திங்கள், 15 நவம்பர், 2021

பெண்கள் வழங்கிய பெரியார் பட்டம்

தமிழ்நாடு தவிர்க்க முடியாத பெயர் “தந்தை பெரியார்” தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் பெயர் “தந்தை பெரியார்” என்று அழைக்கப்பட்ட நாள் 1938 நவம்பர் 13 .

1938 நவம்பர் 13 ஆம் நாள், தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெண்கள் பல வகையான அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருந்த அச்சூழலில் இந்தப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு மீனாம்பாள், பண்டித நாராயணி, வா. பா தாமரைக் கண்ணி, பா. நீலாம்பிகை, மூவலூர் இராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் உட்பட்ட பெண்கள் குழு முன்னின்று நடத்தப்பட்டது.*

*ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான் ஈ.வெ. ராமசாமி “பெரியார்” என்று அழைக்கப்பட காரணம். “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது.” என்பதே அந்த தீர்மானம்.*

*அன்று முதல் இன்றுவரை எல்லோறாலும், “தந்தை பெரியார்” என்றே அழைக்கப்படுகிறார் ஈ.வெ. ராமசாமி.*

*இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஏராளமான மகளிர் பங்கேற்க இம்மாநாடு பெரும் உந்து சக்தியாக விளங்கியது. இந்த மாநாட்டில் ஆற்றிய உரையை குற்றச்சாட்டாக கொண்டுதான் தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.*

*குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 18 டிசம்பர், 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25 டிசம்பர், 1927 பிறகு குடிஅரசு இதழில் நாயக்கர் பட்டம் எடுக்கப்பட்டது. அவ்வாறாக, ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல்லை அவருடைய பெயருக்குப் பின்னால் இருந்து நீக்கிவிட்ட நிலையில், ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல் இல்லாமல் அவரது பெயரைக் குறிப்பிடுவதானது, அவருக்கு உரிய பெருமையைக் குறைத்துவிடுமோ என நம் இனப் பெருமக்கள் அஞ்சினர். அங்ஙனம் அஞ்சிய பலருள் ‘நாயக்கர்’ என்ற சொல் இருந்த இடத்தில் ‘பெரியார்’ என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து ‘ஈ.வெ. இராமசாமிப் பெரியார்‘ என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு. பி. சிதம்பரம் பிள்ளை.*

*பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ. இராமசாமி சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் என்பதையும் தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.*

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

செப்.17: ‘சமூகநீதி நாள்' (பெரியார் பிறந்த நாள்) தமிழ்நாடு அரசு அறிவித்த உறுதிமொழி!


“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -

  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்

  எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!

  சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!

சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!”

வெள்ளி, 8 அக்டோபர், 2021

கடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்?

 

தந்தை பெரியார்

தந்தை பெரியாரவர்கள் நன்றியுரை ஆற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலே, இந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக் கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் புகழ்ந்து மிகப் பெருமைப்படுத்தி- பாராட்டிப் பலர் இங்கு பேசினார்கள். வைதால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்; மனதறிந்து, நமக்குப் பொருத்தமில்லாத புகழ் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் சங்கடப்படுகின்றது. என்றாலும், அவர்கள் மனம் நிறையும்படி என்னால் இயன்ற அளவுக்கு நடந்து கொள்கிறேன், என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம் இயக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்;  நம் இயக்கம்  நாச இயக்கம்- ஆக்க இயக்கமல்ல, அழிவு இயக்கமாகும். நாசமான காரியங்களை ஆக்கவேலை யாகக் கொண்டிருக்கிற இயக்கமாகும். இந்த மாதிரி நாசவேலை செய்தவர்கள் எல்லாம் புராணங்களில், சரித்திரங்களில் பார்த்தால் அவர்கள் எல்லாம் அழிக்கப் பட்டு இருக்கின்றார்கள். நம் புலவர்கள் எல்லாம் நம்மை மூடநம்பிக்கைக் காரர்கள் ஆக்கிவிட்டார்கள். அவ்வளவு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாம் தொண்டு செய்து நமக்கு முன்னோர்கள் அடைந்த கதியை அடையாமல் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், நாசவேலை செய்பவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்து இருக் கின்றோம். நாச வேலை செய்பவர்கள் என்றால் பகுத்தறிவுவாதிகள் - அறிவைக் கொண்டு சிந்திப்பவர்கள் - அறிவின் படி நடப்பவர்கள் ஆவார்கள்.

மூடநம்பிக்கை மக்கள் நிறைந்த இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள் ஆட்சி என் றால் பலாத்காரத்தால் ஆட்சிக்கு வர வில்லை; மக்களை ஏமாற்றி வரவில்லை; எங்கள் கொள்கை கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம், சம்பிரதாயம் இல்லை,  சாதி இல்லை. இவை யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே எடுத்துச் சொல்லி, அதன் மூலம் அவர்கள் ஓட்டு களைப் பெற்று அமைந்த ஆட்சியாகும்.

நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள்,  இராமாயணத்தைக் கொளுத்தியவர்; புராணம், இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்த கம் எழுதியவராவார். பத்திரிகைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால், நம் கொள்கைகளை - செயல்களை வெளி யிடாமல் அதற்கு மாறானவற்றை விளம் பரம் செய்கின்றார்கள். என்றாலும், அப் படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30 லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை- வெளியிடாமல் இருக்க முடியவில்லை.  இந்த 30 இலட்சம் மக்களும் அண்ணா யார்? என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே!  அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?

அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால், கல்யாணத்திற்குக் கடவுள், மதம், சாதி, பழைமை, தேவையில்லை; ஓர் ஆணும், பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரே! இது இந்த ஆட்சிக்குக் கடவுள்-மதம்-சாஸ்தி ரங்களில், சாதி, பழமைகளில் நம்பிக்கைக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானே! இது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்? அதோடு மட்டுமில்லையே, அரசாங்க அலுவலகங்களிலிருந்த சாமி படங்களை எல்லாம் நீக்க வேண்டும் என்று உத்தரவுப் போட்டாரே- இதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!

இந்த ஊரில் எனக்குச் சிலை வைத் தார்கள் என்றால், இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை; பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை, என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை- கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழு கிறவன் காட்டுமிராண்டி என்று சொல்ப வனுடைய சிலையாகும். கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும். இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந் தால் கோயில்களை எல்லாம் அவர்களா கவே இடித்து விடுவார்கள்.

நாம் இந்த ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் மாற்றமடைந்து இருக்கின் றோம். ஆட்சி என்று உலகத்தில் எப்போது ஏற்பட்டதோ அன்று முதல், மூடநம்பிக் கைக்காரன் ஆட்சிதான்- பார்ப்பான் ஆட்சிதான் நடைபெற்றிருக்கிறது. பார்ப் பானை மந்திரியாகக் கொண்டு பார்ப்பான் சொல்கிறபடி கேட்கிற ஆட்சிதான் நடை பெற்றிருக்கிறது.

பார்ப்பானுக்கு ஆட்சியில்- இயக்கத்தில் இடமில்லை என்ற நிலை இப்போது தானே, அதுவும் நம்முயற்சியால் ஏற்பட்டிருக்கிறது! இல்லை என்றால் இன்றும் பார்ப்பான் அல்லது பார்ப்பானின் அடிமைதான் ஆட்சி யிலிருப்பார்கள். நம்முடைய தொண்டின் காரணமாக, பிரச்சாரத்தின் காரணமாகத்தான் பார்ப்பான் அரசியலை விட்டு வெளியேறும் படி ஆயிற்று. நமக்கு மேலே உயர்ந்தவன் எவனுமில்லை; அவன் மட்டும் என்ன உயர்ந்தவன்? நீ மட்டும் ஏன் தாழ்ந்தவன்? எதற்காக ஒருவன் பார்ப்பானாக இருப்பது? இன்னொருவன் பஞ்சமன், பறையன், தீண்டப்படாதவனாக இருப்பது? என்கின்ற இது மாதிரிப் பிரசாரம் செய்ததாலே தான் இன்றைக்குப் பஞ்சமனை, நாவிதனை, பள்ளன், பறையனை எல்லாம் மந்திரியாக்கி இருக்கின்றோம்.  பல பெரும் உத்தியோகங் களில் நம்மவர் இருக்கும் படியாயிற்று. இந்த நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உண்மையில் பாடுபட்டவர்கள்- தொண்டாற்றியவர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.

காங்கிரசாரும், காந்தியும் இந்தத் தீண் டாமையைக் காப்பாற்றும் வகையில்  தான் நடந்து கொண்டனரே தவிர, தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கருதியது கூடக்  கிடையாது. நம் நாட்டில் தீண்டாமை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கடவுள், மதம், கோயில் இவற்றை எல் லாம் இன்னமும் கட்டிக்கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்? ஒருவன் தீண்டத்தகாதவனாக இருப்பது அவன் வழி படுகிற கடவுளால், பின்பற்றுகிற மதத்தால், கோயிலுக்குப் போய் வெளியே நின்று கொண்டு கும்பிடுவதால் தானே? எனக்குக் கடவுளும் வேண்டாம்; மதமும் வேண்டாம்; என்னைத் தீண்டத்தகாதவனாக மதிக்கிற கோயிலுக்கு நான் போகமாட்டேன், என் கின்ற துணிவு வருகிறவரைத் தீண்டாமை நம்மை விட்டுப் போகாது.

இன்றைக்குக் காங்கிரஸ்காரன்தான், தீண்டாமையை ஒழித்ததாகப் பேசிக் கொண்டு திரிகிறான்.

நாங்கள் மலையாளத்தில் செய்த போராட்டத்தின் காரணமாக, திருவாங்கூர் காரன் கோயிலைத் திறந்து விட்டு நாயாடி களை எல்லாம் நுழையவிட்டான்.

நாங்களும் மத மாற்ற மாநாடு கூட்டி, மக்களை எல்லாம் முஸ்லிம்களாக மாற்ற முற்பட்டபோது, பலர் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு அந்த மாநாட்டிலேயே மாறிவிட்டனர். மாறியவுடன் அதுவரை ஈழவர்கள், கீழ்சாதிக்காரர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த இடங்களுக்குப் போக ஆரம்பித்ததும், மேல் சாதிக்காரர்கள் அவர்களை நுழையவிடாமல் தடுத்தனர்; கலவரம் ஏற்பட்டது; அதில் முஸ்லிமாக மதம் மாறிய ஒருவன் இறந்து போய்விட் டான். உடனே கலவரம் முற்ற ஆரம்பித்தது; இந்து முஸ்லிம் கலவரமாக ஆக ஆரம் பித்து விட்டது; எங்குப் பார்த்தாலும் கலகம் ஏற்படலாயிற்று. இதைப் பார்த்துப் பயந்து, அப்போது இருந்த சி.பி.ராமசாமி அய்யர் எங்கள் ஆட்சியின் கீழுள்ள பொது  இடங்கள், கோயில், குளம், பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும், எல்லா மக்களும் செல்ல உரிமை உண்டு, என்று திறந்து விட்டார். அதன் பிறகுதான் இங்கு இவர்கள்- தீண்டப் படாதவர்கள் கோயிலுக்குள் செல்ல உரிமை வழங்கினர். அப்போது நான் காந்தியிடம் பறையர்களைக் கோயிலுக்குள் அனுமதித்ததன் மூலம் எங்களையும் பறை யனாக்கினீர்களே தவிர, பார்ப்பான் போகிற இடம் வரை எங்களை அனுமதிக்கவில் லையே என்று கேட்டேன். உடனே காந்தி சூழ்ச்சியாக இந்துக்கள் போகிற இடம் வரை தான் பார்ப்பனர்களும் போகவேண்டும் என்று சொன்னாரே ஒழிய, பார்ப்பான் போகிற இடத்திற்கு நாம் போகலாம் என்று சொல்லவில்லை என்பதோடு, நடைமுறை யில் பார்ப்பான் முன்பு போய்க் கொண்டி ருந்த இடம்வரை போய்க் கொண்டுதான் இருக்கின்றான்; அதை ஒன்றும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை.

நாட்டின் சகல துறைகளிலும் பார்ப் பானின் ஆதிக்கமே இருந்து வந்தது. ஆட்சித்துறை, அரசியல் துறை, மதத்துறை, எல்லாவற்றிலும் அவனே ஆதிக்கத்தி லிருந்து வந்தான்.

எனக்குத் தெரிய முதன் முதல் அய்க் கோர்ட்டில் தமிழர் ஜட்ஜாக வந்தது ராமசாமி ரெட்டியார், முதலமைச்சராக இருந்த போதுதான் ஆகும். அதற்கு பின் ஒன்றிரண்டாக இருந்து இன்று 10 பேர்கள் தமிழர்கள் ஜட்ஜாக இருக்கிறார்கள் என் றால், அதற்குக் காரணம் இந்த ஆட்சி தான் ஆகும்.  இன்று அய்க்கோர்ட்டில் இருக் கின்ற 14 ஜட்ஜூகளில் 10 பேர்கள் தமிழர்கள். மீதி 4 பேர்கள் தான் பார்ப்பனர்கள், இன்னும் இரண்டு மாதம் போனால் தமிழர்கள் எண்ணிக்கை  12 ஆகிவிடும். பார்ப்பானின் ஆதிக்கம் தொலைந்தது. இதனால் என்ன பயன் என்பீர்கள்? நம் வக்கீல்களுக்கும், நம் மக்களுக்கும் அத னால் நல்ல வாய்ப்புக் கிடைக்கும். இன்னும் ஒரு மாதத்தில் அய்யா அவர்கள் டில்லி ஜட்ஜாக ஆவார் என்று நினைக்கின்றேன். நீதித்துறையில் மட்டும் அல்ல, கல்வி விஷயத்திலும் காமராசரைப் போல, அவரைவிட ஒருபடி அதிகமாகவே நடந்து கொள்கின்றனர். இதுவரை எஸ்.எஸ்.எல்.சி வரை சம்பளம் இல்லாமல் இருந்தது. இப்போது கல்லூரி வகுப்பு (பி.யு.சி) வரை இலவசமாக்கி இருக் கிறார்கள். நம் மக்களுக்கு இருந்த மற்றும் எத்தனையோ கேடுகள் இந்த ஆட்சி வந்தபின் நீங்கி இருக்கின்றன. இந்தக் கட்சியைப் போல இனஉணர்ச்சியுள்ள, அரசியல் கட்சி வேறு எதுவும் கிடையாது. இந்தக் கட்சியைத் தவிர மற்ற கட்சிக்காரன் அனைவரும் பார்ப்பான் கையைப் பார்ப்ப வனாகத்தான் இருப்பான்; பார்ப்பான் சொல் கிறபடி நடப்பவனாகத் தான் இருப்பான்.

நம் பத்திரிகை என்பவை ஆரம்பிக் கும் போது நம் படங்களைப் போட்டு- கொள்கைகளைப் போட்டு மக்களிடையே பரவும். மக்களிடையே பரவிய பின் பார்ப்பானுக்கு வேண்டியவனாகி அவன் பிரசாரத்தை இவன் செய்ய ஆரம்பித்து விடுகின்றான்.

இன்று நம் பிள்ளைகள் அத்தனையும் படிக்கின்றன. இது மாடு மேய்க்கப் போகாது, உத்தியோகம் வேண்டும் என்று தான் கேட்கும்; நம்முடைய கடமை நம் இனத்தை ஆதரிப்பதே ஆகும். இன உணர்ச்சியோடு நம் இனத்திற்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டும். மற்ற ஆட்சியிலில்லாத குறைகளோ, அவற்றில் நடக்காத எந்தக் காரியங்களோ இந்த ஆட்சியில் நடைபெறவில்லையே. நம் மக்களுக்கு இன உணர்ச்சி, அறிவுப் புத்தி இருக்க வேண்டும். இந்த ஆட்சி நம் ஆட்சி என்கின்ற எண்ணம் வேண்டும். இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பார்ப்பானுக்கு இருக்கிற இன உணர்ச்சி நமக்கு வர வேண்டும். இந்த ஆட்சியில் நாம் பல முன்னேற்றங்களை அடைந்து இருக்கின்றோம். அந்த நன்றி நமக்கு இருக்க வேண்டும்.

நாமடைந்திருக்கின்ற நிலை நிரந்தர மான நிலையில்லை. முட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  கையை விட்டால் கீழே விழுந்துவிடும் நிலையில் இருக்கின்றது. அந்த நிலை மாறி, நிரந்தரமாக நிற்கிற வரை, நாம் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபகச்சின்னம் வைப்பது போன்ற இவை எல்லாம் பிரசார காரியமே தவிர இது பெருமையல்ல; ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர் தான் கடவுள் இல்லை என்று சொன்ன வராவார் என்று சொல்லுவான். இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலை யாகும். நான் இன்னும் வெகு நாளைக்கு இருக்க வேண்டுமென்று சொல் கிறார்கள். அவர்கள் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார் கள், அதனால் தான் சொல்கிறார்கள். வெகு நாளைக்கு இருக்கிற எனக்கு அல்லவா அதன் தொல்லை தெரியும்?

நம் கருத்து மக்களிடையே பரவ வேண்டும்; நம் கொள்கை பரவ வேண்டும் என்பது தான் இது போன்ற விழாக்களின் கருத்தாகும்.

24.5.1969 அன்று தர்மபுரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

('விடுதலை', 9.6.1969)

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

பெரியாரின் 85வது பிறந்தநாளுக்கு மபொசி அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி

பெரியார் ஈ.வெ .ரா . அவர்களுக்கு ,84 -வது வயது முடிந்து , 85 - வது வயது துவங்கி வருவதாக அறிகிறேன் .

 இவ்வளவு நீண்ட காலம் அவர் வாழ்ந்தது தமிழருக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும் . ஒருநாள்கூட , ஒரு மணி நேரம்கூட , ஓய்வெடுக்காமல் உழைத்து வருகின்றார்கள் . 

வயது 85 ஆயினும் வாலிபக் களை மாறவில்லை ! தோற்றத்திலோ அவரிடம் தொனியிலோ , நான் காணும் மிடுக்கு வியப்பைத் தருவதாகும் . இந்த புதுமைக்கு காரணம் அவர் பெற்றுள்ள மனத்திட்பமேயாகும் . 

கள்ளமற்ற வெள்ளை உள்ளம் , ஆனால் எவராலும் ஏமாற்ற முடியாத தெளிந்த மதி , பிறரை ஏமாற்ற விரும்பாத மனத்தூய்மை இந்த சீரிய பண்புகளே பெரியாரின் வாழ் நாள் நீடிக்க காரணங்களாகும் ! 

அச்சமென் பதை அறவே ஒழித்த அரசியல்வாதி !! யாருக்காகவும் , எதற்காகவும் , மனத்தில் தோன்றியதை மறைத்துப் பேசும் கபடம் இல்லாதவர் !!!பெரியாருடைய அரசியல் - சமுதாய கொள்கையில் மாறுபட்ட கருத்து எனக்கு உண்டு . ஆயினும் பொதுவாழ்க்கையில் அவர் கடைபிடித்து வரும் நேர்மை , நியதி , ஆகியவற்றால் நான் கவர்ச்சிக்கப்பட்டவன் . 

சாதி சமயத் துறைகளில் , அவர் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள போராட்ட திட்டங்களில் என் போன்றவர்கள் கருத்து வேற்றுமை காணலாம் . ஆனால் சாதி - சமயக் கொடுமை களை எதிர்ப்பதில் , அவர் காட்டும் துணிவைப் பாராட்டாமல் இருக்க முடியாது . அத்துறையில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அவர் ஆற்றிவரும் தொண்டு , பிற்பட்ட மக்களுடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்பட்டி ருக்கிறது . 
இன்னும் அத்துறையில் பெரியாரின் தொண்டு நாட்டிற்கு தேவைப்படுகின்றது . எனவே அவர் பல்லாண்டுகள் வாழவேண்டு மென்று விரும்புகிறேன் . 

அவரை வாழ்த்துவதற்கான வயது எனக்கு இல்லை . ஆயினும் அன்புள்ளம் காரணமாக ஒரு நூற்றாண்டுக்கு மேலும் வாழ , அவரை வாழ்த்துகின்றேன் .

( பெரியாரின் 85வது பிறந்தநாளுக்கு மபொசி அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி )

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

கேரளா மாநிலம், வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தந்தை பெரியார் படத்திற்கு கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை


வைக்கம், செப். 19- தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாளான சமூக நீதி நாளை முன்னிட்டு, 17.09.2021 அன்று கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத் தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பி.கே.ஜெயசிறீ இ.ஆ.ப., அவர்கள் தந்தை பெரியார் அவர் களின் சிலையின் அருகே அமைக் கப்பட்ட படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங் கினார். இந்நிகழ்ச்சியில், வைக்கம் நகராட்சித் தலைவர் ரேணுகா ரதீஷ், கேரள மாநில செய்தித்துறை துணை இயக்குநர் பிரமோத், கோயம் புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்

ஆ.செந்தில் அண்ணா, நகராட்சி உறுப்பினர் வி.ஞானசேகரன், வட் டாட்சியர் சஜி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக் டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர் களின் சார்பாக "தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு", "முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு" ஆகிய புத்தகங்கள் கோட்ட யம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பி.கே.ஜெயசிறீ அவர்க ளுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:-

சுயமரியாதை, பகுத்தறிவு, சம தர்மம், சமூகநீதி, இன உரிமை, பெண் உரிமை, ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்ட கொள்கை யைத் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார்கள். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்தச் சமூ கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட் டது, எதிர்காலத்துக்குப் பாதை அமைத்துத் தரப்போகிறது. இந்த உணர்வை, உணர்ச்சியை, எழுச் சியை, சிந்தனையை விதைக்கும் அடையாளமாக அறிவாசன், தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் "சமூக நீதி நாள் ஆகக் கொண் டாப்படும் என தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் அறிவித்திருந் தார்கள்.

அதனடிப்படையில், கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம், தந்தை பெரியார் நினை வகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலையின் அருகே அமைக்கப்பட்டிருந்த படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியாரால் உலக அளவில்

பெருமை பெற்ற வைக்கம்

தமிழ் நாட்டிற்கும், இந்தியா விற்கும் சமூக நீதிக்காக போராடிய முன்னணி தலைவர்களில் தந்தை பெரியார் அடித்தட்டு மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர். கேரள மாநிலத்தில் தீண்டாமை தாக்குதல் அதிகமாக இருந்த காலத்தில் கள மிறங்கி தாழ்த்தப்பட்ட மக்களை கோயில் தெருக்களில் அனுமதிக்க எடுத்த போராட்டத்தில் வெற்றி பெற்றார். இதன் காரணமாக வைக்கம் என்ற இந்த ஒரு சிறிய ஊர் உலக அளவில் பெருமை அடைந்தது.

இந்திய சுதந்திர போராட்டத் தின் போது காந்தியாருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளார். மக்களிடையே இருந்த மூட நம்பிக்கைகளை அகற்ற முழு மூச்சாக போராடியவர். அவரது பிறந்த நாளில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ் நாடு அரசுக்கு நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன். என கோட்ட யம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பி.கே.ஜெயசிறீ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித் தார்.

வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?

 

தந்தை பெரியார்

இந்தியர்களின் அடிமைத் தன்மைக்கும், இழி நிலைக்கும் மதமும், ஜாதியும், வகுப்பும் அவை சம்மந்தமான மூட நம்பிக்கை எண்ணங்களும், வெறிகளும், சடங்குகளும், இவற்றிற்காக ஒருவரை ஒருவர் அவநம்பிக்கை கொண்டு அடக்கி ஆள நினைப்பதுமே முக்கியமான காரணங்களாகும் என்பதாக நாம் பலதடவை சொல்லி வந்திருக்கின்றோம். பலமாக அனேக உதாரணங்களுடன் எழுதியும் வந்திருக் கின்றோம்.

மதங்களின் பேரால் பல முக்கிய மதங்களும், அநேக கிளை மதங்களும் உட்பிரிவு மதங்களும் ஏற்பட்டு, மக்களைப் பெரும் பெரும் பிரிவுகளாகப் பிரித்து விட்ட தென்றாலும் வருணாசிரமத்தையும், ஜாதிப் பிரிவுகளையும், பல வகுப்புப் பிரிவுகளையும் கொண்டதான இந்து மதமானது, எல்லா மதங்களையும் விட மக்கள் சமுகத்திற்குப் பெரிய இடையூறாய் இருந்து கொண்டுமக்களின் ஒற்றுமையையும், தன்னம்பிக்கை யையும் அடியோடு பாழாக்கி வருவதுடன் இதன் காரணமாய் மக்கள் வலு இழந்து, சுயமரியாதை இழந்து, சுதந்திரமற்று நடைப்பிணங்களாகவும், பகுத்தறிவற்ற மிருகத்தன்மையிலும் கேவலமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இதற்கு உதாரணமாக, சென்னை மாகாணத்தை மாத் திரம் எடுத்துக்கொண்டு பார்த்தாலே போதும், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஜனங்கள் சுமார் மூன்றே முக்கால் கோடி மக்கள் இருக்கின்றார்கள் என்றாலும் அவர்கள் 385 ஜாதி களாகவும் மற்றும் பல உள் பிரிவு ஜாதிகளாகவும் வகுக்கப் பட்டிருக்கின்றார்கள் (இந்த ஜாதி பெயர்களும் ஒவ்வொரு ஜாதியாரின் எண்ணிக்கையையும் காலம் சென்ற எல்.டி சாமிக்கண்ணு பிள்ளை அவர்களால் பிரசுரித்த மெட்ராஸ் இயர்புக் என்னும் புத்தகத்தில் காணலாம்). நாளேற நாளேற நாகரிகத்தின் காரணமாகவும், செல்வ நிலையின் காரண மாகவும் இன்னும் அதிகமான ஜாதிப் பிரிவுகளும், உட்பிரிவுகளும் ஏற்படும்படியான நிலையிலேயே தேசம் போய்க் கொண்டிருக்கின்றதே தவிர அவைகள் குறைந்து ஒன்று படத்தக்க முயற்சியோ அறிகுறியோ காண்பதற்கில்லை.

இந்தியாவின் 8-ல் ஒருபாகம் கொண்ட சென்னை மாகாணத்தில் மாத்திரம் 385 ஜாதிப் பிரிவுகள் இருக்கின்ற தென்றால் இனி மற்ற 7 பாக ஜனத் தொகையில் எத்தனை ஜாதிப் பிரிவுகள், எத்தனை உட்பிரிவுகள் இருக்கக்கூடும் என்பதை வாசகர்கள் சற்று சிந்தித்துப்பார்த்தால் தானாக விளங்கிவிடும்.

இந்த ஜாதிப் பிரிவுகள் மாத்திரமல்லாமல் உயிரினும் தேசத் தினும் முக்கியமாய் கருத வேண்டியதான தாய் பாஷைப் பிரிவுகள் எவ்வளவு? இவ்வளவு ஜாதியும், தாய் பாஷையும் தங்களுக்குள் பிரிவுபட்டு இருக்கின்றோம் என்று மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்காமல் தங் களுக்குள் ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற உள் எண்ணமும் வெளி நடவடிக்கைகளும் வெறுப்பும் துவேஷமும் எவ்வளவு?

இவற்றையெல்லாம் கவனிக்காமலும், இதை நேர்படுத்த முயற்சிக்காமலும் யாரோ சில சோம்பேறிகளும் சுயநலக் காரரும் தேசியம் தேசியம் என்று சொல்லி மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட நினைத்தால் நாடு எப்படி சேமம் அடையும்? கொஞ்ச நாளைக்கு மாத்திரம்தான் தேசிய வயிற்றுப்பிழைப்பு வியாபாரம் நடத்த முடியுமே ஒழிய இது என்றும் நிலைத்திருக்க முடியுமா என்பது யோசிக்கத் தக்கதாகும்.

வகுப்புவாதம் கூடாது என்று சொல்லுவதன் மூலம் ஏதோ சில பயங்காளிகளையும், வேறு வழியில் பிழைக்க வகையற்ற தேசியவாதி களையும், உத்தியோகம் பதவிப் பிரியர்களையும் மிரட்டலாமே ஒழிய, வகுப்புப் பிரிவுகளாலும், உயர்வு தாழ்வு வித்தியாசங்களாலும் உள்ள கஷ்டத்தையும் கேட்டையும் ஒழிக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

வகுப்புவாதம், மதவாதம், ஜாதிவாதம் பேசி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களால் தேசத்தின் விடுதலை கெட்டுப்போகின்றது என்று திப்பிலி, தேசாவரம், சதகுப்பைக ளெல்லாம் பேசவும் எழுதவும் தொடங்கி விட்டதைக் கண்டு நாம் சிறிதும் லட்சியம் செய்யவில்லை.

அந்தப்படி எழுதும் பேசும் யோக்கியர்களில் 100-க்கு அரைப்பேராவதுதங்கள் மதத்தையும், உள்மதத்தையும், ஜாதியையும், உள் ஜாதியையும், வகுப்பையும், உள் வகுப் பையும் விட்டு விட்டவர்கள் உண்டா என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்.

ஆகவே, தேசியம் என்பதும், தேசியப் பிழைப்பு என்பதும் மக்களை எவ்வளவு அயோக்கியர்களாகவும் இழிதகைமை உள்ளவர்களாகவும் செய்து விடு கின்றது என்பது கவனித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

எப்பொழுது ஒருவனுக்கு, அவனுக்கு என்று தனி மதம், தனி ஜாதி, தனி வகுப்பு என்பதாக பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது ஜாதி, தனது வகுப்புக்கு என்ற ஒரு உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்?

வகுப்புவாதம், மதவாதம், ஜாதிவாதம் கூடாது என்கின்ற யோக்கியர்கள்  ஒருவராவது மதத்தையும், ஜாதியையும், வகுப்பையும் அழிக்கச் சம்மதிக்கின்றார்களா? அது மாத்திர மல்லாமல் பார்ப்பனர் முதல் பறையர் வரை மாயாவாதம் முதல் சைவர் வரை அவரவர்களின் ஜாதி மத வகுப்புக்கு உயிரை விட்டாவது காப்பாற்ற வேண்டும் என்கின் றார்களேயொழிய ஒருவராவது ஜாதி மத வகுப்புக்களைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்களைக் கண்டு பிடிக்க முடியுமா? மதத்தையும், ஜாதியையும், வகுப் பையும் ஒருபுறத்தில் காப்பாற்றிக் கொண்டு மற் றொரு புறத்தில் ஜாதி மத வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம், இழி தன்மை என்று சொன்னால் அப்படிச் சொல் லுவது ஆயிரம் மடங்கு அயோக்கியத் தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத்தன்மையும், துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப்பிழைப் புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையா அல்லவா என்று கேட் கின்றோம்.

தேசம் ஜீவராசிகளுக்குப் பொதுவானதாகும். தேச ஆட்சியும் மக்களுக்குப் பொதுவானதாகும். எந்த மனிதனுக் கும் ஆட்சியில் அவனது இஷ்டத்தை தெரிவிக்கவும், ஆட்சியில் பங்குபெறவும் உரிமை உண்டு என்பவை எந்த மூடனும் மறுக்க முடியாததாகும். ஏதோ சில அயோக்கிய வஞ்சககாரர்களது செல்வாக்குக்காலத்தில்  அவர்களது ஏய்ப்பில் விழுந்த முட்டாள் மன்னர்களான, ஒழுக்க ஈன முள்ள அரசர்கள் காலத்தில் ஏற்பட்ட அக்கிரமங்களாலும், கொடுங் கோன்மைகளாலும் ஜாதி மத வகுப்பு ஆணவர்கள் ஏற்பட்டு ஒரு ஜாதி மத வகுப்பை மற்றொரு ஜாதி மத வகுப்பு அடக்கி ஆளும்படியாகவும், ஒரு ஜாதிமத வகுப்பு உழைப்பில் மற்றொரு ஜாதி மத வகுப்பு சோம்பேறியாய் இருந்து கொண்டு உண்டு வாழும் படியாயும் செய்யப்பட்டு விட்டதினாலேயே எல்லா காலங்களிலும் எல்லா அரசாட்சி களும் அப்படிப்பட்ட வஞ்சகர்களுக்கே உதவியாகவே இருக்கவேண்டுமா என்றும், யாரோ சிலருக்குப் பிழைப்பதற்கு வேறு வழி இல்லாத தினாலேயே அந்த ஈனர்க்களுக்கு கூலியாய் இருக்கும் இழிதகைமையை மற்றவர்களும் அடையவேண்டுமா என்றும் கேட்கின்றோம்.

ஏதாவது ஒரு மனிதன் என்னுடைய மதம் சிறுபான்மை யானது என்றும், என்னுடைய ஜாதி வலியிழந்த ஜாதி யென்றும், என்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்தப் பட்டதென்றும் சொல்லி, அதன் காரணமாக ஆட்சியில் எனக்குள்ள பங்கு இன்னது என்பதைத் தெளிவாய்ச் சொல்லி, என்னை நீ அடக்கி ஆள முடியாதபடி செய்துவிடு என்று சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது என்று கேட்கின்றோம். இதற்குப் பதில் சொல்லாமல் அப்படிக் கேட்பது குலாம் தன்மை என்றும், தேசத் துரோகத்தனம் என்றும் சொல்லுவதானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை இப்படிச் சொல்லுவது வயிற்றுப் பிழைப்புக்கு எச்சிலை பொறுக்கும் இழிதன்மை என்று ஏன் சொல்லக் கூடாது. தன் பங்கை தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் அநேகமாய் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே எந்த மதக்காரருடைய பங்கையானாலும், எந்த ஜாதி வகுப்புக் காரருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப்பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம். எப்படிக் கேடுற்றாலும் சில பொறுப்பற்ற கூலிகளின் ஜீவனம் நடந்தேறலாம் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. ஆனால், நாடு கெடும் என்பதை உண்மையும் பொறுப்பும் உள்ள மக்களுக்கு எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

சுமார் ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களும், சுமார் எட்டுகோடி முஸ்லிம்களும், தங்களுக்கு இந்துக்களிடம் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் எங்களை நம்பித் தானாக வேண்டும் என்று சொல்ல எந்த இந்துவுக்கு உரிமை உண்டு என்று கேட்கின்றோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தக்க சமாதானம் சொல்லி சரிப்படுத்த முயற்சிக்காமல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு காந்தி யிடமும், காங்கரசினிடமும் நம்பிக்கை இருக்கின்றது. அம்பேத்காரிடம் நம்பிக்கை இல்லை என்று சில பாவங்களுக்குப் பணம் கொடுத்து சீமைக்குத் தந்தி அடித்து பத்திரிகைகளில் விளம்பரப் படுத்தி விடுவது யோக்கியமான செய்கையாகுமா? என்று கேட்கின்றோம்.

உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் என்பவர் களில் நூற்றுக்குக் கால் பேராவது காந்தியையும் காங்கிரசையும் நம்புகின்றார்களா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்.

சீமையில் திரு. காந்தியவர்கள் தாழ்த்தப்பட்டவர் களுக்குக் காங்கிரசும் நானும்தான் பிரதிநிதி என்று சொன்னபோது திரு. அம்பேட்கர் சொன்ன பதிலுக்கு திரு. காந்தி என்னபதில் சொன் னார்? அம்பேட்கர் அவர்கள் நல்ல வெளிப் படையான பாஷையில் காங்கிரசுக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாதொரு சம் பந்தமும் இல்லை. காங்கிரசில் தாழ்த்தப்பட்ட மக்கள் கிடையா. அப்படியிருக்கத் திரும்பத் திரும்ப திரு. காந்தியவர்கள் காங்கிரசும் தானும்  தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதிகள் என்று சொல்லுவது பொறுப் பற்றவர்கள் சொரணையில்லாமல் பேசும் பேச்சாகும் என்று எடுத்துச் சொன்னார். அப்படி இருக்கும் போது மறுபடியும் மறுபடியும் காங்கிரசுதான் தாழ்த்தப்பட்டவர் களுக்குப் பிரதிநிதி என்று சொல்லுகின்ற வர்களுக்குச் சிறிதாவது மானமோ,  சுய மரியாதையோ இருக்குமானால் திரு. அம்பேட்கருக்குப் பதில் சொல்லிவிட்டு மேல்கொண்டு சமாதானம் சொல்ல வேண்டும். அதாவது இன்ன இன்ன தாழ்த்தப்பட்ட மக்கள் இத்தனை, பேர்கள் காங்கிரசில் இருக்கின்றார்கள். அவர் களது நிலைமை இன்னது என்று தெரிவித்துவிட்டு அம்பேட்கரையும் அவரது அபிப்பிராயத் தையும் கண்டிப்பது ஒழுங்காகும். அப்படிக்கில்லாமல் அம்பேட்கர் ஒரு குலாம், எம்.சி ராஜா ஒரு குலாம், என்.சிவராஜ் ஒரு குலாம், மதுரைப்பிள்ளை ஒரு குலாம், அவர்களை ஆதரிக்கின்ற மற்றவர்களும் குலாம் - இழிமக்கள் என்று பேசி விட்டால் எழுதி விட்டால் சமாதானமாகிவிடுமா என்று கேட்கின்றோம். இந்தப்படி பேசுகின்ற எழுதுகின்றவர் களுடைய உண்மை குலாம் தன்மை நமக்குத் தெரியாதா என்பதை அவரவர்களே யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

தன் பங்கைக் கேட்பவனைக் குலாம் என்றும், அடிமை என்றும், அதிகார வர்க்கத்தினர் கூலி என்றும், எச்சில் பொறுக்கிகள் என்றும் சொல்லத் துணிவதின் கருத்தெல்லாம் பேனாவும், காகிதமும் தன்வசம் இருக்கின்றன என்கின்ற தலைகொழுப்பில்லாமல் மற்றபடி அறிவும் நாணயமும் இருந்து செய்த காரியம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

அன்றியும் வட்ட மேஜை மகாநாட்டு முஸ்லிம் பிரதிநிதிகளைத் துரோகிகள் என்றும், வஞ்சகர்கள் என்றும், முஸ்லீம்களின் தொல்லை, என்றும், முஸ்லீம்களின் முட்டுக் கட்டை யென்றும், முஸ்லிம்களின் வஞ்சகம் என்றும், முஸ்லிம்களின் சூழ்ச்சி என்றும், தலையங்கம் கொடுத்து எழுதுவதே தேசியப் பத்திரிகைகளுக்கு ஒரு யோக்கியதை யாக விளங்குகின்றது. இது தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் என்று சொல்வது போல் நடக்கும் காரியமேயல்லாமல் வேறு என்ன என்று சொல்லமுடியும்.  தாழ்த்தப்பட்ட மக்கள் கையிலும், முஸ்லிம்கள் கையிலும் சரியான பத்திரிக்கைகள் இருந்து.  அச்சமுகத்தாருக்கும், தங்கள் உரிமைக்குப் பாடுபடுவதில் இன்னும் சரியான அக்கறை இருந்து அப்பத்திரிக்கைகளை ஆதரித்து பிரபலப் படுத்தி இருந்தால் இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கையிலும், முஸ்லிம்கள் கையிலும் சரியான பத்திரிகைகள் இருந்து அச்சமுகத்தாருக்கும் தங்கள் உரிமைக்குப் பாடுபடுவதில் இன்னும் சரியான அக்கறை இருந்து, அப்பத்திரிக்கைகளை ஆதரித்து பிரபலப்படுத்தி இருந்தால் இந்த சமூகங்களின் தலையில் தேசியத்தின் பேரால் சுலபத்தில் கல்லைப் போட்டு விட முடியுமா என்று கேட்கின்றோம். மவுலானா ஷௌகத் அலியைப் பற்றி சில பத்திரிகைகள் வெகு இழிவாய் எழுதத் தொடங்கி விட்டன. மவுலானா ஷௌகத் தலியின் நாணயத்தைவிட எந்த விதத்தில் திருவாளர்கள் காந்தியும், மாளவியாவும், ரங்கசாமி அய்யங்காரும், ராஜகோபாலாச் சாரியாரும், சத்தியமூர்த்தியும் உயர்ந்தவர்கள் என்று கேட் கின்றோம். மவுலானா ஷௌக்கத்தலி அவர்கள் மகமதிய சமுகமாகிய 8 கோடி மக்களுக்கும் சமமான ஆதிக்கம் வேண் டுமென உழைக்கிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம்.

ஆனால், மேல்கண்ட திரு. காந்தி முதலியவர்களின் உழைப்பு எத்தனை கோடி மக்களின் ஆதிக்கத்திற்கு என்பதை யோசித்துப் பாருங்கள். இந்திய ஜனத்தொகையில் 100க்கு மூன்று பேராய் உள்ள பார்ப்பன வகுப்புக்குமாத்திர மல்லாமல், வேறு வகுப்புக்கு ஆதிக்கமில்லாவிட்டாலும் சமத்துவமாவது கிடைக்கும்படி உழைக்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இம்மாதிரி சுயவகுப்புப் புலிகளான ஆசாமிகளைத் தேச பக்தர்கள் என்றும், உண்மையான முஸ்லிம் பிரதிநிதிகளை வகுப்புவாதிகள் சூழ்ச்சிக்காரர்கள், குலாம்கள் என்றெல்லாம் சொல்லுவதென்றால் இது எவ் வளவு மோசடியான தந்திர மென்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

நிற்க, ஒரு சமுகத்தாரிடமோ ஒரு மதக்காரரிடமோ மற்றொரு சமுகத்தார் உண்மையில் வயப்பட்டு பந்தோ பஸ்து விரும்பினால் அவர்களுக்கு சமாதானம் சொல்லி அவர்கள் பயம் தீரும்படியான மார்க்கம் செய்வதை விட்டு விட்டு இந்தப்படியெல்லாம் கேவலப்படுத்தி அவர்களது விருப் பங்களை அலட்சியப்படுத்தி அடக்கி ஆள நினைப்பது ஒரு நாளும் முடியாது என்பதற்காகவும், விஷமப்பிரசாரம் செய்து இழிவுபடுத்தப்பார்ப்பது இனி செல்லாது என்பதற்காகவுமே இதை எழுதுகின்றோம். அன்னியன் கையில் ஆதிக்கமும் பாதுகாப்பும் இருக்கும் போதே இவ்வளவு அக்கிரமங்களும், கொடுமைகளும், வஞ்சகங்களும் மனந்துணிந்து வேண்டு மென்றே செய்கின்ற மக்கள் இனி தங்கள் கைக்கு ஆதிக்கம் வந்தால் என்ன செய்யமாட்டார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது நடுநிலைமையாளர் கடமையாகும்.

'குடிஅரசு' - தலையங்கம் - 08.11.1931