செவ்வாய், 20 டிசம்பர், 2016

அழிவு வேலைதான் செய்ய வேண்டும்

14.9.1930 - குடிஅரசிலிருந்து...

இந்த நாட்டில் சீர்திருத்த வேலைகள் வெகுகாலமாக செய்யப்பட்டு வந்திருக் கின்றன செய்தவர்களை யெல்லாம் சாதாரண மனி தர்களாய் கூடக் கருதாமல் பெரிய தெய்வத்தன்மை பொருந்தினவர்களாகவும், விசேச அவதார புருஷர் களாகவும் மகாத்மாக்களாகவும் கூடக் கருதப்பட்டு வந்திருக்கின் றனர். ஆனால் அவர்களால் ஆன வேலை என்னவென்று பார்ப்போமானால் குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த பலன் போலதான் ஏற்பட்டு வந்திருக்கின்றனவே அல்லாமல் வேறில்லை.

இப்படி இருந்தும் இனியும் அதே துறையில் அநேகர் பாடுபடுகின்றார்கள் என்றாலும் அவர்களாலும் இன்று பலனுள்ள ஒரு காரியமும் நடத்த முடியவில்லை. நடை பெறுமென்ற நம்பிக்கையுமில்லை.

காரணம் என்னவென்றால் அவர்கள் மக்களுக்கு எந்தெந்த பலன் ஏற்படவேண்டும் என்கிறார்களோ அந்தந்தப் பலன்களுக்கு எதிராயிருக்கும் அஸ்திவாரமான தடைகளை நீக்கும் விஷயத்தில் அவர்கள் சிறிதும் சம்மதிப்பதில்லை. அதன் கிட்டப் போவதற்கே பயப்படுகின்றார்கள். மற்றும் பலர் அவைகளைக் காப்பாற்றிக் கொண்டே சீர்திருத்தம் அடைய வேண்டும் என்கின்றார்கள். ஆதலால் தான் அப்படிப்பட்டவர்களால் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒரு கானலை அதாவது காட்டை விவசாயம் செய்யும்படியான வயல்களாக ஆக்க வேண்டுமானால் முதலில் அதிலுள்ள புதர்களையும் முட்களையும், செடி, கொடிகளையும் பிடுங்கி நெருப்பிட்டுக் கொளுத்தி ஆகவேண்டும். பிறகு மேடுகளை வெட்டி பள்ளத்தில் போட்டு நிரவவேண்டும், கல்லுகளையும், பாறைகளையும் உடைத்து வெளியாக்க வேண்டும்.

இந்தக் காரியங்களெல் லாம் செய்த பிறகே அந்த பூமி எந்த விதமான வெள்ளாமை செய்யப் பயன்படும் என்று கருதி அதற்கேற்ற எருக்களிட்டுப் பயிர்களைச் செய்து பயன்பெற வேண்டும். அப்படிக்கில்லாமல் உள்ள நிலையிலேயே பயிர் செய்வதானது மனிதனது முயற்சியும் ஆற்றலும் விதைப் பண்டமும் வீணாய் போவதுடன் பயனற்ற கொடியும் செடியும் மேலும் வளர்ந்து துஷ்ட மிருகங்களும் விஷ ஜந்துக்களும் தாராளமாய்க் குடியிருக்கத்தகுந்த புதர்களாகத்தான் ஏற்பட்டு விடும்.

ஆகையால் நாம் இப்போது புதர்களிலுள்ள கொடி, செடி, முள், புல், பூண்டு ஆகியவைகளை அழித்து நெருப்பு வைத்துக் கொளுத்தும் வேலையில் இருக்க வேண்டிய வர்களாய் இருக்கின்றோம். இந்த வேலை செய்யும் முன் பயிர்செய்யும் வேலையில் நாம் ஒரு காலமும் புகக்கூடாது.

மேடு பள்ளங்களைச் சமனாக்காமல் அதில் தண்ணீர் பாய்ச்சும் வேலையை நாம் தொடங்க மாட்டோம். ஏனெனில் நாம் பாய்ச்சும் தண்ணீரெல்லாம் ஏற்கனவே தண்ணீர் நிறைந்திருக்கும் பள்ளத்திற்கே போய்ச் சேர்ந்து விடும். மேட்டிற்கு எவ்வளவு தண்ணீர் பாய்ச்சினாலும் அங்கு கொஞ்சம் கூடத் தங்காது.

ஆகவே தைரியமான அழிவு வேலை அதாவது காட்டைத் திருத்தி மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமனாக்கும் சமத்துவ வேலையைக் கைக்கொள்ள வேண்டும்.  அதற்கு பயப்படக் கூடாது. இந்த வேலையில் நமக்குப் பெரிதும் கஷ்டமுண்டு என்பதையும் மனதில் வைக்க மறந்து விடக் கூடாது.

புதர்களில் இருந்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வரும் ஜந்துக்களால் நமக்கு பல ஆபத்துகள் ஏற்படலாம். அதற்கும் துணிந்து தைரியத்தோடு தான் அழிவு வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.
-விடுதலை,16.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக