சனி, 29 பிப்ரவரி, 2020

சிவராத்திரியின் யோக்கியதையைப் பாரீர்!

தந்தை பெரியார்

சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப் போல், சைவர்கள் என்று கருதக் கூடியவர்களின் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங் களில் குளிர் நிறைந்துள்ளபடியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக் கோளாறு உண்டாகும்.

ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமை பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற் கைக்கும், மக்கள் நடப்பு - பண்பாடுகளுக்கும் பொருந் தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!

முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். காலை முதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டு விட்டது. இவனைப் பின்தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வ மரத்தின் மேல் ஏறிக் கொண்டானாம்.  அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின்கீழ் படுத்துக் கொண்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துக் கொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக் கத்தில் அதிகக் களைப்பு அடைந்து, வீடு செல்ல எண் ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வ மர இலைகளைக் கொத்துக் கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப் பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக் கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங் கமாம். அன்று இரவு வேட்டை கிடைக் காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.

(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டு சென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம்தான்).

அவன் மாலை மழையில் நனைந்து குளித்ததுபோல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல், அவன் அறியாத லிங்கத்தின்மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்ததுபோல் ஆயிற் றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிட வேண்டும் என்ற எண்ண மில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற் றாம். புலியை விரட்ட, மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின்மீது தற்செயலாய் விழுந்த படியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான்உலகை அடைந்தானாம்.

அடுத்த கதை -

ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும் ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுரவன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால்,  கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டி விட்டானாம். அப் போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பல காரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத்திரத்தில் அவனை அடித் துக் கொன்றான். அன்று மகா சிவராத்திரியாம்.

ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பனப் பூசாரியால் கொல்லப் பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக் கொலை; இவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந் ததோ? கொலை செய்த அர்ச்ச கனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்பட வில்லை. மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வரு வது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்தச் சிவராத்திரி கள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல, மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்றுதான் நாம் கேட்கின்றோம்.

இந்தப் பாழும் அர்த்தமற்ற - பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத, நமக்கு இழிவையும் அவமானத்தை யும் தருவதான பண்டி கைக்கும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும், பணத் தையும் விரயப்படுத் துவது மக்களின் அறியாமையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். இவைகளை உட னடியாக ஒழிக்க வேண்டும்.

-  விடுதலை நாளேடு 19 2 20

தொடையையுங் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுதல்! (2)

20.12.1931 - குடிஅரசிலிருந்து....

சென்ற வாரத் தொடர்ச்சி

புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும் பாலும் வாலிபர்கள். வாலிபர்கள் எந்தக் காரியத்தையும் முன் பின் யோசனையில்லாமல் உடனே செய்து முடித்து விட வேண்டுமென்னும் எண்ணமுடையவர்கள். அதற்காகத் தமது உயிரையும் பொருட் படுத்தாமல் தியாகஞ்செய்ய முன்வரும் குணமுடையவர்கள். இத்தகைய குணமுடைய வர்கள் துவேஷத்தை மூட்டும் அரசியல் கிளர்ச்சியின் பலனாக அந்நியர்கள் மீது வெறி கொண்டு கொலை களும், சதிகளும் தாராளமாகச் செய்ய முன்வந்து விட்டனர் என்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இச் செய்கைகளே தேசாபிமான முடைய தென்றும், சுயராஜ்யம் அளிக்கக் கூடிய தென்றும் அவர்கள் கருதக்கூடிய நிலைமையை நமது அரசியல் கிளர்ச்சி ஏற்படுத்தி விட்டதென்று கூடக் கூறலாம். இவர்களுடைய இக்கலகச் செயல்களைத் தேசாபி மானமாகவும் தியாகமாகவும் ஆரம் பத்தில் நமது நாட்டுத் தேசியப் பத்திரிகைகள் என்பன பாராட் டவும் தொடங்கின. தேசிய வாதிகள் மேடைகளில் புகழவும் தொடங் கினர். இவர்களுடைய படங்களை வைத்துக் கொண்டாடவும், இவர்களுக்காக விழாக் கள் நடத்தவும் ஆரம்பித்தனர்; ஆனால், அப்பொழுதே சில பொறுப்புள்ள தலை வர்கள் இச்செயல் களைக் கண்டித்தனர். நாணயமும், பெறுப்பும் உள்ள எவரும் இச்செயல்களை ஆதரித்து, மேலும் மேலும் வாலிபர்களுக்கு இத்தகைய விஷயங்களில் ஊக்கம் உண்டாக்க முன்வர மாட்டார் களென்பது நிச்சய மாகும்.

தேசாபிமானம் என்னும் பெயரால் வெறிகொண்டு, நிரபராதிகளையும், உத்தி யோகஸ்தர்களையும் இரக்க மின்றிக் கொலை செய்யும் இந்தப்புரட்சி ஒழிய வேண்டுமானால், பொறுப்புள்ள தேசப்பிர முகர்கள் அனைவரும் இதனைக் கண்டிக்க வேண்டும். இதனால் வரும் தீமையை வாலிபர்கள் உணரும் படிசெய்ய வேண்டும். அப்படியில்லாமல் ஒருபக்கத் தில், அந்நி யர்கள் மீது துவேஷத்தைக் கிளப்பி விடும் அஹிம்சா தர்மப் பிரசாரமும், ஒரு புறத்தில் புரட்சியைக் கண்டிப்பதான அறிக்கைகளும் செய்து கொண்டிருந்தால் எப்படி புரட்சி அடங்கும் என்று கேட்கின்றோம். இது, குழந்தையின் தொடையையும் கிள்ளி விட்டுத் தொட்டி யை யும் ஆட்டிவிடுவது போலத்தானே ஆகும்?

சில தேசியயப் பத்திரிகைகள் பொறுப் பின்றிக் கொலைக் குற்றங்களையும், கொலை செய்தவர் களையும் தேசாபிமானமாக வும், தேசாபிமானி களாகவும் போற்றி உற்சாகப் படுத்தும் முறையில் நடந்து கொண்ட காரணத்தால்தானே அச்சுச் சட்டம் ஏற் பட்டது? இவ்வாறு தேசீயப் பத்திரிகைகள் என்பன பொறுப்பற்றதனமாக நடந்து கொண்டிராவிட்டால் அச்சுச் சட்டம் பிறந்திருக்க முடியாது என்பது உண்மை அல்லவா? அடுத்தபடியாக, துவேஷத்தைப் பெருக்கி விடும் முறையில் அஹிம்சைப் பிரசாரம் பண்ணியதன் பலனால் வங்காளத் தில் புரட்சி இயக்கமும் தலைவிரித்தாடத் தொடங்கவும், அதை அடக்க அரசாங்கத் தார் வங்காள அவசரச்சட்டத்தை ஏற் படுத்தும் படியான நிலையும் ஏற்பட்டு விட்டது அல்லவா?

இப்பொழுது அய்க்கிய மாகாணத்தில் வரிகொ டாமை இயக்கம் ஆரம்பித்தவுடன் அரசாங்கத்தாரும் அவசரச்சட்டம் ஒன்றை ஏற்படுத்தி விட்டனர்.

இந்த அவசரச் சட்டங்களை அரசாங்கத் தார் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் எனப் பெரும் கிளர்ச்சி செய்கின்றனர். புரட்சி இயக்கத் தையும், வரிகொடா இயக்கத் தையும் நிறுத்து வதற்கு ஒரு முயற்சியும் செய்யாமல், அவற்றை அடக்க ஏற்பட்ட சட்டங்களின் மேல் மாத்திரம் பழிபோட்டுக் கிளர்ச்சி செய்வதில் என்ன பலனிருக்கிறது? அவசரச் சட்டங் களுக்கு நிரபராதிகளும் ஆளாகிக் கஷ்டப் பட நேரும் என்பதை நாமும் ஒப்புக்கொள்ளு கிறோம். அவசரச் சட்டங்களால் இன்னும் அக்கிளர்ச்சிகள் கொஞ்சம் அதிகப்படும் என்பதிலும் உண் மை இல்லாமல் இல்லை. ஆனால், அவசரச் சட்டம் உண்டானதற்கான காரணங் களையும் ஒழிப்பதற்கு முயற்சி செய்து கொண்டு அவசரச் சட்டங்களையும் வாப வாங்கிக் கொள்ளுமாறு கிளர்ச்சி செய்வதே நியாயமும். ஒழுங்குமாகும்.

இவையல்லாமல் மீண்டும் நாட்டில் வரிகொடா இயக்கமும், பகிஷ்கார இயக்கமும் பலமாகஆரம்பிக்க வேண்டு மெனப் பிரசாரஞ் செய்யப்பட்டும் வருகிறது. திரு. காந்தியும், சத்தியாக்கிரகச் சண்டை ஆரம்பிப் பதாகச் சொல்லிக்கொண்டு வரு கிறார். காந்தி-இர்வின் ஒப்பந்தம் முடிந்தது முதல், மறுபடியும் சத்தியாக்கிரகப் போர் ஆரம்பிப் பதற்குத் தயாராய் இருங்கள் என்றே பொறுப்புள்ள காங்கிரஸ்காரர் களெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தனர், வருகின் றனர். தேசத்தின் அமைதியையும், சட்டத்தையும், நிரபராதி களையும் காப்பாற் றுவது அரசாங்கத்தின் பொறுப்பு, ஆகை யால், அரசாங்கம் சட்டத் தையும், அமைதி யையும் நிலைநிறுத்தப் பின்வாங் காது என மேன்மை தங்கிய வைசிராய் தாம் பேசும் இடங்களில் கர்ஜித்துக்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தேசத்தில் மறுபடியும் கலகம் ஏற்படுமாயின் பாமர ஜனங்களுக்குத் தான் அதிக மான கஷ்டமும், நஷ்டமும் உண்டாகுமென்பதில் ஆட்சேபணை யுண் டா? சுயராஜ்யம் காங்கிரஸ் காந்தி அஹிம்சை தேசாபி மானம் என்னும் பெயர்களால் காலிகளும், நாணய மற்றவர்களும், பிழைப் பற்றவர்களும் மறுபடியும் ஏமாற்றப் புறப் பட்டு விடுவார்கள், இப்பெயர்களைச் சொல்லி பாமர மக்களிடம் பொருள் பறிக்கத் தொடங்கி விடுவார்கள். இவர்கள் செய்யும் ஆர்ப் பாட்டங்களினால் மறு படியும், புரட்சியும், அடிதடிகளும் துவேஷங் களும் அதிகப்படக்கூடும், ஆகவே அரசாங் கத்தார் இவற்றை அடக்க சென்ற உப்புச் சத்தியாக் கிரகத்தின் போது அவசரச் சட் டங்கள் பிறப்பித்து போல இன்னும்  பல அவசரச் சட்டங் களைப் பிறப்பிக்கவும் கூடும், இவ்வாறு காங்கிரசுகாரர்கள் செய்து கொண்டு வரும் பிரசாரங்கள் ஒரு புறமும், புரட்சிக்காரர்கள் நடத்திக்கொண்டு வரும் அக்கிரமங்கள் ஒரு புறமும், அரசாங்கத்தார் இவைகளை அடக்க வெளியிடும் அவசரச் சட்டங்களும், தடையுத்தரவுகளும் ஒரு புறமும் சேர்ந்து நாட்டு மக்களைச் சமாதான மின்றிக் கஷ்ட நிலையில் வாழும்படி செய் வதைத் தவிர வேறு ஒரு பலனையும் ஏழைமக்கள் காணப் போவதில்லை, அடையப் போவதில்லை யென்பது தான் நமது அபிப்பிராயம். இதனால், தற்போது உள்ளதைவிட இன்னும்,, நமது நாட்டின் வியாபார நிலையும், செல்வ நிலைமையும் கஷ்டநிலைமைக்கு வந்து சேருமென்பதும் நிச்சயம். மற்றபடி இந்த மாதிரியான வீண் கலகங்களால் ஓர் கடுகளவும் பிரயோஜனம் உண்டாகப் போவதில்லை.  நமது நாட்டுச் சாதி மத வேற்றுமைகளுக்கு அழிவுவராமல் இன்னும் கெட்டியாக ஆணி யடித்துக் கொண்டு சுயராஜ்யம் வேண்டும் என்று கேட்பது கையாலாகாத்தனம் என்று தான் கூறுவோம்.

சுயராஜ்யத்திற்காகச் செய்யப்படும் கிளர்ச் சியில் ஒருபாகத்தை சாதி, மதங்களை ஒழிப்பதில் செலவு செய்திருந்தால் இது போது நாம் எவ்வளவோ மேலான நிலையில் போய் இருந்திருக்கலாம்.  போதிய சுதந்தி ரமும் கூடப் பெற்றி ருக்கலாம். ஆனால் தேசத்தைக் காட்டிலும், வருணா சிரம தருமத்தையும், மதத்தையும் உயிரினுஞ்சிறந்ததாக எண்ணிக் கொண் டிருக்கின்ற தேசத் தலைவர்களால், நமது நாடு சாதி, மத வேற்றுமை ஒழியப்போவது ஏது? இவைகள் ஒழியாதவரையில் பூரண சுதந்திரம் கிடைப்பது எங்கே? ஒரு சமயம் கிடைத் தாலும் அதை வைத்து ஆளுந்திறமை தான் இருக்க முடியுமா? என்று தான் கேட்கிறோம்.

ஆகையால் இனியும் உண்மையான சமுக சகோதரத்துவ ஆசையும், உண்மையான தேச முன்னேற்ற ஆவலும் உள்ளவர்கள் அனை வரும் தேசத்தின் அமைதிக்காக உழைக்க முன் வர வேண்டும்.

புரட்சிச் செயல்களும், கலகங்களும் நடைபெற வொட்டாமல் எல்லா மக்களுக் குள்ளும் சகோதரத்துவமும், சுயமரியா தையும் தாண்டவ மாடக்கூடிய பிரசாரஞ் செய்ய வேண்டும். குற்றமற்ற மனமுள்ள வாலிபர்கள் மனத்தில் வெறியை உண்டாக்க மல் அன் பையும், சமதர்ம எண்ணத்தையும் உண்டாக்கா வேண்டும்.  இவ்விஷயங்களைப் பொறுப்புள்ள தலைவர்களும், தொண்டர் களும் மேற் கொள்ள வேண்டுகிறோம்.

- விடுதலை நாளேடு 15 2 20

மூடர்களே! மூடர்களே!!

சித்திரபுத்திரன் -

04.01.1931 - குடிஅரசிலிருந்து..-

மூடர்களே! மூடர்களே! ஒரு சின்ன சங்கதி.  கோவிலின் மீதிருக்கும், கலசம் திருட்டு போகின்றது. அம்மன்கள் விக்ரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன.  விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்ரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது.  இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்பு பிடிக்கின்றது.  அச்சு ஒடிகின்றது.  இவைகளின் பயனாய் பலர் சாகின்றார்கள்.  மூடர்களே!  இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ரகங்களில், அந்தத் தேர் வாகனங்களில் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக் கின்றதாக நினைக்கின்றீர்கள்?  உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல்லுங்கள்.

இன்னும் ஒரே குட்டி சங்கதி, வட்டி வாங்குகிறவன் கோடீசுவரனாகிறான், வட்டி கொடுப்பவன் நாசமாய்ப் பாப்பராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருது கின்றீர்கள்?  இன்னும் ஒன்றுதான், அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக்கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள்..

மூடர் : சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.

பதில் : சரி, அப்படியானால் அந்தக் காரணத்தைக் கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)

மூடர் : கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள் தனமாகும்.

பதில் : அப்படியானால், உலகப்படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள் தனமாகும்.

மூடர் : உங்களோடு யார் பேசுவார்கள்?

பதில் : சரி நல்ல காரியமாச்சுது. சனியன் தொலைந்தது.  ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.

 - விடுதலை நாளேடு 14 .2.20

மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும் -1

01.02.1931 - குடிஅரசிலிருந்து..

தலைவரவர்களே! நண்பர்களே!! மேல்நாட்டின் ஜோதியும், கீழ்நாட்டின் பீதியும் என்னும் விஷயமாய் இன்று மறுபடியும் நான் பேச வேண்டுமென்று குறிப்பிட்டிருக் கின்றீர்கள்.  இந்தத்  தலைப்பைக் குறிப்பிட்டவர்கள் என்ன கருத்தைக் கொண்டு நான் இத்தலைப்பில் என்ன பேசவேண்டுமென்று கருதி ஏற்பாடு செய்தார்களென்பது எனக்குத் தெரியாது.  ஒரு சமயம் மேல் நாட்டின் பெருமையையும், கீழ் நாட்டின் சிறுமையையும் பற்றி நான் பேச வேண்டுமென்று கருதினார்களோ என்னமோ தெரியவில்லை.  ஆனபோதிலும் இத்தலைப்பை நான் காலையில் பார்த்தவுடன் சில விஷயங்கள் சொல்லலாமென்பதற்காக கருதி சில குறிப்பு வைத்திருந்தேன்.  ஆனால்,  இப்போது எனக்கு முன் பேசிய மன்னார்குடி ஜனாப் யூசுப் பாவலர் அவர்கள். சமாதி வணக்கம், கொடி பஞ்சா முதலிய உற்சவங்கள் இஸ்லாம்மார்க்க ஆதாரங்களில் கிடையாதென்றும், அவையெல்லாம் புரோகிதக் கூட்டத்தாரால் புகுத்தப்பட்ட மக்கள் மூடநம்பிக்கையால் பின் பற்றுவதாகு மென்றும் சொன்னபோது இங்கு கூட் டத்திலுருந்த இரண்டொருவர் ஏதோ பிரமாதமாய் முழுகிப் போய்விட்டது  போல் கருதி கூக்குரலிட் டதையும், கோபத்துடன் ஆட்சேபிப்பதையும் பார்த்தவுடன் நான் முன் குறிப்பிட்டு வைத்தவைகளை யெல்லாம்  தூர தள்ளிவிட்டு அவருக்காகப் பீதியையும் இன்னும் அதுபோலவே இந்துக்கள் என்பவர்களுக்கு ஏற்பட்ட பீதியையும் பற்றியே பேச வேண்டியது அவசியம் என்று கருதி விட்டேன்.  அதாவது இம்மாதிரி கீழ் நாட்டின் பீதியை ஒழிக்க வேண்டியது நமது முதற் கடமையென்பதைப் பற்றியே பேசுகிறேன்.

நண்பர்களே, ஏதாவதொரு விஷயத்திற்கு ஆதாரமில்லையென்றோ, அது அறிவுக்குப் பொருத்தமில்லையென்றோ, அதனால் பயனில்லை என்றோ, அல்லது அதனால் இன்னின்ன கெடுதி என்றோ யாராவதொருவர் எடுத்துச்சொன்னால் அதற்கு மாறுபட்டவர்கள் அறிவுள்ளவர்களாயிருந்தால் அல்லது தங்கள் கருத்தில் உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் அப்படிப் பட்டவர்கள் செய்ய வேண்டிய யோக்கியமான வேலை என்ன வென்றால் தைரியமாக தக்க சமா தானம் சொல்லி தங்கள் கொள்கைகளை தாங்கள் நடந்து வருவதற்கேற்ற ஆதாரங்களைக் காட்டி அறிவு அனுபவம் ஆகியவைகளுக்குப் பொருத்தி மெய்ப்பித்துக் காட்ட வேண்டியது யோக்கியமான கடமையாகும்.  அந்தப்படியான காரியம் ஒன்றும் செய்யாமல் எடுத்தற்கெல்லாம் கடவுள்போச்சு, மதம் போச்சு, மார்க்கம்போச்சு, ஆண்டவனின் நம்பிக்கை போச்சு, ஆண்டவன் வார்த்தைக்கு விரோதமாச்சு என்று வெறும் கூப்பாடுபோடுவதனால் என்ன பயன் விளையக்கூடும்.  மக்கள் மூடர்களாயிருக்கும் வரை இம்மாதிரி கூப்பாடுகளை மதித்து அவர்களும் ஏதோ முழுகிப்போய்விட்டது போல் ஆத்திரப்படக் கூடும்.  பிறகு அவர்களுக்கு விவரம் தெரிந்து விட்டால் இந்த மாதிரி கூப்பாடு போட்டவர்களை வட்டியோடு அவமானம் செய்துவிடுவார்கள்.

விஷமப் பிரச்சாரமும், சுயநலப் பிரச்சாரமும் வெகு நாளைக்கு இருக்க முடியாது.  எந்த மக்களுக்கும் பகுத்தறிவு செல்வாக்குப் பெறும் போது ஏமாற்றினவர்கள் மீதுதான் முதலில் அவர்களது ஆத்திரமெல்லாம் திரும்பும்.  பிறகுதான் தங்கள் தங்கள் முட்டாள் தனத்தைப் பற்றி வருந்து வார்கள்.  ஆகையால்தான் விஷமப் பிரச்சாரங்களைப் பற்றி நான் எப்போதுமே பயப்படுவதில்லை.  ஆனால், சொல்லுபவர்கள் சொன்னால் கேட்பவர் களுக்கு மதி வேண்டாமா? என்பதுதான் என் கேள்வி.

நண்பர்களே! என்னைப் போல ஒரு சாதாரண மனிதன் பேசுவதினாலோ, தனக்குத் தோன்றியதை எழுவதுதினாலோ, கடவுள்போய் விடும் ? மார்க்கம் போய்விடும் ? சமயம் போய் விடும் என்று நீங்கள் பீதி அடைவீர்களேயானால், உங்கள் கடவுளுக்கும். மார்க்கத்திற்கும் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதை யோசித்துப் பாருங்கள்.  நீங்கள் உங்கள் கடவுளை உறுதியானவரல்ல.   உண்மையானது அல்ல என்றும் உங்கள் சமயம் உறுதியானது அல்ல, உண்மையானதல்ல என்றும் நீங்களே கருதியிருக் கின்றீர் களாகிறீர்கள். நாங்கள் உங்கள் கடவுளையோ, சமயத்தையோ இல்லை யென்று சொல்லுவதற்காக இங்கு வரவில்லை என்பதை உறுதியாய் நம்புங்கள்.  அவைகளைப் பற்றி உண்டு இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிவதல்ல எனது வேலை.

நீங்கள் சொல்லுவதற்கு நீங்கள் பின்பற்றுவதற்கு ஆதாரமென்ன ? அது உங்கள் பகுத்தறிவுக்கும் பொருத்தமானதாயிருக்கின்றதா? அனுபவத்திற்கு ஒத்து வருகின்றதா? என்று யோசித்துப் பாருங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்வது தான் எனது வேலையாகும். அவைகளுக்கு இடம் கொடுப்பதா லேயே உங்கள் கடவுளோ, மதமோ, ஆதாரமோ, போய்விடுமென்று நினைத்தீர்களானால் அவை களைப் பற்றி மறுபடியும் வெறியில் பேசுவது வெட்கக்கேடான காரியமல்லவாவென்று கேட் கிறேன்.

இந்தப்படி ஆராய்ச்சி செய்து பார்ப்பதாலேயே மறைந்து போகும் மார்க்கமும், ஆண்டவனும் பிறகு என்ன காரியத்திற்குத் தான் பயன்படக் கூடுமென்பதை நீங்கள் ஆத்திரப்படாமல் யோசித்துப் பாருங்கள்.  எங்கள் கடவுள் சர்வசக்தி, சர்வ வியாபகமாயிருக்கக் கூடியவர் என்று கருதிக் கொண்டு அவரால் ஏற்பட்டது எங்கள் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நீங்கள் அப்படியானால் சற்று ஆராய்ச்சி செய்து அறிவிற்கு பொருத்தமாயிருக்கின்றதா என்று பார்க்கலாமா? என யாராவது கேட்டால் உடனே இந்த மாதிரி பயந்தால்

அப்பொழுது இந்தப் பயப்படுகின்ற ஆட்களுக்குக் கடவுள் சர்வசக்தி உள்ளவர்கள் என்கின்ற விஷயத் திலும், அவர் சர்வவியாபகமுள்ளவர் என்கின்ற விஷயத்திலும் தங்கள் மார்க்கம் அவரால்தான் ஏற்பட்டது என்பதிலும் நம்பிக்கை யிருக் கின்றதா வென்பதை யோசித்துப் பாருங்கள். மனிதனுடைய அறிவிற்குப் பயப்படும் கடவுளும், அவனது ஆராய்ச்சிக்கு சற்று பயப்படும் மார்க்கமும், உலகத்தில் யாருக்கு என்ன பயனை அளிக்கக் கூடும்? அறிவையும், ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் இப்படி பயந்து ஓடுகிறீர்கள்?

ஆராய்ச்சிக்கும் மதிப்பு கொடுக்காத காரணமே  இன்று இந்தியா உலகிலுள்ள நாடுகளிலெல்லாம் அடிமையான நாடாகவும், இந்தியா உலகிலுள்ள மக்களிலெல்லாம் இழிவான   மக்களாகவுமிருக்க வேண்டியதாகிவிட்டது. கடவுள் என்றால் குருட்டு நம்பிக்கை,  மதம் என்றால் மூட நம்பிக்கையென்கின்ற தீர்மானம் ஏற்பட்டு  விட்டது. இந்த நிலையைத் தவிர, கடவுளுக்கும் மதத்திற்கும் வேறு அவமானம் வேண்டியதில்லை.

இந்த மாதிரி அறிவிற்கும்  ஆராய்ச்சிக்கும் பயந்த கூட கடவுளையும் மதத்தையும் வைத்திருக்கின்றவனை விட கடவு ளையும், மதத்தையும் பற்றி கவலைப் படா தவனே, இல்லையென்று கருதிக் கொண்டிருக்கின்ற வனே வீரன் என்று நான் சொல்லுவேன்.

ஏனெனில், கவலைப்பட்டு கொண்டு உண்டு என்று சொல்லிக் கொண்டு மெய்ப்பிக்க திண்டாடிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும் திரிவதும் பயங்காளித் தனமென்றே சொல்லுவேன்.

சகோதரர்களே! நாங்கள் வேலை இல்லாவெட்டி  ஆள்களா? அல்லது ஏதாவது பூசாரி புரோகிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது ஏதாவது பண்டிதபுராண காலட்சேபக் கூட்டத்தார்களா? எங்களுக்கு இந்த வேலையில்  ஏதாவது ஜீவனத்

திற்கோ, பெருமைக்கோ சிறிதாவது இதில் வழியுண்டோ ?

- தொடரும்-

 - விடுதலை நாளேடு 14 .2.20

இரண்டு சந்தேகம்?

- சித்திரபுத்திரன் -

15.11.1931  - குடிஅரசிலிருந்து...

போக்கிரி:- திருமதி லேட்டர் அம் மாளை மீராபாயம்மாளாக்கி, முக்காடு போட்டு ஆபாசமாக்கி சீமைக்கு அழைத்துப் போய் இந்திய நாகரிகத்தைப் பாருங்கள் என்று வெள்ளைக்காரர்களுக்குக் காட்டு கிறாரே. அது ஏன்? முக்காடு என்ன அவ்வளவு அழகா? அல்லது, தன்னை ஒரு சனாதன இந்து என்பதற்காகவா?

யோக்கியன்:- அதைப்பற்றிய கவலை உனக்கு எதற்கு? அது அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்தது.

போக்கிரி:- சரோஜனி அம்மாள் அப்படியில்லையே?

யோக்கியன்:- மறுபடியும் பேசுகிறாயே?

போக்கிரி:- சரி, அதைப்பற்றி பின்னால் பேசிக்கொள்ளலாம், திரு. காந்திக்கு திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார் அவர்களின் யோக்கியதை தெரியுமா? தெரியாதா?

யோக்கியன்:- தெரியும் ஏன்?

போக்கிரி:- அவர் காந்தியை மீறித்தானே வட்டமேஜைக்குப் போனார்?

யோக்கியன் :- ஆம்,

போக்கிரி:- அப்படி இருக்க, திரு. காந்தி அவரை எதற்காகத் தனக்கு அரசியல் ஆலோசனை சொல்லும் அமைச்சராக வைத்துக்கொண்டார்.

யோக்கியன்:- இது வேண்டுமானால் நல்ல கேள்வி, ஏன் வைத்துக்கொண்டார் என் றால், திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார் இந்து சுதேசமித்திரன் பத்திரிகைகளின் ஆசிரிய ராய் இருக்கின்றார் என்பதற்காகத் தான். அன்றியும் திரு. ரங்கசாமி அய்யங்காரிடம் திரு. காந்தியின் கைவரிசை ஒன்றும் செல் லாது. ஏனெனில் இந்து பத்திரிகையென் றாலே திரு. காந்திக்கு எப்போதும் நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு உண்டு.

போக்கிரி:- அதெப்படி?

யோக்கியன்:- காலஞ்சென்ற ஒத்துழையா மையின்போது கூட இந்து பத்திரிகை ஒத்துழையாமைக்கு விரோதமாய் விஷமப் பிரசாரம் செய்தும் திரு. காந்தி அடிக்கடி அதன் ஆசிரியருக்குக் கடிதம் எழுதி அவரைக் கைக்குள் போட்டு, ஒத்துழை யாமையைத் தயவுசெய்து கவனித்துக் கொள்ளுங்கள் என்று கடிதமெழுதி இருக் கிறார். அன்றியும் இந்துவும், சுதேசமித் திரனும் சேர்ந்துதான் திரு. தாசுக்கு விளம்பரம் கொடுத்து அவரை தேசபந்து வாக்கி மகாத்மாவை தோற்கடித்து ஒத்து ழையாமையைக் புதைத்து விட்டதுகள். ஆதலால் அதுபோலவே இப்போதும் செய்துவிடுமோ என்கின்ற பயத்தால்தான் திரு. ரங்கசாமி அய்யங்காரை திரு. காந்தி தனது மந்திரியாக்கிக் கொண்டார்.

போக்கிரி:- மற்றவர்களையெல்லாம்விட திரு. ஏ. ரங்கசாமி அய்யங்காரிடம் மாத்திரம் என்ன அவ்வளவு பயம்?

யோக்கியன்:- இந்து, சுதேச மித்திரன் என்றால் பார்ப்பனர்கள் என்று அர்த்தம். அதுவும் தென்னாட்டு அய்யங்கார் பார்ப் பனர்கள் என்ற அர்த்தம். திரு. காந்தியைப் போல் ஆயிரம் காந்தியை அய்யங்கார்ப் பார்ப்பனர்கள் ஆக்கவும் கூடும். அழிக்கவும் கூடும், திரு. காந்தி இவையெல்லாம் தெரியாதவரல்ல. யார் யாரைப் பிடித்து எப்படி எப்படி சரி பண்ணலாம், எப்படி எப்படி விளம்பரம் செய்யலாம் என்பதில் அவருக்கு அனுபோகமுண்டு. லார்டு இர்வினை மகாத்மா இர்வின் என்று காந்தி கூப்பிட்டாரே எதற்கு? என்பது உமக்குத் தெரியுமா?

போக்கிரி:- சரி விளங்கிற்று இனி ஒன்றும் தெரியவேண்டாம்.

புதிய தொண்டரும் பழைய தொண்டரும்

புதுத் தொண்டர்:- வட்ட மேஜை முறிந்து போனால் என்ன செய்வது? ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டி வரும் என்று காந்தி சொல்லுகின்றாரோ,

பழைய தொண்டர்:- அடபயித்தியக்காரா! வட்டமேஜை மகாநாடு முறிந்தால்தான் நமக்கு நல்லது.

பு.தொ:- அதென்ன அப்படி?

ப.தொ:- வட்டமேஜை மகாநாடு முறிந்து போனால், திரு. காந்தி இந்தியாவுக்கு வந்து, மறுபடியும் ஏதாவது சத்தியாக்கிரகம் - சட்டமறுப்பு - என்பதாக, எதையாவது ஒன்றைச் செய்யச் சொல்லுவார்.

பு.தொ:- அதனால் நமக்குகென்ன லாபம்? ஜனங்களுக்குக் கஷ்டம்தானே?

ப.தொ:- அட முட்டாளே! ஜனங்கள் எக்கேடு கெட்டேனும் தொலையட்டும்  அதைப்பற்றி நமக்கென்ன கவலை? நமக்கு எப்படியும் ஒரு வேலை  இருக்குமல்லவா? அதனால் உண்டி வசூலிக்கவோ, பணம் வசூல் செய்யவோ, தேசாபிமானியாகவோ, சவுகரியம் இருக்கும். அப்படியில்லாவிட்டால் நம்மை எவன் சட்டை பண்ணுவான்?

பு.தொ:- நமக்கு வேலை வேண்டிய தற்காகவா தேசியத் தொண்டு செய்வது?

ப.தொ:- சரி! சரி! உனக்கு ஒன்றும் தெரியாது. உங்கள் வீட்டில் ஏதோ சோற்றுக்குக் கொஞ்சம் வகை இருக்கின்றது போலத் தெரிகிறது. அதனால் உனக்கு வட்டமேஜை முறிய வேண்டிய அவசிய மில்லையென்று தோன்றுகின்றது.

பு. தொ:- அதென்ன அப்படி சொல்லு கின்றாய்?

ப.தொ:- வட்டமேஜை ஏதாவது ஒரு வழியில் வெற்றி பெற்று விட்டால், இந்தி யாவில் வேலையில்லாக் கஷ்டம் எவ்வளவு அதிகரிக்கும் தெரியுமா? முக்கால்வாசிப் பத்திரிகைகள் ஒழிந்து போகும். முன் பெல்லாம் பாமரமக்களை ஏமாற்ற மதம் ஒன்று தான் இருந்தது. இப்போது நமது பிராமணப் பெரியோர்கள் தயவினால் தேசியம் என்பதாக ஒன்று ஏற்பட்டு, இதில் அனேகம் பேருக்கு ஜீவனோபாயம் உண்டாயிற்று, மகாத்மா காந்தி அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றார். அதனால் இப்போது நம்போலிருப்பவர்க் கெல்லாம் சோற்றுக்குச் சோறு, துணிக்குத்துணி, கைச்செலவுக்குத் தாராள மாகக் காசு இவ்வளவும் தவிர, போகிற பக்கம், வருகின்ற பக்கம் எல்லாம் திருப்பதி குடை யாத்திரைக்காரருக்கு காலில் தண் ணீர் விட்டு, விழுந்து கும்பிட்டு, தட்டத்தில் காசு போடுகின்ற மாதிரியான மரியாதை- இவ்வளவெல்லாம் இருக்கின்றபோது, இவை அத்தனையும் ஒழிந்து போகின்ற மாதிரியில் வட்ட மேஜை வெற்றி பெற்றால் என்று கேட்கின்றாயே, பாவி!

இதைக் கேட்டதும் எனக்குத் திகீர் என்கிறது.

பு-தொ:- கோபித்துக் கொள்ளாதீர்கள்! எனக்கு அனுபோகம் இல்லாததினால் இப்படிக் கேட்டேனே ஒழிய, உங்கள் பிழைப்பில்நான் கைவைக்கவில்லை.

- விடுதலை நாளேடு 29.2.20

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

புரட்டு! சுத்தப்புரட்டு!!

25.10.1931, குடிஅரசிலிருந்து... -

நமது செல்வத்தை அந்நிய நாட்டார்  கொள்ளையடிப்பதாகச் சொல்லுவது சுத்தப்புரட்டு,

நமது செல்வத்தைக் கொள்ளையடித்து நம்மைப்பட்டினி போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர் வட்டிக்கடைக்காரர் ஆகியவர்களுமேயாவார்கள்.

அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம்முடையதல்ல. நம்மைக் கொள்ளை அடித்து பட்டினி போடும் பாதகர் களாகிய மேற்கண்ட முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், வட்டிக்கடைக்காரன் முதலியவர்கள் செல்வமேயாகும்.

ஆகையால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தில்லை.

மேலே சொல்லப்பட்ட இந்தக்கூட்டங்களை ஒழித்தால் தான் நமது செல்வம் நமக்குக்கிடைக்கும்.

அப்போது நாம் வயிறார உண்ணலாம். கஷ்டப்படும் நாடுகளுக்குத் தருமமும் செய்யலாம்.

இப்படிக்கு 100க்கு 90 மக்களாகிய, தொழிலாளிகள் வேலையாளர்கள் கூலியாட்கள் பண்ணையாட்கள்.

 - விடுதலை நாளேடு 28 .2.20

மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும்- 3

01.02.1931 - குடிஅரசிலிருந்து..

சென்ற வாரத் தொடர்ச்சி

மனிதனின் நன் மைக்கும், சவுகரியத் திற்கும்,  மார்க்கம் ஏற்பட்டதென்று கருதி தற்கால அறிவுக்கும், நிலைமைக்கும் ஒத் திட்டுப் பாருங்கள்.  எக்காலத் திற்கும் ஏற்ற மதமென்றால் காலத்திற்கு ஏற்றப்படி தானாகவே, மாறவோ, மாற்றிக் கொள் ளவோ சவுகரியமிருக்கும் என்பதில் பயமோ, அவநம்பிக் கையோ  கொள்ளாதீர்கள்.  இருட்டானால் விளக்கைப்பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.  பகலா னால் விளக்கை அணைத்து விடுங்கள் என்றுதான் பகுத்தறிவுள்ள மார்க்கம் சொல்லி இருக்கும். எப்போதும் விளக்கு வைத்திருங்கள் என்றோ, எப்போதும் விளக்கை வைக்காதிருங்கள் என்றோ சொல்லி இருக்க முடியாது.

ஆகவே காலப் போக்குடன் கலந்துகொள்ளப் பயப்படாதீர்கள்.  இந்தியாவிற்கு இரண்டு மதம் சொந்தமாகிவிட்டது.  அதாவது இந்து மதம், இஸ்லாமிய மதம், இரண்டும் ஒன்றுபட்டாலொழிய இந்தியாவிற்கு விடுதலை இல்லை.  ஒருவர் மதத்திற்கு ஒருவர் வர வேண்டுமென்றால் ஒரு நாளும் முடிவு பெறாது.  இருவரும் பகுத்தறிவுபடியே நடந்துக் கொள்ளலாம் என்றால், யாருக்கும் ஆட்சேபணை இருக்க வழியிருக்காது.

தங்கள் மதம் பகுத்தறிவுக்கு ஏற்றதாய் இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிப்பாய் இந்த ராஜிக்கு ஒப்புக் கொள்ளலாம்.  அப்படிக்கு நம்பிக்கை இல்லாதவர்கள் எடக்குப் பேசித்தான் தீருவார்கள்.  அவர்கள் அதன் பயனை அடைந்து தான் தீருவார்கள்.

இந்த நிலையில் என்ன சுயராஜ்யம் வந்தாலும் பூரண விடுதலை வந்தாலும் அவை நமக்குள் உதை போட்டுக் கொள்ளத்தான் உதவும்,  இதுவரை பொதுவாகப் பேசினேன்.

கடைசியாக இந்துக்களுக்கென்றே சில வார்த்தை பேசுகின்றேன். ஏனெனில், நானும் சில நண்பர்களும் சாப்பிட்ட தற்குப் பிறகு ஒரு நண்பர் இந்த ஊர் கோயில் தேரையும், கோபுரத்தையும், வந்து பார்க்கும் படி கூப்பிட்டார்கள்.  நாங்கள் பார்ப்பதற்காக அங்குச் சென்றோம்.

பிறகு அங்குப் பார்த்த ஆபாசங்களை அப்படியே சொல்ல வெட்கப்பட வேண்டிய தாகவே இருக்கிறது.  காட்டுமிராண்டிகள் காலத்தில்தான் சாமிகளும், கோயில்களும் ஏற்பட்டதென்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாதபடி அவைகள் அமைக்கப் பட்டிக்கின்றன.

முதலாவது நாங்கள் இந்த ஊர்த் தேரைப் பார்த்தோம்.  அதில் சித்திரம் வைக்கப்பட்டிருக்கும். உருவங்கள் மிக மிக ஆபாசமானவையாய் காணப்பட்டன.  அவைகளுக்கு என்ன தான் தத்துவார்த்தம் சொன்னாலும், மனிதப் பெண்ணை கழுதை சம்போகம் பண்ணுவது போலவும் போன்ற மற்றும் பல உருவங்களைச் சித்தரித்து வைத்திருப்பதை எப்படி ஒத்துக்கொள்வது என்பது எனக்கு விளங்கவில்லை.

கோபுரங்களை பார்த்ததைப்பற்றி சொல்லலாம் என்றாலோ அதைப்பற்றி இன்னும் ஒரு தடவை நினைப்பதற்குகூட கஷ்டமாய் இருக்கின்றது.  பெண்களை அதில் படுத்துகின்றபாடும்,  காம விகாரங்களை அதில் எடுத்துக் காட்டி இருக்கும்,  முறையும் அநியாயம் அநியாயம்.

இவைகளையெல்லாம் நெருப்பை வைத்து கொளுத்தி இடித்து எரித்து, இவற்றிற்கு ஆதாரமான சாத்திரங்களையெல்லாம் பொசுக்கி சமுத்திரத்தில் கரைத்து விட்டாலொழிய இதைச் சார்ந்த மனிதர்கள் மனிதர்களாகக் கருதப்பட முடியவே முடியாது.

சுயமரியாதைக்காரர்கள் புராணக் குப்பைகளைக் கிளறிக்கிளறி வெறும் ஆபாசங்களைப் பேசுகின் றார்கள் எழுதுகின்றார்கள் என்று பேசுகின்றீர்கள். எங்கள் மீது சில சமயத்தில் வெறுப்பும் கொள்ளு கின்றீர்கள்.

ஆனால், இந்தக் கோயில்களுக்குப் போய், தேங்காய் பழம் உடைத்து வைத்து, காசும் கொடுத்தும் இந்த உருவங்களைப் பார்க்க வந்து கொண் டிருப்பவர்கள் மனிதர்களா? என்பதைப் பற்றி நீங்கள் சிறிது கூட சிந்திப்பதில்லை.

நாங்கள் எழுதுவதையும், பேசுவதையும் பார்த்து வெறுப்புக்கொண்டு என்ன செய்வது? இவ்வளவு பேசியும், எழுதியும் இந்த நடவடிக்கைகள் நின்றனவா? நிறுத்த யாராவது பாடுபட்டீர்களா?  காரமடைத் தேரில் இதைவிட அசிங்கமாய் பார்த்தேன்.  திருவொற்றியூரில் வெகு ஆபாசமாய்ப் பார்த்தேன்.

மதுரை  முதலிய இடம் சொல்லவேண்டிய தில்லை.  ஆனால், இந்த ஊர்கோபுரம் எல்லாவறையும் மீறி விட்டது.  இதுவரை நாங்கள் எழுதாத, பேசாத நினைக்கவே முடியாத விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கின்றன.

எல்லாம் சாமிகளாகவும், ரிஷிகளாகவும், முனிவர்களாகவுமே காணப்படுவது இன்னும் மோசமாய் இருக்கின்றன.

இதையெல்லாம் பற்றி அந்நிய மதக்காரர்கள் பரிகாசம் பண்ணமாட் டார்களா?  கேவலமாய் நினைக்க மாட்டார்களா? என்கின்ற மான அவமானமே இல்லாமல் போய்விட்டது.

இதை நிறுத்த வேண்டுமா, வேண்டாமா? நிறுத்த வேண்டுமானால், என்ன செய்வது இதுவரை சமயத் திருக்காரரும் சமுக திருக்காரரும் இந்த ஆபாசங்களின் பக்கம் திரும்பியாவது பார்த்தார்களா? போதாக் குறைக்கு பணம் படைத்த மூடர்களும் யோக்கியப் பொறுப்பற்றவர்களும், இந்த சித்திரங்களுக்குச் சாயம் அடித்து ரிப்பேர் செய்கின்றார்களே, அவர்களை என்னவென்றுதான் சொல்லுவது என்பது விளங்கவில்லை.  சிறிதும் ஈவுஇரக்கமில்லாமல் ஊரார் பணத்தை, ஏழைகள் பணத்தைக் கொள்ளை அடித்து அவர்களை பட்டினிபோட்டுவிட்டு இந்த மாதிரி மிருக மனிதப் புணர்ச்சிகளுக்குப் பொம் மைகள் செய்து சாயம் அடித்து பூசை செய்வது என்பது எவ்வளவு இழிவானதும், திமிர் பிடித்ததுமான காரியமாகும்  என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்த லட்சணத்தில் நாங்கள் இந்தக் கோவிலுக்குள் புகுந்துவிடுவோமென்று இப்போது போலீசு காவல் போடப்பட்டிருக்கின்றதாம்.  நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோயில்காரர் களெல்லாம் இப்படியேதான் செய்கின்றார்கள்.  ஆகவே இந்துக்கள், சமயவாதிகள், சைவர்கள், வைணவர்கள் என்பவர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்று கேட்கின் றேன்.  இந்த இந்து மதத்தை இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் காப்பாற்ற போகின்றீர்கள்? என்று கேட்கின்றேன்.  மதம், சாமி, கோயில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.  வருத்தப்பட்டு பயனில்லை.  வெட்கப்படவேண்டும்.  அப்போது தான் அறிவு, ஒழுக்கம், நாகரிகம் விளங்கும்.

ஆகவே சகோதரர்களே!  இவ்விஷயங்களை நன்றாய் ஆலோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பொருளில்லா கூப்பாடு போடு

வதால் பயன் விளையாது.  இனியும் இந்த மாதிரி குஷ்டவியாதி வந்த சரீரம் மாதிரி இந்தச் சமுகம்

நாறி அழுந்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை வணக்கமாய் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

(திருநெல்வேலி ஜில்லா களக்காடு அய்க்கிய முஸ்லீம் சங்க ஆண்டு விழாவில் திரு. ஈ.வெ. ராமசாமியின் 2ஆவது நாள் உபன்யாசம்).

- விடுதலை நாளேடு, 28.2.20