வெள்ளி, 11 அக்டோபர், 2019

ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? தெரிந்து கொள்வீரே!

''கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தி யாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்குப் பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம்- பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய் விட்டுப் போகிறேன்; நான் கடவுளை நம்பவில்லை, அதைக் கொழுக்கட்டை என்று சொல்லு கிறேன்; நான் போய்விட்டுப் போகிறேன்; உங்களுக்கொன்றும் நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?


"ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்னவாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனித னுக்குச் செய்கிற கெடுதிக்குப் பேர்தானே?

"ஒழுக்கமாக இல்லை என்றால் எங்கெங்கேயோ ஒழுக்கக்  கேடாக நடந்து தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; இது நாணயமாக இல்லையெனில் யாரையோ ஏமாற்றி வேதனையை உண் டாக்கி இருக்கின்றான்; உண்மையாக இல்லை என்றால் என்னத்தையோ எவ னையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்? "ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே  இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளி யாக இருந்தானானால் கண்டிப்பாக இன் னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக் கும். 'இது முக்கியமில்லை . பக்தி கடவுள் நம்பிக்கை மதக் கோட் பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கிய மென்றால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?

- தந்தை பெரியார்

(24-11-1964இல் பச்சையப்பன் கல்லூரிப் பேருரை )

- விடுதலை ஞாயிறு மலர், 14. 9 .19

பெரியாரின் பெரியார்



தம் நிலை விளக்கம்போலத் தந்தை பெரியார் அவர்கள் அவ்வப்போது வெளி யிட்டிருக்கும் கருத்துகள் அவர் தம் உள்ளத் தைக் காட்டும் பளிங்கு முகங்களாகத் திகழக் காண்கிறோம். அப்பளிங்கு முகங்களில் காணப்படும் அவர் தம் அகச் செவ்வியை நோக்குந்தோறும் அவர் தம் பண்பாடு அம்மவோ! எத்துணை விழுமியது என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

என் உடல் நிலையும் எனது முடி வை அவசரப்படுத்துகிறது. நான் (எனது உடல் நிலை) படுக்கையில் இருக்க வேண்டியவன். ஆனால் என்னால் படுக்கையில் இருக்க முடியவில்லை. ஏனெனில் படுத்துக் கொண்டே முடிவு பெற எனக்கு இஷ்டமில்லை - இஷ்டமே இல்லை. நடமாடிக்கொண்டு முடிவுபெற வேண்டுமென்றே முடிவு செய்து நடமாடுகிறேன்.

(விடுதலை தலையங்கம், 10.02.1968)

தமது 90ஆவது வயதில் பலவகையிலும் உடல் வேதனையால் துன்புற்ற நிலையில், அவர் வெளியிட்டிருக்கும் இக்கருத்துகள் அவர் உள்ளத்தில் ஒரு பகுதியை வெளிப்படுத்தக் காண்கிறோம். தாம் நடமாடாமல் படுத்த படுக்கையாக இருக்க வேண்டியவர் என்பதைத் தம் உடல் தமக்குணர்த்தக் காண்கிறார் பெரியார். ஆனால் தம்மால் படுக்கையிலிருக்க முடிய வில்லை என்கிறார். ஏன்? உடல் முழுதும் புண்ணா? படுத்தால் அப்புண் வலி தாங்க முடியவில்லையா? அவையெல்லாம் ஒன்றுமில்லை. படுக்கையில் இருக்க முடியாத நிலை அவர் உடலுக்கில்லை; அவர் உள்ளமே அந்நிலையில் இருக்கிறது. இறுதி மூச்சு உள்ள வரையில் தம் கடமையை ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உறுதி படைத்த பெரியாரின் வைரமனம் நோயாலும், முதுமையாலும் மெலிந்து, நலிந்து, நைந்த நிலையிலும் உடலைப் படுக்கவிடவில்லை என்பதுதானே அதன் பொருள். படுத்துக் கொண்டு முடிவு பெற இஷ்டமேயில்லை என்கிறாரே. நடமாடிக் கொண்டே முடிவுபெற வேண்டும் என்று நடமாடுவதாகக் கூறுகிறாரே. அதன் பொருள் என்னவென்று நினைக்கிறீர்கள்? கடமையைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். கடமையைச் செய்வதிலேயே தம்முடைய முடிவு ஏற்பட வேண்டும் என்பதுதானே? இப்போது அவர் உள்ளம் தெரிகின்றதல்லவா? அதன் உண்மை புரிகின்றதல்லவா? இத்தகைய பண்பட்ட உள்ளமுடையாரைக் கருதித்தான் வள்ளுவர் பண்புடையார் பட்டுண்டு உலகம் என்று கூறினார். ஆம்; மெய்தான்; பெரியார் என்னும் அப்பண்புடையார் தமிழ் உலகில் தோன்றியதனாலேதான் தமிழ் உலகம் இன்று இந்த அளவாவது வாழ்கின்றது.

முடியும்வரைக் கடமை செய்யவேண்டும் என்று கருதினாரே பெரியார். அக்கடமை என்னவென்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைத்தெரிந்து கொண்டால்தான் அப்பண்பாட்டின் மேன்மை துலங்கும்.

ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல், மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அத்தொண்டு செய்ய எனக்கு யோக் கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கை யையும், திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.

(உயர்ந்த எண்ணங்கள் இறுதிப் பக்கம்)



வேறு சில பெருமக்களைப்போல் அர சியல் போன்றவற்றில் தாம் ஆற்றவேண்டிய கடமைகளை இவர் சிறப்பாகக் கருதவில்லை. ஏனென்றால் நிலம் சமமாக இருந்தால்தான் அல்லது செம்மையாக இருந்தால்தான் அதில் பயிரிடுதல், வீடு கட்டுதல் போன்றவற்றைப் பற்றிப் பொறுப்பும் அறிவுமுள்ள ஒருவர் எண்ணவேண்டி வரும். அந்நிலம் மேடுபள்ளம் உடை யதாய்க் காடும் கரம்புமாய்ச் சேறும் சகதியுமாய்க் கல்லும் முள்ளும் நிறைந் ததாய் இருக்குமானால் அந்நிலத்தைச் செப்பனிட்டுப் பண்படுத்துவதுதான் அத்தகையோரது முதற்கடமையாகும். அதன் பிறகே அதில் பயிரிடுவதா? என்ன பயிரிடுவது? கட்டடம் கட்டுவதா? எத்தகைய கட்டடம் கட்டுவது? என்பன போன்றவற்றையெல்லாம் எண்ணுவது தகும். பெரியார் தம் பணிக்கு உரியதாக முதலில் எல்லைக் கோலிக்கொண்ட நிலம் தமிழ் சமுதாயமாகும். அது உலகில் உள்ள ஏனைய பல சமுதாயங்களைப் போல் பொதுவான சீர்மையும் அற்றதாய் இருப்பதோடு, ஜாதி, சமயம், சாத்திரம், சட்டம், அரசியல், பொருளியல், அறிவு போன்ற ஏராளமான துறைகளில் இழிவடைந்தும் இருக்கக் கண்டார். மேலும் அச்சமுதாய மக்கள் அவைகளை எல்லாம் இழிவென்று கரு தாததோடு, அவைகளையே தமக்கு ஏற்றனவென்றும், இயல்பாகத் தமக்குரியன வென்றும் கருதி இருந்ததோடு, அதிலிருந்து தாம் விடுபட வேண்டும், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் அற்றவர்களாய் இருக்கக் கண்டார். சேற்றிலே சுகம் காணும் எருமைகளைப்போல் இழிவில் சுவையும், ஏற்றமும் காணும் இச்சமுதாய மக்களை முன்னேற்றுவதற்கு முதலில் செய்யவேண்டியது அவர்களை அவ்விழிவினின்றும் கரையேற்றி உலகிலுள்ள ஏனைய சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டேயாகும். அத்தொண்டைச் செய்வதற்கு இதுவரை எந்தக் கடவுளோ, கடவுளின் அருள்பெற்றவர்களோ சமுதாய, சமய சீர்திருத்தவாதிகளோ, அரசியல் வாதிகளோ, மற்றவர்களோ யாரும் முன் வராததினால் தாமே அதனைத் தம்மேற் போட்டுக் கொண்டு அதில் முழுமூச்சாக ஈடுபட்டு அதிலேயே தம் வாழ்வின் இலட்சியத்தையும், அமைதியையும், இன்பத் தையும் கண்டு அதே பணியாக இருந்து வந்தார். ஆகவே பெரியார் அவர்கள் பிறர்க்கென வாழ்வதையே தம்மினிய வாழ்வாக அமைத்துக் கொண்டிருப்பதால் அத்தொண்டினைச் செய்யாத நாளெல்லாம், செய்ய நேராத நாளெல்லாம், செய்ய இயலாத நாளெல்லாம் தாம் வாழாத நாளாகவும், இன்பமும் அமைதியும் பெறாத நாளாகவும், துன்ப நாளாகவுமே இருக்கக் கண்டார். அதனாற்றான் இறுதிவரை மக்கள் பணி செய்துகொண்டே இருந்து மறைந்தார்.

பெரியாருக்குத் தொண்டு, மக்களுக் காகவே என்பதுதான் கருத்தே தவிர, தொண்டு புகழுக்காக, தொண்டு பாராட் டிற்காக, தொண்டு பட்டம் பதவிகளுக்காக, தொண்டு கடவுள் அருளுக்காக என்பன போன்ற வேறு எந்த நோக்கமும் இல்லாமல் அதில் அவர் ஈடுபட்டு இருந்தார். மக்க ளிடம் பெறும் புகழைக்கூட அவர் விரும்ப வில்லை. ஏனெனில் பக்குவமற்ற இழிந்த மக்களிடம் புகழை எதிர்பார்க்கும் யாரும் உண்மையான தொண்டாற்ற முடியாது என்பது பெரியாருக்குத் தெரியும். திராவிட மக்களுடைய இழிவு நீங்க வேண்டும் என்பது தவிர, அக்கவலை ஒன்று தவிரப் பெரியாருக்கு வேறு எக்கவலையும் இல்லையென்பதோடு வேறு தாம் அடைய வேண்டியதாக ஏதும் இருப்பதாகவும் அவர் நம்பவில்லை.

(இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து - என்ற நூலிலிருந்து)

இவ்வாறு தொண்டாற்றத் தொடங்கிய பெரியார் தம் குறிக்கோளையும் அதை அடையத் தாம் வகுத்துக் கொண்ட நோக்கம், முறை போன்றவற்றையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தியே வந்தி ருக்கிறார். தாம் பின்னால் மறைந்து நின்று கொண்டு வேறு சிலரைத் தூண்டி விட்டு எச்செயலையும் அவர் செய்ததில்லை செய்யச் சம்மதித்ததுமில்லை அதற்கு வேண்டிய சக்தி, வசதி போன்றவை தம்மிடமில்லையென்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். இயல்பிலேயே அவற்றிற்குத் தகுதியில்லாத பெரியார் அத் தகுதியற்ற நிலையிலேயே தம்மை வைத்துக் கொள் ளுவதில் இறுதிவரை விழிப்பாகவே இருந்திருக்கிறார். அதனாற்றான் பிறவித் தொண்டரான பெரியார் தம் மறைவு வரை யிலும் மன்பதைக்கு அன்பராய், மக்கள் ஊழியராய்த் திராவிடத் திருத்தொண்டராய் வாழ்ந்திருக்கிறார்.

(குடி அரசு 24.11.1940)

நூல்:- ஒப்பற்ற சிந்தனையாளர் பெரியார்

- விடுதலை ஞாயிறு மலர், 14 .9. 19

பெரியார், உலகத்திற்கு ஒரே மருந்து"



உலகத்திற்கே ஒரே மருந்து பெரியாரின் கருத்துகள்தான்! பெரியார் கூறுவது எல்லா மக்களுக்கும் பொருந் தும். ஒருவன் சுயமரியாதை யோடு தன்மானத்தோடு வாழ எந்தக் கருத்து எவ்வளவு உதவுகின்றதோ, அதைப் பொறுத்துத்தான் அந்த மதிப்பு இருக்க வேண்டும்.

நம்முடைய வேதம், இதிகாசம், புராணங்கள், குரான், பைபிள் முதலியவற்றை மூட்டைகட்டி மூலையில் வைத்துவிடுங்கள்! இவை எல்லாவற்றையும் விட உங்கள் சுய சிந்தனைப்படி நடவுங்கள், அதுதான் உங்களுக்கு வழிகாட்டும்! இந்த உலக மக்களுக்கு தந்தை பெரியார் கொடுக்கும் புத்திமதியானது - மதம், மொழி, இனம், நிறம் முதலிய, மனிதனைப் பிரித்து வைக்கும். இவற்றை உடைத்து எறிய வேண்டும் என்று உலகிற்கு அறிவித்து உள்ளார். உலக மக்களின் கஷ்டத்திற்கு ஒரே மருந்து பெரியார் அவர்களின் கருத்துப் பிரச்சாரம்தான்.

- ஆந்திர நாத்திக அறிஞர் கோரா,

'விடுதலை ', 15.11.1972

- விடுதலை ஞாயிறு மலர், 14. 9 .19

தந்தை பெரியார் பற்றி பாவாணர் கூறிய அரிய செய்தி!



பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்து மாற்றமன்று. செயற் கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிரா மணியத்தைப் போக்கு வதும் பகுத் தறிவைப் புகட்டு வதும் மூடப்பழக்க வழக்கங் களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தோடு வாழச் செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. விடு தலை, குடியரசு முதலிய கிழமையன்களின் எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத் தலைவர் போல் தம்மைக் காட்டிக் கொள்பவர் இளையரும் முளையருமாயிருந்த காலத்தே நான் பெரியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன். என்றைக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கும் தொடங்கப்பட்டதோ அன்றைக்கே எனக்குப் பெரியார் தொடர்பு தொடங்கிற்று. நான் தமிழ்நலம் பற்றி ஏதேனும் சொன்னால், 'அதெல்லாம் நீங்களே தமிழ்ப் பண்டிதர்களாகச் சேர்ந்து கொண்டு கிளர்ச்சி செய்யுங்கள். நான் உங்களைப் போலப் பண்டிதனல்லேன். படியாத (பாமர) மக்களிடம் சென்று அவர் களுடைய அறியாமையை எடுத்துக்காட்டி என்னாலியன்ற வரை சமுதாயத் தொண்டு செய்பவன்' என்பார். ஒரு முறை என் ஒப்பியன் மொழிநூல் பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார். அப்பொத்தகமும் 100 படிகள் என்னிடம் விலைக்கு வாங்கினார். சிலமுறை அவர் கூட்டத்திற்குத் தலைமைதாங்கியுமிருக்கிறேன்.

ஒருமுறை நான் காட்டுப்பாடியிலிருக்கும் போது எனக்கு வருவாய் இல்லையென்று தெரிந்து என் வீடு தேடி கொஞ்சம் பணம் கொடுக்கவந்து நான் ஊரில் இல்லாததால் அக்கம் பக்கத்திலுள்ளவரிடம் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பின்பு நான் திருச்சிராப்பள்ளி சென்றிருந்த போது நண்பருடன் சேர்ந்து பெரியாரைக் காணச் சென்றேன். அவர் என்னைத் தனியாய்த் தம் மாளிகைக்கு உள்ளே அழைத்து இருநூறு உருபா நன்கொடையாகத் தந்தார். அது ஒரு சிறு தொகையே யாயினும் பிறரிடத்தில் பெறும் ஈராயிரத்திற்குச் சமம் என்பது அவர் சிக்கனத்தை யறிந்த அனைவரும் உணர்வர்.

நான் பெரியாரை மதிப்பதெல்லாம், எவருக்கும் அஞ்சாமையும் எதையும் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கும் ஆற் றலும் பற்றியே. கோடிக்கணக்கான மக்களொடு கூடிக்கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவது போல் பேராயத்தார் ஆங்கிலராட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று. கும்பகோணமாயினும் குமரிக்கோட்டக் காசியாயினும், சற்றும் அஞ்சாது பிராமணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமை களைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும் ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும் அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவது மில்லை. பிரித்தானியத்தை யெதிர்த்ததிலும் பிராமணியத்தை யெதிர்த்ததே பேராண்மை.

கலப்புமணம், பகுத்தறிவுச் செயல், தன்மான வாழ்வு முதலிய உயிர்நாடிக் கொள்கைகளை  விட்டு விட்டு எழுத்து மாற்றம் ஒன்றையே மேற்கொள்வது பண்டத்தை விட்டு விட்டுப் படிவத்தைப் பற்றுவதேயாகும்.

தனித்தமிழை வெறுப்பவரும் உண்மை யான வரலாற்றை ஒப்புக் கொள்ளாதவரும் இந்தியைப் பொதுமொழியாக ஏற்பவருமான வையாபுரிகளுடன் கூடிக்கொள்வதும் தமிழுக்கு மாறான ஆரிய அமைப் பகங்களுடன் ஒத்து ழைப்பதும் மூலமும் படியும் என்பதை அசலும் நகலும் என்றெழுதுவதும் பகுத்தறிவுக் கொள் கையின் அல்லது தன்மான வாழ்வின்பாற் பட்டன வாகா.

பெரியாரின் நடத்தையைப் பின்பற்றாது பெரியார் விழாக் கொண்டாட்டத்தில் ஊர் தோறும் ஊர்வலத்திற் கலந்து கொள்வதும் விடிய விடிய சொற்பொழிவாற்றுவதும் பெரி யார் படிமைக்கு மாலையணி வதும் பெயர் விளம்பரத்திற்கே யன்றி வேறெதற்குப் பயனாம்?



இது காறும் தமிழ்நாட்டில் தமிழர்க்கு மூவேறு  வகையில் வழிகாட்ட மூவேறு பெரியார் தோன்றியுள்ளனர். அவருள் ஒருவர் ஈ.வே. இராமசாமிப் பெரியார். எழுத்து மாற்றத் தையே அவர் தொண்டாகக் காட்டுபவர் அவர் பெருமைக்கு இழுக்கே தேடுபவராவார். தம் சிறு கொள்கைக்கு வெற்றி பெறவே விழாவைப் பெருவியப்பாகக் கொண்டுள்ளனர்.

அறநூற் பெரியாரும் தனித்தமிழ்ப் பெரியாரும் தன்மானப் பெரியாரும் ஆகிய:-

முப்பெரும் பெரியார் அகவல்


தமிழகத் தீரே தமிழகத் தீரே


மொழிவர லாறு மொழிவது கேண்மின்


பிராமணி யம்மென்னும் பெருங்கேடு நஞ்சு


நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப்


பைந்தமிழ் திரவிடப் பழங்குடி மக்கள்


நைந்தமை தடுக்க நன்மருத்துவராய்


வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்


தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர்


நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்


நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்


அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்


அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே


விடுதலை பெறவழி வேறில்லை யென்றே


கடவுள் இலையெனுங் காரங் கலந்து


மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்


மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே


அடிமை யொழித்த வல்லதை எழுத்தின்


வடிவை யொழித்தல் பெரியார்க் கில்லை


குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து


பண்டம் விட்டுப் படிவம் பற்றித்


தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத்


தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து


பெரியார் பெயரைக் கெடுப்பார்


தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.


 

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.

செந்தமிழ்ச்செல்வி ஏப்பிரல் 1979

- விடுதலை ஞாயிறு மலர், 14.9.19

இங்கர்சாலைவிடப் பெரியாருக்குப் பெருமை!



நான் என்னுடைய நாட்டிலே - வீட்டிலே இன்று இருந்திருந்தால் இந்த நாளைக் குடும்பத்தோடு கொண்டாடியிருந்திருப் பேன். ஆனால் இன்றைக்கு உங்களிடையே வந்ததாலே என்னுடைய குடும்பத்தை மட்டுமல்ல; மிகப் பெரிய குடும்பத்தைப் பார்க்கின்ற ஒரு வாய்ப்பைப் பெற்றிருக் கிறேன். மக்கள் வெள்ளத்தையே ஒரு குடும்பமாகப் பார்க்கின்றேன். இங்கே என் உடன் பிறப்புகளைக் காண்கிறேன்.

கடந்த 25 ஆண்டுகளாக நான் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

மனித நேயம், மானுடம் என்று சொல்லக்கூடிய கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் 25 ஆண்டுகளாக உலகத்தைச் சுற்றிக் கொண்டி ருந்தால்கூட இதுபோல ஒரு பெரிய கூட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை." நான் காலையிலே ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அங்கே நான் தந்தை பெரியாரின் தொண்டர்களை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்பதைப் பற்றிக் கூறினேன்.

நான் பெரியாரைப் பற்றிய சில நூல்களைப் படித்திருக்கிறேன். செய்தித்தாள்களிலே சில செய்திகளைப் படித்திருக்கிறேன். தென்னிந்தியாவில் இருக்கக் கூடிய வர்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் பெரியாரின் கொள்கைகள் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தேன்.

நான் சென்னைக்கு வந்தபோது விமான நிலையத் திலிருந்து ஒரு டாக்சியிலே போய்க் கொண்டிருந்தேன். அப்படிப் போய்க் கொண்டிருந்தபோது, மிகப்பெரிய நெடுஞ்சாலைக்குப் பெரியார் பெயர் வைத்திருப்பதைப் பார்த்தேன். எனக்குள் வியப்பு. ஒரு பகுத்தறிவாளரின் பெயரை இவ்வளவு பெரிய சாலைக்கு வைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

உலகத்திலே நடக்காத ஒரு செயலை இங்கே கண்டேன்.


இங்கர்சால் அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளர், மிகப் பெரிய நாத்திகர். ஆனால் இங்கர்சாலுக்கு நியூயார்க் நகரிலே இங்கர்சால் பெயரிலே ஒரு குறுஞ்சாலைக்காவது பெயர் வைக்கமுடியுமா என்று எண்ணிப் பார்க்கிறேன். நடக்கமுடியாத ஒன்று.

(பன்னாட்டு மனித உரிமைக் கழகத் தலைவரும், நார்வே நாட்டைச்  சேர்ந்தவருமான லெவி ஃபிராகல், சென்னையில் நடைபெற்ற பெரியார்  பன்னாட்டமைப்பு  மாநாட்டில் (24.12.1996) உரையாற்றுகையில் குறிப்பிட்டது)

- லெவி ஃபிராகல்

தந்தை பெரியார்  119ஆம் ஆண்டு

பிறந்த நாள்  'விடுதலை' மலர்

-  விடுதலை ஞாயிறு, மலர் 14. 9 .19

கடந்த 1500 ஆண்டுகளில் எவருக்கும் கிடைக்காத மரியாதை பெரியாருக்கு கிடைத்தது



சமூக நீதியின் பால் அவருக்கு இருந்த மாறாத ஈடுபாடு, உண்மையின் பக்கம் உறுதியுடன் நிற்கும் அவரது மனவலிமை, அனைத்திற்கும் மேலாக இரங்கத்தக்க நிலையிலிருந்த கோடிக் கணக்கான தாழ்த்தப்பட்ட இந்திய மக்களின் நலனுக்காக அவர் ஆற்றிய பணி ஆகியவற்றிற்காகத் தமிழ் மக்களால் அன்புடனும் பாசத்துடனும் பெரியார் என்றழைக்கப் பட்டார். அவர் இறப்ப தற்குச் சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற மாநாட்டின்போது தனது ஆதரவாளர்களிடம் "மத நடவடிக்கை களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கும் அர சியல் சட்டப் பிரிவை மத்திய அரசு உடனடியாக நீக்காவிடில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி இருபத்தியாறாம் தேதி,  'செய் அல்லது செத்து மடி' என்ற போராட்டம் நடத்த வேண்டும் என்று அறிவித்தார். ஆனால் அத்திட்டத்தை நிறைவேற்ற அவர் உயிருடன் இருக்க வில்லை .

பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தவாதி. சிலை வழிபாட்டு எதிர்ப்பாளர். காங்கிரசின் முதல் எதிரி. திராவிட அரசியலில் எப்பொழுதும் பேசப்படுபவராக இருந்தார். அனைத்துப் பொது மக்களிடமும் நன் மதிப்புப் பெற்றிருந்தார். பல்வேறுபட்ட அரசியல் கருத்துடையவர்களும் அவரைப் பாராட்டினார்கள். குடியரசுத் தலைவர் கிரி கூறினார். மக்களை ஈர்க்கும் தலைவர், வாழ்நாள் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டவர். பிரதமர் இந்திராகாந்தி கூறினார், "சர்ச்சைகளுக்கு உள்ளானவர். ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு எதிராகப் போராடியவர்.

மிக உயர்ந்த மதிப்புடன் தொண்ணூற்று அய்ந்து வயது வரை வாழ்ந்த பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்தி நான்காம் தேதி இறந்தார். தமிழ்நாடு முழுவதும் இருள் சூழ்ந்தது. முழு அடைப்பு வெகு இயல்பாகத் தானே நடந்தது. மாநிலம் முழுவதும் துயரத்தில் மூழ்கியது. தலைவர் பிரிந்து போய்விட்டதை எண்ணி நூற்றுக்கணக்கானோர் மாளாத்துயரில், அழுது புரண்டனர். சென்னை நகருக்குக் கொண்டு வரப்பட்ட அவரது உடல் இராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் இறுதி மரியாதை செலுத்துவ தற்காக வைக்கப்பட்டது. மாநிலஅரசு இரண்டு  நாள்  துக்கம் கொண்டாடியது. அனைத்து அரசு அலுவலகங்களும் கல்வி நிலையங் களும் அடைக்கப் பட்டன. டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி காவல் துறை யினரின் முழு மரியா தையுடன் இறுதி ஊர் வலம் நடைபெற்றது. பெரியாருக்குக் கிடைத்ததைப் போன்ற உயர்ந்த மரியாதை இந்தியாவில், கடந்த 1500  ஆண்டுகளில் இந்து மத எதிர்ப்பாளராக வும் இறைமறுப்பாளராகவும் விளங்கிய வேறு எவருக்கும் கிடைத்ததே இல்லை.

பகுத்தறிவுச் சிந்தனையும் மதச்சார்பற்ற நடை முறையும் வளர்ச்சியடைவதற்காக அவர் ஆற்றிய பணியைப் போற்றும் விதமாக தமிழ்நாட்டின் பல நகரங்களில் அவரது முழு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அச்சிலைகளின் தளத்திலுள்ள கற்பலகைகளில் அவருடைய கருத்துகள் எழுதப்பட்டிருக்கின்றன. "கடவுள் இல்லை; இல்லவே இல்லை; கடவுளை 'கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டு மிராண்டி. சிலை திறப்பு விழாக் களில் தமிழ்நாடு அரசு அமைச்சர்களும் எண்ணற்ற அறிவுஜீவி களும் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் களிப்புடன் ஆரவாரித்தனர்.

தனது காலத்திற்குப் பின்னரும் மதத்திற்கெதிராகவும் சமூக அநீதிக்கெதிராகவும் இயக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காகப் பெரியார் அறக் கட்டளை ஒன்றை நிறுவினார்.

பிரேம்நாத் பசாஸ் எழுதிய "இந்திய வரலாற்றில் பகவத் கீதை", பக்கம் 887-888

- விடுதலை ஞாயிறு மலர், 14. 9. 19

அய்யாவின் அறிவு நிறை பேச்சாற்றல்



அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி மு.ந.நடராசன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் இரங்கல் உரை ஆற்றும்போது, தந்தை பெரியார் அவர்கள், வடஆர்க்காடு மாவட்டம் செய்யாறு அருகில் வாழ்குடை என்னும் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் அய்ந்தரை மணி நேரம் உரையாற்றினார் என்கிற தகவலைக் குறிப்பிட்டபோது, குழுமியிருந்த அனைவருமே வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள்.

நான் பேச்சாளரும் இல்லை; எழுத்தாளரும் இல்லை என்று அய்யா அவர்கள் அடக்கத் துடன் கூறிக்கொண்டாலும்கூட, அவரின் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அகிலத்தையே ஈர்த்து நின்றது. அடுக்குமொழி பேசாமல், கைதட்டலுக்காகப் பொழுதுபோக்கும் வெட்டிப் பேச்சு இல்லாமல், கொங்குதமிழில், கொச்சை மொழியில், பாமரனும் விளங்கிக் கொள்ளும் வகையில் தத்துவ விளக்கம் குற்றால அருவியாய்க் கொட்டும் அவரின் உரை கேட்க, மாறுபட்ட கொள்கை கொண்டவர்களும் தேனீக்களாகக் குவிந்து நின்றார்கள்.

கல்வீசி, கலகம் விளைவிக்க வந்தவர்கள், கழகத்தில் இணைத்துக் கொண்டார்கள்; இணைந்த தோழர்கள் இலட்சியம் காக்க வீறுகொண்ட வேங்கைகளாய் களமாடினார்கள்; இதனைக் கண்டு மிரண்டு போன ஆட்சியாளர்கள் 124-ஏ பிரிவு ராஜதுரோக தண்டனை தந்து அடக்குமுறை ஏவி விரட்டினார்கள்; எதிரிகள் கூட்டம் மிரண்டு நின்றார்கள் என்றால், பெரியாரின் பேச்சாற்றல்தான் இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம்!

நாத்திகர்! வகுப்புவாதி! பார்ப்பன துவேஷி! விதண்டாவாதி! வீண்கலகப் பிரியர் என தூற்றினர்; பிடி சாபம் என்றனர்; கொடு கல்லடி என்று கூவினர். பெரியார் பேச ஆரம்பித்த காலத்திலே, மதத்தைக் கெடுக்கிறார், நாட்டைக் கெடுக்கிறார் என்று கூவினர், அவர் மொழி கேட்டு.

ஓகோ, இவர்தாம் எல்லாம் அறிந்தவரோ? பிறர் பித்தரோ? என வாதம் புரிந்தனர், அவரின் புரட்சி கீதம் கேட்டு. ஜாதி, சமயம், ஆச்சாரம் போச்சு! சாஸ்திர புராண இதிகாசங்களின் மதிப்புக் கெடலாச்சே என ஓலமிட்டனர் வைதீகக் கூட்டத்தினர். புரட்சிக்காரராக இருக்கிறார் இந்த ஆசாமி! புதுமை பல பேசுகிறார்; பிடித்து அடையுங்கள் கூண்டில் என்றனர் சர்க்கார். அவர், தமது புரட்சிப் பிரச்சாரத்தை துவக்கியபோது, அவரை வீழ்த்தக் கிளம்பிய புயலின் வேகத்தை என்னென்பது! அதனைச் சமாளித்து சாயாது நின்று போரிட்ட அவரது அஞ்சாநெஞ்சை என்னென்பது! என்ற பேரறிஞர் அண்ணாவின் எழுத்தோவியம் பெரியாரின் சொற்பொழிவு நிகழ்த்திய அதிர்வலைகளை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

பெரியார் ஈ.வெ.ரா அரசியல் மேடை யேறிப் பேசத் தொடங்கிய அன்றே, அடிமை ஆட்சிக்கு அடிவயிற்றில் நோவு பிறந்தது- பாமரர்கள் ஆட்சிக்கான தனிக்கொடி வீறுடன் பறக்கத் தொடங்கியது. அக்கொடியைச் சுற்றி புதிய அறிஞர் படை திரண்டுள்ளது.

புத்தறிஞர் முடிசூடா மன்னராகிய குட்டி சாக்ரடீஸ் அண்ணாதுரை - தமிழகத் தளபதி - அதோ கொடியருகில் புன்முறுவலுடன் எங்கோ பார்த்துக்கொண்டு இருப்பவர்போல நின்று கொண்டிருக்கிறார். வெண்தாடிப் பெரியாரின் வீறுமிக்க சிங்க முழக்கத்தின் வேகத்திடையே அவர் சிறிது சர்க்கரை சேர்த்து நல்ல ஊட்ட மருந்தாக்கி அறிவுலகத்துக்கு தருகிறார். அதிலேயே கவிதைத் தேனைக் குழப்பி தின்பண்டங்களாக்கி விடுகிறார் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் என்று காணொளியாய் கழகத்தின் அமைப்பை - சிறப்பை பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் படம் பிடித்துக் காட்டுகிறாரே இவற்றுக்கும் அடித்தளம் அய்யாவின் உரைத்திறன்தானே!

விவாதத்தில் இவரை யாரும் வெல்ல முடியாது. அடுக்கடுக்காக கேள்விகளைப் போடுவார். சொற்களின் பொருள் விளக்க வேண்டுவார். எதிரிகள் கேள்வி கேட்டால், அவர்கள் சொற்களைக் கொண்டே மடக்கி விடுவார். எத்தகையவரும் இவரிடம் அகப் பட்டுக் கொண்டு திக்குமுக்காடுவார்கள். இவ்வாறு வாதமிடும் திறமை கிரீஸ் தேசத்து தத்துவஞானி சாக்ரடீசுக்கே இயற்கையில் அமைந்திருந்தது. நமது பெரியாருக்கும் இத்தன்மை இயற்கையில் அமைந்திருக்கிறது. இவரைத் தமிழ்நாட்டு சாக்ரடீஸ் என்று கூறலாம். இவர் சொற்கள் ஒவ்வொன்றையும் தங்கள் வாழ்க்கையை உயர்த்தும் செல்வங்கள் என்று தமிழ் மக்கள் கருதுகின்றனர் என்ற பெரியாரின் வரலாற்றை எழுதிய தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அவர் களின் கூற்று பெரியாரின் பேச்சுத் திறனுக்கு புகழ்மாலை சூடுகிறது அல்லவா?

தோழர் ஈ.வெ.ரா. பிரசங்கத்தில் ஓர் அழகு இருக்கிறதே, அதை கவனித்தீர்களா? பிரசங்க மேடையில் பேச எழுந்ததும், எதிரேயிருக்கும் கூட்டத்தை ஏறெடுத்துப் பார்ப்பார். சட்டைக்கு மேல் தோளிலிருந்து போர்த்தியிருக்கும் மேலங்கியைக் கைகளை விடுதலை செய்து மார்போடு சேர்த்துச் சுற்றிக்கொள்வார். அந்தச் சாயல், கழனிகளில் களையெடுக்கும் பெண்கள் உடையை ஒத்திருக்கும். பேச வாய் திறந்ததும், நாக்குத் தட்டுத் தடுமாறும். காணாமல் போட்ட வார்த்தைகளைத் தேடிப் பிடித்து பொறுக்குவதைப் போல, மா தங்காதவழி வேகத்தில் பேச எத்தனிப்பார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாக்கியக் கோவைகள் சேரும்.  இப்படியே கொஞ்ச நேரம், வார்த்தைச் சிப்பாய்களை பொறுக்கிச் சேர்த்து அணிவகுத்து நிறுத்தியதும், துருப்பு வெகுவேகத்தில் புறப்பட்டுவிடும். சொல்லவா வேண்டும்! அவரது பிரசங்க துருப்பு புறப்பட்டதும் அப்புறம் அவரது வாயினின்று கிளம்பும் துப்பாக்கி வெடி தானாக நின்றால்தான் நின்றபடி; யாரும் தடுத்து நிறுத்த முடியாது! இடையில் யாரேனும் கேள்வி கேட்டுத் தடுத்தாலோ எங்கிருந்துதான் யோசனை பிறக்குமோ தெரியவில்லை. எதிரி வெட்கித் தலைகுனியும்படி, இந்தா, சரிதானா, பார் என்று பதிலை விட்டெறிவார். வாக்கியங்களுக்கு முற்றுப்புள்ளி ரொம்ப தூரத்தில் இருக்கும். படித்தவனும் - பாம ரனும், ஏன்? பச்சைப் பிள்ளைகள்கூட, தோழர் ஈ.வெ.ரா அவர்களின் பேச்சை அப்படியே முழுசு முழுசாக விழுங்கி விடுவார்கள் என்ற நகரதூதன் ஆசிரியர் மணவை.திருமலைச்சாமி அவர்களின் கட்டுரை, அய்யாவின் பொதுக்கூட்டத்தில் நாம் கலந்துகொண்ட உணர்வையும் அவரின் தனிச்சிறப்பையும் நமக்கு ஏற்படுத்துகிறது அல்லவா?

1940ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் ஒரு நாளில், சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில், சுயமரியாதை இயக்கத் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம் தலைமையில் தந்தை பெரியார் சிறப்புரையாற்றும் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் பேச்சைத் தொடங்குகிறார்.

சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே! ஏன் சொல்கிறேன் என்றால் என்ன ஞாயம்? கேட்பாரில்லையா? என்பன போன்ற அய்யாவுக்கே உரிய சொற்றொடர்கள் அடிக்கொரு தரம் தோன்றி மறைகின்றன. சுயநலம் இல்லாத தன் பொதுநலப் பணி யை விளக்கிப் பேசிக் கொண்டே வந்தவர், நான் செத்தால் அழுகிறவர்களில்லை; நான் அழும்படி சாகிறவர்களும் இல்லை என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்கள் அவையோரைத் திடுக்கிடச் செய்தது. ஆனால் நடந்தது என்ன? சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சென்ற ஹனிபால் விமானம் விபத்தில் சிக்கி அந்த மாவீரன் 2.3.1940 அன்று மடிந்து போனான். மறுநாள் சென்னை பெத்துநாயக்கன்பேட்டை தமிழர் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டத்தில் பேச அய்யா எழுந்து நிற்கிறார். பேச எழுந்தவர் பதினைந்து நிமிடங்கள் பேசவே இல்லை. எதையோ சிரமப்பட்டு மீண்டும் மீண்டும் விழுங்குவதைப் போல அவர் நிலைகுலைந்தார். கடல்மடை திறந்தாற்போல கண்களில் நீர் பெருகிற்று. அவர் உதடுகள் துடித்தன. கைகால்கள் நடுங்கின. அவர் தேம்பித்தேம்பி அழுதார். அந்த அழுகை அவரோடு நின்றதா? இல்லையே! அங்கு குழுமியிருந்த அனைவரும் அழுதார்கள்.



நான் செத்தால் அழுகிறவர்களில்லை என்னும் சொல்லும்கூட பொய்த்துப் போனதை, தந்தை பெரியார் மறைந்தபோது நாடு கண்டுகொண்டது. அறிவுச் சுரங்கம் ஆழ்கடலில் மூழ்கிப் போனதே என அகிலம் முழுவதிலும் உள்ள மக்கள் கதறி அழுதார்கள்.

அய்யாவின் அந்த சொற்றொடருக்குக்கூட, வள்ளுவரின், யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்  அதனின் அதனின் இலன் என்னும் குறட்பாவை சான்றுகாட்டி, வ.ரா.தாமரைக்கண்ணியார் அப்போது விளக்கம் தெரிவித்தார்.   பிறப்பைப் போல இறப்பும் இயற்கையானது. நிலையாமையை ஏற்க மறுத்து அழுதுபுரள்வதால் தீர்வு கிட்டாது என்கிற தத்துவத்தை பாமரனுக்கும் விளங்கிட வைத்த பகுத்தறிவு விளக்கமாகவே பெரியாரின் உரைநடை திகழ்ந்தது.

கேரள மாநிலம் கோட்டையத்தில் பத்தாயிரம் பேர் திரண்டுவந்த கூட்டத்தில் தந்தை பெரியார் நிகழ்த்திய அறிவார்ந்த உரை, அந்த மாநில உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தன் அவர்களையும் ஈர்த்தது. பெரியார் சுயமரியாதை இயக்கத் தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை நான் கேட்டேன். சொற்பொழிவு எளிமையானதாகவும் நேரானதாகவும் இருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை உணர்வோடு வந்து விழுந்தது. மிக்க கவனத்துடன் மக்கள் அதனைக் கேட்டனர். எனது நாட்டில் சுயமரியாதை விதை முளைவிடவும், வளரவும் இவரின் பேச்சும் தொண்டுமே காரணமானது. இவர் துவக்கிய சுயமரியாதை இயக்கத்தை செல்வாக்குடையவர்கள் இங்கே பின்பற்றுகிறார்கள். கோடிக்கணக்கான மக் களுக்கு பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் தடை நீங்கவும், தாழ்ந்த நிலையில் இருந்து இந்தியாவை முன்னேற்றவும் இவர் நீண்ட காலம் உடல்நலத்துடனும் வன்மையுடனும் வாழ்வாராக என்று வாழ்த்தும் அளவுக்கு, பெரியாரின் உரைவீச்சு, அங்கே அமைந்திருந்தது.

தமிழகத்திலும், கேரளத்திலும் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்திலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான அண்டை நாடுகளிலும் அய்ரோப்பிய நாடு களிலும் பெரியாரின் உரை முழக்கம் ஓங்கி ஒலித்தது. அந்த எழுச்சிப் பேருரைகள் முழுவதும் திரா விடர் கழகத்தின் முயற்சியில் நூல் வடிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் நாம் வாசிப்போம்! அடிமை விலங்கொடிக்கும் அறிவாயுதமாய் அவற் றை அகிலம் முழுதும் பரப்பிடுவோம்!

- விடுதலை ஞாயிறு மலர், 14. 9 .19