செவ்வாய், 20 டிசம்பர், 2016

அழிவு வேலைதான் செய்ய வேண்டும்

14.9.1930 - குடிஅரசிலிருந்து...

இந்த நாட்டில் சீர்திருத்த வேலைகள் வெகுகாலமாக செய்யப்பட்டு வந்திருக் கின்றன செய்தவர்களை யெல்லாம் சாதாரண மனி தர்களாய் கூடக் கருதாமல் பெரிய தெய்வத்தன்மை பொருந்தினவர்களாகவும், விசேச அவதார புருஷர் களாகவும் மகாத்மாக்களாகவும் கூடக் கருதப்பட்டு வந்திருக்கின் றனர். ஆனால் அவர்களால் ஆன வேலை என்னவென்று பார்ப்போமானால் குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த பலன் போலதான் ஏற்பட்டு வந்திருக்கின்றனவே அல்லாமல் வேறில்லை.

இப்படி இருந்தும் இனியும் அதே துறையில் அநேகர் பாடுபடுகின்றார்கள் என்றாலும் அவர்களாலும் இன்று பலனுள்ள ஒரு காரியமும் நடத்த முடியவில்லை. நடை பெறுமென்ற நம்பிக்கையுமில்லை.

காரணம் என்னவென்றால் அவர்கள் மக்களுக்கு எந்தெந்த பலன் ஏற்படவேண்டும் என்கிறார்களோ அந்தந்தப் பலன்களுக்கு எதிராயிருக்கும் அஸ்திவாரமான தடைகளை நீக்கும் விஷயத்தில் அவர்கள் சிறிதும் சம்மதிப்பதில்லை. அதன் கிட்டப் போவதற்கே பயப்படுகின்றார்கள். மற்றும் பலர் அவைகளைக் காப்பாற்றிக் கொண்டே சீர்திருத்தம் அடைய வேண்டும் என்கின்றார்கள். ஆதலால் தான் அப்படிப்பட்டவர்களால் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒரு கானலை அதாவது காட்டை விவசாயம் செய்யும்படியான வயல்களாக ஆக்க வேண்டுமானால் முதலில் அதிலுள்ள புதர்களையும் முட்களையும், செடி, கொடிகளையும் பிடுங்கி நெருப்பிட்டுக் கொளுத்தி ஆகவேண்டும். பிறகு மேடுகளை வெட்டி பள்ளத்தில் போட்டு நிரவவேண்டும், கல்லுகளையும், பாறைகளையும் உடைத்து வெளியாக்க வேண்டும்.

இந்தக் காரியங்களெல் லாம் செய்த பிறகே அந்த பூமி எந்த விதமான வெள்ளாமை செய்யப் பயன்படும் என்று கருதி அதற்கேற்ற எருக்களிட்டுப் பயிர்களைச் செய்து பயன்பெற வேண்டும். அப்படிக்கில்லாமல் உள்ள நிலையிலேயே பயிர் செய்வதானது மனிதனது முயற்சியும் ஆற்றலும் விதைப் பண்டமும் வீணாய் போவதுடன் பயனற்ற கொடியும் செடியும் மேலும் வளர்ந்து துஷ்ட மிருகங்களும் விஷ ஜந்துக்களும் தாராளமாய்க் குடியிருக்கத்தகுந்த புதர்களாகத்தான் ஏற்பட்டு விடும்.

ஆகையால் நாம் இப்போது புதர்களிலுள்ள கொடி, செடி, முள், புல், பூண்டு ஆகியவைகளை அழித்து நெருப்பு வைத்துக் கொளுத்தும் வேலையில் இருக்க வேண்டிய வர்களாய் இருக்கின்றோம். இந்த வேலை செய்யும் முன் பயிர்செய்யும் வேலையில் நாம் ஒரு காலமும் புகக்கூடாது.

மேடு பள்ளங்களைச் சமனாக்காமல் அதில் தண்ணீர் பாய்ச்சும் வேலையை நாம் தொடங்க மாட்டோம். ஏனெனில் நாம் பாய்ச்சும் தண்ணீரெல்லாம் ஏற்கனவே தண்ணீர் நிறைந்திருக்கும் பள்ளத்திற்கே போய்ச் சேர்ந்து விடும். மேட்டிற்கு எவ்வளவு தண்ணீர் பாய்ச்சினாலும் அங்கு கொஞ்சம் கூடத் தங்காது.

ஆகவே தைரியமான அழிவு வேலை அதாவது காட்டைத் திருத்தி மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமனாக்கும் சமத்துவ வேலையைக் கைக்கொள்ள வேண்டும்.  அதற்கு பயப்படக் கூடாது. இந்த வேலையில் நமக்குப் பெரிதும் கஷ்டமுண்டு என்பதையும் மனதில் வைக்க மறந்து விடக் கூடாது.

புதர்களில் இருந்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வரும் ஜந்துக்களால் நமக்கு பல ஆபத்துகள் ஏற்படலாம். அதற்கும் துணிந்து தைரியத்தோடு தான் அழிவு வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.
-விடுதலை,16.12.16

தொழிலாளர்கள்


11-12-1932, குடிஅரசிலிருந்து...
தொழிலாளிகளை மோசம் செய்யும் முதலாளிகள் செயல்களை எல்லாம் தொழில் திறமையாகவும், நிர்வாகத்திறமையாகவும் கருதப் படுகிறது. முதலாளியைத் தொழிலாளி ஏமாற்றுவது நாணயக் குறை வானது, நம்பிக்கைத் துரோகமானது, திருட்டுக் குற்றத்தில் சேர்ந்தது என்பதாக ஆகிவிடுகின்றது. இதற்குக் காரணம் எல்லாம் முதலாளி மார்கள் ஆட்சி வலுத்திருக்கிறது.
அவர்களுக்கு சங்கம் இருக்கிறது. அதற்கு அரசாங்கத்தின் சலுகை இருக்கிறது, அவர்களது நன்மைக்கு என்றால் உலக முதலாளிகள் எல்லாம் ஒன்று கூடி விடுகிறார்கள். முதலாளிகள் நன்மையில் ஒவ்வொரு முதலாளிக்கும் கவலை இருக்கின்றது.
அரசாங்கமும் அவர்கள் கைவசமிருக்கிறது. சட்டசபை அவர்கள் கைவசமிருக்கிறது. சட்டசபையில் 100க்கு 90பேர் அவர்கள் இனத்தவர் களாகவே அவர் களைத் தழுவி ஆதரிப்பவர்களாகவே சேர்ந்து விடுகிறார்கள். ஆனால், தொழிலாளிகளுக்கோ உண்மையான சங்கம் என்பது இல்லை. ஒற்றுமை என்பது இல்லை. தக்க பிரதிநிதித்துவம் என்பதில்லை ஒன்று படக் கவலையுமில்லை மார்க்கமும் இல்லை. தொழிலாளிகளை முதலாளிகள் தங்கள் நன்மைக்கு உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். தொழிலாளிகளை ஆயுதங்களாகக் கொண்டுதான் முதலாளிகள் ஒருவரோ டொருவர் யுத்தம் செய்து கொள்ளுகிறார்கள். இரண்டு முதலாளிகள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள். இரண்டு முதலாளிகள் சண்டை போட்டுக் கொள்வதின் பயன் தொழிலாளிக்குத் தான் நஷ்டமாகவும் உயிர் பலியாகவும் முடிகின்றதே தவிர, முதலாளி களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை சரீரத்தால் வேலை செய்யாத சோம்பேறி அன்னியர்கள் உழைப்பில் வாழ்கின்றவன் ஆகியவர் களுக்கே தொழிலாளிகள் ஓட்டுக் கொடுத்து தங்கள் பிரதிநிதியாக ஆக்கிக் கொள்ளுகிறார்கள். பிறகு இந்த சோம்பேறிகள் ஊரார் உழைப்பில் வாழ்கின்றவர்கள். தொழிலாளிகளின் பிரதிநிதிகளாய் ஆனவுடன் முதலாளிகளாகவே ஆகப் பார்க்கின் றார்கள் அனேகர் முதலாளிகளாகவே ஆகி விடு கிறார்கள். அனேகர் முதலாளிகளுக்கு உளவாளிகளா யிருந்து தொழிலாளிகள் நலத்தை விற்று தொழிலாளி களைக் காட்டிக் கொடுத்துத் தாங்கள் வாழ்கிறார்கள்.
சரீரத்தால் பாடுபடுகின்றவன் தவிர, வேறு யாரும் தொழிலாளி களுக்குப் பிரதிநிதியாக இருக்கக் கூடாது. எந்த சபையிலும் தொழில் செய் பவனே தொழிலாளர் பிரதிநிதியாக இருக்க வேண்டும். உலகின் சகல துறைகளைச் சேர்ந்த ஆட்சிகளும்  தொழிலாளர்கள் கைக் குள்ளாகவே வரவேண்டும். அப்படிப்பட்ட ஆட்சிதான் தகும், அப்படிப்பட்ட ஆட்சி தான் பொதுஜன ஆட்சியாகும், அப்படிப்பட்ட பொது ஜன ஆட்சி என்பது, உலகப் பொது ஜனங்கள் நன்மைகளை எல்லாம் கருதியதாக இருக்க வேண்டும். அப்படிக் கில்லாமல் ஒரு தேசத் தொழிலாளிகள் மாத்திரம் அந்த ஆட்சி பெற்றால் போதும் என்பது தற்கொலையேயாகும். அதனால் உலக தொழிலாளர் கஷ்டம்  நீங்காது. மற்ற தேசத் தொழிலாளர் கஷ்டம் அதிகரிக்கும். உலக தொழிலாளர் யாவருமே விடுதலை பெற்று ஆட்சிபெறும் மார்க்கந்தான் நிரந்தரமான  நன்மையை கொடுக்கும் இல்லாத வரை மற்ற தேச முதலாளிகள் ஒன்று சேர்ந்து தனித்தேச தொழிலாளர் ஆட்சியை அழிக்கப் பார்ப்பார்கள்.
உலகில் வேலை செய்பவர்களைத் தவிர, மற்றவர்களை இருக்கக் கூடாது. ஒருவர் சவுக்கியமாயிருக்க மற்றவன் கஷ்டப்படுவது, பட்டினி கிடப்பது ஜீவனத்திற்கு மார்க்க மில்லாமல் திண்டாடுவது என்கின்ற நிலைமை எங்கிருந்தாலும் அவைகள் ஒழிக்கப்பட வேண்டும். அவை களுக்குக் காரணமானவைகள் வேருடன் அழிக்கப்பட வேண்டும்.
-விடுதலை,18.6.16

திங்கள், 19 டிசம்பர், 2016

சாயிபாபா - ஒரு தகப்பனும் மகனும் சம்பாஷணை (சித்திரபுத்திரன்)



06-11-1943, குடிஅரசிலிருந்து...
தகப்பன்:- டேய் தங்கவேலு என்னடா படிக்கவே மாட் டேங்கிறயே. உனக்கு பள்ளிக்கூட சம்பளம் எத்தனை? வூட்டு வாத்தியாருக்கு சம்பளம் எத்தனை? இன்னமும் புத்தகம், பாலும், பருப்பும் எத்தனை? மாசம் 30,40 ரூபா உனக்கு ஒருத்தனுக்கு செலவு ஆகுது. நீ படிக்காமே இப்படியே திரியிரயே, இது என்னடா நாயம்.
மகன்:- என்னப்பா கண்ணை மூடிக்கிட்டு பேசிரிங்கோ. நா படிக்கிரனோ இல்லையோ அதெல்லாம் உங்களுக்கு என்னத்துக்கு. நான் பாசு பண்ணிப்போட்டால் போது மல்லவா உங்களுக்கு.
த:- அடமுட்டாள் பயலே படிக்காவிட்டால் எப்படீடா பாசு பண்ணுவே?
ம:- அதெல்லாம் உங்களுக்கு என்னத்துக்கு, உங்களுக்கு பாசு தானே வேணும்?
த:- அடெ மறுபடியும் அப்படியே பேசரயே, படிக்காமே கழுதை மேச்சிகிட்டுத் திரியிரே பாசு பண்ணப் போரையாமா எப்படிப் பண்ணுவே செருப்பாசுதாம் பண்ணுவே.
ம:- இல்லேப்பா கோவிச்சிக்காதிங்கோ. அது ஒரு ரகசியம் இருக்கு; நான் எப்படியும் பாசு பண்ணிப் போடுவேன்.
த:- எப்படீடா?
ம:- அப்பா ஆ ஆ இதபாரு இதென்ன தெரியுமா? இது தான் சாயிபாபா டாலர். இதை வாங்கி கழுத்திலேயோ கையிலேயோ இடுப்பிலேயோ கட்டிக்கிட்டா படிக்கவே வேண்டியதில்லேப்பா. தானாய் பாசாயிடும் தெரியுமா?
த:- அட அட சோதாப்பயலே உனக்கு எந்த மடையண்டா இப்படி சொல்லிக் கொடுத்தவன்? அவனை அடிக்கணுமடா .... முதல்லே. இது என்னடா அநியாயம்? நான் மாதம் 30, 40 உன் எளவுக்கு அளுகிறேன். நீ, கக்குவாப் புள்ளைக்கு இடுப்பிலே கட்டுர நாய் காசு மாதிரி ஒண்ணைக் கட்டிக்கிட்டு படிக்க வேண்டியதில்லேண்ணு கழுதை மேக்கிரையேடா. உங்கூடத் திரியிதுகளே இந்தக் குட்டிச்சுவருங்கெல்லாம் இப்படித்தானா.
ம:- ஆமாப்பா இந்தப்பசங்க கூட அப்படித்தான். அவன் தங்கத்திலே வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கிறான்; இவன் வெள்ளிலே வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கிறான்; நான் அலுமினியத்லே வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கிறேன்.பலன் எல்லா ஒண்ணுதான் எல்லாரும் பாசுபண்ணப் போறோம் பாருங்களே.
த:- (அதிக கோபத்துடன்) அட மடப்பசங்களா உங் களுக்கு எந்த முட்டாப்பயடா சொன்னவன் இப்படிண்ணு.
ம:- அப்பா எங்களை வேணும்னா திட்டிக்கோப்பா. வாத்தியாரைத் திட்டாதேப்பா. அவருதாம்பா எங்களைக் கூப்பிட்டு இரகசியமாய் சொல்லிக்குடுத்து மாடன் கவ்ப்பே சுப்பராவ் கடையிலே வாங்கிக் கொடுத்தார். ஒரு நாளைக்கு எத்தனை விக்குது தெரியுங்களா? கேசுக்குப் போரவன், வக்கீலு, வண்டிக்காரென் ஒவ்வொருத்தனும் வாங்கிக் கட்டிக்கிட்டு போறாங்கோ. நம்ம வாத்தியாரு பஞ்சாபகேச சாஸ்திரிதானப்பா இதெ தருவிச்சி கடைக்கு கொடுத்து இருக்கிறாரு. மாடன் கவ்ப்பே சுப்பராவு இந்த டாலர்களுக்கு பூசை பண்ணி எடுத்துக் கொடுக்கிறாரு. அதுதான் இங்கே ரம்ப விக்கிது. திட்டாதிங்கப்பா கட்டாயம் பாசு பண்ணிப் போடுவோம்.
த:- ஏண்டா சண்டாளப் பசங்களா இப்படி எத்தனை நாளாய் நடக்குதுடா?
ம:- இந்த இரண்டு வருசமாத்தான் மும்மரமா நடக்குதுங்கோ.
த:- நீ எப்பப் புடிச்சி கட்டிக்கிட்டு இருக்கிறே?
ம:- போன வருசம் புடிச்சி கட்டிக்கிட்டிருக்கிறேம்பா.
த:- பின்னை ஏண்டா போன வருசம் நீ பாசு பண்ணாமெ போயிட்டே?
ம:- அப்பா நான் இரண்டொரு பாடம் நல்லாக்கூடப் படிச்சென். ஏன் பாசாகிலே என்று வாத்தியாரைக் கேட்டேன். அவர் நீ சாயி பாபா சாமியெ நம்பாமே படிச் செயல்லோ, அதனாலே சாமி சுளிச்சிப் போட்டது. இனி மேலெநாச்சி அவரையே நம்பு அப்டீன்னு சொன்னாரு. அதுவும் ரம்ப ரகசியமாச் சொன்னாரப்பா. அதுதான் நான் சாயி பாபாவையே நம்பிகிட்டு பூசை பண்ணிகிட்டு
படிக்காமையே இருக்கி றேனப்பா எனக்குத் தங்கத்திலே சாயி பாபா வாங்கிக் குடுக்கிறீங்களா?
த:- அடி செருப்பாலே; தேவடியா மகனே, அவனாருடா அந்த வாத்தியாரு? என் வயிறு பத்திக்கிதுடா. நாணு மாசம் 30ரூபாய் உன் எளவுக்கு அளுகிறது. நீ அந்தப் பலவருக்குப் பொரந்த வாத்தியார் பையன் பேச்செக் கேட்டுக்கிட்டு ஊட்லெ சோத்தைத் திண்ணுக்கிட்டு கழுதை மேச்சிக்கிட்டா திரியிரே. கூப்பட்றா உங்கம்மாளே. அடி அடீகேட்டையா உம் மவஞ்சேதியே, எவனோ சாயி பாபாவாம், எங்கயோ இருக்கிறானாம், அவன் மூஞ்சி போட்ட தகட்டே இடுப்பிலே கட்டிக்கிட்டா பரிச்சையிலே பாசாயிடுமாம், அதை கட்டிக் கிட்டவுங்க படிக்கக் கூடாதாமா, படிச்சா அந்த சாயிபாவா நானிருக்க உனக்குப் பயமென்ன என்னை நம்பாமே நீ படிச்சையா எண்ணு கோவிச்சுக்கிட்டு பரிச்சையிலே சைபர் போட்டுடுமாம், அதனாலெதான் போன வருசம் அந்த பாபா இவனுக்கு சுளிக்கி போட்டதாமாம், அதுக்கோசரம் இந்த வருசம் கழுதை மேக்கிறாண்டி பாத்தையா? அந்த வாத்தியாருப் பயலெ என்ன பண்ணிக்கூடாதடீ? பெத்தயேடி இவனை. இவனைப் பெக்கர நேரம் பேதிக்கி குடிச்சிருந்தாலும் இரண்டு தரம் வயித்திலே போயிருக்குமே? நல்ல கொளக் கட்டையாட்டமா இருந்துக்கிட்டு எப்படிப்பட்ட புள்ளையைப் பெக்கரே.
தாயாரு:- கோவிச்சுக்காதிங்கொ பையனுக்கு என்ன தெரியுமுங்கோ. அந்தப் பாளாப்போன பட்டுகிடப்பான் அந்த வாத்தியார் நாய பண்ணுனதுக்கு என்னையும், பையனையும் கோவிச்சி என்னை பண்ணரது, நானு இவனைப் பெக்கரதுக்கு நீங்க ஒண்ணும் பண்ணாமெ நாமாத்திரமா இவனைப் பெத்தேன்? உங்களுக்குந்தான் பங்குண்டு, வெளியே சொன்னா வெக்கக்கேடு, வாய் மூடுங்கோ. அந்த வாத்தியாரைக் காட்டுங்கொ இப்பவே அவனைப் போயி இவ்வூடு கூட்ரதிலேயே நல்லா தூசி தட்டி உட்டுடுறேன்.
மகன்:- அப்பா! அப்பா! வெளியெ சொல்லாதிங்கப்பா. வாத்தியாரையும் கேக்காதிங்கப்பா, வாத்தியாரு இதை ஒரு  த்துருகிட்டயுஞ் சொல்லவாண்டாம், சொன்னாக்க இந்த வருசமும் பாபா சுளிச்ப் போடுவாரு எண்ணு சொன் னாங்கோ.
தாயாரும்? தகப்பனும்? எனக்குத் தெரியும் ஏன் அவன் அப்படிச் சொன்னான் என்று தெரிஞ்சா நா என்ன பண்ணுவேன்னு அவனுக்குத் தெரியும். என்ன ஆனாலும் சரி, நீ பெயலானாலுஞ் சரி அந்த வாத்தியாருப்பயலையும், ஏமாத்தி அதை விக்கிர அந்த எச்சக்கலை காப்பிக்கடக் காரனையும் ஒதைக்காமே விடப்போரதில்லை. இனி நீ அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போகாதே, வூட்டிலேயே படி. வேறெ வாத்தியாரு வெச்சுக் குடுக்கிறேன் (என்று சொல்லிப் போட்டு கையில் அளுக்கொண்ணை எடுத்துக் கிட்டு வாத்தியாரைத் தேடிக்கிட்டும் போறாங்கோ. நேரமாச்சி இன்னொரு நாளைக்குவந்து தொச்ச சங்கதியைச் சொல்லுறேன்.)
குறிப்பு:- இதில் வரும் பெயர்கள் யாரையும் குறிப்பனவல்ல.
-விடுதலை,17.6.16

தமிழைப் பற்றி தமிழர் - பார்ப்பனர் கருத்துகள்


06-11--1943, குடியரசிலிருந்து...
மனோன்மணியம் ஆசிரியர் பி. சுந்தரம் பிள்ளை தமிழைப் பார்த்து சொல்லுகிறார். ஆரியம் போலுலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே. என்று சொல்லுகிறார். இது ஒரு தமிழ் மகனால் சொல்லப்பட்டது.
இனி சுப்பிரமணியபாரதி தமிழ்த்தாயே சொல்லுவதாக சொல்லுவதைப் பாருங்கள்.
உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் என்று சொல்லுகிறார். இது ஒரு ஆரிய மகன் - பார்ப்பனரால் சொல்லப்பட்டது.
என்ன செய்தாலும் ஜாதிப்புத்தி போகாதய்யா ராஜகோபால மாலே என்று பெரியார் கூறிய அனுபவமொழியை உறுதிப்படுத்த இவை உதவுகின்றன போலும்.
சுந்தரம் பிள்ளை அவர்கள், பேச்சு வழக்கில் இல்லாமல் அழிந்துபட்ட வடமொழிபோல் உன் (தமிழின்) கதி ஏற்பட்டு விடாமல் என்றும் ஒன்றுபோல் இளமைத்தன்மையுடன் விளங்குகிறாய் என்று போற்றுகிறார்.
பாரதியோ போற்றாவிட்டாலும், தமிழ்த்தாய்,
“உயர்ந்த மொழியான ஆரிய (வட) மொழிக்கு சமானமாக ஒரு காலத்தில் வாழ்ந்தேன்.” இப்போது சீரழிந்து கெட்டுப்போய்விட்டேன் என்பது ஆக புலம்புவதாகத் தாழ்வுபடுத்திக் காட்டுவதோடு, ஆரியம் இன்றும் மேன்மையாக இருப்பதாகவும் தமிழ்த்தாயைக் கொண்டே சொல்லச் செய்கிறார்.
ஆகவே சுப்பிரமணிய பாரதியின் தமிழ்ப்பற்றை அவரது நாளைக் கொண்டாடும் பண்டித முண்டங்கள் இதிலிருந்தாவது உணர்வார்களாக.
இனத்தின் பேரால் பார்ப்பனரும், மதத்தின் பேரால் இஸ்லாமியரும், வகுப்பின் பேரால் சட்டக்காரர்களும் ஆகிய இவர்களுக்கு எவ்வளவுதான் இரத்தக்கலப்பு ஏற்பட்டாலும் புத்திக் கலப்பு மாத்திரம் ஏற்படவே ஏற்படாது. ஒரே புத்திதான்.
அதாவது முறையே தங்கள் இனம், மதம், வகுப்பு ஆகியவைகளை சிறிதுகூட விட்டுக் கொடுக்காமலும் அவைகளையே உயர்வென்று பேசும் அபிமானமும் வேறு எவனாவது தாழ்த்திச் சொன்னால் ரோஷப்படும் குணமும் கொண்ட உயர்ந்த புத்தி மாறவே மாறாது. தமிழனுக்கு அவைமாத்திரம் கிடையாது.
கம்பனைப் போல் ஒரு கை கூழுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதனால்தான் அவர்கள் மேன்மையாய் வாழுகிறார்கள். இவர்கள் கீழ்மையாய் (சூத்திரர்களாய்) வாழுகிறார்கள். தமிழைக் குறைகூற வேண்டாம் என்று எந்த சமஸ்கிருதப் பண்டிதர்கள் வாயிலிருந்தாவது ஒரு வார்த்தையாவது வந்திருப்பதாக ஒரு பண்டிதராவது காட்ட முடியுமா?
ஆனால் எத்தனை தமிழ்ப் பண்டிதன் சமஸ்கிருதத்தின் திருவடிகளே தஞ்சம் என்று சகஸ்ரநாம அர்ச்சனை செய்கிறார்கள். கணக்குச் சொல்ல வேண்டுமா? இதைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இனி அதைச் சொல்ல என்னமாயிருக்கும்? தயவு செய்து மன்னியுங்கள்.
-விடுதலை,17.6.16

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

கடவுளின் நடவடிக்கை

- சித்திரபுத்திரன் -
19.10.1930 -  குடிஅரசிலிருந்து...
உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப்படுமானால் அவரை நடுநிலை யுடையவரென்று சொல்லு வதைவிட பாரபட்சமுடையவரென்று சொல்வதற்கே மிக மிக இட மிருக்கின்றன.
அவரை கருணையுடையவரென்று  சொல்லுவதைவிட கருணை யற்ற வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரதியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே  தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.
அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.
அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லு வதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது.
(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.
அவர் ஜீவன்களுக்கு நன்மையை செய்கின்றாரென்பதைவிட தீமையைச் செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மையடைந்தவர்களைவிட தீமை யடைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத்தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன.
அவர் நாகரிகமுடையவரென்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.
அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப் பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன.
அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட  அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு  வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.
அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்.

-விடுதலை,9.12.16