வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும்- 3

01.02.1931 - குடிஅரசிலிருந்து..

சென்ற வாரத் தொடர்ச்சி

மனிதனின் நன் மைக்கும், சவுகரியத் திற்கும்,  மார்க்கம் ஏற்பட்டதென்று கருதி தற்கால அறிவுக்கும், நிலைமைக்கும் ஒத் திட்டுப் பாருங்கள்.  எக்காலத் திற்கும் ஏற்ற மதமென்றால் காலத்திற்கு ஏற்றப்படி தானாகவே, மாறவோ, மாற்றிக் கொள் ளவோ சவுகரியமிருக்கும் என்பதில் பயமோ, அவநம்பிக் கையோ  கொள்ளாதீர்கள்.  இருட்டானால் விளக்கைப்பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.  பகலா னால் விளக்கை அணைத்து விடுங்கள் என்றுதான் பகுத்தறிவுள்ள மார்க்கம் சொல்லி இருக்கும். எப்போதும் விளக்கு வைத்திருங்கள் என்றோ, எப்போதும் விளக்கை வைக்காதிருங்கள் என்றோ சொல்லி இருக்க முடியாது.

ஆகவே காலப் போக்குடன் கலந்துகொள்ளப் பயப்படாதீர்கள்.  இந்தியாவிற்கு இரண்டு மதம் சொந்தமாகிவிட்டது.  அதாவது இந்து மதம், இஸ்லாமிய மதம், இரண்டும் ஒன்றுபட்டாலொழிய இந்தியாவிற்கு விடுதலை இல்லை.  ஒருவர் மதத்திற்கு ஒருவர் வர வேண்டுமென்றால் ஒரு நாளும் முடிவு பெறாது.  இருவரும் பகுத்தறிவுபடியே நடந்துக் கொள்ளலாம் என்றால், யாருக்கும் ஆட்சேபணை இருக்க வழியிருக்காது.

தங்கள் மதம் பகுத்தறிவுக்கு ஏற்றதாய் இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிப்பாய் இந்த ராஜிக்கு ஒப்புக் கொள்ளலாம்.  அப்படிக்கு நம்பிக்கை இல்லாதவர்கள் எடக்குப் பேசித்தான் தீருவார்கள்.  அவர்கள் அதன் பயனை அடைந்து தான் தீருவார்கள்.

இந்த நிலையில் என்ன சுயராஜ்யம் வந்தாலும் பூரண விடுதலை வந்தாலும் அவை நமக்குள் உதை போட்டுக் கொள்ளத்தான் உதவும்,  இதுவரை பொதுவாகப் பேசினேன்.

கடைசியாக இந்துக்களுக்கென்றே சில வார்த்தை பேசுகின்றேன். ஏனெனில், நானும் சில நண்பர்களும் சாப்பிட்ட தற்குப் பிறகு ஒரு நண்பர் இந்த ஊர் கோயில் தேரையும், கோபுரத்தையும், வந்து பார்க்கும் படி கூப்பிட்டார்கள்.  நாங்கள் பார்ப்பதற்காக அங்குச் சென்றோம்.

பிறகு அங்குப் பார்த்த ஆபாசங்களை அப்படியே சொல்ல வெட்கப்பட வேண்டிய தாகவே இருக்கிறது.  காட்டுமிராண்டிகள் காலத்தில்தான் சாமிகளும், கோயில்களும் ஏற்பட்டதென்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாதபடி அவைகள் அமைக்கப் பட்டிக்கின்றன.

முதலாவது நாங்கள் இந்த ஊர்த் தேரைப் பார்த்தோம்.  அதில் சித்திரம் வைக்கப்பட்டிருக்கும். உருவங்கள் மிக மிக ஆபாசமானவையாய் காணப்பட்டன.  அவைகளுக்கு என்ன தான் தத்துவார்த்தம் சொன்னாலும், மனிதப் பெண்ணை கழுதை சம்போகம் பண்ணுவது போலவும் போன்ற மற்றும் பல உருவங்களைச் சித்தரித்து வைத்திருப்பதை எப்படி ஒத்துக்கொள்வது என்பது எனக்கு விளங்கவில்லை.

கோபுரங்களை பார்த்ததைப்பற்றி சொல்லலாம் என்றாலோ அதைப்பற்றி இன்னும் ஒரு தடவை நினைப்பதற்குகூட கஷ்டமாய் இருக்கின்றது.  பெண்களை அதில் படுத்துகின்றபாடும்,  காம விகாரங்களை அதில் எடுத்துக் காட்டி இருக்கும்,  முறையும் அநியாயம் அநியாயம்.

இவைகளையெல்லாம் நெருப்பை வைத்து கொளுத்தி இடித்து எரித்து, இவற்றிற்கு ஆதாரமான சாத்திரங்களையெல்லாம் பொசுக்கி சமுத்திரத்தில் கரைத்து விட்டாலொழிய இதைச் சார்ந்த மனிதர்கள் மனிதர்களாகக் கருதப்பட முடியவே முடியாது.

சுயமரியாதைக்காரர்கள் புராணக் குப்பைகளைக் கிளறிக்கிளறி வெறும் ஆபாசங்களைப் பேசுகின் றார்கள் எழுதுகின்றார்கள் என்று பேசுகின்றீர்கள். எங்கள் மீது சில சமயத்தில் வெறுப்பும் கொள்ளு கின்றீர்கள்.

ஆனால், இந்தக் கோயில்களுக்குப் போய், தேங்காய் பழம் உடைத்து வைத்து, காசும் கொடுத்தும் இந்த உருவங்களைப் பார்க்க வந்து கொண் டிருப்பவர்கள் மனிதர்களா? என்பதைப் பற்றி நீங்கள் சிறிது கூட சிந்திப்பதில்லை.

நாங்கள் எழுதுவதையும், பேசுவதையும் பார்த்து வெறுப்புக்கொண்டு என்ன செய்வது? இவ்வளவு பேசியும், எழுதியும் இந்த நடவடிக்கைகள் நின்றனவா? நிறுத்த யாராவது பாடுபட்டீர்களா?  காரமடைத் தேரில் இதைவிட அசிங்கமாய் பார்த்தேன்.  திருவொற்றியூரில் வெகு ஆபாசமாய்ப் பார்த்தேன்.

மதுரை  முதலிய இடம் சொல்லவேண்டிய தில்லை.  ஆனால், இந்த ஊர்கோபுரம் எல்லாவறையும் மீறி விட்டது.  இதுவரை நாங்கள் எழுதாத, பேசாத நினைக்கவே முடியாத விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கின்றன.

எல்லாம் சாமிகளாகவும், ரிஷிகளாகவும், முனிவர்களாகவுமே காணப்படுவது இன்னும் மோசமாய் இருக்கின்றன.

இதையெல்லாம் பற்றி அந்நிய மதக்காரர்கள் பரிகாசம் பண்ணமாட் டார்களா?  கேவலமாய் நினைக்க மாட்டார்களா? என்கின்ற மான அவமானமே இல்லாமல் போய்விட்டது.

இதை நிறுத்த வேண்டுமா, வேண்டாமா? நிறுத்த வேண்டுமானால், என்ன செய்வது இதுவரை சமயத் திருக்காரரும் சமுக திருக்காரரும் இந்த ஆபாசங்களின் பக்கம் திரும்பியாவது பார்த்தார்களா? போதாக் குறைக்கு பணம் படைத்த மூடர்களும் யோக்கியப் பொறுப்பற்றவர்களும், இந்த சித்திரங்களுக்குச் சாயம் அடித்து ரிப்பேர் செய்கின்றார்களே, அவர்களை என்னவென்றுதான் சொல்லுவது என்பது விளங்கவில்லை.  சிறிதும் ஈவுஇரக்கமில்லாமல் ஊரார் பணத்தை, ஏழைகள் பணத்தைக் கொள்ளை அடித்து அவர்களை பட்டினிபோட்டுவிட்டு இந்த மாதிரி மிருக மனிதப் புணர்ச்சிகளுக்குப் பொம் மைகள் செய்து சாயம் அடித்து பூசை செய்வது என்பது எவ்வளவு இழிவானதும், திமிர் பிடித்ததுமான காரியமாகும்  என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்த லட்சணத்தில் நாங்கள் இந்தக் கோவிலுக்குள் புகுந்துவிடுவோமென்று இப்போது போலீசு காவல் போடப்பட்டிருக்கின்றதாம்.  நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோயில்காரர் களெல்லாம் இப்படியேதான் செய்கின்றார்கள்.  ஆகவே இந்துக்கள், சமயவாதிகள், சைவர்கள், வைணவர்கள் என்பவர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்று கேட்கின் றேன்.  இந்த இந்து மதத்தை இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் காப்பாற்ற போகின்றீர்கள்? என்று கேட்கின்றேன்.  மதம், சாமி, கோயில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.  வருத்தப்பட்டு பயனில்லை.  வெட்கப்படவேண்டும்.  அப்போது தான் அறிவு, ஒழுக்கம், நாகரிகம் விளங்கும்.

ஆகவே சகோதரர்களே!  இவ்விஷயங்களை நன்றாய் ஆலோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பொருளில்லா கூப்பாடு போடு

வதால் பயன் விளையாது.  இனியும் இந்த மாதிரி குஷ்டவியாதி வந்த சரீரம் மாதிரி இந்தச் சமுகம்

நாறி அழுந்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை வணக்கமாய் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

(திருநெல்வேலி ஜில்லா களக்காடு அய்க்கிய முஸ்லீம் சங்க ஆண்டு விழாவில் திரு. ஈ.வெ. ராமசாமியின் 2ஆவது நாள் உபன்யாசம்).

- விடுதலை நாளேடு, 28.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக