ஞாயிறு, 15 நவம்பர், 2015

நம் இயக்க முதற்கொள்கையும், முடிவான கொள்கையும் சாதி ஒழிப்பே!




- தந்தை பெரியார்
இன்றையத் தினம் இந்த ஊரிலே திராவிடர் கழகக் கட்டடம் கட்டப் பட்டதைத் திறப்பதன் காரணமாக இக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.  இக்கட்ட டத்தைக் கட்டுவதற்கு சுமார் 10, 12 வருஷ மாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு இப் போது கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.  இக்கட்டடத்திற்கு சுமார் ரூ 2000க்கு மேல் செலவாகி இருக்கிறது.  நமக்கும் பங்கு இருக்கட்டுமே, என்று ஒரு சிறு தொகையை நானும் கொடுத்திருக் கின்றேன். நம் கழகத்திற்கு இது போன்று 5000, 10,000 50,000 பெறும்படியான கட்டடங்கள் பலவும், ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை உள்ள கட்டடங்கள் சிலவும் இருக்கின்றன. இவற்றில் பல வாடகைக்கு விடப்பட்டு இருக்கின்றன. சிலவற்றில் கழகக் காரியங்கள், படிப் பகங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இவ்வளவு பெருகுவ தற்குக் காரணம் இது சர்வாதிகாரக் கழகமானதால் முடிந்தது; ஜனநாயகக் கழகமாக இருந்தால் ஆளுக்கு ஆள் பங்கு போட்டுக் கொண்டு போய் இருப்பார்கள். நம் இயக்கமானது, இந்நாட்டில் 100க்கு 99 மக்கள் நம்பிக் கடைபிடித்துக் கொண்டிருக்கும் காரியங் களுக்கு எதிராகக் கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம், தருமம் ஆகியன இல்லை என்று, 40 ஆண்டு காலமாகச்  சொல்லிக் கொண்டு வருவதாகும். இப்படிப் பிரசாரம் செய்து வருகின்ற இதன் தலைவர்கள் இதுவரை கொல்லப் படாமல் இருப்பது அதிசயமேயாகும். நமக்குத் தெரிய நம் கண்முன் நடந்ததைச் சொல்கிறேன். இந்த ஆட்சி மத சம்பந்தமற்றதாக இருக்க வேண்டும் என்று ஒரு வார்த்தை சொன்னதற்காகவே காந்தி கொல்லப்பட்டார். பொதுவாக சீர்திருத்தக் காரியம் செய்ய வந்த அனைவரும் கொலை செய்யப்பட்டே வந்திருக்கின் றனர்.
புராண காலம் தொட்டு, சரித்திர காலம் தொட்டு, இன்றும் கூட சீர் திருத்தவாதிகள் கொல்லப்பட்டே வந்திருக்கின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டில் புத்தரும், சமணரும் அறிவுப் பிரச்சாரம் செய்து, மக்களை அறிவுவாதிகளாக்கப் பாடுபட்டனர் மக்கள் தங்கள் அறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும். அவர் சொன்னார், இவர் சொன்னார், மிக நீண்டகாலமாக இருந்து வருகின்றது என்பதற்காக, எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்துச் சரியென்று பட்டால் அதன் பின் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். இதன் காரண மாகவே அவர்கள் பார்ப்பனரால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்றனர், கழுவேற் றப்பட்டு இருக்கின்றனர். இன்றைக்கும் கூட மதுரை, காஞ்சீபுரம், போன்ற பெரிய கோயில்களில் சமணர்களைக் கழுவேற்றி யதைத் திருவிழாக்களாகக் கொண்டாடிக் கொண்டு வருகின்றனர். நம் நாட்டில் மட்டும் தான் சீர்திருத்தவாதிகளுக்கு  இந்த நிலை என்பது கிடையாது.
பெரும் அறிவுள்ள நாடான அமெரிக்க நாட்டில், அய்ந்து கோடி மக்களின் ஓட்டு களைப் பெற்று ஜனாதிபதியான கென்னடி- சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும் என்று பாடுபட்டதற்காக சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாம் ஒருவர் தான்- நம் இயக்கம் ஒன்று தான்- சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துச் சொல்லிக் கொண்டு 40 ஆண்டு காலம் எந்த ஒரு சிறு பலாத்காரமும் இன்றி வளர்ந்து கொண்டு வருகின்றது என்றாலும், இன்னமும் நாம் செய்ய வேண்டிய காரி யங்கள் நிறைய இருக்கின்றன. நாம் முதன் முதல் பார்ப்பன வெறுப்பை மக்களிடையே ஏற்படுத்தினோம். நம் இயக்கப் பிரசாரத் திற்குப் பிறகு சகலமும் பார்ப்பன ஆதிக்கத் திலிருந்து போய் மிகக் குறைந்து போய் விட்டதோடு, சமுதாயத்தில் அவர்களுக் கிருந்த பெரும் அந்தஸ்து போனதோடு, இன்று பார்ப்பான் இந்நாட்டை விட்டுத் தானே போனால் போதும் என்றாகி விட்டது.  இன்று சமுதாயத்தில் பார்ப்பான் தனியாக நின்று, எதிலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இப்படி எல்லாத் துறை களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கமானது இன்று ஒழிக்கப்பட்டு விட்டது.
சரித்திரம் தோன்றிய காலம் முதல், அரசாங்கம் தோன்றிய காலம் முதல், சூத்திரன், பார்ப்பானுக்குத் தொண்டு செய்ய வேண்டியது; படிக்கக்கூடாது, பணம் சேர்க்கக் கூடாது, வீடுகட்டக் கூடாது சாஸ்திரத்தைக் காதால் கூட கேட்கக் கூடாது என்றிருந்தது. இது நேற்று வரை- இந்த ஆட்சி வருகிறவரை இருந்து வந்த ஆட்சி முறையாக இருந்தது. இவர்கள் ஆட்சி ஏற்பட்ட பின்தான் அது அடியோடு மாறிற்று.
நம்முடைய இயக்கத்தின் முதல் கொள்கையும், முடிவான கொள்கையும், ஜாதி ஒழிய வேண்டும் என்பதேயாகும்.  அதற்காக எந்தப் பாதகமான செயலையும் செய்யலாம்; கொலை கூடச் செய்யலாம்; எப்படி என்றால் பார்ப்பான் எப்படித் தன் தருமத்தைக் காப்பாற்றிக் கொள்ள, எந்த அதருமத்தையும் செய்யலாம் என்கின் றானோ, அதுபோல நம்முடைய இழிவை கீழ் சாதித்தன்மையை, மாற்றிக் கொள்ள நாம் எந்த அதருமத்தையும் செய்வது தவறு கிடையாது.
நேற்று, பத்திரிகையில் பார்த்தேன்; பஞ்சாலையைத் திறக்க வேண்டும் என்ப தற்காக நூற்றுக்கணக்கான பேர்கள் ரயி லைக் கவிழ்க்கச் சென்று கைது செய்யப் பட்டு இருக்கின்றனர். நாளைக்கு  இவர் களை விடுதலை செய்து விடுவார்கள். ஆந்திராவில் மொழி வழி பிரிய வேண்டும் என்பதற்காகப் பல அரசாங்க அலுவலகங் களுக்குத் தீயிட்டுக் கொளுத்தி இருக்கின் றனர், பல பஸ்களுக்குத் தீவைத்து இருக் கின்றனர்.  சாதாரணக் காரியங்களுக்கு இப்படிக் கிளர்ச்சிகள் செய்யும் போது, நாம் நம் இழிவை, மானமற்றத் தன்மையைப் போக்கிக் கொள்ள கிளர்ச்சி செய்வது, பலாத்காரத்தில் ஈடுபடுவது பெரிய தவறு ஒன்றுமில்லை. அவை எல்லாவற்றையும் விட மனிதனின் மானம் மிக உயர்ந்தது; அதற்காக உயிரைக்கூடக் கொடுப்பது தவறாகாது.
இந்த நாட்டில் மனிதன் தாழ்ந்தவனாக, சூத்திரனாக, பார்ப்பானுக்கு எதனால் இருக்கிறான் என்றால், கடவுளால், மதத்தால் தான். மத ஆதாரங்களைப் பார்த்தால் கடவுள் தான் சூத்திரனை உண்டாக்கி இருக்கிறான், தீண்டத்தகாதவனை உண் டாக்கி இருக்கிறான், பார்ப்பானை உண் டாக்கி இருக்கின்றான். அதோடு மட்டுமல்ல. பின்பற்றுகின்ற மதப்படியும் நீ பறையன், சூத்திரன், பார்ப்பானாக்கி இருக்கின்றான்.  கிறிஸ்துவன் உன் மதத்தைப் பின்பற்றுவது கிடையாது, நீ வணங்குகின்ற கடவுளை வணங்குவது கிடையாது. துலுக்கன் உன் மதத்தைப் பின்பற்றுவது கிடையாது, நீ வணங்கும் கடவுளை வணங்குவது கிடை யாது.  ஆனதால், அவனிடம் பறையன். சூத்திரன், பார்ப்பான், இல்லை. இந்து மதத்தைப் பின்பற்றுவதால் தான் இந்துக் கடவுள்களை வழிபடுவதால் தான் நீ சூத்திரனாகின்றாய். அவற்றை விட்டுவிட்டு என்று நீ வெளியேறுகின்றாயோ, அன்று தான் மனிதனாக முடியும்.
மதிப்பிற்குரிய கணேசன் அவர்கள் சாதி ஒழிய சில வழிகளைச் சொன்னார். அவர் சொன்ன அதுமட்டும் போதாது, அது சாதியை ஒழிக்காது. வேண்டுமானால், சமுதாயத்தை ஒன்றாக்கலாம்; முதலியார், ரெட்டியார், கவுண்டர், அகமுடையார், கள்ளர் என்பதில் கலப்பு மணம் செய்து கொள்வதால் நம் சூத்திரத்தன்மை நீங்கிவிடாது. நாம் முதலியாரை, செட்டியாரைப் பார்த்தால் குளிப்பது கிடையாது. அவர்கள் ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடாமல் இருப்பது கிடையாது. அந்தஸ்தில்  பேதம் பாராட்டப் படுவது கிடையாது. சமமாகவே பாவித்துப் பழகி வருகின்றனர்.
சிலர் சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டு சாதி ஒழிய வேண்டும் என்றால், எப்படி ஒழியும்? இந்தக் கோயில்களைக் கட்டியதே சாதிகளைக் காப்பாற்ற வேண் டும்  என்பதற்காகத் தான். சட்டத்திலே மாறவேண்டும். தீண்டாமை கிடையாது; கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம் யார் வேண்டுமானாலும் சாமி சிலையைத் தொடலாம்; பூசை செய்யலாம் என்றாக வேண்டும். அப்போது தான் சாதி ஒழியும்- தீண்டாமை ஒழியும்.
நாம் பல ஆண்டுகாலம் மக்களிடையே இருக்கிற இழிவு மானமற்றத் தன்மை ஆகியவற்றை எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்து பார்த்தாகி விட்டது. இன்னமும் மனிதன் மாறவில்லை. நம் பிரசாரத்திற்கு இருக்கிற விளம்பரத்தை விட சாதியைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற பிரசாரத்திற்கு விளம்பரமும், பணக்காரர், பத்திரிகைக்காரர் ஆதரவும் இருப்பதால், நம் பிரசாரம் பரவ முடியா மல்- மக்களிடையே சொல்ல முடியாமல் இருக்கின்றது.
இனிக் காரியத்தில் இறங்க வேண்டும்; கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும். அப் போது தான் நம் இழிவைப் போக்கிக் கொள்ள முடியும். அதற்கு நம் மக்கள் தயாராக இருக்க வேண்டும். நம்மைத் தவிர இதை எடுத்துச் சொல்லவோ, இதற்காக கிளர்ச்சியில் ஈடுபடவோ, வேறு எவருமே கிடையாது. நம் இழிவைப் பற்றிக் கவலை காங்கிரசுக்கு இல்லை; ஜனசங்கத்துக்கு இல்லை; சுதந்திராவுக்கு இல்லை; இங் கிருக்கிற கம்யூனிஸ்ட்டுக்கும் இல்லை. நம் இயக்கம் ஒன்றுதான் இதற்காக உயிருக்குத் துணிந்து, எதிர்ப்புகளுக்கிடையே தொண் டாற்றிக் கொண்டு வருகின்றது. 27.5.1969 அன்று ஒரத்தநாடு வட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற் பொழிவு.
(விடுதலை, 18.6.1969)
(விடுதலை, 15.11.15)

சமரசம் அடைய வேண்டுமெனில்...


தந்தை பெரியார்
சகோதரிகளே, சகோதரர்களே, சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம்  என்கின்றோமோ, எது எது  உண்மையான இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின் றோமோ அவற்றிற்கு நேர் விரோத மாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட் டிருக்கிறது.
இது நமது  நாட்டில் மட்டும் அல்ல, உலக முழுவதிலுமே  அப்படி தான் அமைக்கப்பட்டுப் போயிற்று.  ஆனால் நமது நாட்டில்  மற்ற  நாடு களைவிட வெகு தூரம்  அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டு விட்டது. முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகி யவை இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் நியாய பூர்வமான சமரசன் மார்க்கத்திற்கும்  விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில்  ஒருவன் சமரச சன்மார்க் கத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு  சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கிற முறையில்  யோக் கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில்  அவை ஒன் றுக்கொன்று முரண்பட்ட  தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும்.  அதோடு  மாத்திரமல்லாமல் சமரசமும்,  சன்மார்க்கமும் கூடாது  என்னும் தத் துவத்தின் மீதே அமைக்கப் பட்டவை களாகும்.
ஆகையால் நான் சமரச சன்மார்க் கத்தைப்பற்றி பேசவேண்டுமானால் அவை சம்பந்தமான கட்டுப்பாடு களையெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச  சன்மார்க்கம் என்று  சொல்லவேண்டியதாயிருக்கின்றது.  இது  உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரி மார்கள், எஜமானர்கள், அக்கம்பக்க ஜாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகிறேன்.
நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமுகத்தார், அடைந்த தனி மனிதர்கள்  என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள்  எல்லாம்  மேற்கண்ட  இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன்மார்க்கம்  அடைந்தார்கள் - அடைகின்றார்கள் அடைய முயற்சிக் கின்றார்கள். இவை களில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியேயடைந்து விட்டார்கள்.
உதாரணமாக கடவுளையும் மதத் தையும் பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய  முடியாதென்று கருதிதான்  ருஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லையையும் சர்ச்சுகளையும் பணக்காரத்தன்மைகளையும் அழித்துத் தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருஷிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகளென்றே தீர்மா னிக்கப்பட்டு அவர்களை அழித்து விட் டார்கள்.
அழித்துவிட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது  கருத் தல்ல.  ஏதோ சிலரை அதாவது சமரசத் திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர  மற்றவர்களைப் பட் டாளத்தில் சேரச்செய்தார்கள். சிலரை விவசாயத்தில்  போட்டார்கள். சிலரை வைத்தியத்தில்  போட்டார்கள். வேறு  காரியங்களுக்கு உதவாதவர்களை காவல்  காக்கப் போட்டார்கள்.
அது போலவே சர்ச்சுகளைத் தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றி னார்கள்.  இவைகளுக்கு உதவாமல், போக்குவரவுக்கும் மற்ற சவுகரியங்களுக் கும் இடையூறாயிருப்பவைகளை இடித் தார்கள். பணக்காரர்கள்  சொத்தைப் பிடுங்கி பொதுஜன சொத்தாக்கி பூமி  இல்லாதவர்களுக்கு  பூமி,  தொழிலில் லாதவர்களுக்கு தொழில், படிப்பில்லாத வர்களுக்கு படிப்பு  முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத் தினார்கள். கலியாண முறையை ஒழித்து பெண் அடிமையை  நீக்கினார்கள்.
கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறுமுறையை நிறுத்தச்செய்து, அளவு படுத்தி ஆண்பெண் வாழ்க்கை இன்பத் திற்கு  சௌகரியங்கள் செய்தார்கள். இன்னும், பல காரியங்கள் செய்தார்கள். ஆனால் நமக்கு  இவை பொருந்துமா என்று சிலர்கேட்பார்கள்? யார்  கேட் பார்கள் என்றால் பணக்காரன், பாதிரி,  உயர்ந்த ஜாதிக்காரன், அரசன்  ஆகிய வர்கள்தான் கேட்பார்கள்.
இவர்கள் நமது நாட்டு ஜனத்தொகையில் 100க்கு 5 அல்லது  6 பேர்களே  இருப்பார்கள். மற்றவர்கள் 100க்கு 90-க்கு  மேல்பட்ட வர்களாவார்கள் ஆதலால் குறைந்த  எண்ணிக்கை உள்ளவர்கள். அதிலும்  தங்கள் சுயநலத்திற்கு  என்று சில கட் டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்?
முதலாவது உங்களைக் கேட்கிறேன். நீங்கள்  இந்த மூன்று  ஆதிக்கத்தை ஒப்புக் கொள்கி ன்றீர்களா? இருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்களா? என்ன சொல்லுகின் றீர்கள்? ஆகவே,  இம்மூன்றும்  ஒழிய  அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால் நமக்கு  இன்றே இம்மூன்றும்  ஒழிய வேண் டும்  என்கிற  ஆத்திரமுமில்லை.  ஏனெ னில், இன்னும்  அநேக நாடுகள் இருக் கின்றன. அவை இப்போதுதான் முயற்சித் திருக்கின்றது. ஆகையால் வரிசைக் கிரமத்தில் அந்த  முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு.
ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வுதாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆக வேண்டும். இதற்கு நாம் தர்மசாஸ்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவை களைக் கவனித்துக்கொண்டிருந்தால் பல னில்லை.
சகோதரர்களே! நீங்கள் தர்மத் திற்கும், சாஸ்திரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், எத்தனை காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள், என்பதை யோசித்துப் பாருங்கள்  என்ன பலன்  அடைந்து இருக் கின்றீர்கள்? இந்த நிலைமையில் உங்கள் ஆயுள் காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று  கருதுகின்றீர்களா?
இன்றைய நிலைமையில்தான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளையதினம் வரையில் கூட உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்? என்பது எனக்குப் புலப்படவில்லை.
மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ  இருக்க வேண்டும். சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போல் ஆகாரம் உட்கொள்ளவும் உட்கொண் டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீன வுணர்ச்சியும், ஞானமுமற்ற  ஜந்துக்கள் இருக்கின்றதே, இதுபோதாதா?
இனி மனிதன் என்றும்,  ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன், என்றும் சொல்லிக்கொண்டு பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும்   பின்பற்றி கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும், செலவு  செய்கின்ற  மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழ வேண்டுமா என்று கேட்கிறேன்.
இதைப் போன்ற அறிவீனமும், அவமானமும் ஆன காரியம் மனித சமுகத்திற்கு வேறொன் றில்லை என்றே சொல்லுவேன். இந்தவித மனித சமுகம் அழிந்துபோவது ஜீவகாருண் ணியத்தை  உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றது. ஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்து கொள்ளுங்கள், அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள்.
அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக் கியர் களின் வார்த்தைகளை நம்பி எதிர்ப் பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள்,  இந்த ஜென்மத்தில் உங் களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டை கற்பித்திருக் கின்றார்கள். முன்ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருந்தால் அல்லவா.
இந்த ஜென்ம காரியங்களின்  செய்கை களோ பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப்போகின்றது. அன்றியும் கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள் தனமாய் கருதி  உங்கள் கஷ் டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததி களுக்கு விட்டு விட்டு சாகாதீர்கள். உணர்ச் சியும் அறிவும் அற்ற சோம்பேறிக்குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும்.
மற்றவனுக்கு அது சிறிதும்  பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள்?  கடவுளுக்கு இடம்  கொடுத்து கோவில் கட்டி  உருப்படிகளை அதிகமாக்கி நமது  குறைகளையும்  கஷ்டங்களையும் முறை யிட்டு முறையிட்டு அழுதுவந்தது போதும் என்றே  சொல்கிறேன். இனி அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நட வுங்கள்.
உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள்.
அதை மதியுங்கள். அதனிடம் நம்பிக்கை வையுங்கள். அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும். கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும் வளர்ச்சியும் மற்ற நாட்டு வர்த்த மானங்களும்   உங்கள் நடுநிலைமையுமே யாகும். ஆகையால் மற்ற நாட்டு வர்த்த மானங்களை உணர்ந்து நீங்கள் நடு நிலையில் இருந்து உங்கள்  அறிவுக்கு பூஜை போட்டீர்களே யானால் வந்து விட்டது.
அன்றே சமரசம், சன்மார்க்கம், விடுதலை இதில் எனக்குச் சிறிதும் சந் தேகமில்லை.  தவிர, பெண்கள் விஷயமாய் சில வார்த்தைகள் சொல்லவேண்டியி ருக்கிறது. அதைச் சற்று கவனமாய் கேட்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரனை கீழ் ஜாதிக்காரன் நடத்துவதைவிட பணக்காரன் ஏழையை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோச மானதாகும்.  அவர்கள் எல்லாம் இருவருக் கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின் றார்கள். ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமை யாயும்  நடத்துகின்றார்கள்.
அதுவும்  நமது நாட்டில் மிகவும்  மோசமாய் நடத்து கிறார்கள். அந்த  ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருகப் பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும் நாம்  எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து  அடிமைகளால் வளர்க் கப்பட்டோம் என்பதை  மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன். நான் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன்.
எத்தனை கிழவனானாலும் எனக்குப் பெண்டாட்டி வேண்டும். நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டு அனுப விப்பேன். ஆனால் பெண்ணாய் பிறந்த நீ ஒரு புருஷன் தான் கட்டிக்கொள்ள வேண்டும், அவன் செத்துப்போனாலும்  புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு.
ஆண் பெண்சேர்ந்து அனுபவிக் கும்  இன்பம்  என்பதாக ஒரு குணம்  உண்டு  என்பதை மறந்து விட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது, இதற்கு கடவுள், மதம், முன்ஜன்மப்பலன் சம்பந்தப் பட்டிருக்கின்றது. இது மிகவும் அநீதியும், அயோக்கியத்தனமுமான விஷயமாகும்.
இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக்கொள்ளலாம் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக்கொள்ள நினைப்பது  சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப்பட்டிருக் கின்றது.  ஆண்களைப்போலவே பெண்கள் செய்யத்தயாராக வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.  உடனே நிலைமை சரிபட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காது. சிலர் இப்படி சொல்வது தப்பு என்றும், ஒழுக்கம் கெட்டுப்போகும் என்றும், ஆண்களுக்கு எவ்வளவு வேண்டுமானா லும் புத்தி சொல்லுங்கள் என்றும் சொல்ல வருவார்கள். ஆண்களுக்குப் புத்தி அநேக காலமாக சொல்லியாய் விட்டது.
கலியாணம் செய்து கொள் ளுவதே அடிமைப்பிரவேசம் என்றாய் விட்டது.  ஒரு மனிதனாவது இவர்கள் சொல்கிறபடி யோக்கியனாக வில்லை.  ஆகவே அது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறு மார்க்கத்தை  கடைப்பிடிக்க வேண்டியதாய் விட்டது.  இது வரையில் ஆண்கள்  பெண்களை அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம்.
பலனேற்பட வில்லை  என்று கண்டு விட்டோம். இப்போது நாம் பெண்களிடம்  சென்று  இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்கின் றோம் இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லை. இதுபோல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல்கின்றோம். இஷ்டப்பட்டவர்கள் இந்த  முறையில் சேர்ந்து வாழட்டும்.
இஷ்டமில்லாதவர்கள் கலியாணத்தை ரத்து  செய்து  கொண்டு  தனித்தனியாக வாழட்டும் இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்? ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வரவேண்டும், பயப்படக்கூடாது.
பெண்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு வகைசெய்து கொள்ளவேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும் . முக்கியமாய், கண்ட படி  கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளக் கூடாது.
இதில் அதிக ஞாபகமிருக்க வேண்டும்  பிள்ளை பெறுவது  கடவுள் செயல் என்றும்,  அது பாக்கியத்தில் ஒன்றென்றும் கருதிக் கொண்டு, முட்டாள்தனமாய் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆசீர்வாதம் செய்யும்போது  16 பிள்ளைகள்  பிறக்க வேண்டுமென்று ஆசீர்வாதம் செய்கின் றார்கள். இது  அவர்கள் சொல்கின்ற படியே நடக்கும்  என்று பயந்து கொண்டு  நான் பேசவரவில்லை.
ஆனால் இப்படி ஆசிர்வாதம்  செய்வது எவ்வளவு  முட் டாள் தனமும் பொறுப்பற்ற  தன்மையும் என்று  சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இந்தக் காரியத்தில் எத்தனைக் கெத்தனை  ஜாக்கிரதையாயிருந்து கண்டபடி பிள்ளை பெறாமல் தப்பித்துக் கொள்கின்றீர்களோ அத்தனைக்கத் தனை கவலையும் தொல்லையும்  ஒழிந்து  சுதந்திரமும், விடுதலையும் அடைந்தவர்களாவீர்கள்.
எவனோ தெருவில் போகின்றவன் இப்படிச் சொல்வதால் ஒரு சமயம் எல்லோருமே  பிள்ளை பெறாமல் இருந்து விட்டால் உலகம் விருத்தியாவது எப்படி என்பான். இப்படிப்பட்டவன் சுத்த மூடன் என்று தான்  அர்த்தம். உலகம் விருத்தியாவதற் காக மனிதன்  பல குட்டிகள் போட்டு தொல்லைப்பட வேண்டுமா? நாய், பன்றி, கழுதை, குதிரை, கோழி, குருவி முதலிய மிருகம்,  பட்சி, ஊர்வன,  முதலிய ஜீவன்கள் போடும் குட்டிகளும், பொரிக்கும்  குஞ்சுகளும்,  பீச்சும் குஞ்சு களும் போதாதா என்று கேட்கிறேன்.
வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு காது கொடுக்காதீர்கள். ஒவ்வொன்றை யும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள்  அபிப்பிராயப்படி எதையும்  முடிவு செய்யுங்கள். முடிவுப்படி நடவுங்கள்.
(ஈரோடு தாலுகா பெருந்துறைக்கடுத்த கிரே நகரில் ஆதிதிராவிடர் கழக ஆண்டு விழாவில் பேசியது)
‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 8.02.1931
-விடுதலை,20.9.15

சித்திரகுப்தன் -வினா விடை (சமயக்கட்டுப்பாடு சாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?)



வினா: சமயக்கட்டுப்பாடு சாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?
விடை: மனிதனை தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவது தான் சாதி சமயக்கட்டுபாடாய் இருக்கின்றது.
வினா: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?
விடை: கடவுள் எங்கு மறைந்து போவாறோ, என்று பயந்து அவரைக்க காக்க பிரயத்தனம் செய்வது தான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.
வினா: இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?
விடை: இந்தியார் 100க்கு 90 பேர் கல்வி அறிவில்லாத எழுத்து வாசனைகூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான்.
வினா: ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?
விடை: தடி எடுத்தவன் தண்டக்காரனென்பதுதான் ஜனநாயக ஆட்சி.
வினா: இந்தியாவுக்கு ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடை: அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி விதவை களுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜன சங்கை பெருகும்.
வினா: இந்தியா சீர்பட என்ன வேண்டும்?
விடை: இந்தியா சீர்ப்பட்டு இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால் நாஸ்திகமும் நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.
வினா: இந்தியா அடிமையானதற்கு காரணம் என்ன?
விடை: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய் போனதற்குக் காரணம் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?

இங்கர்சாலுக்கும்
பாதிரியாருக்கும்

ஒருநாள் பாதிரியார் ஒரு வருக்கும் இங்கர்சாலுக்கும் நடைபெற்ற தர்க்கமாவது;-
பாதிரியார் ஞானஸ் நானம் பற்றி ஒரேயடியாகப் புகழ்ந்தார். அதற்கு இங்கர்சால் பதில் இறுத்ததாவது:
‘எனது ஞானஸ்நானம் சுத்தமாக குளிப்பதுதான்! அது தங்கள் ஞானஸ்நானத்தை விடச் சிறந்தது’ என்றார்.
-விடுதலை,11.9.15

சித்திரகுப்தன் -வினா விடை(ஒழுக்கம் என்பது என்ன?)


வினா: நாட்டுக்கோட்டையார் சமூகத்தில் உள்ள சுயமரியாதை என்ன?
விடை: பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலிகட்டுவது இல்லை என்பதாகும்.
வினா: தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு (லீவு) கொடுக்கப்படுகின்றது.
விடை: பாடுபட்டு சம்பாதித்து மீதி வைத்ததை பாழாக்குவதற்காக
வினா: பெண்களை படிக்கக்கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்துகிறார்கள்?
விடை: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதாற்காக
வினா: மனிதனுக்கு கவலையும் பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடை: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும்.
வினா: பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடை: தலை மயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்.
வினா: பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடை: அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்திழுத்துப் போடுவதே வேலையாகும்)
வினா: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடை: ஒருவனும் தன் தேவைக்குமேல் எடுத்துக் கொள்ளா விட்டால் எல்லோருக்கும் வேண்டியளவு கிடைத்துவிடும்.
வினா: பெரிய மூடன் யார்?
விடை: தனது புத்திக்கும் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.
வினா: ஒழுக்கம் என்பது என்ன?
விடை: ஒழுக்கம் என்பது தனக்கும், அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.
-விடுதலை,11.9.15

ஏழை - பணக்காரன்



உலக சரித்திரம் தோன்றிய காலத்தொட்டே பணக்காரன் ஏழை என்னும் வித்தியாசம் இருந்து கொண்டே வந்திருக்கிறது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். ஜாதி, மதம், சமூகம், தேசம் ஆகியவற்றின் பெயரால் கிளம்பிய எல்லா சீர்திருத்தக்காரும், மகாத்மாக்களும், தேசாபிமானிகளும், ஆச்சாரியார்களும்,
மவ்லானாக்களும் அவ்வப்போது என்னென்ன சீர்திருத்தங்கள் செய்தாலும், செய்து கொண்டிருந்தாலும், இவ்வித்தியாசம் மட்டும் ஒழிந்த பாடில்லை. ஆனால் அதற்கு மாறாக இவ்வித்தியாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதை இன்றைய உலகில் கண்கூடாக காண்கிறோம்.
2000 அல்லது 3000 வருஷத்துக்கு முன்பு சமூகம் என்ன நிலைமையிலிருந்ததோ, அதே நிலையில்தான் இன்னும் இருக்கிறது. கஷ்டப்பட்டு கூலி வேலை செய்தும், பட்டினி கிடந்து உடுக்க உடையின்றி, படுக்க பாயின்றி நாய்போல அலைந்து திரிந்து அகால மரணமடையும் ஏழைகள், புராண காலத்திலும் இருந்தனர்!
இப்போதும் கோடிக்கணக்காக உலகமெங்கும் இருக்கின்றனர். இங்ஙனம் மக்களில் ஒரு பெரிய பகுதியார் என்றும் ஏழைகளாகவே நூற்றுக்கணக்கான கொடுமைகளுக்கு ஆளாவானேன்? உடலமைப்பில் மனிதனுக்கு மனிதன் வேற்றுமை இல்லாதிருக்க,
அவர்கள் நுகரும் இன்பத்திலும்  வாழ்க்கை நலத்திலும் மாத்திரம் இவ்வித்தியாசம் காணப்படுவதேன்? ஒரு கண்ணில் வெண் ணெயும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்க கடவுளுக்கு புத்தியில்லையா?
காரணமின்றி ஒரு காரியமுமாகாது. உலகில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணம் இருப்பது போலவே, மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் இல்லாமலில்லை. நன்றாக யோசித்துப் பார்த்தால், ஒருவனுடைய மனதில் எழும் ஆசையே அவன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் என்பது யாவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஞ்ஞான முடிவு. மனிதனுக்கு இருக்கும் ஆகைகளோ ஒன்றிரண்டல்ல அளவற்றன.
மனிதனுடைய இந்த எண்ணற்ற ஆசைகளிலே,  இவ்வுலகில் கஷ்டதுக்கங்கள் இல்லாமல் தன் வாழ்க்கையை நடத்த வேண்டும் எனும் ஆசையே மிகவும் முக்கியமான ஆசையாகும். அப்படிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கையை நடத்த அவனுக்கு முக்கியமாக வேண்டியது பணம் ஏன்? பணம் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிய வீடு கிட்டுமா, சோறு கிட்டுமா?
உடை கிட்டுமா? ஆகவே ஒவ்வொரு மனிதனும் முதலில் தன் வாழ்க்கைக்குப்போதுமான பணம் பெற உழைகிறான். தன் வாழ்க்கைக்குப்போதுமான பணம் கிடைக்கப் பெறாவிடில் அவனுடைய வாழ்க்கை காட்டிலும் கொடுமையான அச்சமான வாழ்க்கை வேறொன்றுண்டா?
தன்னுடைய முக்கியமான முதல் ஆசை முற்றியவுடனே, அதாவது தன் வாழ்க்கைக்குப் போதுமான பணம் கிடைக்கப்பெற்ற உடனே மனிதன் தன்னுடைய மற்ற ஆசைளைப் பூர்த்தி செய்துகொள்ள விரும்புகிறான். இந்த ஆசைகளில் மிகவும் முக்கியமானது, சமூகம் தன்னைப்புகழ வேண்டும் சமூகத்தாரிடையே மரியாதை உயர்வு பெறவேண்டும் என்னும் ஆசையேயாகும்.
இது இயற்கை, இம்மரியாதையும், புகழும் தற்கால உலகில் பணமின்றி கிட்டுமா? ஏழை எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் அவனை மெச்சுவார் யார்? ஏழை எவ்வளவு படித்தவனாயிருந்தாலும் அவனுடைய சொல்லுக்கு மதிப்பெங்கே? ஆகையால் மனிதன் என்ன செய்கிறானென்றால், தன்வாழ்க்கைக்குப்போதுமான பணத்தோடு இன்னும் அபரிமிதமான செல்வத்தைத் திரட்ட ஆரம்பிக்கிறான்.
ஒருவன் தன் தேவைக்கு மீறியசெல்வத்தைத் திரட்டத்திரட்ட தன் தேவைக்கு மாத்திரம் செல்வம் உடைய பலரும் செல்வத்தை இழக்கின்றனர். ஒரு இடத்திலுள்ள சொத்துக்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் சமபங்கிருக்க அவர்களில் ஒருவருக்கு மாத்திரம் மற்றவர்களை காட்டிலும் எங்கிருந்து அதிகம் கிடைக்கும்?
ஆகவே ஒருவர் மற்ற எல்லாரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் பறித்தாலொழிய அந்த ஒருவருக்கு மற்ற எல்லாரைக்காட்டிலும் அதிகப்பணம் சேராதல்லவா? ஆகவே பணக்காரர் (வேண்டிய அளவுக்கு மேல் பணம் சேகரித்துள்ளவர்) சிலராகின்றனர், ஏழைகள் பலராகின்றனர்.
நிலைமை இப்படியிருப்பினும், நம்முடைய பணத்தைத்தான், நியாயமாக நமக்குச் சேரவேண்டிய பணத்தைத்தான், நம்மைப்போன்ற ஒரு சில பணக்கார்கள் அடைகிறார்கள். அவர்களிடம் இருக்கும் பணம் நம்முடையது தான்' என்னும் கொள்கையோ நினைப்போ ஏழைகளுக்குக் கிடையாது ஏன்? பணக்காரனானால்தான் கவுரவம், மரியாதை' என்னும் சித்தாந்தம் மனிதர் மனதில் வேரூன்றி விட்டது.
ஆகவே பணக்காரனிடமிருந்து தான் இழந்த பணத்தை மறுபடியும் திரும்பிப்பெற முயற்சிப்பதை விட்டு விட்டு, ஒவ்வொரு எழையும், பிற பணக்காரனைப்போல தானும் பணக்காரனாக முயற்சி செய்கிறான்! தான் எந்த பாணத்தால் சுடப்பட்டனோ அதே பாணத்தால் தன் போன்ற மற்ற ஏழைகளைச் சுடுகிறான்.
இங்ஙனம் ஏழைகளில் ஒரு சிலர் பரம்பரைப் பணக்கார்களுக்கு அடுத்தபடியில் தலை நிமிர்ந்து நிற்க  ஏழைகளில் பலர், குடியிருக்கிற இடத்தையும் பறிகொடுத்து வேலையையும் போக்கிக்கொண்டு குட்டிச்சுவராய் கஞ்சிக்கு லாட்டரி அடித்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் ஊர் ஊராக அலைந்து திரிய நேரிடுகின்றது. இவ்விதம் கொஞ்சம் அதிக பணமுடையவன், அச்செல்வத்தோடு இன்னும் அதிகமாகச் சேர்த்து பெரும்பணக்காரனாகிறான்.
அவனைப்போல தானும் பணக்காரனாக எண்ணங்கொண்ட ஒரு ஏழை, தன் போன்ற ஏழைகளை வருத்தி, அவர்கள் ரத்தத்தைப்பிழிந்து, தன்வாழ்க் கைக்குப்போதுமான அளவுக்கு மேல் கொஞ்சம் அதிகமாகப் பணம் சேர்த்து, பணக்காரனுக்கு அடுத்தபடியில் நடுத்தர வகுப்பான் எனப்பெயர்பெறுகிறான். இவ்விதம்தான் பணக் காரன், ஏழை, நடுத்தரமானவன் என மக்களுள் பாகுபாடுகள் உண்டாயின.
ஆகவே, பணத்தினால் தான் கவுரவத்தையும், புகழையும் அடையக்கூடும் என்னும் கொள்கை எது காலம் வரைக்கும் இருக்குமோ அது காலம் வரைக்கும் பணக்காரன் - ஏழை என்னும் வித்தியாசமும் இருந்தே தீரும் அந்த சித்தாக்கம் எப்பொழுது ஒழியுமோ, அப்பொழுதே இந்த வித்தியாசமும் ஒழிந்தது என்பது நிச்சயம்.
எப்பொழுது தனி உடமைக்கு (ஒரு தனி நபரிடத்தில் பணம்நிறைய இருப்பது) மதிப்பு இல்லையோ, அப்போது மனிதருக்குள் பண ஆசையே குறைகிறது. பண ஆசை இல்லையானால், பணம் ஒருவர் சொத்தல்லாமல் பலருடைய சொத்தாகிறது எப்போது சொத்து சமமாக எல்லோருக்கும் போய்ச்சேருகிறதோ, அப்பொழுது  கவுரவமும் மரியாதையும், நாம் சமூகத்துக்குச் செய்யும் தொண்டைப் பொறுத்து ஏற்படும்.
ஆகவே மக்கள் சமூக தொண்டு ஆற்றுவதில் போட்டிபோட்டுக்கொண்டு வேலை செய்வர். சமூகத்தொண்டு ஆற்றும் ஆசை மக்கள் மனதில் ஓங்கி வளரும்! இப்பொழுது பணம்சேகரிப்பதில் மக்கள் எவ்வளவு அறிவைக் செலுத்துகிறார்களோ, அதைக்காட்டிலும் பன்மடங்கு சமூகத் தொண்டு ஆற்றுவார் என்பது நிச்சயம்.
(குடிஅரசு, 1935)
_விடுதலை,9.10.15

புரோகிதன் ஓட்டம்


புரோகிதர்: பிள்ளைவாள் இன்று அர்த்தோதய புண்ணிய காலம். சிரார்த்தம் பண்ணுவதற்கு வெகு திவ்யமான தினம். உங்கள் தோப்பனார் இருந்தார், அவாளே நம்மைக் கூப்பிட்டிருப்பா, நீங்கள் மறந்தூட்டீர்கள் போலிருக்கு, ஆனாலும் பாரம்பரிய பாத்யதை விட்டுவிடக் கூடாதென்று நானே வந்துட்டேன். சிரார்த்தத்திற்கு தயாராகுங்கள்.
பிள்ளை: ஒய் சோம்பேறிக்கூட்டமே! போதும் நிறுத்துங்கள்! உங்கள் பித்தலாட்டமும், ஏமாற்றும் எல்லாம் என் தகப்பனாரோடு போகட்டும். இன்னுமா இந்த அயோக்கியத் தனம் ஜாக்கிரதை! இனி சிரார்த்தப் பேச்சு பேசிக்கொண்டு இங்கு நிற்க வேண்டாம். கொட்டாப்புளிபோல் இருக்கிறீரே! போம் வெளியே ஏதாவது ஒரு வேலை செய்து ஜீவியும்.
புரோகிதர்: என்ன பிள்ளைவாள்! தாங்களே இப்படிச் சொல்லலாமா? நான் தங்கள் குடும்பத்து பரம்பரை புரோகிதனல்லவா?
பிள்ளை: ஒய் வெளியே போகிறீரா? கழுத்தைப் பிடித்து தள்ளச் சொல்லட்டுமா?
புரோகிதர்: ராம ஆ ராமா ஆ சிரார்த்தம் பண்ணா விட்டால் மகா பாவம், வீணாக சுயமரியாதைக்காரனுங்க.... (இதற்குள் பிள்ளை நாயைப்பார்த்து “ச்சு” இஸ்கே! யென்று உசுப்பி விட்டார்)
புரோகிதர்: ஐயா! ஐயா! பிள்ளைவாள் தாங்கள் சிரார்த்தம் செய்யாவிட்டால் போகிறது. தயவு செய்து நாயைக் கூப்பிடுங்கள் (என்று சொல்லிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்)
-விடுதலை,9.10.15

நம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்


- தந்தை பெரியார்

தோழர்களே, நமக்கு நம் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர,  நம்மை யார் ஆள வேண்டும்,  ஆட்சி செலுத்த வேண்டும் என்பது முக்கிய மல்ல என்பது தான் சென்னையில், சென்ற 20-4-1969 இல் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கிய குறிக் கோளாகும்.
அந்நிய ஆட்சியானது எவ்வளவு நல்ல ஆட்சியாக இருந்தாலும், எவ் வளவு மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சியாக இருந்தாலும், இந்த ஆட்சியானது ஒழிக்கப்பட்டுத் தங்கள் ஆட்சியானது வரவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் ஆசையாகும்.
வெள்ளைக்காரன் இந்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, வெள்ளைக்காரன் ஆட்சியானது ஒழிக்கப்பட வேண்டும், சுய ஆட்சி வரவேண்டும் என்று (காங்கிரஸ் காரர்கள்) பார்ப்பனர்கள் முயன்ற போது, சத்தியமூர்த்தி அவர்களிடம் வெள்ளைக்காரர் ஆட்சியின் சிறப் பையும், சுய ஆட்சி ஏற்படுவதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்து விளக்கிச் சொன்னபோது, சத்திய மூர்த்தி அவர்கள் சுய ஆட்சியால் எவ்வளவு கேடு ஏற்படும் என்பது எனக்கும் தெரியும்; என்றாலும் சுய ஆட்சிதான் இந்நாட்டிற்கு வேண்டும் என்று சொன்னாரே ஒழிய, அதனால் இன்ன நன்மை என்று அவரால் சொல்ல முடியவில்லை.
பல ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக இருந்து வரும் தீண்டாமை, வெள்ளையன் ஆட்சி செய்த போதும் ஒழிக்கப்படவில்லை; ஜனநாயகம், சுதந்திரம் வந்து 22 ஆண்டு கால மாகியும் இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப்படவில்லை என்றால், இந்த ஆட்சியில் நாம் எதற்காகத் தீண்டப் படாத மக்களாக இருந்து கொண் டிருக்க வேண்டும்? அதற்கென்ன அவசியம் என்று சிந்திக்க வேண்டு கின்றேன்.
நம் ஜனநாயகம், சுதந்திர ஆட்சி யின் மூலம் இந்தத் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இப்போதிருக்கின்ற இந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலமும் ஒழிக்க முடியாது என்பதால், அயல்நாட்டுக்காரன் ஆட்சி வந்தா வது இந்த இழிவை, தீண்டாமையை ஒழிக்க முன்வர மாட்டானா? அவனா லாவது நம் மக்களின் இழிவு தீண் டாமை ஒழிக்கப்படமாட்டாதா? என் பதால் அயல்நாட்டுக்காரன் அந் நியன் ஆட்சி அது எவனுடையதாக இருந்தாலும், நம் இழிவைப் போக்க முன் வருகின்றவனை ஆதரிப்ப தோடு அவனை வரவேற்க வேண்டி யது நம் கடமை என்கின்றோம்.
அந்நியன் ஆட்சி என்றதும் நம் மக்களுக்கு ஏதோ வேண்டாத உணவைத் தின்பது போல் இருக் கிறது.  நம் மக்கள் மீன், ஆடு, கோழி,  பன்றி இவற்றின் மாமிசங்களை உணவாக உட்கொள்ளுகின்றனர். ஆனால், மாட்டு மாமிசத்தை உட் கொள்ள மறுக்கின்றனர். மற்ற கோழி, பன்றி, மீன் ஆகிய இவற்றைப் போன்று அசிங்கமானவற்றை மாடு உண்ணவில்லை. என்றாலும், மதம் காரணமாக, மதத்திற்கு விரோதம், சாஸ்திரத்திற்கு விரோதம் என்று மாட்டு மாமிசத்தை உட்கொள்ள மறுக்கின்றார்களோ, அதுபோல இழிவு ஒழிய வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொள்கிற மக்கள்- தேசபக்தி என்கின்ற காரணத்தால், அயல் நாட்டுக்காரன் ஆட்சி என்றதும் பயப் படுகின்றனர். இத்தனை காலமாக நமக்கிருந்த தேசபக்தியால், தேசாபிமானத்தால் நம் இழிவு நீக்கப்படவில்லை; தீண் டாமை ஒழிக்கப்படவில்லை என்னும் போது, இந்த தேசபக்தியாலும், தேசாபிமானத்தாலும் நாமடைந்த பயன் மானமற்றவனாக, இழிமகனாக இருப்பது தானா? என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.
இந்தத் தீண்டாமையானது அறவே ஒழிய வேண்டுமானால், நமக் கிருக்கிற இந்தக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்; மதம் ஒழிக்கப்பட வேண் டும்; சாஸ்திர, சம்பிரதாயங்கள் ஒழிக் கப்பட வேண்டும்; இதிகாச, புராண தருமங்கள் ஒழிக்கப்பட வேண்டும். இவை இருக்கிற வரையிலும்,  இந்த டில்லி ஆட்சி இருக்கிற வரையிலும் தற்போதிருக்கிற இந்த அரசமைப்புச் சட்டம் இருக்கிற வரையிலும், இந்தப் பார்ப்பான் இருக்கிற வரை, பார்ப் பானின் சித்திரம் இருக்கிறவரை இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப் படவே முடியாது.
இன்று இங்கு இருக்கின்ற இந்த ஆட்சி நம் நாட்டு ஆட்சி; நம் தமிழர் களின் ஆட்சி. என்றாலும், இந்த ஆட்சியால் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதோடு, தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று சட்டம் கூடச் செய்ய முடியாதே! அப்படிச் சட்டம் செய்வதற்கு இந்த மந்திரிகளுக்கு உரிமை இல்லையே? மீறிச் செய்தால் அரசமைப்புச் சட்டப்படி இந்த ஆட்சியை மாற்றக்கூடிய அதிகாரம் டில்லி யிடம் இருக்கிறதே! எனவே இந்த ஆட்சியால் இதனைச் செய்ய முடியாது.
இந்தச் சந்தர்ப்பத்தில் உங் களுக்கு ஒரு மகிழ்ச்சியான வெற்றிச் செய்தியைச் சொல்ல வேண்டும். சமீ பத்தில் நடைபெற்ற 73 நகரசபைத் தேர்தல்களில் 56 நகரசபைகளில் தி.மு. கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. மீதி 9 நகர சபைகள் அப்படியும், இப் படியுமாக இருக்கின்றன. பொது வாகப் பார்த்தால் காங்கிரஸ் மிகக் கீழ்நிலைக்கு,  இழிதன்மைக்குப் போய் விட்டது; அது மாற்றமடைய வேண்டும்.
எந்தக் கட்சி ஆட்சியில் இருக் கிறதோ, அந்தக் கட்சி நகர சபையில் வருவது தான் நல்லது; ரகளை இல் லாமல் காரியம் நடக்கும்; அப்படியில் லாமல் வேறு கட்சி நகர சபையில் வந்தால், ரகளைக்குதான் நேரம் இருக்குமே தவிர, காரியம் ஒன்றும் நடைபெறாது; எனவே நடக்க வேண் டிய முறைப்படிதான் நடந்திருக் கிறது.  என்றாலும், நம் மக்கள் ஊர் தோறும் பாராட்டுக் கூட்டம் போட்டு ஓட்டுப்போட்ட மக்களைப் பாராட்டு வதோடு, தி.மு.க., ஆட்சியைப் பாராட்ட வேண்டும்.
அத்தோடு இந்த ஆட்சியிடம் நாம் எதிர்பார்ப்பது, செய்யச் சொல்ல வேண்டியது, நம் மக்களுக்குரிய ஜாதி, மத விகிதாச்சாரப்படிப் பத விகள்,  உத்தியோகங்கள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தானாகும்; இவற்றை வலியுறுத்த வேண்டும்.
இந்த மந்திரி லஞ்சம் வாங்கினான்;  அந்த மந்திரி குடித்தான்;  அவன் பொம்பளையோடு போனான் என்ப தெல்லாம் சாதாரணமானது. ஜனநாய கத்தில் லஞ்சம் என்பது சாதாரணம்; இதுவரை இலஞ்சம் வாங்காமல் இருந்தவன் எவன்? பணமாக வாங்க வில்லை என்றால் ஓட்டாவது லஞ்சம் வாங்கித்தானே இருப்பான்? எனக்கு ஓட்டுப் போட்டால் இன்னது கொடுக்கின்றேன், இன்னது செய் கிறேன் என்று உத்தரவாதம் கொடுத் துத் தான் ஓட்டுப் பெற்றிருப்பான்.  பதவிக்கு வந்ததும் ஓட்டுப் போட்ட வன் தயவு வேண்டும் என்பதால், அவனுக்கு ஏதாவது வசதி செய்து கொடுத்திருப்பான். இது ஜனநாயகத் தில் சாதாரணமாக நடக்கக் கூடியதே யாகும். இதை ஒரு பெரிய குற்றமா கவோ, குறையாகவோ கருத வேண் டிய அவசியமில்லை. இந்த ஆட்சி யால் நன்மை என்ன என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
இந்த அரசாங்கம் மக்களுடைய ஆதரவு இருக்கிறது என்று மேலே பார்க்காமல், எந்த மக்களுடைய ஆதரவு அதிகமிருக்கிறதோ, அந்த மக்களுடைய உரிமையைக் கொடுக்க முன்வர வேண்டும்; எந்த மக்கள் அதிகமாக ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தார்களோ,  அவர்களு டைய பங்கு விகிதாச்சாரம் கொடுக்க முன்வர வேண்டும்; சிறுபான்மை யான சைவனும், பார்ப்பானும், கிறிஸ் தவனும் தனது விகிதாச்சாரத்திற்கு மேல் அனுபவிக்கவும், ஆதரவு கொடுக்கிற பெரும்பான்மையான மக்கள் தங்கள் விகிதாச்சாரத்திற்குப் பல மடங்கு குறைவாக அனுபவிக் கவுமான நிலையை மாற்ற வேண்டும். அவரவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்பப் பதவி, உத்தியோகங்கள், உரி மைகள் வழங்க முன்வரவேண்டும். இது தான் யோக்கியமான ஜனநாய கப் பண்பாகும்.
நம் நாட்டிலிருக்கிற போலீஸ் வேலை அத்தனையையும் சப்-இன்ஸ்பெக்டர் வரை, ஆதிதிராவிடர் களுக்கே கொடுக்க வேண்டும். மற்ற எவனையும் அதில் உள்ளே நுழைய விடக் கூடாது. அப்படிச் செய்தால் தீண்டாமை இழிவு தானே நீக்கப் படும். உயர் சாதிக்காரன் என்பவன் தானாகவே மரியாதை கொடுக்க ஆரம்பித்து விடுவான்.
அரசாங்கம் வெற்றி பெற்றதற்கு நீதி செலுத்த வேண்டுமானால் ஓட் டளித்த மக்களுக்கு நீதி காட்ட வேண்டும். காங்கிரஸ் ஏன் தொலைந் தது? ஏன் சாகிற மாதிரி இழுத்துக் கொண்டு கிடக்கிறது என்றால், அது பதவியில் இருக்கும்போது மிக ஆண வத்தோடு, பதவி- உத்தியோகங் களை எல்லாம் தனக்கு ஓட்டளித்த பெரும் பான்மையான மக்களுக்குக் கொடுக்காமல், சிறுபான்மையான பார்ப்பான், சைவன், கிறிஸ்தவன் என்று தேடிப்பார்த்துக் கொடுத்ததா லேயே ஆகும். அத்தோடு ஓட்டுப் போட்ட பெரும்பான்மையான மக் களை மதிக்காததாலேயே ஆகும்.
இந்த ஆட்சியும்  அதுபோல் நடந்து கொள்ள முன்வந்தால்,  அதன் கதிதான் இதற்கும் ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டுமென்று கேட்டுக் கொள் கின்றேன்.
மற்றொரு  மகிழ்ச்சிக்குரிய சேதி என்ன வென்றால், நம் இன்றைய ஆட்சியானது சென்னை அய்க் கோர்ட்டுக்கு இப்போது ஒரு தமிழரை சீஃப் ஜட்ஜாக- பிரதம  நீதிபதியாகப் போட்டிருக்கின்றது. இது பாராட்டக் கூடியதாகும். அவர் எப்போதோ வந்திருக்க வேண்டியவர்; முன்னி ருந்த ஆட்சியினால் இவர் வேண்டு மென்றே புறக்கணிக்கப்பட்டவர் ஆவார். தமிழ்நாட்டில் அய்க்கோர்ட் ஏற்பட்டு 107 வருடங்கள் ஆகின்றன. அதற்கு இப்போதுதான் ஒரு தமிழர் சீஃப் ஜஸ்டிஸ் ஆக வரமுடிந்தது! இதுவரை இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். இல்லாவிட்டால் மலையாளி,  கிறிஸ்தவர், முஸ்லிம் , கன்னடக் காரர்,  ஆந்திராக்காரர் என்று இருந்தார்களே ஒழிய, தமிழர் எவரும் சீஃப் ஜஸ்டிஸாக இருந்தது கிடையாது.  நம் நாட்டிற்கு ஒரு தமிழர்-  தமிழ் நாட்டினர் அய்க் கோர்ட் தலைமை நீதிபதியானது பாராட்டுக்கு உரியதாகும்.
நம் கோர்ட்டுகளின் நீதி நிலை மிகமிக மானக்கேடானதும், கொடு மையானதுமாகும். ஒரு கேஸ் முடிய 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. என்னுடைய கேஸே 4, 5, ஏழுட்டு வருஷங்களாக முடிவு பெறாமல் நடந்து கொண்டிருக்கிறது என்றால், மற்றச் சாதாரண ஏழை, எளிய,  பாமர மக்களுடைய நிலை எப்படி இருக் கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் நீதி கெட்டதற்கும், புரட்டு, பித்தாலட்டம் அதிகமான தற்கும் மக்களிடையே நாணயம், ஒழுக்கம் கெட்டதற்கும் காரணம் இந்தக் கோர்ட்டுகளே ஆகும்.
நம் கோர்ட்டுகள் குச்சுக்காரி வீடுகளை விட,  சூதாடும் இடங்களை விட மகாமோசமானவை ஆகும். இந்தக் கோர்ட்டு களில் யோக்கிய னுக்கு நீதிக்கு இடமில்லை; அவை அயோக்கியர்களுக்கே வெறும் புகலிடமாகி விட்டன.
மற்றும் இந்த நாடு 4 கோடி மக்களைக் கொண்ட, தென்மேற்கில் சுமார் 500 மைல் நீளமுள்ள நாடாகும். இப்படிப்பட்ட இந்த நாட்டிற்கு ஒரே இடத்தில் ஒரே அய்க்கோர்ட் இருப் பது, மக்களுக்குப் பெரிய அசவுகரிய மாகும்; குறைந்தது இரண்டு அய்க் கோர்ட்டுகளாவது வைக்கவேண்டும். அதாவது மற்றொரு அய்க்கோர்ட் மதுரையிலாவது, திருச்சியிலாவது, கோவையிலாவது வைக்க வேண் டும்; ஒரே ஒரு அய்க்கோர்ட் சென்னையில் மட்டும் இருப்பதால், கன்னியாகுமரியிலே இருக்கிறவன் நீதிபெற வேண்டுமானால், 450 மைல் கடந்து போக்குவரத்துக்கு 75 ரூபாய் செலவு, செய்து 2 நாள்,  4 நாள் மெனக்கெட்டுக் கொண்டு வரவேண் டியிருக்கிறது. இது ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 5, 6 தடவை யாகும். இது ஏழை, எளிய, பாமர மக்களால் எப்படி இவ்வளவு தூரம் செலவு செய்து கொண்டு வர முடியும்?
வக்கீல்கள் இடித் தொல்லை,  பீசு தொல்லை, குமாஸ்தாக்கள்- அபிட விட்கள் தொல்லை வேறு; பணக்கார னுக்குக் கவலையில்லை அவனால் எவ்வளவு தூரமானாலும், செலவா னாலும் முடியும். ஏழைகளால் எப்படி முடியும்?
நமக்கு இன்னொரு கேடு என்ன வென்றால், சுப்ரீம்கோர்ட் டில்லியில் இருப்பதாகும். 2000 மைல்களுக்கு அப்பால் சென்று நீதிபெற வேண்டு மானால், அது பணக்காரன் ஒரு வனால் தான் முடியும். அதுவும் பெரிதும் அயோக்கியர்களுக்குத் தான் வசதி அளிப்பதாகும். ஏழை களால் முடியாது. எனவே பணக் காரனுக்கும், அயோக்கியனுக்கும் அனுகூலமானதாகத் தான் இருக் கிறதே ஒழிய, ஏழை, எளிய, பாமர மக்களுக்கு நீதி கிடைக்க வழி யில்லை. இதை உணர்ந்து இந்த அய்க்கோர்ட் தலைமை நீதிபதி ஏதாவது செய்வார் என்று நினைக் கின்றேன்.
இன்னொரு காரியம் என்ன செய்ய வேண்டும் என்றால், செய் வார்களோ- செய்யமாட்டார்களோ, ஆனால் செய்ய வேண்டியது அவ சியமாகும் என்பது எனது கருத்து. அதாவது ஒரு ஊருக்கு ஒரு கோர்ட் தான் இருக்க வேண்டும்.  ஒரு கோர்ட்டுக்கு மேல் ஒரு ஊரில் இருக்கக்கூடாது. எதற்காக ஒரே ஊரில் 2, 3 சப்-கோர்ட்டுகள், 2, 3 முனுசீஃப் கோர்ட்டுகள்,  அடிஷனல் கோர்ட்டுகள், சப்-கோர்ட்டுகள் என்று ஒரே ஊரில் பல கோர்ட்டுகள் இருக்க வேண்டும்? வெளியூரில் இருப்பவன் இதற்காகச் செலவு செய்து கொண்டும் மற்ற ஊருக்கு வரவேண்டும்? இவை அந்தந்த தாலூக்காக்களில் மத்திய இடங்களில் கோர்ட்டு இருந்தால், குறைந்த செலவில், எளிதான போக்குவரத்தில் நீதி கிடைக்கும். ஏழை, எளிய, பாமர மக்களுக்கும் வசதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பதால் பணக்காரன் செலவு செய்து கொண்டு வந்து விடுகின்றான்; ஏழையால் அவ்வளவு செலவு செய்து கொண்டு வரமுடியாமல் போவதோடு, அவர் களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. மற்றும் ஒரு கேடு  என்னவென்றால் வெளி ஊர்களில் இருக்கும் வக்கீல் களுக்குப் பீசு கொடுப்பதோடு, அப்பீல் கோர்ட்டில் உள்ள வக்கீல் களுக்கும் பீசு கொடுக்க வேண்டியி ருக்கிறது. வெளியூர் வக்கீலுக்கு, கிடைக்க வேண்டிய பீசு, அப்பீல் கோர்ட்டு உள்ள ஊர் வக்கீல்கள் அடைகிறார்கள். இது மொபசல் வக் கீல்களுக்கு அநியாய நட்டமாகும்.
உடனுக்குடன் வழக்கு முடிவ டையாததற்கும் இது ஒரு காரண மாகும். வக்கீல்களின் சூழ்ச்சி தான் வெளி இடங்களில் கோர்ட்டுகள் ஏற்படாததற்குக் காரணமாகும்.
குறைந்தது மூன்று மாதத்திற்குள் கேசு பைசல் செய்யப்பட வேண்டு மென்று சட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்றப்படி விசாரணை முறை அமைக்கப்பட வேண்டும். அப்படி இல்லாததால் ஒருவன் கேஸ் போட் டால், அதை எடுக்க 2 மாதமாகிறது. பிறகு ஸ்டேட்மென்ட் இஷூ கொடுக்க 3 மாதம்; அதில் வாய்தா வேறு; இப்படி இழுத்துக் கொண்டே போவதால், இந்த முறைகள் சில வக்கீல்கள் பிழைப்பதற்கு உதவியாக இருக்கிறதே ஒழிய,  நீதி கிடைக்க வழி இல்லாமல் போகிறது. நீதி கிடைக்க நாளாவதால் மக்களுக்குக் கோர்ட்டுகளின் மீது பயமில்லாமல் போய்விடுகிறது. நீதி சீக்கிரம் கிடைத்தால்,  மனிதனுக்குப் பயம் இருக்கும். நாளாவ தால் எந்தக் காரி யத்தையும் துணிந்து செய்துவிட்டு, கோர்ட்டுக்கு போ, ``கோர்ட்டில் போடு பார்த்துக் கொள்ளலாம் என் கின்றான். நீதி கிடைக்க நாளாவதால் மக்களிடையே ஒழுக்கம், நாணயம், நேர்மை என்பது இல்லாமல் போய் விடுகிறது. எந்த ஒழுக்கக்கேடான, நாணயக் கேடான, நேர்மைக் கேடான காரியத்தையும் செய்ய மனிதன் பயப்படுவது கிடையாது. இதையெல்லாம் இப்போது வந்திருக் கிற புதிய ஜட்ஜ்- பார்ப்பனரல்லாத தமிழ் ஜட்ஜ் கவனிப்பார் என்று கருதுகின்றேன்.
1.5.1969  அன்று சென்னை - திருவல்லிக்கேணியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
-விடுதலை,11.10.15