புதன், 7 ஜனவரி, 2015

சிந்தனைப் பூக்கள்-முதலில் நாங்கள் மனிதர்கள்




நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ் டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளு கின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.
மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென் கின்றோம்.
பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.
அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்
விடுதலை,3.10.14

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு



பார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு  - தந்தை பெரியார்


- தந்தை பெரியார்


தி.மு.கழகம் சமுதாயத்தோடு நில்லாமல் அரசியலிலும் ஈடுபட வேண்டி இருப்ப தால், தங்களது கொள்கையை மறைத்துக் கொண்டு செயல்படுகின்றது. அந்தக் காரியத்தைச் செய்ய நாங்களிருக்கிறோம். எங்களால் மட்டும் எப்படி முடிகிறது என்றால், நாங்கள் பதவிக்குப் போவ தில்லை; மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்பது கிடையாது. எனவே, மக்களின் தயவு எங்களுக்குத் தேவை இல்லை யானதால், மக்களிடையே இருக்கிற குறை பாடுகளை- மூடத்தனமான முட்டாள்தன நம்பிக்கைகளை எங்களால் எடுத்துச் சொல்ல முடிகிறது.
தங்களது தோல்விக்கு அரசியல் வாதிகள் காரணங்களைத் தேடி எதை யாவது சொல்லித் தங்களுடைய தோல்வி களை மறைத்துக் கொள்ளப் பார்ப்பார்கள். நான் அப்படியல்லவே!
தேர்தல் நடக்கிற அன்று இரவுவரை திமுகவை எதிர்த்தேன். அது வெற்றி பெற்றது என்று செய்தி வெளிவந்ததும் ஓர் அறிக்கை விட்டேன். அதில் நான் தோற்று விட்டேன்; பார்ப்பான் ஜெயித்து விட்டான். இதற்கு முன் இரு முறை அவனை நான் ஒழித்து இருக்கின் றேன்; எப்படி ஒழிப்பது என்பது எனக்குத் தெரியும். என்னிடம் அந்தப் பொறுப்பை விட்டு விடுங்கள் என்று குறிப்பிட்டி ருந்தேன்.
மாணவர்களுக்குச் சில சொல்ல வேண்டும்; நம் நாட்டு அரசியல், காந்தி வந்ததும் கழுதை புரண்டகளமாகி விட்டது. வெள்ளைக்காரன் இருந்த வரை ஒரு அத்து இருந்தது. அவன் போனதும்- பார்ப்பான் கைக்கு ஆட்சி வந்ததும், அவன் கட்டுப் பாட்டிற்கு மக்கள் வர மறுத்ததால் அரசாங் கத்திற்கு எதிராகக் காலித்தனங்களையும், அயோக்கியத்தனங்களையும், வேலை நிறுத்தம், பட்டினி கிடப்பது போன்ற கீழ்த் தரமான காரியங்களையும் தூண்டிவிட்டு விட்டான்.
இக்காரியங்களைக் காந்தி தான் ஆரம் பித்தார். தலைவன் என்கின்ற முறையில் அவர் ஆரம்பித்ததும், பத்திரிகைகள் எல்லாம் பார்ப்பான் கையிலிருந்ததால் அதற்கு விளம்பரம் கொடுத்துப் பெரிதாக்கி விட்டார்கள். இப்போது மற்ற மக்களும் அதைக் கையாள ஆரம்பித்து விட்டனர்.
தற்போது சில மாணவர்கள் கைக்கு அந்தக் காலித்தனம் வந்துவிட்டது. நாங்கள் தோன்றும் போதும் மாணவர்கள் நிலை எப்படி இருந்தது? நம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்குப் படிப்பு வராது என்று கருதினார்கள். 1916-இல் பார்ப்பனரிரல்லாத இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் நம் மக்கள் 100க்கு 5 பேர் தான் படித்தவர்கள் பார்ப்பனர்கள் 100க்கு 100 பேரும் படித்த வர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
இந்த நிலை 1925 வரை இருந்தது. அதன் பின் ஜஸ்டிஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் போய் ஆட்சி செய்து 100க்கு 7 பேரைப் படித்தவர்கள் ஆக்கினார்கள். அந்த ஆட்சி யின் மேல் பொய்யையும், புளுகையும் கூறி மக்களை நம்பச் செய்து அதை ஒழித்து, 1938-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன் எத்தனை பேர் படித்திருக்கிறான் என்று கணக்குப் பார்த்தார்கள். 100க்கு 7 பேர் படித்திருக் கிறார்கள் என்று தெரிந்ததும் 2500 பள்ளிக் கூடங்களை மூடியது.
நாளைக்குக் காங்கிரஸ் வந்தாலும் இந்தக் கதி தான் ஏற்படும். காமராஜர் இல்லையா என்று கேட்பீர்கள்? அவரால் ஒன்றும் முடியாது. காமராஜருக்குக் கையாக இருப்பது சுதந்திராக் கட்சி; காலாக இருப்பது ஜனசங்கம். இந்த இரண்டின்படி தான் அவர் நடக்க முடியுமே தவிர, தானாக எதையும் செய்ய முடியாது.
ஜனசங்கம் முழுக்க முழுக்கப் பார்ப்பானுடையது. சுதந்திரா விலாவது பார்ப்பானும்ஒரு சில நம்மைக் காட்டிக் கொடுக்கிற துரோகிகளும் இருக்கிறார்கள். இது (ஜனசங்கம்) பச்சைப் பார்ப்பான் கட்சி. இவர்கள் இரண்டு பேரும் சொல்லுகிறபடி தான் காமராஜர் கேட்டு நடக்க வேண்டிய வராகி விட்டார். எனவே அவரால் இனிப் பார்ப்பனருக்கு பயன் ஏற்படுமே தவிர நமக்குப் பயன் ஏற்படும் என்று நம்புவதற்கு வழியில்லாமல் போய்விட்டது
1952-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன் எத்தனைபேர் படித் திருக்கிறான் என்று கணக்குப் பார்த்தார்கள். 100க்கு 9 பேர் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் இனி இதை வளர விட்டால் பார்ப்பனர்கள் கையில் தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு போக வேண் டிய நிலை ஏற்பட்டு விடும் என்று பயந்து, 6000 கிராமப் பள்ளிக்கூடங்களை மூடி னார்கள். மூடினதோடு விடவில்லையே! மாணவர்கள் ஒரு நேரம் தங்கள் ஜாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதை எதிர்த்து நாம் தான் போராடி அவரை ஒழித்துக் காமராசரைக் கொண்டு வந்தோம். அவர் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று நம்மிடம் கேட்டார். இராஜாஜி மூடிய பள்ளிகளை எல்லாம் திறக்க வேண்டும் என்று சொன்னதும் அதன்படி செய்ததோடு, மேலும் கிராமங்கள் தோறும் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அப்போது திரு. சுந்தர வடிவேலு டைரக்டராக இருந்தார். எங்கெங்கு அவர் பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்று சொன்னாரோ அதன்படிக் காமராசர் செய்தார். மக்களிடையே ஆதரவு பெருகியது.
அவர் போய் இவர்கள் ஆட்சி வந்ததும், நம்மக்களின் கல்வியில் நிறைய கவனம் செலுத்துகிறார்கள். இவர்கள் ஆட்சியில் நம் மக்கள் 100க்கு 50க்கு மேல் படித்த வர்கள் ஆனதோடு, நம் மக்கள் நினைக் கவே முடியாத பதவி உத்தியோகங்களை எல்லாம் அனுபவிக்கும்படியான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமுதாயத் துறையிலும் இதுவரை வேறு எவரும் நினைக்காத அளவிற்குக் காரியங்கள் நடை பெற்று வருகின்றன.
நம் இளைஞர்கள் எல்லாம் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். மாண வர்கள் தாங்கள் செய்யும் ரகளையைப் பற்றி அதன்பின் விளைவைப் பற்றி சிந்திப்பது கிடையாது. அதைத் தான் எதிரிகள் பயன் படுத்திக் கொள்வார்கள். தற்போது காம ராஜர் இந்த ஆட்சியை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்கின்ற எண் ணத்தில் மாணவர்களைப் பிடித்து ரகளை செய்யச் சொல்லி, அதன் மூலம் இந்த ஆட் சியைக் கவிழ்த்து விடலாம் என்று பார்க் கிறார். அதற்கு நீங்கள் பலியாகக் கூடாது.
என்னைப் பொறுத்த வரை எவன் ஆட்சிக்கு வந்தாலும் அவனை நான் சரி செய்து கொள்வேன்; என் தயவு எவனுக்கும் வேண்டும். நான் எவனையும், எவன் ஓட்டையும் எதிர் பார்க்க வில்லையே!
இன்றைக்கு முன்னேற்றக் கழகத் திற்குள்ள கேடு எதிர்க் கட்சிகளால் அல்ல; அவர்களுக்குள் இருக்கிற  உட்பூசல் களாலேயே ஆகும். உட்பூசல்  வந்தால் எந்தக் கட்சியும் வாழ முடியாது; உட்பூசல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களை நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, இந்த ஆட்சிக்கு எந்த கேடும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது ரொம்ப அபாயகரமான காலம். நாம் சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த ஆட்சி மாறினால் நம் வாழ்வு - பொதுமக்கள் வாழ்வு ஒழிந்தது. இந்த நிலைமையை அடியோடு தலைகீழாக மாற்றி விடுவார்கள். மனுதர்மப்படி தான் ஆட்சி நடக்கும்.
இன்று நம் இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும் பதவிகளில்- உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.
உத்தியோகங்களால் நாம் வாழ்ந்து விட்டோம் என்று சொல்வதற்கு இல்லா விட்டாலும் இதனால் நம் இழிவு ஒழிகிறதே!
இது நம் நாடு- நம் முன்னோர்கள் வாழ்ந்த நாடு. இந்த பார்ப்பான் எல்லாம் பொறுக்கித் தின்ன, பிச்சை எடுக்க வந்த வன். ஆடு, மாடுகளை மேய்க்க வந்தவன். அவன் இன்று நம் தலையில் பெரிய கல்லை வைத்து இருக்கின்றான். அதைத் தள்ளி விட்டு நாம் முன்னேற வேண்டும். நாம் எதற்காகப் படிக்கிறோம்? நாட்டிற்குத் தொண்டு செய்ய வேண்டும்- உத்தியோகங் களுக்குச் செல்ல வேண்டும் என்பதற் காகவே ஆகும். அதை ஒவ்வொரு மாண வரும் எண்ணிப் பார்த்து இன்றைய ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

22-11-1970 அன்று காரைக்குடியில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 6.1.1971).

புதன், 31 டிசம்பர், 2014

சேலம் ஊர்வலத்தில் செருப்படி சம்பவம்


சேலம் ஊர்வலத்தில் செருப்படி சம்பவம் நிகழ்ந்ததற்குக் காரணம் என்ன?

- தந்தை பெரியார்

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றியை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எப்படி நிலைக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்கவே இங்கு கூடி உள்ளோம். தற்போது ரொம்பப் பேருக்குப் பார்ப்பானை ஆசை தீர வைய வேண்டும்- அடிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும், என்கின்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.  இத்தேர்தலில் பார்ப்பனர் நடந்து கொண்ட விதம் மற்றவர்களை அப்படி எண்ணும்படியாகச் செய்துள்ளது.
பார்ப்பான் ஒழிய வேண்டுமானால் அவனை விரட்டுவது என்று பெயரா அல்லது அவனைப் பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று பெயரா? பார்ப்பான் ஒழிக என்று வாயால் சொல்வதால் மட்டும் பார்ப் பானை ஒழிக்க முடியாது. பார்ப்பானைப் பூண்டற்றுப் போகும்படிச் செய்ய வேண்டு மானால் எதனால் அவன் வாழ்கின்றானோ- பிழைக்கின்றானோ அதனை ஒழிக்க வேண்டும். அதை விட்டு விட்டு வாயால் கத்துவதால் பயனில்லை.
பார்ப்பான் ஒழிய வேண்டியது மிக மிக அவசியமாகும். அவனால் இந்த நாடும் உலகமும் மிக மிகக் கேடடைந்து வருகிறது என்பதோடு, அவனால் நாம் இன்னமும் இழி மக்களாக இருந்து கொண்டிருக்கிறோம். பார்ப்பானை ஒழிக்க வேண்டுமானால் அவனுக்குப் பக்கபலமாக- ஆதரவாக- பாதுகாப்பாக இருக்கிற கடவுளை, - மதத்தை, - சாஸ்திரத்தை, - கோயில்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்.
ஒரு சமயம் சி.பி. இராமசாமி அய்யர் மதமும், ஒரு விரல் அளவு சாமி உருவம் இருந்தால் போதும்; எவராலும் பார்ப்பனரை ஒழிக்க முடியாது என்று சொன்னார்.
அவர் சொன்னது 100க்கு 100 உண்மை யாகும். மதமும் கடவுளும் இருக்கிறவரை பார்ப்பான் இருந்து தான் தீருவான். ஒருவன் எதனால் பார்ப்பான் என்றால் மதப்படி- கடவுள் அமைப்புப்படி என்று தான் சொல்கின்றான். நாம் ஏன் சூத்திரர்கள் என்றால் கடவுள் அப்படி அமைத்திருக் கிறார். சாஸ்திரத்தில் இருக்கிறது; மதப்படி தான் என்கின்றனர். எனவே நாம் சூத்திரத் தன்மைக்கும் பார்ப்பானின் உயர் சாதித் தன்மைக்கும் காரணமாக இருப்பது கடவுள் - மதம் - சாஸ்திரம் ஆகியவையேயாகும் என்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
சேலத்தில் நடைபெற்ற சம்பவத்தை எப்படித் திருத்தினான் என்றால், சாமி படத்தை நான் செருப்பால் அடித்தேன் என்பதாகவும், அப்படி அடிப்பதற்குத் தி.மு.கழக அரசு ஆதரவாக இருந்தது என்றும், சாமி படத்தை செருப்பாலடிக்க ஆதரவு கொடுத்த தி.மு.கழகத்திற்கு மக்கள் ஓட்டளிக்கக் கூடாது என்றும் பிரசாரம் செய்தார்கள்.
நான் இராமனையும், முருகனையும் செருப்பால் அடிப்பது போன்று படம் போட்டு ஊரெங்கும், தமிழ்நாடு முழுவதும் ஒட்டினார்கள். இதனை முதலில் செய்ய வில்லை. முதலில் இந்தச் செய்தியை வெளி யிட்டால் எல்லா மக்களும் இப்படிச் செய் தால் என்ன செய்வது என்று பயந்து விட் டனர். முதலில் அவர்கள் மக்களிடையே பிரசாரம் செய்தனர்; என்னவென்றால், சேலம் மாநாட்டில் எவன் மனைவியை எவன் வேண்டுமானாலும் அடித்துக் கொண்டு போகலாம் என்று தீர்மானம் போட்டார்கள். பெண்கள் கற்பிற்கு ஆபத்து வந்து விட்டது என்று பிரசாரம் செய்தனர்.
சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பெண்கள் சுதந்திரத்திற்காக, விடுதலைக்காக ஒரு தீர்மானம் போடப்பட்டது. ஒருவன் மனைவி (அவனை விரும்பவில்லையா னால்) மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது என்பதேயாகும். இந்நிலை இன்றைக்கும் சட்டப்படிக் குற்ற மல்ல. பின் ஏன் இத்தீர்மானம் போட்டோம் என்றால், பெண்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
இத்தீர்மானத்தைத் திரித்துப் பிரசாரம் செய்தார்கள். நாம் மறுப்பு எழுதியதை அவர்கள் வெளியிடவில்லை. அதன் பின்தான் கோர்ட்டில் நாம் போட்ட தீர்மானத்தை மாற்றி வெளியிட்டு தம்மைத் தாழ்மைப்படுத்தப் பார்க்கிறார்கள், இதனைத் தடுக்க வேண்டும் என்று வழக்குப் போட் டோம். அந்த வழக்குப்  போட்ட பின்தான் அதை விட்டுவிட்டு இராமன் படத்தை செருப்பாலடித்ததைப் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.
இந்தச் செருப்பாலடித்த செயல் எப்படி ஏற்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். செருப்பினால் அடித் தது எனக்குத் தெரியாது. நம் திட்டத்திலும் அது இல்லை. முதலில் யாரும் செருப் பினால் அடிக்கவில்லை.
பின் அந்த நிகழ்ச்சி எப்படி ஆரம்பித் தது என்றால், சேலத்தில் தேவாலயப் பாதுகாப்பு மாநாடு என்று ஒன்று கூட்டி, அதில் என்னை மிகவும் கண்டித்துப் பேசி னார்கள். அந்த மாநாட்டிற்கு மக்கள் கூட்டம் இல்லை. அந்த மாநாடு நடக்கிற போது நான் சேலத்தில் இருந்தேன். அப்போது நம் தோழர்கள் வந்து அந்த மாநாட்டைக் கண்டித்து ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். பின் அக்கூட்டத்தின் சார்பில் ஓர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்றார்கள். பிறகு கூட்டமும் ஊர்வலமும் நடத்துவதானால் ஒரு சிறு மாநாடே நடத்தி விடலாம் என்று சொன்னார்கள். நானும் ஒத்துக் கொண் டேன்.
அந்த ஊர்வலத்தில் நம் மக்கள் கடவுள் களாகக் கருதிக் கொண்டிருக்கிற சில கடவுள்களின் பிறப்புகளைப் படமாகப் போட்டு கொண்டு ஊர்வலம் போவதாக ஏற்பாடு செய்தார்கள். இது எப்படியோ தெரிந்து பார்ப்பனர்கள் கலெக்டரிடம் சென்று ஊர்வலத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
அவர் பார்ப்பனர் ஆனதால், போலீஸ் சூப்பிரன்டிடம் சொல்லி ஊர்வலத்தைத் தடை செய்யச் சொல்லி இருக்கிறார். சூப் பிரன்ட் ஊர்வலத்தை நிறுத்தும்படியாகச் சொல்வதாக வந்து சொன்னார்கள். நான் அதற்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தான் அவர்கள் வேலையே தவிர, நிறுத்து வதற்கு வேண்டுமானால் தடை போடட்டும் என்று சொன்னேன். தடைபோட்டாலும் கேட்க மாட்டார்கள் மீறி நடத்துவார்கள் என்று தெரிந்து ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.
ஊர்வலம் வந்து கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் 30, 40 பேர் கருப்புக் கொடியை வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந் தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பாக 500 க்கு மேற்பட்ட போலீசார் வளைத்து நின்று கொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது என்கின்ற தைரியத்தில் கருப்புக் கொடி பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் ஒரு செருப்பை எடுத்து ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வீசினான். ஊர்வலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்று கொண்டிருக் கின்றனர். நான் கண்டிக்கா விட்டால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கும். அவன் வீசிய அந்தச் செருப்பை எடுத்து ஒரு தோழர் ஊர்வலத்தில் வந்த இராமன் உருவத்தை அடித்தார். அதைப் பார்த்து மற்ற தோழர் களும் தங்கள் தங்கள் செருப்பாலடிக்க ஆரம்பித்தனர். இதுதான் நடந்த உண்மை யாகும்.
இதை அவர்கள் தி.மு.க அரசு உத்தரவு கொடுத்தார்கள். அந்த உத்தரவின் பெய ராலேயே அடித்தோம் என்று பிரசாரம் செய்தான்; பத்திரிகைகளில் எல்லாம் எழுதினான். நான் அதை மறுக்கவில்லை; காரணம் மறுத்தால் நம் தோழர்கள் செருப்பால் அடிப்பது தவறு என்று கருதி விடுவார்களே என்று மறுக்கவில்லை. அதன் பலனாக இச்சம்பவம் இந்தியா பூராவும் விளம்பரம் ஆகும்படியாக ஆயிற்று. நாம் எவ்வளவு பாடுபட்டாலும், செலவு செய்தாலும் இவ்வளவு விளம்பரம் செய்ய முடியாது. அந்த அளவிற்கு விளம்பரம் நடைபெற்றிருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும்.
28.03.1971 அன்று மதுரையில் தந்தை  பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
(விடுதலை, 11.05.1971)

(விடுதலை, 28.12.2014)

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

மக்கள் ஒன்றுபட வேண்டும்



சித்திரபுத்திரன்-4 இது சொன்னது சுயமரியாதைக்காரரா?

-சித்திரபுத்திரன்-
பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கடைத் தேறலாம் - சற்றேனும் ஏறுமாறாய் இருப்பாளே யாமாகில் கூறாமல் சன்னியாசம் கொள்
என்று நீதி நூல்கள் முறையிடுகின்றன. இதைச் சொன்னது சுய மரியாதைக்காரர்களல்லவே. இப்பொழுது சுயமரியாதைக்காரர்கள் ஏறுமாறாய் இருக்கும் விரதைகளை விட்டுவிட்டு சன்யாசம் கொள்ளு என்பதற்குப் பதிலாக வேறு ஒரு பெண்ணை கொள்ளு.
சன்னியாசம் கொள் ளாதே என்கிறார்கள். இதனால் புருஷனின் சன்யாசம் மாறிற்றேயொழிய பெண்ணின் விரதத்திற்கு யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. இதற்காக ஏன் சிவநேயர்கள் வேப்ப எண்ணை குடிக்க வேண்டும்?
குடிஅரசு - விமர்சனம் - 14.12.1930

தந்தை பெரியார் பொன்மொழிகள்
இவ்வுலகில் பல மதக் கொடுமைகளுக்கும் ஜாதி வித்தியாச இழிவுக்கும் உட்பட்டுக் கேவலமான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டுப் பின்னால் மோட்சம் அடைவதைவிடச் சமத்துவம் பெறுவதுதான் பிரதானம்.
சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டு மானால் நாத்திகத்தினால்தான் முடியும். நாத்திகம் என்பதே சமதர்மம் தான்.
சமதர்மம் என்று வந்துவிட்டால் மனிதச் சமுதாயத்துக்குக்  கவலை, குறைபாடு, தொல்லை எல்லாம் அடியோடு போய்விடும். கவலை, குறைபாடுகள் நீக்கப்பட வேண்டுமானால் சமதர்மம் தான் மருந்து.
-விடுதலை,13.9.14

சித்திரபுத்திரன்-3 தீபாவளிப் பண்டிகை

வருகுதப்பா தீபாவளி - வழமைபோல். நீ என்ன செய்யப் போகிறாய்?
தம்பீ! பழையகால சாஸ்திரம் இன்றைக்கு உதவாது இன்றைக்கு ஏற்றபடி அது மாறவும் மாறாது. அதை ஒருத்தன் எடுத்து வைத்தால்தான் அல்லது அது அசைக்கப்பட்டால்தான் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்திற்கு மாறும் அல்லது அதை ஒருவன் எடுத்து நமக்கு வேண்டாததை அடித்து வேண்டியதை எழுதினால்தான் திருந்தும்.
ஏன் அப்படிச் சொல்லுகிறேன்? அதற்கு உயிரில்லை; அது ஏடு; காகிதம் போன்ற அசேதன வஸ்து; சிந்திக்கும் தன்மை அற்றது.
ஆதலால், சாஸ்திரம் சொல்லுகிறது அந்தப்படி செய்கிறேன் என்று நீ சொல்லு வாயானால் நீ சேதன (சிந்திக்கும் சக்தி உள்ள) வஸ்து ஆகிய மனிதனென்றோ, அறிவுள்ளவன் என்றோ சொல்லிக் கொள்ள உனக்கு சிறிதுகூட யோக்கியதை கிடையாது.
சாஸ்திரம் பெரியவாள் எழுதினது என்று சொல்லுவாயானால், நீ யாரு? சிறியவாளா? எந்தப் பெரியவாள்? அந்தப் பெரியவாள் காலத்தைவிட முட்டாள்தன மான காட்டுமிராண்டித்தனமான காலத்திலா நீ பிறந்தாய்?
போக்குவரத்து சாதனமில்லாத, விஷயஞானம் பெற வாய்ப்பும் சாதனமும் இல்லாத கல்லாயுத காலத்திலா இருந்து வாழ்ந்து வருகிறாய்? ஆகவே, அந்தக் காலத்தைவிட  அந்தக் காலத்து பெரியாரை விட நீ எந்த விதத்திலும் தாழ்ந்தவனாக இருக்க முடியாது.
ஆதலால் சாஸ்திரம், பெரியவாள், வெகுகாலத்திற்கு முன் ஏற் பட்டது என்கின்ற முட்டாள் தனத்துக்குத் தாயகமாக இருக்கும் பித்தலாட்டத்தில் இருந்து முதலாவதாக நீ வெளியில் வா!
சாஸ்திரத்தைப் பற்றிக் கவலை இல்லைபெரியவாளைப் பற்றிக் கவலை இல்லை, ஆனால் அந்த சாஸ்திரங்கள் கடவுள் களால் சொல்லப்பட்டது; உண்டாக்கப் பட்டது என்று சொல்லுகிறாயோ? அப்படி யானால் இப்படிச் சொல்லுகிறவனைப் போல் முட்டாள் மனித வர்க்கத்தில் ஒரு வருமே இருக்க முடியாது என்பதோடு இதைக் கேட்டு நம்பி நடக்க ஆரம்பிக் கிறானே அவனைப் போல் அடிமடை யனும் வேறு இருக்க முடியாது என்று சொல் லுவதற்கு தம்பி, நீ மன்னிக்க வேண்டும்.
கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள். கடவுள் சொன்னார் என்று வைத்துக் கொள். யாருக்குச் சொன்னார்? உனக்கா சொன்னார்? மனிதனுக்குச் சொன்னார் என்பாய். அப்படியானால், கிறிஸ்துவருக் குச் சொன்னாரா? முஸ்லிமுக்குச் சொன் னாரா? பார்சிகளுக்குச் சொன்னாரா? அவற்றை நம்பாத நாஸ்திகனுக்கு சொன்னாரா? யாருக்குச் சொன்னார்? எப்பொழுது சொன்னார்? அந்தக் காலத்தில் நீ இருந்தாயா? நீ பார்த்தாயா? அல்லது யார் பார்த்தது? கடவுள் சொன்னார் என்று இன்று உனக்குச் சொன்னவர்கள் யார்? சொன்னவர்களுக்குச் சொன்னவர்கள் யார்? சாஸ்திரம் கடவுளால் சொல்லப்பட் டது என்பதை சாஸ்திரமே சொன்னால் போதுமா? அதற்கு அடையாளமே வேண்டாமா? அச்சுப் புத்தகமும் அய்யர் பேச்சும், கிருபானந்தவாரி, பண்டிதமணிகள் பிரசங்கங்களுமே போதுமா? இவைகளை யெல்லாம் யோசித்த பிறகல்லவா சாஸ்திரம் சொல்லுகிறது என்பதையும், சாஸ்திரத்தை கடவுள் சொன்னார் என்பதை யும் நீ மனிதனாய் இருந்தால் நம்ப வேண் டும். மாடாயிருந்தால் அல்லவா யோசி யாமல் ஆம் என்று தலையாட்ட வேண் டும்? இந்த இருபதாம் நூற்றாண்டில் உனக்கு இதுகூடவா  தம்பி தெரியவில்லை? சாஸ்திர காலத்தைவிட இன்று கட வுள்கள் அருமை என்று நினைக்கிறாயா? எண்ணி முடியாத கடவுள்கள் தோன்றி இருப்பதோடு, தோன்றிய வண்ணம்தானே இருக்கின்றன கடவுள்களுடைய அற் புதங்கள் இக்காலத்தில் நடக்காத நாள் ஏது? மனிதர்களிடத்தில் கடவுள்கள் பேசாத நாள் ஏது? பெசண்டம்மை இடம் பேசினார்; காந்தியாரிடம் பேசுகிறார்.
அசரீரியும், சோதனைகளும் நடக்காத நாள் ஏது? இப்படி எல்லாம் இருக்கும்போது இக்காலத்தில் கடவுள் நேரில் வந்து உன் னையோ அல்லது என்னையோ கூப்பிட்டு நேரில் அடே, மக்களா! நான்தாண்டா சாஸ்திரம் சொன்னேன்; சந்தேகப்படா தீர்கள்! என்று சொல்லித் தொலைத்தால் பிறகு உலகில் ஏதாவது கலவரம் இருக்க முடியுமா?
அல்லது ரமணரிஷிகள் என்ன, சாயி பாபாக்கள் என்ன, மகாத்மாக்கள் என்ன, மற்றும் தெய்வீக சக்தி பெற்றவர்கள் என்று சொல்லப்படும் மகான்கள் என்ன - இத் தனை பேர்களில் யாரிடமாவது ஒரு வார்த்தை சொல்லித் தொலைக்கக் கூடாதா?
இவ்வளவு தகராறு, வர்க்கம், கலகம் கடந்து ஒருத்தன்மேல் ஒருத்தன் கல்லு, சாணி, செருப்பு எறிந்து, அடிதடி நடந்து, போலிஸ் வந்து மக்கள் சீரழிகின்ற காலத்தில் தைரியமாய் அல்லது கருணை வைத்து வெளிவந்து நிலைமையை விளக்க முடியாத சுவாமிகள் இனி வேறு எந்தக் காலத்திற்குப் பயன்படப் போகிறார்கள்?
ஆகையால், கடவுள் சொன்னது - சாஸ்திரம் என்பதை கட்டி வைத்து விட்டு உன் அனுபவத்தையும் அறிவை யும் பயன்படுத்தி தீபாவளியைப் பற்றி யோசித்துப்பார் அப்பா - தயவு செய்து கோபியாதே தம்பீ!
கோபம் செய்தாலெமன் கொண் டோடிப் போவான் என்று சொன்னது சரியல்ல; கோபம் செய்தால் நீ ஏமாந்து போவாய் என்று நான் கூறுகிறேன். ஆகவே அறிவுக் கண்ணுடன் நாடு, இனம், மானம் ஆகியவைகளின்மீது பற்று வைத்து தீபாவளிபற்றி சிறிது சிந்தித்துப் பார்!
தீபாவளி கதை
தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங் களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை. என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.
இது தீபாவளி கதை. மிகவும் அதிசய மானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத் தன்மையும் பொருந்தியதுமாகும்.
மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிரா மணர்கள் சாபத்தால் இரணியன், இரணி யாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டு விட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத் திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதார மெடுத்து வந்து கொன்று விட்டார். இளைய வனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதார மெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.
இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை. இனிமேல் நடப்பது தான் ஆபாசம்.
என்னவென்றால் விஷ்ணு பல அவ தாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும் பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.
விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக் கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர் களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.
மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணு வைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதார மெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகை யில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யனார் பிறந்தார். இப்படி யுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?
இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத் தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித் தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண் டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?
இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?
பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண் டல்லவா போயிருக்க வேண்டும்?
அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரமிருந் திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?
அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.
இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப் படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை? திராவிட மக்களை அசுரன், இராட் சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல்  வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரு முன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரி யர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங் களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர் களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங் களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?
ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?
நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிட ரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண் டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடா தீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.
- குடிஅரசு -கட்டுரை -  07.10.1944


விடுதலை12.10.14  .

சனி, 27 டிசம்பர், 2014

சித்திரபுத்திரன்-2 கடவுள் இருந்தால்...


    சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லா மலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.
உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.
இது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?
- சித்திரபுத்திரன் மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.
பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?
-தந்தை பெரியார்


      மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

     பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?
                                                                                                                                  -தந்தை பெரியார்

விடுதலை,26.12.14