திங்கள், 2 டிசம்பர், 2019

பெரியார் பேசுகிறார் !: பார்ப்பனர்களின் ஆயுதம்

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்போது நடக்கிற போராட்டம் தேவ-அசுரப் போராட்டம்தான். வேதப்படி, சாஸ்திரப்படி, புராணப்படி, அகராதிப்படி பார்த்தாலும் இது விளங்கும். அசுரர்கள் என்றால் நாம்தான். தேவர்கள் என்றால் பார்ப்பனர்கள். இந்த இரண்டு இனத்தாரிடையே நீண்ட காலப் போர் அதாவது, இராமாயண காலம் முதல் இந்த ஆச்சாரியார் காலம்வரை நடந்து கொண்டுதான் வருகிறது. இராவணன், இரணியன், சூரன், சூரபத்மன் எல்லாரும் ஒழிந்ததற்கு மூலகாரணம் தேவ - அசுரப் போராட்டம்தான். தேவர்கள் என்றால் மேலான சக்தியுள்ளவர்கள் கடவுள்கள். - தேவர்கள் என்றால், பார்ப்பான் என்று பொருள். பார்ப்பானும், கடவுளும் ஒன்று. அசுரர்களை அழிக்க அடிக்கடி அவதாரம் எடுத்து  வந்துள்ளார், மகாவிஷ்ணு என்னும் கடவுள். எதற்காக வந்தார் என்றால், அசுரர்களாகிய தமிழர்கள், தேவர்களாகிய பார்ப்பனரை நாட்டை விட்டு விரட்டியதற்குத் தமிழர்களை ஒழித்துக் கட்ட மகா விஷ்ணுவே அவதாரம் எடுத்து வந்து, தமிழனுடைய தலையைச் சீவி அழித்தார். அந்த மகாவிஷ்ணு அவதாரம்தான் இராமன், கிருஷ்ணன், எல்லாம்!

அந்த இராமனும், கிருஷ்ணனும் நான்தான் என்கிறார் இராஜாஜி! மிகத் துணிவோடு, மனுதருமம் நிலைக்கவேண்டும் என்று சொல்லுகிறார். அவருக்கு ஆதரவாக மதச் சம்பந்தமான சங்கங்கள், ஜாதி சம்பந்தமான கட்சிகள் இருக்கின்றன. மேலும், நம்முடைய மக்களுக்கு உழைக்கும்படியான கட்சிகள் என்று சொல்லப்படுவது எல்லாம் பார்ப்பானுடைய நன்மைக்கே உழைக்கின்றன. இவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு தைரியமாகச் சொல்லுகிறார், இராஜாஜி தான் வேதகால இராமன்; மனுதர்மத்தை இந்த நாட்டில் நிலைக்கச் செய்வதே தன் கடமை என்று! அவருடைய ஜாதிக்காரர்கள் அவருடைய முயற்சிக்குக் கட்டுப்பாட்டுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அங்குப்போனால் ஏதாவது கிடைக்காதா என்று பொறுக்கித் தின்பதே புத்தியாகக் கொண்டு நம்மவனும் ஓடுகிறான் என்றால், நம் மக்களுக்கு என்று உழைக்க யார் இருக்கிறார்கள்?

இராமாயணக் காலத்தை மனதில் வைத்துப் பார்த்தால் இப்போதுள்ள நிலைமை தெள்ளென விளங்கும். அந்தப் பக்கம் ராஜாஜி; இந்தப் பக்கம் திராவிடர் கழகம் இராமசாமி. அவர் எங்கு போனாலும் போகிற பக்கமெல்லாம், என்னை நினைத்துக் கொண்டே பேசுகிறார். நானும் அதைப் பற்றித்தான் பேசுகிறேன். என்னுடைய கருத்து, நம்முடைய மக்கள் எல்லோரும் மனிதத் தன்மையாக ஆக வேண்டும் என்பது. ராஜாஜி அவர்களுடைய கருத்து, மனுதரும முறைப்படி ஆட்சியை ஆக்கவேண்டும் என்பது. இதைப் பார்த்தால் புரியாதா, ராஜாஜி அவர்கள் யாருக்காக இருக்கிறார், யாருக்காகப் பாடுபடுகிறார், யாருடைய முன்னேற்றத்தை விரும்புகிறார் என்பது?

நம்முடைய மக்கள் சமுதாயத் துறையிலும், அறிவுத் துறையிலும் மட்டுமல்லாது, மதத் துறையிலும், கடவுள் துறையிலும் மனிதத் தன்மை பெறவேண்டும். இந்த சி.ஆர். (ராஜாஜி) மட்டுமல்ல, பெரிய பெரிய மனிதர்கள், அறிவாளிகள், மகான்கள், மகாத்மாக்கள், இன்னும் அவர்களைவிடப் பெரிய தெய்வீக சக்தி படைத்தவர்கள் என்று கூறப்படுபவர்கள் ஆக யாராய் இருந்தாலும், அவர்கள் எல்லோரும் இந்தப் பார்ப்பானுக்குப் பாடுபட்டவர்கள் அல்லது பாடுபடுபவர்கள் ஆகத்தான் இருப்பார்கள் - இருந்து வந்திருக்கிறார்கள். என்னுடைய   காலத்திற்கு முன்னால் யாரும் முட்டாள்தனம் ஒழியவேண்டும், அடிமைத்தன்மை ஒழிய வேண்டும், கடவுள் ஒழியவேண்டும், ஜாதி ஒழியவேண்டும், பார்ப்பான் ஒழியவேண்டும் என்று சொல்லவில்லை. இன்னும் அரசியல்மூலம் பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க ஆசைப்படுகிறானே தவிர, மான உணர்ச்சிக்குப் பாடுபடுபவன் யார்? எவ்வளவு பெரிய படிப்பாளியாக இருந்தாலும், பார்ப்பானுக்குப் பயந்து கொண்டு இருக்கிறானே தவிர, துணிந்து காரியம் செய்யவில்லையே? மேலும் நம் நாட்டில் படித்தவன், மேல் படிப்புக்காரன், புலவன் என்று இருக்கின்றனர் என்றால், அவர்களால் நமக்கு - நம் சமுதாய மக்களுக்கு என்ன நன்மை? அவனவன் பிழைப்புக்காகப் படித்திருக்கிறானே தவிர, ஊருக்கு உழைக்கவேண்டும் என்று எவன் படித்திருக்கிறான்? நான் தெரிந்தவரையில் நண்பர் இராஜாஜி அவர்கள் மனுவாகவே விளங்குகிறார்! வருணாச்சிரம முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தி தன்னுடைய இனம் வாழ வேண்டும் என்பதற்காகவே பாடுபட்டுக் கொண்டு வருகிறார். அதன் காரணமாகத்தான் நாங்கள் இரண்டு பேரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒட்ட முடியவில்லை! அவர் இனத்தைக் காப்பாற்ற அவருக்கு இருக்கும் கடமையைப்போல், நம்  இனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற கடமை நமக்கும் இருக்கிறது.  ஆனால், எடுத்தக் காரியத்தை முடித்துக் கொள்ளும் தன்மைக்கு மானத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் என்ற ஓர் ஆயுதம் அவர்களிடம் இருக்கிறது. நமக்கு மானத்தைப்பற்றி கவலை இருப்பதால் நமக்கு வெற்றி தோன்றுவது கஷ்டம்தான். மானம், ஈனம் என்பதைப்பற்றி கவலைப்படாததற்குக் காரணம் அவர்களுடைய கடவுள்களும் அதன் தருமமும் ஆகும்.

(08.02.1961 அன்று ஈரோட்டில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

- விடுதலை, 16.01.1961

- உண்மை இதழ் 16- 31 .3 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக