உயிரைக் கொடுத்தும் சமதர்மம் காப்போம் ! – தந்தை பெரியார்
சமதர்மம் என்பது பேத தர்மத்துக்கு மாறான சொல். இந்த இடத்தில் நாம் அதை எதற்குப் பயன்படுத்துகின்றோம் என்றால், மனித சமுதாய வாழ்க்கைக்கு – மனுதர்மத்திற்கு எதிர்தர்மமாகப் பயன்படுத்துகின்றோம். மனித சமுதாயத்தில் பேதநிலை இருக்க வேண்டும் என்பதற்காகவே மனுதர்மம் செய்யப்பட்டது.
பேத நிலைக்குக் காரணம் என்ன?
சமுதாயத்தில் பேத நிலையானது இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
ஒன்று : மனிதன் பிறவியில் உயர் ஜாதியாய் அல்லது தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கின்றான் என்பது.
இரண்டு : மனிதன் (பிறவி காரணமாகவே) வாழ்வில் செல்வவானாய் ; ஏழையாய் வாழ்கின்றான் என்பது.
இந்த இரண்டும்தான் இன்றைக்கு உலகில் மனித சமுதாயத்துக்கு கவலையும் இழிவும் தந்து வருகின்றது. மனிதனுக்கு இழிவு ஏற்படக் காரணம் பிறவியினால் என்று ஏற்படுத்தப்பட்ட ஜாதி. மனிதனுக்குக் கவலை ஏற்படக் காரணம், செல்வத்தில் தனக்கு மேலானவன் உள்ளான் என்ற பேதத்தினாலானதுதான்.
அறிவின் பயன்?
இந்த ஜீவப் பிராணிகளில் அதிகமான அறிவு கொண்டவன் மனிதன் ஆவான். அந்த அறிவு மனிதனுடைய நன்மைக்குப் பயன்படுகின்றதா? தீமைக்குப் பயன்படுகின்றதா? என்று பார்த்தால் தீமைக்குப் பயன்படுகின்றது. தீமைக்குப் பயன்படுகின்ற காரணம், தனக்கு மேல் உயர்ந்த ஜாதி இருக்கின்றது என்ற அமைப்பும், தனக்கு மேல் செல்வவான் உயர் வாழ்வு வாழ்கின்றான், அதிக செல்வம் வைத்து இருக்கின்றான் என்ற எண்ணமுமேயாகும்!
பேதமில்லாதபோதுதான் கவலையற்ற நிலை
ஜாதி உயர்வு தாழ்வும் செல்வ உயர்வு தாழ்வும் இல்லாத இடத்தில் வாழ்வில் பேதமோ: கவலையோ ஏற்பட இடம் இருக்காது. வேறுவிதமான
குறைபாடுகள் பல மனிதனுக்கு இருந்தாலும் அதாவது நோய், வெய்யில், குளிர் முதலிய கஷ்டங்கள் தொல்லைகள் இருந்தாலும் அவை இயற்கையின் பாலபட்டவை ஆனதினால் அவைகளைப் பற்றி மனிதன் கஷ்டம் அடைந்தாலும் கவலைப்படுவது இல்லை.
ஜாதியும் செல்வமும் இயற்கை அல்லாமல் செயற்கையாய் ஏற்பட்டது ஆனதினால் மனிதன் கவலைப்படுகின்றான் அதனால்தான் செயற்கை முயற்சிகளால் இந்தப் பேதங்கள் ஒழிக்கப்படலாம் என்ற தன்மையில் இதற்குச் சமதர்மம் என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கின்றது.
உதாரணமாக நமது கையில் அய்ந்துவிரல்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுக்கு ஒன்று பேதம் காணப்படுகிறது. இந்தப் பேதத்தை நீக்க நாம் முயற்சிப்பது இல்லை. இந்தப் பேத அசவுகரியத்தாலும் நாம் கவலைப்படுவதும் இல்லை. காரணம் என்னவென்றால், இந்தப் பேதம் இயற்கையானது; நம்மால் பரிகரிக்க முடியாது. ஆகையால் நாம் அந்தப் பேதத்துக்கு ஏற்றபடி நம்மை நாம் சரிப்படுத்திக் கொள்ளுகின்றோம். மழைக்கு ஒதுங்கி நிற்கின்றோம்; குடை பிடித்துக் கொள்ளுகின்றோம். குளிருக்குப் போர்வை போட்டுக் கொள்ளுகின்றோம். வெய்யிலுக்கு நிழல் செய்து கொள்ளுகின்றோம்.
மனுதர்ம பேதநிலை செயற்கையே பேத தர்மமாகிய மனுதர்மத்தை நிலை நிறுத்த இயற்கைக் காரணம் ஒன்றும் சொல்லாமல் மனுதர்மவாதிகள் பேதமானது கடவுளால், மதத்தால், சாஸ்திரங்களால், ஒவ்வொரு மனிதனும் முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களால் (கர்மங்களால்) ஏற்பட்டவை என்று பொய்யான, காரணங்களைச் சொல்லி செயற்கை முறையில் ஏற்படுத்திவிட்டார்கள். அது போலவேதான் செல்வத்தையும், காரணம் சொல்லி உயர்வு தாழ்வு இருக்கும்படி செய்துவிட்டார்கள்.
சமதர்மத்துக்கான முயற்சி
இப்போது மனித சமுதாயத்தின் இழிவையும் குறைபாடு கவலையையும் ஒழிப்பதற்காகவே சமதர்மத்திட்டத்தை மனித சமுதாயத்தின் வாழ்வில் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றோம் இந்த முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு கடவுள், மத சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருக்கக்கூடாது. பேத அமைப்பு உள்ள சாஸ்திர சம்பிரதாய
முறைகளையும் ஸ்தாபனங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற – ஒழிக்கத் துணிவுகொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள்ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.
ஒரு மனிதன் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று முயற்சிப்பானேயானால் – கூறுவானேயானால் “ஜாதி கடவுளால் – மதத்தால் – சாஸ்திரத்தால் ஏற்படுத்தப்பட்டது. ஒழிக்கக்கூடாது” என்று கூறுவானேயானால் மக்களில் பெரும்பாலோர் கடவுள், மத, சாஸ்திரங்களில் நம்பிக்கை, பற்று உள்ளவர்களாக இருந்தால் அந்த இடத்தில் அவன் எப்படி ஜாதி ஒழிப்பை மேற்கொள்ள முடியும்.
கடவுள் நம்பிக்கை ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்
கடவுள், மதம், சாஸ்திரங்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை; அவற்றை நான் நம்புவது இல்லை; அப்படிப்பட்ட கடவுள், மத சாஸ்திரங்களை நான் பொருட்படுத்தமாட்டேன் என்று சொல்லத் துணிந்தால் ஒழிய, ஜாதியை ஒழிக்க முடியுமா? ஒழிக்கத்தான் அவனுக்குத் துணிவு வருமா?
“அரசு அன்றே கொல்லும்”
கடவுள், மத சாஸ்திரங்களைப் போலத்தான் அரசாங்கச் சட்டமும் இருந்து வருகின்றது கடவுள், மத சாஸ்திரங்களைவிட அரசாங்கத்துக்குப் பலம் அதிகம். கடவுள் மத சாஸ்திர சட்டங்களை மீறினால் அடுத்த ஜென்மத்தில்தான் தண்டனை என்பார்கள். அரசாங்கச் சட்டத்தை மீறினாலோ உடனே தண்டனை
வரும். அப்படி இருந்தும் நாம் பல காரியங்களுக்கு சட்டத்தை மீறுகின்றோம். அப்படி இருக்க அதைவிட சக்திக்குறைவானதாய் இருந்துவரும் பெரிதும் கற்பனையான கடவுள் மத சாஸ்திரங்களை மீறக்கூடாது என்று ஒருவன் கருதுவது மடமையும் கோழைத்தனமும் பலருக்குச் சுயநலமும் அல்லாமல் வேறு என்னவாய் இருக்க முடியும்?
சமதர்மவாதிக்குத் துணிவு வேண்டும்
ஆனாதினாலேயே சமதர்மவாதிகள் – சமதர்மம் காண முயற்சிப்பவர்கள் முதலில் கடவுள், மத சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையை மாற்றிக்கொண்டு சட்டம் மீறுவதனால் ஏற்படும் அரச தண்டனைக்கும் துணிந்து இறங்குவது அவசியமாகும். அந்த துணிவு ஏற்பட்ட இடங்களில்தான் சமதர்மம் ஏற்படும்; ஏற்பட்டும் இருக்கின்றன. நாட்டில் மனித சமுதாயத்தில் மனுதர்மம் என்னும் பேத தர்மம் ஏற்பட்டதற்கும் நிலைத்து இருப்பதற்கும் அரசாங்கமே காரணமாகும்.
என்றைய தினத்திலிருந்து நமக்கு அரசர்களின் சரித்திரம் தோன்றுகின்றதோ அன்று முதலே அரசர்களுக்கும் மனுதர்மம்தான் அரசியல் சட்டமாக இருந்து
வந்து இருக்கின்றது அந்த அரசாங்கங்களால்தான் மனுதர்மமும் ஜாதி பேதமும் செல்வ பேதமும் பாதுகாக்கப்பட்டு வந்து இருக்கின்றது. அதற்கு ஆதரவாக ஜாதியால் உயர்ந்த மக்களும், செல்வத்தால் உயர்ந்த மக்களும் அரசாங்கத்துக்குப் பாதுகாப்பு அளித்து வந்து இருக்கின்றார்கள்.
சமதர்மத்துக்கு அரசு இணக்கம்; பார்ப்பனர் செல்வர் எதிர்ப்பு !
இன்று நமது கிளர்ச்சிகளால் சமதர்மத்துக்கு அரசாங்கம் இணங்கி வந்தாலும் ஜாதியாலும், செல்வத்தாலும் உயர்ந்த மக்கள் சமதர்ம முயற்சியைக் கெடுக்க அரசாங்கத்தை எதிர்த்துத் தடை செய்ய முயற்சித்துத்தான் தீர்வார்கள். சமதர்மவாதிகள் தங்கள் சமதர்ம முயற்சி என்பதை சமதர்மத்தை எதிர்த்துத் தடை செய்யும் உயர்ஜாதிக்காரர்கள், செல்வவான்கள் ஆகியவர்களோடு போராடி அவர்கள் தடையைச் சமாளித்து சமதர்மம் ஏற்பட அரசாங்கத்துக்கு உடல் பொருள் ஆவியை இழக்கும் அளவுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது கடமை என்று உணரவேண்டியுள்ளது. சமதர்மத்துக்கு உயிரையும் பணயம் தரவேண்டிவரும் இதில் பலாத்காரம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுமானால் அவற்றிற்கும் சமதர்மவாதிகள் ஆயத்தமாகவே இருந்து சமாளிக்க வேண்டியதும் கடமையாகும்.”
( திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் நடைபெற்ற பகுத்தறிவுப் பிரச்சாரப் பயிற்சி முகாமில் தந்தை பெரியார் அவர்கள் 25.6.1965 அன்று ஆற்றிய அறிவுரை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக