ஞாயிறு, 26 ஜூன், 2016

குடிஅரசும் - திராவிட நாடும்

- தந்தை பெரியார்

"குடிஅரசு" பத்திரிகைக்கு இது இரண்டாவது வாரம், வயதோ பதினெட்டாவது - மக்களோ வெகு ஆவலாய் வரவேற்கிறார்கள். மத்தியில் இரண்டு வருஷ காலம் குடிஅரசு நிறுத்தப்பட்டுப் போனதைப் பற்றிப் பெரியாரைக் குறை கூறாத தமிழ் மக்கள் நாட்டில் இல்லை. சென்ற வாரம் அனுப்பிய முதல் இதழைப் பெற்ற உடன் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்தினவர்களும், போற்றினவர் களும், ஆனந்தக் கூத்தாடினவர்களும், புது சந்தா சேர்த்து தாங்களாகவே பணம் அனுப்பிவிட்டு, இன்ன இன்னாருக்கு ஒரு வருஷத்துக்கு ஆறுமாதத்திற்கு பத்திரிகை அனுப் புங்கள் என்று எழுதினவர்களும் ஏஜெண்டுகளில் மறுபடியும் இதே வாரக் காப்பி 100 அனுப்புங்கள், 60 காப்பி அனுப்புங்கள், 10 காப்பி அனுங்கள், 4 காப்பி அனுப்புங்கள் என்று எழுதினவர்களும், "குடிஅரசு" வெளியான சேதி அறிந்து தந்தி மணியார்டர் அனுப்பியவர்களும் ஆன தமிழ்மக்களின் எண்ணிக்கையையும் பெயரையும் வெளிப் படுத்தினால் மிகைப்படுத்திக் கூறுவதாகவே சில மக்கள் கருதுவார்கள். அவர்கள் எப்படியோ கருதிக்கொண்டு போகட்டும்.

"குடிஅரசு"க்கு இத்தனை வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏன்? எதற்கு ஆக? அதன் பாஷைக்கு ஆகவா? எழுத் துக்கு ஆகவா? இலக்கணப் பிழையற்ற தமிழுக்கு ஆகவா? யாரையும் குற்றம் குறை கூறாமல், துவேஷம் வெறுப்பு இல்லாத சாந்த குணத்தோடு வெளிவருவதற்கு ஆகவா? அல்லது பல பேர் அதைப் பற்றி விளம்பரம் செய்து ஆதரிக்கும் தன்மைக்கு ஆகவா? அல்லது நம்மிடம் இருக்கும் நல்ல எண்ணத்திற்கு ஆகவா? இவைகளில் ஒன்றும் இல்லை என்பது நமக்கு நன்றாத் தெரியும்.

தனித்தமிழ் பாஷைக்குக் "குடிஅரசு" போராடுகிறது. ஆனால், "குடிஅரசு" போல் "பாஷா மாலிகை" உள்ள பத்திரிகையை நாம் பார்த்ததில்லை. "சுதேசமித்திரன்" தமிழ் நம்மைவிட எத்தனையோ பங்கு மேலான தமிழ் என்றே சொல்லலாம். ஏன் எனில் அதற்கு வடமொழியைப் புகுத்துவதில்தான் கவலை. இலக்கணத்தைப் பற்றியோ வென்றால், "இலக்கணக்காரர்களுக்கு இங்கு வேலை இல்லை" என்பதுதான் "குடிஅரசி"ன் "மோட்டோ", சேதி களோ பெரும்பாலோர் காதுக்கு வேதனையைக் கொடுக் கும் குடைச்சல் உள்ளது. இப்படி இன்னும் பல குற்றங் களுடன் நடைபெற்ற, நடைபெறுகிற, நடக்கப்போகிற "குடிஅரசு"க்கு இவ்வளவு கிராக்கி என்னவென்றால், மேற்கூறிய இத்தனை குறைகளையும் லட்சியம் செய்யாமல் "குடிஅரசில் வரும் சேதி உண்மையானது. ஆதாரத்தோடு கூடியது" என்கின்ற நம்பிக்கையும் நாணயமும்தான். அதோடு உலகம் "குடிஅரசை" எதிர்பார்க்கிறது. அதாவது தமிழ் உலகம் புரட்சியை நோக்குகிறது. புரட்சிப்பக்கம் திரும்பி விட்டது. அதனால் "குடிஅரசி"ல் என்ன குற்றம் இருந்தாலும் வெளியில் சொல்ல தைரியமில்லை. ஏன் குற்றம் சொன்னால் உண்மையாகி விடுமே என்கின்ற பயம். சிலருக்கு அதில் உள்ள ஆவலினால் குற்றம் தெரிவதே இல்லை. வாலிப உலகம் "குடிஅரசி"ன் மீது கள்ளக் காதல் கொண்டு விட்டது; பெற்றோர் உலகத்தால் அடக்க முடியாத காதல் வாலிபர் உள்ளத்தில் ஊன்றி விட்டது. நமக்கு வேண்டியது இவ்வளவுதான். நம் உழைப்புக்குக் கூலியும் இவ்வளவே போதும்.

"குடிஅரசு" நின்றிருந்த காலத்தில் (அது நிற்கவில்லை வேறு பெயரோடு இருக்கிறேன்என்று கர்ஜித்து மார்பு தட்டி துணிச்சலோடு) "குடிஅரசி"ன் தொண்டை ஆற்றி வந்தது "திராவிட நாடு" பத்திரிகையாகும்.

"குடிஅரசு" ஆரம்பமானவுடன், இன்று அதன் தொண் டுக்கு அதாவது சுயமரியாதை இயக்கத்துக்கு "குடிஅரசு", "திராவிட நாடு" என்கின்ற இரண்டு பத்திரிகைகள் இரட்டையர்கள்போல் ஆகிவிட்டன.

தமிழ்நாடு இந்தத் தொண்டு செய்யும், அதாவது சுயமரி யாதைத் தொண்டு செய்யும் இரண்டு பத்திரிக்கைகளை அதுவும் இரண்டு வாரப் பத்திரிகைகளைத் தாங்க முடியாது என்று யாராலும் சொல்லமுடியாது. தமிழர்களும் இன்று உள்ள நிலையில் இந்த இரண்டு பத்திரிக்கைகளை ஆத ரிக்க முடியாது என்றும் சொல்லி விட முடியாது. அப்படி யாராவது முடியாது என்று சொல்லுவாரானால், அப்படிப் பட்டவரால் எதுவும் முடியாது என்றுதான் அருத்தமாகும்.

இரண்டுக்கும் குறுக்கே இருக்கும், அல்லது இரண்டி னாலும் வயிறுவளர்க்கப் பார்க்கும் தானாவதிகள், விஷமத் தனம் செய்யாமல் இருக்கவேண்டியதும் அப்படிப்பட்டவர்க ளுக்கு இரு பத்திரிகைக்காரர்களும், வாசகர்களும் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டியதும் முக்கியமான காரிய மாகும். அதோடு, அப்படிப்பட்டவர்கள் விஷமத்தனத்துக்கு பொது மக்களும் காது கொடுக்காமல் இருக்கவேண்டியது அதைவிட முக்கியமான காரியமாகும்.

தமிழ்நாட்டில் இச்சுயமரியாதைக் கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட அநேக பத்திரிகைகள், எவ்வளவோ பண உதவி பெற்றும் கஷ்டப்பட நேர்ந்தன. பல நின்றே போய் விட்டன. ஈரோட்டில் மாத்திரம் 3,4 பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு நின்று போய் விட்டன. மற்றபடியும் பல ஊர்களிலும் அப்படியே ஆயின. இனி, சுயமரியாதைப் பத்திரிகைகள் பெருகியே ஆகவேண்டும். தமிழ்நாடு நன்றாக பண்பட்டிருக்கிறது. இதில் முளைக்கும் சுயமரி யாதைப்பயிரை இனிக் காயவிடக்கூடாது என்பது நமது எல்லையற்ற ஆசை. இனி பத்திரிகை துவக்குகிறவர்களும் கவலையோடும், நாணயத்தோடும், உண்மையான உணர்ச்சியோடும், தகுந்த அஸதிவாரத்தோடும் துவக்க வேண்டும். ஜீவனத்துக்கும், பண வசூலுக்கும், மக்களை ஏய்ப்பதற்கும் பத்திரிகை துவக்குவது இயக்கத்திற்குக் கேடு செய்வதாகும். தங்கள் ஜீவனமே பெரிதென்பவர்கள் தயவு செய்து வேறு வேலையை வேறு இயக்கத்தின் பேரால் செய்யப்படும். இவை சம்மந்தப்பட்ட ஏஜண்டுகளும் சற்று கவலையுடன் யோக்கியமாய் நடந்து கொள்ளவேண்டும். ஒன்றை ஒன்று குறைகூறும் படியான வழியில் நடந்து கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
ஏஜண்டுகள் "குடிஅரசை" வலுக்கட்டாயத்தின்மீது "திராவிடநாடு" சந்தாதாரர்களுக்குப் போடக் கூடாது. இரண்டையும் ஆதரிக்கச் சக்தி உள்ள வாசகர்கள் கண்டிப்பாய் இரண்டையும் ஆதரிக்க வேண்டியது தமிழ் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமையான தொண்டு ஆகும். இந்தப் பத்திரிகைகள் இரண்டும் இல்லாவிட்டால் இன்று தமிழர்களுக்கு சமுதாயத் துறையிலோ, அரசியல் துறையிலோ வேறு வேலை என்ன இருக்கிறது? தமிழர் களுக்கு இந்த இரண்டு பத்திரிகையையும் ஆதரிப்பதைவிட அவர்கள செய்யும் வேறு வேலைதான் என்ன? என்றும் கேட்கிறோம். பண உதவி செய்துவிடுவதே போதுமானதாகி விடாது. ஒவ்வொரு ஊரிலும், கிராமத்திலும் இந்தப் பத்திரிகைகள் வருகிறதா? படிக்கப்படுகிறதா? என்பது தான் மிக மிக முக்கியமானது. ஆகையால் பணக்காரர்களும், முக்கியஸ்தர்களும் அதை முதலில் கவனித்து பிறகு கூடுமான பண உதவி செய்யட்டும்.

அரசியலில் பதவி பெற மோகமுள்ளவர்கள் இப்பத்திரி கைகளை அலட்சியமாய்க் கருதுவார்கள் என்பதும், இதை கேவலமாய்ப் பேசுவார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இப்படி எத்தனையோபேர்களும், அவர்களது கூலிகளும் பேசி ஆய்விட்டது. இனி பேசுகிறவர்கள் லட்சத்து ஒண்ணாவது பேர்களிலேதான் சேருவார்கள. தாசிகளும், வேசிகளும், பதவி மோகக்காரர்களும் ஒன்று என்பதே நமது அபிப் பிராயம். அப்படிப்பட்ட அவர்களது அன்புக்கும் வெறுப் புக்கும் அர்த்தமே இல்லை.
நம்மவர்களைப் பிடித்த பதவி மோகம்தான் நம் சமு தாயத்தை இன்னமும் சூத்திரனாக, தாசி வேசி மகனாக, கீழ்ஜாதியாக வைத்து இருப்பதோடு நம்மவர்களில் அநேகரைத் திருட்டுத்தனமாகவாவது பார்ப்பனர்களின் கால் பெருவிரலை சப்பும்படி செய்து வருகிறது. அது தமிழனில் ஒரு கூட்டத்துக்கு பிறவிக்குணமாக வெகு காலமாக இருந்து வருகிறது. அதை நம் காலத்திலேயே மாற்ற வேண்டும்; அதற்கு வ்ணடிய அளவு துணிவும் நமக்கு வேண்டும். அத்துணிவு வரவேண்டுமானால் நம்மிலாவது ஒற்றுமை வேண்டும். இதை அறிந்து நடந்து கொள்வேண்டியது  நம்முடையவும் ஏஜண்டுகளுடையவும் மற்றும் ஆங்காங்குள்ள நம் தொண்டர்களுடையவும் முக்கிய கடமை என்பனவற்றைத்தெரிவித்துக் கொண்டு, தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இந்த இரண்டு பத்திரிகை களையும் அவசியம் ஆதரிக்க வேண்டுமென்று மறுபடியும் வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடிஅரசு - தலையங்கம் - 23-10-1943
விடுதலை,26.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக