திங்கள், 19 டிசம்பர், 2016

சாயிபாபா - ஒரு தகப்பனும் மகனும் சம்பாஷணை (சித்திரபுத்திரன்)



06-11-1943, குடிஅரசிலிருந்து...
தகப்பன்:- டேய் தங்கவேலு என்னடா படிக்கவே மாட் டேங்கிறயே. உனக்கு பள்ளிக்கூட சம்பளம் எத்தனை? வூட்டு வாத்தியாருக்கு சம்பளம் எத்தனை? இன்னமும் புத்தகம், பாலும், பருப்பும் எத்தனை? மாசம் 30,40 ரூபா உனக்கு ஒருத்தனுக்கு செலவு ஆகுது. நீ படிக்காமே இப்படியே திரியிரயே, இது என்னடா நாயம்.
மகன்:- என்னப்பா கண்ணை மூடிக்கிட்டு பேசிரிங்கோ. நா படிக்கிரனோ இல்லையோ அதெல்லாம் உங்களுக்கு என்னத்துக்கு. நான் பாசு பண்ணிப்போட்டால் போது மல்லவா உங்களுக்கு.
த:- அடமுட்டாள் பயலே படிக்காவிட்டால் எப்படீடா பாசு பண்ணுவே?
ம:- அதெல்லாம் உங்களுக்கு என்னத்துக்கு, உங்களுக்கு பாசு தானே வேணும்?
த:- அடெ மறுபடியும் அப்படியே பேசரயே, படிக்காமே கழுதை மேச்சிகிட்டுத் திரியிரே பாசு பண்ணப் போரையாமா எப்படிப் பண்ணுவே செருப்பாசுதாம் பண்ணுவே.
ம:- இல்லேப்பா கோவிச்சிக்காதிங்கோ. அது ஒரு ரகசியம் இருக்கு; நான் எப்படியும் பாசு பண்ணிப் போடுவேன்.
த:- எப்படீடா?
ம:- அப்பா ஆ ஆ இதபாரு இதென்ன தெரியுமா? இது தான் சாயிபாபா டாலர். இதை வாங்கி கழுத்திலேயோ கையிலேயோ இடுப்பிலேயோ கட்டிக்கிட்டா படிக்கவே வேண்டியதில்லேப்பா. தானாய் பாசாயிடும் தெரியுமா?
த:- அட அட சோதாப்பயலே உனக்கு எந்த மடையண்டா இப்படி சொல்லிக் கொடுத்தவன்? அவனை அடிக்கணுமடா .... முதல்லே. இது என்னடா அநியாயம்? நான் மாதம் 30, 40 உன் எளவுக்கு அளுகிறேன். நீ, கக்குவாப் புள்ளைக்கு இடுப்பிலே கட்டுர நாய் காசு மாதிரி ஒண்ணைக் கட்டிக்கிட்டு படிக்க வேண்டியதில்லேண்ணு கழுதை மேக்கிரையேடா. உங்கூடத் திரியிதுகளே இந்தக் குட்டிச்சுவருங்கெல்லாம் இப்படித்தானா.
ம:- ஆமாப்பா இந்தப்பசங்க கூட அப்படித்தான். அவன் தங்கத்திலே வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கிறான்; இவன் வெள்ளிலே வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கிறான்; நான் அலுமினியத்லே வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கிறேன்.பலன் எல்லா ஒண்ணுதான் எல்லாரும் பாசுபண்ணப் போறோம் பாருங்களே.
த:- (அதிக கோபத்துடன்) அட மடப்பசங்களா உங் களுக்கு எந்த முட்டாப்பயடா சொன்னவன் இப்படிண்ணு.
ம:- அப்பா எங்களை வேணும்னா திட்டிக்கோப்பா. வாத்தியாரைத் திட்டாதேப்பா. அவருதாம்பா எங்களைக் கூப்பிட்டு இரகசியமாய் சொல்லிக்குடுத்து மாடன் கவ்ப்பே சுப்பராவ் கடையிலே வாங்கிக் கொடுத்தார். ஒரு நாளைக்கு எத்தனை விக்குது தெரியுங்களா? கேசுக்குப் போரவன், வக்கீலு, வண்டிக்காரென் ஒவ்வொருத்தனும் வாங்கிக் கட்டிக்கிட்டு போறாங்கோ. நம்ம வாத்தியாரு பஞ்சாபகேச சாஸ்திரிதானப்பா இதெ தருவிச்சி கடைக்கு கொடுத்து இருக்கிறாரு. மாடன் கவ்ப்பே சுப்பராவு இந்த டாலர்களுக்கு பூசை பண்ணி எடுத்துக் கொடுக்கிறாரு. அதுதான் இங்கே ரம்ப விக்கிது. திட்டாதிங்கப்பா கட்டாயம் பாசு பண்ணிப் போடுவோம்.
த:- ஏண்டா சண்டாளப் பசங்களா இப்படி எத்தனை நாளாய் நடக்குதுடா?
ம:- இந்த இரண்டு வருசமாத்தான் மும்மரமா நடக்குதுங்கோ.
த:- நீ எப்பப் புடிச்சி கட்டிக்கிட்டு இருக்கிறே?
ம:- போன வருசம் புடிச்சி கட்டிக்கிட்டிருக்கிறேம்பா.
த:- பின்னை ஏண்டா போன வருசம் நீ பாசு பண்ணாமெ போயிட்டே?
ம:- அப்பா நான் இரண்டொரு பாடம் நல்லாக்கூடப் படிச்சென். ஏன் பாசாகிலே என்று வாத்தியாரைக் கேட்டேன். அவர் நீ சாயி பாபா சாமியெ நம்பாமே படிச் செயல்லோ, அதனாலே சாமி சுளிச்சிப் போட்டது. இனி மேலெநாச்சி அவரையே நம்பு அப்டீன்னு சொன்னாரு. அதுவும் ரம்ப ரகசியமாச் சொன்னாரப்பா. அதுதான் நான் சாயி பாபாவையே நம்பிகிட்டு பூசை பண்ணிகிட்டு
படிக்காமையே இருக்கி றேனப்பா எனக்குத் தங்கத்திலே சாயி பாபா வாங்கிக் குடுக்கிறீங்களா?
த:- அடி செருப்பாலே; தேவடியா மகனே, அவனாருடா அந்த வாத்தியாரு? என் வயிறு பத்திக்கிதுடா. நாணு மாசம் 30ரூபாய் உன் எளவுக்கு அளுகிறது. நீ அந்தப் பலவருக்குப் பொரந்த வாத்தியார் பையன் பேச்செக் கேட்டுக்கிட்டு ஊட்லெ சோத்தைத் திண்ணுக்கிட்டு கழுதை மேச்சிக்கிட்டா திரியிரே. கூப்பட்றா உங்கம்மாளே. அடி அடீகேட்டையா உம் மவஞ்சேதியே, எவனோ சாயி பாபாவாம், எங்கயோ இருக்கிறானாம், அவன் மூஞ்சி போட்ட தகட்டே இடுப்பிலே கட்டிக்கிட்டா பரிச்சையிலே பாசாயிடுமாம், அதை கட்டிக் கிட்டவுங்க படிக்கக் கூடாதாமா, படிச்சா அந்த சாயிபாவா நானிருக்க உனக்குப் பயமென்ன என்னை நம்பாமே நீ படிச்சையா எண்ணு கோவிச்சுக்கிட்டு பரிச்சையிலே சைபர் போட்டுடுமாம், அதனாலெதான் போன வருசம் அந்த பாபா இவனுக்கு சுளிக்கி போட்டதாமாம், அதுக்கோசரம் இந்த வருசம் கழுதை மேக்கிறாண்டி பாத்தையா? அந்த வாத்தியாருப் பயலெ என்ன பண்ணிக்கூடாதடீ? பெத்தயேடி இவனை. இவனைப் பெக்கர நேரம் பேதிக்கி குடிச்சிருந்தாலும் இரண்டு தரம் வயித்திலே போயிருக்குமே? நல்ல கொளக் கட்டையாட்டமா இருந்துக்கிட்டு எப்படிப்பட்ட புள்ளையைப் பெக்கரே.
தாயாரு:- கோவிச்சுக்காதிங்கொ பையனுக்கு என்ன தெரியுமுங்கோ. அந்தப் பாளாப்போன பட்டுகிடப்பான் அந்த வாத்தியார் நாய பண்ணுனதுக்கு என்னையும், பையனையும் கோவிச்சி என்னை பண்ணரது, நானு இவனைப் பெக்கரதுக்கு நீங்க ஒண்ணும் பண்ணாமெ நாமாத்திரமா இவனைப் பெத்தேன்? உங்களுக்குந்தான் பங்குண்டு, வெளியே சொன்னா வெக்கக்கேடு, வாய் மூடுங்கோ. அந்த வாத்தியாரைக் காட்டுங்கொ இப்பவே அவனைப் போயி இவ்வூடு கூட்ரதிலேயே நல்லா தூசி தட்டி உட்டுடுறேன்.
மகன்:- அப்பா! அப்பா! வெளியெ சொல்லாதிங்கப்பா. வாத்தியாரையும் கேக்காதிங்கப்பா, வாத்தியாரு இதை ஒரு  த்துருகிட்டயுஞ் சொல்லவாண்டாம், சொன்னாக்க இந்த வருசமும் பாபா சுளிச்ப் போடுவாரு எண்ணு சொன் னாங்கோ.
தாயாரும்? தகப்பனும்? எனக்குத் தெரியும் ஏன் அவன் அப்படிச் சொன்னான் என்று தெரிஞ்சா நா என்ன பண்ணுவேன்னு அவனுக்குத் தெரியும். என்ன ஆனாலும் சரி, நீ பெயலானாலுஞ் சரி அந்த வாத்தியாருப்பயலையும், ஏமாத்தி அதை விக்கிர அந்த எச்சக்கலை காப்பிக்கடக் காரனையும் ஒதைக்காமே விடப்போரதில்லை. இனி நீ அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போகாதே, வூட்டிலேயே படி. வேறெ வாத்தியாரு வெச்சுக் குடுக்கிறேன் (என்று சொல்லிப் போட்டு கையில் அளுக்கொண்ணை எடுத்துக் கிட்டு வாத்தியாரைத் தேடிக்கிட்டும் போறாங்கோ. நேரமாச்சி இன்னொரு நாளைக்குவந்து தொச்ச சங்கதியைச் சொல்லுறேன்.)
குறிப்பு:- இதில் வரும் பெயர்கள் யாரையும் குறிப்பனவல்ல.
-விடுதலை,17.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக