செவ்வாய், 3 ஜூலை, 2018

“பறையனுக்குப்” பெண் கொடுப்பாயா?

11.10.1931 - குடிஅரசிலிருந்து...


ஜாதியை நாங்கள் ஒன்றாக்குகின்றோமாம்.  ஆம். ஆக்கமுயற்சிக்கின்றோம்.  அதில் சந்தேக மில்லை.  ஆனால், சீக்கிரத்தில் முடியுமா என்பது சந்தேகம்.  மனித ஜாதி ஒன்றாகித்தான் தீரவேண்டும்.  அதற்குத் தடை செய்கின்றவர்கள் அயோக்கியர்கள், மடையர்கள் என்று தைரியமாய்ச் சொல்லுகின்றோம். எங்கள் பெண்களைப் பறையனுக்குக் கொடுப் போமா? என்று கேட்கப்படுகின்றது.

இது ஒரு அறிவீனமான கேள்வி, அல்லது அயோக்கியத்தனமான கேள்வி என்றே சொல்லு வேன். ஏனெனில், எங்கள் பெண்களை நாங்கள் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர் களுடன் கூடி வாழச் செய்யப்போகின்றோமே யொழிய, எங் களுக்கு இஷ்டமானவர் களுக்குக் கொடுக்கும் உரிமையைக் கொண்டாடுகின்றவர்கள் அல்ல,  பெண்களை ஒரு சாமானாகக் கருதி, ஒருவருக்குக் கொடுப்பது என்கின்ற முறையை ஒழிக்க முயற்சிக் கின்றோம்.

நண்பர்களே! நாங்கள் ஆதிதிராவிடர்களைப் பற்றி பேசும் போது பார்ப்பனர்கள் மனவருத்த மடைவதில் அர்த்தம் உண்டு. ஆனால், பார்ப்பனரல் லாதார் மனவருத்தமடைவதில் சிறிதும் அர்த்த மில்லை. அது வெறும் முட்டாள் தனமும், மானமற்றதன்மையுமேயாகும். ஏனெனில், நமது சமுகத்தில் பார்ப்பனர் என்கின்ற கூட்டத்தாராகிய 100க்கு 3 வீதமுள்ள ஜனத்தொகை நீங்கி, மற்ற ஜனங்களுக்கு இந்த நாட்டில் சூத்திரன் (அடிமை), ஆதிதிராவிடன் (பறையன்) என்கின்ற பட்டமில் லாமல் வேறு எந்தப் பட்டத்தோடாவது யாராவது இருக்க முடியுமா? இருக்கின்றார்களா? என்று கருதியும், அனுபவத்தையும் கொண்டு பாருங்கள்.

சூத்திரன் என்கின்ற கலத்தில் நீங்கள் பதியப்பட்டி ருப்பதில் உங்களுக்குச் சிறிதாவது மானம் இருந்தால் பறையன் என்கின்ற பட்டம் போகவேண்டுமென்பதில் கடுகளவாவது வருத்தமிருக்குமா? என்று கேட் கின்றேன்.

பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப்பட்டம் போய்விடும் என்று கருதினீர் களேயானால் நீங்கள் வடிகட்டினமுட்டாள்களேயா வீர்கள்.

மற்றும், பேசப் போனால் பறையன் சக்கிலி என்பதற்கு இன்னார் தான் உரிமை யென்றும், அது கீழ் ஜாதியென்பதற்கு இன்னது ஆதாரமென்றும் சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை.

கை பலமேயொழிய, தந்திரமேயொழிய வேறில் லை. ஆதலால், அதாவது சீக்கிரத்தில் மறைந்து விடக்கூடும், உங்கள் சூத்திரப்பட்டத்திற்குக் கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், கோவில் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு. இத்தனையையும் நாசமாக்கி, அடியோடு ஒழித் தாலல்லாமல் உங்கள் தலையில் இருக்கும் சூத்திரப் பட்டம் கீழே இறங்காது.

ஆகவே. யாருக்காவது மான உணர்ச்சி இருந்தி ருந்தால் நீங்கள் ஜாதி ஒன்றாக்குகின்றீர்களே என்று நம்மைக் கேட்டிருக்க மாட்டார்கள்.

ஆகவே, ஆதி திராவிடர் நன்மையைக்கோரி பேசப்படும் பேச்சுகளும், செய்யப்படும் முயற்சி களும், ஆதிதிராவிடரல்லாத மக்களில் பார்ப்ப னரல்லாத எல்லாருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.

நாம் காட்டுமிராண்டியாக, சூத்திர னாக, இழிமக்களாக இருப்பதைப் பற்றி நமக்குக் கவலையே இல்லை. இன உணர்ச்சியோ, இனநல எண்ணமோ நம்மிடத்தில் ஒரு சிறிதும் இல்லை. அந்த ஒரு காரணம் மட்டுமல்ல - தனக்கு ஒரு பார்ப்பான் எவ்வளவுதான் கொடுமை செய்திருந்தாலும்கூட அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஒரு தமிழன், மற்றொரு தமிழனைத் தயங்காமல் அவ னுக்குக் காட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கின்றான். ஏன் அப்படி என்று கேட்டால் அந்த முறையில் சமுதாய உணர்ச்சியைச் சிருஷ்டித்து வந்துள்ளான் பார்ப்பான்.

- தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு, 29.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக