திங்கள், 15 ஆகஸ்ட், 2016

பெரியாரின் கல்விச் சிந்தனைகள்

1. 85 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதி யுடையவனாக்குவது என்பதாகும்.
‘குடிஅரசு’ 27.9.1931
இதன் பொருள் அறிவு வளர்ச்சி, கண்டுபிடிப்பு-களில் ஆர்வம் - மற்ற பழைமை-வாதக் கருத்துக்களைக் கண்டு அஞ்சி அஞ்சி வாழாமை - ‘சுதந்திரத்தோடு வாழ்தல்’
2. ‘‘பொதுவாக மக்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அவசியம் வேண்டி யிருப்பவை, கல்வி, செல்வம், தொழில், சமூக சமத்துவம்.’’
3. ‘‘எல்லா மக்களுக்கும் தொழிற்கல்வி போதிக்கவேண்டும்; படித்து முடித்ததும் அவரவர் தொழில் செய்து அதன்மூலம் வருவாய் அடையும்படிச் செய்ய வேண்டும். (5.5.1972)
4. அறிவு என்பது வெறும் ஏட்டு அறிவு அன்று; உலக அறிவே முக்கியம். பொது அனுபவ அறிவுதான் பட்டப் படிப்பை விடச் சிறந்தது. ‘‘ஒருவன் எவ்வளவோ படித்திருக்கலாம். பட்டப் படிப்புகள் எல்லாம் படித்திருக்கலாம். பலே அறிஞன், புத்திசாலி என்று பேசப்படலாம். எல்லாம் அனுபவ அறிவைவிட மட்டரக-மானவைகளே’’.
5. ‘‘கல்வியானது அனைவரும் ஒன்றாக வாழக் கற்றுக் கொடுக்கவேண்டும்.
கற்பதன்மூலம் அனைவரிடத்திலும் அன்பு காட்டவேண்டும். அத்துடன் உலகத்தோடு ஒத்து வாழவும், உலகில் உள்ள அனைவரும் உடன் பிறந்தவர்கள் எனக் கருதவும் கல்வி வழி செய்வதாக அமைதல் வேண்டும்.
6. ‘‘கல்வி அறிவு மனிதனை மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் இருக்கப் பயன்படவேண்டும்.’’
- ‘விடுதலை’ 25.1.1947
7. கல்வியை, ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பரம்பரையாகக் கல்வியறி-வோடு இருப்பவர்களுக்கும் பிறவியிலேயே தங்களை அறிவாளிகள் என்று சொல்-பவர்களுக்கும் கற்பிக்க வேண்டியதே இல்லை. சிறப்பாக பெண்களுக்கும், தீண்டாதவராக ஆக்கப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்-பட்டோருக்குமே இப்போதைக்குக் கல்வி கற்பிப்பது இன்றிமையாதது. முன்னுரிமை இவர்களுக்கே என்பதே அதன் கருத்து.
8. ‘‘தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை நலத்திற்கே கல்வியைப் பயன்படுத்துவது கல்வியின் பயன் ஆகிவிட்டதால், கல்வி கல்லாத மக்கள் என்பவருடைய நாணயம், ஒழுக்கம் என்பதைவிட, கற்றவர்கள் என்பவர்களுடைய நாணயமும், ஒழுக்கமும் மிக மோசமாகவே இருக்கும்படி படித்த அநேகர் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
(‘குடிஅரசு’, 1.4.1944)
கட்டாயக் கல்வி
9. ஆறு மாதத்திற்குள் கையெழுத்துப் போடத் தெரிந்து கொள்ளாதவர்களுக் கெல்லாம், எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கு எல்லாம் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் போட்டால் விழுந்து விழுந்து படிக்க-மாட்டார்களா?
‘விடுதலை’, 4.9.1950
10. உலகக் கல்வி வேறு; பகுத்தறிவு வேறு. பட்டம் வேறு - பெரிய டாக்டராய் இருப்பார்; அவர் சாணியும், மூத்திரமும் சாப்பிட்டால் மோட்சத்திற்குப் போகலாம் என்று நினைப்பார்!
பெரியவான சாஸ்திர நிபுணராக இருப்பார் அவரும் தன் இறந்த தந்தைக்கு (திதிமூலம்) அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு அனுப்புவார். அவரும் தன் மனைவியையும், மகளையும் வீட்டுக்குத் தூரம் என்று திண்ணையில் தள்ளி வைத்துவிட்டு உள்ளே தாழ்ப்பாள் போட்டுத் தூங்குவார். மூட நம்பிக்கையற்ற கல்வி, சமயம் சாராக் கல்வியாக இருக்கவேண்டும்.
‘‘மனிதனின் கல்வியின் அவசியம் எல்லாம் மனித அறிவை வளர்க்கவும், அவ்வறிவால் தான் இன்புறுவதும், மக்கள் இன்புறும் தன்மை ஏற்படவும் அனுகூலமானதாக இருக்க-வேண்டும்.’’ (‘குடிஅரசு’, 27.5.1937) ஸீ
-உண்மை,16-31.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக