ஞாயிறு, 29 மே, 2016

எலி வளை தோண்டும் பரிதாபம் பஞ்சமர்க்கு



1.4.1934 குடியரசிலிருந்து
பங்குனி மாதம் முதலோடு விளைந்த தானியமெல்லாம் மிராசுதார் வீட்டு கொல்லை தலைமாட்டு சேரடியில் கட்டுக் கிடை செய்யப் பட்டாகிவிடும். பங்குனிமாதத்தோடு போராடி கருக்காய் பட்டறை இவைகளில் ஒட்டி கொண் டிருக்கும்  ஒன்று இரண்டு நெல் தானியங் களையும் கசக்கி எடுத்து பண்ணை வீட்டில் கொண்டு வந்து பந்தோபஸ்து செய்தாகி விடும்.
சேரடியில் பந்தோபஸ்து செய்யும் நெல் எல்லாம் வியாபாரிக்கு போட்டவை போக மிகுதியாக இருப்ப வைகளே கட்டுக்கிடை செய்யப்படும். கட்டுக்கிடை செய்வ தெல்லாம் ஆடி அறுதலையில் கிறாக்கியாக கிரயம் செய்வதற்காகவே இருப்பு செய்ய ப்படுவதின் அந்தரங்க நோக்கமாகும். இந்த மாதங்களில் தான் மிராசுதார்கள் செய்து கொள்ளும் வியா பாரக் கடன்களை ஈடுசெய்துகொள்வது வழக்கம்.
மிராசுதார்களின் தாசி வேசிகளுக்கு மனம் பூரிப்படையும் படி சன்மானம் அளிக்கும் சந்தோஷகரமான காலமும் இதுவாகும், வேசியர்கள் வீட்டுக்கு பரிதாப ஜாதியார் உழைத்து சேமித்திருக்கும் தானியம் வருஷ பூராவும் உட்கார்த்து தின்று கொழுக்கட்டுகிடை செய்யும்  காலமும் இதுதான். பரிதாப ஜாதியார் உழைத்து சேமித்திருப்பதில் உடல் நலுங்காமல் உட்கார்ந்த இடத்தில் குடி கூத்தியில் சுகமாக சஞ்சரிக்கும் மிராசுதார்கள் ஒரு பகுதியார். குடும்ப கவலையுள்ள மிராசுதார்கள் என்ற ஒரு கூட்ட முண்டு.
இவர்கள் பிறர் ஜோலிக்கு போக மாட்டார்கள் என்றும், பிறத்தியான் காசுக்கு ஆசைப் பட மாட்டார்கள் என்று நல்ல பெயருக்கு பாத்திரப்பட்டு காலம் கழிப்பவர்கள். இக் கூட்டத்தார் குடும்பத்துக்கு அவசியமான சாமான்களை வாங்கி அபிவிர்த்தி செய்வதிலும்,
பெண்டாட்டி பிள்ளை குட்டிகளுக்கு காலத்துக்கேற்ற நவீன முறையில் நகைகளை செய்து போட்டு அலங்கரித்து ஆசை பார்ப்பதும், பாத்திர பண்டங்கள் வாங்குவதும், மிகுந்தவைகளை தக்க இடத்தில் வட்டிக்கு விட்டு இருக்கும் சொத்தோடு சொத்தாக அபிவிர்த்தி செய்யும் வேலையில் காலம் கழித்துக் கொண்டிருப்பவர்கள்.
இன்னொரு சாரார் தர்மிஷ்டர் என்று சொல்லப்படுபவர்கள். இப்பகுதியார் ஸ்தல யாத்திரை, தீர்த்த ஸ்தானம், பிராமண சமாறாதனை போன்ற கைங்கர்யங்களின் பரிதாப ஜாதியாரின் உழைப்பை செலவிடக் கூடியவர்கள் இந்த கைங்கர்யங்கள் செய்வதால் போற கெதிக்கு நல்ல கெதி கிடைக்கக்கூடிய மகான் என்ற பட்டத்தை சிலசோம்பேறிகளுக்கு கொடுக்கப் படும் இனத்தை சேர்ந்தவர்கள்.
இப்படியே தங்கள், தங்கள் மனோபிஷ்டத்தை யாதொரு கவலையில்லாமல் தாராளமாக பூர்த்தி செய்து கொள்வதில் பரிதாப ஜாதியாரின் உழைப்பின் பலனை உபயோகப்படுத்தி கொண்டாலும், தங்கள் வருவாய்க்கு மூல கருவியாக இருந்த பரிதாப ஜாதியாருக்கு தானியம்.சொரிந்த அந்த காலத்திலும் அவர்களுடைய கேவல நிலைமைக்கு விமோசனமில்லை. பங்குனி, சித்திரை, வைகாசி இந்த மூன்று மாதங்கள் மகசூல் முடிவடைந்த காலமாய் இருந்தாலும் பரிதாப ஜாதியார் வீட்டில் கால்படி நெல்லுக்கும் வழியிருக்காது.
அதோடும் இந்த மூன்று மாத காலமும், கால்படி அரைப்படி கிடைக்கக்கூடிய வேலையுள்ள கலமுமல்ல என்பதை  சொல்ல வேண்டியதில்லை. இம்மாதங்களில் வயிற்றுக்கு வழியில்லாமல் எலி வளை தோண்டுவதென்ற பழக்கம் எல்லா கிராமத்திலும் பரிதாப ஜாதி யாரிடம் காணப்படும் இது சாதாரண சம்பவம். எலிகள் தங்கள் வயிற்றுக்கு உணவுக்கு திருடி வைத்திருக்கும் தானியங்களை பரிதாப ஜாதியார் தங்கள் பசிப்பிணியைத் தீர்த்துக்கொள்ள வெட்டி எடுப்பார்கள்.
இந்த வளைகள் பெரும்பாலும் வயல் கரைகளிலேயே இருக்கும் எலிவளை தோண்டுவதிலும் பகிரங்கமாக தோண்டு வதற்கு முடியாது. ஆண்டைமார்களுக்குத் தெரியாமல் ரகசியமாய் தான் வெட்டிஎடுக்கவேண்டும்.
ஆண்டைமார் களுக்கு தெரிந்துவிட்டால் வயல்களையே பறப்பயல்கள் வெட்டி நாசப்படுத்தி விட்டான் என்ற குற்றத்துக்கு உட் படும்படி ஏற்படும். எலி வளையிலிருக்கும் தானியத்தை பரிதாப ஜாதியார் பசிக்கொடுமையால் வெட்டி எடுக்கிறார்கள்.
அவர்கள் உழைப்பை எல்லாம் இருப்பு செய்து  கொண்டு மேலே சொன்னபடி தங்கள் இஷ்டத்துக்கு சிலவு செய்து கொண்டிருக்கிறோமென்கின்ற கருணை இல்லாமல் அவர்கள் செய்யும் அடாதச்செய்கையை கொஞ்சம் கவனிக்கவேண்டும்.
பசிப்பிணியால் எலிவளைதோண்டும் பரிதாபகரமான காட்சி யை ஈவு, இரக்கமில்லா மிராசுதார்களோ, அல்லது அவர் களிடத்தில் கைகூலி வாங்கும் மணியாரன், கிராமதலையாரி போன்றவர்களோ அகஸ்மாத்தாய் கண்டுவிட்டால் கண்ட விடத்தில் கொடுக்கும் உதையோடு ஆண்டை வீட்டு அடி வாசலில் கொண்டு நிறுத்துவார்கள். ஆண்டைவீடு ஆனதால் அங்கு கட்டிவைத்து செம்மையாக உதை கொடுக்கப்படும்.
இதோடாவது பசியால்வாடி நிற்பவனை விடுவார்களா என்றால் அதுதான் இல்லை. கரையை வெட்டி சேதம் விளைவித்த நஷ்டத்துக்கு என்று சொல்லி குறிப்பிட்ட ஒரு தொகையை அபராதம் விதித்து பரிதாப ஜாதியாரின் உழைப்பில் பிடித்து வைத்திருக்கும் வருமானத்தின் ஒரு பகுதியில் ஈடு செய்துகொள்வர்கள்.
இப்படியே அவர்கள் வருமானத்தில் பெரும்பாகம் மிராசுதார்களால் சூறை யாடப்படும். இம்மாதிரியான வாழ்வே அவர்களின் வாழ்வு என்பதை எங்கும் சர்வசாதாரணமாக காணப்படும் சம்பவமே அல்லாமல் மிகைப்படுத்தி சொல்லியதல்ல.
சுருங்க உரைக்கின், தானியம் குவித்த கோடையில் எலி வளை தோண்டுவதும் தானியம் குவிய வயல்களை பண் படுத்தும் ஆடையில் நண்டுவளை நத்தைவளை அக் கட்டத்தின் உழைப்புக்கு பலன் என அறிக.
விடுதலை,29.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக