செவ்வாய், 20 டிசம்பர், 2016

தொழிலாளர்கள்


11-12-1932, குடிஅரசிலிருந்து...
தொழிலாளிகளை மோசம் செய்யும் முதலாளிகள் செயல்களை எல்லாம் தொழில் திறமையாகவும், நிர்வாகத்திறமையாகவும் கருதப் படுகிறது. முதலாளியைத் தொழிலாளி ஏமாற்றுவது நாணயக் குறை வானது, நம்பிக்கைத் துரோகமானது, திருட்டுக் குற்றத்தில் சேர்ந்தது என்பதாக ஆகிவிடுகின்றது. இதற்குக் காரணம் எல்லாம் முதலாளி மார்கள் ஆட்சி வலுத்திருக்கிறது.
அவர்களுக்கு சங்கம் இருக்கிறது. அதற்கு அரசாங்கத்தின் சலுகை இருக்கிறது, அவர்களது நன்மைக்கு என்றால் உலக முதலாளிகள் எல்லாம் ஒன்று கூடி விடுகிறார்கள். முதலாளிகள் நன்மையில் ஒவ்வொரு முதலாளிக்கும் கவலை இருக்கின்றது.
அரசாங்கமும் அவர்கள் கைவசமிருக்கிறது. சட்டசபை அவர்கள் கைவசமிருக்கிறது. சட்டசபையில் 100க்கு 90பேர் அவர்கள் இனத்தவர் களாகவே அவர் களைத் தழுவி ஆதரிப்பவர்களாகவே சேர்ந்து விடுகிறார்கள். ஆனால், தொழிலாளிகளுக்கோ உண்மையான சங்கம் என்பது இல்லை. ஒற்றுமை என்பது இல்லை. தக்க பிரதிநிதித்துவம் என்பதில்லை ஒன்று படக் கவலையுமில்லை மார்க்கமும் இல்லை. தொழிலாளிகளை முதலாளிகள் தங்கள் நன்மைக்கு உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். தொழிலாளிகளை ஆயுதங்களாகக் கொண்டுதான் முதலாளிகள் ஒருவரோ டொருவர் யுத்தம் செய்து கொள்ளுகிறார்கள். இரண்டு முதலாளிகள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள். இரண்டு முதலாளிகள் சண்டை போட்டுக் கொள்வதின் பயன் தொழிலாளிக்குத் தான் நஷ்டமாகவும் உயிர் பலியாகவும் முடிகின்றதே தவிர, முதலாளி களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை சரீரத்தால் வேலை செய்யாத சோம்பேறி அன்னியர்கள் உழைப்பில் வாழ்கின்றவன் ஆகியவர் களுக்கே தொழிலாளிகள் ஓட்டுக் கொடுத்து தங்கள் பிரதிநிதியாக ஆக்கிக் கொள்ளுகிறார்கள். பிறகு இந்த சோம்பேறிகள் ஊரார் உழைப்பில் வாழ்கின்றவர்கள். தொழிலாளிகளின் பிரதிநிதிகளாய் ஆனவுடன் முதலாளிகளாகவே ஆகப் பார்க்கின் றார்கள் அனேகர் முதலாளிகளாகவே ஆகி விடு கிறார்கள். அனேகர் முதலாளிகளுக்கு உளவாளிகளா யிருந்து தொழிலாளிகள் நலத்தை விற்று தொழிலாளி களைக் காட்டிக் கொடுத்துத் தாங்கள் வாழ்கிறார்கள்.
சரீரத்தால் பாடுபடுகின்றவன் தவிர, வேறு யாரும் தொழிலாளி களுக்குப் பிரதிநிதியாக இருக்கக் கூடாது. எந்த சபையிலும் தொழில் செய் பவனே தொழிலாளர் பிரதிநிதியாக இருக்க வேண்டும். உலகின் சகல துறைகளைச் சேர்ந்த ஆட்சிகளும்  தொழிலாளர்கள் கைக் குள்ளாகவே வரவேண்டும். அப்படிப்பட்ட ஆட்சிதான் தகும், அப்படிப்பட்ட ஆட்சி தான் பொதுஜன ஆட்சியாகும், அப்படிப்பட்ட பொது ஜன ஆட்சி என்பது, உலகப் பொது ஜனங்கள் நன்மைகளை எல்லாம் கருதியதாக இருக்க வேண்டும். அப்படிக் கில்லாமல் ஒரு தேசத் தொழிலாளிகள் மாத்திரம் அந்த ஆட்சி பெற்றால் போதும் என்பது தற்கொலையேயாகும். அதனால் உலக தொழிலாளர் கஷ்டம்  நீங்காது. மற்ற தேசத் தொழிலாளர் கஷ்டம் அதிகரிக்கும். உலக தொழிலாளர் யாவருமே விடுதலை பெற்று ஆட்சிபெறும் மார்க்கந்தான் நிரந்தரமான  நன்மையை கொடுக்கும் இல்லாத வரை மற்ற தேச முதலாளிகள் ஒன்று சேர்ந்து தனித்தேச தொழிலாளர் ஆட்சியை அழிக்கப் பார்ப்பார்கள்.
உலகில் வேலை செய்பவர்களைத் தவிர, மற்றவர்களை இருக்கக் கூடாது. ஒருவர் சவுக்கியமாயிருக்க மற்றவன் கஷ்டப்படுவது, பட்டினி கிடப்பது ஜீவனத்திற்கு மார்க்க மில்லாமல் திண்டாடுவது என்கின்ற நிலைமை எங்கிருந்தாலும் அவைகள் ஒழிக்கப்பட வேண்டும். அவை களுக்குக் காரணமானவைகள் வேருடன் அழிக்கப்பட வேண்டும்.
-விடுதலை,18.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக