திங்கள், 27 ஜூன், 2016

வேடிக்கை சம்பாஷணை - சித்திரபுத்திரன் -



குடித்தனக்காரன் : அய்யா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண் ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என் கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டி களுக்குப் புண்ணியமாகும்.
சித்திரபுத்திரன் : அய்யய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?
குடித்தனக்காரன்: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா.
சித்திரபுத்திரன்: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணாள் இருக் கின்றார்களா?
குடித்தனக்காரன் : ஆம் 4, 5 வீட்டுக் காரர்கள் இருக்கின்றார்கள்.
சித்திரபுத்திரன் : அவர்கள் ஏதாவது உங்கள் வீதிப்பக்கம் வந்தார்களா?
குடித்தனக்காரன் : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொணா மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில் தான் போனார்.
சித்திரபுத்திரன் : சரி, சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.
குடித்தனக்காரன் : என்ன அய்யா எனக்குத் தெரியவில்லையே!
சித்திரபுத்திரன் : இது தெரியாதா உனக்குப் பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா?
குடித்தனக்காரன்: நான் கேட்ட தில்லையே!
சித்திரபுத்திரன் : அட பைத்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகிறார்களே அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.
குடித்தனக்காரன் : அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர் களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய் விட்டேன்.
சித்திரபுத்திரன் : அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும், நெருப்பு, வயிற் றிலும் நெருப்பு; இது உனக்குத் தெரியாதா?
குடித்தனக்காரன்: தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங்களேன்.
சித்திரபுத்திரன் : பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய் போய் விடுவாய் என்று சொல்லு கிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்ப தால்தானே அவர்கள் அப்படிச் சொல்வது. தவிரவும், பிராமணாள், நம்மைப் பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லா விட்டால் முடியுமா?
குடித்தனக்காரன் : இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது? இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவ தானால் இந்த நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய் விடும் போலிருக் கிறதே.
சித்திரபுத்திரன் : பின்னை தெரியா மலா நம்முடைய பெரியவாள் பிராமணர் களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.
குடித்தனக்காரன்: ஓ! ஹோ!! இதற் காகத்தான் அவர்கள் அப்படி சொல் கின் றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்கிறேன். இந்த நெருப்பை எப்படி யாவது அணைத்து விடுங்களய்யா?
- குடிஅரசு -கற்பனை உரையாடல்- 18.03.1928
விடுதலை,1.18.14

அகில இந்திய சங்கீத மகா நாட்டில் பார்ப்பனிய விஷமம்


-தந்தை பெரியார்
சென்னையில் கிறிஸ்துமஸ் வாரத் தில் அகில இந்திய சங்கீத மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டுவதாக சில பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து சங்கீத வித்வான்களுக்கெல்லாம் அழைப்புக் கடிதம் எழுதியதுடன் அங்கு பாட வேண்டுமென்றும் சில பிரபல சங்கீத வித்வான்களை கேட்டுக் கொண் டார்கள்.
அவர்களுள் தென் இந்திய சங்கீத மணியாகிய ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்பிரமணிய பிள்ளை அவர்களும் ஒருவர்.  ஆனால் அவர் பார்ப்பன சங்கீத வித்து வான்களால் பலவித துன்பமும் இடையூறும் அனுபவித்து பழகியவரான தால் சில நிபந்தனைகளுக்கு கட்டுப் பட்டுத்தான் தாம்வர முடியுமென்று எழுதிவிட்டார்.
நிபந்தனைகளாவன: 1. தனக்குப் பாடுவதற்கு 2 மணி நேரம் கொடுக்க வேண்டும் 2. கச்சேரி முடிந்தவுடன் தனக்குச் செய்ய உத்தேசித்திருக்கும் மரியா தையை செய்ய வேண்டும் என் பது. மகாநாட்டு உப தலைவ ராகிய ஸ்ரீமான் சி. ஆர். சீனி வாசய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனர் ஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் நிபந்தனை களை ஒப்புக் கொண்டு அந்தப் படியே நடக்கும், ஆட்சேபணை இல்லை, தாங்கள் சொல்லும்படி வைத்துக்கொள்ள மாட்டேன், அவசியம் வரவேண்டும் என்று எழுதிவிட்டார். அந்தப்படியே ஸ்ரீ பிள்ளை அவர்களுக்கும் 4 மணி முதல் 6 மணி வரை சாவகாசம் கொடுத் திருப்பதாய் சம்மதம் எழுதிவிட்டார்கள்.
அந்தப்படியே ஸ்ரீமான் பிள்ளைய வர்கள் சரியாய் 3-55 மணிக்கு கொட் டகைக்குப் போனார்.  உடனே ஸ்ரீ சீனி வாசய்யங்கார் எழுந்துவந்து ஸ்ரீ பிள்ளை யவர்களை வெகுமரியாதையாய் அழைத் துப் போய் மேடையில் உட்கார வைத்து இது சமயம் வேறு ஒருவர் பாடிக் கொண்டிருப்பதால் சற்று பொறுக்கும்படி கேட்டார்.  ஸ்ரீ பிள்ளையும் சம்மதித்து உட்கார்ந்திருந்து சரியாக 4-30 க்கு பாட அனுமதி கிடைத்ததும் பாடத் தொடங் கினார்.
ஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பாடு வதைக் கேட்ட ஜனங்கள் ஆனந்தபரவசமாகிக் கேட்டுக் கொண் டிருந்ததைப் பார்த்த பார்ப்பன சங்கீத வித்வான்களுக்கு மனம் பொறுக்காமல் எப்படியாவது இதை நிறுத்திவிட வேண்டும் என்பதாக சூழ்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.  தாங்களாக நேரில் வந்து எதுவும் செய்யமுடியாததால் வடநாட்டு சங்கீத வித்து வானாகிய ஸ்ரீ திகம்பரர் என்பவரைப் பிடித்து ஸ்ரீ பிள்ளையவர்கள் பாடிக் கொண்டிருக்கும் போது அவரிடம் போய் நிறுத்திவிடச் சொல்லும்படி ஏவி விட்டு விட்டு இவர்கள் மறைந்து கொண்டார்கள்.
அவர் இந்தப் பார்ப்பனர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, கொஞ்சமும் மரி யாதை இல்லாமல், பாடிக்கொண்டிருந்த ஸ்ரீ பிள்ளையிடம் வந்து நிறுத்திவிடு நேரமாய் விட்டது என்று சொன்னார்.  அவ்விடம் சபையில் அக்கிராசனம் வகித்திருந்த சபைத்தலைவர் டாக்டர் யூ. ராமராவ் அவர்கள் ஸ்ரீ திகம்பரரை ஆட்சேபித்து அவர்களுக்கு 7 மணி வரையும் பாடும்படி நான் அனுமதி கொடுத்திருக்கிறேன்.
சபையோர்கள் 7-30 மணிவரையில் அவர்கள் பாடவேண்டு மென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  ஆதலால் அவர் பாடட்டும், நீங்கள் ஆட்சேபிக்காதீர்கள் என்று எல்லோ ருக்கும் தெரியும்படியாகவே பிளாட்பாரத் திற்கு எழுந்து வந்து சொன்னார்.  ஸ்ரீ திகம்பரர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் சத்தம் போட்டார்.  சபையோர் கேட்டுக் கொண்டும், தலைவர் கெஞ்சிக் கேட்டுக்கொண்டும் ஸ்ரீ திகம்பரர் கேட்காமல் சத்தம் போட்டதால் ஸ்ரீ பிள்ளை அவர்கள் ஸ்ரீமான் சி.ஆர். சீனிவாசய்யங்காரைத்  தேடிச் சுற்றிலும் பார்த்தார், அவர் மறைந்து கொண்டார்.
பிறகு நிவர்த்தியில்லாமல் ஸ்ரீ பிள்ளை அவர்கள் சபையோர் இஷ்டத்திற்கும் தலைவர் இஷ்டத்திற்கும் முன் ஏற்பட்ட கண்டிஷன்களுக்கும் விரோதமாய் பேசாமல் அவமானத்துடன் எழுந்துபோக வேண்டியதாய் நேர்ந்துவிட்டது.  தவிர கச்சேரி முடிந்தவுடன் சன் மானம் செய்வதாய் ஒப்புக்கொண்ட இந்த பார்ப்பன வித்துவானான ஸ்ரீ சீனிவாசய்யங்கார் அங்கு ஏதாவது கொடுப்ப தானால் ஸ்ரீ பிள்ளையைப்பற்றி ஏதாவது சில வார்த்தைகள் பெருமையாய் பேசவேண்டிவருமே என்கின்ற பொறா மையாலும் சபையோருக்கு ஸ்ரீ பிள்ளை அவர்களை அறிமுகப்படுத்த வேண்டி வருமே என்கின்ற கெட்ட எண்ணத் தாலும் பேச்சுபடி நடக்காமல் ஒளிந்து கொண்டார்.
தவிர மகாநாட்டுக்கு வந்திருந்த வித்வான்களுக்கு எல்லாம் பதக்கம் வழங்குவதற்கு ஒரு தினத்தை ஏற்பாடு செய்து அன்று வரும்படி எல்லா வித்வான்களுக்கும் அழைப்புக்கடிதம் அனுப்பி விட்டு ஸ்ரீ சுப்பிரமணியபிள்ளை அவர்களுக்கு மாத்திரம் அனுப்பவே யில்லை.
பல வழிகளிலும் சூழ்ச்சி செய்வதல்லாமல் சங்கீத வித்தையிலும் கூட பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் களை முன் வரவொட்டாமலும் அவர் களது யோக்கியதையை வெளியாக விடாமலும் அழுத்தி வைக்க எவ்வளவு மோசங்கள் செய்து வருகின்றார்கள் என்பதை பொது ஜனங்கள் உணருவதற் காகவே இதை எழுதுகிறேன்.
- குடிஅரசு - கட்டுரை - 19.2.1928
-விடுதலை,2.2.14

ஞாயிறு, 26 ஜூன், 2016

குடிஅரசும் - திராவிட நாடும்

- தந்தை பெரியார்

"குடிஅரசு" பத்திரிகைக்கு இது இரண்டாவது வாரம், வயதோ பதினெட்டாவது - மக்களோ வெகு ஆவலாய் வரவேற்கிறார்கள். மத்தியில் இரண்டு வருஷ காலம் குடிஅரசு நிறுத்தப்பட்டுப் போனதைப் பற்றிப் பெரியாரைக் குறை கூறாத தமிழ் மக்கள் நாட்டில் இல்லை. சென்ற வாரம் அனுப்பிய முதல் இதழைப் பெற்ற உடன் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்தினவர்களும், போற்றினவர் களும், ஆனந்தக் கூத்தாடினவர்களும், புது சந்தா சேர்த்து தாங்களாகவே பணம் அனுப்பிவிட்டு, இன்ன இன்னாருக்கு ஒரு வருஷத்துக்கு ஆறுமாதத்திற்கு பத்திரிகை அனுப் புங்கள் என்று எழுதினவர்களும் ஏஜெண்டுகளில் மறுபடியும் இதே வாரக் காப்பி 100 அனுப்புங்கள், 60 காப்பி அனுப்புங்கள், 10 காப்பி அனுங்கள், 4 காப்பி அனுப்புங்கள் என்று எழுதினவர்களும், "குடிஅரசு" வெளியான சேதி அறிந்து தந்தி மணியார்டர் அனுப்பியவர்களும் ஆன தமிழ்மக்களின் எண்ணிக்கையையும் பெயரையும் வெளிப் படுத்தினால் மிகைப்படுத்திக் கூறுவதாகவே சில மக்கள் கருதுவார்கள். அவர்கள் எப்படியோ கருதிக்கொண்டு போகட்டும்.

"குடிஅரசு"க்கு இத்தனை வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏன்? எதற்கு ஆக? அதன் பாஷைக்கு ஆகவா? எழுத் துக்கு ஆகவா? இலக்கணப் பிழையற்ற தமிழுக்கு ஆகவா? யாரையும் குற்றம் குறை கூறாமல், துவேஷம் வெறுப்பு இல்லாத சாந்த குணத்தோடு வெளிவருவதற்கு ஆகவா? அல்லது பல பேர் அதைப் பற்றி விளம்பரம் செய்து ஆதரிக்கும் தன்மைக்கு ஆகவா? அல்லது நம்மிடம் இருக்கும் நல்ல எண்ணத்திற்கு ஆகவா? இவைகளில் ஒன்றும் இல்லை என்பது நமக்கு நன்றாத் தெரியும்.

தனித்தமிழ் பாஷைக்குக் "குடிஅரசு" போராடுகிறது. ஆனால், "குடிஅரசு" போல் "பாஷா மாலிகை" உள்ள பத்திரிகையை நாம் பார்த்ததில்லை. "சுதேசமித்திரன்" தமிழ் நம்மைவிட எத்தனையோ பங்கு மேலான தமிழ் என்றே சொல்லலாம். ஏன் எனில் அதற்கு வடமொழியைப் புகுத்துவதில்தான் கவலை. இலக்கணத்தைப் பற்றியோ வென்றால், "இலக்கணக்காரர்களுக்கு இங்கு வேலை இல்லை" என்பதுதான் "குடிஅரசி"ன் "மோட்டோ", சேதி களோ பெரும்பாலோர் காதுக்கு வேதனையைக் கொடுக் கும் குடைச்சல் உள்ளது. இப்படி இன்னும் பல குற்றங் களுடன் நடைபெற்ற, நடைபெறுகிற, நடக்கப்போகிற "குடிஅரசு"க்கு இவ்வளவு கிராக்கி என்னவென்றால், மேற்கூறிய இத்தனை குறைகளையும் லட்சியம் செய்யாமல் "குடிஅரசில் வரும் சேதி உண்மையானது. ஆதாரத்தோடு கூடியது" என்கின்ற நம்பிக்கையும் நாணயமும்தான். அதோடு உலகம் "குடிஅரசை" எதிர்பார்க்கிறது. அதாவது தமிழ் உலகம் புரட்சியை நோக்குகிறது. புரட்சிப்பக்கம் திரும்பி விட்டது. அதனால் "குடிஅரசி"ல் என்ன குற்றம் இருந்தாலும் வெளியில் சொல்ல தைரியமில்லை. ஏன் குற்றம் சொன்னால் உண்மையாகி விடுமே என்கின்ற பயம். சிலருக்கு அதில் உள்ள ஆவலினால் குற்றம் தெரிவதே இல்லை. வாலிப உலகம் "குடிஅரசி"ன் மீது கள்ளக் காதல் கொண்டு விட்டது; பெற்றோர் உலகத்தால் அடக்க முடியாத காதல் வாலிபர் உள்ளத்தில் ஊன்றி விட்டது. நமக்கு வேண்டியது இவ்வளவுதான். நம் உழைப்புக்குக் கூலியும் இவ்வளவே போதும்.

"குடிஅரசு" நின்றிருந்த காலத்தில் (அது நிற்கவில்லை வேறு பெயரோடு இருக்கிறேன்என்று கர்ஜித்து மார்பு தட்டி துணிச்சலோடு) "குடிஅரசி"ன் தொண்டை ஆற்றி வந்தது "திராவிட நாடு" பத்திரிகையாகும்.

"குடிஅரசு" ஆரம்பமானவுடன், இன்று அதன் தொண் டுக்கு அதாவது சுயமரியாதை இயக்கத்துக்கு "குடிஅரசு", "திராவிட நாடு" என்கின்ற இரண்டு பத்திரிகைகள் இரட்டையர்கள்போல் ஆகிவிட்டன.

தமிழ்நாடு இந்தத் தொண்டு செய்யும், அதாவது சுயமரி யாதைத் தொண்டு செய்யும் இரண்டு பத்திரிக்கைகளை அதுவும் இரண்டு வாரப் பத்திரிகைகளைத் தாங்க முடியாது என்று யாராலும் சொல்லமுடியாது. தமிழர்களும் இன்று உள்ள நிலையில் இந்த இரண்டு பத்திரிக்கைகளை ஆத ரிக்க முடியாது என்றும் சொல்லி விட முடியாது. அப்படி யாராவது முடியாது என்று சொல்லுவாரானால், அப்படிப் பட்டவரால் எதுவும் முடியாது என்றுதான் அருத்தமாகும்.

இரண்டுக்கும் குறுக்கே இருக்கும், அல்லது இரண்டி னாலும் வயிறுவளர்க்கப் பார்க்கும் தானாவதிகள், விஷமத் தனம் செய்யாமல் இருக்கவேண்டியதும் அப்படிப்பட்டவர்க ளுக்கு இரு பத்திரிகைக்காரர்களும், வாசகர்களும் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டியதும் முக்கியமான காரிய மாகும். அதோடு, அப்படிப்பட்டவர்கள் விஷமத்தனத்துக்கு பொது மக்களும் காது கொடுக்காமல் இருக்கவேண்டியது அதைவிட முக்கியமான காரியமாகும்.

தமிழ்நாட்டில் இச்சுயமரியாதைக் கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட அநேக பத்திரிகைகள், எவ்வளவோ பண உதவி பெற்றும் கஷ்டப்பட நேர்ந்தன. பல நின்றே போய் விட்டன. ஈரோட்டில் மாத்திரம் 3,4 பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு நின்று போய் விட்டன. மற்றபடியும் பல ஊர்களிலும் அப்படியே ஆயின. இனி, சுயமரியாதைப் பத்திரிகைகள் பெருகியே ஆகவேண்டும். தமிழ்நாடு நன்றாக பண்பட்டிருக்கிறது. இதில் முளைக்கும் சுயமரி யாதைப்பயிரை இனிக் காயவிடக்கூடாது என்பது நமது எல்லையற்ற ஆசை. இனி பத்திரிகை துவக்குகிறவர்களும் கவலையோடும், நாணயத்தோடும், உண்மையான உணர்ச்சியோடும், தகுந்த அஸதிவாரத்தோடும் துவக்க வேண்டும். ஜீவனத்துக்கும், பண வசூலுக்கும், மக்களை ஏய்ப்பதற்கும் பத்திரிகை துவக்குவது இயக்கத்திற்குக் கேடு செய்வதாகும். தங்கள் ஜீவனமே பெரிதென்பவர்கள் தயவு செய்து வேறு வேலையை வேறு இயக்கத்தின் பேரால் செய்யப்படும். இவை சம்மந்தப்பட்ட ஏஜண்டுகளும் சற்று கவலையுடன் யோக்கியமாய் நடந்து கொள்ளவேண்டும். ஒன்றை ஒன்று குறைகூறும் படியான வழியில் நடந்து கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
ஏஜண்டுகள் "குடிஅரசை" வலுக்கட்டாயத்தின்மீது "திராவிடநாடு" சந்தாதாரர்களுக்குப் போடக் கூடாது. இரண்டையும் ஆதரிக்கச் சக்தி உள்ள வாசகர்கள் கண்டிப்பாய் இரண்டையும் ஆதரிக்க வேண்டியது தமிழ் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமையான தொண்டு ஆகும். இந்தப் பத்திரிகைகள் இரண்டும் இல்லாவிட்டால் இன்று தமிழர்களுக்கு சமுதாயத் துறையிலோ, அரசியல் துறையிலோ வேறு வேலை என்ன இருக்கிறது? தமிழர் களுக்கு இந்த இரண்டு பத்திரிகையையும் ஆதரிப்பதைவிட அவர்கள செய்யும் வேறு வேலைதான் என்ன? என்றும் கேட்கிறோம். பண உதவி செய்துவிடுவதே போதுமானதாகி விடாது. ஒவ்வொரு ஊரிலும், கிராமத்திலும் இந்தப் பத்திரிகைகள் வருகிறதா? படிக்கப்படுகிறதா? என்பது தான் மிக மிக முக்கியமானது. ஆகையால் பணக்காரர்களும், முக்கியஸ்தர்களும் அதை முதலில் கவனித்து பிறகு கூடுமான பண உதவி செய்யட்டும்.

அரசியலில் பதவி பெற மோகமுள்ளவர்கள் இப்பத்திரி கைகளை அலட்சியமாய்க் கருதுவார்கள் என்பதும், இதை கேவலமாய்ப் பேசுவார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இப்படி எத்தனையோபேர்களும், அவர்களது கூலிகளும் பேசி ஆய்விட்டது. இனி பேசுகிறவர்கள் லட்சத்து ஒண்ணாவது பேர்களிலேதான் சேருவார்கள. தாசிகளும், வேசிகளும், பதவி மோகக்காரர்களும் ஒன்று என்பதே நமது அபிப் பிராயம். அப்படிப்பட்ட அவர்களது அன்புக்கும் வெறுப் புக்கும் அர்த்தமே இல்லை.
நம்மவர்களைப் பிடித்த பதவி மோகம்தான் நம் சமு தாயத்தை இன்னமும் சூத்திரனாக, தாசி வேசி மகனாக, கீழ்ஜாதியாக வைத்து இருப்பதோடு நம்மவர்களில் அநேகரைத் திருட்டுத்தனமாகவாவது பார்ப்பனர்களின் கால் பெருவிரலை சப்பும்படி செய்து வருகிறது. அது தமிழனில் ஒரு கூட்டத்துக்கு பிறவிக்குணமாக வெகு காலமாக இருந்து வருகிறது. அதை நம் காலத்திலேயே மாற்ற வேண்டும்; அதற்கு வ்ணடிய அளவு துணிவும் நமக்கு வேண்டும். அத்துணிவு வரவேண்டுமானால் நம்மிலாவது ஒற்றுமை வேண்டும். இதை அறிந்து நடந்து கொள்வேண்டியது  நம்முடையவும் ஏஜண்டுகளுடையவும் மற்றும் ஆங்காங்குள்ள நம் தொண்டர்களுடையவும் முக்கிய கடமை என்பனவற்றைத்தெரிவித்துக் கொண்டு, தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இந்த இரண்டு பத்திரிகை களையும் அவசியம் ஆதரிக்க வேண்டுமென்று மறுபடியும் வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடிஅரசு - தலையங்கம் - 23-10-1943
விடுதலை,26.6.16

சனி, 18 ஜூன், 2016

ஆரிய மத வண்டவாளம்: சைவ, வைணவ, ஆதாரங்கள் சொல்லுவது (சித்திரபுத்திரன்)


06-11-1943, குடிஅரசிலிருந்து...
இத்தலைப்பில் சென்ற வாரம் சைவ வைணவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வளவு இழிவுபடுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பதைப் பற்றி இராமாயணத்தில் உள்ள படியும் காஞ்சிப் புராணத்தில் உள்ள படியும் ஆதாரங்களோடு எழு தப்பட்டிருந்ததை வாசகர்கள் படித்தறிந்திருக்கக் கூடும்.
இந்த வாரம் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான சாஸ்திர ஆதாரமும், பதினெட்டுப் புராணங்களில் அதி முக்கியமானதுமான பாகவதத்தில் இருந்து சிவனை வைணவர்கள் ஆபாசமாய் இழிவுபடுத்தியிருப்பதற்கு மற்றொரு சேதி எடுத்துக் காட்டப்படுகிறது. அதாவது ஸ்ரீமத் பாகவதம் பண்டிதர் இஞ்சிக்கொல்லை, ஆர். சிவராம சாஸ்திரியார் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. 1912 வருஷம் சென்னை புரோகரிசிவ் பிரசில் அச்சடிக்கப் பட்டதுமான பாகவத தமிழ் வசனம் என்னும் புத்தகத்தில் 8-வது ஸ்கந்தம் 12வது அத்தியாயம் 846,  847, 848, 849-வது பக்கங்களில் பரமசிவன் விஷ்ணுவின் மோகினி ரூபத்தை பார்க்க விரும்பியது என்ற தலைப்பில் இருப்பதாகும். சற்று தயவு செய்து இதையும் படித்துப் பாருங்கள்.
என்னவென்றால், சிறீ மகாவிஷ்ணு மோகினி வேஷங் கொண்டு அசுரர்களை மோகிக்கும்படி செய்து ஏமாற்றி தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தார் என்கின்ற சங்கதியை பரமசிவன் கேள்விப்பட்டு, கைலாயத்தில் இருந்து பார்வதியுடன் விஷ்ணுவிடம் வந்து, விஷ்ணுவை வணங்கி ஜகத்காரணரே, தேவ தேவரே, நீரே பூரணர், நீரே நித்தியர், உம்மைவிட வேறு கடவுளே இல்லாதவரே (என்றும் இன்னும் பலவாறாகவும் சொல்லி பிரார்த்தித்ததாக இரண்டு பக்கம் எழுதப்பட்டிருக்கிறது) என்று பிரார்த்தித்து விட்டு, தேவாதிதேவரே தங்களுடைய எல்லா அவதாரத் தையும் தெரிசித்தேன். மோகினி வேஷத்தை மாத்திரம் பார்க்கவில்லை. அதனைப் பார்க்க வந்தேன். காட்டி அருளவேண்டு மென்றார்.
அதனைக் கேட்ட மகா விஷ்ணு வானவர், அது அசுரர் களை ஏமாற்ற எடுத்த வேஷமானதால்,அதைக் காண்ப வர்களை மோகிக்கச் செய்யும், மன்மதனை அதிகப்படுத்தும், சாமிகள்தான் அதைத் தோத்திரஞ் செய்வார்கள் என்று சொல்லி மறைந்து, ஒரு நந்தவனத்தில் பந்தாடிக் கொண்டிருக்கும் ஒரு அழகிய பெண்ணாகத் தோன்றினார்.
சிவனும் பார்வதியும் நான்கு புறமும் விஷ்ணுவைத் தேடிப் பார்த்து காணாமையால், நந்தவனத்தைப் பார்க்க அதில் ஒரு பெண் வந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து சிவன் புத்தி கலங்கி, பார்வதியும் சிவகணங்களும் பக்கத்தில் இருப்பதைக்கூட நினைக்காமல் அவளை (மோகினியை) பார்த்தார். மோகினி வேஷம் போட்ட பெண், பந்தடிக்கும் கவனத்தில் தனது ஆடை. (சேலை)யை மெல்ல நழுவ விட்டுவிட்டாள். அதைப் பார்த்த பரமசிவனுக்கு காமம் அதிகரித்துவிட்டது. மன்மதன் தனது முழு சக்தியை யும் பிரயோகித்தான். பார்வதி பார்த்திருக்கப் பார்த்திருக்க வெட்கமில்லாமல் சிவன் மோகினியின் பின்சென்றான். மோகினி (விஷ்ணு) ஓடி ஒரு மரத்தில் மறைந்து கொண்டாள்.
சிவன் ஓடோடி அவளைப் பிடித்தான். அவள் திமிரிக்கொண்டு வேகமாக ஓடினாள். சிவன் வேகமாக ஓடி அவள் மயிரைப்பிடித்து இழுத்து, இருகைகளால் ஆலிங் கனம் செய்து கொண்டு பலவந்தம் செய்தான்.
அவள் அவிழ்ந்த தலை மயிருடன், ஆடையின்றியே சிவனை வஞ்சித்து நழுவிக் கொண்டு ஓட்டமெடுத்தாள்.
சிவன் புத்தி இழந்து, காமங் கொண்ட ஆண் யானையின், இந்திரியம் கீழே சிந்தப்படுவது போல் தனது இந்திரியத்தை நிலத்தில் சிந்த விட்டுக் கொண்டே பின் தொடர்ந்தார். சிவனுக்கு இந்திரியம், வெளிப்பட்டவுடன் மோகினி (விஷ்ணு) மறைந்து விட்டாள். சிவன் ஏமாந்தான்.
அந்த இந்திரியம் எங்குஎங்கு நிலத்தில் விழுந்ததோ அந்த இடம் எல்லாம் தங்கம் வெள்ளி விளையும் சுரங்க பூமியாக ஆகிவிட்டன.
அந்த இந்திரியம் எங்குஎங்கு காடுகளிலும், வனங் களிலும், மலைகளிலும், நதிகளிலும், குளங்களிலும் விழுந் ததோ அங்கெல்லாம் சிவனின் சான்னித்தியம் விளங்குகிறது. மகரிஷிகளும், தேவர்களும் அங்கு விளங்குகிறார்கள்.
சிவன் இம்மாதிரி தனது இந்திரியம் சிந்தப்பட்ட பின் புத்தி வந்து நான் விஷ்ணுவினால் ஏமாற்றப்பட்டு மூடனாக்கப்பட்டேனே என்று கருதியதுடன் மகாவிஷ்ணுவின் மகிமை தெரிந்தவரானதால் இது சகஜம்தான் என்று திருப்தியடைந்தார்.
என்பதாக இந்தப்படி பாகவத மூலத்தின் 8ஆவது ஸ்கந்தம் 12-ஆம் அத்தியாயம். 1 முதல் 37ஆவது சுலோகம் வரை உள்ள விஷயத்தின் மொழிபெயர்ப்பு என்று குறிப்பிட்டிருக்கிறது. இது இப்படியிருக்க இந்த பாகவத விஷயங்களைத் தமிழில் கவியாகப் பாடப்பட்ட பாகவத புராணம் என்னும் நூலிலும், மோகினி உருக்காட்டிய அத்தியாயம் பாட்டு 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 வரை இன்னும் மோசமாகப் பாடப்பட்டிருக்கிறது.
அதாவது, விஷ்ணுவின் மோகினி அவதாரத்தைப் பார்க்க சிவன் பார்வதியுடன் கயிலையிலிருந்து வைகுண் டத்துக்குச் சென்று விஷ்ணுவை நமஸ்கரித்து எமது சுவாமியே என்று வணங்கி மோகினி வேஷத்தைக்காட்டு என்றான். விஷ்ணு பெண் உருவத்தை எடுத்தான்.
சிவனுக்கு காமம் ஏற்பட்டு பொலிகாளை எருது போல் பெண்ணின் கிட்டப்போனான்.
விஷ்ணு ஓட்டம் காட்டினான். சிவன் புத்திகலங்கி தன் இடுப்பில் உள்ள ஆடை (புலித் தோல்) அவிழ்ந்து கீழே விழுந்தும் கவனியாமல், ஓடி எட்டி பெண்ணின் மயிரைப் பிடிக்க முயன்றான். முடியவில்லை. மோகத்தால் சிவனின் இந்திரியம் கொட்டிப் போய்விட்டது.
பிறகு சிவனுக்குப் புத்திவந்து சுவாமி உன் பெருமையை அறியாமல் மோசம் போனேன் என்று விஷ்ணுவுக்கு நமஸ்காரம் செய்தான். உடனே விஷ்ணு சங்கு சக்கரத்துடன் காட்சியளித்து மறைந்தார்.
சிவன் கைலாயத்துக்குச் சென்று விஷ்ணுவின் பெருமையைப் பார்வதிக்குச் சொன்னான். என்று இருக்கிறது. சிவனும், விஷ்ணுவும் இடுப்பில் துணி இல்லாத ஆணும், பெண்ணுமாய் தெருவில் ஓடிய ஓட்டத்தைக் கண்ட வைகுண்டத்தில் உள்ள ஆண்களும் பெண்களு மான தேவர்கள், முனிவர்கள் நம் வைகுண்டப் பிராப்த்தி அடைந்தவர்கள், சிரிக்காவிட்டாலும், இந்தக் கதையைப் படித்து நடித்து காலட்சேபம் செய்து ஸ்ரவணானந்தம் செய்து வாழும் சைவ வைணவ பக்தர் சிரிக்காவிட்டாலும், பகுத் தறிவும், சுயமரியாதையும் இல்லாத மானமற்ற கூலிப் பண்டி தர்கள் சிரிக்காவிட்டாலும், மற்ற உண்மைத் தமிழ் மக்கள் இப்படிப்பட்ட ஆரிய மதத்தையோ, இந்து மதத்தையோ, சைவ வைணவ மதங்களையோ பற்றி என்ன நினைப் பார்கள் என்று கேட்பதே இந்த வியாசத்தின் லட்சியமாகும்.
-விடுதலை,18.6.16

வெள்ளி, 17 ஜூன், 2016

தீண்டாமை - தந்தை பெரியார்



இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமை யெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதி திராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரம மென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மை விடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத்தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறியும் ஏற்படுத்துவ தாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு வெட்ட வேண்டும்? சிலர் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும். நமது கிணறு குளங்களில் ஆதி திராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அனுமதிக்கலாகாது? பட்சிகளும் மிருகங்களும் குளங் களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்னென்ன வருகிறதென்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதத் தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள் எடுத்துச் சாப்பிட்டுவிடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும். என்று சொல்லிவிட்டு நீங்கள் எனக்களித்த வரவேற்புப் பத்திரத்தில் உங்களுக்காக நான் அதிகவேலை செய்திருப்பதாகச் சொல்லிப் புகழ்ந்திருக்கிறீர்கள். அது கொஞ்சமும் உண்மையல்ல. உங்களை உத்தேசித்து நான் ஒரு காரியமும் செய்யவேயில்லை. ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும் ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய்ச் சொல்லுவதும் வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும் பேசுகிற வர்களுமாயிருப்பார்களென்பது எனது அபிப்பிராயம். அதாவது, இந்தியாவின் நன்மைக்காக அய்ரோப் பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பது போலத் தான் ஆகுமேயல்லாமல் வேறல்ல. நான் அப்படி நினைக்கவேயில்லை.

பறையர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருப்பதால்தான் சூத்திரர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. பறையர் என்கிற ஜாதிப் பெயரைவிட சூத்திரர் என்கிற ஜாதிப் பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரீகளில் பதிவிரதைகளும், சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்களுமிருக்கலாம். சூத்திரர்களில் அப்படி யிருக்க இடமேயில்லை. ஏனென்றால் சூத்திரச்சி என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். சூத்திரன் என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்பந்தம். ஆகையால் என் போன்ற சூத்திரன் என்று சொல்லப்படுபவன் பறையர்கள் என்று சொல்லப்படு வோர்களுக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம் சூத்திரர்கள் என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறல்ல. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்று கிறது. உங்களைத் தாழ்மையாய் கருதும் ஸ்திரீகளும், புருஷர்களும் தாங்கள் பிறரால் உங்களைவிடக் கேவலமாய் தாழ்மையாய்க் கருதுவதை அறிவதில்லை. அந்நியர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக் கும் அறியாமையால், தங்களை மற்றவர்கள் தாழ்மையாய் நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த் தோன்றுவதில்லை.

இந்த லட்சணத்தில் உங்களிடம் தப்பிதங் கண்டு பிடித்து, உங்கள் உடம்பில் துர்வாடை அடிக் கிறது, நீங்கள் ஸ்நானம் செய்வதில்லை, துணி துவைப்பதில்லை, மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள், மதுவருந்துகிறீர்கள், இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேஷ்டி துவைக் காமலும் குளிக்காமலும் இருப்பதற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர் உணருவதில்லை. உங்களுக்குக் குடிக்கவே தண்ணீரில்லையென்றால் குளிப்பதெப்படி, வேஷ்டி துவைப்பதெப்படி? அழுக்கும் நாற்றமும் உங்கள் கூடவே பிறந்ததா என்று கேட்கிறேன்.  குளிக்கவும், வேஷ்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல் மகந்துகள் என்போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டிலடைத்து வைத்து விட்டால் அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக் குமா? அவர்கள் உடம்பும் வாயும் நாற்ற மடிக்காமலிருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். நாமே ஒருவனைப் பட்டினி போட்டுவைத்து, அவன் இறந்துபோன பிறகு பட்டினியினால் இறந்துபோய் விட்டான் பாவி என்று சொன்னால், யார் பாவி யென்பதை நினைத்துப் பாருங்கள். அல்லாமலும், மாடு தின்பதும், மதுவருந்துவதும், நீங்கள் பறையர்களாயிருப்பதற்குக் காரணமென்று சொல்லுவது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக் கொண்டும் மதுவருந்திக் கொண்டும் இருக்கிறவர்கள் தான் இப்பொழுது உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தவிரவும், நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சேர்ந்ததல்ல. உங்களை மற்றவர்களைப் போல சரியானபடி சம்பாதிக்கவும், தாராளமாய் சாப்பிடவும், தெருவில் நடக்கவும், தாராளமாய் எங்கும் போய் வேலை செய்து சம்பாதிக்கவும் வழியில் லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று. மாட்டு மாமிசத்தை அனுமதிக்கும் மதத்தைச் சேர்ந்த மகமதியாரும் கிறிஸ்தவரிலும் கூட சிலர் கைப்பணந் தாராளமாய்க் கிடைப்ப தாயிருந்தால் நாங்கள் மாட்டுமாமிசம் சாப் பிடுகிற வழக்கம் இல்லை என்று சொல்லு கிறார்கள்.

ஆதலால், நமது நாட்டார் மாட்டிறைச்சி சாப்பிடுவ தற்குத் தரித்திரந்தான் முக்கியக் காரணம். அல்லாமலும், மாட்டு மாமிசம் சாப்பிடுவது ஆடு, கோழி, மீன், பன்றி இவை களைவிட என்ன அவ்வளவு அதிகமான பாவமாய்ப் போய்விட்டது. கோழியும், மீனும், பன்றியும் எச்சிலையும், பூச்சு புழுக்களையும், அழுக்குகளையும், மலத்தையும் சாப்பிடுகிறது. இப்படியிருக்க இதைச் சாப்பிடுகிற வட நாட்டு பிராமணர்கள் முதல் தென்னாட்டு சூத்திரர்கள் வரை நல்ல ஜாதியும், தொடக் கூடியவர்களாயு மிருக்கும் போது, புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், புண்ணாக்கும் சாப்பிடுகிற மாட்டிறைச்சி சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான். அப்படிப் பார்த்தாலும் மாடு சாப்பிடுகிறவர்களை யெல்லாம் தொடாதே, தெருவில் நடக்காதே, குளத்தில் தண்ணீர் சாப்பிடாதே, ஊருக்குள் குடியிருக்காதே என்று சொல்லுகிறார்களா? இது வீணாய், வேண்டுமென்றே உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் ஒரு யோக்கியப் பொறுப்பற்ற காரணமேயல்லாமல் உண்மையான காரணமல்ல என்பதுதான் எனது முடிவு. மதுவையும், மாட்டு மாமிசத்தையும் தள்ள வேண்டும் என்பதை நான் ஆட்சேபிக்க வரவில்லை. மதுவையும் மாட்டு மாமிசத்தையும் தள்ளினால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத்தனமான காரியத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஜாதி உயருவதற்காக, மதுவையும் மாட்டு மாமிசத்தையும் விடுங்களென்று கேட்க மாட்டேன். அதற்காக நீங்கள் விடுவதும் அவ்வளவு அவசியமில்லை. நம் நாட்டில் தென்னை, பனை மரங்களில் ஊறும் கள்ளும், காய்ச்சும் சாராயமும் வெளிநாடுகளிலிருந்து வரும் சாராய தினுசுகளும் சென்னை மாகாணத்தில் மாத்திரம் சுமார் 15, 20 கோடி ரூபாய் பெரும் படியானதை யெல்லாம் நீங்க ளேவா குடித்து விடுகிறீர்கள்? யாராவது நம்புவார்களா? ஒருக்காலும் நம்பமாட்டார்கள். ஆதலால், ஜாதி உயர்வை உத்தேசித்து இவற்றை விட்டு விட வேண்டுமானால் மற்றவர்கள் முதலில் விடட்டும்.

மதுபானம் மனிதனின் ஒழுக்கத்திற்கு விரோதமென்பதை நான் ஒப்புக் கொள் ளுகிறேன். மதுவிலக்குக்காக நானும் சிறிது தொண்டு செய்திருக் கிறேன். ஆனால், ஜாதி உயர்வுக்கு எல்லா ஜாதியாரும் சாப்பிடும் மதுவிலக்கு ஒன்றும் தடை செய்வதில்லை. ஆகையால், மதுவிலக்கும் மாமிச விலக்கும் ஜாதி உயர்வுக்கு அவசியம் என்று சொல்வது வேண்டுமென்றே சொல்லும் பொய். அல்லாமலும் உங்களிடமும் சில குற்றங்கள் இருக்கிறதைச் சொல்லா மலிருக்க முடியவில்லை. அதாவது, நீங்க ளாகவே உங்கள் ஜாதிக்கு இழிவு சம்பாதித்துக் கொள்ளுகிறீர்கள். அனாவசியமாய் யாரைக் கண்டாலும் சுவாமி என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும். ஒரு மனிதனைப் பார்த்தால் அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்கிற எண்ணம் உங்கள் மனதில் உதிக்க வேண்டும். சுயமரியாதையில் கவனமில்லாத ஜாதியாரை உயர்த்தினாலும் உயராது. அவனவனுக்கே, தான் மனிதன் என்கிற உணர்ச்சி வரவேண்டும். நீங்கள் இனிமேல் யாரையும் சுவாமி  என்று கூப்பிடக் கூடாது. வேண்டு மானால் அய்யா என்று கூப்பிடுங்கள். நீங்களாகவே பதுங்குவதும் ஒதுங்குவதுமான துர்க்குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அன்றுதான் நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள். என்று பேசி முடித்தார்.
(காரைக்குடி - சிராவயலில் நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு விழாவில்  06-04-1926ந் தேதி ஆற்றிய சொற்பொழிவு)

- குடிஅரசு -  25.04.1926
-விடுதலை,29.5.16

ஜஸ்டிஸ் கொள்கை வெற்றி - தந்தை பெரியார்


தேர்தல்களில் ஏற்படும் வெற்றி தோல்விகளினால் ஒரு தனி மனிதனு டையவோ கட்சியினுடையவோ யோக்கியதையை நிர்ணயம் செய்து விடுவது முழு முட்டாள்தனம் என்று நாம் பலமுறை வற்புறுத்தியிருப்பதைத் தோழர்கள் மறந்திருக்க மாட்டார்கள். குதிரைப் பந்தயம், லாட்டரி, சீட்டாட்டம் மாதிரி தேர்தலும் ஒரு வகைச் சூதாட் டமே. யோக்கியதையுடையவர்கள் தோல்வியடைவதும், அநாமதேயப் பேர்வழிகள் வெற்றியடைவதும் சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. தேச மக்களில் 100க்கு 94 பேர் எழுத்து வாசனையில்லாத பாமர மக்களாய் இருக்கும் வரை தேர்தலில் மோசடிகளும், சூழ்ச்சிகளும், அயோக்கியத்தனங்களும் தாராளமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும். தேர்தல்களுக்கு முன் வந்திருப்பவர்களின் யோக்கியதை, அவர்களோ, அவர்களது கட்சியோ இதுகாறும் நாட்டுக்குச் செய்துள்ள நன்மைகள், தேச மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்குள்ள ஆற்றல் தேர்தலுக்கு முன் வந்திருப்பவருக்கோ, அவரது கட்சிக்கோ உண்டா என்ற சிந்தனை அபேட்சகர்களின் அல்லது அவர்களது கட்சியின் பூர்வச் சரித்திரம் ஆகிய காரியங்களைப் பற்றிச் சிந்தனை செய்யாமல் காந்திக்காகவும், கதருக்காகவும் ஓட்டுக் கொடுக்கும் அறிவற்ற மக்கள் இருக்கும் வரை தற்காலத் தேர்தல்களை, ஜனநாயக முறைப்படி நடக்கும் தேர்தல்கள் என்று சொல்ல முடியுமா? அனேக இடங்களில் நடைபெற்ற நகர சபை, ஜில்லா போர்டு தேர்தல்களில், மதுவிலக்குத் திட்டத்தை தமது லக்ஷியமாகக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரர்கள் தாராளமாகக் கள் வழங்கினதாகப் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இதை எந்தப் பொறுப்புடைய காங்கிரஸ்வாதியும் இந்நிமிஷம் வரை மறுக்க முன் வரவில்லை. மற்றும் கைக் கூலிப் பேய் தாண்டவமாடியதாயும் பலர் புகார் செய்திருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் ஜில்லா போர்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் தோழர் குப்புசாமி அய்யர் தலைமையில் நடைபெற்ற ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ்வாதியான தோழர் ஷண்முகம் பிள்ளை என்பார் ஜில்லா போர்டு தேர்தலில் பல காங்கிரஸ் அபேட் சகர்கள் கைக்கூலி வழங்கியதாகத் தாம் கேள்விப்பட்டதாயும், காங்கிரசின் கௌரவத்துக்கு அது அடாத செயல் என்றும் பகிரங்கமாகக் கண்டித்துப் பேசினார். தலைவரோ ஏனைய காங்கிரஸ்வாதிகளோ அதை மறுக்கவில்லை. எனவே தேர்தல் காலங்களில் காங்கிரஸ்காரர் லஞ்சம் வழங்குகிறார்கள் என்பது உறுதியாகிறது.

இந்நிலையில் காங்கிரஸ்காரர் பெறும் வெற்றிக்கு மதிப்போ, யோக்கியதையோ, நாணயமோ உண்டு என்று கூற முடியுமா?

சென்ற வருஷ நவம்பரில் நடைபெற்ற அசம்பிளித் தேர்தலின் போது (1) வரப் போகும் சீர்திருத்த அரசியலைக் கவிழ்ப்போம்  (2) பிரதிநிதித்துவ சபை கூட்டுவோம்  (3) எதிர்கால அரசியலை அமைப்போம் என்று காங்கிரஸ்காரர்கள் வாக்காளர்களுக்கு உறுதி கூறினார்கள். அந்த மூன்று காரியங்களில் ஒன்றையாவது காங்கிரஸ்காரர்கள் நிறைவேற்றி வைக்க வில்லை. நிறைவேற்ற முயலவுமில்லை. மாறாக எதிர்கால அரசியலைக் கைப்பற்றி மந்திரிகளாகவும் காங்கிரஸ்காரர் பகிரங்கமாக முயற்சி செய்கிறார்கள். தேச மக்களுக்கு எள்ளளவேனும் அரசியல் உணர்ச்சியோ, ஞானமோ இருந்திருந்தால் தேர்தல் வாக்குறுதிகளைக் காற்று வாக்கில் பறக்கவிட்ட அயோக்கியப் பேர்வழிகளுக்கு மீண்டும் ஓட்டுக் கொடுப்பார்களா? தேச மக்கள் எல்லாம் அப்பாவிகள் என்ற நம்பிக்கையினாற்றானே காங்கிரஸ்காரர் மீண்டும் அவர்களிடம் ஓட்டுக் கேட்க முன் வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை மீறுகிறவர்களுக்கு மீண்டும் ஓட்டுக் கொடுக்கும் முட்டாள்தனத்தை இந்தியாவிலன்றி உண்மையான ஜனநாயக அரசியல் அமுலில் இருக்கும் எந்த நாட்டிலாவது பார்க்க முடியுமா? சுயராஜ்யம் நடத்த இந்தியர்களுக்கு லாயக்கில்லையென்று கன்சர்வெட்டிவ் கட்சியார் கூறும்போது நாம் அவர்கள் மீது சீறி விழுகிறோம்; திட்டுகிறோம்; துரோகப்பட்டம் சூட்டுகிறோம். ஓட்டுரிமையைப் புத்திசாலித்தனமாக வழங்கத் தெரியாத மக்களுக்கு ஓட் டுரிமை வழங்குவது குரங்கு கையில் கூரிய கத்தியையோ, ரிவால்வாரையோ கொடுப்பதற்கே ஒப்பாகும்.  75 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருக்கும் இக்காலத்திலேயே தேர்தல்களில் மானக்கேடான அலங் கோலங்கள் நடைபெறுகின்றன. வரப்போகும் சீர்திருத்தப்படி ஏழரைக் கோடிப்பேர் ஓட்டுரிமை பெறப் போகிறார்கள். ஜனநாயகக் கொள்கைப்படி பிராய பூர்த்தி வந்தவர்கள் எல்லாம் ஓட்டுரிமை பெற வேண்டியது அவசியமானாலும் இந்தியாவின் தற்கால நிலையில் ஏழரைக்கோடிப் பேர் ஓட்டுரிமை பெறுவது ஆபத்தான பலனையே கொடுக்கப் போகிறது. ஏழரைக் கோடிபேர் வாக்குரிமை பெறப் போவதை தோழர் சத்தியமூர்த்தி இரு கையாலும் வரவேற்பதே நமது அபிப்பிராயத்துக்கு மறுக்க முடியாத அத்தாட்சி. காந்தி, கதர், பாரத மாதா, அடிமைச் சங்கிலி, விடுதலை என்பன போன்ற பகட்டு வார்த்தைகளைச் சொல்லி பாமர மக்களை மயக்கச் சௌகரியம் இருப்பதினாலேயே தோழர் சத்தியமூர்த்தி ஆனந்தக் கூத்தாடு கிறார். தேச மக்களின் தற்கால மோசமான நிலைமையைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நாம் மனச் சோர்வடைந்து ஜனநாயக ஆட் சியைவிட ஹிட்லர் ஆட்சியினாலும், முசோலினியாட்சியி னாலும் இந்தியாவுக்கு அதிக நன்மை ஏற்படாதா என்று நாம் நம்மையே கேட்டுக் கொண்டதுண்டு. மனச் சோர்வினால் இத்தகைய மனத் தடுமாற்றம் அனேகருக்கு ஏற்படுவது சகஜமே. நாம் விரும்பினாலும், வெறுத்தாலும் புதிய அரசியல் சீர்திருத்தம் வரப்போவது உறுதி.
அதன்படி ஏழரைக்கோடி பேர் ஓட்டுரிமை பெறப் போவதும் நிச்சயம். காலம் ஏமாற்றக்காரருக்கு அநுகூலமாயிருந்தாலும், நாம் மனந்தளர்ந்து கை கால்களைப் பரக்கப் போட்டு அல்லற்படாமல் நாம் நமது கடமையைச் செவ்வனே செய்வதைத் தவிர வேறு கதியில்லை.
திருநெல்வேலி, திருச்சி, கர்நூல், அனந்தப்பூர், சித்தூர் முதலிய இடங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்காரரே வெற்றிக்கொடி நாட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தென்னாற்காடு ஜில்லா தேர்தல் முடிவு நாளை அல்லது மறுநாள் வெளிவரவும் கூடும். தென்னாற்காட்டில் நமக்குத் தோல்வியே ஏற்பட்டாலும் நாம் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.
ஏன்? தேர்தல் வெற்றி தோல்விகளினால், தற்கால நிலையில் அபேட்சகர்களில் யோக்கியதா, யோக்கியதைகளை நிர்ண யிக்க முடியாத நிலைமையே நமது அபிப்பிராயத்துக்கு காரணம். நமது கூற்றை விளக்குவதற்கு ஆந்திர வீரர் தோழர் டி. பிரகாசம் டிசம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹிந்துப் பத்திரிகையில் எழுதியுள்ள ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டால் போதுமானது. ஆந்திர தேசத்தில், ஜில்லா போர்டு தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்காரருக்கு வாழ்த்துக் கூறுகையில் தோழர் பிரகாசம் அறிந்தோ அறியாமலோ அக்கடிதத்தில் சில மானக்கேடான உண்மைகளையும் வெளியிடுகிறார். அவர் எழுதுவதாவது,

கர்நூலிலும், அனந்தப்பூரிலும் காங்கிரஸ் பேரால் தேர்ந் தெடுக்கப்படாத ஜில்லா போர்டு மெம்பர்கள் காங்கிரஸ் அபேட்சகர்களையே ஆதரித்தார்கள். சிலர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தமது அபிப்பிராயத்தையே மாற்றிக் கொண்டு காங்கிரசில் சேர்ந்து கொண்டார்கள். தேர்தலில் காங்கிரஸ்காரரோடு போட்டி போட்டு வெற்றிப் பெற்றவர்களும் தலைவர் தேர்தல்களில் காங்கிரஸ் அபேட்சகர்களையே ஆதரித்தார்கள்.

ஜில்லா போர்டு தேர்தலுக்கு முன் வருபவர்கள் எல்லாம் பொதுவாக படிப்பும், அந்தஸ்தும், சமூக வாழ்வில் மதிப்புக்குரிய ஸ்தானமும் பெற்றிருப்பவர்களே. அவர்களே தோழர் பிரகாசம் கூறுகிறபடி நடந்திருக்கையில் வெற்றி தோல்விகளை எண்ணி மாரடித்துக் கொள்வதில் பயனுண்டா? கட்சிப் பற்றோ, கொள்கையோ, மனவுறுதியோ இல்லாத இத்தகைய ஆசாமிகளை நம்பினால் எந்தக் கட்சிக்குத்தான் மானக்கேடு ஏற்படாது? அரசியலில்  கூடு விட்டுக் கூடு பாய்வது ஒரு மாதிரி அரசியல் விபசாரமேயாகும். விபசாரிகளையாவது மன்னித்து விடலாம். ஏன்? படிப்போ, நற்பழக்கமோ இல்லாத வர்கள்; வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லா தவர்கள். மேலும் மதத்தின் பேரால் விபசாரம் ஆதரிக்கப்படுவதினால் சாமானிய விபசாரிகளைக் குறை கூற வழியில்லை.

அரசியல் விபசாரிகள் நிலைமையோ அப்படியல்ல. படிப்பும், பணமும், அந் தஸ்தும் உடையவர்கள். அவர்கள் கட்சித் துரோகம் செய்து விபசாரியாவதைவிட கொடுமை, மானக்கேடு, துரோகம் வேறுண்டா? திருநெல்வேலியிலும் திருச்சியிலும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த அரசியல் சிங்கங்களைப் பற்றிய வரலாறுகளை தென்னாட்டு பத்திரிகைகளில் காங்கிரஸ்காரரே வெளியிட்டிருக்கிறார்களாகையால், அவைகளை மீண்டும் எடுத்துக் கூறி நமது பத்திரிகையை அசுத்தப்படுத்த நாம் விரும்பவில்லை.

ஆகவே காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் வெற்றிக்கு எவ்வளவு மதிப்புக் கொடுக்கலாம் என்பதை தேச மக்களே நிர்ணயம் செய்து கொள்ளட்டும். ஜில்லா போர்டு தேர்தல்களிலும், தலைவர் தேர்தல்களிலும், வெற்றி பெற்றவர்கள் எந்தப் போர்வையைப் போர்த்திக் கொண்டாலும், இது வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மெம்பர்களில் பெரும்பாலாரும், தலைவர்கள் அனைவரும் பார்ப்பனரல்லாதாரா யிருப்பதை நம்மவர்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறோம். அவர்களில் பெரும்பாலார் அரசியல் விபசாரக் குற்றத்துக்கு ஆளாகி யிருந்தாலும் அரசியல் விபசாரம் மன்னிக்க தக்கதென்ற உணர்ச்சி நம்மவர்களில் பெரும்பாலார் உள்ளத்துக்குக் குடி கொண்டிருக்கையில் அவர்களது வெற்றியை நமது வெற்றி யாகப் பாராட்டுவதில் அவ்வளவு குற்ற மில்லையென்றே நினைக்கிறோம்.

இதுவரை வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளினால் ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் கொள்கை வெற்றி பெற்றிருக்கும் சந்தோஷச் செய்தியை எந்த மலையுச்சியிலிருந்தும் கூற நாம் தயாராயிருக்கிறோம்.

இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல் களினால் பல உண்மைகள் வெளி வந்துள்ளதையும் நம்மவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
தேர்தல்களில் வெற்றி பெற வேண்டு மானால் பார்ப்பனரல்லாத பிரமுகர் களின் காலில் விழுவதைத் தவிர காங்கிரஸ் காரருக்கு வேறு வழியில்லை யென்பது புலனாகிவிட்டது.
சிறை புகுந்த  தடியடிபட்ட காங்கிரஸ் காரர்களைவிட சட்ட வரம்புக் குட்பட்டு ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையைப் பின்பற்றி வந்தவர்களுக்கே நாட்டில் மதிப் புண்டென்பதும் சந்தேகத்துக்கு இடமின்றி வெளியாகிவிட்டது.

இத்தியாதி காரணங்களால், பார்ப்பன ரல்லாதார் எல்லாத் துறைகளிலும் ஆதிக் கம் பெற வேண்டும் என்ற ஜஸ்டிஸ் கட்சியின் மூலக் கொள்கை வெற்றி பெற்று வருவதைக் கண்ணுள்ளோர் பார்த்துக் கொள்ளட்டும். இதுவரை வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளால் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தோல்வியேற்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் அஞ்சக் கூடிய தோல்வியல்லவென்பதை நம்மவர்கள் நம்புவார்களாக!
தென்னாற்காடு தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு அடுத்த வாரம் மீண்டும் இதைப் பற்றி எழுதுவோம்.
‘குடிஅரசு’  தலையங்கம்  22.12.1935
-விடுதலை,22.5.16

குழந்தை வளர்ப்பு


25.11.1934 - பகுத்தறிலிருந்து...
குழந்தை வளர்ப்பு விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்குக் கொஞ்சமும் கவலையே கிடையாது. குழந்தை வளர்ப்பு விஷயத்தில் அந்தந்த தாய் தகப்பன்மார்களைவிட அர சாங்கம் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேல்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் குழந்தை வளர்ப்புக் கென பொதுவிடங்கள் அமைத்து அங்கு சில ஆயாமார்களை நியமித்து சுகாதார முறைப்படி குழந்தைகள் வளர்க்கப்படு கின்றன. மற்றும் சில குடும்பத்தார்கள் தங்கள் சொந்த பொறுப்பிலும் ஆயாமார்களை நியமித்து குழந்தைகள் மிகவும் தேகாரோக்கியமாக வளர்க்கப்படுகின்றனர்.
சுருங்கக்கூறின் மேல்நாட்டில் ஏழை முதல் எல்லா பணக்காரர் வீட்டுக் குழந்தைகளும் ஆயாமார்கள் மூல மாகவே வளர்கின்றன. மேல்நாட்டில் நான் பார்த்த ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு குழந்தையின் தாய் தன் குழந்தையை வேறு ஒரு ஆயா வசம் வளர்க்க ஒப்புவித்து விட்டுத்தான் வேறு ஒரு வீட்டுக் குழந்தையை வளர்க்கும் வேலையில் அமர்ந்திருந்தாள்.
இதற்குக் காரணம் என்ன வென்று கேட்டதில், தன் குழந்தையை வளர்க்கத்தான் மாதம் 20 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும், தான் வளர்க்கும் குழந்தையின் பெற்றோர் தனக்கு மாதம் 60 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும் அந்த அம்மாள் சொன்னார்.
இந்தப்படி மேல் நாட்டார்கள் குழந்தைகளை ஆயா மார்கள் மூலம் வளர்ப்பதால் குழந்தை களுக்கும் தாய்மார் களுக்கும் தனித்தனியே சுகாதாரமும் தேகாரோக்கியமும் நல்ல வாழ்வும் ஏற்படுகின்றன. நம் நாட்டிலோ அந்த வழக்கமில்லை.
நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகள் பெறும் விஷயத்திலும் வளர்க்கும் விஷயத்திலும் இன்னும் மிருகப் பிராயத்திலேயே இருந்து வருகிறார்கள்.
மற்ற விஷயங்களைவிட இந்தக் குழந்தை பிரசவ விஷயமும், பின் குழந்தைகள் வளர்ப்பு விஷயமும் முக்கிய மாய்க் கவனிக்க வேண்டியதாகும். அதோடு பிரசவப் பெண்கள் பிரசவத்துக்கு முன்னும் பின்னும், பிரசவ காலத்திலும் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்தை அவர்களுக்கு நாம் நன்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
(20-11-1934-ல் ஈரோடு சுகாதார கல்வி வாரக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு) 
-விடுதலை ,21.5.16