தம் நிலை விளக்கம்போலத் தந்தை பெரியார் அவர்கள் அவ்வப்போது வெளி யிட்டிருக்கும் கருத்துகள் அவர் தம் உள்ளத் தைக் காட்டும் பளிங்கு முகங்களாகத் திகழக் காண்கிறோம். அப்பளிங்கு முகங்களில் காணப்படும் அவர் தம் அகச் செவ்வியை நோக்குந்தோறும் அவர் தம் பண்பாடு அம்மவோ! எத்துணை விழுமியது என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
என் உடல் நிலையும் எனது முடி வை அவசரப்படுத்துகிறது. நான் (எனது உடல் நிலை) படுக்கையில் இருக்க வேண்டியவன். ஆனால் என்னால் படுக்கையில் இருக்க முடியவில்லை. ஏனெனில் படுத்துக் கொண்டே முடிவு பெற எனக்கு இஷ்டமில்லை - இஷ்டமே இல்லை. நடமாடிக்கொண்டு முடிவுபெற வேண்டுமென்றே முடிவு செய்து நடமாடுகிறேன்.
(விடுதலை தலையங்கம், 10.02.1968)
தமது 90ஆவது வயதில் பலவகையிலும் உடல் வேதனையால் துன்புற்ற நிலையில், அவர் வெளியிட்டிருக்கும் இக்கருத்துகள் அவர் உள்ளத்தில் ஒரு பகுதியை வெளிப்படுத்தக் காண்கிறோம். தாம் நடமாடாமல் படுத்த படுக்கையாக இருக்க வேண்டியவர் என்பதைத் தம் உடல் தமக்குணர்த்தக் காண்கிறார் பெரியார். ஆனால் தம்மால் படுக்கையிலிருக்க முடிய வில்லை என்கிறார். ஏன்? உடல் முழுதும் புண்ணா? படுத்தால் அப்புண் வலி தாங்க முடியவில்லையா? அவையெல்லாம் ஒன்றுமில்லை. படுக்கையில் இருக்க முடியாத நிலை அவர் உடலுக்கில்லை; அவர் உள்ளமே அந்நிலையில் இருக்கிறது. இறுதி மூச்சு உள்ள வரையில் தம் கடமையை ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உறுதி படைத்த பெரியாரின் வைரமனம் நோயாலும், முதுமையாலும் மெலிந்து, நலிந்து, நைந்த நிலையிலும் உடலைப் படுக்கவிடவில்லை என்பதுதானே அதன் பொருள். படுத்துக் கொண்டு முடிவு பெற இஷ்டமேயில்லை என்கிறாரே. நடமாடிக் கொண்டே முடிவுபெற வேண்டும் என்று நடமாடுவதாகக் கூறுகிறாரே. அதன் பொருள் என்னவென்று நினைக்கிறீர்கள்? கடமையைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். கடமையைச் செய்வதிலேயே தம்முடைய முடிவு ஏற்பட வேண்டும் என்பதுதானே? இப்போது அவர் உள்ளம் தெரிகின்றதல்லவா? அதன் உண்மை புரிகின்றதல்லவா? இத்தகைய பண்பட்ட உள்ளமுடையாரைக் கருதித்தான் வள்ளுவர் பண்புடையார் பட்டுண்டு உலகம் என்று கூறினார். ஆம்; மெய்தான்; பெரியார் என்னும் அப்பண்புடையார் தமிழ் உலகில் தோன்றியதனாலேதான் தமிழ் உலகம் இன்று இந்த அளவாவது வாழ்கின்றது.
முடியும்வரைக் கடமை செய்யவேண்டும் என்று கருதினாரே பெரியார். அக்கடமை என்னவென்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைத்தெரிந்து கொண்டால்தான் அப்பண்பாட்டின் மேன்மை துலங்கும்.
ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல், மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.
அத்தொண்டு செய்ய எனக்கு யோக் கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கை யையும், திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.
(உயர்ந்த எண்ணங்கள் இறுதிப் பக்கம்)
வேறு சில பெருமக்களைப்போல் அர சியல் போன்றவற்றில் தாம் ஆற்றவேண்டிய கடமைகளை இவர் சிறப்பாகக் கருதவில்லை. ஏனென்றால் நிலம் சமமாக இருந்தால்தான் அல்லது செம்மையாக இருந்தால்தான் அதில் பயிரிடுதல், வீடு கட்டுதல் போன்றவற்றைப் பற்றிப் பொறுப்பும் அறிவுமுள்ள ஒருவர் எண்ணவேண்டி வரும். அந்நிலம் மேடுபள்ளம் உடை யதாய்க் காடும் கரம்புமாய்ச் சேறும் சகதியுமாய்க் கல்லும் முள்ளும் நிறைந் ததாய் இருக்குமானால் அந்நிலத்தைச் செப்பனிட்டுப் பண்படுத்துவதுதான் அத்தகையோரது முதற்கடமையாகும். அதன் பிறகே அதில் பயிரிடுவதா? என்ன பயிரிடுவது? கட்டடம் கட்டுவதா? எத்தகைய கட்டடம் கட்டுவது? என்பன போன்றவற்றையெல்லாம் எண்ணுவது தகும். பெரியார் தம் பணிக்கு உரியதாக முதலில் எல்லைக் கோலிக்கொண்ட நிலம் தமிழ் சமுதாயமாகும். அது உலகில் உள்ள ஏனைய பல சமுதாயங்களைப் போல் பொதுவான சீர்மையும் அற்றதாய் இருப்பதோடு, ஜாதி, சமயம், சாத்திரம், சட்டம், அரசியல், பொருளியல், அறிவு போன்ற ஏராளமான துறைகளில் இழிவடைந்தும் இருக்கக் கண்டார். மேலும் அச்சமுதாய மக்கள் அவைகளை எல்லாம் இழிவென்று கரு தாததோடு, அவைகளையே தமக்கு ஏற்றனவென்றும், இயல்பாகத் தமக்குரியன வென்றும் கருதி இருந்ததோடு, அதிலிருந்து தாம் விடுபட வேண்டும், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் அற்றவர்களாய் இருக்கக் கண்டார். சேற்றிலே சுகம் காணும் எருமைகளைப்போல் இழிவில் சுவையும், ஏற்றமும் காணும் இச்சமுதாய மக்களை முன்னேற்றுவதற்கு முதலில் செய்யவேண்டியது அவர்களை அவ்விழிவினின்றும் கரையேற்றி உலகிலுள்ள ஏனைய சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டேயாகும். அத்தொண்டைச் செய்வதற்கு இதுவரை எந்தக் கடவுளோ, கடவுளின் அருள்பெற்றவர்களோ சமுதாய, சமய சீர்திருத்தவாதிகளோ, அரசியல் வாதிகளோ, மற்றவர்களோ யாரும் முன் வராததினால் தாமே அதனைத் தம்மேற் போட்டுக் கொண்டு அதில் முழுமூச்சாக ஈடுபட்டு அதிலேயே தம் வாழ்வின் இலட்சியத்தையும், அமைதியையும், இன்பத் தையும் கண்டு அதே பணியாக இருந்து வந்தார். ஆகவே பெரியார் அவர்கள் பிறர்க்கென வாழ்வதையே தம்மினிய வாழ்வாக அமைத்துக் கொண்டிருப்பதால் அத்தொண்டினைச் செய்யாத நாளெல்லாம், செய்ய நேராத நாளெல்லாம், செய்ய இயலாத நாளெல்லாம் தாம் வாழாத நாளாகவும், இன்பமும் அமைதியும் பெறாத நாளாகவும், துன்ப நாளாகவுமே இருக்கக் கண்டார். அதனாற்றான் இறுதிவரை மக்கள் பணி செய்துகொண்டே இருந்து மறைந்தார்.
பெரியாருக்குத் தொண்டு, மக்களுக் காகவே என்பதுதான் கருத்தே தவிர, தொண்டு புகழுக்காக, தொண்டு பாராட் டிற்காக, தொண்டு பட்டம் பதவிகளுக்காக, தொண்டு கடவுள் அருளுக்காக என்பன போன்ற வேறு எந்த நோக்கமும் இல்லாமல் அதில் அவர் ஈடுபட்டு இருந்தார். மக்க ளிடம் பெறும் புகழைக்கூட அவர் விரும்ப வில்லை. ஏனெனில் பக்குவமற்ற இழிந்த மக்களிடம் புகழை எதிர்பார்க்கும் யாரும் உண்மையான தொண்டாற்ற முடியாது என்பது பெரியாருக்குத் தெரியும். திராவிட மக்களுடைய இழிவு நீங்க வேண்டும் என்பது தவிர, அக்கவலை ஒன்று தவிரப் பெரியாருக்கு வேறு எக்கவலையும் இல்லையென்பதோடு வேறு தாம் அடைய வேண்டியதாக ஏதும் இருப்பதாகவும் அவர் நம்பவில்லை.
(இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து - என்ற நூலிலிருந்து)
இவ்வாறு தொண்டாற்றத் தொடங்கிய பெரியார் தம் குறிக்கோளையும் அதை அடையத் தாம் வகுத்துக் கொண்ட நோக்கம், முறை போன்றவற்றையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தியே வந்தி ருக்கிறார். தாம் பின்னால் மறைந்து நின்று கொண்டு வேறு சிலரைத் தூண்டி விட்டு எச்செயலையும் அவர் செய்ததில்லை செய்யச் சம்மதித்ததுமில்லை அதற்கு வேண்டிய சக்தி, வசதி போன்றவை தம்மிடமில்லையென்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். இயல்பிலேயே அவற்றிற்குத் தகுதியில்லாத பெரியார் அத் தகுதியற்ற நிலையிலேயே தம்மை வைத்துக் கொள் ளுவதில் இறுதிவரை விழிப்பாகவே இருந்திருக்கிறார். அதனாற்றான் பிறவித் தொண்டரான பெரியார் தம் மறைவு வரை யிலும் மன்பதைக்கு அன்பராய், மக்கள் ஊழியராய்த் திராவிடத் திருத்தொண்டராய் வாழ்ந்திருக்கிறார்.
(குடி அரசு 24.11.1940)
நூல்:- ஒப்பற்ற சிந்தனையாளர் பெரியார்
- விடுதலை ஞாயிறு மலர், 14 .9. 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக