திங்கள், 18 ஜூன், 2018

தந்தை பெரியார் பற்றி புரட்சிப் பாடகர் கத்தார்


"பெரியார் விருது பெற்றிருக்கிறீர்கள்... அவரைப் பற்றிய உங்களின் கண்ணோட்டம் என்ன?"

"ராமர் படத்தை பெரியார் எரித்ததை மையமாக வைத்து நாடகம் நடித்துள்ளேன். ராமர் படத்தை எரிக்கும்போது, அதைத் தடுக்க சீதை வருவார். அப்போது நடக்கும் உரையாடல்கள் கடும் சர்ச்சைக் குள்ளானது. பொதுவாக, நான் எல்லாவற்றுக்கும் அறி வியல் பார்வை வேண்டும் என நினைப்பவன். பெரியாரும் எதைச் சொன்னாலும் அதற்கான காரணங் களைக் கேட்பவராக இருந்தார். தர்க்க ரீதியில் விளக்கச் சொன்னார். உதாரணமாக, இந்தப் பாட்டிலில் தண்ணீர் இருக்கிறது என்பது பார்ப்பவர்களுக்கே தெரியும். ஆனால், அந்தத் தண்ணீர் இனிக்குமா துவர்க்குமா என்பதை, பிறர் கூற நம்புவதைவிட, சோதித்துப் பார்த்து தெரிந்துகொள் எனச் சொன்னார். இதுவே எங்களை இணைத்தது. பெரியார் சீரமைத்த தமிழ்நாடு, இப்போது சினிமாக்காரர்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது."

"பெரியார் விருது பெறுகிறீர்கள். மார்க்சியத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் கடவுள் மறுப்புச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டு ஆன்மிக வழிபாட்டு முறைக்கு மாறியது ஏன்?"

"முதலில், கடவுள் யார் என்றும், அவர் எங்கிருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். 'கடவுள் என்பது ஒரு தற்காலிகமான நம்பிக்கை' என்று கார்ல் மார்க்ஸ் கூறியிருக்கிறார். இந்துக் கோயில்களுக்கு மட்டுமின்றி, எந்த மதக் கோயில்களுக்கும் செல்வேன். சில விஷயங்களில், மக்களின் பாதைகளை நாம் தேர்ந்தெடுப்பது நல்லது. அம்பேத்கருக்குச் செல்வாக்கு இருக்கிறது என அவரை பிஜேபி கையில் எடுக்க வில்லையா? மக்களோடு பயணித்து கடவுள் குறித்து, அவர்களுடன் விவாதிப்பது சரியான ஒன்றுதான். இங்கே இரண்டு விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று பக்தி, மற்றொன்று வெறி. ஆர்.எஸ்.எஸ். செய்வது இரண்டாவது ரகம். ஆனால், கடவுள் பக்தி இருப்பது ஒன்றும் தவறில்லை."

"மன மாற்றத்துக்குப் பிறகு மார்க்ஸியத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"என் கையில் வைத்திருக்கும் இந்தக் கம்பைப் பாருங்கள். முன்பெல்லாம் இதில் சிவப்புக் கொடியை மட்டும்தான் கட்டியிருப்பேன். இது மார்க்ஸியத்தின் அடையாளம். அது நம் சமூகத்தில் இருக்கும் வர்க்கப் பேதங்களை உடைத்தெறியும் சக்தி. சமீபத்தில்தான், இதனுடன் நீலநிறக் கொடியையும் கட்டினேன். இது, அம்பேத்கர் கொள்கைகளின் அடையாளம். சாதிய வேறுபாடுகளையும் களையும் சக்தி. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் இந்தியச் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படும். ஜாதியும் வர்க்கமும்தான் இந்தச் சமூகத்தைப் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றன. நான் ஒரு கட்டத்தில், சாதி குறித்துப் பேசவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தேன். ஆனால், அது சாத்தியம் இல்லை என்று 70 ஆண்டுகால வாழ்க்கை அனுபவத்தில் புரிந்துகொண்டேன். ஏனென்றால், இங்கே சாதியம் என்பது நுனிப்புல் பிரச்னை இல்லை; ரொம்ப ரொம்ப அடிப்படையான சிக்கல்!"

"சாதியை அடிக்கட்டுமானமாகக் கொள்வதில் அம்பேத்கரியவாதிகள், மார்க்ஸியவாதிகளுக்குள் மாறு பட்ட கருத்து உள்ளதே..."

"மார்க்ஸியம் என்பது வர்க்க வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ஆசியாவில் நிலவும் சாதியச்சூழலின் தன்மை மாறுபட்டது. அதைக் களைவதற்கு அம்பேத்கர், பூலே, பெரியார், நாராயணகுரு உள்ளிட்டோர் போராடினார்கள். மார்க்ஸியவாதிகளும் தற்போது அதைப் புரிந்துகொண்டு, இரண்டையும் ஒருசேர எதிர்க்கும் செயல்திட்டத்தில் இயங்கத் தொடங்கிவிட்டனர்."

நன்றி: 'ஆனந்த விகடன்' 30.5.2018

குறிப்பு:  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கத்தாருக்கு பெரியார் விருது அளிக்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 26.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக