வெள்ளி, 11 அக்டோபர், 2019

அய்யாவின் அறிவு நிறை பேச்சாற்றல்



அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி மு.ந.நடராசன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் இரங்கல் உரை ஆற்றும்போது, தந்தை பெரியார் அவர்கள், வடஆர்க்காடு மாவட்டம் செய்யாறு அருகில் வாழ்குடை என்னும் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் அய்ந்தரை மணி நேரம் உரையாற்றினார் என்கிற தகவலைக் குறிப்பிட்டபோது, குழுமியிருந்த அனைவருமே வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள்.

நான் பேச்சாளரும் இல்லை; எழுத்தாளரும் இல்லை என்று அய்யா அவர்கள் அடக்கத் துடன் கூறிக்கொண்டாலும்கூட, அவரின் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அகிலத்தையே ஈர்த்து நின்றது. அடுக்குமொழி பேசாமல், கைதட்டலுக்காகப் பொழுதுபோக்கும் வெட்டிப் பேச்சு இல்லாமல், கொங்குதமிழில், கொச்சை மொழியில், பாமரனும் விளங்கிக் கொள்ளும் வகையில் தத்துவ விளக்கம் குற்றால அருவியாய்க் கொட்டும் அவரின் உரை கேட்க, மாறுபட்ட கொள்கை கொண்டவர்களும் தேனீக்களாகக் குவிந்து நின்றார்கள்.

கல்வீசி, கலகம் விளைவிக்க வந்தவர்கள், கழகத்தில் இணைத்துக் கொண்டார்கள்; இணைந்த தோழர்கள் இலட்சியம் காக்க வீறுகொண்ட வேங்கைகளாய் களமாடினார்கள்; இதனைக் கண்டு மிரண்டு போன ஆட்சியாளர்கள் 124-ஏ பிரிவு ராஜதுரோக தண்டனை தந்து அடக்குமுறை ஏவி விரட்டினார்கள்; எதிரிகள் கூட்டம் மிரண்டு நின்றார்கள் என்றால், பெரியாரின் பேச்சாற்றல்தான் இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம்!

நாத்திகர்! வகுப்புவாதி! பார்ப்பன துவேஷி! விதண்டாவாதி! வீண்கலகப் பிரியர் என தூற்றினர்; பிடி சாபம் என்றனர்; கொடு கல்லடி என்று கூவினர். பெரியார் பேச ஆரம்பித்த காலத்திலே, மதத்தைக் கெடுக்கிறார், நாட்டைக் கெடுக்கிறார் என்று கூவினர், அவர் மொழி கேட்டு.

ஓகோ, இவர்தாம் எல்லாம் அறிந்தவரோ? பிறர் பித்தரோ? என வாதம் புரிந்தனர், அவரின் புரட்சி கீதம் கேட்டு. ஜாதி, சமயம், ஆச்சாரம் போச்சு! சாஸ்திர புராண இதிகாசங்களின் மதிப்புக் கெடலாச்சே என ஓலமிட்டனர் வைதீகக் கூட்டத்தினர். புரட்சிக்காரராக இருக்கிறார் இந்த ஆசாமி! புதுமை பல பேசுகிறார்; பிடித்து அடையுங்கள் கூண்டில் என்றனர் சர்க்கார். அவர், தமது புரட்சிப் பிரச்சாரத்தை துவக்கியபோது, அவரை வீழ்த்தக் கிளம்பிய புயலின் வேகத்தை என்னென்பது! அதனைச் சமாளித்து சாயாது நின்று போரிட்ட அவரது அஞ்சாநெஞ்சை என்னென்பது! என்ற பேரறிஞர் அண்ணாவின் எழுத்தோவியம் பெரியாரின் சொற்பொழிவு நிகழ்த்திய அதிர்வலைகளை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

பெரியார் ஈ.வெ.ரா அரசியல் மேடை யேறிப் பேசத் தொடங்கிய அன்றே, அடிமை ஆட்சிக்கு அடிவயிற்றில் நோவு பிறந்தது- பாமரர்கள் ஆட்சிக்கான தனிக்கொடி வீறுடன் பறக்கத் தொடங்கியது. அக்கொடியைச் சுற்றி புதிய அறிஞர் படை திரண்டுள்ளது.

புத்தறிஞர் முடிசூடா மன்னராகிய குட்டி சாக்ரடீஸ் அண்ணாதுரை - தமிழகத் தளபதி - அதோ கொடியருகில் புன்முறுவலுடன் எங்கோ பார்த்துக்கொண்டு இருப்பவர்போல நின்று கொண்டிருக்கிறார். வெண்தாடிப் பெரியாரின் வீறுமிக்க சிங்க முழக்கத்தின் வேகத்திடையே அவர் சிறிது சர்க்கரை சேர்த்து நல்ல ஊட்ட மருந்தாக்கி அறிவுலகத்துக்கு தருகிறார். அதிலேயே கவிதைத் தேனைக் குழப்பி தின்பண்டங்களாக்கி விடுகிறார் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் என்று காணொளியாய் கழகத்தின் அமைப்பை - சிறப்பை பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் படம் பிடித்துக் காட்டுகிறாரே இவற்றுக்கும் அடித்தளம் அய்யாவின் உரைத்திறன்தானே!

விவாதத்தில் இவரை யாரும் வெல்ல முடியாது. அடுக்கடுக்காக கேள்விகளைப் போடுவார். சொற்களின் பொருள் விளக்க வேண்டுவார். எதிரிகள் கேள்வி கேட்டால், அவர்கள் சொற்களைக் கொண்டே மடக்கி விடுவார். எத்தகையவரும் இவரிடம் அகப் பட்டுக் கொண்டு திக்குமுக்காடுவார்கள். இவ்வாறு வாதமிடும் திறமை கிரீஸ் தேசத்து தத்துவஞானி சாக்ரடீசுக்கே இயற்கையில் அமைந்திருந்தது. நமது பெரியாருக்கும் இத்தன்மை இயற்கையில் அமைந்திருக்கிறது. இவரைத் தமிழ்நாட்டு சாக்ரடீஸ் என்று கூறலாம். இவர் சொற்கள் ஒவ்வொன்றையும் தங்கள் வாழ்க்கையை உயர்த்தும் செல்வங்கள் என்று தமிழ் மக்கள் கருதுகின்றனர் என்ற பெரியாரின் வரலாற்றை எழுதிய தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அவர் களின் கூற்று பெரியாரின் பேச்சுத் திறனுக்கு புகழ்மாலை சூடுகிறது அல்லவா?

தோழர் ஈ.வெ.ரா. பிரசங்கத்தில் ஓர் அழகு இருக்கிறதே, அதை கவனித்தீர்களா? பிரசங்க மேடையில் பேச எழுந்ததும், எதிரேயிருக்கும் கூட்டத்தை ஏறெடுத்துப் பார்ப்பார். சட்டைக்கு மேல் தோளிலிருந்து போர்த்தியிருக்கும் மேலங்கியைக் கைகளை விடுதலை செய்து மார்போடு சேர்த்துச் சுற்றிக்கொள்வார். அந்தச் சாயல், கழனிகளில் களையெடுக்கும் பெண்கள் உடையை ஒத்திருக்கும். பேச வாய் திறந்ததும், நாக்குத் தட்டுத் தடுமாறும். காணாமல் போட்ட வார்த்தைகளைத் தேடிப் பிடித்து பொறுக்குவதைப் போல, மா தங்காதவழி வேகத்தில் பேச எத்தனிப்பார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாக்கியக் கோவைகள் சேரும்.  இப்படியே கொஞ்ச நேரம், வார்த்தைச் சிப்பாய்களை பொறுக்கிச் சேர்த்து அணிவகுத்து நிறுத்தியதும், துருப்பு வெகுவேகத்தில் புறப்பட்டுவிடும். சொல்லவா வேண்டும்! அவரது பிரசங்க துருப்பு புறப்பட்டதும் அப்புறம் அவரது வாயினின்று கிளம்பும் துப்பாக்கி வெடி தானாக நின்றால்தான் நின்றபடி; யாரும் தடுத்து நிறுத்த முடியாது! இடையில் யாரேனும் கேள்வி கேட்டுத் தடுத்தாலோ எங்கிருந்துதான் யோசனை பிறக்குமோ தெரியவில்லை. எதிரி வெட்கித் தலைகுனியும்படி, இந்தா, சரிதானா, பார் என்று பதிலை விட்டெறிவார். வாக்கியங்களுக்கு முற்றுப்புள்ளி ரொம்ப தூரத்தில் இருக்கும். படித்தவனும் - பாம ரனும், ஏன்? பச்சைப் பிள்ளைகள்கூட, தோழர் ஈ.வெ.ரா அவர்களின் பேச்சை அப்படியே முழுசு முழுசாக விழுங்கி விடுவார்கள் என்ற நகரதூதன் ஆசிரியர் மணவை.திருமலைச்சாமி அவர்களின் கட்டுரை, அய்யாவின் பொதுக்கூட்டத்தில் நாம் கலந்துகொண்ட உணர்வையும் அவரின் தனிச்சிறப்பையும் நமக்கு ஏற்படுத்துகிறது அல்லவா?

1940ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் ஒரு நாளில், சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில், சுயமரியாதை இயக்கத் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம் தலைமையில் தந்தை பெரியார் சிறப்புரையாற்றும் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் பேச்சைத் தொடங்குகிறார்.

சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே! ஏன் சொல்கிறேன் என்றால் என்ன ஞாயம்? கேட்பாரில்லையா? என்பன போன்ற அய்யாவுக்கே உரிய சொற்றொடர்கள் அடிக்கொரு தரம் தோன்றி மறைகின்றன. சுயநலம் இல்லாத தன் பொதுநலப் பணி யை விளக்கிப் பேசிக் கொண்டே வந்தவர், நான் செத்தால் அழுகிறவர்களில்லை; நான் அழும்படி சாகிறவர்களும் இல்லை என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்கள் அவையோரைத் திடுக்கிடச் செய்தது. ஆனால் நடந்தது என்ன? சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சென்ற ஹனிபால் விமானம் விபத்தில் சிக்கி அந்த மாவீரன் 2.3.1940 அன்று மடிந்து போனான். மறுநாள் சென்னை பெத்துநாயக்கன்பேட்டை தமிழர் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டத்தில் பேச அய்யா எழுந்து நிற்கிறார். பேச எழுந்தவர் பதினைந்து நிமிடங்கள் பேசவே இல்லை. எதையோ சிரமப்பட்டு மீண்டும் மீண்டும் விழுங்குவதைப் போல அவர் நிலைகுலைந்தார். கடல்மடை திறந்தாற்போல கண்களில் நீர் பெருகிற்று. அவர் உதடுகள் துடித்தன. கைகால்கள் நடுங்கின. அவர் தேம்பித்தேம்பி அழுதார். அந்த அழுகை அவரோடு நின்றதா? இல்லையே! அங்கு குழுமியிருந்த அனைவரும் அழுதார்கள்.



நான் செத்தால் அழுகிறவர்களில்லை என்னும் சொல்லும்கூட பொய்த்துப் போனதை, தந்தை பெரியார் மறைந்தபோது நாடு கண்டுகொண்டது. அறிவுச் சுரங்கம் ஆழ்கடலில் மூழ்கிப் போனதே என அகிலம் முழுவதிலும் உள்ள மக்கள் கதறி அழுதார்கள்.

அய்யாவின் அந்த சொற்றொடருக்குக்கூட, வள்ளுவரின், யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்  அதனின் அதனின் இலன் என்னும் குறட்பாவை சான்றுகாட்டி, வ.ரா.தாமரைக்கண்ணியார் அப்போது விளக்கம் தெரிவித்தார்.   பிறப்பைப் போல இறப்பும் இயற்கையானது. நிலையாமையை ஏற்க மறுத்து அழுதுபுரள்வதால் தீர்வு கிட்டாது என்கிற தத்துவத்தை பாமரனுக்கும் விளங்கிட வைத்த பகுத்தறிவு விளக்கமாகவே பெரியாரின் உரைநடை திகழ்ந்தது.

கேரள மாநிலம் கோட்டையத்தில் பத்தாயிரம் பேர் திரண்டுவந்த கூட்டத்தில் தந்தை பெரியார் நிகழ்த்திய அறிவார்ந்த உரை, அந்த மாநில உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தன் அவர்களையும் ஈர்த்தது. பெரியார் சுயமரியாதை இயக்கத் தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை நான் கேட்டேன். சொற்பொழிவு எளிமையானதாகவும் நேரானதாகவும் இருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை உணர்வோடு வந்து விழுந்தது. மிக்க கவனத்துடன் மக்கள் அதனைக் கேட்டனர். எனது நாட்டில் சுயமரியாதை விதை முளைவிடவும், வளரவும் இவரின் பேச்சும் தொண்டுமே காரணமானது. இவர் துவக்கிய சுயமரியாதை இயக்கத்தை செல்வாக்குடையவர்கள் இங்கே பின்பற்றுகிறார்கள். கோடிக்கணக்கான மக் களுக்கு பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் தடை நீங்கவும், தாழ்ந்த நிலையில் இருந்து இந்தியாவை முன்னேற்றவும் இவர் நீண்ட காலம் உடல்நலத்துடனும் வன்மையுடனும் வாழ்வாராக என்று வாழ்த்தும் அளவுக்கு, பெரியாரின் உரைவீச்சு, அங்கே அமைந்திருந்தது.

தமிழகத்திலும், கேரளத்திலும் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்திலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான அண்டை நாடுகளிலும் அய்ரோப்பிய நாடு களிலும் பெரியாரின் உரை முழக்கம் ஓங்கி ஒலித்தது. அந்த எழுச்சிப் பேருரைகள் முழுவதும் திரா விடர் கழகத்தின் முயற்சியில் நூல் வடிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் நாம் வாசிப்போம்! அடிமை விலங்கொடிக்கும் அறிவாயுதமாய் அவற் றை அகிலம் முழுதும் பரப்பிடுவோம்!

- விடுதலை ஞாயிறு மலர், 14. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக