ஒரு காலத்திலும் இருந்ததுமில்லை! இருக்கப் போவதுமில்லை! இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வதாயிருந்தால், முதலில் பார்ப்பனியத்திற்குப் பாதுகாவலாய் இருக்கும் எங்கள் தாய்களையும், தந்தை களையும், மனைவிகளையும் கொலை செய்ய வேண்டிய வர்களாவோம். ஏன்? நாங்கள் அழிய வேண்டுமென்று விரும்புவது பார்ப்பனர்கள் அல்ல. பார்ப்பனியமே.

இதற்கு மாறுபாடாக உங்களுடைய இரத்தத்தைச் சிந்தாமலே, எங்களுக்குள்ளே மோதச் செய்து எங்களை அழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கிறீர்கள்! கூடிக் கெடுப்பது, அடுத்துக் கெடுப்பது, பேசிக்கெடுப்பது என்கிற முறைகளும் அதைக் கையாளு கிற ஆண்களும், பெண்களும் என்கிற நிலையும் இனி பிரயோசனப்படாது என்ற முடிவுக்கு வந்தவர்களாய், இந்து மகா சபை என்கிற பெயரால் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் ஆயுதங்களைச் சேர்த்தீர்கள்! கோவில்களுக் குள்ளேயே கவாத்துப் பழகினீர்கள்! இவற்றை உங்களால் மறுக்கமுடியுமா?

மதவெறி, ஜாதிவெறி ஒழிய வேண்டும் என்பதிலே அக்கறையும், ஆசையும், உண்மையும் இருக்கிறதென்றால் என்ன செய்ய வேண்டும்?

மத சம்பந்தமான பேச்சுகளை, மதப்பெருமைகளைக் கூறுகின்ற நூல்களை, பேசுவது, எழுதுவது, வெளியிடுவது, விற்பது என்கிற உங்களுடைய போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதக் கதைகளை எழுதி எழுதிப் பாமரர்களை வஞ்சிப்பதையும், இராமாயணக் கதைகளை எழுதி, எழுதி இழிவுபடுத்தி வருவதையும், புராணங்களை எழுதி, எழுதி புல்லறிவை வளர்ப்பதையும் விட்டொழித்து விட வேண்டும். நிர்வாணப்படங்களைப் போட்டு, ஆடலழகிகளைக் காண்பித்து மக்களை ஆலயங்களுக்கு அழைக்கும் போக்குக்கு ஆதரவு அளிக்கக் கூடாது.

மடச்சாமிகளைக் காட்டி மகேஸ்வரன் பெயரைச் சொல்லி மக்களை மந்தமதியினராக்குவதை விட்டொழிக்க வேண்டும். புராண நாடகங்கள், புராண சினிமாக்களை வளர்ப்பது புனிதமானது என்ற போக்கை கைவிட வேண்டும். எந்த கலைகளுமே இந்த நாட்டுப் பழங்குடி மக்களின் வாழ்வைக் கெடுக்கும் நாச கருவிகளால் கையாளப்படுவது வெறுக்கப்பட வேண்டும். ஜாதிக்கொரு நீதி என்ற இந்துலாவை எடுத்துவிட உறுதி வேண்டும். ஒத்த தகுதிக்கு எல்லா மக்களையும் கொண்டுவர முயற்சிக்க வேண்டுமே தவிர, தகுதியில்லாத பலரை ஒரு பட்டியலில் சேர்த்து, தகுதியும் திறமையும் என்று பேசுவதை மறந்துவிட வேண்டும். மத வேறுபாடுகளைக் காட்டும் மதச் சின்னங்களை அணிந்திருப்பது ஆபத்து என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

இந்த வேலையை இன்னார்தான் செய்ய வேண்டுமென்ற ஜாதிக்கட்டுப்பாட்டை இந்தநாள் வரைதான் கூறி வந்தோம், இனி அந்தப் போக்கு உதவாது என்பதை உணர வேண்டும். காந்தியாரின் மரணத்தை அறிந்து கொள்ள முடியாத ஜோதிடர் வர்க்கங்களையும், தேவ பாஷை என்கிற செப்படி வித்தை செய்துவரும் முன்ஷிகள், சாஸ்திரிகள், புரோகிதர்கள் என்கிற புரட் டர்கள் வர்க்கங்களையும், வேத பாராயணப் பெயரால் வித விதமான வேஷம் போடுபவர்களையும் அம்பலத்தில் இழுத்து வந்து அவர்களின் அக்கிரமங்களை விளக்கிக் கூற வேண்டும். மக்களின் உழைப்பை, செல்வத்தை மதப்பெயர் கூறி எவர், எந்த முறையில் வஞ்சித்தாலும், அந்த இழிவை இன்றே ஒழிப்பதற்கு அக்கறை காட்ட வேண்டும்.

இவற்றை செய்வீர்களா? இக்காரியங்களை செய்ய முன்வராமல் மேலும் மேலும் வகுப்பு வெறியையே வளர்க்கப் போகின்றீர்களா? பதில் கூற வேண்டியதில்லை. நீங்கள் இனிச் செய்து வரும் செயல்களே நாட்டில் பதில் கூறுவதாக ஆகும். ஆனால், இந்துமத சாம்ராஜ்ய கனவை - வருணாசிரம வக்கிர ஆட்சிக் கனவை - எந்தப் பெயராலும், எந்த நடவடிக்கைகளாலும் உங்களால் இந்த நாட்டில் இனி ஏற்படுத்த முடியாதென்பது மட்டும் உறுதி.

'குடிஅரசு; - தலையங்கம் - 21.02.1948

- விடுதலை நாளேடு, 26. 5 .2019