ஞாயிறு, 16 ஜூன், 2024

சமூக மாற்றம் இளைஞர்களின் வேகத்தில் விவேகம் வேண்டும் – தந்தை பெரியார்




நாட்டில் எந்தச் சீர்திருத்தம் நடைபெற வேண்டுமானாலும், அவை வாலிபர்களா லேயேதான் முடியுமென்று யாரும் சொல்லுவது வழக்கம். இம்முடிவு இன்று உலகில் சகலரும் அபிப்பிராய பேதமின்றி ஒப்புக்கொண்ட முடிவுமாகும். இது வெறும் வார்த்தை களல்ல. இதில் உண்மையில்லாமலுமில்லை.

ஏனெனில், வாலிபர்களினுள்ளம் களங்கமற்றது. உலகப்பற்று, சுயநலம், பேராசை, மனோராஜியமாகிய களிம்பும், துருப்பும் பிடியாமல் மூளையுடன் சுத்தமாயிருப்பதாகும். “இளங்கன்று பயமறியா”தென்ற பழமொழிக்கொப்ப அவர் களுக்கெந்தக் காரியத்திலும் பயமென்கிற தடையானது கிடையாது. அன்றியும் வாலிபர்களின் உள்ளமானது பக்கத்தில் தோன்று வதைப் பயமின்றி சடுதியில் பற்றுவதாகும், பற்றி விட்டாலோ தங்குதடைகளின்றி படரக்கூடிய வேகமுடையதாகும். இந்தக் காரணங்களால் வாலிபர்களே புதிய புதிய காரியங்களால் பயனேற்பட உதவக்கூடியவர்களென்று சொல்லப்பட்டு வருகின்றது.

பெரியவர்களிடம் காண முடியாது
எந்தக் காரியத்தைச் சாதிக்க வேண்டுமானாலும், சுய நலமற்ற தன்மையும், பயமற்ற தன்மையும், எதையும் தியாகம் செய்யும் உள்ளமும் வேண்டியதவசியமாகும். இந்தக் குணங்கள் வாலிபர்களிடமே தான் பெரிதும் காண முடியுமேயொழிய உலக வாழ்க்கையிலீடுபட்ட பெரியவர்களென்பவர்களிடத்தில் காணமுடியாது.

“நான் செத்தால் என் பெண்டு, பிள்ளைகளென்ன வாவது?” எண்கிற யெண்ணமாகிய ஒரு பெரும் விஷமே நமது மக்களின் பொதுநல உணர்ச்சியைக் கொன்று கொண்டு வருகின்றது. பொதுநல எண்ணம் ஏற்படாமல் செய்து வருகின்றது. நமது பெண்களும், அவர்களது ஆடவர்களை எவ்வித பொதுநல வேலைக்கும் லாயக்கில்லாமல் செய்து விடுகின்றார்கள். எப்படியென்றால் ‘அய்யோ! என்கணவா!! என்தெய்வமே!!! நீ செத்துப் போனால் நான் எப்படிப் பிழைப்பேன்? இந்தப் பிள்ளை, குட்டிகளை எப்படிக் காப் பாற்றுவேன்?’ என்று சதா ஜபித்துவரும் மந்திரமே, ஆண் சமுகத்தைக் கோழைகளாக்கி, சுயநலப்பித்தர்களாக்கி, நாணயமும், யோக்கியப் பொறுப்பற்ற தன்மையையுடையவர்களாக ஆக்கி வருகின்றது.

பொது நலத்திற்கு ஏற்றவர்கள்
நமது பெண்களுக்குச் சுதந்திரமோ, அறிவோ மற்றவர்களுதவியின்றி தானாக வாழக்கூடிய சக்தியோ மற்றும் ஆண்கள் “இந்தப் பெண்ஜாதி போனால், வேறு, ஒருத்தியைக் கொண்டு வாழ்க்கையை நடத்தலாம். இதற்காக அழவேண்டுமா?” என்று யெண்ணுகின்ற யெண்ணம்போல் “இந்தப் புருஷன்போனால், வேறொரு புருஷனைக் கொண்டு வாழ்க்கை நடத்தலாம்” மென்கின்ற தன்நம்பிக்கையுமிருந்தால், கண்டிப்பாக இன்று நமது நாட்டிலுள்ள ஆண் மக்களெல்லாம் உண்மையான ஆண் மகனாக யிருக்கமுடியும், சுதந்திரபுருஷனாக, மானமுள்ளவனாக இருக்க முடியும். ஆகவே, இந்தப் படியில்லாமல் போனதற்குக் காரணம், ஆண்மக்கள் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கைத் துணையானது பயங்காளியாகவும், தன் நம்பிக்கையற்றதாகவு மிருக்கும்படியான நிலையில் உள்ள பெண்களை வாழ்க்கைத் துணையாகக் கொண்டதால்தானே தவிர, வேறில்லை.

ஆனால், வாலிபர்களெப்படிப் பொது நலத்திற் கேற்றவர்களென்கின்ற மகிழ்ச்சியும், பெருமையும் மக்கள் அடைவதற்கு லாயக்குடையவர்களாயிருக்கின்றார்களோ. அது போலவே அதற்கு நேரிடையாக அவர்கள் விஷயத்தில் நாம் பயப்படும்படி, அவர்கள் அந்த வாலிபப்பருவ பயனை முன் பின் யோசியாமலெதிலும் செலுத்தி பொது நலத்திற்குக் கெடுதியை விளைவித்து விடக்கூடிய அபாயகரமான வஸ்துவாக ஆகிவிடுவார்களென்றும் சில சமயங்களில் கருதவேண்டியதாகவும் இருக்கின்றது.

ஏனெனில், அவர்களது பரிசுத்தமான உள்ளம் எதில் பற்றுகொண்டாலும் துணிந்து, நன்மை தீமை யின்னதென்று கூட யோசிக்காமல் திடீரென்று பிரவேசித்து விடக்கூடிய சுபாவமுடையதாகி விடுகின்றது.

எழுச்சியும் – வேகமும்
வாலிபவயதிலுள்ள எழுச்சியும், வேகமும், பயமற்ற தன்மையும் பொறுப்பெதுவென் றுணர்வதற்குப் போதிய அவகாசமும், சவுகரியமும், அனுபவ முமில்லாத காலபலனும் அவர்களை யேதாவது கண்மூடித் தனமான காரியங்களிலிழுத்துவிட்டு, அருங்குணங்களை வீணாக்குவதோடு, பின்னாலும் அவர்களது வாழ்வில் கஷ்டப்படவும் செய்து விடுகின்றன. ஆதலாலேயே சிற்சில சமயங்களில் நான் வாலிபர்கள் “ஜாக்கிரதையாகவே” யிருக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்வதுடன், அவர் களது வேகம் பொருந்திய ஊக்கம் சிற்சில சமயங்களில் பாயகரமாய் நாட்டுக்குப் பயனற்றதாய் சில சமயங்களில் கெடுதியையும், ஆபத்தையுமுண்டாக்கக் கூடியதாக யேற்பட்டுவிடக்கூடுமென்று சொல்லுவது முண்டு. அவர்களது எழுச்சியின் வேகத்தினால் செய்யப்பட்டக் காரியங்கள் அவர்களுக்கு பலன் கொடுக்காததாலோ அல்லது அக்கம் பக்கத்திய சார்பால் வேறுவித எண்ணங்கள் தோன்றிவிடுவதாலோ, அதாவது தாங்கள் சகவாசம் செய்தவர்களுடைய சகவாச தோஷத்தால் மற்றும் சுயநலமோ, பெருமையோ யேற்படுத்திக் கொள்ள வேண்டுமென்கின்ற ஆசை யேற்பட்டு விடுகின்ற காரணத்தால், அவர்களது முன்னைய வேகத்தின் பலனானது கெடுதியை (Reaction) யும் சில சமயங்களில் உண்டாக்கி விடு கின்றது. அதாவது, வேகமாய்ப் போகும் எழுச்சியென்னும் வண்டியானது அனுபோக மின்மை, அறியாமை சுயநலமென்னும் சுவரில் முட்டினால், வேகத்தின் மிகுதியினால் சுவரும் கெட்டு, வண்டியும் பழுதாகி, அக்கம்பக்கத்தவர்களுக்குத் தொல்லையையும் விளைவித்து விடுகின்றது.

எச்சரிக்கை
இத்தியாதி காரணங்களால் வாலிபர்கள் மிக்க ஜாக்கிரதையாக, பொறுமையாக யோசித்தே ஒவ்வொரு காரியத்திலும் தங்களருங்குணங்களைப் பயன் படுத்தவேண்டும். வாலிபர் உள்ளம். பெட்ரோலுக்குச் சமமானது. உலக இயக்கத்தோற்றங்கள் நெருப்புக்குச் சமமானது. வகையற்றமுறையில் பக்கத்தில் வந்தால் நெருப்புப் பிடித்து எண்ணெயை வீணாக்கி மற்றவர்களுக்குத் தொல்லையை விளைவித்து விடும். ஆகவே “வாலிபர் களே! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!! ”யென்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய வனாகயிருக்கின்றேன்.
வாலிப பருவத்தின் கோலத்தையும், அதனது பலனையும் நான் சிறிது அறிந்தவனேயாவேன். வெகுகாலம் நான் வாலிபனாக விருந்தவன். வாலிபனாகவேயிருந்து சாகவேண்டுமென்ற ஆசை யையுடையவன். அப்பருவத்தின் சக்தியையும் மேன்மையையு மனுபவித்தவன். அந்த அனுபவம் தப்பான வழியிலுமிருக்கலாம். சரியான வழியிலுமிருக்கலாம். ஆனால், நான் வாலிபப்பருவத்தை அனாவசியமாய் விட்டுவிடாமல், அதைப்பல வழிகளில் கசக்கிப் பிழிந்தவன், இந்த உண்மை மற்றவர்களைக்காட்டிலும் நீங்களும், உங்கள் பெரியோர்களும் நன்றாயுணர்ந்தவர்களாவீர்கள். ஏனெனில், நான் உங்களிலொருவனாகவும், உங்கள் குடும்பஸ்தர்களிலொருவனாகவும் இருந்து வந்தவன், ஆகவே, இங்கு இவ்வளவு தைரியமாய் எனது சகோதரர்களுக்கும், குழந்தைகளுக்கும் சொல்லுவதுபோல் இவ்விஷயத்தில் உங்களுக்கு இவ்வளவு எச்சரிக்கை செய்கின்றேன்.

சுயநலப்போக்கு
மேலும் சகோதரர்களே! நமது நாடு இன்று இருக்கும் நிலைமையிலிருந்து சிறிது மாற்றமடையவேண்டுமானாலும், மதசம்பந்தமாகவும், அரசியல் சம்பந்தமாகவும் இந்நாட்டில் சுயநலக்காரரும், சோம்பேறிகளும், மற்றவர்கள் உழைப்பில் வாழ முடிவு செய்து கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருபவர்களும் இரண்டுவித உணர்ச்சியால் மக்களைக் கட்டுப்படுத்தி மூடர்களாக்கி, அடிமைகளாக்கி வைத்துப் பயன் பெற்று வருகின்றார்கள். அவை எவை எனில், மத இயல் அரசியல் என்பவைகளாகும். மதத்தின் பெயரால் மோட்ச லட்சியமும் அரசியலின் பெயரால் சுயராஜ்ஜிய லட்சியமுமே மனிதனின் வாழ் நாளில் முக்கியமானது என்று மக்களுக்குள் புகுத்தப்பட்டுவிட்டது. இரண்டு விஷயத்திலும் பிரவேசித்து இருக்கும் மக்களில் 100க்கு 90 பேர் இரண்டுக்கும் அர்த்தம் தெரியாதவர்களாகவே அதில் உழன்றுகொண்டு இருக்கின்றார்கள். பொருள் தெரிந்த சில பெயர்கள் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து அவற்றை வியாபாரமாய் நடத்தி வருகின்றார்கள்.
மக்களின் சுபாவம் பொருள் தெரிந்தகாரியத்திற்குப் பயப்படு வதைவிட பொருள் தெரியாத காரியத்திற்குத் தான் அதிகம் பயப்படும். ஏனெனில், பொருள் தெரிந்த காரியங்களுக்குப் பரிகாரம் செய்து கொள்ளக் கூடுமானதினால் அதற்குப் பயப்பட மாட்டான். பரிகாரம் செய்துகொள்ள முடியாததற்கே அதிகம் பயப்படுவான்.

இந்த மனப்பான்மையிலேயே தான் மனிதன் வாழ்க்கையை நடத்துகின்றான். இதனாலேயேதான் பாமர மக்கள் சிறிதும் தலைதூக்க முடியாமல் மிருகப்பிராயத்தில் இருந்து வருகின்றார்கள். ‘பகுத்தறிவைப் பயன்படுத்துவதே பாவம்’ என்று சொல்லப் பட்ட ஒரு ஆயுதமே மக்களை அழுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றது. அர்த்தமற்ற உண்மையற்ற சொற்களுக்கு நடுங்கச் செய்கிறது.

மூடத்தனம்
உதாரணமாகப் பாருங்கள். மனிதனுடைய மூடத்தனத்துக்கு ஒரு உதாரணம் காட்டுகின்றேன். மனிதன் திருடுவான், நம்பிக்கைத் துரோகம் செய்வான், மோசம் செய்வான், கொலையும் செய்வான். ஆனால் ‘‘ஒரு பறையன்’’ கொண்டுவந்த தண்ணீரைத் தொட்டுக்குடி என்றால் நடுங்குவான்.

பாவம் என்று ஒன்று இருந்தால் மோசம் செய்வதைவிட, நம்பிக்கைத் துரோகம் செய்வதைவிட, பதறப் பதற கொலைசெய்வதைவிட, வேறு ஒன்றும் அதிகபாவம் இருக்கமுடியாது. ஆனால் இவற்றையெல்லாம் பஞ்சாமிர்தம் சாப்பிடுவதுபோல் செய்துவிட்டு, பறையனை திண்ணையில் உட்காரவைப்பது என்றால் நடுங்குகின்றான் என்றால் மனித சமூகத்தை எவ்வளவு சுயநலமாக இருக்கும்படியாகவும், முட்டாள் தனமாக இருக்கும்படியாகவும் வாழ்க்கை முறைகள், மத முறைகள், மோட்ச நரக முறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று பாருங்கள். இதுபோலவே அரசியலிலும் அரசாங்கத்தாருக்கு அனுகூலமாக இருக்கின்றவர்கள் யார்? யாருடைய துரோகத்தால், சுயநலத்தால் இந்நாட்டில் அக்கிரமமான அரசாங்கம் இருந்து வருகின்றது? என்பவைகளை முக்கிய காரணமாய் உணர்ந்து அந்தத் துறையில் ஒரு சிறுவேலையும் செய்யாமல் பாமர மக்களிடம் சுயராஜ்ய வியாபாரம் நடத்துவது என்பதை மக்கள் உணர முடியாமல் இருப்பதோடு, உணர்ந்து சொல்லுகிறவர்களையும் மக்கள் வெறுக்கும்படி செய்யப்பட்டிருக்கின்றதென்றால் அரசியலின் பேரால் மக்கள் எவ்வளவு முட்டாள்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

கிராமங்களின் பழைய நிலைமைகளை மறுபடியும் புதுப்பிப்பது என்கின்ற அர்த்தத்தில் வேலை செய்வதானால் இனி இந்த தேசத்தில் கிராமம் என்பதே இல்லாமல் போய்விடும். அந்தப் படி இல்லாமற்போவதே மேல். இருக்கும்படி செய்யவேண்டுமானால் கிராமத்திற்குள் புதிய தன்மைகளைப் புகுத்தவேண்டும். நமது கிராமங்களைப் பற்றி மேயோ சொல்லி இருக்கும் முறைகள்தான் நமது பழைய கிராம நிலையாகும். நமது அரசியல் துறையில் பாடுபடும் பெரியார் ஒருவர் சமீபத்தில் ஒரு கிராமத்தைப்பார்த்து ‘இந்த கிராமத்தைப் பார்த்ததும் எனக்குப் பழைய கால கிராம காட்சி தென்படுகின்றது. நானும் ஒரு கிராமவாசியானதால் பழைய கிராமக் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்’ என்பதாகப் பேசினாராம்.

நகரமயமாகட்டும்
பழைய மாதிரி கிராமம் இருப்பதானால் கிராமங்கள் ஒழிந்தே போய்விடும். யாரும் கிராமத்தில் இல்லாமல் எல்லோரும் பட்டணங்களுக்கே குடியோடிப் போவார்கள்.

கிராமங்களைப் பட்டணமாக்க வேண்டும். பட்டணவாசிகளின் வாழ்வு முழுவதும் கிராமவாசிகளின் உழைப்பேயானதால் கிராமவாசிகளேதான் உலகபோக போக்கியங் களை அடைய உரியவர்களாவார்கள்.

கிராம வாழ்க்கை ஒருவிதம், நகர வாழ்க்கை ஒருவிதம் என்பது பித்தலாட்டக் காரியமேயாகும். கிராமவாசிகளைப் பார்த்து கண்ணீர் வடிக்கும் பட்டணவாசியான முதலாளியும், வக்கீலும், உத்தியோகஸ்தனும், பார்ப்பனனும் பித்தலாட்டக்காரர்க ளேயாவார்கள். அவர்களது வஞ்சகமும், கெட்ட எண்ணமும்தான் கிராமவாசிகளான பெரும்பான்மை மக்களை கால்நடைகளாக வைத்திருக்கின்றது. ஆகவே, ஒவ்வொரு விஷயத்திலும் கவலைகொண்டு பகுத்தறிவைப் பயன்படுத்தி தக்க முறையில் சேவை செய்யவேண்டுமென்று விரும்புகிறேன்.

(28.06.1931-ஆம் தேதி யுவர் சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு சொற்பொழிவு – 05-07-1931

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக