ஞாயிறு, 1 ஜூலை, 2018

கோர்ட்டுகளும் சூதாட்டமும்

தந்தை பெரியார்



கோர்ட்டு என்பது சூதாடுமிடம்

நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டுப் பார்ப்பனர் களின்  அடிமை களாகி  அவர்களின் வாலைப்பிடித்துக் கொண்டு திரிவதற்கு முக்கியக் காரணம் நம்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள்  என்று சொல்லப்படும் சூதாடுமிடங்களும், அவைகளுக்கு ஜட்ஜுகள் என்று சொல்லப்படும் சூதாட்ட நிர்வாகிகளுமே ஆவார்கள்.

சீட்டு மேஜை

அதாவது ஒருவர் ஒரு வீட்டை சூதாட்டத்திற்கு வாடகைக்குக் கொடுத்திருந் தால் அவ்வீட்டில் சூதாடிகளை ஒன்றுசேர்த்து அவ்வாட்டத்திற்கு அனுகூலமான சாமான் களையும் ஆடவசதியையும் செய்து கொடுத்து சீட்டு மேஜைக்காக என்றும் கூலி வாங்குகிறவன் ஒருவனுண்டு, சூது ஆடவருகிறவர்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் இவ்வளவு என்று கொடுத்துவருவதுண்டு. சாதாரணமாக காலைமுதல் மறுநாள் காலை வரையில் ஆளுக்கு இவ்வளவு என்பதாக கையில் பணம் வைத்துக்கொண்டு சூதாட ஆரம்பித்தால் கடைசியாய் எழுந்து போகும் போது நாலுபேர் தோல்வி அடைந்து கடன் காரராய் எழுந்து போவதும்  இருவர் சம்பாதித்தவர்களாகவும் இருவர் அசலோடு போவதாகவும் காணப்படும், சம்பாதித்தவர் என்பவர்களுக்கு அவர்கள் அசலும் மேல்கொண்டு கால்ரூபாயோ அரை ரூபாயோ லாபமிருப்பதாகத் தெரியும். அதுவும் தோற்றவர்கள் மேல் கடன் விட்டிற்கும் தொகையா யிருக்கும். ஆனால் தோற்றபணமும் கடன்காரராக்கிய பணமும் எங்கு போய்விட்டதென்று பார்ப்போமேயானால் வீட்டு வாடகை காரனுக்கும் சீட்டாட வசதி செய்து  கொடுத்த சீட்டுமேஜைக்காரனுக்கும், அந்த இடம் தெரிந்து அங்குவந்து மிரட்டிய போலீஸ்காரனுக்கும் தான்போயி ருக்குமே ஒழிய ஆடினவர்களுக்கு லாபமிருக்காது, இப்படியே தினப்படி வந்து சூதாடுவதும் தினப்படிபலர் தோல்வியடைவதுமாயிருக்குமே ஒழிய ஜெயித்தவர்களுக் குத் தோற்றவர்கள் பணம் அவ்வளவும் வந்திருக்காது. அதுபோலவே கோர்ட்டு நீதி என்பது இடம் கொடுத்தவர் களுக்கு சமானமாகிய அரசாங்கத்திற்கும் ஆடவசதி செய்து கொடுத்து சீட்டுமேஜை வாங்கியவர்களுக்குச் சமான மாகிய வக்கீலுக்கு மிரட்டி காசுவாங்கும் போலீசுகாரனுக்குச் சமானமாகிய கோர்ட்டு சிப்பந்திகளுக் கும் தூணுகளுக்கும் போய் சேர்ந்துவிடுகிறதே தவிர உண்மையான விவகாரக் காரனுக்கு ஒன்றுமே மீதியாவதில்லை.

தோற்றாலும் கெடுதி ஜெயித்தாலும் கெடுதி

விவகாரத்திற்கு வரும் வாதி தோற்றால் அனேகமாய் பாப்பராய் விடுகிறான். ஜெயித்தால் செலவு செய்த தொகையை அடைந்தவனாகிறான். அதுபோலவே பிரதி வாதியும் ஜெயித்தாலும்தோற்றாலும் அநியாயமாய் கெட்டுப்போகிறான். இதன் காரணம் என்னவென்று பார்ப்போமேயானால் பிரிட்டிஷ் கோர்ட்டுகள் என்று சொல்வது பலருக்கு உத்தியோகம் கிடைக்கவும் வக்கீல்கள் பிழைக்கவும் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டனவே அன்றி குடிமக்கள் நீதி அடைய அல்லவே அல்ல என்பதுதான்.

நியாயம் கிடைக்கும் தன்மை

வக்கீல்களின் புரட்டுகளாலும் தந்திரங்களாலும் விவகாரக்காரனுக்குக் கையில் பணமிருக்கிறவரை "நியாயம்" கிடைக்கும் மாதிரி  வசதி செய்யப் பட்டிருக்கிறது. சிற்சில சமயங்களில் சில விவகாரகாரனுக்குக் கைப்பணம் தீர்ந்துபோனபிறகுகூட கடன் கிடைப்பதாயிருந்தால் மறுபடியும் கூட நியாயம் கிடைக்க வழியிருக்கிறது. பெரிய விவகாரங்களில் நியாயம் என்பது சட்டத்தைப் பொருத்த தாகவே இல்லை. மாதிரி கேசுகளில் இதற்கு முன் உள்ள ஜட்ஜுகள் என்ன அபிப்பிராயம் கொடுத்திருக்கிறார். இன்ன ஊர் ஜட்ஜு எப்படி தீர்ப்பு சொல்லி இருக்கிறார் என்று பழைய ஜட்ஜுகளின்  அபிப்பிராயமே  சட்டமாயி ருக்கிறது. சில கேசுகளில் அந்தந்த ஜட்ஜுகள் கொள்ளும் அபிப்பிராயமே சட்டமாகும். நீதி ஸ்தலங்கள் என்பவை வரிசைக் கிரமமாய் முன்சீப் கோர்ட், ஜில்லா ஜட்ஜு அல்லது சப்ஜட்ஜு அப்பீல், ஹைக்கோர்ட் அப்பீல், புல்பெஞ்சு அப்பீல், லட்டர்ஸ்பேட்டெண்ட் அப்பீல், ரிவிஷன்  பிரிவி கவுன்சில் என படிப்படியாய் பல ஸ்தானங்கள் விவகாரக் காரன் அறிவீனத்திற்கும் ஆணவத்திற்கும் பணத்திமி ருக்கும் தக்கபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவுக்கும் தூண்டுகோலென வக்கீல் கூட்டங்களும் இவர்களை நத்திப் பிழைக்கும் இவர்களது புரோக்கர்களும் மலிந்து வருகின்றன. இவ்வித நியாய ஸ்தலமுறையும் நியாயவாதி முறையும் நியாயங் கிடைக்கு முறையும் நீங்காமல் மக்கள் சுயராஜ்ஜிய மடைந்துவிடலாம் என்பது சமுத்திர நீரை எல்லாம் குடித்துவிடலாம் என்பது போலவே ஆகும்.

கோர்ட்டு ஏற்படுத்தினதின் கருத்து

பொதுவாய் நோக்குமிடத்து இம்முறைகள் நாட்டின் விடுதலைக்கு விரோதமாகவும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாகவும் சர்க்காரும் பார்ப்பனரும் கூடிசெய்த சூழ்ச்சியே அல்லாமல் வேறல்ல.

தற்கால தேசாபிமானம்

தற்கால "தேசாபிமானி" என்பவருக்கும் பொது நல சேவை செய்பவர் என்பாருக்கும் இம்மாதிரி கோர்ட்டுகளையும் நியாயம் கிடைக்கும் முறைகளையும் இன்னும் அதிகமாக உற்பத்தி பண்ணுவதே யோக்கிய தாம்சமாயிருக்கிறது. சமீபத்தில் சட்டசபைக்கு நின்ற கனவான்களில் ஒருவர் தன்னுடைய யோக்கிய தாம்சத்தை வெளிப்படுத்திய ஒரு அறிக்கையில் நான் இன்ன ஊருக்கு கோர்ட்டுகள் வைக்கும்படி செய்தேன். இன்னஊரில் எடுக்கப்பட்டுவிட இருந்த கோர்ட்டை நிலை நிறுத்தினேன். ஆதலால் எனக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று வெளியிட்டிருந்தார். இதுபோலவே ஒரு ஒட்டர் ஒரு சட்டசபை அபேட்சகருடைய யோக்கியதையைப் பரிசீலிக்கையில் அவ்வபேட்சகரைப் பார்த்து நீர் இந்த ஊரில் ஏற்பட இருந்த  சப்- கோர்ட்டை வேண்டாமென்று சொன்னீராம். ஆதலால் உமக்கு தேசபக்தி இல்லை. 'நீர் பொதுநலசேவைக்காரராக மாட்டீர் உமக்கு ஓட்டு  செய்ய முடியாது' என்று சொன்னாராம். அதற்கு அந்த அபேட்சகர் 'நீர் தப்பாய் நினைத்துக் கொண்டீர், நான் இந்த ஊருக்கு ஒரு ஜில்லா கோர்ட்டே வரவேண்டுமென்கிற ஆசையினால் சப்கோர்ட் வேண்டாமென்று சொன்னேன். இந்த ஊர் நிலைமைக்கு இங்கொரு ஜில்லா கோர்ட்டு வேண்டாமா? அனேக ஜில்லாக்களில் இரண்டு ஜில்லா கோர்ட் இருப்பது போல் இந்த ஜில்லாவுக்கும் இரண்டு கோர்ட் வேண்டும். அதற்கு இந்த ஊர்தான் தகுதி' என்று சொன்னாராம்.  இதிலிருந்து இம்மாதிரி ஓட்டர்களுக்கும் அபேட்சகர் களுக்கும் எவ்வளவு தேசபத்தியும் பொதுநல சேவையும் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் தெரியும்.

சட்டமென்பது தேசபக்தி

அரசாங்கத்தாரின் மற்றபடி சட்ட சம்பந்தமான இலாகா சட்டமெம்பரின் வேலை தான் என்ன? இவ்வருஷம் சட்ட கலாசாலையில் (லாகாலேஜில்) படித்துதேறிய பிள்ளைகள் தொகை எவ்வளவு? இறந்து போனவக்கீல்கள் தொகை எவ்வளவு? அதுகளுக்கு பதில் செய்து சரிகட்டின பிள்ளைகள் போக மீதி தொகை எவ்வளவு? இவர்கள் பிழைப்புக்கு புதிதாய் உற்பத்தி பண்ணின உத்தியோக மெவ்வளவு? போக பாக்கியுள்ள பிள்ளைகளின் வயிற்று பிழைப்புக்கு எந்தெந்த ஊரில் நிரந்தர முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம். எந்தெந்த ஊரில் நிரந்தர சப்- கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம். எந்தெந்த ஊரில் தற்காலசாந்தியாக முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் நிரந்தர ஜில்லா கோர்ட்டுகளை  ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் தற்கால சப்ஜட்ஜ் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஜில்லாவுக்கு உதவி சப் ஜட்ஜுகளையோ குறிப்பிட்ட காரியங்களுக்கு என்கிற ஜட்ஜுகளையோ நியமிக்கலாம் என்கிற கவலையே தவிர வேறென்ன இருக்கிறது?

சட்ட மெம்பரும் வக்கீல் பேட்டியும்

சட்ட மெம்பரை வக்கீல்கள் கூட்டம் கூடி பேட்டி காணுவதிலும் என்ன வேண்டுகோள் இருக்கிறது? "அய்யா எங்களுக்கு பிழைப்பு  குறைந்து போய் விட்டது, ஒரு கோர்ட்டிலேயே எல்லா வக்கீல்களும் வந்துமுட்டிக் கொள்கிறார்கள், இதனால் வக்கீல் பிழைப்புக்கும் மரியாதை குறைகிறது, ஆதலால் இக்கூட்டத்தை கொஞ்சம் குறையுங்கள் அல்லது இன்னும் ஒரு கோர்ட்டாவது ஏற்படுத்துங்கள், பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாகி விடுகிறார். ஆதலால் வக்கீல் பரீட்சையை இன்னும் கொஞ்சம் அதிக செலவு கட்டணம் ஆக்குங்கள்.  நம்மை போல் பிச்சை எடுத்து அவர்கள் படிக்கமுடியாது . வேறு வேலைக்குப் போய்விடுவார்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாய் வரக்கூடாது என்கிற எண்ணத்தின் பேரில் 2வது கிரேடு வக்கீல் பரீட்சைகளையும் 1வது கிரேடு வக்கீல் பரீட்சைகளையும் எடுத்தும்கூட பி.ஏ.பி.ஏல்., வகுப்பிலும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படித்து வருகிறார்களே இதை எப்படியாவது ஒழித்து இன்னும் கொஞ்சம் செலவும் அதிகமான கஷ்டமும் வைத்து அவர்களை இந்த   செய்யமுடியாதா" என்பதாகிற இதுகள் தான் வேண்டுகோளாயிருக்கிறதே தவிர வேறன்ன என்பது யோக்கியர்களுக்கு விளங்காமல் போகாது.

கோர்ட்டுகள் அதிகமாவதினாலே

வழக்குகள் அதிகமாகிறது

எத்தனைக்கெத்தனை கோர்ட்டுகள் அதிகமாய் வைக்கிறார்களோ அத்தனைக்கத்தனை வழக்குகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் வழக்கு களும் விவகாரங்களும் உற்பத்தியாவதற்குக் கோர்ட்டுகளே காரண மல்லாமல் வேறென்ன?  உதாரணம் வேண்டு மென்றால் கள்ளுக்கடைகளையும், தாசி வீடுகளையும், மோட்டார் வசதிகளையும் பார்த்தால் நன்றாய் விளங்கும். நாம் ஏன் கள்ளுக்கடைகளைக் குறைக்கும்படி சர்க்காரை வேண்டுகிறோம்.  கடை குறைந்தால் குடிகாரரின் எண்ணிக் கையும் குடிக்கும் அளவும் குறையும் என்று தான் தவிர வேறென்ன? நாலு தாசிகள் இருக்கும் ஊரில்நடக்கும் விபசாரத் தனத்துக்கும் 40 தாசிகளிருக்கும் ஊரில் விபசாரித்தனத்துக்கும் கணக்கு பார்த்தால் அதிக தாசிகள் உள்ள ஊர்களில் நடக்கும் விபசாரித்தனம் செய்கிற ஆள்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்குமா அல்லவா? அதுபோலவே ஒரு ஊருக்கு ஒரு தரம் போய் வரும் போக்குவரத்து வசதிகளுக்கு பதிலாக நான்குதரம் போய் வரும்படி போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தினால் அதற்கேற்ற பிரயாணிகள் அதிகமாக ஏற்படுவார்களா இல்லையா? அதுபோலவே கோர்ட்டுகள் அதிகமாகவும் ஊர் ஊராகவும் ஏற்பாடு செய்தால் விவகாரம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

பழைய நிலைமையும் புதிய நிலைமையும்

ஆதியில் கோயமுத்தூர் ஜில்லாவுக்கு இரண்டு முன்சீப் கோர்ட்டுகளும் ஒரு சப்-ஜட்ஜுகோர்ட்டும்தான் இருந்தன. இப்போது  கொள்ளேகாலம் உட்பட 8 முன்சீப் கோர்ட்டுகளும் 3 சப் ஜட்ஜு கோர்ட்டுகளும் இருக்கின்றன. இரண்டு ஜில்லா கோர்ட்டும் இருக்கின்றன. இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப் ஜட்ஜு வேண்டுமென்று பலரும்,இனியும் ஒரு ஜில்லா கோர்ட்டு வேண்டுமென்று பலரும் விரும்புகிறார்கள்.

கோர்ட்டுக்கு அவசியமுண்டா?

இதிலிருந்து நாம் அறியவேண்டியதென்ன? இவ்வளவு நீதி ஸ்தலங்கள் ஏற்படும்படியான அளவுக்கு இந்த ஜில்லாவில் சென்ற 40, 50 வருஷத்தில் ஜனத்தொகை பெருகிவிட்டதா? அல்லது இவ்வளவு கோர்ட்டுகள் ஏற்படும் படி ஜனங்கள் அவ்வளவு அயோக்கியர்களாகி விட்டார்களா? என்று பார்த்தால் ஜனத்தொகை ஏறக்குறைய முன் இருந்த  அளவுக்கு 4இல் ஒரு  பாகம்தான் அதிகமாகி இருக்கிறது இந்த அளவுக்கு சுமார் ரு (கால்) முன்சீப் கோர்ட்டு அதிகமாகியிருந்தால் போதும். அதிகமானால் ஒரு முன்சீப் கோர்ட்டு அதிகமாகலாம் என்றே வைத்துக் கொண்டாலும் 5 அல்லது 6 முன்சீப் கோர்ட்டு களும் ஜில்லா ஜட்ஜு அதிகாரமுள்ள ஒரு மேல்கண்ட ஜட்ஜுயும் 2 சப்ஜட்ஜுயும் அதிகமாகக் காரணமென்ன? இதைப் பார்க்கும் போது இவ்வளவு கோர்ட்டுகளுக்கும் வக்கீல் களுக்கும் வேலை உண்டாக்க தக்க மாதிரிக்கு ஜனங்களை அயோக்கியர்களாகவும், சர்க்காரும் பார்ப்பனர்களும்  பழக்கி வைத்திருக்கிறார்கள்  என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? அல்லாமலும் முன் காலங்களில் முன்சீப்புகள் 5 மணி வரை வேலை செய்வார்கள், சம்ப ளமும் அவர்களுக்கு 200, 300 தான். இப்போது 11.30 மணிக்கு கச்சேரிக்கு வந்தால் 2 அல்லது 3 மணிக்கு வீட்டுக்கு போய் விடுகிறார்கள்.  சம்பளம் 500, 600 வாங்குகிறார்கள்.

இனியும் ஒரு கோர்ட்டு வேண்டுமாம்

இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப்ஜட்ஜு கோர்ட்டு வேண்டு மென்றால் இவ்வயோக்கியத்தனத்திற்கு எதைச் சமமாகச் சொல்லுவது. இதையும் நமது ஜில்லாவில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊருக்கு வரும்படி எதிர்பார்க் கிறார்களாம்.

கோர்ட்டு வந்தால் வந்த ஊருக்கு ஏற்படும் கெடுதி

எந்த  ஊரில் வைத்தாலும் வேலை ஏற்படும் என்கிற விஷபத்தில் நமக்கு சந்தேகமில்லை. அப்பீல் செய்ய இஷ்டமில்லாதவனுக்கெல்லாம் அப்பீல் செய்து பார்க்கலாம் என்கிற ஆசை வந்துவிடும். விவகாரத்தில் ஆசை இல்லாமலும், அசலூருக்குப்போய் விவகாரம் செய்வதில் சவுகரியமில்லாமல் தங்களுக் குள்ளாகவே பைசல் செய்து கொள்ளலாம் என்கிறவர்களுக்கெல்லாம் உள்ளூரில் கோர்ட்டு வந்துவிட்டால் பிராது செய்து விடலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டு விடும். அலட்சியமாகவும் அனாவசிய மாகவும் மறதியில் இருந்த வழக்கு களுக் கெல்லாம் வக்கீல்கள் முதன்மை ஸ்தானம் கற்பித்துக் கொடுத்து வழக்கிலிழுத்து விட்டுவிடுவார்கள். இன்னமும் எவ் வளவோ கஷ்டங்கள் அவ்வூரிலுள்ள ஏழை மக்களுக்கு ஏற்பட்டுவிடும். முதலாவது வீட்டுவாடகை உயர்ந்துவிடும். காய், கறி, மோர், தயிர், பால், நெய், விறகு விலைகள் உயர்ந்துவிடும். கூலிஆட்களின் கூலி அதிகமாய் விடும் ஜனங்களுக்குள் கட்டுப்பாடும், பெரியவர் சிறியவர் என்கிற மரியாதையும் மாறிவிடும். இவ்வளவு அக்கிரமங்களோடு நாணயமும் குறைந்துவிடும். இவ்வளவு கஷ்டங்கள் ஏற்படு வதாயிருந்தாலும் ஒரு வகுப்பாரின் வயிற்றுப்பிழைப்புக் கோர்ட்டுகளை அதிகப்படுத்துவதே தேசசேவையாயும் இதற்கு அனுகூலமாய் இருக்கும் அதிகாரிகளே பூரண கும்பம்  எடுக்கத்தக்க யோக்கியதை உள்ளவர்களாவும் போய்விட்டது. இந்த கூட்டத்தார் தான் நமக்கு சுயராஜ்யம் வாங்கிகொடுக்கத்தக்க யோக்கியர்களாம்.

விவகாரக்காரருக்கு ஏதாவது வசதி உண்டா?

இவ்வளவு அக்கிரமங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் கோர்ட்டுகளில் விவகாரக்காரர்களுக்கு ஏதாவது கடுகளவு சவுகரியமோ யோக்கியதையோ அல்லது அவர்களையும் மனிதர்களாய்கருதத்தக்க நிலைமையோ இருக்கிறதா என்று பார்த்தால் அது கொஞ்சமாவது நினைக்கத்தக்க காரியமே அல்ல. நியாயதிபதியாருக்கிறவர் பொது ஜனங்களின் பணத்திலிருந்து மாதம் 500, 1000, 2000, 3000 சம்பளம் வாங்கிகொண்டு மோட்டாரில் வந்து இறங்குவதும், தனி அறையில் இளைப் பாறுவதும், பங்கா வீசுவதும் பக்கத்தில் சேவகர்கள் கைகட்டிக்கொண்டு நிற்பதும், தனி கக்கூசு,  தனி சிற்றுண்டி அறை ஆகிய போக போக்கியமும் விவகாரக்காரரை ஏமாற்றி 50, 100, 1000, 2000 என்பதாக பீசுவாங்கும் வக்கீல்கள் குதிரை வண்டிகளிலும், மோட்டார் கார்களிலும் வந்து இறங்குவதும், பங்காவின் கீழ் உட்காரு வதும் தங்களுக்கென இளைப்பாறும் அறைகளுமாக போகபோக்கியங்களும் அடைவதுமாயிருக்கிறார்களே ஒழிய விவகாரக்காரரைப் பற்றியோ, விவகாரத்தின் பொருட்டு சாட்சிக்கு வருகிறவர் களைப்பற்றியோ, கொஞ்சமாவது கவலையே இல்லை, கோர்ட்டுகளில் விவகாரக் காரருடைய பரிதாபம் அவர்கள் உட்கார சவுகரியமில்லை. தங்க இடமில்லை. ஒதுங்க மார்க்கமில்லை. வாய்பேச மார்க்கமில்லை, கோர்ட்டு எல்லைக்குள் இருக்கும் வரை ஜெயிலில் கைதிஇருப்பதுபோல் பயந்து ஒடுங்கி நிற்கவும் ஏதாவது ஒருவருக்கொருவர் வாயைத்திறந்தால் அங்குள்ள சேவகர்கள், 'உஸ்' 'அஸ்' என்று இடையன் ஆடு மாடுகளை  ஓட்டுவது போலவும் 'பேசாதே' என்று மரியாதைஇல்லாமல் கட்டளையிடுவதுமான ஹீனத்தன்மைக்கு ஆளாக வேண்டியதேயல்லாமல் அங்கு வாதியாகவோ, பிரதிவாதி யாகவோ, சாட்சியாகவோ வருகிறவர்கள் மனிதர்கள் என்று எண்ணியமாதிரியாய் ஏதாவதுகாணப்படுகிறதா? அல்லா மலும் கோர்ட்டுகள் மெத்தைமீது சிலதும் சந்துகளில்சிலதும் இருப்பதால்  கூப்பிட்டாலும் காது கேட்கத் தக்க அவ்வளவு தூரத்திலாவது நிற்கக்கூட இடமில்லாமல் இருப்பதோடு வக்கீலிடம் பேசவோ, ஏதாவது ஒரு விஷயத்தை சொல் லவோ இடமில்லை.

வாய்தாக்கள்

இத்தனையும் போதாமல் ஒரு விவகாரத்தை 3 வருடம் 4 வருடம் நீட்டி 25 வாய்தா 30 வாய்தா போடும் உபத் திரவங்கள் அல்லாமல் காலை 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தால் மாலை 5 மணிவரையில் நின்றுகொண்டே காத்திருக்க வேண்டும், சிலசமயங்களில் இன்று கேஸ் நடக்காது  என்று தெரிந்தாலும் 5 மணிவரை வாய்தா எப்பொழுது என்பது தெரிவதற்காக காத்திருக்கவேணடும் எப்போதுநடக்கும்? இந்த வாய்தாவில் நடக்காதா? என்கிற விவரங்கள் கட்சிக்காரரோ சாட்சிக்காரரோ அறிய வசதியில்லை. இதனால் இவர்களுக்குக் கட்டும் சாட்சி படி, போக வர செலவுமெனக்கெடு எவ்வளவு என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஜட்ஜு பெண்சாதிக் காலில் எறும்பு கடித்துவிட்டால் அன்றையக் கேசுகள் முழுவதும் வாய்தா போட்டாய்விடும். வக்கீல் வீட்டில் அமாவாசை சமையல் நேரமாய் விட்டால் குமாஸ்தா வாய்தா வாங்கி விடுவார். வக்கீலுக்கு வேறு கோர்ட்டுக்குப் போக வேலை யிருந்தால் கேசை மாலையில் எடுத்துக்கொள்ளும்படி ஜட்ஜைக் கேட்டு வாய்தா வாங்கிவிடுவான். இப்படி எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன. நிற்க, சாட்சிக்கு உடம்பு சவுகரியமில்லா விட்டால் டாக்டர்களுக்கு ரூ. 20, 30 கொடுத்து சர்ட்டிபிகேட் வாங்கவேண்டும் வேறு அவசர வேலை இருந்தால், ரூ. 20,30 கொடுத்து வயிற்றுகடுப்பு என்று பொய் சர்ட்டிபிகேட் வாங்கவேண்டும். இப்படியாக எவ்வளவு கொடுமைகள் விவகாரக்காரருக்கு இருந்து வருகிறதென்பதும் வாய்தாக்கள் ஏற்படுவது கட்சிக் காரர்களாலா அல்லது வக்கீல்களாலா ஜட்ஜுகளாலா என்பதை பார்த்தால் 100-க்கு 90 விவகாரங்களுக்கு ஜட்ஜுகளும் வக்கீல்களுமேயல்லாமல் வாதி பிரதிவாதி காரணமேயில்லை என்பது விளங்கும்.

மேல் அதிகாரிகளோ?

இவற்றைப்பற்றி மேல் அதிகாரிகளுக்கு எழுதினால் 'அசல் அநியாயம்' ,'அப்பீலில் அதுவே காயம்' என்பதுபோல் 'இதெல்லாம் சகஜம்தான்' என்று சொல் வார்கள். காரணம் என்னவென்றால் முனிசீப்பு ஸ்தானம் முதல் ஹைக்கோர்ட்டு ஜட்ஜு, சட்டமெம்பர் ஆகிய ஸ்தானம் வரையில் இந்த வக்கீல் கூட்டத்திலிருந்தும் இதனாலே வயிறு வளர்க்கக் கூடிய கூட்டத்திலிருந்துமே ஆள்பிடிக்கிறார்களே தவிர வேறில்லை. வக்கீல் கூட்டத்திலிருந்து நியாயாதிபதிகளை நியமிப்பது என்கிற அக்கிரமம் ஒரு நாட்டில் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கமும் விவகாரமும் வலுக்கவும், குடியானவர்கள் நாசமாய்ப் போகவும் நாடு குட்டிச் சுவராகவும்தான்  ஏற்படுமே அல்லாமல் ஒரு நாளும் நாம் உருப்படியாக சுயராஜ்யம் பெறப்போவதில்லை என்பது உறுதி.

- 'குடிஅரசு' -  கட்டுரை - 06.03.1927

- விடுதலை நாளேடு, 1.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக