தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.
செவ்வாய், 21 ஏப்ரல், 2020
கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க ஆண்டுவிழா
கருப்பு சட்டை ஏன்?
*- தந்தை பெரியார் -*
இனி நான் இறந்தாலும் ஏனையத் திராவிடத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிடமாட்டார்கள். தொடர்ந்து போராடி, வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. நமது கொள்கைகள் ஒரு அளவுக்குப் பொது மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம் போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடம் கொடுக்காது, நம் இஷ்டப்படி நடக்காத அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்காது.
நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரமே ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக வேண்டும்.
நீங்கள் என்ன சட்டைக்காரர்களோ என்று நம்மைச் சிலர் கேட்கக் கூடும். நம் நாட்டில் சட்டைக்காரர்கள் என்றொரு கூட்டம் இருந்து வருவது உண்மைதான்.
அவர்கள் பல ஜாதிக்குப் பிறந்தவர்கள், ஆகவே வெறும் சட்டைக்காரர்கள் என்று மட்டும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
நாம் அப்படிக்கல்ல, நாம் ஒரே ஜாதிக்குப் பிறந்தவர்கள். ஆகவே கருப்புச்சட்டைக்காரர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்கிறோம்.
கருப்புச் சட்டை ஒரு படையமைப்பின் சின்னமல்ல. அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம், துக்கப்படுகிறோம், அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி. பாடுபட்டுப் படி அளந்துவிட்டுப் பட்டினி கிடக்கும் நானா பஞ்சமன்? என் பாட்டின் பலனால் நோகாமல் உண்டு வாழும் நீயா பார்ப்பனன் இது நியாயமா?
கேள்விகளின் அறிகுறி கருப்புச்சட்டை
பாடுபடும் எங்களுக்கெல்லாம் இழிவான வேலைகள், பாடுபடாத உங்களுக்கெல்லாம் மந்திரி வேலையா? இது நியாயமா? பாடுபடாத நீங்கள் எல்லாம் அய்.சி.எஸ். படிப்பதா? கலெக்டர் ஆவதா? இது நியாயமா? நாங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், எவ்வளவுதான் உங்களுக்கு வாரிக் கொடுத்தாலும், எவ்வளவுதான் சுத்தமாய் இருந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்கமாய் நடந்து கொண்டாலும் நாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள்?
நீங்கள் எவ்வளவுதான் பாடுபடாத சோம்பேறி வாழ்வு நடத்தினாலும், எவ்வளவோ எங்களை மோசம் செய்து எங்களிடம் பிச்சை எடுத்துப் பிழைத்தாலும், நீங்கள் எவ்வளவுதான் அழுக்குப் பிடித்து, சொறி பிடித்துக் குஷ்டரோகியாகக் கிடந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்க ஈனர்களாக திருடர்களாக, கொலைக்காரர்களாக, கொள்ளைக் காரர்களாக, தூது செல்பவர்களாக இருந்தாலும் நீங்கள் உயர் ஜாதிப் பார்ப்பனர்களா? இது நியாயமா? என்ற கேள்விகளின் அறிகுறிதான் இந்தக் கருப்புச் சட்டை?
தோழர்களே! நீங்கள் விரும்பி அணியுங்கள் இதை! அடுத்த மாநாட்டிற்குள்ளாவது நம் சூத்திரப்பட்டம் ஒழிந்து போகும். அடுத்த மாநாட்டிற்குள் இந்த இழி ஜாதிப் பட்டம் கட்டாயம் ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். அதற்காக ஒரு 2000, 3000 பேர்களாவது பார்ப்பனர்களின் பலி பீடத்தில் தம் உயிரை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.
நானா சூத்திரன்? என் தாய்மார்களா சூத்திரச்சிகள்? இனி இந்நிலை ஒரு நிமிட நேரமேனும் இருக்க இடங்கொடேன்? இதோ என் உயிரை இதற்காக அர்ப்பணிக்கவும் துணிந்து விட்டேன் என்கிற உணர்ச்சி ஒவ்வொரு திராவிடனுக்கும் ஏற்படவேண்டும்.
இழிஜாதிபட்டத்தை ஒழிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்றாலும் உலக அறிவு முன்னேற்றம், ஜாதி உயர்வு தாழ்வுகளே இனி இருக்க கூடாது. ஆகவே உறுதி பெற்றெழுங்கள், செத்தாலும் சரி இழிவு நீக்கம்தான் முக்கியம் என்று. சாகாமலே கூட வெற்றி பெற்று விடலாம்.
*ஆதாரம் : "குடிஅரசு" இதழ் - 05.06.1948*
*நன்றி : "விடுதலை" ஞாயிறு மலர் 06.09.2014*
திங்கள், 13 ஏப்ரல், 2020
தமிழ் வருஷப் பிறப்பு
60 வருடங்களுக்கு மானங்கெட்ட கதை
ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவை களில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற்கைக்கு மாறுபட்ட வண்டத் தனமான சங்கதிகள் முதலியவை இல்லாமலிருப்பது மிக மிக அதிசயமாகும்.
சில வாரங்களுக்கு முன்னால் மாரியம்மன் என்னும் ஒரு பெண் தெய்வத்தைப் பற்றி வெளியான வியாசம் வாசகர் களால் படிக்கப்பட்டிருக்கலாம். அதற்கும் சில வாரங்களுக்கு முன் பண்டரிபுரத்தைப் பற்றி எழுதப் பட்டிருந்த வியாசம் படிக்கப்பட்டிருக்கலாம்.
இப்போது இன்னும் சிறிது நாட்களுக்குள் வருஷப் பிறப்பு வரப் போகிறது. இந்த வருஷப் பிறப்புக்குச் சம்பந்தப்பட்ட தமிழ் வருஷங்களின் யோக்கியதையை மானமுள்ள தமிழ்மக்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையாலேயே இதை நான் எழுதுகிறேன்.
இந்த வருஷப் பிறப்புக் கதை நாகரிகம் உள்ள மக்களால் எழுதப்பட்டிருக்க முடியுமா? இதைப் படித்துப் பார்க்கும் அந்நியன் இந்தக் கதை சம்பந்தப்பட்ட மக்களை என்ன என்று நினைப்பான்? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய சம்பவத்தை ஞாபகப்படுத்தக் கூடியதாகவும், சரித்திரத்திற்கு பயன்படத்தக்கதாகவும், நாகரிகமுள்ளதாகவும் உள்ள வருஷக் கணக்குகள் இருக்கின்றன. உதாரணமாக அவர்களது வருஷங்களுக்கு கி. மு., கி. பி., ஹிஜரி என்கின்ற பெயர்களும் அதற்கு நல்ல கருத்துகளும் இருக்கின்றன.
ஆனால் தமிழனுக்கும், நாதியற்ற தமிழனுக்கு என்ன வருஷம் இருக்கிறது? அதற்கு என்ன கருத்து என்று பார்ப்போமானால் தமிழன் என்கின்ற பெயர் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் வாழ்வதற்கு வெட்கமில்லையா? என்று தான் தோன்றும். தமிழனின் நிலையை ஆரியர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் மானங்கெட்ட காட்டுமிராண்டி, லம்பாடி சமூகமாக ஆக்கிவிட்டதால் இவ்வளவு இழிவு ஏற்பட்ட இந்தக் காலத்திலும் தமிழனுக்கு சூடு, சொரணை ஏற்படுவதில்லை.
கோவிலுக்கு தேவதாசிகளை விட்டவன் தமிழனே என்றால் மற்றபடி தமிழனால் ஆக்கப்படவேண்டிய இழி செயல் வேறு என்ன இருக்கிறது?
இது மாத்திரமா? மோட்சம் என்றால் தமிழன் எதையும் செய்ய முன் வருகிறான்.
'ஆ பயன் அய்ந்து' என்று சொல்லிக் கொண்டு மாட்டு மூத்திரம், சாணி எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறான் மற்றும் கேரள நாட்டில் நடப்பதை எழுதவே கை நடுங்குகிறது. ஏன் என்றால், ஒரு தடவை விடுதலை எழுதிவிட்டு ரூ.1500 செலவு செய்தும் ஆசிரியருக்கும், சொந்தக்காரருக்கும் 9, 9 மாத தண்டனை கிடைத்தது. அக்கிரமம் செய்கிறவர்களுக்குப் பெரிய வேட்டையும், பதவியும் கிடைக்கிறது; எடுத்துக்காட்டுபவருக்கு செலவும், ஜெயில் வாசமும் கிடைக்கிறது.
மனுதர்மத்தைவிட ஒருபடி முன்னால் போய்விட்டது நமது தேசிய ஆட்சி. ஆதலால் அதைச் சொல்லப் பயந்து கொண்டு நிறுத்திக் கொள்ளுகிறேன்.
ஆரியர்களால் எழுதப்பட்டு இன்று நம் இலக்கண, இலக்கியங்களில் முன்னிடம் பெற்று நம் பண்டிதர்களுக்குப் புலவர் (வித்வான்) பட்டம் பெற ஆதாரமாயிருக்கும் நூல்களில் இருப்பதையே சொல்லுகிறேன். படித்துப் பாருங்கள். இந்த ஆபாசமுறை மாற்றப்பட வேண்டாமா? நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்றதை மறந்து இனிமேலாவது ஒரு நாகரிகமான முறையில் நமது வருஷ முறையை அமைத்துக்கொள்ள வேண்டாமா என்பதை வலியுறுத்தவே மேலும் கீழும் குறிப்பிடப்படுவனவாகும்.
நம் வருஷப் பிறப்புக்குத் தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லிக் கொள்ளுகிறோம். இது நியாயமா? தமிழ் வருஷப் பிறப்பு கதையைப் பாருங்கள்.
வருடப் பிறப்புக் கதை
நாரதப் பிரம்ம ரிஷி அவர்களுக்கு ஒரு நாள் காமஇச்சை ஏற்பட்டதாம். எங்கு போனால் இது தீரும்? என்று ஞான திருட்டியினால் பார்த்து சாட்சாத் கிருஷ்ண பகவானிடம் போனால் தமது காம இச்சை தீரும் என்று கருதி கிருஷ்ணனிடம் ஓடோடி ஓடினாராம். கிருஷ்ண பகவான் நாரத முனி சிரேஷ்டரே எங்கு வந்தீர்? என்றாராம். அதற்கு நாரதர் ஒன்றும் இல்லை என்று தலையைச் சொரிந்து கொண்டு பல்லைக் காட்டினாராம். கிருஷ்ண பகவான் சும்மா சொல்லும் என்றாராம். நாரதர், எனக்கு எப்படியோ இருக்கிறது. உமக்கு அறுபது ஆயிரம் கோபிகள் (வைப்பாட்டிகள்) இருக்கிறார்களே, அதில் ஒன்று கொடுங்களேன் என்று கேட்டாராம். உடனே கிருஷ்ண பகவான் இது தானா பிரமாதம் இன்று இரவு எனது அறுபது ஆயிரம் கோபிகளில் நான் இல்லாத வீட்டிற்குப் போய் அங்கு உள்ள கோபியை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்றாராம். உடனே நாரத பிரம்மம் கிருஷ்ண பகவானுக்கு ஒன்று போக 59999 கிடைத்ததாகக் கருதிக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் கோபிகள் வீட்டுக்கு சென்றாராம். அங்கு சென்று எந்த வீட்டைப் பார்த்தாலும் அங்கெல்லாம் கிருஷ்ண பகவான் கோபியுடன் படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டு வெட்கப்பட்டு வெகு கோபத்துடன் கிருஷ்ண பகவான் வீட்டுக்கு வந்தார். வழியில் என்ன நினைத்துக் கொண்டு வருகிறார் என்று யோசித்தால் அது மிகவும் வேடிக்கையானது. அதாவது இப்படி நம்மை மோசம் பண்ணின கிருஷ்ணனையே இன்று அனுபவிப்பது என்று தான் கருதிக் கொண்டு வருகிறார் என்று தெரியவருகிறது.
அதாவது, பகவானே நான் சென்ற கோபி வீட்டில் எல்லாம் நீர் இருந்தீர். ஆதலால் சும்மா வந்துவிட்டேன். அதன் நிமித்தம் நான் தேவரீரையே அனுபவிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னதோடு பகவானைப் பெண்ணாகக் கொண்டு அனுபவிக்க அழைத்தால் ஒரு சமயம் வரமாட்டாரோ என்று கருதிப் போலும், பகவானே, என்னைப் பெண்ணாய்க் கொண்டு தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டேன் என்று கெஞ்சினார். பகவான் உடனே கருணை கொண்டு ஸ்ரீமதி நாரத அம்மாளை அனுபவித்தார். எத்தனை காலம் அனுபவித்தார் என்று தெரிய யாராவது வாசகர் ஆசைப்படலாம். இந்த நாரத அம்மையுடன் கண்ணன் 60 வருஷம் லீலை செய்தார். அப்புறம் என்ன ஆயிற்று என்றால் ஆணாயிருந்தால் என்ன, பெண்ணாயிருந்தால் என்ன, பகவான் கிரீடை செய்தால் அது வீணாகப் போகுமோ? போகவே போகாது. எனவே அந்த 60 வருஷ லீலைக்கும் வருஷத்திற்கு ஒரு பிள்ளை வீதம் நாரத அம்மாளுக்கு 60 பிள்ளைகள் பிறந்தன. இந்த 60 பிள்ளைகளும் தகப்பனைப் பிடித்துக் கொண்டு எங்களுக்கு என்ன கதி? என்று கேட்டன. பகவான் அருள் சுரந்து நீங்கள் 60 பேரும் 60 வருஷங்களாக ஆகி ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷத்திற்கு உலகாளுங்கள் என்று கருணை சாதித்தார். அதிலிருந்து 60 வருஷங்கள் ஏற்பட்டு அவைகளுக்கு இந்த 60 பிள்ளைகள் பெயர் வைக்கப்பட்டு வருஷம்தோறும் அப்பெயர்கள் மாறி மாறி வருகின்றன.
ஆகவே, இந்த 60 வருஷங்கள் பகவானும் ரிஷியும் ஆன ஆணும் ஆணும், ஆண் பெண்ணாகச் சேர்ந்து பிறந்த குழந்தைகள். இதற்காகத்தான் நாம் வருஷப்பிறப்பு கொண்டாடுகிறோம்.
இப்படி ஆணும் ஆணும் சேர்ந்ததால் பிறந்த அதிசய மான பிள்ளைகளானாலும் இந்த வருஷப் பெயரையோ, எண்ணிக்கையையோ கொண்டு 60 வருஷத்திற்கு மேற்பட்ட காலத்தைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் தமிழனுக்கு சரித்திரம் இல்லை என்பதோடு தமிழர் சரித்திர காலத்திற்கு விவகாரம் இல்லாமலும் இல்லை.
ஆகையால் இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ முறையைக் காரித் துப்பிவிட்டு கி.பி.யையோ, ஹிஜரி யையோ, கொல்லத்தையோ, விக்கிரமாதித்தனையோ, சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு சனியனையோ குறிப்பு வைத்துக் கொள்ளுவார்களா? என்றும் அவ்வளவு சூடு சொரணை தமிழனுக்கு உண்டா என்றும் கெஞ்சிக் கேட்கிறோம்.
- தந்தை பெரியார்
"குடிஅரசு" - கட்டுரை - 8.4.1944
திங்கள், 6 ஏப்ரல், 2020
மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்!
தந்தை பெரியார்
திராவிடன் அன்றே எதிர்த்தான்!
அன்பர் கலியாண சுந்தரனார் திராவிட நாடு வேறு, ஆரிய நாடு வேறு, திராவிடப் பண்பு வேறு, ஆரியப் பண்பு வேறு என்று இன்று காலை தெரிவித்தது போல், திராவிட நூல் வேறு, ஆரிய நூல் வேறுதான். திராவிடர்கள் எப்போதுமே ஆரியர்களை ஆரிய கலாசாரத்தை வெறுத்தே வந்திருக்கிறார்கள். திராவிட நாட்டை ஆரியர்களின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றப் பெரிதும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். இதனுண்மையைக் கந்த புராண ஆரம்பத்தில் காணலாம்.
சிவபெருமானுடைய கல்யாணத்தின் போது தேவர்க ளும், ரிஷிகளும் வந்து தென்னாடு உயர்ந்து விட்டதென்றும், வடநாடு தாழ்ந்துவிட்டதென்றும் அதற்குப் பரிகாரம் உடனடியாகச் செய்யப்பட வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள். இதிலிருந்து தென்னாட்டினர் உயர்வு ஆரியர்களால் எவ்வளவு வெறுக்கப்பட்டது என்பது இனிது புலனாகிறது. சிவன் யார் கெட்டிக்காரன் என்று ஆலோசித்துப் பார்த்து அகத்தியனை அனுப்பியிருக்கிறார். பரிகாரம் செய்ய மிகமட்டமான அதாவது சூழ்ச்சியில், தந்திரத்தில், வஞ்சகத்தில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பி வைக்கிறார். அவன் விந்திய மலையருகில் வரவும் அங்கு காவல் செய்துவந்த வாதாபியும், வில்லவனும் அவனைத் தடுத்து விடுகிறார்கள். இவர்கள் கந்தபுராணத்தில் சித்திரிக்கப் படுகிற சூரனுடைய தங்கச்சியின் மக்கள் ஆவார்கள். இவர்கள் வட நாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர்களைக் கொன்று தின்று விடுகிறதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியே அகத்தியனையும் தின்று விட்டதாகவும் ஆனால், அவனை ஜீரணம் செய்ய முடியவில்லை என்றும், அவனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு அகத்தியன் வெளிப்பட்டுச் சென்றான் என்றும், சென்று தமிழ் வளர்த்தான் என்றும் காணப்படுகிறது.
மடப்புலவர்களின் மதித்திறமை!
இந்தத் தமிழ்ப் புலவர்களும் ஆராய்ந்தறியாமல் இதையொட்டி 'அகத்தியன் வளர்த்த தமிழ்' என்று புகழ் பாடி விட்டனர். அகத்தியன் இங்கு வந்து பாதிரிகள் போல் தமிழ் கற்று நமது தர்மங்களை. ஒழுக்கங்களை மாற்றிய மைத்து இருக்கக்கூடும். இதற்காக அவனுக்கு நன்றி காட்டும் அவ்வளவு நன்றியுடையவர்கள் நமது மடப் புலவர்கள். 'நாய் நன்றி காட்டுவதெல்லாம் அந்நியனிடத்துத்தான்' என்பதுபோல், பழங்கால இப்பண்டிதர்களும் அந்நிய அகத்தியனுக்கே மரியாதை செய்துவிட்டனர். அந்த அகத்தியன் முடிவில் தமிழ் நாட்டிலிருந்து ராவணனைத் துரத்தி விட்டதாக வேறு காணப்படுகிறது. இதற்கும், ராவணனுடைய தம்பிக்கும், ராமன் பட்டம் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இக்கதைகள் எல்லாம் அபிதான சிந்தாமணியில் கொடுக்கப்பட்டிருக்கிறது அவற்றைப் படித்துப் பாருங்கள் தெரியும். ஆரியர் திராவிடம் போராட்டம் எப்போது ஏன் துவங்கியது என்று!
காட்டிக் கொடுக்கும் கயவர்களின் முன்னோன் விபீஷணன். இப்போது எப்படி சில திராவிடர்கள் அறி விழந்து ஆரிய வடவர்களையே தமது அரசியல் தலை வர்கள் என்றுகொண்டு, தாம் பணியாற்றும் வகையில், ஏனைய திராவிடர்களையும் எப்படி அவர்களுக்கு நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றனரோ அதுபோல், வால்மீகி காலத்திலும் சில திராவிடர்கள் இருந்திருப்பதை நாம் அவரது ராமாயணத்தைப் படிப்பதன் மூலம் நன்கு அறியலாம். வாலி கொல்லப்பட்ட பிறகு விபீஷணனைக் கொண்டு வந்து அனுமார் சேர்க் கிறார். அப்போது சுக்ரீவன் கேட்கிறான், அண்ணனுக்கே துரோகம் செய்யும் இவன் நாளை உனக்கு மட்டும் துரோகம் செய்யமாட்டான் என்று எப்படி நம்புவது என்று - அதற்கு ராமன் என்ன சொல்லுகிறான் பாருங்கள்.
"என் லட்சியத்திற்கு அதைப்பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராவணன் தோல்விதானே, அவனது முடிவுதானே எனக்கு வேண்டியது அதற்கு உதவி செய்யத் தகுந்தவன் யாராக இருந்தால், எப்படிப்பட்டவனாயிருந்தால் என்ன? அவனை, நண்பனாக கொள்ள வேண் டியது தானே! மேலும் அவன் எப்படி எனக்குத் துரோகம் செய்ய முடியும்? அவனுக்கு வேண்டுவது அண்ணனுடைய ராஜ்யமன்றோ, அண்ணன் செத்தால்தானே அவனுக்கு ராஜ்யம் வரும். ஆதலால், தனது அண்ணனை ஒழிக்க வழி நமக்குக் கூறி உதவி செய்துதானே தீருவான். இந்த விஷயத்தில் அவன் நமக்குத் துரோகம் செய்ய முடியாதே. அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்கு செய்ய முடியும். இவனை விட்டால் ராவணனை எனக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய வேறு ஆள் ஏது?" என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக் கொள்கிறான்.
ஆச்சாரியார் ராமநாதர்களை அறிமுகப்படுத்திய முறை
இதே மாதிரிதான், தம்முடைய லட்சியத்தையே குறிக்கோளாகக் கொண்டு இன்றையப் பார்ப்பனர்களும் மானாபிமானம் அற்று தம் கட்சிக்கு ஆள் தேடித் திரி கிறார்கள். நமக்கு எவன் துரோகம் செய்கிறானோ அவன்தான் பார்ப்பனர்க்கு ரொம்பவும் வேண்டியவன். மகாதேசபக்தன். அவர்களுடைய போற்றுதலுக்கு உரியவர்கள். புகழ்பெறுபவர்கள். நம்முடைய துரோகிகளின் மூலம்தான், அன்றுதொட்டு இன்றுவரையும் அவர்கள் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள். இதை, இந்த நாசமாய் போன துரோகம் செய்பவர்கள் உணர்ந்தால் தானே. தோழர்கள் ராமநாதனும் கே. வெங்கடசாமி நாயுடுவும் நமது கட்சியினின்று நீங்கி சென்றபோது, இவர்களைக் காந்தியாருக்கு அறிமுகம் செய்தபோது ராஜகோபாலாச்சாரியார், அன்று அனுமார் ராமனிடம் விபீஷணனை அறிமுகம் செய்து வைத்தது போன்றே செய்தாரே. "ராமநாதன் வந்துவிட்டார். பழையபடி அந்த சரணாகதிக்கு நீங்கள் மனமிரங்கி இடம் அளிக்க வேண்டும். ராமர் எப்படி விபீஷணனுக்கு அபயம் அளித்தாரோ அதேபோன்று இவருக்கும் தாங்கள் அபயம் அளித்தருள வேண்டும்" என்று.
ராவணனை விட்டு விபீஷணன் நீங்கியதற்கும், சுயமரியாதைக் கட்சியை விட்டு ராமநாதன் நீங்கியதற்கும் ஒப்புதல் காட்டிவிட்டாரே ராஜகோபாலாச்சாரியார். இது போலவே வெங்கிடசாமி நாயுடு விஷயத்திலும் சொன்னார். இந்த ராமாயண சம்பிரதாயந்தானே அன்று முதல் இன்று வரைக்கும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
கீதையை ஆரியர்கள் போற்றுவதேன்?
நீங்களே சிந்தித்துப் பாருங்கள், பார்ப்பனர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். கீதைக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். அவர்கள் பகவத் கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் அதைப்பற்றிப் பெருமையோடு எங்கும் பேசிவருவதும் உங்களுக்குத் தெரியாததல்லவே! இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? கிருஷ்ணன் கீதையின் மூலம் 4 ஜாதிமுறை உண்டென்பதையும், அதில் பார்ப்பனர்களே முதல் ஜாதியினர் என்பதையும் - கடவுளுக்கும் பெரியவர்கள் பார்ப்பனர்கள் என்ற தத்துவம் இருப்பதோடு, எப்படியும் அதர்மம் செய்தவர்களுக்கு மன்னிப்பு உண்டு, வர்ண அதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று ஒப்புக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை உணருக! வேதாந்திகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் கீதையில் 1000 வரி தெரிந்திருப்பது ஏன்? குறளிள் 2 வரி கூடத் தெரியாதது ஏன்? என்பதையும் சிலர் காவி வேட்டி கட்டிக்கொண்டு திராவிடர் கூடக் கீதைப் பிரசாரம் செய்துவருவது ஏன்? என்பதையும் யோசித்துப் பாருங்கள். கீதை எவ்வளவு அக்கிரமத்துக்கும் முக்காடுபோட்டுவிடும் காவி உடையைப் போல் ஏன்? கீதைக்குத் தலைவனான கிருஷ்ணனே அக்கிரமத்தின் தலைவனான காரணத்தால்!
பித்தலாட்டப் போர்வை கீதை!
அதற்கு பெரிய நெருப்பு குறள்!
தோழர்களே! நாம் எதிர்க்கும் நான்கு ஜாதிமுறையைக் கடவுளின் பேரால் வலியுறுத்தத்தான் கீதையும் கிருஷ்ண பஜனையும் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்.
கீதை படிப்பவர்கள் எத்தகைய தர்மத்தையும், ஒழுக் கத்தையும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பகவானே இதைச் செய்துள்ளபோது சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம் என்றோ, எல்லாம் பகவான் செயல் என்றோ, நான் ஏன் பார்ப்பான் என்பதைக் கிருஷ்ணனிடம் கேட்டுத் தெரிந்துக் கொள் என்றோ சுலபமாகப் பதில் கூறிவிடலாம். ஆனால் குறளைப் படித் தாலோ தர்மத்தின்படி நடக்க வேண்டும். பித்தலாட்டம் செய்ய முடியாது. பித்தலாட்டம் செய்பவரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பான கருத்துக்கள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியது தான். அத்தகைய மாற்றத்திற்கு இடம் தருவதுதான் குறள்.
மனித சமுதாயத்திற்கே வழிகாட்டி குறள்!
குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப் பட்டிருக்கிறது என்னலாம். காய்கனி தானியம் இவை அபரிமிதமாகக் கிடைக்குமானால், மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது?
முகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது. அது மனுதர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்லலாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக்காட்டலாம்.
மனித சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி, நன்னெறியூட்டி, நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள். எனவே தான், எல்லா மக்களும் எல்லா மதத்தவரும் எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள்.
எனவேதான், அதன் ஆசிரியரைக் கூட சில மதத்தினர் தம்மவர் என்று உரிமைப் பாராட்டிக் கொள்கிறார்கள். ஜைனர் தம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலைய ராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரை தம்மவர் என்று கூறி ஜடாமுடியுடன் விபூதிப் பட்டையுடன் காட்டுகிறார்கள். அவரோ எம்மதமும் இல்லாதவராகவே தோற்றுகிறார். ஒரு இடத்தில் "மயிரும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. மொட்டையும் அடித்துக்கொள்ள வேண்டியதில்லை. யோக்கியனாய் இருக்க வேண்டுமானால்" என்று கூறியிருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக்கொண்டு வடகலை நாமம் போட்டுக் காட்டுகிறார்கள். அவரை ஆழ்வாரில் ஒருவராகவும் ஆக்கிவிடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகாமகாக் கொலைபாதகத்தனமாகும்.
இராமாயணக் கூத்து ஏன்?
திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர்கள் இம்மாதிரி மதிப்பதில்லையே. இதிலிருந்தே தெரியவில்லையா, குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது என்று? இப்படிப்பட்ட திருக்குறளை விரும்புவதை விட்டு நம் நாட்டவர்கள் இராமாயணத்தை வைத்துக் கொண்டு கூத்தடிக்கிறார்களே அது நியாயமா?
எவளோ ஒருத்தி சொன்னாளாம் "பன்னாடைக்குப் பிறந்ததெல்லாம் பந்தம் பிடிக்குது. பண்டாரத்துக்கு பிறந்ததெல்லாம் மணியம் பார்க்குது" என்று. அதாவது மதிக்கப்பட வேண்டியது மதிக்கப்படாமல், மதிக்கப்படக் கூடாதன மதிக்கப்படுகின்றன என்று அர்த்தம். மேற்படி பழமொழி எப்படி வந்ததென்றால், முன்பெல்லாம் மிராசுதாரர்கள் கூத்திகளை வைத்துக் கொள்வார்கள். அவர்கள் கூத்தியோடு இருந்தால் அவர்கள் மனைவிமார் ஊர் பண்டாரத்தைத் துணைக்கு வைத்துக் கொள்வார்கள். தாசி வீட்டில் மிராசுதாரர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தாசி மக்கள் தொழிலையொட்டி கோயிலில் பந்தம் பிடிக்கும். ஆனால் மிராசுதாரர் பேரால் பண்டாரத்திற்கு அவர் வீட்டில் பிறந்த குழந்தைகள் மிராசு பார்க்கும் என்று கற்பனைக் கதை சொல்லுவார்கள், இதைக் குறிப்பதுதான் அப்பழமொழி. அதுபோல் உண்மைத் திராவிடன் தீட்டிய திருக்குறள் குப் பையிலே கிடக்க, திராவிடர் துரோகி தீட்டிய ராமாயணமும் ஆரியர் தீட்டிய கீதையும் அதி காரத்தில் இருந்து வருகிறது.
ஏன் இந்தத் திறப்பு விழா?
இந்த இழிதன்மையை, மானமற்ற தன்மையை, கவலையற்ற தன்மையை உங்களிடம் முறையிட்டுக் கொள்ள வேண்டித்தான் வள்ளுவர் படத்தைத் திறந்து வைக்க ஒப்புக் கொண்டேன். குறளுக்குள் நான் இன்று புகவில்லை. மற்றொரு சமயம் எடுத்துக்காட்டுகிறேன்.
இந்து மதத்தில்தான் 'தாழ்த்தப்பட்ட' கிளை!
'தாழ்த்தப்பட்ட' வகுப்பார் உணரவேண்டும், இந்துக் களாக இருப்பதால்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பாரென் கிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை! குறள் இந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வமதத்திலுள்ள சத்துக்களையெல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்.
விரும்பிப்படித்து அதன்படி நடக்கவேண்டும். ஒவ்வொருவனும் தான் இந்து அல்ல திராவிடனே - 'திருக் குறளானே' என்று கூறிக் கொள்வதில் பெருமையடைய வேண்டும். விபூதியையும் நாமத்தையும் விட்டொழிக்க வேண்டும். புராணங்களைப் படிக்கக் கூடாது. என்னமதம் என்றால் குறள் மதம், மனித தர்ம மதம் என்று சொல்லப் பழகவேண்டும். யார் எதைச் சொல்லியபோதிலும், எது எத்தன்மையுடையதாய் இருப்பினும், ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து பார்த்துப் பிறகே எது உண்மை என்பதை முடிவு செய்யவேண்டும். சுய அறிவே பிரதானம் என்ற, 'வாலறிவன் நற்றாள்' என்ற வள்ளுவர் கருத்துப்படி அனைவரும் நடக்க வேண்டும். உருவ வழிபாட்டை ஒதுக்கிவிட வேண்டும்.
முஸ்லிம்களுக்கு விண்ணப்பம்!
முஸ்லிம் தோழர்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்களை ஏனோ எங்களுடன் நன்கு சேர ஒட்டாமல் உங்கள் தலைவர்கள் தடுத்து வருகிறார்கள். ஜின்னாசாகிப் ஒரு காலத்தில் முஸ்லிம்கள் யாரும் வேறு கட்சியில் சேரக் கூடாது என்று கூறினார் என்றால், அதற்கு அர்த்தம் இருந்தது. முஸ்லிம்களின் லட்சியமான பாகிஸ்தானை அடைய எல்லா முஸ்லிம்களும் ஒரே கட்சியின் கீழிருந்து வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அவ்விதம் சொல்லியிருந்தார். அப்பொழுது நானும் முஸ்லிம் கட்சியிலிருந்தேன். பாகிஸ்தான் பெற்றாகிவிட்டது. எனவே அவர் கூறியது காலாவதியாகிவிட்டது. (லிமிடேஷன் பார் ஆகிவிட்டது) இனி முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்வது தான் நல்லது. இன்றுள்ள இம் மாகாண முஸ்லிம் தலைவர்கள் சொற்ப சலுகைகளுக்காகவும், பயத்துக்காகவும், சுயநலத்திற்காகவும் காங்கிரஸ்காரர்களின் காலடியில் இருந்து கொண்டு வருகின்றனர். தமக்குக் கிடைக்கும் சலுகைக்காக முஸ்லிம் இனத்தையே காட்டிக் கொடுக்கத் துணிந்து அவர்களைக் கோழைகளாக்கி விட்டனர் இதை முஸ்லிம் பாமரமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து கொள்வதா யிருந்தால் தாராளமாகச் சேர்ந்து கொள்ளுங்கள் நாம் வேண்டாமென்று கூறவில்லை. 100க்கு 90-பேராயுள்ள எங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களா 100க்கு 7பேரான உங்களுக்கு வளைந்து கொடுக்கப் போகிறார்களா? எங்களைப் பொறுத்தவரை, இன்னும் நாங்கள் உங்களை எங்கள் உடன் பிறந்தவர்களாகத் தான் கருதி வருகிறோம். நீங்களும் குறள் மதக்காரர்கள் என்றே கருதுகிறோம். நாங்களும் உங்களைப் போல், இந்து மதத்தை வெறுக்கிறோம் என்பதோடு; குறளை ஒரு போதும் வெறுப்பவர்கள் அல்ல; ஒன்றும் முடியாது போனால் உங்களைப் போன்ற குல்லாயாவது போட்டுக் கொள்ளலாம் என்று தான் நாங்கள் கருதியிருக்கிறோம்.
எங்கள் இனத்தவர் நீங்கள் என்பதற்காக, உங்களை இந்த அளவுக்கு அளவளாவும், ஆதரிக்கும் எங்கள் கழகத்தில் வேண்டுமானாலும் சேருங்கள் அல்லது வட நாட்டானால் பல கோடி செலவிட்டு பத்திரிகைகளைக் கொண்டு தீவிர பிரசாரம் செய்து இந்துக்களைத் தூண்டி விட்டு உங்களைக் கொள்ளையடிக்க நினைக்கும் பார்ப்பனர்களோடாவது சேர்ந்து கொள்ளுங்கள். சேருமுன் கொஞ்சம் தீர்க்கமாக யோசித்து விட்டு மட்டும் சேருங்கள். திருவண்ணாமலையும், ஈரோடும், திருநெல்வேலியும் உங்களுக்கு ஞாபகமிருக் கட்டும்.
கிறிஸ்தவர்களே!
நீங்களும் சிந்தியுங்கள்!
முஸ்லிம்களை விடக் குறைவான எண்ணிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்குச் சொல்லுகிறேன். கிறிஸ்தவர்களாகி விட்ட தாலேயே நீங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு விடாதீர்கள். நீங்களும் குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாக குறளில் ஒன்றும் கிடையாது. பார்ப்பனர்களின் தயவுக்காக வேண்டி சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள். உங்கள் நன்மையை பாதுகாத்துக் கொள்வதாயிருந்தால் ஜாதி, சமய, பேதமின்றி பாடுபடும் திராவிடர் கழகத்தில் சேருங்கள். திராவிடர் கழகம் திருவள்ளுவர் குறளை பின்பற்றி நடந்து வரும் கழகம். இந்நாட்டில் மனுதர்மம் ஒழிந்து மனிதத் தன்மையேற்படப் பாடுபட்டு வரும் கழகம். அதற்குக் குறள்தான் வழிகாட்டி. எந்த முன்னேற்றத்திற்கும் விரோதமில்லாமல் பணியாற்றி வரும் கழகம் என்பதை நீங்கள் உணர்ந்து ஆன எல்லா உதவியையும் அதற்கு அளித்து ஆதரியுங்கள்.
(24.10.1948 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக 19ஆவது மாகாண (ஸ்பெஷல்) மாநாட்டில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு.)
'குடி அரசு' - சொற்பொழிவு - 13.11.1948
ஞாயிறு, 29 மார்ச், 2020
ஒழுக்கக் கேட்டுக்குக் காரணம்
- ,தந்தை பெரியார்
இன்று நம் நாட்டில் பெரும் ஒழுக்கக்கேடு நிலவிவருகிறது. இனியும் வளரும்போல் தெரிகிறதேயொழிய குறைகிற வழி காணப்படவில்லை.
இதன் காரணம் நமது மதம் என்னும் இந்து (ஆரிய) மதந்தான்.
உலகத்தில் இந்து மதத்தில் மத, வேத, சாஸ்திர, புராண, இதிகாச ஆதாரங்களில், மதக் கடவுள்களிடத்தில், மத சம்பந்தமான கற்புக்கரசிகள் முதலிய பெண்களிடத்தில் காணும்படியான பொய், பித்தலாட்டம், ஏமாற்றம், வியாபாரம், பலாத்காரம் ஆகிய காரியங்கள், நடப்புகள் வேறு மதத்தில் – மத ஆதாரங்களில் காணப்படுவதில்லை.
ஒழுக்கக்கேடான, முட்டாள்தனமான காரியங்களை எல்லாம்கூட மதம் என்பதன் பெயரால் பாராட்டுகிறோம்; பண்டிகையாகக் கொண்டாடுகிறோம்: விரதமாக அனுஷ்டிக்கிறோம்; புண்ணிய சரித்திரங்களாகக் கொள்கிறோம்; நடிப்பு, நாடகம், சினிமா, சங்கீதம், ஓவியம், இலக்கியம் ஆகிய துறைகளில் கையாண்டு ரசிக்கிறோம். இவற்றை வெறுப்பதைக்கூட வெறுக்கிறோம். கடவுள், மதம் போய்விட்டதே, ஒரு வகுப்பாரைத் தூஷிக்கிறோமே, என்று கூப்பாடு போடுகிறொம். இந்த நிலையிலுள்ள மக்கள் எப்படி ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க முடியும்?
மனிதனை மனிதன், ‘ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும்”
என்று சொல்லுவதற்கு, மனிதத் தன்மை அல்லது மத, சமுதாய அனுபவங்கள், ஆதாரங்கள் முதலியவைகளைக் கொண்டாவது சொல்ல வேண்டும்.
நமது மனிதத் தன்மை, மனிதனை மனிதன் ஏமாற்றுவதே, அதாவது, மேல்சாதி, கீழ்சாதி, மோட்சம் – நரகம் – சடங்கு முதலியவையாகும். நமது அனுபவ ஆதாரங்கள் என்று சொல்லப்பட்டவைகளோ, ஆண் – ஆண் புணர்ச்சி, மனித – மிருகப் புணர்ச்சி, முறைகேடான, உரிமைக்குக் கேடான புணர்ச்சி ஆகிய இவைகளைக் கண்டு, கேட்டு, படித்து, ரசித்து உழல்பவருக்கு எப்படி ஒழுக்கம் ஏற்பட முடியும்? அதிலும், எவ்விதமான அயோக்கிய, ஒழுக்கமற்ற தன்மைக்கும் மிகமிக எளிதான பிராயச்சித்தமும் இருந்துவிட்டால், எப்படி மனிதனுக்கு ஒழுக்கத்தில் கவலையோ, பயமோ, ஒழுக்கமற்ற தன்மையில் வெறுப்போ இருக்க முடியும்?
அதிலும் நம் நாட்டுச் சாதி அமைப்பானது ‘‘கீழ்ச் சாதியை” மடையனாகவும், கல் நெஞ்சனாகவும், ஏமாற்றித் தீர வேண்டியவனாகவும் ஆகிகிவிடுகிறது. ஒரு முஸ்லிமிடமோ, ஒரு கிறிஸ்தவனிடமோ இருக்கின்ற ‘மன இளக்கம்” – மனிதனை மனிதனாக மதிக்குந் தன்மை, இன அன்பு, உதவி – இந்து என்பவனிடம் இல்லை, அதிலும் ஆரியன் என்பவனிடம் அவன் மதக்காரனுக்குக் காட்டுவது கூட இல்லவே இல்லை.
பழிவாங்க நினைக்கிறான், அதிலும் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கீழ்ப் பிறவியாகக் கருத வேண்டும் என்றும், ஒரு பிறவியை மற்றொரு பிறவி ஏமாற்றலாம் என்றும், ஒரு பிறவியின் உழைப்பை, மற்றொரு பிறவி உழைக்காமல்ஏமாற்றி, வஞ்சித்துப் பிழைப்பது தர்மம் என்றும் கருதி நடப்பதனால் ஒழுக்கம் எப்படி இருக்க முடியம்? குறைந்த அளவாவது இத்தன்மைகளை மக்கள் வெறுக்காமலும், வெறுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்காவிட்டாலும், தடை செய்யாமலாவது இருக்காமலும்; தடை செய்தாலும் அதை ‘ஒரு மாபெரும் பாதகச் செயல்” என்று சொல்லாமலாவது, எண்ணாமலாவது இருக்க வேண்டாமா?
மனிதனை மனிதன், ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்று சொல்வதற்கு அரசாங்கம் தண்டனையிடுவது தவிர, ஆதாரம் இல்லை, அரசாங்கம் இடும் தண்டனையும் இலஞ்சம், சிபாரிசு, வரும்படி – ஆகியவைகளுக்கு அடிமை, பிறகு ஒழுக்கம் எங்கிருந்து குதிக்கும்?
(‘விடுதலை” – கட்டுரை – 3.8.1956)
ஞாயிறு, 22 மார்ச், 2020
சுயமரியாதை திருமணம் என்றால் என்ன?
தோழர்களே! இன்று இங்கு நடைபெறப் போகும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது. மற்ற திருமணங்களுக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் அடிப்படையாக என்ன மாறுதல் இருக்கின்றது என்று பாருங்கள்.
அனாவசியமாக சிலர் "சுயமரியாதைத் திருமணமா?" என்றாலே அதிசயப்படுவதும், ஏதோ முழுகி விட்டது போல் வெறுப்படைவதுமா யிருக்கின்றதே தவிர, வேறு என்ன மாறுதல் இருக்கின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.
விவாகம் அல்லது திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையை கூட்டுப் பொருப்பில் நடத்துவதற்குப் பலர் அறிய செய்துகொள்ளும் அல்லது செய்யப்படும் காரியமே ஆகும். இதைச் சிலர் அதாவது பழைய முறைக்காரர் சடங்கு என்கிறார்கள். சிலர் அதாவது புதிய முறைக்காரர்கள் ஒப்பந்தம் என்கிறார்கள். சடங்கு என்று சொல்லுகின்றவர்கள் உண்மையிலேயே சடங்காகவே கருதி காரியங்களில் லக்ஷியமில்லாமல் நடத்துகிறார்கள். அதாவது கல்யாணத்தில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் எவ்வித உரிமையும் இல்லை. அதுபோலவே சடங்கிலும் கல்யாணக்காரருக்கும் சடங்குக்கும் யாதொரு உரிமையுமில்லை. எப்படியென்றால் தம்பதிகளின் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களைப் பெற்றோர்களோ அல்லது இந்தப் பெற்றோர்களுக்கு வேண்டியவர்களோ பார்த்து இன்ன பெண்ணுக்கு இன்ன மாப்பிள்ளை அல்லது இன்ன மாப்பிள்ளைக்கு இன்ன பெண் என்று தீர்மானித்து விட்டால் அதைத் தம்பதிகள் மணமக்கள் ஆ÷க்ஷபிக்க முடியாது. அது மாத்திரமல்ல இன்னொரு அநியாயம் என்னவென்றால், திருமணம் என்பது நடக்கும் நிமிஷம் வரையில் மாப்பிள்ளை பெண்ணைப் பார்த்திருக்க மாட்டார். பெண் மாப்பிள்ளையைப் பார்த்திருக்க மாட்டார். 100க்கு 99 திருமணத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசி இருக்கவே மாட்டார்கள்.
அங்க லக்ஷணம், அறிவு லக்ஷணம், யோக்கியதை லக்ஷணம் ஆகிய எதையும் பார்க்காமலும் தெரியாமலும் தான் திருமணம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்கள் இருவர்கள் விஷயத்தில் ஏதாவது ஒன்று கவனிக்கப்படுகின்றதா என்றால் இருவர் பிறந்த நேரம் என்று சொல்லப்படும் "அது சரியான நேரமோ, தப்பான நேரமோ என்பதைப் பற்றி கவலை இல்லாமல்" ஒரு காலத்தைக் குறிப்பில் வைத்து அதன் மூலமாகவே ஒரு பொறுப்பற்ற நபரால் இருவருக்கும் பொருத்தம் உண்டா இல்லையா என்பது முடிவு செய்யப்பட்டு விடும். சில சமயங்களில் பிறந்த காலம், நேரங்கள் கூட கவனிக்கப்படாமல் பெண்ணின் பெயரின் முதலெழுத்தையும் மாப்பிள்ளையின் முதல் எழுத்தையும் ஆதாரமாக வைத்து பொருத்தம் முடிவு செய்யப்பட்டு விடும். மற்றும் சில சமயங்களில் அதுகூட இல்லாமல் கோவிலில் பூ வைத்து கேட்பது மூலமோ, கருடன் பறப்பது மூலமோ, பல்லி கத்துவது மூலமோ, இருவர் பெயர் எழுதப்பட்ட சீட்டுகளின் மீது ஈ(பறவை) உட்காருவதன் மூலமோ, அல்லது கோவில்களில் ஏதாவது ஒருவன் சாமியாடி வாக்கு சொல்லுவதன் மூலமோ கல்யாணம் தீர்மானிக்கப் பட்டுவிடும். எவ்வளவு காட்டுமிராண்டித்தன வாழ்வில் நமது மக்கள் இருந்து வருகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை.
இது போலவே சடங்குகள் விஷயத்திலும் இந்தச் சடங்குகள் எதற்காக என்றாவது இந்த சடங்கின் அர்த்தம் என்ன என்றாவது இச்சடங்குகளுக்கு அவசியமோ, ஆதாரமோ, ஆரம்ப காலமோ, பொருத்தமோ என்னவென்றாவது மணமக்களுக்கோ பெற்றோர்களுக்கோ மற்றும் பந்து மித்திரர்களுக்கோ யாருக்குமே தெரியாது.
ஆனால் சுயமரியாதைக் கல்யாணம் என்பது இந்தப்படிக்கல்ல. மணமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அர்த்தமும், பொருத்தமும், அவசியமும் இல்லாமல் வெறும் சடங்கு பழக்க வழக்கம் என்பதற்காக மாத்திரமே ஒன்றையும் செய்யக்கூடாது என்பதுமேயாகும்.
இவை மாத்திரமல்லாமல் திருமணம் சம்மந்தமாக செலவு மெனக்கேடு வீண் கஷ்ட நஷ்டம் ஆகியவைகளைப்பற்றி பழைய முறைக் கல்யாணங்களில் லக்ஷியமே செய்யப்படுவதில்லை. ஆடம்பரத்துக்காகவே வீண் செலவுகளை தகுதிக்கு அதிகமாக கடன் வாங்கியாவது செய்யப்பட்டு வருகிறது. திருமணத்திற்காக 3 நாள் 4 நாள் 5 நாள் சிலர் 7 நாள் கூட மெனக்கெட்டு அயலூர் பந்து மித்திரர்களையும் தருவித்து மெனக்கெடச்செய்து 5 விருந்து 10 விருந்து என்பதாகச் சாப்பாட்டுச் செலவும், பந்தல் மேளம் சங்கீதம் ஊர்வலம் வாணம் என்பதாக வீண் காரியங்களும் குடிகாரர்கள் குடித்த போதையில் தாருமாராய் நடப்பது போல் கல்யாண போதையில் சிக்கி பணங்கள், நேரங்கள், கஷ்டங்கள் ஆகியவைகள் தாருமாராக செலவாக்கப்பட்டு வருகின்றன. 2, 3 நாளைக்கு ஆக சிலர் பார்த்து புகழ்வதற்காக என்று செய்யப்படும் இப்படிப்பட்ட தாருமாரான ஆடம்பர சிலவுகள் கல்யாணத் தம்பதிகள் தலையிலோ அல்லது குடும்பத்தார்கள் தலையிலோ விழுந்து கல்யாணக் கடன் பார்வைகளால் வெகு நாளைக்கு அவதிப்பட வேண்டியிருப்பதால் சில குடும்பங்கள் கல்யாணச் செலவாலேயே பாப்பராகி மீளாக் கடன்காரர்களாகக் கூட ஆகவேண்டியதாகி விடுகின்றன. இப்படிப்பட்ட கொடுமைகளும் முட்டாள்தனமான காரியங்களும் கூடாது என்பதுதான் சுயமரியாதைக் கல்யாணம் என்பதின் முக்கியாம்சங்களாகும்.
மற்றும் கல்யாணம் செய்து கொள்ளும் விஷயத்தில் தம்பதிகளை விட மூன்றாவதவர்களுக்கே சகல சுதந்திரமுமிருந்து வருகிறது. செய்து வைப்பதற்கு ஒரு புரோகிதன் வேண்டும். இன்ன இன்ன மாதிரி செய் என்பதற்குப் பெற்றோர்கள், பந்து மித்திரர்கள் வேண்டும். இவர்கள் சொன்னபடியெல்லாம் தம்பதிகள் நடக்கவேண்டும்.
சுயமரியாதைக் கல்யாணம் என்பதில் இந்த முறையில்லை. மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களை ஒருவருக்கொருவர் சொல்லி சம்மதித்ததற்கு அறிகுறியாக மாலையிட்டுக் கொள்வது என்பதுடன் முடிவுபெற்று விடுகின்றது.
மற்றும் இவற்றையெல்லாம் விட ஒரு முக்கிய விஷயம் என்வென்றால் கல்யாண விஷயத்தில் மணமக்களின் வாழ்க்கைச் சம்மந்தம் முக்கியமானது லக்ஷியமானது அல்லவென்றும் அதில் ஏதோ ஒரு தெய்வீக சம்மந்தம் இருக்கிறதென்றும் அதுவேதான் திருமணத்தின் லக்ஷியமென்றும் ஆதலால் அப்பெண்ணும், மாப்பிள்ளையும் அத்தெய்வீக சம்மந்தத்துக்காக ஒருவர் குற்றங்களையும் அநீதிகளையும் மற்றவர்கள் பொருத்துக்கொள்ளவேண்டும் என்றும் அதிலும் சிறப்பாக மாப்பிள்ளை செய்யும் கொடுமையையும் அநீதியையும் பெண் பொருத்துக்கொண்டு வாழ்நாள் முழுமையும் மாப்பிள்ளைக்கு பெண் அடிமையாய் பக்தியாய் இருக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது.
ஆனால் சுயமரியாதைக் கல்யாணம் என்பதில் அப்படி இல்லை. திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமென்றும் அவ்வொப்பந்த விஷயம் பெண்ணையும், ஆணையும் மாத்திரமே பொருத்ததே ஒழிய வேறு எவ்வித தெய்வீகத்துக்கோ அல்லது எவ்வித கட்டுப்பாட்டுக்கோ சம்மந்தபட்டதல்ல என்றே சுயமரியாதைக் கல்யாணத்தின் தத்துவமாகும்.
மேலும் பழயமுறை கல்யாணமானது ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணமேற்பட்ட பிறகு தான் ஒருவர் மீது ஒருவர் ஆசைகொள்ளுவதோ காதல் கொள்ளுவதோ ஏற்பட வேண்டுமே ஒழிய அதற்கு (கல்யாணத்துக்கு) முன்னால் ஒருவர் மீது ஒருவருக்கு ஆசையும், "காதலும்" ஏற்படுவது கூடாதென்றும் குற்றமென்றும் அது விபசாரத்துக்கு சமானமானதென்றும் கூறப்படுகின்றது.
சுயமரியாதைக் கல்யாணத்திலோ, கல்யாணத்துக்கு முன்பாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவருக்கொருவர் ஆசையும் "காதலும்" ஏற்பட்டு அதன் பின்னரே கல்யாணம் நடக்க வேண்டும் என்றும், மற்றபடி கல்யாணம் ஆன பிறகு கல்யாணம் ஆய்விட்டதே என்கின்ற காரணத்திற்காக அங்க ஈனராய் இருந்தாலும் வியாதிக்காரறாய் இருந்தாலும், கொடியவறாய் இருந்தாலும் ஒருவருக்கொருவர் ஆசையும் காதலும் கொண்டுதான் ஆக வேண்டுமென்றும் சொல்வதை கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளுவதில்லை.
மற்றும் பழய முறைக் கல்யாணங்கள் ஒருதடவை கல்யாணமாகி விட்டால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுபடியும் பிரியக்கூடாதென்றும் இப்படிக் கூறாவிட்டாலும் ஆணுக்கு பிரித்துவிடவோ பிரிந்துகொள்ளவோ உரிமை உண்டு, பெண்ணுக்குத்தான் உரிமையில்லை என்றும் பெண்ஜாதி செத்துப்போனால் புருஷன் மறுவிவாகம் செய்துகொள்ளலாம் என்றும் பெண்ஜாதி உயிருடன் இருக்கும்போதே புருஷன் மாத்திரம் பல பெண்களை கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றும் பெண்கள் மாத்திரம் எந்தக் காரணம் கொண்டும் புருஷன் எவ்வளவு கொடியவனாகவும் மனுஷத்தன்மை அற்றவனாகவும் எவ் விஷயத்துக்கும் பொருத்தமில்லாமல் கொடுமையும் சித்திரவதையும் போன்ற கஷ்டத்தையும் கொடுப்பவனானாலும் புருஷனை விட்டுப் பிரியக் கூடாதென்றும் வேறு கல்யாணம் செய்து கொள்ள கூடாதென்றும் புருஷன் தான் பக்குவமாவதற்கு முன் தனது 5 வது 10வது வயதிலேயே இறந்துபோனாலும் வேறு புருஷனைக் கல்யாணம் செய்துகொள்ளாமல் விதவை என்னும் பெயருடன் உலக சுகபோகங்கள் எல்லாவற்றையும் வெறுத்து மக்கள் கண்ணுக்கும், மனதுக்கும் வெறுப்புத்தோன்றும் தன்மையில் வாழவேண்டும் என்றும் சொல்லுகின்றது.
சுயமரியாதைக் கல்யாணத்தில் இவ்வித அக்கிரமும், அயோக்கியத்தனமும் அறியாமையும் கொடுமையும் மூர்க்கத்தனமும் காட்டுமிராண்டித்தனமும் இல்லை. வாழ்க்கைக்கும் மனதுக்கும் ஏற்ற தம்பதிகளானால் கூடி வாழலாம். அவைகளுக்கு ஒவ்வாத வாழ்க்கையே "நரகம்" போன்றதான தம்பதிகளானால் பிரிந்து மனதிற்கு ஏற்றவர்களை மணந்து இன்பசுக வாழ்வு வாழ உரிமை உண்டு என்பதோடு புருஷனோ மனைவியோ யார் இறந்துபோனாலும் மறுவிவாகம் செய்துகொள்ளலாம் என்று கூறுகிறது.
பழய முறை கல்யாணப்படி பெண்களுக்கு சொத்து உரிமை இல்லை. வாழ்க்கையில் சரிபங்கு ஆதிக்க உரிமை இல்லை என்று கூறப்படுகிறது. சுயமரியாதை கல்யாணத்தில் சொத்திலும் வாழ்க்கை ஆதிக்கத்திலும் பெண்ணுக்கு ஆணைப்போலவே சரிபங்கு உரிமை இருக்கின்றது என்பதுடன் இவைகளே கல்யாண ஒப்பந்தத்தின் ஷரத்துக்களாகும். அநேகமாய் கல்யாண தத்துவம் பழயதும் புதியதும் ஒரு மாதிரிதான். எப்படி எனில் இங்கு ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் கல்யாணம் செய்துகொண்டார்களே ஒழிய ஆணும் ஆணும் சேர்ந்தோ, பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ கல்யாணம் செய்துகொள்ளவில்லை.
ஆதலால் இவ்வித திருமணத்தைப் பற்றி யாரும் கவலையோ ஆத்திரமோ படவேண்டியதில்லை. பெண் மக்களில் பலருக்கு இவ்விஷயத்தில் ஏதாவது மன சஞ்சலம் இருந்தாலும் இருக்கலாம். ஆண்களில் படித்தவர்கள் வித்வான்கள் என்று சொல்லப்படுபவர்களிலேயே சில அழுக்குமூட்டைகள் இருந்துகொண்டு விஷம பிரசாரம் செய்துவரும்பொழுது பெண்களில் இது விஷயமாய் அதிருப்த்தி உள்ளவர்கள் இருப்பது அதிசயமல்ல. ஏனெனில் பெண்களை நாம் எப்படி வைத்திருக்கின்றோம். அவர்களில் 100க்கு 99பேருக்கு அடுப்பங்கரையையும், படுக்கைவீட்டையும் மாத்திரமே காட்டி நகை மாட்டுகின்ற (குtச்ணஞீ) ஸ்டேண்டுபோல் நகைகளை மாட்டி இது என் பெண்ஜாதி (அடிமை) இது உன் பெண்ஜாதி என்று கண்காக்ஷி காட்டு கின்றோமே ஒழிய வேறு அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறோம் என்பதை யோசித்துப்பாருங்கள். வேண்டுமானால் கண்ணைமூடிக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டு கணக்கு வழக்குப் பார்க்காமல் பிள்ளைகளைப் பெறுவார்கள். இதற்கு ஒரு உபாத்தியாயரோ, அறிவோ வேண்டியதில்லை. எவ்வளவுக்கெவ்வளவு மடமை உண்டோ அவ்வளவுக்கு அவ்வளவு பிள்ளைகள் பிறந்து விடும். எவ்வளவுக்கெவ்வளவு அடிமைத்தன்மையில் மோகம் உண்டோ அவ்வளவுக்கவ்வளவு நகைகளை மாட்டிக்கொள்ளுவார்கள். தங்களை விகாரமாய் சிங்காரித்துக் கொள்ளுவார்கள். இவைகளையும், இவை போன்றவைகளையும்தான் நாம் அவர்களுக்குத் தாய் தந்தையர்கள் என்கின்ற முறையில் கற்றுக்கொடுத்திருக்கிறோம். ஆகவே இப்படிப்பட்ட பெண்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். இன்றைய பெண் எவ்வளவோ கல்வியும், செல்வமும், நாகரீக ஞானமும், கௌரவமும் உள்ள சுற்றத்தார்களுக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்து வந்தும் நிரம்பவும் கர்நாடக முறையில் பட்டிக்காட்டு கிராமவாசப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால் நமக்கு எவ்வளவு சங்கடமாயிருந்தது என்பது அவரவர்களுக்கே தெரிந்திருக்கலாம். இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால் அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நமது மக்களுக்கு ஏன் மனிதத்தன்மை இல்லை, சுயமரியாதை இல்லை என்றால் அவற்றிற்கெல்லாம் முக்கியத்திலும் முக்கியமான காரணம் இப்படிப்பட்ட தாய்மார்களால் பெறப்பட்டு வளர்க்கப்பட்டதேயாகும்.
கடைசியாக தோழர்களே ஒன்று சொல்லி முடித்துவிடுகிறேன். கல்யாணமானவுடன் பெற்றோர்கள் பிள்ளைகளை எதிர்பார்ப்பார்கள். சுற்றத்தார் எத்தனை ஆயிற்றென்று கணக்குக்கூட்டி வருவார்கள். தம்பதிகள் பிள்ளை பெறுவதினால் படும் கஷ்டம் காயலா அசௌகரியம் வாலிபம் பாழாவது அதிக பிள்ளைகள் பெறுவதினால் தரித்திரம், துன்பம், வியாகூலம், விசாரம், மானங்கெட நேருவது, சுயமரியாதை இழந்தாவது வாழ ஆசைப்படுவது ஆகிய காரியங்களைப் பற்றி யெவரும் சிந்திக்க மாட்டார்கள். யாதொரு பொறுப்பும் அறிவும் அற்று இன்று மணமக்களைப் பார்த்து "16 பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும்" என்று சொல்லுகிறவர்கள் நாளைக்கு ஒரு குழந்தைக்கு அரைச்சங்கு பால் வார்க்கக்கூட சம்மதிக்கமாட்டார்கள். ஏதாவது கஷ்டம் வந்தால்கூட பக்கத்து வீட்டில் குடியிருந்துகொண்டு கணக்குக்கூட்டிப் பார்த்து அசூசையும் வெறுப்பும் அடைவார்களே தவிர சிறிது பரிதாபம்கூட காட்டமாட்டார்கள். ஆதலால் மணமக்கள் குழந்தைகளைப் பெறும் விஷயத்தில் சிறிது ஜாக்கிரதையாகவும் அறிவுடமையாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
குறிப்பு: 08.06.1934 இல் சென்னை தோழர்கள், கற்பகம் அம்மாள் கே.கல்யாணசுந்திரம் ஆகியோருக்கு சென்னை சவுகார் பேட்டையில் நடந்த சுயமரியாதைத் திருமணத்தில் ஆற்றிய உரை.
தோழர் பெரியார், புரட்சி - சொற்பொழிவு 17.06.1934
வெள்ளி, 20 மார்ச், 2020
நான் சொல்லவில்லை இதை! (சு.ம.)
20.11.1943 - குடிஅரசிலிருந்து.....
பார்ப்பன மாந்தர்காள் - பகர்வது கேள்மின்,
இறந்தவராய உமை-இல்லிடை இருத்தி,
பாவனை மந்திரம், பலபட உரைத்தே,
உமக்கவர் புத்திரர்-ஊட்டின போது,
அருபசியாற் குலைந்து-ஆங்கவர் மீண்டு,
கையேந்தி நிற்பது-கண்டதார் புகலீர்,
அருந்திய உண்டியால்-ஆர் பசிகழிந்தது?
(உன் பசியா அவர் பசியா பார்)
என்ற இது கபிலரால் சொல்லப்பட்டது.
இப்படி இருக்க நீ திதி கொடுப்பது பார்ப்பனனுக்கு நீ மகன் என்பதை உறுதிப் படுத்தத்தானே பயன்படுகிறது?
உன் புத்தி கொண்டு பார் கபிலர் சொன்னதையும் தள்ளிவிட்டு என்னையும் மறந்து விட்டு உன் சொந்தப் புத்தியைக் கொண்டு சிறிது நன்றாய் ஆலோசித்துப் பார் அய்யா. ஓ! திதி கொடுக்கிறவனே! செத்துப்போனது உன் அப்பன். 100-க்கு 99 பாகம் அதிலே உனக்கு சந்தேகமிருக்காது.
அவன் இப்போது எங்கிருக்கிறான் என்பதும் உனக்குத் தெரியாது.
அவன் உடல் கட்டையில் வைக்கப்பட்டு, உன் கையாலேயே நெருப்பு வைக்கப்பட்டு, அது உன் கண்கள் முன்னாலே வெந்து சாம்பலாகி அதுவும் தண்ணீர் விட்டு கரைத்துவிடப்பட்டு விட்டது.
அல்லது உன் அப்பன் பிணத்தை நீயே பணங்கொடுத்து குழி வெட்டி குழிக்குள் போட்டு உன் கையாலேயே மண் தள்ளி புதைத்து மேலே கல் நாட்டியும் ஆகிவிட்டது. ஆகவே செத்துப்போன உன் அப்பனுக்கு இப்போது உடல் இல்லை. இது நிச்சயம்தானே? இனி திதி நீ யாருக்குக் கொடுக்கிறதாகச் சொல்லுகிறாய்,
என் அப்பனுடைய ஆத்மாவுக்குக் கொடுக்கிறேன் என்கிறாயா? அதாவது என் அப்பன் சரீரத்துக்கு அல்ல, உயிருக்குக் கொடுக்கிறேன் என்கிறாயா? சரி
அந்த உயிரை நீ பார்த்தாயோ? அதுவும் இல்லை.அது எங்கிருக்கிறது என்பதும் எப்படிப் போயிற்று என்பதும் உனக்குத் தெரியுமோ? அதுவும் தெரியாது. அந்த உயிர் எது எப்படி இருக்கும் என்பதும் உன்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியது. தெரியவும் தெரியாது. ஆனால் பார்ப்பான் சொல்லுகிறான் அந்த உயிர் வேறு ஒருவர் கண்ணுக்குத் தெரியாத(சூட்சும) சரீரத்தோடு மேல்லோகத்தில் இருக்கிறது என்கிறான். அவன் சொல்லுகிற மேல் லோகத்தை நீயும் பார்த்ததில்லை; அவனும் பார்த்ததில்லை. அந்தப்படியான மேல்லோகம் ஒன்று இருப்பதாக எந்த பூகோள புத்தகத்திலும் இல்லை. வானசாஸ்திரத்திலும் இல்லை, அன்றியும் எத்தனையோ வித சயன்சு படிக்க சௌகரியமிருக்கிற வெள்ளைக்காரன் பிளானை வைச்சிக்கிட்டுக் கூட கண்ணில் தெரிகிற இமய மலையையே சரியாய்ப் பார்க்க முடியவில்லை. இந்த அன்னக் காவடிப் பார்ப்பான், டுஸ் இன்னா ஒரு காதம் ஓடிப்போய் திரும்பிப் பார்க்கிறவன், மேல்லோகம் ஒன்று இருக்கிறது,என்றால் நீ அதை எப்படி நம்பமுடியும் ?
அதுதான் இருக்கட்டும்
அதுதான் இருக்கட்டும் - செத்தவனெல்லாம் உடனே மறுஜென்மமாக இந்த பூமியிலேயே பிறக்கிறான். பிறக்கிறவனெல்லாம் பிறக்கு முன் ஒரு ஜன்மமாக இருந்து செத்த பிறகுதான் உடனே மறுஜன்மாய்ப் பிறக்கிறான் என்றும் இதே பார்ப்பான்தானே சொல்லி இருக்கிறான்!
மேலும் மேலும் இதே பார்ப்பான்தான் இன்னொரு சமயத்தில் உனக்கு என்ன சொன்னான் தெரியுமா? நீ அடுத்த ஜன்மத்தில் நல்ல (மேலான ஜாதி) ஜன்மமாகப் பிறந்து மேன்மையாகப் பிழைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் எனக்குப் பணம் கொடு என்று சொல்லி உங்கப்பனிடமும் உன்னிடமும் எவ்வளவோ பணம் வாங்கிக் கொண்டு போயிருப்பதோடு அதற்காக அந்த ஊருக்குப் போ, இந்த ஊருக்குப் போ, அதிலே முழுகு, இதிலே முழுகு, அதைச் செய், இதைச் செய் என்று உன்னை நாயாட்டமா அலையவெச்சிப் பிச்சிப் பிடுங்கித் தின்றிருக்கிறான்.
இவ்வளவோடு விட்டானா? அன்றியும் அவன் உன்னை இவ்வளவோடும் விடவில்லையே. மற்றும் பலவிதமாய் அதாவது மேல்லோகத்திலே மோஷம் இருக்கிறது, நரகம் இருக்கிறது என்றும் மோட்சத்தில் லட்டு மாதிரி நல்ல நல்ல பெண்கள் இருக்கிறார்கள், காமதேணு இருக்கிறது.சுடச்சுட அருமையாகச் சாப்பாடு போடும் கற்பக விருட்சம் இருக்கிறது, அது நீ எதைக் கேட்டாலும் நினைத்த மாத்திரத்திலேயே உடனே கொடுக்கும் என்றும், மேல் லோகத்தில் நரகம் இருக்கிறது, அந்த நரகத்திலே மலம் இருக்கிறது. அந்த மலத்திலே பாம்பு இருக்கிறது, தேள் இருக்கிறது. அதற்குள்தான் செத்தவன் உயிர் இருந்து அந்த மலத்தைச் சாப்பிட்டுக்கொண்டு பாம்பினிடமும், தேளினிடமும் சதா கடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும், ஆதலால் நீ மோட்சம் போக வேண்டுமானால் எனக்கு பணம், பொம்பளே, அரிசி, உப்பு, புளி, வேஷ்டி, துணி, பருப்பு கொடை இன்னம் என்னென்னமோ கொடுத்தாகணும் கொடுக்காவிட்டால் நரகம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி, ஆசைகாட்டியும் பயப்படுத்தியும் எவ்வளவோ வாங்கிக் கொண்டும்போய் இருக்கிறான்.
இன்னொரு சங்கதி
இவைகளையெல்லாம்விட இன்னொரு சங்கதி என்னவென்றால். அவனவன் பாவ புண்ணியம் அவனவனுடன்தான் கூடவே இருக்கும். அதை அவனவனே அனுபவித்துத் தீரவேண்டும் என்றும் அதற்குப் பேரேடு,குறிப்பு, சிட்டா கணக்கு இருக்கிறது. ஆதலால் அதற்காக வேண்டி மனிதன் நல்லதையே செய்ய வேண்டுமே ஒழிய கெட்டதைச் செய்யக்கூடாது என்றும் சொல்லி, நல்லது இன்னது (அதாவது தனக்குக் கொடுப்பதுதான் நல்லது என்றும்) கெட்டது இன்னது (அதாவது தனக்குக் கொடுக்காவிட்டால் பாவம் அது கெட்டது) என்றும் ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டு அதனாலும் பயனடைந்து வருகிறான்.
இத்தனை எழவு குழறுபடிகளில் நீ எதை நம்பி இந்தப் பார்ப்பாரப் பய்யனுக்குத் தெவசம், திதி கொடுக்கிறாய் என்று கேட்கிறேன்.
நீ இதுவரை கொடுத்ததற்கு ஏதாவது ரேடியோ சேதியோ போஸ்டல் ரசீதோ வந்ததா?
நீ கொடுத்த பண்டங்களைப் பார்ப்பான் வாங்கி மூட்டைகட்டிக் கொண்டு போய் உங்கப்பனுக்கு அனுப்பினானா? அல்லது குச்சிக்கார தேவடியா வீட்டுக்கு அனுப்பினானா என்பதையாவது பார்த்தாயா? இந்தப் பஞ்ச காலத்தில் எத்தனையோ சாமான்களை மூட்டை கட்டி அவன் கையில் கொடுத்து காலில் விழுந்து கும்பிட்டு அவனை அனுப்பிக் கொடுத்ததைத் தவிர வேறு சங்கதி உனக்கு என்னவாவது தெரியுமா? இவ்வளவு முட்டாளாக இருந்து கொண்டு திவசம் கொடுக்கிறாயே, இது உன் (தலையில் மூளை இல்லாத) தலைவிதி வசம்தானே.
அட முட்டாளே! உனக்குச் சுயராஜ்யம் வேறு கேடு. அடி முட்டாளே! உனக்கு சமதர்மம் வேறே அழுகுது. நாயிக்குப் பேரு நவநீத கிருஷ்ணனாம். விளக்குமாத்துக்குப் பேருவீட்டு லச்சுமியாம்
இப்படித்தானே இருக்கிறது. உன் சங்கதி.
ஒரு பரீட்சையாவது பாரு
ஒரு பரீட்சை பார்க்கிறாயா - நீ 2 நாளைக்கு சாப்பிடாமல் பட்டினியாய் இரு. 3-ஆம் நாள் ஒரு பாப்பானைக் கூப்பிட்டு நீ உனக்கே திதி கொடுத்துக் கொள்ளப் போவதாக (அதாவது பிரயாகை முதலிய இடங்களில் தனக்கே பிண்டம் போட்டுக்கொண்டு வருகிறார்களே அதுபோல்) சொல்லி உனக்கு வேண்டியதை அவன் வசம் கொடுத்து அனுப்பி விடு. 2நாள் வரை பொறுத்துப்பாரு உனக்கு ஏதாவது பசி ஆறுதா அல்லது அதிகப்பசியும் களைப்பும் ஏறுதா என்று பாரு. உன் பசி தீராவிட்டால் இந்த ஊரில் இருக்கிறவனுக்கு திதி கொடுத்தே பசி ஆறாமல் இருக்கும்போது இனி மேல் லோகத்தில் இருப்பவனுக்கு திதி கொடுத்தால் போய்ச் சேருமா என்று யோசித்துப் பாரு. தொட்டுக்கிட்டுத்
தொட்டுக்கிட்டுத் தின்பேன் நீ என்ன கேட்கிறது என்றால் சரி மகராஜனாக அப்படியே செய் என்பதைத் தவிர வேறு என்னால் உன்னை என்ன செய்ய முடியும் ?
- விடுதலை நாளேடு, 20.3.20