செவ்வாய், 31 ஜூலை, 2018

இது ஒரு நல்ல அறிகுறி

தந்தை பெரியார்


 




 


நாம் படித்தால் ஜாதித் தொழில்  செய்ய மாட்டோம். நம் பெண்கள் எட்டாவது படித்து விட்டால் புல் விற்கப் போவாரா? நம்ம பையன் பத்தாவது படித்துவிட்டால் சிரைக்க, வெளுக்க, கக்கூசு (மலக்கழிவு) எடுக்கப் போவானா?

இப்போது நாம் படிக்க ஆரம்பித்ததனாலே எதிர்காலத்தில் பார்ப்பான் மண்வெட்டி தூக்கணும்; பாப்பாத்திகள் களை வெட்ட வேண்டும் என்றுதான் ஆகும். இதனால்தான் பார்ப்பான் எதிர்க்கிறான் இவையெல்லாம் நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.

பரம்பரை இராசாக்களை ஒழித்தவர்கள் பார்ப்பான் உரிமையில் ஏன் கை வைக்கவில்லை?

பூமிதானம் என்று ஒரு பக்கம் கேட்டு வருகிறார்கள். எவனிடமோ வாங்கி வேறொருவனிடம் தருகிறார்கள். இது காங்கிரஸ் தியாகிக்கு மானியம் கொடுத்தது  மாதிரி. இப்படி எல்லாம்  செய்து நம் பணக்காரன்களை ஒழிக்கப் பார்ப்பான் திட்டம் போடுகிறான். இதனால் ஒரு பலன், நீதி கிடைக்கும் என்றால் செய்யட்டும், நமக்கு ஆட்சேபணை இல்லை.

சமத்துவம் வேண்டும் என்று சொல்லி, பரம்பரையாக ஆண்டு வந்த இராசாக்களை ஒழித்தான், சமத்துவம் வேண்டும் என்றால் பார்ப்பான் உயர்வைக் குறைக்க ஏதாவது செய்யணுமா, வேண்டாமா?  பார்ப்பான் மடாதிபதியெல்லாம் இன்னும் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கணும் என்கிறான். நம்மவர்கள் உரிமையை மட்டும் ஒழித்துக் கட்டிவிட்டார்கள். பார்ப்பான் மேலான ஜாதி என்கிற உரிமையை ஏன்  இன்னும் கொடுத்துக் கொண்டு இருக்கணும்? பாசையும்-பூச்சியும் மேய்கிற குழவிக்கல்கிட்டே பார்ப்பான் தான் இருக்கவேண்டுமாம்! வேறொருவன் இருக்கக் கூடாது என்கிறான். அவனுக்கெல்லாம் மரியாதை, உரிமை இருக்கிறபோது நம்மவன் உரிமையை ஏன் பறிக்கணும்? கோயில்களைத் திறந்துவிட்டோம்; தீண்டாமை ஒழிந்துவிட்டது என்கிறார்கள்!

தீண்டப்படாதவர்கள் கோயிலில் எங்கே - எந்த அளவில் இருக்கிறார்கள்? சூத்திரன் போகிற இடம்வரைக்கும்தான் அவனும் போகலாம். அவ்வளவுதானே! பறையரைக் கொண்டு வந்து எங்களோடு சேர்த்தது சரி. நீயும் (பார்ப்பானும்) என்னோடு இறங்கி வந்து இருக்கணுமா, வேண்டாமா? உன் இடம் மாத்திரம் பத்திரமாக இருக்கணுமா?

இப்படியெல்லாம் பழைய வழக்கம், சம்பிரதாயம், சாத்திரங்களை எதிர்த்துப் பேசி வருகிற எனக்கு ஆதரவு பெருகித்தான் வருகிறது. நான் கேட்ட (நன்கொடை) தொகை 40 ஆயிரம் ரூபாய்தான் ஆனால், இன்றைக்கு வந்திருக்கிறது 1 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய். இது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால், கோயிலுக்கு, கும்பாபிஷேகத்துக்கு, உற்சவத்துக்கு, பார்ப்பானுக்கு என்று கேட்டால் புண்ணியம் வரும் என்று எண்ணித் தாராளமாகக் கொடுப்பார்கள்.

நான், “கோயில்களை இடிக்கவேண்டும்; கடவுளை உடைக்க வேண்டும்; இந்தக் கடவுள்கள் அயோக்கியர்கள்” என்று கூறுகிறேன்.

அப்படிப்பட்ட எனக்கு இந்தத் தொகை வசூலைப் பார்க்கும் போது ஆச்சரியந்தான். நான் ஏன் 40 ஆயிரம் கேட்டேன்? நமக்குக் கொடுப்பார்களா? என்று பயந்தே கேட்டேன். ஆனால், 122 ஆயிரம் வந்திருப்பதைப் பார்த்து அதிசயப்படுகிறேன்.

ஏனென்றால், மக்களுக்கு இவ்வளவு தூரம் புத்தி வந்திருக்கிறதே; விஷயங்களை உணர்ந்திருக்கிறார்களே; ஆத்திரமும், உணர்ச்சியும் பெற்றுவிட்டார்களே என்று பார்க்க ஆச்சரியப்படுக்கிறேன்; பாராட்டுகிறேன். இனி ‘நான் உணர்ச்சி, உற்சாகத்தோடு பாடுபடலாம்’ என்று நான் கருதும்படியான அளவுக்கு இது ஒரு நல்ல அறிகுறி என்றே கருதுகிறேன்.

இந்த இயக்கம் தோன்றி இன்று 45 வருட காலம் ஆகிறது. 1916-இல் இருந்து நல்ல அளவுக்கு இவ்வியக்கம் முன்னுக்கு வந்திருக்கிறது. இந்த மக்களிடையே இவ்வளவு தூரம் முன்னுக்கு வருவது சுலபமானதல்ல.

(28.1.1960 அன்று உடையார் பாளையத்தில் பெரியார் தந்தை பெரியார் சொற்பொழிவு)

  -‘விடுதலை’, 8.2.1960

-  உண்மை இதழ், 16-31.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக