வெள்ளி, 19 ஜூலை, 2019

திராவிடரும் - ஆரியரும் (2)

சென்றவாரத் தொடர்ச்சி


08.05.1948 -குடிஅரசிலிருந்து..

யாகம் என்றால் என்ன? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆடு, மாடு தின்ன ஆசைப்படும் சில பிராமணப் பைசாசங்கள் ஒன்று கூடிக்கொண்டு, அவற்றின் இரத்தம் வெளிப்பட்டால் ருசி கெட்டுவிடும் என்பதற் காக, அவற்றை வெட்டிக் கறி செய்யாமல், அவை களைக் கட்டிப் போட்டு, அவற்றின் விதைகளைக் கிடுக்கிக் கொண்டு கசக்கிக் கசக்கிச் சாக வைப்பார்கள். ஒரு ஆடோ, மாடோ இவ்விதம் சாக வைக்கப்பட பல மணி நேரங்கூட ஆகலாம். ஆனாலும், அகோர மாமிச பிண்டங்களான இந்த யாகப் பிசாசு களுக்கு அதுபற்றிக் கவலையேது? இவ்வாறு உயிர்வதை செய்யப்பட்ட மிருகத்தை யாக குண்டத்திலிட்டு, அதில் நெய்யூற்றி வேக வைத் துத் தின்பதுதான் மனுதர்ம சாஸ்திரப்படி செய்யப்படும் யாகம். இப்படிப்பட்ட கோரவதை கூடாது என்று தடுத்தவர்கள்தான் ஆரியரால் அரக்கராக சித்தரிக்கப்பட்டனர்.

சூத்திரனுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. யாகத்தை வெறுப்பவன் சூத்திரன். ஆகவே, யாகத்தை வெறுக்கும் திராவிடராகிய நாம் ஆரிய சாஸ்திரப்படி சூத்திரர்தான். ஆரியன் ஏது? சூத்திரன் ஏது? என்று நம்மைக் கேட்கிறார்கள் சில அப்பாவி மக்கள். சட்டம் கூறுமா சூத்திரன் இல்லையென்று? சூத்திரன், பிராமணன் இல்லையென்றால், கோயிலில் மணியடிக்கும் தொழில் ஒரே ஜாதிக்காரன் வசமே இருக்கக் காரணமென்ன? கோயில் அர்ச்சகர்கள் யார்? அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்? சமஸ்கிருதம்தான் தேவபாஷை, மற்றவை மிலேச்ச பாஷை, நீச்ச பாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறியிருப்பதை நீ அறிவாயா? திடுதிடுவென்று நாலு ஜாதியாரும் கோயிலுக்குள் போவோம், சற்றிருங்கள் என்று கூறி, பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக் கொண்டு மூலஸ்தானத்திற்குள் போய்விடு கிறானா இல்லையா பாருங்களேன்? இதைப் பார்த்த பிறகும் எந்தத் தோழனாவது பிராமணன் சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் அவன் அறிவு மலையேறி விட்டது என்றுதானே கூறவேண்டும். ஏன் இந்த உயர்வு தாழ்வுக் கொடுமையை இன்னும் மூடி வைக்கப் பார்க்கிறீர்கள்? உள்ளதை மூடி வைத்தால் அது புரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ!

வந்த சுதந்திரம் மனிதத் தன்மையைத் தந்ததா?

திராவிட மக்கள்தான் சூத்திரர்களாக இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திரம் வந்துவிட்டதென்று கூறிவிட்டால் மட்டும் திருப்தி ஏற்பட்டுவிடாது. இந்த உயர்வு தாழ்வு ஒரே மட்டமாக்கப்படவேண்டும். பணம் பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பதவி பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பட்டங்கள் பல பெற்றாலும் இப்பட்டம் நீங்காது. பணம், பட்டம், பதவி இவற்றை என்று வேண்டுமானாலும் பெற்றுவிடலாம். ஆனால், இந்த இழிவு நீங்குவது மட்டும் அவ்வளவு சுலபமானதல்லவே. சர்.எ. இராமசாமி முதலி யார் பட்டம் பல பெற்றவர்தான். பணமும், செல்வாக்கும் உடையவர்தான். பெரிய பதவிகளை எல்லாம் வகித்தவர்தான். வகித்தது மட்டுமல்ல, எல்லாவற்றையும் திறம்பட நடத்தி உலகத்தின் இரண்டாவது அறிவாளி என்று அமெரிக்க மக்களாலேயே புகழ்ந்து பேசப் பட்டவர்தான். இன்றும் திவான் பதவியில் இருந்து வருபவர்தான் என்றாலும், அவர் சூத்திரர்தானே? அவ்விழிவு அவரது பட்டத் திற்கோ, பணத்துக்கோ, பதவிக்கோ பயந்து ஓடிவிடக் காணோமே! ஆகவே, இவ்விழிவு நீங்க வேண்டுமென்பதுதான் பட்டம், பணம், பதவி இவை பெறுதலைவிட மகா முக்கியமான காரியமாகும்.

இவ்விழிவு நீங்கினால் தம்பிழைப்புப் போய்விடுமே என்று அஞ்சுபவர்களுக்காகவோ அல்லது அவர்களுக்காகப் பரிதாபப்படுபவர் களுக்காகவோ நாம் இவ்விழிவை இதுவரை மறந்திருந்தால்தான், ஒரு காலத்தில் உலகத் திற்கே நாகரிகம் கற்பித்துக் கொடுத்த நாம் இன்று ஆரியர்களால் சின்னப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

நாம் சுதந்திரம், சுயேச்சை பெற்றுவிட்டால் போதுமா? நாம் மனிதத் தன்மை பெறவேண் டாமா? ஒருவன் உயர்ஜாதி மற்றொருவன் இழிஜாதி என்ற பாகுபாடு இருக்கும் வரையிலும், நாம் எப்படி மனிதர்களாகி விட் டோம் என்று கூறிக் கொள்ள முடியும்? இந்த நாட்டு மக்கள் மனிதத் தன்மை அடைவதற்காக நான் செய்துவரும் இவ்வேலையை யார் ஒப்புக்கொண்டாலும், நான் அவருக்குக் கையாளாயிருந்து பணியாற்றத் தயாராயிருக்கிறேனே! நான் வேண்டியது இழிவு நீக்க வேலையே ஒழிய தலைமைப்பதவி அல்லவே.

யார் கவலைப்பட்டார்கள்?

இதுவரை இவ்விழிவு பற்றி யாராவது கவலை எடுத்துக்கொண்டதுண்டா? எத் தனையோ ரிஷிகள், எத்தனையோ நாயன் மார்கள், எத்தனையோ குருமூர்த்திகள், எத்தனையோ ஆச்சாரியர்கள் தோன்றிய நாடுதானே இது. இவர்களுள் எத்தனை பேர் இவ்விழிவு நீங்க என்ன முயற்சி எடுத்துக் கொண்டார்கள்? தெய்வீகப் பக்தியுள்ள சிலர் ஜாதிப் பிரிவினையை எதிர்த்தனர் என்றாலும், ஆரியம் அதற்கு அடிபணியவில்லையே? மூட நம்பிக்கைகளை வெறுத்த சித்தர்களை நாஸ் திகர் என்று கூறி, மக்கள் அவர்களைப் பின்பற்றாதபடி செய்துவிட்டதே? ஜீவஹிம்சை கூடாது என்று கூறிய பவுத்தர்களையும், சமணர் களையும் கழுவிலேற்றி விட்டதே? வருணாசிரமத் தைப் பாதுகாக்கத்தானே இவ்வளவும் செய்யப் பட்டது. அதுவும் அந்த வருணாசிரம தர்மத்தில் ஆரியத்தின் பிழைப்புச் சிக்கிக் கொண்டதால் தானே அவ்வளவும் செய்யப்பட்டது.

கீதையை எறிந்து கைகழுவி

திருக்குறளைக் கையிலெடு!

பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்த காமாந்தகாரனான கிருஷ்ணன் ஏன் கடவுளாக்கப்பட்டான்? அவனது உளறல் மொழிகள் அடங்கிய கீதை ஏன் நித்திய பாராயணமாக்கப்பட்டு விட்டது? மகா ஒழுக்க சீலரான திருவள்ளுவர் ஏன் கடவுளாக்கப்பட வில்லை? அவரது பொய்யாமொழிகள் அடங்கிய குறள் ஏன் பாராயணமாக்கபட வில்லை? இவற்றை நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா? கிருஷ்ணனும், கீதையும் வருணாசிரம தர்மத்தை (ஜாதிப் பிரிவினையை) ஆதரிப்பதுதான், ஆரியத்தின் போற்றுதலுக்குக் காரணம் என்பதை நீ இன்றாயினும் உண ருவாயா? உன் திருவள்ளுவரும் திருக்குறளும் ஆரியத்தால் போற்றப்படாமைக்குக் காரணம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற கூற்றுத்தான் என்பதை உணர்வாயா? இன்றாயினும் உணர்வு பெற்று கிருஷ்ண னையும், கீதையையும் தூக்கியெறிந்து விட்டு உண்மைத் திராவிடனான வள்ளுவனையும், அவன் குறளையும் அத்திட்டத்தில் வைப்பாயா?

ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப் பற்று?

ராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார். உன் இராமலிங்கம் எந்த விதத்தில் அவரைவிடத் தாழ்ந்தவர்? அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண் டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரை யாவது வடநாட்டானுக்குத் தெரியுமா? கபிலன் கூறியது என்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி உனக்கு இவ்வளவு வடநாட்டு ஆரியப்பற்று? இனியேனும் இன உணர்வு கொண்டெழு தம்பி!                           தொடரும்..

 
- விடுதலை நாளேடு,19.7.19

சனி, 13 ஜூலை, 2019

புரிந்ததா - இதுதான் பெண் விடுதலை!




இராஜன்: ஏண்டா, டேய்! இராமா! பெண்கள் விடுதலை என்று பேசுகிறார் களே, அதென்ன விடுதலை! எனக்கு ஒன்றும் புரியவில்லையே?

இராமன்: உனக்கெப்படியப்பா புரி யும்? உனக்கு கால் டஜன் பெண்டாட் டிகள் இருக்கிறார்கள், அரை டஜன் வைப்பாட்டிகள் இருக்கிறார்கள். அதோடு நிறையப் பணமும் இருக்கிறது.

இராஜன்: நான் சொல்லுவது உனக்கு கேலியாக இருக்கிறது, இந்தப் பெண்களிடமிருந்து எனக்கு (ஆண் களுக்கு) விடுதலை கிடைப்பது தான் பெரிய கஷ்டமாயிருக்கிறது. ஒருத்தி விட்டால் மற்றொருத்தி இருக்கிறாள். இவர்களை விட்டு நான் எப்படி - விடுதலை அடைவது?

இராமன்: சரிதான், இப்போது புரிந்தது. நீ அந்தப் பெண்களிடம் கஷ்டப்படுவதனால். உனக்குத்தான் விடுதலை வேண்டும் என்கிறாய். உனக்கு 9 பெண்கள் எதற்கு? ஒரு பெண் இருந்தால் போதாதோ? ஒரு பெண் 9 கணவனை மணம் செய்து கொண்டும் காதலனாக 72 வைத்துக் கொண்டும் இருந்தால் நீ அந்த ஒன்ப தில் ஒருவனாக இருக்க சம்ம திப்பாயா?

இராஜன்: ஒரு பெண்ணுக்கு 9 புருஷன் என்றால் அது என்ன மிருகமா? நாமென்ன மிருக சாதியா? நன்றாய்ச் சொல்லுகின்றாய் நாக்குக் கூசாமல்?

இராமன்: பெண்கள் விடுதலை என்றால் இப்போது உனக்கு அர்த்த மாச்சுதா? நீ ஒன்பது பெண்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய இயற்கை உணர்ச்சிக்கு உன்னை வலிய இழுக்க வேண்டிய மாதிரிக்கு அவர் களை அடைத்து வைக்கலாம். அது மனுஷத்தன்மை 'என்கிறாய். ஒரு பெண் 9 கணவனை வைத்துக் கொண் டிருந்தால் அது மிருகத்தனம் என்கி றாய், இந்தக் கொள்கை போக வேண்டு மென்பதைத் தான் பெண்கள் விடு தலை என்று சொல்லுவது புரிந்ததா?

(பெண்கள் விடுதலை"

என்னும் தலைப்பில், "சித்திரபுத்திரன்” என்னும் புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.

- 27.9.1947,

('குடிஅரசு' பக்கம் 7)

-  விடுதலை ஞாயிறு மலர், 15.6.19

கண்ணை மூடிப் பின்பற்றுங்கள்! கருப்புச் சட்டையை எங்கும் பரப்புங்கள்! -II

05.06.1948 - குடிஅரசிலிருந்து.... -

பார்ப்பனத் தோழர்களே! எங்களை முட்டாள் களென்று கூறி உங்களைப் புத்திசாலிகள் என்று பெருமையடித்துக் கொள்கிறீர்கள்! ஆணவப்பட்டு அழிந்து போகாதீர்கள்! புத்திசாலிகளானால் புத்திசாலிகளாகவேப் பிழைத்துக் கொள்ளுங்கள்! உங்களவரே இந்தியா முதன் மந்திரியாயிருப்பது பற்றியும், உங்களவரே கவர்னர் ஜெனரல் ஆகப் போவது பற்றியும் நீங்கள் பெருமையடித்துக் கொள் கிறீர்கள்! இவர்கள் பார்ப்பனர்களாய் இருப்பதால் தான் இந்தப் பதவிக்கு உரியானார்களே தவிர, எங்களவர்களை விட அதிகமான யோக்கியதை ஒன்றும் இவர்களுக்கு இருந்துவிடவில்லை என் பதை ஒப்புக்கொள்ளுங்கள்! இந்நாட்டில் எத்தனை யோ அறிவாளிகளான திராவிடத் தாய்மார்கள் இருக்க ஒரு பார்ப்பனத்திதான் இம்மாகாணத்தில் மந்திரியாக முடிந்தது என்றாலும், அதுவும் உங் களவர் ஆதிக்கத்தினால்தானே ஒழிய, புத்திசாலித் தனத்தால் அல்ல என்பதையும் அறிந்து கொள் ளுங்கள்! 100க்கு 3 பேராயுள்ள உங்களுக்கு உயர்ந்த பதவிகள் எல்லாம் சொந்தமாய் இருப்பது முறை யல்ல! பாடுபடும் பாட்டாளிகள் சூத்திரர்களாகவும், பாடுபடாத சோம்பேறி நீங்கள் உயர்ஜாதிக்காரர் களாகவும் இருப்பது நேர்மையல்ல என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்! பொதுவாக உங்களுக்குச் சகல உரிமைகளும் வாங்கிக் கொடுத்தவர்கள் திராவிடர்கள்தான் என்பதை, இந்நாட்டிற்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்ததும் திராவிடர் கள்தான் என்பதை, நீங்கள் உணருங்கள்! கரையான் புற்றெடுக்க கருநாகப் பாம்பு குடிபுகுந்தது போல், நீங்கள் சுயராஜ்யத்தை உங்களவரின் நன்மைக் காகவே பயன்படுத்திக் கொள்ளல் நியாயமல்ல என்பதையும் உணருங்கள்! எல்லோருக்கும் சமவுரிமை இருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள்! உங்களுக்குத்தான் புத்தியுண்டு என்கிற அகம்பாவ அக்கிரகாரப் பேச்சை விட்டொழியுங்கள்! எங் களையும் உங்கள் சகோதரர்களைப் போல் நடத் துங்கள்! எல்லோரையும் சமமாகப் பார்ப்பவர்கள் பிராமணர்கள் என்று கூறிக்கொண்டு எதற்காக உச்சிக்குடுமி வைத்துக் கொள்கிறீர்கள்? எதற்காகப் பூணூல் போட்டுக் கொள்கிறீர்கள்? எதற்காக எங்களைக் கண்டால் தாவிக் குதிக்கிறீர்கள்? எத்தனை நாளைக்கு எங்களவர்களில் சிலரை உங்கள் கையாள்களாக வைத்துக் கொண்டு எங்களை ஏய்த்துவரலாம் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் பக்கம் வந்து விட்டால் உங்கள் கதி என்ன ஆவது?

இன்று கூட ஒருவர் வந்தாரே!

இப்போதே வந்து கொண்டிருக்கிறார்களே! அதற்கென்ன செய்யப் போகிறீர்கள்? இன்று கூட ஒருவர் வந்து விட்டாரே, உங்கள் கூடாரத்தை விட்டு? சென்ற கருஞ்சட்டை மாநாட்டின் போது மதுரையில் எங்கள் பந்தலைக் கொளுத்துவதில் முக்கியப் பங்கெடுத்துக் கொண்ட தோழர் ஒருவர் என்னிடம் வந்து, அய்யா நான் அக்கிரகாரக் கும்பலின் பேச்சைக் கேட்டு அன்று ஏமாந்து போனேன். இன்று முதல் நான் உங்கள் சிஷ்யன். என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரே! அப்பா நீ மட்டுமல்ல, நானும் இப்படித்தானப்பா ஏமாந்தேன். ஆகவே மன்னித்து ஏற்க வேண்டும் என்று ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர்களோடு சேர்ந்தேன் என்று ஆறுதல் கூறினேன்! ஒவ்வொரு தோழருக்கும் இப்படித்தானே நடக்க நேரிடும்! அந்த மதுரைக்காரரைத் தூண்டி விட்ட அக்கிரகாரத்து அய்யர் கூறினாராம், டேய் நீ நேற்று வரை நீ  ரங்கசாமியாயிருந்தே, இன்று நீ  ரங்கசாமி நாயக்கர் ஆகிவிட்டே என்று. (மதுரைத் தோழர் பெயர் நிச்சயமாக வெறும் ரங்கசாமி அல்ல. குறிப்புக்காக இந்தப் பெயர் சொல்ல நேர்ந்தது) அதற்கு அந்தத் தோழர் கூறினாராம், நானாவது நேற்று வரை வெறும் ரங்கசாமியாயிருந்து இன்று ரங்கசாமி நாயக்கரானேன், ஆனால் நீ பிறந்தது முதற்கொண்டு அய்யராகவே இருந்து வருகிறாயே, இது நியாயமாகப்படுகிறதா உனக்கு என்று கேட்டாராம். கேள்வி கேட்ட பார்ப்பனர் பேசாமல் வாயை மூடிக்கொண்டாராம்.

பார்ப்பனர்கள் தரும் தொல்லைகள்

இந்தப் பார்ப்பனர்கள்தான் எங்கு பார்த்தாலும் நமக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். நமது கூட்டங்களுக்குத் தடை விதிக்கும்படி பார்ப்பன சப்-இன்ஸ்பெக்டர்களைத் தூண்டுகிறார்கள். நமது கருப்புச் சட்டைக்காரர்கள் மீது தடையுத்தரவு பிறப்பிக்கும்படி சர்க்காரைத் தூண்டுகிறார்கள். பார்ப்பன வாத்தியார்கள் நமது பிள்ளைகளுக்குத் தொந்தரவு கொடுக்கிறார்கள். பார்ப்பனத் தலைமை உபாத்தியாயர் திராவிட உபாத்தியாயர்களுக்குத் தொல்லை கொடுக்கிறார். நாம் கோரும் முன் னேற்றத் திட்டங்களையெல்லாம் கூடுமான அள வுக்கு எதிர்க்கிறார்கள். ஆனால் அது சட்ட மாகியவுடன் அதன் முழுப்பலனையும் அவர்களே அடைந்து கொள்கிறார்கள். பெண்களுக்கு வயது வந்த பிறகுதான் கல்யாணம் செய்ய வேண்டுமென்று நாம் கூப்பாடிட்ட போது எதிர்த்தார்கள். ஆனால், அது சட்டமான பிறகு அவர்கள்தான் அதன் முழுப் பயனையும் அடைந்து வருகிறார்கள். விவாகரத் துரிமை, பதிவுத் திருமணம், சொத்துரிமை ஆகிய எதையும் எதிர்ப்பவர்கள் இவர்கள்தான். இப்படி யாகப் பார்ப்பனர்கள் நம்மை எவ்வளவுதான் எதிர்த்து வந்த போதிலும் நமக்கு ஏதோ நல்ல காலமாய்த்தான் இருந்து வருகிறது. நாம் இதுவரை உயிரோடிருப்பதே ஒரு நல்ல காலம்தான்.

நான் இறந்தாலும் இனி நான் இறந்தாலும் ஏனையத் திராவிடத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிடமாட்டார்கள். தொடர்ந்து போராடி, வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. நமது கொள்கைகள் ஒரு அளவுக்குப் பொது மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம் போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடம் கொடுக்காது, நம் இஷ்டப்படி நடக்காத அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்காது. நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரமே ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக வேண்டும். நீங்கள் என்ன சட்டைக்காரர்களோ என்று நம்மைச் சிலர் கேட்கக் கூடும். நம் நாட்டில் சட்டைக்காரர்கள் என்றொரு கூட்டம் இருந்து வருவது உண்மைதான். அவர்கள் பல ஜாதிக்குப் பிறந்தவர்கள், ஆகவே வெறும் சட்டைக்காரர்கள் என்று மட்டும் அழைக்கப்பட்டு வருகிறார்கள். நாம் அப்படிக்கல்ல, நாம் ஒரே ஜாதிக்குப் பிறந்தவர்கள். ஆகவே கருப்புச் சட்டைக்காரர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்கிறோம். கருப்புச் சட்டை ஒரு படை யமைப்பின் சின்னமல்ல. அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம், துக்கப்படு கிறோம், அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி. பாடுபட்டுப் படி அளந்துவிட்டுப் பட்டினி கிடக்கும் நானா பஞ்சமன்? என் பாட்டின் பலனால் நோகாமல் உண்டு வாழும் நீயா பார்ப்பனன் இது நியாயமா?

கேள்விகளின் அறிகுறி கருப்புச்சட்டை

பாடுபடும் எங்களுக்கெல்லாம் இழிவான வேலைகள், பாடுபடாத உங்களுக்கெல்லாம் மந்திரி வேலையா? இது நியாயமா? பாடுபடும் நாங்கள் எல்லாம் அய்.சி.எ படிப்பதா? கலெக்டர் ஆவதா? இது நியாயமா?

தொடரும்

-  விடுதலை நாளேடு, 13.7.19

ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)



10.01.1948  -குடிஅரசிலிருந்து...

* ஏழை என்பவன் யார்?

தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப் பந்தத்திலுள் ளவன்.

இக்கூட்டத்தார் களுக்குத் தான் பார்ப்பன மதப்படி சூத் திரர்கள் என்கின்ற பெயர்.

முதலாளிகள் என்பவர்கள் யார்?

சரீரத்தினால் வேலை செய்யும் ஆள்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக் குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.

* குடியானவர்கள் என்பவர்கள் யார்?

பூமியைத் தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.

மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?

தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான பூமியை  உடையவர்கள்.

* பிராமணர்கள் என்பவர்கள் யார்?

எக்காரணம் கொண்டும் சரீரப் பிரயாசைப் படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ, கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்துகொண்டு தங்கள் சமுகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியான உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்.

* பிச்சைக்காரன் என்பவன் யார்?

பாடுபட சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு ஏமாற்றுவ தாலும், சண்டித்தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள்.

செல்வவான்கள் என்பவர்கள் யார்?

தன் வாழ்க்கைத் திட்டத்திற்கு மேல் பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

* தரித்திரர்கள் என்பவர்கள் யார்?

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் - நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள். தங்கள் வரவுக்கும், தகுதிக்கும் மேல் வாழ்க்கை முறையை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்.

 - விடுதலை நாளேடு, 13.7.19

வெள்ளி, 12 ஜூலை, 2019

திராவிடரும் - ஆரியரும்

08.05.1948 - குடிஅரசிலிருந்து.... -


திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் அவசியத்தைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் எதிர்காலத்தைப்பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது மிகமிக அவசியம். திராவிடர் கழகம் என்பது இச்சென்னை மாகா ணத்தில் 100க்கு 95 பேராயுள்ள பெரும்பான்மை மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஒரு கழகம். அதாவது ஆரியரல்லாத, தற்போது சூத்திரர் என்று இழிவாகக் கருதப்பட்டுவரும் பிராமணர் அல்லாத மக்களின் நலத்திற்காகப் பாடுபட்டு வரும் கழகம். திராவிடர் கழகத்திற்கு வேறு பெயர் கூற வேண்டு மென்றால் ஆரியரல்லாதார் கழகம் என்றோ, அல்லது சூத்திரர் கழகம் என்றோதான் அழைக்க வேண்டியிருக்கும். சூத்திரர் என்றால் பார்ப்பனரின் தாசிமக்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள், 4 ஆம் ஜாதி, 5 ஆம் ஜாதி என்று பொருள்; ஆரியர் அல்லாத மக்களுக்கு சூத்திரர் என்ற பெயரை நாங்களாகக் கற்பித்துக் கொண்டோம், வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பதற்காக, என்று சிலர் கூறுவதுபோல் நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது.

சூத்திரர் என்பது பார்ப்பனர் படைப்பே

சூத்திரர் என்ற பெயர் ஆரியரல்லாத மக்களுக்கு ஆரியர் கொடுத்த பெயர். சூத்திரர் என்று நம்மை இழிவாக அழைத்தது மட்டுமல்ல அவர்கள் தங்கள் வேதத்திலும், சாஸ்திரங்களிலும் கூட அப்படித்தான் எழுதி வைத்துள்ளார்கள். இதிகாசங்களிலும் இதையே வலியுறுத்தி இருக்கின்றனர். கடவுள் பேரால் நம்மைச் சூத்திரர் என்றுதான் அறிமுகப் படுத்தியிருக்கின்றனர். ஆகவே, இது நம்மால் வேண்டுமென்றே கற்பிக்கப்பட்டதல்ல, பார்ப்பனர் கற்பித்ததுதான்.

திராவிடர் என்பது கற்பனையல்ல

திராவிடர் என்ற பெயர் அப்படி யாராலும் கற்பிக்கப்பட்டதல்ல. ஆரியர் என்ற பெயரும் அப்படித்தான்  என்று, மக்கள் அவரவர் வாழ்ந்து வந்த தேசத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப, அமைந்திருந்த அங்கமச்ச அடையாளங்களைக் கொண்டு பல இனப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட னரோ, அன்று இரண்டு வெவ்வேறு இனங்களுக்குக் கொடுபட்ட பெயர்தான் திராவிடர், ஆரியர் எனப்படும் பெயர்கள், இதே சமயத்தில் கொடுபட்ட பெயர்தான் மங்கோலியர் என்பதும், நீக்ரோக்கள் என்பதும். உஷ்ணமான ஆப்பிரிக்கக் காட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த சற்று கரடுமுரடான மக்களை நீக்ரோக்கள் என்று அழைத்தனர். நல்ல குளிர்ப் பிரதேசமான மத்திய ஆசியாவில் வசித்து வந்த தவிட்டு நிற மக்களுக்கு ஆரியர் என்று பெயர் அளித்தனர். அதற்கடுத்தாற்போல் சற்று குட்டை யாகவும் சப்பை மூக்குடனும் சீனா, ஜப்பான் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மங்கோலியர் என்று அழைத்தனர். இப்பிரதேசங்களுக்குத் தெற்கே சற்று சம சீதோஷ்ணமான சமவெளிகளில் வாழ்ந்த தென்னாட்டு மக்களைத் திராவிடர்கள் என்றழைத்தனர்.

பிரிவுக்குக் காரணம் அங்கமச்சமேயன்றி

பிறப்பு வேறுபாடல்ல

ஆகவே, அன்று அங்கமச்ச அடையாளங்களைக் கொண்டு மக்களைப் பல இனங்களாகப் பிரித்தார் களேயொழிய, ஒருவன் கடவுளின் நெற்றியில் இருந்து தோன்றியவன் என்றோ, மற்றொருவன் கடவுளின் பாதத்திலிருந்து தோன்றியவன் என்றோ அல்லது கண்ணில் இருந்து வந்தவன், காதிலிருந்து வந்தவன், மூக்கிலிருந்து வந்தவன் என்றோ பிரிக்கவில்லை. இதை நான் பேர் ஊர் தெரியாத எவனோ, மாட்டுக்கும் மனிதனுக்கும் பிறந்த எவனோ எழுதியதாகக் கூறப்பட்டு வரும் எந்த சாஸ்திரங்களைப் பார்த்தோ, வேதங்களைப் பார்த்தோ கூறவில்லை. சரித்திர ஆராய்ச்சி நிபுணர் களின் முடிவை ஆதாரமாக வைத்து எழுதப் பட்டதும், அரசாங்கத்தாரால் அங்கீகரிக்கப்பட் டதும், உங்கள் நாலாவது அய்ந்தாவது வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்குப் பாடப் புத்தகமாக இருந்து வருவதும், அசல் ஆரியப் பார்ப்பனர்களால் எழுதப்பட்டிருப்பதுமான புத்தகங்களைப் பார்த்துத்தான் கூறுகிறேன்.

பார்ப்பனர்களின் பசப்பான பொய்யுரை

என்னப்பா இன்றைக்குக் கூட்டமாமே என்ன விசேஷம் என்று யாராவது இன்று ஒரு ஹோட்டல் அய்யன் கேட்டிருப்பாரானால், அவர் என்ன கூறியிருப்பார் தெரியுமா? எவனோ ஈரோட்டிலிருந்து ஒரு அயோக்கியன் வருகிறானாம். அவன் மைலாப் பூர் பார்ப்பான் ஒருவனை ஏதோ பணங் கேட் டானாம் அவன் கொடுக்க மறுத்துவிட்டானாம். அதிலிருந்து பார்ப்பனர்களைத் திட்டுவதையே தொழிலாகக் கொண்டு பிரசாரம் செய்து வருகிறான். அதுக்கேன் போப்போறீங்க. அவ்வளவுக்கும் பார்ப்பனத் துவேஷமாகவே இருக்கும் என்றே கூறியிருப்பான். அப்படித்தானாக்கும் என்று நினைத்தே சற்று தயக்கத்துடன்தான் நீங்களும் வந்திருப்பீர்கள்.

யார் என்ன கூறியிருந்தாலும் சரியே. நான் கேட்கிறேன், பண்டிதர்கள், பாவலர்கள் யாராயிருந்தாலும் பதில் கூறும்படி சவாலிட்டுக் கேட்கிறேன்.

இந்தியா, இந்து இன்று வந்த பெயர்கள்

இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பெயரோ, இந்துக்கள் என்ற பெயரோ, எங்காவது வழங்கப்பட்டிருந்ததாக உங்களில் யாராவது கூற முடியுமா? கூற முடியுமானால், அதற்கு உங்கள் வேதத்திலோ, சாஸ்திரத்திலோ, இதிகாசங்களிலோ ஒரே ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா? ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! யாராவது சொல் வார்களானால், மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனே! நன்றியறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக் கிறேனே! 200 ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தின் படி இத்தேசத்திற்கு, இந்தியா என்று பெயர் இருந்ததாக யாராவது காட்ட முடியுமா? இந்தியா என்பதும், இந்துக்கள் என்பதும் நடுவாந்தரத்தில், அதுவும் சமீபத்தில் ஆரியர்களால் கற்பித்துக் கொள்ளப்பட்ட பெயர்களே ஒழிய பழைய மூலப் பெயர்கள் அல்ல. ஆனால், ஆரியர், திராவிடர் என்ற பெயர்கள் மட்டும் என்று தோன்றியனவோ என்றுகூட வரையறுத்துக்கூற முடியாத அளவுக்குப் பழைமைப் பெயர்கள். ஆரியர் அல்லாத திரா விடர்களைத்தான் ஆரியர்கள் தஸ்யூக்கள் என்றும், சூத்திரர் என்றும், இழிவான வேலைகளுக்கே உரியவர்கள் என்றும், அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறியிருக்கின்றனர். இதை நாம் கூறவில்லை. சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இரா மாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட் களாக உழைக்க ஒப்புக்கொண்டவர்களைச் சூத்திரர், பஞ்சமர் என்றும், தம்மை எதிர்த்துத் தம் ஆட்சியை வெறுத்து ஓடியவர்களை அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறி வந்திருக்கிறது.

யாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்

நம்மவர் தென்னாட்டில் பெரும் பகுதியாகவும், வடநாட்டில் ஆரியர் பெரும் பகுதியாகவும் இருப்பது வட நாட்டிலிருந்த திராவிடர்கள் ஆரிய எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தென்னாட்டை நோக்கி வந்து இருக்கவேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது. ஆரியர்களின் முக்கிய சடங்காகிய யாகத்தை எவன் பழித்தானோ, கெடுத்தானோ அவனே ஆரியர்களால் அரக்கனென்றும், இராட் சதனென்றும் கூறப்பட்டான். ஆகவே, யாகத்தில் உயிர்ப்பலி கூடாது, அத்தியாவசியமான பொருள் கள் நெருப்பில் போட்டு எரிக்கப்படக் கூடாது என்று கூறும் நம்மைத்தான், அரக்கர் என்கின்றனர் இந்த அன்னக்காவடிப் பார்ப்பனர். இன்றும் நாம் யாகத்தைத் தடுக்கிறோம். பழிக்கிறோம். ஜீவஹிம்சை கூடாது என்று கெஞ்சிக் கூத்தாடிச் சர்க்காருக்கு விண்ணப்பித்துக் கொண்டு யாகங்களின் மீது தடையுத்தரவு வாங்கி வருகிறோம்.    - தொடரும்

-  தந்தை பெரியார்
- விடுதலை நாளேடு 12. 7 .19

ஞாயிறு, 7 ஜூலை, 2019

நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்!



தந்தை பெரியார்


பணவசதியும் சிபாரிசு வசதியும் உடையவர்களே, இன்றையப் படிப்புத் துறையில் முன்னேற்றமடைய வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் இப்போதையக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப் படைதான் திராவிடர்கள் 100க்கு 90 பேருக்குமேல் படியாதவர்களாய் இருப்பதற்குக் காரணமாகுமென்றால், இதை அவினாசிலிங்கம் அவர்களோ, மற்றவர்களோ மறுத்துச் சொல்ல முடியாது.

திராவிட சமுதாயத்தில் நூற்றுக்குப் பத்துப் பேராவது படித்திருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகிற கணக்கு, தன்பெயரிலே கூட இரண்டொரு எழுத்துக்களை விட்டு விட்டு, கையெழுத்துப் போடும் நபர்களையும் சேர்த்துக் கூறுவதாகும் என்கிற உண்மையைத் தெரிந்தால், "பார்ப்பனர்கள் அளவில் படித்தவர்கள்" என்கிற எடைபோடும்போது 100க்கு 5 பேர்கூட படித்தவர்கள் என்று சொல்லுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆக மாட்டார்கள் என்பதும், இந்த அய்ந்து பேர்கூட திராவிடர் கழக (நீதிக்கட்சி)க் கிளர்ச்சியின் பயனால் படித்தவர்கள் ஆனார்கள் என்பதும், திராவிட சமுதாயம் என்கிற உரிமையினால் இந்த அய்ந்து பேரும் படிக்கவும், படித்து உத்தியோகமோ மற்ற தொழில்களோ கைக்கொண்டு வாழவும் ஆனநிலை ஏற்பட்டிருந்தாலும், இந்த அய்ந்து பேர்களில் அரைக்கால் பேர்வழிகூட திராவிட சமுதாயத்தின் நன்மைக்கான காரியங்களில் கருத்தைச் செலுத்துவோர் இல்லை என்பதும், அதற்கு மாறாகத் தன் சமுதாயத்தை காட்டிக் கொடுத்து, அடமானம் வைத்து, "கிரையம் செய்து" கொடுத்துவிட்டுத் தங்கள் சொந்த வாழ்வுக்கு, வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்து கொண் டவர்களே ஏராளம் என்பதும், இந்த மாதிரியான போக்கிலே படித்தவர்கள் என்பவர்கள் போய்க் கொண்டிருப்பதினால்தான்  திராவிட சமுதாயம் சூத்திரச் சமுதாயமாக, சண்டாளச் சமுதாயமாக, வேசி மக்கள் சமுதாயமாக இருந்து வரும் நிலைமை இருக்கிறது என்பதும் எவரும் இல்லை என்று சொல்லிவிடமுடியாத சங்கதிகளாகும்.

திராவிட மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டிய இந்த படித்தவர்கள் கூட்டம், அவ்வாறு செய்யவில்லை என்பதை அக்கூட்டம் உணருவதற்கு மறுத்தபோதிலும், நாளைக்குப் படித்தவர்கள் கூட்டத்தில் சேரவிருக்கின்ற மாணவர்கள், இந்த நிலைமையைத் தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும்.

திராவிட மாணவர்கள், அதாவது திராவிட மாண வர்கள் என்கிற பெயரினால் தங்களை அழைத்துக்கொள்ள முன்வந்து, திராவிட மாணவருலகின் முற்போக்குக்கும், திராவிட மக்களின் நல்வாழ்வுக்கும் பாடுபடச் சபதம் புரியும் மாணவத் தோழர்கள், படித்தவர்களின் வஞ்சகப் போக்கை மற்றவர்களைக் காட்டிலும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

விறுவிறுப்பான பேச்சு! சுறுசுறுப்பான நடவடிக்கை! உண்மைக்குப் பரியும் உள்ளம்! உலுத்தரை ஒழிக்கும் தீவிரம்! எடுப்பான தோற்றம்! எதற்கும் அஞ்சாத நோக்கு! இத்தனையும் உண்டு வாலிபத்துக்கு. இன்னும் பல நல்ல இயல்புகளுமுண்டு.

இந்த நல்லியல்புகளை மட்டுமே எடுத்துக்கூறி, பாராட்டுக்குமேல் பாராட்டு என்று சுமத்தி, இளைஞர்களே எதிர்கால மன்னவர்கள் என்று சரணம்பாடி முடிப்பதுதான் மாணவர்களுக்கிடையே பேசும் அறிஞர்கள், தலை வர்கள் என்பவர்களின் வழக்கம்.

இத்தகைய பாராட்டுரை பயனைத் தரும்! எந்த அளவுக்கு? தன் வேலையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் ஒருவர், ஒரு சிறுவனைத் தட்டிக் கொடுத்துத் தன் வேலையைச் சாதித்துக் கொள்ளும் அளவில் புகழ்ந்து கெடுத்தல் என்று இதனைச் சொல்வதை எல்லோரும் ஒப்புக்கொள்ள மறுத்தாலும்கூட, புகழ்ந்து பேசி மற்றவர் களின் சக்தியைத் திரட்டித் தன் சொந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்வதுதான் இதன்  பயன் என்றால், இதனால்  புகழப்பட்டவருக்குப் பயன் சிறிதும் இல்லை என்றால் யாரேனும் மறுத்துவிட முடியுமா?

வேலைக்கு முன் கூலி! செயலுக்கு முன் பாராட்டு! வேண்டப்படலாம்! ஆனால் நிரந்தரமானதாய் இருக்க லாமா? இதுவே நிரந்தரமானால் ஏமாற்றமும் தோல்வியுமே பெருகும் அல்லவா? இதனை மாணவத் தோழர்கள் நன்கு சிந்தித்துத் தெளிவடைய வேண்டும்.

திராவிட மாணவர்கள் என்பவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பும், நிறைவேற்ற வேண்டிய செயலும் மிக மிகக் கடினமானவை. பல தலைமுறை தலை முறையாகப் பகுத்தறிவுக்கு வேலையின்றி வாழ்ந்த சமுதாயத்தை அழித்து, பகுத்தறிவு ஒளி வீசும் புது சமு தாயத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு! தலை கீழ் மாற்றமான இப்பொறுப்பைத் தத்தம் வாழ்வையே ஈடுகட்டி விட்டு, உயிரைப்பணயம் வைத்து, உண்மையும் அன்புமே ஆயுதமாகக் கொண்டு போராடி வெற்றிகாண வேண்டிய செயல்! இச்செயல் பலரால் பல முறை முயற்சிக்கப் பட்டதுதான்; ஆனால் எவரும் இதுவரை வெற்றி காணாதது! என்கிற இலட்சியத்தின் பொறுப்பை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்!

மிகமிகக் கடினமான இந்த லட்சியத்தையும், செயலுக்கு முன் பாராட்டு என்கிற போக்கையும் சேர்த்து எண்ணினால், இந்தப் போக்கு லட்சியப் பாதையைக் காண்பியாது என்பது உறுதி.

சென்ற மாதம் திருச்சியில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில், நம்மியக்கத்தைப் பின்பற்றும் திராவிட மாணவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்கிற கருத்தை விளக்கிப் பெரியாரவர்கள் பேசிய பேச்சின் ஒரு பகுதி மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அதனை ஒவ்வொரு மாணவத் தோழரும், கழகத் தொண்டரும் கட்டாயம் படித்துப் பார்த்துத் தங்கள் தங்கள் நிலைமையோடு ஒப்பிட்டு, தங்களைத் தாங்களே சோதனை செய்து கொள்வது நல்லது என்று சொல்ல ஆசைப்படுகிறோம்.

பெரியாரவர்கள் விளக்கியிருக்கும் ஒரு உண்மை, அதாவது மாணவர்கள் என்பவர்கள் சரியான சோல்ஜர்கள், நல்ல ஜெனரல்கள் அல்ல. நல்ல சிப்பாய்கள் ஆனால் நல்ல கமாண்டர்களல்ல என்று கூறியிருக்கும் கருத்து மாணவர்கள் மனதில் நல்ல முறையில் பதிவு பெற வேண்டிய ஒன்றாகும்.

தாய் என்றால் அது மற்றொரு சொல்லையும், கணவன் என்றால் அது மற்றொரு சொல்லையும் எதிர்பார்க்கும் இயல்புடைய, ஒவ்வொரு முறைச்சொல் என்பது போலவே, மாணவர்கள் என்பதும் ஆசிரியர் என்ப தையோ, கற்பித்துக் கொடுப்பவர் என்பதையோ காட்டும் மற்றொரு சொல்லை, எதிர்பார்த்து வழங்கும் ஒரு முறைச்சொல் என்கிற உண்மை தமிழ் மொழி பேசும் எவரும் அறிந்த ஒன்றாகும்.

உலகையே ஏடாகக் கொண்டு, மனிதன் ஒவ்வொரு வனும் சாகும் வரைக்கும் கற்றுக் கொண்டேயிருக்கிற பேருண்மையை எண்ணி, உலகிலுள்ள ஒவ்வொரு வரையும் மாணவர் என்றே குறிப்பிடுவது ஒருவகையில் பொருந்துமென்றாலும், குடும்பப் பொறுப்போ, பணக் கவலையோ, உழைப்பின் திறமோ உட்கொள்ளாத, அனுபவக் கல்வியைக் கற்க வாய்ப்பில்லாத இளம் பருவத்தையுடையவர்களையே இங்கு மாணவர்கள் என்று குறிப்பிடுகின்றோம்.

மாணவர்கள் என்று சொல்லும்போதே, அந்தச் சொல் இளமைப் பருவத்தையும், உலக அனுபவமில்லாமை யையும் உணர்த்துவதாகும் என்கிற உண்மை மாணவர்கள் மனதில் இடம் பெறுவதே, சோல்ஜர்கள்! சிப்பாய்கள்! என்கிற கருத்தைப் பதிவு செய்து கொள்ளுவதற்கு வழியாயிருக்க முடியும்.

"திராவிடர் இயக்கத்தில் மாணவர்கள் பங்குகொள் வதை நாங்கள் பெருஞ்செல்வமாக மதிக்கின்றோம், அவர் களைப் பெரிய சொத்தாகக் கொண்டு போற்றுகின்றோம்" என்று கூறியிருக்கிறார்கள் பெரியார் அவர்கள். ஆம்! நைந்தழுகிமுடைநாற்றம் நாறும் ஒரு சமுதாயத்தின் நிலைமையை மாற்றப் போராடும் ஒரு பெருவீரன், அச்செயலுக்கு உதவியாக முன்வரும் கட்டிளங் காளைகளைக் காணும்போது உவந்து கூறும் உள்ளக் களிப்பிற்பிறந்த சொல்லே இது.

மத நம்பிக்கையுடைய கிறிஸ்துவப் பாதிரிமார்களையும், கன்னிப் பெண்களையும் மாணவத் தோழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களுடைய ஒழுக்கத்தின் உயர்வை இங்கு நாம் குறிப்பிடவில்லை. காணாத கடவுளின் பேரால், இல்லாத மோட்ச ஆசையைத் தூண்டி, புரியாத புண்ணிய பாவம் பேசி, இவ்வுலகத்தையே தாங்கள் நம்பிய "சிறந்த மார்க்கத்தில்" செலுத்திவிட வேண்டுமென்று, தங்கள் வாழ்வின் சுகபோகத்தைத் துறந்தவர்களாய்க் காண்பித்து, மக்களுக்காவே வாழுகிறோம் என்கிற நிலைமையை எப்படி உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம். இந்த மதவாதிகள், மதத்தொண்டர்கள்  எவ்வாறு உலகை ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரிவது போலவே, அவர்களுடைய தன்னலம் பேணாத உழைப்பையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அழிவிற்கே காரணமாக இருந்து வந்த மதவெறியைப் பரப்பும் ஒரு மதத்திற்கே, அது உயிர் வாழ்வதற்கு இப்பேர்ப்பட்ட தொண்டர்கள் வேண்டுமென்றால், அழிந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் புத்துணர்வு பெற்றுப் புதுவாழ்வு பெறவேண்டுமானால், அந்தச் செயலுக்கு எப்படிப்பட்ட தொண்டர்கள் வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.

உலக இயற்கைக்கு மாறுபட்டு ஆண் பெண் கூட்டுறவைத் தள்ளி, பெண்களைப் பேய்கள் என வெறுத்து, நிலையான நித்திய இன்பத்தையடைய முயலு கிறோம் என்று கூறி, கானல் நீருக்கு அலைந்த உண்மை யான துறவிகள் போக்கை நாம் வெறுத்தாலும்கூட, அந்த லட்சியம் நிறைவேறுவதற்காக அவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று விதித்திருக்கும் கடுமையான முறை களை, எந்த லட்சியவாதிதான் வெறுத்துவிட முடியும் என்று கேட்கிறோம்.

தனி ஒரு மனிதன் அடையலாம் என்று "எதிர்பார்த்த ஒரு இன்பத்திற்கே" இப்பேர்பட்ட கடுமையான நெறி களைக் கைக்கொள்ள வேண்டுமென்றால், ஒரு மனித சமுதாயமே தன் நைந்த நிலைமாறி இன்ப வாழ்வைப் பெற, எப்பேர்ப்பட்ட நெறிகளைக் கைக்கொள்ள வேண் டும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.

பொதுநலத் தொண்டில் ஈடுபடுகிறவர்கள், முதலில் பொதுநல சேவைக்கும், தங்களுக்கும் என்ன பொருத்தம்? எந்தெந்த வகையில் இருக்கிறது? என்கிற தங்களின் தகுதியைத் தாங்களே தெரிந்து கொள்ளவேண்டும். எழுதும் தகுதி, பேசும் தகுதி ஆகிய இரண்டு தகுதியைக் காட்டிலும் சிறப்புடையது நடந்து காட்டும் தகுதி என்றா லும், இம்மூன்றினும் சிறப்பாகப் பொதுநலத் தொண்டர் களுக்குரிய குணத்தகுதி தங்களுக்கு இருக்கிறதா என்பதையே மாணவத் தோழர்கள் கருதவேண்டும். இதைத்தான் பெரியாரவர்கள் தம் சொற்பொழிவில் வற்புறுத்தியிருக்கின்றார்கள்.

எளிய வாழ்க்கையைக் கைக்கொள்ளல், தன்னைத் தானே காத்துக்கொள்ளுதல், தன்னலம் பேணாது வாழ்தல், தற்பெருமை பேசாத அடக்கம், உயர்ந்தவன் என்ற மமதைக்கு இடங்கொடாமை, வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாத வீர இயல்பு, தலைவனின் ஆணைக்கு அடங்கல் போன்ற நற்குணங்களே தொண்டர் களுக்கு, சிறப்பாகத் திராவிட மாணவர்களுக்கு வேண்டிய குணத்தகுதிகள் என்று பெரியாரவர்கள் வற்புறுத்தியி ருப்பதைக் கருத்தூன்றிப் படித்துக் கைக்கொள்ள வேண்டுகிறோம்.

இவைகளை வாழுகிற ஒவ்வொரு மனிதனும் கடைபிடித்து ஒழுகுவதே வாழ்வில் ஒழுங்கையும், அமைதியையும் உண்டுபண்ணும் என்று பொதுவாகச் சொல்லலாம் ஆனாலும், எதிர் நீச்சலில் சென்று வெற்றிக் கொடியை நாட்ட வேண்டிய பொறுப்புடைய தொண்டர் களுக்கு இவைகள் அவசியத்திலும் அவசியமல்லவா?

பொதுநல சேவையில் அதுவும் திராவிடர் இயக்கத்தில் எத்தனை தொண்டர்களுக்கு வேண்டுமானாலும் இடமுண்டு! தொண்டர்களின் வாழ்வு நல்ல முறையில் அமைவதற்கும் வழியுண்டு! உண்மையாகவே இயக்கத் திற்குத் தம்மை அர்ப்பணம் செய்து கொள்ளுபவர், தம் ஒழுங்கான சொந்த வாழ்வைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றே சொல்லிவிடலாம்! இந்த நல்ல நிலைமை பெரியாரவர்களுடைய அரும்பெரும் உழைப்பினால் உண்டாக்கப்பட்டிருக்கிறது! இதைப் பயனின்றிப் போகுமாறு செய்யலாமா? இதை மாணவத் தொண்டர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வழக்கம்போல இந்த வருஷத்திலும் மாணவர் கோடை விடுமுறைப் பிரசாரத்திற்கு ஏற்பாடாகி அது சம்பந்தமான அறிக்கை மற்றொரு பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. வகுப்பு நடைபெறும் காலம் மாற்ற வேண்டிய தாகவும் ஏற்படலாம். அது பின்னர் அறிவிக்கப்படும். இப்பிரசாரத்திற்குச் சென்ற ஆண்டு வந்தவர்களும்,  புதிதாக இவ்வாண்டில் வருகிறவர்களும் வந்து கலக்கலாம். பிரசாரத்திற்கு வருகின்றவர்கள், தங்கள் பிரசாரத்தினால் மற்றவர்களை நல்வழியில் அழைத்துப் போகிறோம் என்று எண்ணுவதைக் காட்டிலும், தாங்கள் நல்ல வழியில் பாதையைப் பின்பற்றிப் போகின்றோம் என்று எண் ணுவார்களானால், அது உண்மையும் பயனுமுடையதா யிருக்கும் என்று சொல்ல ஆசைப்படுகின்றோம்.

பெரியாரவர்கள் வற்புறுத்தியிருப்பதைப் போல, கட்டுப்பாடற்ற காலித்தனத்தைப் பழக்கமாக உடைய மைனர்களாயிருக்க ஆசைப்படுகின்றவர்களோ, வாழ்க்கையில் தங்கள் நிலைமைக்கு மேலான போக போக்கியத்தை அடைய வேண்டும் என்று ஆசைப் படுகின்றவர்களோ, பிரசாரம் செய்வது போன்ற பொது நலப் பணிக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளலாமா? அவ்வாறு செய்வதால் இயக்கத்திற்கு ஏற்படும் நன்மை என்ன? தாங்கள் அடையும் நன்மை என்ன? என்பவைகளை முதலிலேயே முடிவு கட்டிக் கொண்டு விடுவது நல்லதல்லவா என்பதையும், யோசித்துத் தீர்ப்புக்கூறிக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கின்றோம்.

மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய அகிம்சையில் நம்பிக்கையைப் பற்றி, பெரியாரவர்கள் வலியுறுத்தியிருப் பதையும் திராவிட மாணவர்கள் சிந்தித்து தெளிவடைய வேண்டும்.

"அகிம்சை என்பது புண்ணியம் என்பதினாலோ, அல்லது அது மோட்சலோகக் கதவைத் திறந்து விடும் என்பதினாலோ அல்லது அந்தராத்மாவோடு தொடர் புடையது என்பதினாலோ, நான் அகிம்சையைக் கைக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை; மனிதனுக்கு அறிவு இருப்பதினாலேயே - சிந்தனைத் திறம் பெற்றி ருப்பதினாலேயே, அவன் அகிம்சையைத்தான் கைக் கொள்ள வேண்டுமென்கின்றேன்" என்று கூறியிருப்பதை அறிவு பெற்றிருக்கிறோம் என எண்ணும் ஒவ்வொரு மனிதனும் எண்ணிப் பார்க்க வேண்டியதாகும்.

மற்ற ஜீவப் பிராணிகளைப் பார்க்கின்றோம். அவை களுள் பெரும்பான்மையானவை ஒன்றையொன்று இம்சை செய்து உயிர் வாழ்வதையும், அதனால் அந்த இம்சைக்கு உள்ளானது மட்டுமல்லாமல், துன்பத்தை உள்ளாக்கியதும்  தொல்லையை அடைவதையும், அவைகள் மனிதனுக்கே உள்ள ஆறாவது அறிவை, சிந்தனை செய்யும் திறமையைப் பெறவில்லை என்பதையும் பார்க்கிறோம்.   மேலும் அந்த அய்ந்தறிவு படைத்த மிருகங்களிலும்கூட ஆடு, மாடு, மான்போலச் சில மிருகங்கள், இம்சை முறையைக் கைக்கொள்ளாமல் வாழ்வதையும் பார்க்கின்றோம்.

இம்சை செய்யப்பட்டவனுக்கேயன்றி, செய்தவனுக் கும் துயரத்தை, தொல்லையைத் தருமென்றால், அய்ந்தறிவு படைத்த சில மிருகங்கள் கூட அந்த இம்சை முறையைக் கைக்கொள்ளவில்லை என்றால், ஆறறிவு படைத்தவன் என்றும், ஆராய்ந்து பார்க்கும் திறனுடை யவன் என்றும் சொல்லிக் கொள்ளும் மனிதன், இரு வருக்கும் துன்பத்தைக் கொடுக்கும் இன்னாச் செயலை, இம்சையை மேற்கொள்ளல் அறிவுடைமையாகுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.

பொழுது போக்குவதற்கான வேலை! பல ஊர்களைச் சுற்றிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம்! விளம்பரத்தினால் பெரிய மனிதர்களாகும் வாய்ப்பு! சிகரெட் குடிக்கவும், சினிமாப் பார்ப்பதற்குமான கம்பெனி! என்பது போன்ற எண்ணங்களால் திராவிட இயக்கப் பிரசார வேலையிலே தயவுசெய்து இளம் மாணவர்களே! நீங்கள் இறங்கக்கூடாது என்பதுதான் நமது வேண்டுகோள்! சமுதாய இழிவை உணர்ந்து, இழிவை நீக்கும் பொறுப்பு நமக்குத்தானே ஒழிய, மற்றவர்களுக்கில்லை என்பதை அறிந்து, "வாழ்வோம் அல்லது வீழ்வோம்" என்ற துணிவு கொண்டு, கட்டுப்பாட்டுக்கு அடங்கித் தன்னலம் வெறுத்து தன் கையே தனக்கு உதவி என்ற தன்னம்பிக்கை வாய்ந்த, இளம் மாணவத் தொண்டர்கள் பெருகவேண்டும் என்பதுதான் நமது ஆசை!

இந்த நமது ஆசையும், வேண்டுகோளும் திராவிட சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கே என்பதை உணர்ந்து, திராவிட மாணவர்கள் பெருவாரியாகச் செயலில் ஈடுபடத் துணிவு பெற்று வாகை மாலை சூடுவார்களாக!

"குடிஅரசு" - தலையங்கம் - 03.04.1948

(இத்தலையங்கம் பெரியார் மூன்றாம் நிலையிலிருந்து அறிவுறுத்துவதுபோல அவர்களால் எழுதப்பட்டதே. நடை அதை உணர்த்துகிறது நமக்கு.

- பதிப்பாசிரியர்

- விடுதலை நாளேடு, 7.7.19