வெள்ளி, 17 ஜூன், 2016

தீண்டாமை - தந்தை பெரியார்



இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமை யெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதி திராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரம மென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மை விடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத்தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறியும் ஏற்படுத்துவ தாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு வெட்ட வேண்டும்? சிலர் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும். நமது கிணறு குளங்களில் ஆதி திராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அனுமதிக்கலாகாது? பட்சிகளும் மிருகங்களும் குளங் களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்னென்ன வருகிறதென்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதத் தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள் எடுத்துச் சாப்பிட்டுவிடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும். என்று சொல்லிவிட்டு நீங்கள் எனக்களித்த வரவேற்புப் பத்திரத்தில் உங்களுக்காக நான் அதிகவேலை செய்திருப்பதாகச் சொல்லிப் புகழ்ந்திருக்கிறீர்கள். அது கொஞ்சமும் உண்மையல்ல. உங்களை உத்தேசித்து நான் ஒரு காரியமும் செய்யவேயில்லை. ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும் ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய்ச் சொல்லுவதும் வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும் பேசுகிற வர்களுமாயிருப்பார்களென்பது எனது அபிப்பிராயம். அதாவது, இந்தியாவின் நன்மைக்காக அய்ரோப் பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பது போலத் தான் ஆகுமேயல்லாமல் வேறல்ல. நான் அப்படி நினைக்கவேயில்லை.

பறையர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருப்பதால்தான் சூத்திரர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. பறையர் என்கிற ஜாதிப் பெயரைவிட சூத்திரர் என்கிற ஜாதிப் பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரீகளில் பதிவிரதைகளும், சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்களுமிருக்கலாம். சூத்திரர்களில் அப்படி யிருக்க இடமேயில்லை. ஏனென்றால் சூத்திரச்சி என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். சூத்திரன் என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்பந்தம். ஆகையால் என் போன்ற சூத்திரன் என்று சொல்லப்படுபவன் பறையர்கள் என்று சொல்லப்படு வோர்களுக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம் சூத்திரர்கள் என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறல்ல. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்று கிறது. உங்களைத் தாழ்மையாய் கருதும் ஸ்திரீகளும், புருஷர்களும் தாங்கள் பிறரால் உங்களைவிடக் கேவலமாய் தாழ்மையாய்க் கருதுவதை அறிவதில்லை. அந்நியர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக் கும் அறியாமையால், தங்களை மற்றவர்கள் தாழ்மையாய் நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த் தோன்றுவதில்லை.

இந்த லட்சணத்தில் உங்களிடம் தப்பிதங் கண்டு பிடித்து, உங்கள் உடம்பில் துர்வாடை அடிக் கிறது, நீங்கள் ஸ்நானம் செய்வதில்லை, துணி துவைப்பதில்லை, மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள், மதுவருந்துகிறீர்கள், இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேஷ்டி துவைக் காமலும் குளிக்காமலும் இருப்பதற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர் உணருவதில்லை. உங்களுக்குக் குடிக்கவே தண்ணீரில்லையென்றால் குளிப்பதெப்படி, வேஷ்டி துவைப்பதெப்படி? அழுக்கும் நாற்றமும் உங்கள் கூடவே பிறந்ததா என்று கேட்கிறேன்.  குளிக்கவும், வேஷ்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல் மகந்துகள் என்போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டிலடைத்து வைத்து விட்டால் அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக் குமா? அவர்கள் உடம்பும் வாயும் நாற்ற மடிக்காமலிருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். நாமே ஒருவனைப் பட்டினி போட்டுவைத்து, அவன் இறந்துபோன பிறகு பட்டினியினால் இறந்துபோய் விட்டான் பாவி என்று சொன்னால், யார் பாவி யென்பதை நினைத்துப் பாருங்கள். அல்லாமலும், மாடு தின்பதும், மதுவருந்துவதும், நீங்கள் பறையர்களாயிருப்பதற்குக் காரணமென்று சொல்லுவது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக் கொண்டும் மதுவருந்திக் கொண்டும் இருக்கிறவர்கள் தான் இப்பொழுது உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தவிரவும், நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சேர்ந்ததல்ல. உங்களை மற்றவர்களைப் போல சரியானபடி சம்பாதிக்கவும், தாராளமாய் சாப்பிடவும், தெருவில் நடக்கவும், தாராளமாய் எங்கும் போய் வேலை செய்து சம்பாதிக்கவும் வழியில் லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று. மாட்டு மாமிசத்தை அனுமதிக்கும் மதத்தைச் சேர்ந்த மகமதியாரும் கிறிஸ்தவரிலும் கூட சிலர் கைப்பணந் தாராளமாய்க் கிடைப்ப தாயிருந்தால் நாங்கள் மாட்டுமாமிசம் சாப் பிடுகிற வழக்கம் இல்லை என்று சொல்லு கிறார்கள்.

ஆதலால், நமது நாட்டார் மாட்டிறைச்சி சாப்பிடுவ தற்குத் தரித்திரந்தான் முக்கியக் காரணம். அல்லாமலும், மாட்டு மாமிசம் சாப்பிடுவது ஆடு, கோழி, மீன், பன்றி இவை களைவிட என்ன அவ்வளவு அதிகமான பாவமாய்ப் போய்விட்டது. கோழியும், மீனும், பன்றியும் எச்சிலையும், பூச்சு புழுக்களையும், அழுக்குகளையும், மலத்தையும் சாப்பிடுகிறது. இப்படியிருக்க இதைச் சாப்பிடுகிற வட நாட்டு பிராமணர்கள் முதல் தென்னாட்டு சூத்திரர்கள் வரை நல்ல ஜாதியும், தொடக் கூடியவர்களாயு மிருக்கும் போது, புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், புண்ணாக்கும் சாப்பிடுகிற மாட்டிறைச்சி சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான். அப்படிப் பார்த்தாலும் மாடு சாப்பிடுகிறவர்களை யெல்லாம் தொடாதே, தெருவில் நடக்காதே, குளத்தில் தண்ணீர் சாப்பிடாதே, ஊருக்குள் குடியிருக்காதே என்று சொல்லுகிறார்களா? இது வீணாய், வேண்டுமென்றே உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் ஒரு யோக்கியப் பொறுப்பற்ற காரணமேயல்லாமல் உண்மையான காரணமல்ல என்பதுதான் எனது முடிவு. மதுவையும், மாட்டு மாமிசத்தையும் தள்ள வேண்டும் என்பதை நான் ஆட்சேபிக்க வரவில்லை. மதுவையும் மாட்டு மாமிசத்தையும் தள்ளினால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத்தனமான காரியத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஜாதி உயருவதற்காக, மதுவையும் மாட்டு மாமிசத்தையும் விடுங்களென்று கேட்க மாட்டேன். அதற்காக நீங்கள் விடுவதும் அவ்வளவு அவசியமில்லை. நம் நாட்டில் தென்னை, பனை மரங்களில் ஊறும் கள்ளும், காய்ச்சும் சாராயமும் வெளிநாடுகளிலிருந்து வரும் சாராய தினுசுகளும் சென்னை மாகாணத்தில் மாத்திரம் சுமார் 15, 20 கோடி ரூபாய் பெரும் படியானதை யெல்லாம் நீங்க ளேவா குடித்து விடுகிறீர்கள்? யாராவது நம்புவார்களா? ஒருக்காலும் நம்பமாட்டார்கள். ஆதலால், ஜாதி உயர்வை உத்தேசித்து இவற்றை விட்டு விட வேண்டுமானால் மற்றவர்கள் முதலில் விடட்டும்.

மதுபானம் மனிதனின் ஒழுக்கத்திற்கு விரோதமென்பதை நான் ஒப்புக் கொள் ளுகிறேன். மதுவிலக்குக்காக நானும் சிறிது தொண்டு செய்திருக் கிறேன். ஆனால், ஜாதி உயர்வுக்கு எல்லா ஜாதியாரும் சாப்பிடும் மதுவிலக்கு ஒன்றும் தடை செய்வதில்லை. ஆகையால், மதுவிலக்கும் மாமிச விலக்கும் ஜாதி உயர்வுக்கு அவசியம் என்று சொல்வது வேண்டுமென்றே சொல்லும் பொய். அல்லாமலும் உங்களிடமும் சில குற்றங்கள் இருக்கிறதைச் சொல்லா மலிருக்க முடியவில்லை. அதாவது, நீங்க ளாகவே உங்கள் ஜாதிக்கு இழிவு சம்பாதித்துக் கொள்ளுகிறீர்கள். அனாவசியமாய் யாரைக் கண்டாலும் சுவாமி என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும். ஒரு மனிதனைப் பார்த்தால் அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்கிற எண்ணம் உங்கள் மனதில் உதிக்க வேண்டும். சுயமரியாதையில் கவனமில்லாத ஜாதியாரை உயர்த்தினாலும் உயராது. அவனவனுக்கே, தான் மனிதன் என்கிற உணர்ச்சி வரவேண்டும். நீங்கள் இனிமேல் யாரையும் சுவாமி  என்று கூப்பிடக் கூடாது. வேண்டு மானால் அய்யா என்று கூப்பிடுங்கள். நீங்களாகவே பதுங்குவதும் ஒதுங்குவதுமான துர்க்குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அன்றுதான் நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள். என்று பேசி முடித்தார்.
(காரைக்குடி - சிராவயலில் நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு விழாவில்  06-04-1926ந் தேதி ஆற்றிய சொற்பொழிவு)

- குடிஅரசு -  25.04.1926
-விடுதலை,29.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக