திங்கள், 27 ஜூன், 2016

அகில இந்திய சங்கீத மகா நாட்டில் பார்ப்பனிய விஷமம்


-தந்தை பெரியார்
சென்னையில் கிறிஸ்துமஸ் வாரத் தில் அகில இந்திய சங்கீத மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டுவதாக சில பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து சங்கீத வித்வான்களுக்கெல்லாம் அழைப்புக் கடிதம் எழுதியதுடன் அங்கு பாட வேண்டுமென்றும் சில பிரபல சங்கீத வித்வான்களை கேட்டுக் கொண் டார்கள்.
அவர்களுள் தென் இந்திய சங்கீத மணியாகிய ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்பிரமணிய பிள்ளை அவர்களும் ஒருவர்.  ஆனால் அவர் பார்ப்பன சங்கீத வித்து வான்களால் பலவித துன்பமும் இடையூறும் அனுபவித்து பழகியவரான தால் சில நிபந்தனைகளுக்கு கட்டுப் பட்டுத்தான் தாம்வர முடியுமென்று எழுதிவிட்டார்.
நிபந்தனைகளாவன: 1. தனக்குப் பாடுவதற்கு 2 மணி நேரம் கொடுக்க வேண்டும் 2. கச்சேரி முடிந்தவுடன் தனக்குச் செய்ய உத்தேசித்திருக்கும் மரியா தையை செய்ய வேண்டும் என் பது. மகாநாட்டு உப தலைவ ராகிய ஸ்ரீமான் சி. ஆர். சீனி வாசய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனர் ஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் நிபந்தனை களை ஒப்புக் கொண்டு அந்தப் படியே நடக்கும், ஆட்சேபணை இல்லை, தாங்கள் சொல்லும்படி வைத்துக்கொள்ள மாட்டேன், அவசியம் வரவேண்டும் என்று எழுதிவிட்டார். அந்தப்படியே ஸ்ரீ பிள்ளை அவர்களுக்கும் 4 மணி முதல் 6 மணி வரை சாவகாசம் கொடுத் திருப்பதாய் சம்மதம் எழுதிவிட்டார்கள்.
அந்தப்படியே ஸ்ரீமான் பிள்ளைய வர்கள் சரியாய் 3-55 மணிக்கு கொட் டகைக்குப் போனார்.  உடனே ஸ்ரீ சீனி வாசய்யங்கார் எழுந்துவந்து ஸ்ரீ பிள்ளை யவர்களை வெகுமரியாதையாய் அழைத் துப் போய் மேடையில் உட்கார வைத்து இது சமயம் வேறு ஒருவர் பாடிக் கொண்டிருப்பதால் சற்று பொறுக்கும்படி கேட்டார்.  ஸ்ரீ பிள்ளையும் சம்மதித்து உட்கார்ந்திருந்து சரியாக 4-30 க்கு பாட அனுமதி கிடைத்ததும் பாடத் தொடங் கினார்.
ஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பாடு வதைக் கேட்ட ஜனங்கள் ஆனந்தபரவசமாகிக் கேட்டுக் கொண் டிருந்ததைப் பார்த்த பார்ப்பன சங்கீத வித்வான்களுக்கு மனம் பொறுக்காமல் எப்படியாவது இதை நிறுத்திவிட வேண்டும் என்பதாக சூழ்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.  தாங்களாக நேரில் வந்து எதுவும் செய்யமுடியாததால் வடநாட்டு சங்கீத வித்து வானாகிய ஸ்ரீ திகம்பரர் என்பவரைப் பிடித்து ஸ்ரீ பிள்ளையவர்கள் பாடிக் கொண்டிருக்கும் போது அவரிடம் போய் நிறுத்திவிடச் சொல்லும்படி ஏவி விட்டு விட்டு இவர்கள் மறைந்து கொண்டார்கள்.
அவர் இந்தப் பார்ப்பனர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, கொஞ்சமும் மரி யாதை இல்லாமல், பாடிக்கொண்டிருந்த ஸ்ரீ பிள்ளையிடம் வந்து நிறுத்திவிடு நேரமாய் விட்டது என்று சொன்னார்.  அவ்விடம் சபையில் அக்கிராசனம் வகித்திருந்த சபைத்தலைவர் டாக்டர் யூ. ராமராவ் அவர்கள் ஸ்ரீ திகம்பரரை ஆட்சேபித்து அவர்களுக்கு 7 மணி வரையும் பாடும்படி நான் அனுமதி கொடுத்திருக்கிறேன்.
சபையோர்கள் 7-30 மணிவரையில் அவர்கள் பாடவேண்டு மென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  ஆதலால் அவர் பாடட்டும், நீங்கள் ஆட்சேபிக்காதீர்கள் என்று எல்லோ ருக்கும் தெரியும்படியாகவே பிளாட்பாரத் திற்கு எழுந்து வந்து சொன்னார்.  ஸ்ரீ திகம்பரர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் சத்தம் போட்டார்.  சபையோர் கேட்டுக் கொண்டும், தலைவர் கெஞ்சிக் கேட்டுக்கொண்டும் ஸ்ரீ திகம்பரர் கேட்காமல் சத்தம் போட்டதால் ஸ்ரீ பிள்ளை அவர்கள் ஸ்ரீமான் சி.ஆர். சீனிவாசய்யங்காரைத்  தேடிச் சுற்றிலும் பார்த்தார், அவர் மறைந்து கொண்டார்.
பிறகு நிவர்த்தியில்லாமல் ஸ்ரீ பிள்ளை அவர்கள் சபையோர் இஷ்டத்திற்கும் தலைவர் இஷ்டத்திற்கும் முன் ஏற்பட்ட கண்டிஷன்களுக்கும் விரோதமாய் பேசாமல் அவமானத்துடன் எழுந்துபோக வேண்டியதாய் நேர்ந்துவிட்டது.  தவிர கச்சேரி முடிந்தவுடன் சன் மானம் செய்வதாய் ஒப்புக்கொண்ட இந்த பார்ப்பன வித்துவானான ஸ்ரீ சீனிவாசய்யங்கார் அங்கு ஏதாவது கொடுப்ப தானால் ஸ்ரீ பிள்ளையைப்பற்றி ஏதாவது சில வார்த்தைகள் பெருமையாய் பேசவேண்டிவருமே என்கின்ற பொறா மையாலும் சபையோருக்கு ஸ்ரீ பிள்ளை அவர்களை அறிமுகப்படுத்த வேண்டி வருமே என்கின்ற கெட்ட எண்ணத் தாலும் பேச்சுபடி நடக்காமல் ஒளிந்து கொண்டார்.
தவிர மகாநாட்டுக்கு வந்திருந்த வித்வான்களுக்கு எல்லாம் பதக்கம் வழங்குவதற்கு ஒரு தினத்தை ஏற்பாடு செய்து அன்று வரும்படி எல்லா வித்வான்களுக்கும் அழைப்புக்கடிதம் அனுப்பி விட்டு ஸ்ரீ சுப்பிரமணியபிள்ளை அவர்களுக்கு மாத்திரம் அனுப்பவே யில்லை.
பல வழிகளிலும் சூழ்ச்சி செய்வதல்லாமல் சங்கீத வித்தையிலும் கூட பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் களை முன் வரவொட்டாமலும் அவர் களது யோக்கியதையை வெளியாக விடாமலும் அழுத்தி வைக்க எவ்வளவு மோசங்கள் செய்து வருகின்றார்கள் என்பதை பொது ஜனங்கள் உணருவதற் காகவே இதை எழுதுகிறேன்.
- குடிஅரசு - கட்டுரை - 19.2.1928
-விடுதலை,2.2.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக