01.02.1931 - குடிஅரசிலிருந்து..
தலைவரவர்களே! நண்பர்களே!! மேல்நாட்டின் ஜோதியும், கீழ்நாட்டின் பீதியும் என்னும் விஷயமாய் இன்று மறுபடியும் நான் பேச வேண்டுமென்று குறிப்பிட்டிருக் கின்றீர்கள். இந்தத் தலைப்பைக் குறிப்பிட்டவர்கள் என்ன கருத்தைக் கொண்டு நான் இத்தலைப்பில் என்ன பேசவேண்டுமென்று கருதி ஏற்பாடு செய்தார்களென்பது எனக்குத் தெரியாது. ஒரு சமயம் மேல் நாட்டின் பெருமையையும், கீழ் நாட்டின் சிறுமையையும் பற்றி நான் பேச வேண்டுமென்று கருதினார்களோ என்னமோ தெரியவில்லை. ஆனபோதிலும் இத்தலைப்பை நான் காலையில் பார்த்தவுடன் சில விஷயங்கள் சொல்லலாமென்பதற்காக கருதி சில குறிப்பு வைத்திருந்தேன். ஆனால், இப்போது எனக்கு முன் பேசிய மன்னார்குடி ஜனாப் யூசுப் பாவலர் அவர்கள். சமாதி வணக்கம், கொடி பஞ்சா முதலிய உற்சவங்கள் இஸ்லாம்மார்க்க ஆதாரங்களில் கிடையாதென்றும், அவையெல்லாம் புரோகிதக் கூட்டத்தாரால் புகுத்தப்பட்ட மக்கள் மூடநம்பிக்கையால் பின் பற்றுவதாகு மென்றும் சொன்னபோது இங்கு கூட் டத்திலுருந்த இரண்டொருவர் ஏதோ பிரமாதமாய் முழுகிப் போய்விட்டது போல் கருதி கூக்குரலிட் டதையும், கோபத்துடன் ஆட்சேபிப்பதையும் பார்த்தவுடன் நான் முன் குறிப்பிட்டு வைத்தவைகளை யெல்லாம் தூர தள்ளிவிட்டு அவருக்காகப் பீதியையும் இன்னும் அதுபோலவே இந்துக்கள் என்பவர்களுக்கு ஏற்பட்ட பீதியையும் பற்றியே பேச வேண்டியது அவசியம் என்று கருதி விட்டேன். அதாவது இம்மாதிரி கீழ் நாட்டின் பீதியை ஒழிக்க வேண்டியது நமது முதற் கடமையென்பதைப் பற்றியே பேசுகிறேன்.
நண்பர்களே, ஏதாவதொரு விஷயத்திற்கு ஆதாரமில்லையென்றோ, அது அறிவுக்குப் பொருத்தமில்லையென்றோ, அதனால் பயனில்லை என்றோ, அல்லது அதனால் இன்னின்ன கெடுதி என்றோ யாராவதொருவர் எடுத்துச்சொன்னால் அதற்கு மாறுபட்டவர்கள் அறிவுள்ளவர்களாயிருந்தால் அல்லது தங்கள் கருத்தில் உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் அப்படிப் பட்டவர்கள் செய்ய வேண்டிய யோக்கியமான வேலை என்ன வென்றால் தைரியமாக தக்க சமா தானம் சொல்லி தங்கள் கொள்கைகளை தாங்கள் நடந்து வருவதற்கேற்ற ஆதாரங்களைக் காட்டி அறிவு அனுபவம் ஆகியவைகளுக்குப் பொருத்தி மெய்ப்பித்துக் காட்ட வேண்டியது யோக்கியமான கடமையாகும். அந்தப்படியான காரியம் ஒன்றும் செய்யாமல் எடுத்தற்கெல்லாம் கடவுள்போச்சு, மதம் போச்சு, மார்க்கம்போச்சு, ஆண்டவனின் நம்பிக்கை போச்சு, ஆண்டவன் வார்த்தைக்கு விரோதமாச்சு என்று வெறும் கூப்பாடுபோடுவதனால் என்ன பயன் விளையக்கூடும். மக்கள் மூடர்களாயிருக்கும் வரை இம்மாதிரி கூப்பாடுகளை மதித்து அவர்களும் ஏதோ முழுகிப்போய்விட்டது போல் ஆத்திரப்படக் கூடும். பிறகு அவர்களுக்கு விவரம் தெரிந்து விட்டால் இந்த மாதிரி கூப்பாடு போட்டவர்களை வட்டியோடு அவமானம் செய்துவிடுவார்கள்.
விஷமப் பிரச்சாரமும், சுயநலப் பிரச்சாரமும் வெகு நாளைக்கு இருக்க முடியாது. எந்த மக்களுக்கும் பகுத்தறிவு செல்வாக்குப் பெறும் போது ஏமாற்றினவர்கள் மீதுதான் முதலில் அவர்களது ஆத்திரமெல்லாம் திரும்பும். பிறகுதான் தங்கள் தங்கள் முட்டாள் தனத்தைப் பற்றி வருந்து வார்கள். ஆகையால்தான் விஷமப் பிரச்சாரங்களைப் பற்றி நான் எப்போதுமே பயப்படுவதில்லை. ஆனால், சொல்லுபவர்கள் சொன்னால் கேட்பவர் களுக்கு மதி வேண்டாமா? என்பதுதான் என் கேள்வி.
நண்பர்களே! என்னைப் போல ஒரு சாதாரண மனிதன் பேசுவதினாலோ, தனக்குத் தோன்றியதை எழுவதுதினாலோ, கடவுள்போய் விடும் ? மார்க்கம் போய்விடும் ? சமயம் போய் விடும் என்று நீங்கள் பீதி அடைவீர்களேயானால், உங்கள் கடவுளுக்கும். மார்க்கத்திற்கும் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதை யோசித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் கடவுளை உறுதியானவரல்ல. உண்மையானது அல்ல என்றும் உங்கள் சமயம் உறுதியானது அல்ல, உண்மையானதல்ல என்றும் நீங்களே கருதியிருக் கின்றீர் களாகிறீர்கள். நாங்கள் உங்கள் கடவுளையோ, சமயத்தையோ இல்லை யென்று சொல்லுவதற்காக இங்கு வரவில்லை என்பதை உறுதியாய் நம்புங்கள். அவைகளைப் பற்றி உண்டு இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிவதல்ல எனது வேலை.
நீங்கள் சொல்லுவதற்கு நீங்கள் பின்பற்றுவதற்கு ஆதாரமென்ன ? அது உங்கள் பகுத்தறிவுக்கும் பொருத்தமானதாயிருக்கின்றதா? அனுபவத்திற்கு ஒத்து வருகின்றதா? என்று யோசித்துப் பாருங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்வது தான் எனது வேலையாகும். அவைகளுக்கு இடம் கொடுப்பதா லேயே உங்கள் கடவுளோ, மதமோ, ஆதாரமோ, போய்விடுமென்று நினைத்தீர்களானால் அவை களைப் பற்றி மறுபடியும் வெறியில் பேசுவது வெட்கக்கேடான காரியமல்லவாவென்று கேட் கிறேன்.
இந்தப்படி ஆராய்ச்சி செய்து பார்ப்பதாலேயே மறைந்து போகும் மார்க்கமும், ஆண்டவனும் பிறகு என்ன காரியத்திற்குத் தான் பயன்படக் கூடுமென்பதை நீங்கள் ஆத்திரப்படாமல் யோசித்துப் பாருங்கள். எங்கள் கடவுள் சர்வசக்தி, சர்வ வியாபகமாயிருக்கக் கூடியவர் என்று கருதிக் கொண்டு அவரால் ஏற்பட்டது எங்கள் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நீங்கள் அப்படியானால் சற்று ஆராய்ச்சி செய்து அறிவிற்கு பொருத்தமாயிருக்கின்றதா என்று பார்க்கலாமா? என யாராவது கேட்டால் உடனே இந்த மாதிரி பயந்தால்
அப்பொழுது இந்தப் பயப்படுகின்ற ஆட்களுக்குக் கடவுள் சர்வசக்தி உள்ளவர்கள் என்கின்ற விஷயத் திலும், அவர் சர்வவியாபகமுள்ளவர் என்கின்ற விஷயத்திலும் தங்கள் மார்க்கம் அவரால்தான் ஏற்பட்டது என்பதிலும் நம்பிக்கை யிருக் கின்றதா வென்பதை யோசித்துப் பாருங்கள். மனிதனுடைய அறிவிற்குப் பயப்படும் கடவுளும், அவனது ஆராய்ச்சிக்கு சற்று பயப்படும் மார்க்கமும், உலகத்தில் யாருக்கு என்ன பயனை அளிக்கக் கூடும்? அறிவையும், ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் இப்படி பயந்து ஓடுகிறீர்கள்?
ஆராய்ச்சிக்கும் மதிப்பு கொடுக்காத காரணமே இன்று இந்தியா உலகிலுள்ள நாடுகளிலெல்லாம் அடிமையான நாடாகவும், இந்தியா உலகிலுள்ள மக்களிலெல்லாம் இழிவான மக்களாகவுமிருக்க வேண்டியதாகிவிட்டது. கடவுள் என்றால் குருட்டு நம்பிக்கை, மதம் என்றால் மூட நம்பிக்கையென்கின்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையைத் தவிர, கடவுளுக்கும் மதத்திற்கும் வேறு அவமானம் வேண்டியதில்லை.
இந்த மாதிரி அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பயந்த கூட கடவுளையும் மதத்தையும் வைத்திருக்கின்றவனை விட கடவு ளையும், மதத்தையும் பற்றி கவலைப் படா தவனே, இல்லையென்று கருதிக் கொண்டிருக்கின்ற வனே வீரன் என்று நான் சொல்லுவேன்.
ஏனெனில், கவலைப்பட்டு கொண்டு உண்டு என்று சொல்லிக் கொண்டு மெய்ப்பிக்க திண்டாடிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும் திரிவதும் பயங்காளித் தனமென்றே சொல்லுவேன்.
சகோதரர்களே! நாங்கள் வேலை இல்லாவெட்டி ஆள்களா? அல்லது ஏதாவது பூசாரி புரோகிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது ஏதாவது பண்டிதபுராண காலட்சேபக் கூட்டத்தார்களா? எங்களுக்கு இந்த வேலையில் ஏதாவது ஜீவனத்
திற்கோ, பெருமைக்கோ சிறிதாவது இதில் வழியுண்டோ ?
- தொடரும்-
- விடுதலை நாளேடு 14 .2.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக