25.11.1934 - பகுத்தறிலிருந்து...
குழந்தை வளர்ப்பு விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்குக் கொஞ்சமும் கவலையே கிடையாது. குழந்தை வளர்ப்பு விஷயத்தில் அந்தந்த தாய் தகப்பன்மார்களைவிட அர சாங்கம் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேல்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் குழந்தை வளர்ப்புக் கென பொதுவிடங்கள் அமைத்து அங்கு சில ஆயாமார்களை நியமித்து சுகாதார முறைப்படி குழந்தைகள் வளர்க்கப்படு கின்றன. மற்றும் சில குடும்பத்தார்கள் தங்கள் சொந்த பொறுப்பிலும் ஆயாமார்களை நியமித்து குழந்தைகள் மிகவும் தேகாரோக்கியமாக வளர்க்கப்படுகின்றனர்.
சுருங்கக்கூறின் மேல்நாட்டில் ஏழை முதல் எல்லா பணக்காரர் வீட்டுக் குழந்தைகளும் ஆயாமார்கள் மூல மாகவே வளர்கின்றன. மேல்நாட்டில் நான் பார்த்த ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு குழந்தையின் தாய் தன் குழந்தையை வேறு ஒரு ஆயா வசம் வளர்க்க ஒப்புவித்து விட்டுத்தான் வேறு ஒரு வீட்டுக் குழந்தையை வளர்க்கும் வேலையில் அமர்ந்திருந்தாள்.
இதற்குக் காரணம் என்ன வென்று கேட்டதில், தன் குழந்தையை வளர்க்கத்தான் மாதம் 20 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும், தான் வளர்க்கும் குழந்தையின் பெற்றோர் தனக்கு மாதம் 60 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும் அந்த அம்மாள் சொன்னார்.
இந்தப்படி மேல் நாட்டார்கள் குழந்தைகளை ஆயா மார்கள் மூலம் வளர்ப்பதால் குழந்தை களுக்கும் தாய்மார் களுக்கும் தனித்தனியே சுகாதாரமும் தேகாரோக்கியமும் நல்ல வாழ்வும் ஏற்படுகின்றன. நம் நாட்டிலோ அந்த வழக்கமில்லை.
நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகள் பெறும் விஷயத்திலும் வளர்க்கும் விஷயத்திலும் இன்னும் மிருகப் பிராயத்திலேயே இருந்து வருகிறார்கள்.
மற்ற விஷயங்களைவிட இந்தக் குழந்தை பிரசவ விஷயமும், பின் குழந்தைகள் வளர்ப்பு விஷயமும் முக்கிய மாய்க் கவனிக்க வேண்டியதாகும். அதோடு பிரசவப் பெண்கள் பிரசவத்துக்கு முன்னும் பின்னும், பிரசவ காலத்திலும் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்தை அவர்களுக்கு நாம் நன்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
(20-11-1934-ல் ஈரோடு சுகாதார கல்வி வாரக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)
-விடுதலை ,21.5.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக