ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஏழை - பணக்காரன்



உலக சரித்திரம் தோன்றிய காலத்தொட்டே பணக்காரன் ஏழை என்னும் வித்தியாசம் இருந்து கொண்டே வந்திருக்கிறது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். ஜாதி, மதம், சமூகம், தேசம் ஆகியவற்றின் பெயரால் கிளம்பிய எல்லா சீர்திருத்தக்காரும், மகாத்மாக்களும், தேசாபிமானிகளும், ஆச்சாரியார்களும்,
மவ்லானாக்களும் அவ்வப்போது என்னென்ன சீர்திருத்தங்கள் செய்தாலும், செய்து கொண்டிருந்தாலும், இவ்வித்தியாசம் மட்டும் ஒழிந்த பாடில்லை. ஆனால் அதற்கு மாறாக இவ்வித்தியாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதை இன்றைய உலகில் கண்கூடாக காண்கிறோம்.
2000 அல்லது 3000 வருஷத்துக்கு முன்பு சமூகம் என்ன நிலைமையிலிருந்ததோ, அதே நிலையில்தான் இன்னும் இருக்கிறது. கஷ்டப்பட்டு கூலி வேலை செய்தும், பட்டினி கிடந்து உடுக்க உடையின்றி, படுக்க பாயின்றி நாய்போல அலைந்து திரிந்து அகால மரணமடையும் ஏழைகள், புராண காலத்திலும் இருந்தனர்!
இப்போதும் கோடிக்கணக்காக உலகமெங்கும் இருக்கின்றனர். இங்ஙனம் மக்களில் ஒரு பெரிய பகுதியார் என்றும் ஏழைகளாகவே நூற்றுக்கணக்கான கொடுமைகளுக்கு ஆளாவானேன்? உடலமைப்பில் மனிதனுக்கு மனிதன் வேற்றுமை இல்லாதிருக்க,
அவர்கள் நுகரும் இன்பத்திலும்  வாழ்க்கை நலத்திலும் மாத்திரம் இவ்வித்தியாசம் காணப்படுவதேன்? ஒரு கண்ணில் வெண் ணெயும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்க கடவுளுக்கு புத்தியில்லையா?
காரணமின்றி ஒரு காரியமுமாகாது. உலகில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணம் இருப்பது போலவே, மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் இல்லாமலில்லை. நன்றாக யோசித்துப் பார்த்தால், ஒருவனுடைய மனதில் எழும் ஆசையே அவன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் என்பது யாவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஞ்ஞான முடிவு. மனிதனுக்கு இருக்கும் ஆகைகளோ ஒன்றிரண்டல்ல அளவற்றன.
மனிதனுடைய இந்த எண்ணற்ற ஆசைகளிலே,  இவ்வுலகில் கஷ்டதுக்கங்கள் இல்லாமல் தன் வாழ்க்கையை நடத்த வேண்டும் எனும் ஆசையே மிகவும் முக்கியமான ஆசையாகும். அப்படிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கையை நடத்த அவனுக்கு முக்கியமாக வேண்டியது பணம் ஏன்? பணம் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிய வீடு கிட்டுமா, சோறு கிட்டுமா?
உடை கிட்டுமா? ஆகவே ஒவ்வொரு மனிதனும் முதலில் தன் வாழ்க்கைக்குப்போதுமான பணம் பெற உழைகிறான். தன் வாழ்க்கைக்குப்போதுமான பணம் கிடைக்கப் பெறாவிடில் அவனுடைய வாழ்க்கை காட்டிலும் கொடுமையான அச்சமான வாழ்க்கை வேறொன்றுண்டா?
தன்னுடைய முக்கியமான முதல் ஆசை முற்றியவுடனே, அதாவது தன் வாழ்க்கைக்குப் போதுமான பணம் கிடைக்கப்பெற்ற உடனே மனிதன் தன்னுடைய மற்ற ஆசைளைப் பூர்த்தி செய்துகொள்ள விரும்புகிறான். இந்த ஆசைகளில் மிகவும் முக்கியமானது, சமூகம் தன்னைப்புகழ வேண்டும் சமூகத்தாரிடையே மரியாதை உயர்வு பெறவேண்டும் என்னும் ஆசையேயாகும்.
இது இயற்கை, இம்மரியாதையும், புகழும் தற்கால உலகில் பணமின்றி கிட்டுமா? ஏழை எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் அவனை மெச்சுவார் யார்? ஏழை எவ்வளவு படித்தவனாயிருந்தாலும் அவனுடைய சொல்லுக்கு மதிப்பெங்கே? ஆகையால் மனிதன் என்ன செய்கிறானென்றால், தன்வாழ்க்கைக்குப்போதுமான பணத்தோடு இன்னும் அபரிமிதமான செல்வத்தைத் திரட்ட ஆரம்பிக்கிறான்.
ஒருவன் தன் தேவைக்கு மீறியசெல்வத்தைத் திரட்டத்திரட்ட தன் தேவைக்கு மாத்திரம் செல்வம் உடைய பலரும் செல்வத்தை இழக்கின்றனர். ஒரு இடத்திலுள்ள சொத்துக்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் சமபங்கிருக்க அவர்களில் ஒருவருக்கு மாத்திரம் மற்றவர்களை காட்டிலும் எங்கிருந்து அதிகம் கிடைக்கும்?
ஆகவே ஒருவர் மற்ற எல்லாரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் பறித்தாலொழிய அந்த ஒருவருக்கு மற்ற எல்லாரைக்காட்டிலும் அதிகப்பணம் சேராதல்லவா? ஆகவே பணக்காரர் (வேண்டிய அளவுக்கு மேல் பணம் சேகரித்துள்ளவர்) சிலராகின்றனர், ஏழைகள் பலராகின்றனர்.
நிலைமை இப்படியிருப்பினும், நம்முடைய பணத்தைத்தான், நியாயமாக நமக்குச் சேரவேண்டிய பணத்தைத்தான், நம்மைப்போன்ற ஒரு சில பணக்கார்கள் அடைகிறார்கள். அவர்களிடம் இருக்கும் பணம் நம்முடையது தான்' என்னும் கொள்கையோ நினைப்போ ஏழைகளுக்குக் கிடையாது ஏன்? பணக்காரனானால்தான் கவுரவம், மரியாதை' என்னும் சித்தாந்தம் மனிதர் மனதில் வேரூன்றி விட்டது.
ஆகவே பணக்காரனிடமிருந்து தான் இழந்த பணத்தை மறுபடியும் திரும்பிப்பெற முயற்சிப்பதை விட்டு விட்டு, ஒவ்வொரு எழையும், பிற பணக்காரனைப்போல தானும் பணக்காரனாக முயற்சி செய்கிறான்! தான் எந்த பாணத்தால் சுடப்பட்டனோ அதே பாணத்தால் தன் போன்ற மற்ற ஏழைகளைச் சுடுகிறான்.
இங்ஙனம் ஏழைகளில் ஒரு சிலர் பரம்பரைப் பணக்கார்களுக்கு அடுத்தபடியில் தலை நிமிர்ந்து நிற்க  ஏழைகளில் பலர், குடியிருக்கிற இடத்தையும் பறிகொடுத்து வேலையையும் போக்கிக்கொண்டு குட்டிச்சுவராய் கஞ்சிக்கு லாட்டரி அடித்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் ஊர் ஊராக அலைந்து திரிய நேரிடுகின்றது. இவ்விதம் கொஞ்சம் அதிக பணமுடையவன், அச்செல்வத்தோடு இன்னும் அதிகமாகச் சேர்த்து பெரும்பணக்காரனாகிறான்.
அவனைப்போல தானும் பணக்காரனாக எண்ணங்கொண்ட ஒரு ஏழை, தன் போன்ற ஏழைகளை வருத்தி, அவர்கள் ரத்தத்தைப்பிழிந்து, தன்வாழ்க் கைக்குப்போதுமான அளவுக்கு மேல் கொஞ்சம் அதிகமாகப் பணம் சேர்த்து, பணக்காரனுக்கு அடுத்தபடியில் நடுத்தர வகுப்பான் எனப்பெயர்பெறுகிறான். இவ்விதம்தான் பணக் காரன், ஏழை, நடுத்தரமானவன் என மக்களுள் பாகுபாடுகள் உண்டாயின.
ஆகவே, பணத்தினால் தான் கவுரவத்தையும், புகழையும் அடையக்கூடும் என்னும் கொள்கை எது காலம் வரைக்கும் இருக்குமோ அது காலம் வரைக்கும் பணக்காரன் - ஏழை என்னும் வித்தியாசமும் இருந்தே தீரும் அந்த சித்தாக்கம் எப்பொழுது ஒழியுமோ, அப்பொழுதே இந்த வித்தியாசமும் ஒழிந்தது என்பது நிச்சயம்.
எப்பொழுது தனி உடமைக்கு (ஒரு தனி நபரிடத்தில் பணம்நிறைய இருப்பது) மதிப்பு இல்லையோ, அப்போது மனிதருக்குள் பண ஆசையே குறைகிறது. பண ஆசை இல்லையானால், பணம் ஒருவர் சொத்தல்லாமல் பலருடைய சொத்தாகிறது எப்போது சொத்து சமமாக எல்லோருக்கும் போய்ச்சேருகிறதோ, அப்பொழுது  கவுரவமும் மரியாதையும், நாம் சமூகத்துக்குச் செய்யும் தொண்டைப் பொறுத்து ஏற்படும்.
ஆகவே மக்கள் சமூக தொண்டு ஆற்றுவதில் போட்டிபோட்டுக்கொண்டு வேலை செய்வர். சமூகத்தொண்டு ஆற்றும் ஆசை மக்கள் மனதில் ஓங்கி வளரும்! இப்பொழுது பணம்சேகரிப்பதில் மக்கள் எவ்வளவு அறிவைக் செலுத்துகிறார்களோ, அதைக்காட்டிலும் பன்மடங்கு சமூகத் தொண்டு ஆற்றுவார் என்பது நிச்சயம்.
(குடிஅரசு, 1935)
_விடுதலை,9.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக