சனி, 29 பிப்ரவரி, 2020

இரண்டு சந்தேகம்?

- சித்திரபுத்திரன் -

15.11.1931  - குடிஅரசிலிருந்து...

போக்கிரி:- திருமதி லேட்டர் அம் மாளை மீராபாயம்மாளாக்கி, முக்காடு போட்டு ஆபாசமாக்கி சீமைக்கு அழைத்துப் போய் இந்திய நாகரிகத்தைப் பாருங்கள் என்று வெள்ளைக்காரர்களுக்குக் காட்டு கிறாரே. அது ஏன்? முக்காடு என்ன அவ்வளவு அழகா? அல்லது, தன்னை ஒரு சனாதன இந்து என்பதற்காகவா?

யோக்கியன்:- அதைப்பற்றிய கவலை உனக்கு எதற்கு? அது அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்தது.

போக்கிரி:- சரோஜனி அம்மாள் அப்படியில்லையே?

யோக்கியன்:- மறுபடியும் பேசுகிறாயே?

போக்கிரி:- சரி, அதைப்பற்றி பின்னால் பேசிக்கொள்ளலாம், திரு. காந்திக்கு திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார் அவர்களின் யோக்கியதை தெரியுமா? தெரியாதா?

யோக்கியன்:- தெரியும் ஏன்?

போக்கிரி:- அவர் காந்தியை மீறித்தானே வட்டமேஜைக்குப் போனார்?

யோக்கியன் :- ஆம்,

போக்கிரி:- அப்படி இருக்க, திரு. காந்தி அவரை எதற்காகத் தனக்கு அரசியல் ஆலோசனை சொல்லும் அமைச்சராக வைத்துக்கொண்டார்.

யோக்கியன்:- இது வேண்டுமானால் நல்ல கேள்வி, ஏன் வைத்துக்கொண்டார் என் றால், திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார் இந்து சுதேசமித்திரன் பத்திரிகைகளின் ஆசிரிய ராய் இருக்கின்றார் என்பதற்காகத் தான். அன்றியும் திரு. ரங்கசாமி அய்யங்காரிடம் திரு. காந்தியின் கைவரிசை ஒன்றும் செல் லாது. ஏனெனில் இந்து பத்திரிகையென் றாலே திரு. காந்திக்கு எப்போதும் நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு உண்டு.

போக்கிரி:- அதெப்படி?

யோக்கியன்:- காலஞ்சென்ற ஒத்துழையா மையின்போது கூட இந்து பத்திரிகை ஒத்துழையாமைக்கு விரோதமாய் விஷமப் பிரசாரம் செய்தும் திரு. காந்தி அடிக்கடி அதன் ஆசிரியருக்குக் கடிதம் எழுதி அவரைக் கைக்குள் போட்டு, ஒத்துழை யாமையைத் தயவுசெய்து கவனித்துக் கொள்ளுங்கள் என்று கடிதமெழுதி இருக் கிறார். அன்றியும் இந்துவும், சுதேசமித் திரனும் சேர்ந்துதான் திரு. தாசுக்கு விளம்பரம் கொடுத்து அவரை தேசபந்து வாக்கி மகாத்மாவை தோற்கடித்து ஒத்து ழையாமையைக் புதைத்து விட்டதுகள். ஆதலால் அதுபோலவே இப்போதும் செய்துவிடுமோ என்கின்ற பயத்தால்தான் திரு. ரங்கசாமி அய்யங்காரை திரு. காந்தி தனது மந்திரியாக்கிக் கொண்டார்.

போக்கிரி:- மற்றவர்களையெல்லாம்விட திரு. ஏ. ரங்கசாமி அய்யங்காரிடம் மாத்திரம் என்ன அவ்வளவு பயம்?

யோக்கியன்:- இந்து, சுதேச மித்திரன் என்றால் பார்ப்பனர்கள் என்று அர்த்தம். அதுவும் தென்னாட்டு அய்யங்கார் பார்ப் பனர்கள் என்ற அர்த்தம். திரு. காந்தியைப் போல் ஆயிரம் காந்தியை அய்யங்கார்ப் பார்ப்பனர்கள் ஆக்கவும் கூடும். அழிக்கவும் கூடும், திரு. காந்தி இவையெல்லாம் தெரியாதவரல்ல. யார் யாரைப் பிடித்து எப்படி எப்படி சரி பண்ணலாம், எப்படி எப்படி விளம்பரம் செய்யலாம் என்பதில் அவருக்கு அனுபோகமுண்டு. லார்டு இர்வினை மகாத்மா இர்வின் என்று காந்தி கூப்பிட்டாரே எதற்கு? என்பது உமக்குத் தெரியுமா?

போக்கிரி:- சரி விளங்கிற்று இனி ஒன்றும் தெரியவேண்டாம்.

புதிய தொண்டரும் பழைய தொண்டரும்

புதுத் தொண்டர்:- வட்ட மேஜை முறிந்து போனால் என்ன செய்வது? ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டி வரும் என்று காந்தி சொல்லுகின்றாரோ,

பழைய தொண்டர்:- அடபயித்தியக்காரா! வட்டமேஜை மகாநாடு முறிந்தால்தான் நமக்கு நல்லது.

பு.தொ:- அதென்ன அப்படி?

ப.தொ:- வட்டமேஜை மகாநாடு முறிந்து போனால், திரு. காந்தி இந்தியாவுக்கு வந்து, மறுபடியும் ஏதாவது சத்தியாக்கிரகம் - சட்டமறுப்பு - என்பதாக, எதையாவது ஒன்றைச் செய்யச் சொல்லுவார்.

பு.தொ:- அதனால் நமக்குகென்ன லாபம்? ஜனங்களுக்குக் கஷ்டம்தானே?

ப.தொ:- அட முட்டாளே! ஜனங்கள் எக்கேடு கெட்டேனும் தொலையட்டும்  அதைப்பற்றி நமக்கென்ன கவலை? நமக்கு எப்படியும் ஒரு வேலை  இருக்குமல்லவா? அதனால் உண்டி வசூலிக்கவோ, பணம் வசூல் செய்யவோ, தேசாபிமானியாகவோ, சவுகரியம் இருக்கும். அப்படியில்லாவிட்டால் நம்மை எவன் சட்டை பண்ணுவான்?

பு.தொ:- நமக்கு வேலை வேண்டிய தற்காகவா தேசியத் தொண்டு செய்வது?

ப.தொ:- சரி! சரி! உனக்கு ஒன்றும் தெரியாது. உங்கள் வீட்டில் ஏதோ சோற்றுக்குக் கொஞ்சம் வகை இருக்கின்றது போலத் தெரிகிறது. அதனால் உனக்கு வட்டமேஜை முறிய வேண்டிய அவசிய மில்லையென்று தோன்றுகின்றது.

பு. தொ:- அதென்ன அப்படி சொல்லு கின்றாய்?

ப.தொ:- வட்டமேஜை ஏதாவது ஒரு வழியில் வெற்றி பெற்று விட்டால், இந்தி யாவில் வேலையில்லாக் கஷ்டம் எவ்வளவு அதிகரிக்கும் தெரியுமா? முக்கால்வாசிப் பத்திரிகைகள் ஒழிந்து போகும். முன் பெல்லாம் பாமரமக்களை ஏமாற்ற மதம் ஒன்று தான் இருந்தது. இப்போது நமது பிராமணப் பெரியோர்கள் தயவினால் தேசியம் என்பதாக ஒன்று ஏற்பட்டு, இதில் அனேகம் பேருக்கு ஜீவனோபாயம் உண்டாயிற்று, மகாத்மா காந்தி அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றார். அதனால் இப்போது நம்போலிருப்பவர்க் கெல்லாம் சோற்றுக்குச் சோறு, துணிக்குத்துணி, கைச்செலவுக்குத் தாராள மாகக் காசு இவ்வளவும் தவிர, போகிற பக்கம், வருகின்ற பக்கம் எல்லாம் திருப்பதி குடை யாத்திரைக்காரருக்கு காலில் தண் ணீர் விட்டு, விழுந்து கும்பிட்டு, தட்டத்தில் காசு போடுகின்ற மாதிரியான மரியாதை- இவ்வளவெல்லாம் இருக்கின்றபோது, இவை அத்தனையும் ஒழிந்து போகின்ற மாதிரியில் வட்ட மேஜை வெற்றி பெற்றால் என்று கேட்கின்றாயே, பாவி!

இதைக் கேட்டதும் எனக்குத் திகீர் என்கிறது.

பு-தொ:- கோபித்துக் கொள்ளாதீர்கள்! எனக்கு அனுபோகம் இல்லாததினால் இப்படிக் கேட்டேனே ஒழிய, உங்கள் பிழைப்பில்நான் கைவைக்கவில்லை.

- விடுதலை நாளேடு 29.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக