ஞாயிறு, 29 மார்ச், 2020

ஒழுக்கக் கேட்டுக்குக் காரணம்

- ,தந்தை பெரியார்

இன்று நம் நாட்டில் பெரும் ஒழுக்கக்கேடு நிலவிவருகிறது. இனியும் வளரும்போல் தெரிகிறதேயொழிய குறைகிற வழி காணப்படவில்லை.

இதன் காரணம் நமது மதம் என்னும் இந்து (ஆரிய) மதந்தான்.

உலகத்தில் இந்து மதத்தில் மத, வேத, சாஸ்திர, புராண, இதிகாச ஆதாரங்களில், மதக் கடவுள்களிடத்தில், மத சம்பந்தமான கற்புக்கரசிகள் முதலிய பெண்களிடத்தில் காணும்படியான பொய், பித்தலாட்டம், ஏமாற்றம், வியாபாரம், பலாத்காரம் ஆகிய காரியங்கள், நடப்புகள் வேறு மதத்தில் – மத ஆதாரங்களில் காணப்படுவதில்லை.

ஒழுக்கக்கேடான, முட்டாள்தனமான காரியங்களை எல்லாம்கூட மதம் என்பதன் பெயரால் பாராட்டுகிறோம்; பண்டிகையாகக் கொண்டாடுகிறோம்: விரதமாக அனுஷ்டிக்கிறோம்; புண்ணிய சரித்திரங்களாகக் கொள்கிறோம்; நடிப்பு, நாடகம், சினிமா, சங்கீதம், ஓவியம், இலக்கியம் ஆகிய துறைகளில் கையாண்டு ரசிக்கிறோம். இவற்றை வெறுப்பதைக்கூட வெறுக்கிறோம். கடவுள், மதம் போய்விட்டதே, ஒரு வகுப்பாரைத் தூஷிக்கிறோமே, என்று கூப்பாடு போடுகிறொம். இந்த நிலையிலுள்ள மக்கள் எப்படி ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க முடியும்?

மனிதனை மனிதன், ‘ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும்”

என்று சொல்லுவதற்கு, மனிதத் தன்மை அல்லது மத, சமுதாய அனுபவங்கள், ஆதாரங்கள் முதலியவைகளைக் கொண்டாவது சொல்ல வேண்டும்.

நமது மனிதத் தன்மை, மனிதனை மனிதன் ஏமாற்றுவதே, அதாவது, மேல்சாதி, கீழ்சாதி, மோட்சம் – நரகம் – சடங்கு முதலியவையாகும். நமது அனுபவ ஆதாரங்கள் என்று சொல்லப்பட்டவைகளோ, ஆண் – ஆண் புணர்ச்சி, மனித – மிருகப் புணர்ச்சி, முறைகேடான, உரிமைக்குக் கேடான புணர்ச்சி ஆகிய இவைகளைக் கண்டு, கேட்டு, படித்து, ரசித்து உழல்பவருக்கு எப்படி ஒழுக்கம் ஏற்பட முடியும்? அதிலும், எவ்விதமான அயோக்கிய, ஒழுக்கமற்ற தன்மைக்கும் மிகமிக எளிதான பிராயச்சித்தமும் இருந்துவிட்டால், எப்படி மனிதனுக்கு ஒழுக்கத்தில் கவலையோ, பயமோ, ஒழுக்கமற்ற தன்மையில் வெறுப்போ இருக்க முடியும்?

அதிலும் நம் நாட்டுச் சாதி அமைப்பானது ‘‘கீழ்ச் சாதியை” மடையனாகவும், கல் நெஞ்சனாகவும், ஏமாற்றித் தீர வேண்டியவனாகவும் ஆகிகிவிடுகிறது. ஒரு முஸ்லிமிடமோ, ஒரு கிறிஸ்தவனிடமோ இருக்கின்ற ‘மன இளக்கம்” – மனிதனை மனிதனாக மதிக்குந் தன்மை, இன அன்பு, உதவி – இந்து என்பவனிடம் இல்லை, அதிலும் ஆரியன் என்பவனிடம் அவன் மதக்காரனுக்குக் காட்டுவது கூட இல்லவே இல்லை.

பழிவாங்க நினைக்கிறான், அதிலும் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கீழ்ப் பிறவியாகக் கருத வேண்டும் என்றும், ஒரு பிறவியை மற்றொரு பிறவி ஏமாற்றலாம் என்றும், ஒரு பிறவியின் உழைப்பை, மற்றொரு பிறவி உழைக்காமல்ஏமாற்றி, வஞ்சித்துப் பிழைப்பது தர்மம் என்றும் கருதி நடப்பதனால் ஒழுக்கம் எப்படி இருக்க முடியம்? குறைந்த அளவாவது இத்தன்மைகளை மக்கள் வெறுக்காமலும், வெறுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்காவிட்டாலும், தடை செய்யாமலாவது இருக்காமலும்; தடை செய்தாலும் அதை ‘ஒரு மாபெரும் பாதகச் செயல்” என்று சொல்லாமலாவது, எண்ணாமலாவது இருக்க வேண்டாமா?

மனிதனை மனிதன், ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்று சொல்வதற்கு அரசாங்கம் தண்டனையிடுவது தவிர, ஆதாரம் இல்லை, அரசாங்கம் இடும் தண்டனையும் இலஞ்சம், சிபாரிசு, வரும்படி – ஆகியவைகளுக்கு அடிமை, பிறகு ஒழுக்கம் எங்கிருந்து குதிக்கும்?

                (‘விடுதலை” – கட்டுரை – 3.8.1956)

ஞாயிறு, 22 மார்ச், 2020

சுயமரியாதை திருமணம் என்றால் என்ன?

தோழர்களே!  இன்று  இங்கு  நடைபெறப்  போகும்  திருமணம்  சுயமரியாதைத்  திருமணம்  என்று  சொல்லப்படுகின்றது.  மற்ற  திருமணங்களுக்கும்  சுயமரியாதைத்  திருமணங்களுக்கும்  அடிப்படையாக  என்ன  மாறுதல்  இருக்கின்றது  என்று  பாருங்கள்.

அனாவசியமாக  சிலர்  "சுயமரியாதைத்  திருமணமா?"  என்றாலே அதிசயப்படுவதும்,  ஏதோ  முழுகி  விட்டது  போல்  வெறுப்படைவதுமா யிருக்கின்றதே  தவிர,  வேறு  என்ன  மாறுதல்  இருக்கின்றது  என்பது  எனக்கு  விளங்கவில்லை.

விவாகம்  அல்லது  திருமணம்  என்று  சொல்லப்படுவதெல்லாம்  ஒரு  பெண்ணும்,  ஆணும்  சேர்ந்து  ஒருவருக்கொருவர்  கட்டுப்பட்டு  அவர்களது  வாழ்க்கையை  கூட்டுப்  பொருப்பில்  நடத்துவதற்குப்  பலர்  அறிய  செய்துகொள்ளும்  அல்லது  செய்யப்படும்  காரியமே  ஆகும்.  இதைச்  சிலர்  அதாவது  பழைய  முறைக்காரர்  சடங்கு  என்கிறார்கள்.  சிலர்  அதாவது  புதிய  முறைக்காரர்கள்  ஒப்பந்தம்  என்கிறார்கள்.  சடங்கு  என்று சொல்லுகின்றவர்கள்  உண்மையிலேயே  சடங்காகவே  கருதி  காரியங்களில்  லக்ஷியமில்லாமல்  நடத்துகிறார்கள்.  அதாவது  கல்யாணத்தில்  மாப்பிள்ளைக்கும்  பெண்ணுக்கும்  எவ்வித  உரிமையும்  இல்லை.  அதுபோலவே  சடங்கிலும்  கல்யாணக்காரருக்கும்  சடங்குக்கும்  யாதொரு  உரிமையுமில்லை.  எப்படியென்றால்  தம்பதிகளின்  பெற்றோர்களோ  அல்லது  பெற்றோர்களைப்  பெற்றோர்களோ  அல்லது  இந்தப்  பெற்றோர்களுக்கு  வேண்டியவர்களோ  பார்த்து  இன்ன  பெண்ணுக்கு  இன்ன  மாப்பிள்ளை  அல்லது  இன்ன  மாப்பிள்ளைக்கு  இன்ன  பெண்  என்று  தீர்மானித்து  விட்டால்  அதைத்  தம்பதிகள்  மணமக்கள்  ஆ÷க்ஷபிக்க  முடியாது.  அது  மாத்திரமல்ல  இன்னொரு  அநியாயம்  என்னவென்றால்,  திருமணம்  என்பது  நடக்கும்  நிமிஷம்  வரையில்  மாப்பிள்ளை  பெண்ணைப்  பார்த்திருக்க  மாட்டார்.  பெண்  மாப்பிள்ளையைப்  பார்த்திருக்க  மாட்டார்.   100க்கு  99  திருமணத்தில்  பெண்ணும்  மாப்பிள்ளையும்  ஒருவரையொருவர்  சந்தித்துப்  பேசி  இருக்கவே  மாட்டார்கள்.

அங்க  லக்ஷணம்,  அறிவு  லக்ஷணம்,  யோக்கியதை  லக்ஷணம்  ஆகிய  எதையும்  பார்க்காமலும்  தெரியாமலும்  தான்  திருமணம்  தீர்மானிக்கப்படுகிறது.  இவர்கள்  இருவர்கள்  விஷயத்தில்  ஏதாவது  ஒன்று  கவனிக்கப்படுகின்றதா  என்றால்  இருவர்  பிறந்த  நேரம்  என்று  சொல்லப்படும்  "அது  சரியான  நேரமோ,  தப்பான  நேரமோ  என்பதைப்  பற்றி  கவலை  இல்லாமல்"  ஒரு  காலத்தைக்  குறிப்பில்  வைத்து  அதன்  மூலமாகவே  ஒரு  பொறுப்பற்ற  நபரால்  இருவருக்கும்  பொருத்தம்  உண்டா  இல்லையா  என்பது  முடிவு  செய்யப்பட்டு  விடும்.  சில  சமயங்களில்  பிறந்த  காலம்,  நேரங்கள்  கூட  கவனிக்கப்படாமல்  பெண்ணின்  பெயரின்  முதலெழுத்தையும்  மாப்பிள்ளையின்  முதல்  எழுத்தையும்  ஆதாரமாக  வைத்து  பொருத்தம்  முடிவு  செய்யப்பட்டு  விடும்.  மற்றும்  சில  சமயங்களில்  அதுகூட  இல்லாமல்  கோவிலில்  பூ  வைத்து  கேட்பது  மூலமோ,  கருடன்  பறப்பது  மூலமோ,  பல்லி  கத்துவது  மூலமோ,  இருவர்  பெயர்  எழுதப்பட்ட  சீட்டுகளின்  மீது  ஈ(பறவை)  உட்காருவதன்  மூலமோ,  அல்லது  கோவில்களில்  ஏதாவது  ஒருவன்  சாமியாடி  வாக்கு  சொல்லுவதன்  மூலமோ  கல்யாணம்  தீர்மானிக்கப் பட்டுவிடும்.  எவ்வளவு  காட்டுமிராண்டித்தன  வாழ்வில்  நமது  மக்கள்  இருந்து  வருகிறார்கள்  என்பதற்கு  இதைவிட  வேறு  என்ன  உதாரணம்  வேண்டும்  என்பது  எனக்குத்  தெரியவில்லை.

இது  போலவே  சடங்குகள்  விஷயத்திலும்  இந்தச்  சடங்குகள்  எதற்காக  என்றாவது  இந்த  சடங்கின்  அர்த்தம்  என்ன  என்றாவது  இச்சடங்குகளுக்கு  அவசியமோ,  ஆதாரமோ,  ஆரம்ப  காலமோ,  பொருத்தமோ  என்னவென்றாவது  மணமக்களுக்கோ  பெற்றோர்களுக்கோ  மற்றும் பந்து  மித்திரர்களுக்கோ  யாருக்குமே  தெரியாது.

ஆனால்  சுயமரியாதைக்  கல்யாணம்  என்பது  இந்தப்படிக்கல்ல. மணமக்கள்  ஒருவரை  ஒருவர்  அறிந்து  தங்களுக்குள்ளாகவே  ஒருவரை  ஒருவர்  தேர்ந்தெடுத்துக்கொள்ள  வேண்டும்  என்பதும்  அர்த்தமும்,  பொருத்தமும்,  அவசியமும்  இல்லாமல்  வெறும் சடங்கு  பழக்க  வழக்கம்  என்பதற்காக  மாத்திரமே  ஒன்றையும்  செய்யக்கூடாது  என்பதுமேயாகும்.

இவை  மாத்திரமல்லாமல்  திருமணம்  சம்மந்தமாக  செலவு  மெனக்கேடு  வீண்  கஷ்ட  நஷ்டம்  ஆகியவைகளைப்பற்றி  பழைய  முறைக்  கல்யாணங்களில்  லக்ஷியமே  செய்யப்படுவதில்லை.  ஆடம்பரத்துக்காகவே  வீண்  செலவுகளை  தகுதிக்கு  அதிகமாக  கடன்  வாங்கியாவது  செய்யப்பட்டு  வருகிறது.  திருமணத்திற்காக  3  நாள்  4  நாள்  5  நாள்  சிலர்  7  நாள்  கூட  மெனக்கெட்டு  அயலூர்  பந்து  மித்திரர்களையும்  தருவித்து  மெனக்கெடச்செய்து  5  விருந்து  10 விருந்து  என்பதாகச்  சாப்பாட்டுச்  செலவும்,  பந்தல்  மேளம்  சங்கீதம்  ஊர்வலம்  வாணம்  என்பதாக  வீண்  காரியங்களும்  குடிகாரர்கள்  குடித்த  போதையில்  தாருமாராய் நடப்பது  போல்  கல்யாண  போதையில்  சிக்கி  பணங்கள்,  நேரங்கள்,  கஷ்டங்கள்  ஆகியவைகள்  தாருமாராக  செலவாக்கப்பட்டு  வருகின்றன.  2,  3  நாளைக்கு  ஆக  சிலர்  பார்த்து  புகழ்வதற்காக  என்று  செய்யப்படும்  இப்படிப்பட்ட  தாருமாரான  ஆடம்பர  சிலவுகள்  கல்யாணத்  தம்பதிகள்  தலையிலோ  அல்லது  குடும்பத்தார்கள்  தலையிலோ  விழுந்து  கல்யாணக்  கடன்  பார்வைகளால்  வெகு  நாளைக்கு  அவதிப்பட  வேண்டியிருப்பதால்  சில  குடும்பங்கள்  கல்யாணச்  செலவாலேயே  பாப்பராகி  மீளாக்  கடன்காரர்களாகக்  கூட  ஆகவேண்டியதாகி  விடுகின்றன.  இப்படிப்பட்ட  கொடுமைகளும்  முட்டாள்தனமான  காரியங்களும் கூடாது  என்பதுதான்  சுயமரியாதைக்  கல்யாணம்  என்பதின்  முக்கியாம்சங்களாகும்.

மற்றும்  கல்யாணம்  செய்து  கொள்ளும்  விஷயத்தில்  தம்பதிகளை  விட  மூன்றாவதவர்களுக்கே  சகல  சுதந்திரமுமிருந்து  வருகிறது.  செய்து  வைப்பதற்கு  ஒரு  புரோகிதன்  வேண்டும்.  இன்ன  இன்ன  மாதிரி  செய்  என்பதற்குப்  பெற்றோர்கள்,  பந்து  மித்திரர்கள்  வேண்டும்.  இவர்கள்  சொன்னபடியெல்லாம்  தம்பதிகள்  நடக்கவேண்டும்.

சுயமரியாதைக்  கல்யாணம்  என்பதில்  இந்த  முறையில்லை.  மணமக்கள்  தங்கள்  ஒப்பந்தங்களை  ஒருவருக்கொருவர்  சொல்லி  சம்மதித்ததற்கு  அறிகுறியாக  மாலையிட்டுக்  கொள்வது  என்பதுடன்  முடிவுபெற்று  விடுகின்றது.

மற்றும்  இவற்றையெல்லாம்  விட  ஒரு  முக்கிய  விஷயம்  என்வென்றால்  கல்யாண  விஷயத்தில்  மணமக்களின்  வாழ்க்கைச்  சம்மந்தம்  முக்கியமானது  லக்ஷியமானது  அல்லவென்றும்  அதில்  ஏதோ  ஒரு தெய்வீக  சம்மந்தம்  இருக்கிறதென்றும்  அதுவேதான்  திருமணத்தின்  லக்ஷியமென்றும்  ஆதலால்  அப்பெண்ணும்,  மாப்பிள்ளையும்  அத்தெய்வீக  சம்மந்தத்துக்காக  ஒருவர்  குற்றங்களையும்  அநீதிகளையும்  மற்றவர்கள்  பொருத்துக்கொள்ளவேண்டும்  என்றும்  அதிலும்  சிறப்பாக  மாப்பிள்ளை  செய்யும்  கொடுமையையும்  அநீதியையும்  பெண்  பொருத்துக்கொண்டு  வாழ்நாள்  முழுமையும்  மாப்பிள்ளைக்கு  பெண்  அடிமையாய்  பக்தியாய்  இருக்க  வேண்டுமென்றும்  கூறப்படுகிறது.

ஆனால்  சுயமரியாதைக்  கல்யாணம்  என்பதில்  அப்படி  இல்லை.  திருமணம்  என்பது  பெண்ணும்  ஆணும்  சேர்ந்து  வாழ்க்கையை  நடத்த  ஏற்படுத்திக்  கொள்ளும்  ஒப்பந்தமென்றும்  அவ்வொப்பந்த  விஷயம்  பெண்ணையும்,  ஆணையும்  மாத்திரமே  பொருத்ததே  ஒழிய  வேறு  எவ்வித  தெய்வீகத்துக்கோ  அல்லது  எவ்வித  கட்டுப்பாட்டுக்கோ  சம்மந்தபட்டதல்ல  என்றே  சுயமரியாதைக்  கல்யாணத்தின்  தத்துவமாகும்.

மேலும்  பழயமுறை  கல்யாணமானது  ஆணுக்கும்  பெண்ணுக்கும்  கல்யாணமேற்பட்ட  பிறகு  தான்  ஒருவர்  மீது  ஒருவர்  ஆசைகொள்ளுவதோ  காதல்  கொள்ளுவதோ  ஏற்பட  வேண்டுமே  ஒழிய  அதற்கு  (கல்யாணத்துக்கு)  முன்னால்  ஒருவர்  மீது  ஒருவருக்கு  ஆசையும்,  "காதலும்"  ஏற்படுவது  கூடாதென்றும்  குற்றமென்றும்  அது  விபசாரத்துக்கு  சமானமானதென்றும்  கூறப்படுகின்றது.

சுயமரியாதைக்  கல்யாணத்திலோ,  கல்யாணத்துக்கு  முன்பாகவே  ஆணுக்கும்  பெண்ணுக்கும்  ஒருவருக்கொருவர்  ஆசையும்  "காதலும்"  ஏற்பட்டு  அதன்  பின்னரே  கல்யாணம்  நடக்க  வேண்டும்  என்றும்,  மற்றபடி  கல்யாணம்  ஆன  பிறகு  கல்யாணம்  ஆய்விட்டதே  என்கின்ற  காரணத்திற்காக  அங்க  ஈனராய்  இருந்தாலும்  வியாதிக்காரறாய்  இருந்தாலும்,  கொடியவறாய்  இருந்தாலும்  ஒருவருக்கொருவர்  ஆசையும்  காதலும்  கொண்டுதான்  ஆக  வேண்டுமென்றும்  சொல்வதை  கண்டிப்பாய்  ஒப்புக்கொள்ளுவதில்லை.

மற்றும்  பழய  முறைக்  கல்யாணங்கள்  ஒருதடவை  கல்யாணமாகி விட்டால்  எந்தக்  காரணத்தைக்  கொண்டும்  மறுபடியும்  பிரியக்கூடாதென்றும்  இப்படிக்  கூறாவிட்டாலும்  ஆணுக்கு  பிரித்துவிடவோ  பிரிந்துகொள்ளவோ  உரிமை  உண்டு,  பெண்ணுக்குத்தான்  உரிமையில்லை  என்றும்  பெண்ஜாதி  செத்துப்போனால்  புருஷன்  மறுவிவாகம்  செய்துகொள்ளலாம்  என்றும்  பெண்ஜாதி  உயிருடன்  இருக்கும்போதே  புருஷன்  மாத்திரம்  பல  பெண்களை  கல்யாணம்  செய்துகொள்ளலாம்  என்றும்  பெண்கள்  மாத்திரம்  எந்தக்  காரணம்  கொண்டும்  புருஷன்  எவ்வளவு  கொடியவனாகவும்  மனுஷத்தன்மை  அற்றவனாகவும்  எவ்  விஷயத்துக்கும்  பொருத்தமில்லாமல்  கொடுமையும்  சித்திரவதையும்  போன்ற  கஷ்டத்தையும்  கொடுப்பவனானாலும்  புருஷனை  விட்டுப்  பிரியக்  கூடாதென்றும்  வேறு  கல்யாணம்  செய்து  கொள்ள  கூடாதென்றும்  புருஷன்  தான்  பக்குவமாவதற்கு  முன்  தனது  5  வது  10வது  வயதிலேயே  இறந்துபோனாலும்  வேறு  புருஷனைக்  கல்யாணம்  செய்துகொள்ளாமல்  விதவை  என்னும்  பெயருடன்  உலக  சுகபோகங்கள்  எல்லாவற்றையும்  வெறுத்து  மக்கள்  கண்ணுக்கும்,  மனதுக்கும்  வெறுப்புத்தோன்றும்  தன்மையில்  வாழவேண்டும்  என்றும்  சொல்லுகின்றது.

சுயமரியாதைக் கல்யாணத்தில் இவ்வித அக்கிரமும்,  அயோக்கியத்தனமும்  அறியாமையும்  கொடுமையும்  மூர்க்கத்தனமும்  காட்டுமிராண்டித்தனமும்  இல்லை.  வாழ்க்கைக்கும்  மனதுக்கும்  ஏற்ற  தம்பதிகளானால்  கூடி  வாழலாம்.  அவைகளுக்கு  ஒவ்வாத  வாழ்க்கையே  "நரகம்"  போன்றதான  தம்பதிகளானால்  பிரிந்து  மனதிற்கு  ஏற்றவர்களை  மணந்து  இன்பசுக  வாழ்வு  வாழ  உரிமை  உண்டு  என்பதோடு  புருஷனோ  மனைவியோ  யார்  இறந்துபோனாலும்  மறுவிவாகம்  செய்துகொள்ளலாம்  என்று  கூறுகிறது.

பழய  முறை  கல்யாணப்படி  பெண்களுக்கு  சொத்து  உரிமை  இல்லை.  வாழ்க்கையில்  சரிபங்கு  ஆதிக்க  உரிமை  இல்லை  என்று கூறப்படுகிறது.  சுயமரியாதை  கல்யாணத்தில்  சொத்திலும்  வாழ்க்கை  ஆதிக்கத்திலும்  பெண்ணுக்கு  ஆணைப்போலவே  சரிபங்கு  உரிமை  இருக்கின்றது  என்பதுடன்  இவைகளே  கல்யாண  ஒப்பந்தத்தின்  ஷரத்துக்களாகும்.  அநேகமாய்  கல்யாண  தத்துவம்  பழயதும்  புதியதும்  ஒரு  மாதிரிதான்.  எப்படி  எனில்  இங்கு  ஒரு  ஆணும்  பெண்ணும்  சேர்ந்துதான்  கல்யாணம்  செய்துகொண்டார்களே  ஒழிய  ஆணும்  ஆணும்  சேர்ந்தோ,  பெண்ணும்  பெண்ணும்  சேர்ந்தோ  கல்யாணம்  செய்துகொள்ளவில்லை.

ஆதலால்  இவ்வித  திருமணத்தைப்  பற்றி  யாரும்  கவலையோ  ஆத்திரமோ  படவேண்டியதில்லை.  பெண்  மக்களில்  பலருக்கு  இவ்விஷயத்தில்  ஏதாவது  மன  சஞ்சலம்  இருந்தாலும்  இருக்கலாம்.  ஆண்களில்  படித்தவர்கள்  வித்வான்கள்  என்று  சொல்லப்படுபவர்களிலேயே  சில  அழுக்குமூட்டைகள்  இருந்துகொண்டு  விஷம  பிரசாரம்  செய்துவரும்பொழுது  பெண்களில்  இது  விஷயமாய்  அதிருப்த்தி  உள்ளவர்கள்  இருப்பது  அதிசயமல்ல.  ஏனெனில்  பெண்களை  நாம்  எப்படி  வைத்திருக்கின்றோம்.  அவர்களில்  100க்கு  99பேருக்கு  அடுப்பங்கரையையும்,  படுக்கைவீட்டையும்  மாத்திரமே  காட்டி  நகை  மாட்டுகின்ற  (குtச்ணஞீ)  ஸ்டேண்டுபோல்  நகைகளை  மாட்டி  இது  என்  பெண்ஜாதி  (அடிமை)  இது  உன்  பெண்ஜாதி  என்று  கண்காக்ஷி  காட்டு கின்றோமே  ஒழிய  வேறு  அவர்களுக்கு  என்ன  கற்றுக்கொடுத்திருக்கிறோம்  என்பதை  யோசித்துப்பாருங்கள்.  வேண்டுமானால்  கண்ணைமூடிக்கொண்டு  பல்லைக்  கடித்துக்கொண்டு  கணக்கு  வழக்குப்  பார்க்காமல்  பிள்ளைகளைப்  பெறுவார்கள்.  இதற்கு  ஒரு  உபாத்தியாயரோ,  அறிவோ  வேண்டியதில்லை.  எவ்வளவுக்கெவ்வளவு  மடமை  உண்டோ  அவ்வளவுக்கு  அவ்வளவு  பிள்ளைகள்  பிறந்து  விடும்.  எவ்வளவுக்கெவ்வளவு  அடிமைத்தன்மையில்  மோகம்  உண்டோ  அவ்வளவுக்கவ்வளவு    நகைகளை  மாட்டிக்கொள்ளுவார்கள்.  தங்களை  விகாரமாய்  சிங்காரித்துக்  கொள்ளுவார்கள்.  இவைகளையும்,  இவை  போன்றவைகளையும்தான்  நாம்  அவர்களுக்குத்  தாய்  தந்தையர்கள்  என்கின்ற  முறையில்  கற்றுக்கொடுத்திருக்கிறோம்.  ஆகவே  இப்படிப்பட்ட  பெண்களிடம்  நாம்  வேறு  எதை  எதிர்பார்க்க  முடியும்.  இன்றைய  பெண்  எவ்வளவோ  கல்வியும்,  செல்வமும், நாகரீக  ஞானமும்,  கௌரவமும்  உள்ள  சுற்றத்தார்களுக்குள்ளும்  சகவாசத்துக்குள்ளும்  இருந்து  வந்தும்  நிரம்பவும்  கர்நாடக  முறையில்  பட்டிக்காட்டு  கிராமவாசப்  பெண்களைவிட  இளப்பமாய் நடந்து  கொள்வதைப்  பார்த்தால்  நமக்கு எவ்வளவு  சங்கடமாயிருந்தது  என்பது  அவரவர்களுக்கே  தெரிந்திருக்கலாம்.  இப்படிப்பட்ட  பெண்கள்  வயிற்றில்  பிள்ளைகள்  பிறந்து  இவர்களால்  வளர்க்கப்பட்டால்  அவற்றிற்கு  மனிதத்தன்மை  எப்படி  ஏற்படும்  என்பதை  நீங்களே  யோசித்துப்  பாருங்கள்.  நமது  மக்களுக்கு  ஏன்  மனிதத்தன்மை  இல்லை,  சுயமரியாதை  இல்லை  என்றால்  அவற்றிற்கெல்லாம்  முக்கியத்திலும்  முக்கியமான  காரணம்  இப்படிப்பட்ட  தாய்மார்களால்  பெறப்பட்டு  வளர்க்கப்பட்டதேயாகும்.

கடைசியாக  தோழர்களே  ஒன்று  சொல்லி முடித்துவிடுகிறேன்.  கல்யாணமானவுடன்  பெற்றோர்கள்  பிள்ளைகளை  எதிர்பார்ப்பார்கள்.  சுற்றத்தார்  எத்தனை  ஆயிற்றென்று  கணக்குக்கூட்டி  வருவார்கள்.  தம்பதிகள்  பிள்ளை  பெறுவதினால்  படும்  கஷ்டம்  காயலா  அசௌகரியம்  வாலிபம்  பாழாவது  அதிக  பிள்ளைகள்  பெறுவதினால்  தரித்திரம்,  துன்பம்,  வியாகூலம்,  விசாரம்,  மானங்கெட  நேருவது,  சுயமரியாதை  இழந்தாவது  வாழ  ஆசைப்படுவது  ஆகிய  காரியங்களைப்  பற்றி  யெவரும்  சிந்திக்க  மாட்டார்கள்.  யாதொரு  பொறுப்பும்  அறிவும்  அற்று  இன்று  மணமக்களைப் பார்த்து  "16  பிள்ளைகள்  பெற்று  பெருவாழ்வு  வாழவேண்டும்"  என்று  சொல்லுகிறவர்கள்  நாளைக்கு  ஒரு  குழந்தைக்கு  அரைச்சங்கு  பால் வார்க்கக்கூட  சம்மதிக்கமாட்டார்கள்.  ஏதாவது  கஷ்டம்  வந்தால்கூட  பக்கத்து  வீட்டில்  குடியிருந்துகொண்டு  கணக்குக்கூட்டிப்  பார்த்து  அசூசையும்  வெறுப்பும்  அடைவார்களே  தவிர  சிறிது  பரிதாபம்கூட  காட்டமாட்டார்கள்.  ஆதலால்  மணமக்கள்  குழந்தைகளைப்  பெறும்  விஷயத்தில்  சிறிது  ஜாக்கிரதையாகவும்  அறிவுடமையாகவும்  இருக்க  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளுகிறேன்.

குறிப்பு: 08.06.1934  இல்  சென்னை  தோழர்கள்,  கற்பகம்  அம்மாள்   கே.கல்யாணசுந்திரம்  ஆகியோருக்கு  சென்னை  சவுகார்  பேட்டையில்  நடந்த  சுயமரியாதைத்  திருமணத்தில்  ஆற்றிய  உரை.

தோழர் பெரியார், புரட்சி - சொற்பொழிவு  17.06.1934

வெள்ளி, 20 மார்ச், 2020

நான் சொல்லவில்லை இதை! (சு.ம.)

20.11.1943 - குடிஅரசிலிருந்து.....

பார்ப்பன மாந்தர்காள் - பகர்வது கேள்மின்,

இறந்தவராய உமை-இல்லிடை இருத்தி,

பாவனை மந்திரம், பலபட உரைத்தே,

உமக்கவர் புத்திரர்-ஊட்டின போது,

அருபசியாற் குலைந்து-ஆங்கவர் மீண்டு,

கையேந்தி நிற்பது-கண்டதார் புகலீர்,

அருந்திய உண்டியால்-ஆர் பசிகழிந்தது?

(உன் பசியா அவர் பசியா பார்)

என்ற இது கபிலரால் சொல்லப்பட்டது.

இப்படி இருக்க நீ திதி கொடுப்பது பார்ப்பனனுக்கு நீ மகன் என்பதை உறுதிப் படுத்தத்தானே பயன்படுகிறது?

உன் புத்தி கொண்டு பார் கபிலர் சொன்னதையும் தள்ளிவிட்டு என்னையும் மறந்து விட்டு உன் சொந்தப் புத்தியைக் கொண்டு சிறிது நன்றாய் ஆலோசித்துப் பார் அய்யா. ஓ! திதி கொடுக்கிறவனே! செத்துப்போனது உன் அப்பன். 100-க்கு 99 பாகம் அதிலே உனக்கு சந்தேகமிருக்காது.

அவன் இப்போது எங்கிருக்கிறான் என்பதும் உனக்குத் தெரியாது.

அவன் உடல் கட்டையில் வைக்கப்பட்டு, உன் கையாலேயே நெருப்பு வைக்கப்பட்டு, அது உன் கண்கள் முன்னாலே வெந்து சாம்பலாகி அதுவும் தண்ணீர் விட்டு கரைத்துவிடப்பட்டு விட்டது.

அல்லது உன் அப்பன் பிணத்தை நீயே பணங்கொடுத்து குழி வெட்டி குழிக்குள் போட்டு உன் கையாலேயே மண் தள்ளி புதைத்து மேலே கல் நாட்டியும் ஆகிவிட்டது. ஆகவே செத்துப்போன உன் அப்பனுக்கு இப்போது உடல் இல்லை. இது நிச்சயம்தானே? இனி திதி நீ யாருக்குக் கொடுக்கிறதாகச் சொல்லுகிறாய்,

என் அப்பனுடைய ஆத்மாவுக்குக் கொடுக்கிறேன் என்கிறாயா? அதாவது என் அப்பன் சரீரத்துக்கு அல்ல, உயிருக்குக் கொடுக்கிறேன் என்கிறாயா? சரி

அந்த உயிரை நீ பார்த்தாயோ? அதுவும் இல்லை.அது எங்கிருக்கிறது என்பதும் எப்படிப் போயிற்று என்பதும் உனக்குத் தெரியுமோ? அதுவும் தெரியாது. அந்த உயிர் எது எப்படி இருக்கும் என்பதும் உன்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியது. தெரியவும் தெரியாது. ஆனால் பார்ப்பான் சொல்லுகிறான் அந்த உயிர் வேறு ஒருவர் கண்ணுக்குத் தெரியாத(சூட்சும) சரீரத்தோடு மேல்லோகத்தில் இருக்கிறது என்கிறான். அவன் சொல்லுகிற மேல் லோகத்தை நீயும் பார்த்ததில்லை; அவனும் பார்த்ததில்லை. அந்தப்படியான மேல்லோகம் ஒன்று இருப்பதாக எந்த பூகோள புத்தகத்திலும் இல்லை. வானசாஸ்திரத்திலும் இல்லை, அன்றியும் எத்தனையோ வித சயன்சு படிக்க சௌகரியமிருக்கிற வெள்ளைக்காரன் பிளானை வைச்சிக்கிட்டுக் கூட கண்ணில் தெரிகிற இமய மலையையே சரியாய்ப் பார்க்க முடியவில்லை. இந்த அன்னக் காவடிப் பார்ப்பான், டுஸ் இன்னா ஒரு காதம் ஓடிப்போய் திரும்பிப் பார்க்கிறவன், மேல்லோகம் ஒன்று இருக்கிறது,என்றால் நீ அதை எப்படி நம்பமுடியும் ?

அதுதான் இருக்கட்டும்

அதுதான் இருக்கட்டும் - செத்தவனெல்லாம் உடனே மறுஜென்மமாக இந்த பூமியிலேயே பிறக்கிறான். பிறக்கிறவனெல்லாம் பிறக்கு முன் ஒரு ஜன்மமாக இருந்து செத்த பிறகுதான் உடனே மறுஜன்மாய்ப் பிறக்கிறான் என்றும் இதே பார்ப்பான்தானே சொல்லி இருக்கிறான்!

மேலும் மேலும் இதே பார்ப்பான்தான் இன்னொரு சமயத்தில் உனக்கு என்ன சொன்னான் தெரியுமா? நீ அடுத்த ஜன்மத்தில் நல்ல (மேலான ஜாதி) ஜன்மமாகப் பிறந்து மேன்மையாகப் பிழைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் எனக்குப் பணம் கொடு என்று சொல்லி உங்கப்பனிடமும் உன்னிடமும் எவ்வளவோ பணம் வாங்கிக் கொண்டு போயிருப்பதோடு அதற்காக அந்த ஊருக்குப் போ, இந்த ஊருக்குப் போ, அதிலே முழுகு, இதிலே முழுகு, அதைச் செய், இதைச் செய் என்று உன்னை நாயாட்டமா அலையவெச்சிப் பிச்சிப் பிடுங்கித் தின்றிருக்கிறான்.

இவ்வளவோடு விட்டானா? அன்றியும் அவன் உன்னை இவ்வளவோடும் விடவில்லையே. மற்றும் பலவிதமாய் அதாவது மேல்லோகத்திலே மோஷம் இருக்கிறது,  நரகம் இருக்கிறது என்றும் மோட்சத்தில் லட்டு மாதிரி நல்ல நல்ல பெண்கள் இருக்கிறார்கள், காமதேணு இருக்கிறது.சுடச்சுட அருமையாகச் சாப்பாடு போடும் கற்பக விருட்சம் இருக்கிறது, அது நீ எதைக் கேட்டாலும் நினைத்த மாத்திரத்திலேயே உடனே கொடுக்கும் என்றும், மேல் லோகத்தில் நரகம் இருக்கிறது, அந்த நரகத்திலே மலம் இருக்கிறது. அந்த மலத்திலே பாம்பு இருக்கிறது, தேள் இருக்கிறது. அதற்குள்தான் செத்தவன் உயிர் இருந்து அந்த மலத்தைச் சாப்பிட்டுக்கொண்டு பாம்பினிடமும், தேளினிடமும் சதா கடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும், ஆதலால் நீ மோட்சம் போக வேண்டுமானால் எனக்கு பணம், பொம்பளே, அரிசி, உப்பு, புளி, வேஷ்டி, துணி, பருப்பு கொடை இன்னம் என்னென்னமோ கொடுத்தாகணும் கொடுக்காவிட்டால் நரகம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி, ஆசைகாட்டியும் பயப்படுத்தியும் எவ்வளவோ வாங்கிக் கொண்டும்போய் இருக்கிறான்.

இன்னொரு சங்கதி

இவைகளையெல்லாம்விட இன்னொரு சங்கதி என்னவென்றால். அவனவன் பாவ புண்ணியம் அவனவனுடன்தான் கூடவே இருக்கும். அதை அவனவனே அனுபவித்துத் தீரவேண்டும் என்றும் அதற்குப் பேரேடு,குறிப்பு, சிட்டா கணக்கு இருக்கிறது. ஆதலால் அதற்காக வேண்டி மனிதன் நல்லதையே செய்ய வேண்டுமே ஒழிய கெட்டதைச் செய்யக்கூடாது என்றும் சொல்லி, நல்லது இன்னது (அதாவது தனக்குக் கொடுப்பதுதான் நல்லது என்றும்) கெட்டது இன்னது (அதாவது தனக்குக் கொடுக்காவிட்டால் பாவம் அது கெட்டது) என்றும் ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டு அதனாலும் பயனடைந்து வருகிறான்.

இத்தனை எழவு குழறுபடிகளில் நீ எதை நம்பி இந்தப் பார்ப்பாரப் பய்யனுக்குத் தெவசம், திதி கொடுக்கிறாய் என்று கேட்கிறேன்.

நீ இதுவரை கொடுத்ததற்கு ஏதாவது ரேடியோ சேதியோ போஸ்டல் ரசீதோ வந்ததா?

நீ கொடுத்த பண்டங்களைப் பார்ப்பான் வாங்கி மூட்டைகட்டிக் கொண்டு போய் உங்கப்பனுக்கு அனுப்பினானா? அல்லது குச்சிக்கார தேவடியா வீட்டுக்கு அனுப்பினானா என்பதையாவது பார்த்தாயா? இந்தப் பஞ்ச காலத்தில் எத்தனையோ சாமான்களை மூட்டை கட்டி அவன் கையில் கொடுத்து காலில் விழுந்து கும்பிட்டு அவனை அனுப்பிக் கொடுத்ததைத் தவிர வேறு சங்கதி உனக்கு என்னவாவது தெரியுமா? இவ்வளவு முட்டாளாக இருந்து கொண்டு திவசம் கொடுக்கிறாயே, இது உன் (தலையில் மூளை இல்லாத) தலைவிதி வசம்தானே.

அட முட்டாளே! உனக்குச் சுயராஜ்யம் வேறு கேடு. அடி முட்டாளே! உனக்கு சமதர்மம் வேறே அழுகுது. நாயிக்குப் பேரு நவநீத கிருஷ்ணனாம். விளக்குமாத்துக்குப் பேருவீட்டு லச்சுமியாம்

இப்படித்தானே இருக்கிறது. உன் சங்கதி.

ஒரு பரீட்சையாவது பாரு

ஒரு பரீட்சை பார்க்கிறாயா - நீ 2 நாளைக்கு சாப்பிடாமல் பட்டினியாய் இரு. 3-ஆம் நாள் ஒரு பாப்பானைக் கூப்பிட்டு நீ உனக்கே திதி கொடுத்துக் கொள்ளப் போவதாக (அதாவது பிரயாகை முதலிய இடங்களில் தனக்கே பிண்டம் போட்டுக்கொண்டு வருகிறார்களே அதுபோல்) சொல்லி உனக்கு வேண்டியதை அவன் வசம் கொடுத்து அனுப்பி விடு. 2நாள் வரை பொறுத்துப்பாரு உனக்கு ஏதாவது பசி ஆறுதா அல்லது அதிகப்பசியும் களைப்பும் ஏறுதா என்று பாரு. உன் பசி தீராவிட்டால் இந்த ஊரில் இருக்கிறவனுக்கு திதி கொடுத்தே பசி ஆறாமல் இருக்கும்போது இனி மேல் லோகத்தில் இருப்பவனுக்கு திதி கொடுத்தால் போய்ச் சேருமா என்று யோசித்துப் பாரு. தொட்டுக்கிட்டுத்

தொட்டுக்கிட்டுத் தின்பேன் நீ என்ன கேட்கிறது என்றால் சரி மகராஜனாக அப்படியே செய் என்பதைத் தவிர வேறு என்னால் உன்னை என்ன செய்ய முடியும் ?

- விடுதலை நாளேடு, 20.3.20

செவ்வாய், 10 மார்ச், 2020

தாய்மார்களுக்கு சில வார்த்தைகள்

என் அருமைத் தாய்மார்களே! நீங்கள் பல தொந்தரவுகளுக்கும் உள்ளாகிப் பல கஷ்ட நஷ்டங்கள் பட்டு இங்கு வந்து இரண்டு நாள் தங்கிச் செல்வதற்காக ஏதாவது உருப்படியான பலன் பெற்றுச் செல்ல வேண்டாமா? எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்? இது ராமேஸ்வரம் அல் லவே, பிள்ளை வரம் வாங்கிக் கொண்டு போக இந்த இடத்தில் அரசமரமும், வேப்ப மரமும் இல்லையே, சுற்றிச் சென்றால் கர்ப்பம் தரிக்குமென்று சுற்றிப் போவதற்கு! இது திருப்பதியும் அல்லவே, உள்ள காசைப் பார்ப்பானிடம் பறிகொடுத்து விட்டு மொட்டை அடித்துக்கொண்டு போக.

இது அறிவு பற்றிப் பேசும் இடம். ஆகவே, நீங்களும் ஏதாவது அறிவு பெற்றுச் செல்ல வேண்டாமா? கொஞ்சம் காது கொடுத்துக் கவனத்தோடு கேளுங் கள். தாய்மார்களே! நீங்கள் தற்போது தழுவி நிற்கும் இந்துமத வர்ணாசிரம தர்மப்படி, நீங்கள் சூத்திரச்சிகள், பார்ப்பன னின் தாசிகள் என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். கடவுள்களுக்கும் நீங்கள் தான் தாசிகள். எந்தக் கடவுளும் சூத்திரச்சி களுடன்தான் லீலை செய்ததாகப் புராணக் கதைகள் கூறுகின்றனவே ஒழிய, எந்தக் கதையும் கடவுள் பார்ப்பனத்திகளோடு, லீலை செய்ததாகக் கூறக்காணோம். கட வுள் அவதாரமெல்லாம் நம் பெண்களின் கற்பைத்தான் சோதித்ததாகக் கதைகளில் கூறப்படுகிறதே ஒழிய, நம்மவரின் பெண் களைத்தான் கைப்பிடித்திழுத்துக் கற்பழித் ததாகக் கூறப்படுகிறதே ஒழிய, எந்தக் கதையிலும் பார்ப்பனப் பெண் கடவுளால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படக் காணோம். அவ்வளவு இழிவு படுத்திவிட் டார்கள் இந்த அன்னக்காவடி பார்ப்பனர் கள் நம்மை. இதையறியாமல் நீங்கள் இன்னும் அவன் காலடியில் வீழ்ந்து காசு பணம் அழுது வருகிறீர்கள்.

இனி நீங்கள் ஒரு காசு கூட எந்தப் பார்ப்பானுக்கும் அழக்கூடாது. உங்கள் வீட்டு நல்ல காரியங்களுக்கோ, கெட்ட காரியங்களுக்கோ அவனை ஒரு நாளும் அழைக்கக் கூடாது. நீங்கள் கோயிலுக்குப் போகக் கூடாது. போவதாயிருந்தாலும் பார்ப்பான்தான் பூசை செய்ய வேண்டு மென்கிற கட்டுத்திட்டம் உள்ள கோயி லுக்கோ இரண்டு பெண்டாட்டிகளைக் கட் டிக்கொண்டு, அதோடு ஒரு வைப்பாட்டி யையும் வைத்திருக்கும் சாமிகளுள்ள கோயிலுக்கோ, நீங்கள் கட்டாயம் போகக் கூடாது. போவதானால் தடியுடன் போங்கள்.

அப்படிப் போவதானால், போகும் போது ஒரு தடி எடுத்துக் கொண்டு போங் கள், தேங்காய் வெற்றிலை பாக்குக்குப் பதிலாக! அந்தத் தடியால் அடித்துக் கேளுங் கள் அந்தச் சாமியை! நான் தடியால் அடிக்கிறேன். நீ அழாமல் இருக்கிறாயே! உனக்கு உயிர் கிடையாது, நீ வெறும் குழ விக் கல் சாமி, அதனால்தான் நான் அடிப் பது உனக்குத் தெரியவில்லை. அப்படி யிருக்க உனக்கேன் பெண்டாட்டி? அப் படித்தான் பெண்டாட்டி வேண்டுமென் றால் ஒரு பெண்டாட்டி போதாதா? இரண்டு பெண்டாட்டி ஏன் உனக்கு? இரண்டு பெண்டாட்டிகள்தான் இருந்து தொலையட்டும். ஒரு தடவை அவர்க ளைக் கலியாணம் செய்து கொண்டால் போதாதா? வருடா வருடம் ஏன் உனக்குக் கலியாணம் நடக்க வேண்டும்? அதுவும் போதாதென்று வைப்பாட்டிகள் வேறு வேண்டுமென்கிறாயே! இது நியாயமா? இத்தனையும் வேண்டுமானால் வைத்துக் கொள். அண்டங்களை எல்லாம் படைத்த உனக்கு நாங்கள் ஏன் சாமி படியளக்க வேண்டும்? உனக்கு வேண்டியதை உன்னால் தேடிக் கொள்ள முடியவில்லை. நீயா எங்களுக்குப் படியளக்கப் போகி றாய்? ஏன் சாமி மவுனம் சாதிக்கிறீர்கள்? கல் இல்லையானால், நீர் உண்மையில் கடவுள் ஆனால், நாங்கள் தரும் பொருள் உனக்குச் சேர்வதில்லையானால் உன் பேரால் எங்களைக் கொள்ளையடித்து வாழும் இந்த அன்னக்காவடிப் பார்ப் பானை ஏன் நீர் தண்டிக்கக் கூடாது? என்று தடியால் அடித்துக் கேளுங்கள். பதில் இல்லையானால் நாங்கள் கூறுவது போல் அது வெறும் குழவிக்கல் என்பதை அறிந்து கொண்டு வீடு திரும்புங்கள். பிறகு ஒரு வார்த்தை உங்களை எதிர்த்துப் பேசுவார்களா, உங்கள் கணவர்கள்?

கடவுளுக்கே இந்தக் கதியானால் அவர்கள் தம் கதி என்னவாகும் என்று அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? அப்புறம் ஒரு நாள் வெளியே போவார் களா? உங்கள் புருஷர்கள்; வேறு மங்கை யர்களைத் தேடி. அந்தச் சாமியை அடித்து வைத்தவன் நம்மவன். அந்தச் சாமிக்கு உயிர்ப் பிச்சை கொடுக்கக் கும்பாபிஷேகம் நடத்த உதவியது நம்முடைய பொருள். அந்தச் சாமிக்கு அரிசி, பருப்பு அழுது வரு வது நாம். அப்படியிருக்க நாம் அதைத் தொடக் கூடாதென்று அந்தப் பார்ப்பான் கூறுகிறானென்றால் அப்படிப்பட்ட இடத் திற்கு நாம் போகலாமா? அதற்குத் தேங் காய் பழம் படைக்கிறீர்களே, துணிமணி வாங்கித் தருகிறீர்களே? அதை அந்த குழவிக் கல்லா அனுபவிக்கிறது? குழவிக் கல்லால் சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் ஜீரணமாகி வெளிக்குப் போகிறதா? எல் லாவற்றையும் பார்ப்பான்தானே அனுப விக்கிறான், பாடுபட்ட பணத்தை அப்படி விரயமாக்கலாமா நீங்கள்? கடவுள் என் றால் அது யோக்கியமாக, ஒழுக்கமாக பார பட்சமின்றி நடந்து கொள்ள வேண்டாமா? பாடுபடும் நீங்கள் பட்டினி கிடக்க, படிக்க வசதியின்றித் தற்குறிகளாயிருக்க, ஏழை களாக, கீழ் ஜாதி மக்களாக இருக்க, பாடு படாத பார்ப்பனத்திகள் சோம்பேறிகளாக, அய்.சி.எ. காரர்களின் மனைவிகளாக, பட் டாடை உடுத்தி மேனி மினுக்குடன் உயர் ஜாதி மக்களாக வாழ அனுமதிக்கும் கடவுளா உங்களுக்குக் கடவுள்?

- "குடிஅரசு", 5.6.1948

 - விடுதலை நாளேடு, 6.3.20

இரண்டிலொன்று வேண்டும்

25.10.1931 - குடிஅரசிலிருந்து....

ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும் அவை யாவன.

1. கைபலம் (பலாத்காரம்)

2. புத்தி பலம் (சூழ்ச்சி அல்லது தந்திரம்)

மொகலாயர் கை பலத்தில் ஆண்டார்கள்.

வெள்ளையர் புத்தி பலத்தில் ஆண்டார்கள்.

இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை, ஆதியில் ஆங்காங் குள்ள கொள்ளைக்கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லரை சில்லரை யாய் ஆண்டிருப்பார்கள்.

ஆனால், ஆரியர்களுடைய (பார்ப்பன) சூழ்ச்சியானது மக்களைப் பிரித்துவைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மையாய் வாழும்படி செய்து கொண்டார் களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை

திரு. காந்திக்குப் பலமும் இல்லை, புத்தியும் இல்லை, ஆனால், ஆரியரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூழ்ச்சியைத் திரு.காந்தி மூலமாய் வெளியாக்குவதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றிகிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயனளிக்ககூடியதாகும். மற்றும் ஆரியருக்குச் சிறிது செல்வவான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளுவார்கள்.

ஆகவே, இந்தியப் பொதுமக்களுக்கு வெற்றி, அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும். பலம் வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும், ஜாதி வகுப்பு பிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு வேண்டும்.

பலம் இல்லாமல் சூழ்ச்சியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும், கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம்  என்னும், பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும்.

இரண்டும் இல்லாமல், காரியசித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமுகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

- விடுதலை நாளேடு 7.3.20

கடலூரில் திருமணம் -திரு.ஈ.வெ. இராமசாமி

20.09.1931 - குடிஅரசிலிருந்து...

சகோதரர்களே! சகோதரிகளே!!

மண மக்களே!!!

புதிய முறையான திருமணம் இப் பகுதிக்கு இது புதியது. பூசை மேடு கோவிந் தசாமி திருமணம் முன் நடைபெற்றது. அதன்பின் இன்று இங்குவந்திருக்கிறோம். தலைவர் முனிசிபல் கவுன்சிலர் புதிய முறையில் திருமணம் நடை பெறுமென்று கூறியபடி சுயமரியாதை திருமணம் என்றால் என்ன? நான் இங்கு வந்ததும் உறவினர், தோழர் முதலியவர்களின் அதிருப்தி ஏற்பட்டதாகக் கேள்விபட்டேன். அதன் காரணம் பகுத்தறிவில்லாமையே, மதம், புராணம், பழக்கம், வழக்கம், மோட்சம், நரகம், கற்பிக்கப்பட்டுள்ள மக் களுக்கு அதிருப்தியும், பயமும், நடுக்கமும் தான் தோன்றும். நன்கு யோசித்து திரு. பெருமாள் அவர்கள் போல் துணிவுடன் செய்தால்தான் வரும்கால உலகிற்குப் பயன் தரும். இதுபோன்ற திருமணங்கள் பலவிடங்களில் நடந்து கொண்டு வரு கின்றன. சிலவிடங்களில் விளம்பரத் திற்காக சிறிது ஆர்ப்பாட்டத்துடன் சுய மரியாதை இயக்கத்து திருமணம் நடை பெறுகின்றது. நான் கூறுவது சிலருக்கு, வியப்பாகத் தோன்றினாலும் தோன்றலாம். உங்கள் அறிவுப்படி கொள்ளவும், தள்ளவும் உரிமை உங்கட்கு உண்டு. பழமை, புதுமை என்ற பாகுபாடின்றி பகுத்தறிந்து முடிவுப் படி செய்யுங்கள், திருமணம் என்பது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வாழ்க்கைக்கு   அடிகோலும் ஆரம்ப நாளே திருமணம் என்பதாகும், பல சடங்குகளுக்கும் விழாக்களுக்கும் தத்துவார்த்தம் வேறாகயிருக்கலாம். ஆண் பெண் கூடி வாழ இச்சைக்காக, சந்தோஷத்திற்காக ஒன்று கூடும் ஜதை சேர்தலே திருமணமாகும், திருமணம் ஆணும் பெண்ணும் தங்களுக் குள் நேரில் சம்மதம்  பெற்று இருவரும் இன்பத்தோடு ஒன்றுபடுதலே எல்லா நாட்டாராலும் கையாளப்படுவதாகும். நம்நாட்டிலோ தாய் தகப்பன்மார்களின் வியாபாரமாக ஜதை சேர்க்கப்பட்டு முடிவு கூறப்படுகிறது. திருமணம் என்பது ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு வாழ்வது தெய்விகமென்ப தாகவும், மறு உலகில் இடம் பெறுதற்கான காரியங்கட்கு இங்கு வாழ்வதாகவும், கால வினை, பொருத்தம், முடிச்சு நமது கடமை, தேர்தல், முயற்சி என்ற காரணத்தையும் மறுக்கின்றோம், ஜாதிக் கொவ்வொரு விதமாக பழக்கவழக்க மென்ற காரணத் தால் சடங்கு, பணக்கேடு, நேரக்கேடு, மக்கள் ஊக்கக்கேடு ஆகிய கஷ்டத் தோடுதான் திருமணம் நடத்துகிறோம். மாற்றமடை வதில் நாம் பெரியார்கட்குப் பயந்துப் பழைமையையே குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொள்கிறோம். ஆண் பெண்ணுரிமையைப் பற்றியோ வெனில் ஆண் இச்சைக்கும், வேலைக்கும், ஏவுதலுக்கும் என்றே பெண்கள் சேர்க்கப் படு கிறது.

சொத்துரிமை, சம உரிமை பெண்கட்கு வழங்கப்படுவதில்லை. புதிய முறை என்பது ஒவ்வொருவரும் சிந்திக்கவும், ஆராயவும் வேண்டுவதுதான் இத் திருமணம் நிகழ்ச்சியாகும்.  இங்கு நடை பெறும் நடைமுறை நிகழ்ச்சிகள் பெரிதும் பெண்கட்குப் பயமாகத் தோன்றலாம், காரணம்  அடுப்பூதவும், வேலை செய்யவும், அடிமை என்று பழக்கியும் வந்ததோடு கல்வி அறிவு போதாக்குறை தான். செலவுசுருக்கம், நாள் குறை, வேலை குறை, பெண்கள் உரிமை, மணமக்கள் சம்மதம், கடன்படல் பின் கடன்தீர்க்கப் பாடுபடல் ஆனால் இன்று நடக்கும் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு பேர் என்று கேட்கலாம். அது ஒரு சாட்சிக்காகத் தான். ஒரு கடை வைப்பவன் மற்ற கடைக்காரர்களை அழைப்பதும், புதுப்பேரேடு போடுவதும், அவர்களது ஒப்பந்தத்தை எடுத்து ரு ஜுப்பிக்க பேசுவதும் சாட்சிக் காகத்தான்.

ஆகவே சாட்சிமுறை அவசியம். நமக்கு ஆதாரம் சாட்சிதான். மகம்மதியர் ஒரு புத்தகத்தில் கையொப்பம், கிறிஸ் துவர்கள் கோவில் முன்பாக ஒப்பம், நாம் அதற்காகவே இங்கு சாட்சியாகவே கூடியிருக் கிறோம். சாட்சி யில்லாததால் சமீபத்தில் ஒரு கலியாணம் தள்ளுபடியாயிற்று. ஆதலால்தான் நாம் கூடி சாட்சியளிக்கின்றோம்.

பெண் அடிமைப் படுத்துதல் ஒப்பந்ததில் சம உரிமையுடன் திட்டம் காணல் வேண்டும், வீணாக பழைய சென் மப்பலன், தலைவிதி என்று கட்டாயப்படுத்தி வருவதால் பெண்கள் இனி கட்டுப்பட்டு வாழாது.

நம்மில் ஒருவர் வியாபாரியிடம் முதல் கஷ்டப்பட்டுப் பாடுபட்டு பின் சுதந்திரம் பெற்று தனித்து வியாபாரியாகுவதை பார்க்கிறோம். புருஷன் தாசி வீட்டிற்கு போதல், கள் குடித்து அடித்தல் போன்ற காரணத்தால் கஷ்டப்படும் பெண்கட்கு விடுதலை வேண்டுவதாகும்.

நாங்கள் ஏன் இங்கு வந்தோம்? புரோகிதம் செய்ய வரவில்லை, ஆரம்பத்தில் பலருக்கு விளங் காததால் நாங்கள் வந்து இம்முறையை விளக்க வேண்டுமென்று திருபெருமாள் விரும் பியதற்காக வந்தோம்.

இன்னும் 10 வருஷங்களில் புருஷன் பெண்ஜாதி தேர்ந்தெடுப்பதுகூட எவ ருக்கும் தெரியப் போவதில்லை, பிற எல்லா நாட்டு நாகரிகங்களைப் பற்றி மட்டும் நாம் கூற தேவையில்லை. அவரவர்கள் அறிவுப் படியே அறிவு வளர்ச்சிப்படியே இத் திருமணம் நடைபெறும்.

- விடுதலை நாளேடு, 7.3.20 

வியாழன், 5 மார்ச், 2020

உணவு முறை

நம் மக்களுக்கு அரிசிச் சோறு தேவையற்றது; பயனற்றது, மாமிசம் சாப்பிடுவதை விட்டுக் காய்கறிகளை மட்டும் உண்பது நமக்குக் கேடாக வந்த பழக்க மாகும். மாட்டு இறைச்சியை ஒதுக்கியதும் மூடத்தன மாகும். வட நாட்டாருக்கு நம்மைவிட உடல் வளர்ச்சி, வலிவு, துணிவு அதிகமாகக் காணப்படுவது அவர்களின் உணவு முறையால்தான்.

- விடுதலை, 3.7.1964, தந்தை பெரியார்

நாம் சக்தி குறைந்தவர்களாகவும், மனஉறுதி யற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் இருக்கக் காரணம் நமது அரிசி உணவுதான். அரிசி சும்மா மனிதனைச் சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவனாக இருக்க உதவாது. அதில் சத்து இருக்காது. மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாகச் சத்து அதிகம் இராது. அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடியவர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிக்கு ஏற்ற தல்ல.

- விடுதலை,  3.2.1964, தந்தை பெரியார்

மாமிசம் உண்பது உலகெங்கும் மக்களுக்கு இயல்பாகி விட்டது. ஒரு சிறு கூட்டத்தினரே மாமிசம் உண்பதில்லை. ஆனால் அவர்களே வஞ்சம், கொடுமை மிக்கவரா யுள்ளனர். வாயினால் மட்டும் சீவகாருண்யம் பேசுவது மோசடியே.

-விடுதலை, 30.5.1968,

தந்தை பெரியார்

மேல்நாட்டார் மன உறுதியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவு முறைதான் காரணம் ஆகும். நாம் சுத்தச் சோம்பேறிகளாகவும் மன உறுதி யற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லா உணவு முறைதான் ஆகும்.

- விடுதலை, 3.2.1964,

தந்தை பெரியார்

நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச உணவைத் தாராளமாகச் சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்கப் பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல. அப்படியே பாவம் என்றாலும் கோழி தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துதானே வருகின்றார்கள்.

- விடுதலை, 3.2.1964, தந்தை பெரியார்

காய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவது தான் அதிகமான சீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால் உயிர் இருப்பதால் அது சீவனாகின்றது. சீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமா கின்றது. ஆகவே ஒரு செடியின் தழைகளைக் கிள்ளிப் பிடுங்கும் போதும் அவைகள் படும்பாடு சித்ரவதைக்கு ஒப்பாகிறது என்று போசு சொல்கிறார். எனவே ஒரு சீவனைத் தினம் பல தடவை வதை செய்து அதைத் துன்புறுத்துகிறோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும் அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது. ஆனால் மாமிசம் அப்படியல்ல. ஒரு சீவனைச் சாப்பிடுவதானால் ஒரு தடவைக்கு மேல் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதுவும் நொடியில் முடிந்து போகும். ஆதலால்தான் கிழங்கு, கீரை, காய்கறிகளைவிட மாமிசம் சாப்பிடுவது சீவகாருண்யம் ஆகும்.

- விடுதலை, 23.2.1969, தந்தை பெரியார்

இயற்கையின் தத்துவம் எப்படி இருந்தாலும் உற்பத்திப் பொருள்கள் சீவன்கள் எல்லாம் மனிதனுடைய உணவுக்குத்தான் பயன்படுகின்றன. மனிதன் ஒருவனைத் தவிர அனேகமாக எல்லாச் சீவராசிகளும் உணவுக்குத்தான் பயன் படுகின்றன. ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன.

- விடுதலை,  3.2,1964,

தந்தை பெரியார்

மனிதனுக்குக் கிரமமான உணவு மாமிசம்தான். அதை விட்டுவிட்டுப் பழக்க வழக்கத்தை உத்தேசித்துச் சும்மா அதனை ஒதுக்குகின்றார்கள். இதனால் மக்கள் பலவீனர்களாகத்தான் ஆகின்றார்கள். மக்கள் விவசாயப் பண்ணை வைத்துக் கொண்டு தானியங்களை உற்பத்தி பண்ணுவது போல மாட்டுப் பண்ணைகள் வைத்து நல்ல வண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவைப் பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- விடுதலை, 3.2.1964, தந்தை பெரியார்

- விடுதலை ஞாயிறு மலர் 29 2 20